Daily Archives: நவம்பர் 19th, 2011

நாணயத்தைச் சுண்டுதல்!

கி.மு. 10-ம் ஆண்டில் லிடியாவைச் சேர்ந்தவர்கள் நாணயத்தைத் தயாரித்தனர். ஆனால் அதற்கு 900 ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஒரு முடிவை எடுப்பதற்காக நாணயத்தைச் சுண்டுவது வழக்கத்துக்கு வந்தது.

ஜூலியஸ் சீசர் காலத்தில் ரோமாபுரி நாணயத்தின் ஒரு பக்கத்தில் அவர் தலை பொறிக்கப்பட்டிருக்கும். அவர் மீது மக்களுக்கு மிகப் பெரிய மரியாதை இருந்தது. மிக முக்கியமான வழக்குகளில் சீசர் இல்லாத நேரத்தில் அவர் தலை பொறிக்கப்பட்ட நாணயத்தைச் சுண்டுவதன் மூலம் முடிவு தீர்மானிக்கப்பட்டது.

ஜூலியஸ் சீசரின் தலைப்பக்கம் மேலே தெரியும்படி நாணயம் விழுந்தால், அந்தப் பிரச்சினைக்கான தீர்வை கடவுளின் வழிகாட்டுதலின்படி சீசர் இல்லாமல் போனாலும் அவர் ஏற்கிறார் என்று கருதப்பட்டது.

பறக்கும் கார்!

 

சென்னை போன்ற பெருநகரங்களில் போக்குவரத்து நெரிசலில் சிக்குபவர்கள், அந்த நேரத்தில், ஒரு பறக்கும் கார் இருந்தால் எப்படி இருக்கும், என்று விபரீத மாய் யோசிக்கலாம்.

இவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில், தென்மேற்கு ஜெர்மனியைச் சேர்ந்த தாமஸ் சென்கெல் என்ற என்ஜினீயர் உலகின் முதல் பறக்கும் காரை உருவாக்கி உள்ளார்.

இவர் உருவாக்கியிருக்கும் பறக்கும் காரின் பெயர் `எலக்ட்ரிக் மல்டி காப்டெர்’. இது, ஹெலிகாப்டர் போன்ற தோற்றத்தில் காணப்பட்டாலும் உண்மையில் ஹெலிகாப்டர் கிடையாது. இந்த எலக்ட்ரிக் மல்டி காப்டெரை பறக்க வைக்க விமானங்களில் உள்ளது போன்று பைலட் தேவையில்லை. சோதனை ஓட்டத்தின்போது 1 நிமிடம் 30 நொடிகள் தனது பறக்கும் காரில் பறந்து கொண்டிருந்தார் தாமஸ் சென்கெல்.

தனது கண்டுபிடிப்பு பற்றி அவர் கூறும்போது, `இந்த பறக்கும் கார் மின்சாரத்தால் இயங்கக்கூடியது. இந்த இயந்திரத்தின் எடை 80 கிலோ மட்டுமே. இதில் 16 சுழலும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது எதிர்காலத்தில் பறக்கும் காராக பயன்படுத்தப்படும்’ என்றார்.

 

சர்க்கரை நோய்: இந்தியர்களே ஜாக்கிரதை!

கணையத்தில் இன்சுலின் சுரப்பதில் குறைபாடு வருவதற்கு, பாரம்பரியம் ஒரு முக்கியக் காரணமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நம் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா போன்ற ரத்த வழி உறவினர்களில் யாருக் காவது சர்க்கரை நோய் இருந்தால், நமக்கு சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு மிக அதிகம். சர்க்கரை நோயாளிகளின் தலைமையிடம் இந்தியா என, உலக சுகாதார மையம் அச்சுறுத்தியும் இந்தியர்களிடையே, சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வு, போதிய அளவு இல் லை என்பதே மருத்துவ நிபுணர்களின் கருத்து.

மரபு ரீதியில் இந்தியர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம் என, படித்து படித்து சொன்னாலும் பெரும்பாலானோர் கேட்பதாகத் தெரியவில்லை. 35 வயதை தாண்டி விட்டாலே, ரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதிக்க வேண்டும். ஆனால், 10 சதவீதம் பேர் கூட, ரத்த சர்க்கரை அளவை பரிசோதிப்பது இல்லை. ஏதாவது பிரச்னை என்று வந்த பிறகுதான் “லபோ திபோ’ என அடித்துக் கொள்கிறோம். சர்க்கரை நோய் ஒளிந்திருந்து உயிரைக் குடிக்கும் நோய். உரிய நேரத்தில் கண்டுபிடித்து விட்டால், வாழ்நாள் முழுவதும் வசீகரமாக வாழலாம். இந்தியர்களுக்கு குறிப்பாக தென்னிந்தியர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கு, மரபு ரீதியாக வாய்ப்பு அதிகம் என்பதோடு, வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள தலைகீழ்மாற்றம், சுற்றுச் சூழலுக்கு மாறுபட்டு வாழும் போக்கு, சர்க்கரை சத்தை அதிகம் கொண்ட (பிசா, கோக், சாக்லேட்) உணவு வகைகளை அதிகமாக எடுப்பது, உடலுக்கு பயிற்சி இல்லாத அன்றாட வாழ்க்கை உள்ளிட்ட பலக் காரணங்களால், இந்தியர்கள் அதிக அளவில் சர்க்கரை நோயால் பாதிக்கப் படுகின்றனர்.

தலை முதல் கால் வரை எல்லா உறுப்புகளையும் பாதிக்கக் கூடிய ஒரே நோய், சர்க்கரை நோய் தான். ரத்தத்தில் அளவுக்கு அதிகமாக இருக்கும் சர்க்கரை, ரத்தக் குழாய்களை சேதப் படுத்துவதால் “ஸ்ட்ரோக்’ என அழைக்கப்படும் பக்கவாதம் முதல், பாதம் பாதிப்பு வரை எல்லா உறுப்புகளையும் சர்க்கரை ஒரு கை பார்த்துவிடுகிறது.

கண்ணில் விழித்திரை பாதிக்கிறது. இதய ரத்தக்குழாய்களை பாதித்து மாரடைப்புக்கு வழி வகுக்கிறது. சிறுநீரக ரத்தக் குழாய்களில் பாதிப்பை ஏற்படுத்தி, சிறுநீரகத்தை செயலிழக்கச் செய்கிறது. இதுதவிர, ஆண்மை குறைவு உள்ளிட்ட வெளியே சொல்ல முடியாத வேதனைகளையும் ஏற்படுத்துகிறது. நமது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு இயல்பாக இருப்பதைவிட, அதிகமாக இருப்பதையே சர்க்கரை நோய் என்கிறோம். பல்வேறு காரணங்களில், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகிறது. உடல் சீராக இயங்குவதற்கு சர்க்கரை சத்து அவசியம். நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரையை, ஆற்றலாக மாற்ற இன்சுலின் என்ற ஹார்மோன் தேவை. இந்த ஹார்மோனை கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் சுரக்கின்றன. இன்சுலின் சுரப்பு இயல்பாக இருக்கும் வரை, உணவில் உள்ள சர்க்கரை சத்தை ஆற்றலாக மாற்றுவதில் பிரச்னை இருக்காது. இன்சுலின் சுர ப்பு குறைவாக இருந்தாலோ அல்லது இன்சுலின் சுரப்பில் பாதிப்பு ஏற்பட்டாலோ சர்க்கரை சத்தை ஆற்றலாக மாற்றுவதில் பிரச்னை ஏற்படும். விளைவு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து, சர்க்கரை நோய் வருகிறது.

சர்க்கரை நோயை கண்டுபிடிப்பது எப்படி?: துரதிஷ்டம் என்னவெனில், மற்ற நோய்களை போல் சர்க்கரை நோயை, அறிகுறிகளைக் கொண்டு கண்டுபிடிக்க முடியாது. வேறு ஏதோ பிரச்னைக்காக டாக்டரிடம் சிகிச்சைக்கு வரும்போது தற்செயலாக, ரத்த பரிசோதனை செய்யும் நிலையில், தங்களுக்கு சர்க்கரை நோய் இருப்பது பலருக்கு தெரிய வருகிறது. சாப்பிடுவதற்கு முன், ரத்தத்தில் சர்க்கரை அளவு 60 முதல் 110 மி.கி., ஆக இருக்க வேண்டும். சாப்பிட்ட பின், சர்க்கரை அளவு 80 முதல் 140க்குள் இருக்க வேண்டும். இதை விட கூடினால் அது சர்க்கரை நோய் என அழைக்கப்படு கிறது. சாப்பிட்ட பின் ரத்தத்தில் சர்க்கரை அளவு 180 மி.கி., வரை இருந்தால், அவரை சர்க்கரை நோய் நெருங்கிக் கொண்டிருக்கிறது என அர்த்தம். கணையத்தில் இன்சுலின் சுரப்பதில் குறைபாடு வருவதற்கு, பாரம்பரியம் ஒரு முக்கியக் காரணமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நம் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா போன்ற ரத்த வழி உறவினர்களில் யாருக்காவது சர்க்கரை நோய் இருந்தால், நமக்கு சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு மிக அதிகம். பாரம்பரியத்தில் யாருக்கும் சர்க்கரை நோய் இல்லாவிட்டாலும் கூட, இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறை, மாறுபட்ட உணவுப் பழக்கம், உடல் உழைப்பு குறைவு போன்ற காரணங்களால், சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம் என, ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தி உள்ளன.

ரத்தக் குழாயை பாதிப்பது எப்படி?: சர்க்கரையில் உள்ள ஒருவித ரசாயனம், ரத்தக் குழாய்களின் உள்புறத்தை அரித்து புண் ஏற்படுகிறது. இந்த புண் தானாக குணமடையும் நிலையில் தழும்புகள் ஏற்படுகின்றன. நாளடைவில், இந்த தழும்புகள் பெருகி, ரத்த குழாய்களில் அடை ப்பை ஏற்படுத்துகின்றன.

இரண்டு வகை : சர்க்கரை நோய் இரண்டு வகைப்படும். சிறு வயதில் வருவது இது “ஜுவனையில் டயாபடிக்’ என அழைக்கப்படுகிறது. இது முதல் வகை சர்க்கரை நோய். வைரஸ் கிருமியால், கணையம் பாதிக்கப்பட்டு இன்சுலின் முழுமையாக சுரக்காமல் போய்விடும். அல்லது இன்சுலினுக்கு எதிரான ஆன்டிபாடீஸ், உடலில் உருவாகி இன்சுலின் சுரப்பு அடியோடு நின்றுவிடும். இது 15 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளையே பாதிக்கிறது. இவர்கள் வாழ்நாள் முழுவதும் இன்சுலின் ஊசியை சார்ந்திருக்க வேண்டும். முதல் வகை சர்க்கரை நோயாளிகள், 5 முதல் 7 சதவீதம் பேர் உள்ளனர். இரண்டாவது வகை சர்க்கரை நோய் என்பது 40 வயதுக்கு மேல் வருவது. குழந்தை பருவத்தில் இன்சுலின் சுரப்பு சரியாக இருக்கும். ஆனால், 35, 40 வயதை தாண்டும் நிலையில், இன்சுலின் சுரப்பில் குறைபாடு ஏற்பட்டு சர்க்கரை நோய் வரும். இப்போது 30 வயதிலேயே இரண்டாவது வகை சர்க்கரை நோயாளிகளை சாதாரணமாக பார்க்க முடிகிறது. ரத்தப் பரிசோதனை மூலம் சர்க்கரை நோய் உறுதி செய்யப்பட்டுவிட்டால், டாக்டரின் ஆலோசனைக்கு ஏற்ப, மாத்திரையோ அல்லது இன்சுலின் ஊசியோ தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ள வேண்டும். மற்றொரு சர்க்கரை நோயாளி எடுக்கும் மாத்திரைகளை நாம் எடுக்கக் கூடாது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை பொறுத்து எந்த மாத்திரை, எவ்வளவு அளவு என்பது தீர்மானிக்கப்படுவதால் டாக்டரின் பரிந்துரைபடியே மாத்திரை எடுக்க வேண்டும்.

அறிகுறிகள் என்ன?: சர்க்கரை நோய்க்கென குறிப்பிட்ட அறிகுறிகள் ஏதும், தொடக்கத்தில் தெரியாது. அடிக்கடி சிறுநீர் கழித்தல், அடிக்கடி தாகம் ஏற்படும். அதிகமாக பசி ஏற்படுதல், உடல் சோர்வு, எடை மிக வேகமாகக் குறைதல், சிறுநீர் வெளியாகும் இடத்தில் அரிப்பு ஆகியவை சர்க்கரை நோயின் அறிகுறிகளாக கருதலாம். இந்த அறிகுறிகள் இருந்தால், உடனடியாக ரத்தப் பரிசோதனை செய்வது அவசியம். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமானால் இதயம், சிறுநீரகம், கண்கள், கால்களில் உள்ள ரத்தக் குழாய்களில் பாதிப்பு ஏற்படும். சிலருக்கு மூளைக்கு செல்லும் ரத்தக்குழாய் பாதிக்கப்பட்டு, பக்கவாதம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

உணவுக் கட்டுப்பாடு: மாத்திரை எவ்வளவு முக்கியமோ அந்தளவு உணவு கட்டுப்பாடும் மிக முக்கியம். உணவு கட்டுப்பாடு என்றால் பத்தியம் இருக்க வேண்டும் என்ற அர்த்தம் அல்ல. தங்களது நோயின் தன்மை, வயது, எடை, இளம் பெண்களாக இருந்தால் கர்ப்ப காலத்தில் பின்பற்ற வேண்டிய உணவு முறை ஆகியவற்றை தெரிந்து கொள்ள வேண்டும். மாவுச்சத்து அதிகம் உள்ள உணவு வகைகளை, அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை சத்தை ரத்தத்தில் அதிகமாக்கும் உணவு வகைகளான சர்க்கரை, இனிப்பு கிழங்குகள், மா, பலா, வாழை, பேரிச்சை, திராட்சை, சப்போட்டா போன்ற பழ வகைகள், குளிர் பானங்கள், ஐஸ் கிரீம், சிப்ஸ் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். உணவு விஷயத்தில், கண்டிப்பாக டாக்டரின் அறிவுரை யை பின்பற்ற வேண்டும். இனிப்பு சாப்பிட்டுவிட்டு கூடுதலாக ஒரு மாத்திரை போட்டுக் கொள்ளலாம் என்ற எண்ணம் தவறானது. எப்போதோ ஒரு பண்டிகை நாளில் இனிப்பு பதார்த்தங்களை சாப்பிட்டு, கூடுதலாக ஒரு மாத்திரை போடுவதில் தவறில்லை. ஆனால், அடிக்கடி அப்படி செய்வது நல்லதல்ல.

தாழ் சர்க்கரை நிலை: மாத்திரை அல்லது இன்சுலின் அளவு சற்று கூடிவிட்டால் சில நேரங்களில், ரத்தத்தில் சர்க்கரை அளவு இயல்பை விட குறைந்துவிடும். இதற்கு தாழ் சர்க்கரை நிலை என்று பெயர். தாழ் சர்க்கரை நிலை இருந்தால் நெஞ்சு படபடப்பு, பசி,”சில்’ என வியர்த்தல், மயக்கம், பார்வை மங்குதல் போன்ற அறிகுறிகள் இருக்கும். அவ்வாறு இருந்தால் உடனடியாக சாக்லேட், இனிப்பு மிட்டாய்கள், சர்க்கரை கலந்த தண்ணீர் சாப்பிட வேண்டும்.

கால் பாதுகாப்பு: சர்க்கரை நோயாளிகள் கால்களை பாதுகாப்பது மிக முக்கியம். சர்க்கரை நோயாளிகளுக்கு கால் நரம்புகள், ரத்தக்குழாய்கள் பாதிப்புக்குள்ளாகும். ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பால் ரத்தம் தடைபட்டு, கால்களில் உணர்வு குறையும். காயங்கள் ஏற்பட்டால் எளிதில் குணமாகாது. வலி தெரியாது என்பதால், காயத்தை நாம் பொருட்படுத்த மாட்டோம். நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்து விடுவதால், புண் ஆறாமல் சீல் கோர்க்கும். ரத்த ஓட்டம் குறைவதால் கால்கள், விரல்கள் கறுத்து போய் அழுகிப் போவதால் விரலை அல்லது காலையே வெட்டி எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும். எனவே, சர்க்கரை நோயாளிகள் கால் களில் காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்காக பிரத்யேக காலணிகள் உள்ளன. அதைப் பயன்படுத் தலாம்.

நன்றி-தினமலர்

பூனை மீது கொண்ட பாசத்தால், குழந்தையை சாகடித்த தந்தை!

செல்லப் பிராணியின் மீது கொண்ட அளவு கடந்த பாசத்தால், தன், மூன்று வயது குழந்தையை பட்டினி போட்டு சாகடித்துள்ளார், கொடுமைக்கார தந்தை. ஜப்பானில் தான், இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது. இவருக்கு, மூன்று வயதில் ஒரு ஆண் குழந்தை இருந்தது. ஆசை, ஆசையாக ஒரு பூனையையும், தன் வீட்டில் வளர்த்து வந்தார். ஆசை என்றால், உங்க வீட்டு ஆசை, எங்க வீட்டு ஆசை கிடையாது, வெறித்தனமான ஆசையை, அந்த பூனை மீது வைத்திருந்தார், அவர்.
இதனால், தன் குழந்தையைப் பற்றி, அவர் கொஞ்சம் கூட கவலைப்படவில்லை. அந்த குழந்தை சாப்பிட்டதா, தூங்குகிறதா, வீட்டில் உணவுப் பொருட்கள் உள்ளதா என்பது பற்றி, ஒரு நாள் கூட அவர் சிந்திக்கவில்லை.
எந்த நேரம் பார்த்தாலும், தன் ஆசைப் பூனையை மடியில் தூக்கி வைத்து, கொஞ்சிக் கொண்டிருப்பது தான், இவரது அன்றாட வேலை. சரியாக கவனிக்காததால், குழந்தை பசியால் வாடியது. பசி அதிகமாகி, கையில் கிடைக்கும் பொருட் களை எல்லாம் சாப்பிடத் துவங்கியது. வீட்டில் கிடக்கும் குப்பை, கூளங்கள், சிறிய பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவை எல்லாம், அந்த குழந்தைக்கு உணவாகிப் போயின.
திடீரென ஒரு நாள், போலீசாருக்கு, ஒரு பெண்ணிடம் இருந்து போன் வந்தது. “என் குழந்தை பேச்சு மூச்சின்றி கிடக்கிறது. வந்து பாருங்கள்…’ எனக் கெஞ்சினார், அந்த பெண். வீட்டின் உள்ளே சென்ற போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கே, உடலில் எந்த அசைவுமின்றி, எலும்பும், தோலுமாக, ஒரு பச்சிளம் குழந்தை கிடந்தது. டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து, அந்த குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். போலீசாருக்கு போனில் அழைப்பு விடுத்த, அந்த பெண், வேறு யாருமில்லை. அந்த குழந்தையின் தாய் தான். “குழந்தையின் நிலைபற்றி, யாரிடமும் கூறக் கூடாது என, என் கணவர் மிரட்டியதால், இதை வெளியில் சொல்ல முடியவில்லை…’ என, கண்ணீர் மல்க கூறினார் அந்த பெண்.
குழந்தையை பசியால் சாகடித்த தந்தையிடம் போலீசார் விசாரித்த போது, “நான் எந்த தவறும் செய்யவில்லை. குழந்தையை காட்டிலும், நான் வளர்த்த பூனையிடம் அதிக அன்பு செலுத்தினேன்; இது தவறா?’ என, ஒன்றும் தெரியாத அப்பாவி போல் கூறினாராம்.
நல்ல ஆரோக்கியமான உடல் நிலையுள்ள மூன்று வயது குழந்தை, சராசரியாக, 13.4 கிலோ எடையுடன் இருக்கும். ஆனால், பசிக் கொடுமையால் இறந்து போன இந்த குழந்தை, எவ்வளவு எடை இருந்தது தெரியுமா? வெறும் ஐந்து கிலோ.

அரைகுறை படிப்பு!

மந்திரங்கள், சாஸ்திரங்கள் போன்றவை ரகசியமானவை… இதை தானாக போய் யாருக்கும் உபதேசம் செய்யக் கூடாது. யார் விரும்பிக் கேட்கின்றனரோ, அவர்களுக்கு மட்டும் உபதேசம் செய்ய வேண்டும் என்பது மந்திரப்பூர்வமான ரகசியம். இதை உபதேசம் செய்யக் கூடியவர் ஹயக்ரீவர்.
ஒரு சமயம் ஹயக்ரீவரிடம் சென்று, “தேவரீர்… எனக்கு பல ரகசியமான சுலோகங்களை உபதேசித்துள்ளீர். ஆனால், ஸ்ரீலலிதா சகஸ்ரநாம ஸ்தோத்திர ரகசியத்தை மட்டும் உபதேசிக்கவில்லையே…
நான் அதற்கு அருகதை இல்லாதவனா?’ என்று கேட்டார் அகஸ்தியர்.
அதற்கு, “அப்படியில்லை… ஸ்ரீலலிதா சகஸ்ரநாம ஸ்தோத்திரம் என்பது மிகவும் ரகசியமானது; அதை நானே வலியச் சென்று உபதேசிப்பதில்லை; விரும்பி கேட்பவர்களுக்கு மட்டுமே உபதேசிப்பேன். நீர் இப்போது விரும்பி கேட்டதால், அதை உமக்கு உபதேசிக்கிறேன்…’ என்று சொல்லி உபதேசித்தாராம் ஹயக்ரீவர்.
அந்த ஸ்தோத்திரம், அகஸ்தியர் மூலமாக எங்கும் பரவியதாம். இன்றும் எங்கும் பாராயணம் செய்யப்பட்டு வருகிறது;
அவ்வளவு உயர்ந்த கிரந்தம் இது.
ஒரு வித்வானுக்கு புராண கதைகள் தெரியும்… ஆனால், அவர் யாரிடமும் போய், “ஐயா… நான் உங்கள் வீட்டிற்கு வந்து புராண கதைகள் சொல்லட்டுமா?’ என்று கேட்கக் கூடாது. யார் கூப்பிட்டு சொல்லச் சொல்கின்றனரோ… அங்கே போய் சொல்லலாம்.
புராணக் கதைகள் சொல்பவர்களுக்கு நல்ல பாண்டித்யம் இருக்க வேண்டும்; சங்கீத ஞானமும், நல்ல ஞாபக சக்தியும் இருக்க வேண்டும். ஒரு இடத்தில் உட்கார்ந்து புராணம் சொல்லும் போது, உடலால் சேஷ்டைகள் செய்யக் கூடாது. யாரையும் குறிப்பிட்டு பேசக் கூடாது — இதெல்லாம் நியதிகள்.
ஒரு ராஜாவிடம் போய், “நான் பாகவதத்தை நன்றாகப் படித்துள்ளேன். ஒரு முறை அரண்மனையில் வந்து சொல்லட்டுமா?’ என்று கேட்டார் ஒரு வித்வான்.
அதற்கு, “பாகவதத்தை இன்னும் நன்றாகப் படித்துவிட்டு வாருங்கள்…’ என்றார் ராஜா… இவரும் போய் படித்துவிட்டு வந்து மீண்டும் கேட்டார். மறுபடியும் அப்படியே பதில் சொன்னார் ராஜா.
இப்படி இரண்டு, மூன்று முறை கேட்டும் அதே பதிலைத்தான் சொன்னார் ராஜா. வீட்டுக்குப் போய் மீண்டும் பாகவதத்தை படிக்க ஆரம்பித்தார் வித்வான். இரண்டு மூன்று மாதங்கள் இவர் ராஜாவை சந்திக்கவேயில்லை. ஒருநாள் இவரைக் கூப்பிட்டனுப்பி, “இப்போது அரண்மனைக்கு வந்து பாகவதம் சொல்ல முடியுமா?’ என்று கேட்டார் ராஜா.
அதற்கு,”இப்போது முடியாது… நான் வீட்டில் பாகவதம் படித்துக் கொண்டிருக்கிறேன்…’ என்றார் வித்வான்.
எதையும் சிரத்தையோடு முழுமையாக படித்து, பொருள் தெரிந்து கொண்டால்தான் வித்வத் பெற முடியும். அரைகுறையாக படித்துவிட்டு, மார்தட்டக் கூடாது.
***

ஆன்மிக வினா-விடை!
சிவாலயங்களுக்குச் சென்றால், நந்தியை முதலில் வழிபட்டு, பிறகு சிவபெருமானை வழி பட வேண்டுமா?
சிவாலயங்களுக்குச் சென்று, நந்தியை பிரதட்சணம் செய்து, சுவாமியை தரிசனம் செய்ய வேண் டும். அதன்பின், நந்தியின் இரு கொம்புகளிடையே சிவபெருமானை தரிசித்து, பிறகு ஆலயத்திலிருந்து வெளிவர வேண்டும்.