Daily Archives: நவம்பர் 20th, 2011

யுனைடெட் கிங்டமும், கிரேட் பிரிட்டனும்

இங்கிலாந்து பற்றிக் குறிப்பிடும்போது யுனைடெட் கிங்டம் என்றும், கிரேட் பிரிட்டன் என்றும் சொல்வார்கள். இது பலரைக் குழப்பும். இவற்றுக்கு இடையில் உள்ள வித்தியாசம் இதோ…

இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், வட அயர்லாந்து சேர்ந்தது `யுனைடெட் கிங்டம்’. தெற்கு அயர்லாந்து ஒரு தனி நாடு. முதலில் கூறப்பட்ட நான்குக்கும் ஒரு பொதுவான அரசாங்கமும், பாஸ்போர்ட்டும் உள்ளன.

`கிரேட் பிரிட்டனில்’ ஸ்காட்லாந்து, இங்கிலாந்து, வேல்ஸ் ஆகிய மூன்றும் உள்ளன. ஆனால் வடஅயர்லாந்து கிடையாது.

ஆங்கிலக் கால்வாயைத் தாண்டி அந்தப்புறத்தில் உள்ள பிரான்சில், பிரிட்டனி அல்லது பிரிட்டன் என்ற ஒரு பகுதி உண்டு. அதிலிருந்து வேறுபடுத்தவே `கிரேட் பிரிட்டன்’ என்ற பெயர் சூட்டப்பட்டது.

`பறக்கும்’ காதல்!

காதலும், இளமையும் பின்னிப்பிணைந்தது. காலம் தோறும் காதல் இருந்தாலும், இப்போதைய காதல் ரொம்பவே மாறிவிட்டது. செல்போனில் கொஞ்சிக் கொள்வதும், பைக்கில் பறப்பதும், பீச்களில் ஜோடியாக வலம்வருவதும்தான் காதல் என்றாகிவிட்டது. காதலர்களின் நவீன சின்னமாக `பைக்` மாறிவிட்டது. பைக் இல்லாத வாலிபர்களை பெண்கள் கவனிப்பதே இல்லை என்றுகூட சொல்ல வைக்கிறது.

முன்பெல்லாம் காதலர்கள் சந்தித்துக்கொள்வதே அரிதான விஷயம். திருவிழா நேரங்களில்தான் பெண்கள் அதிகமாக வீட்டைவிட்டு வெளியே வருவார்கள். தோட்ட வேலையாக போகிறபோக்கில் கண்மாய் கரையோரம் சந்தித்தால் உண்டு.

ஆனால் இப்போது காலம் தலைகீழாக மாறிவிட்டது. செல்போன் வழியாக வீட்டுக்குள்ளேயே நுழைந்துவிடும் காதல், பிறகு ஹைவேயில், டூவீலரில் பறக்கும் நிலைக்கு வந்து விடுகிறது. இலைமறை காயாக வளர்ந்து வந்த காதல், தொழில்நுட்ப வளர்ச்சியால், ஹைவேயில் அதிவேகத்தில் தலைதெறிக்க பறக்கும் அளவுக்கு முன்னேறி விட்டது.

இது தவறா? சரியா? என்பதையெல்லாம் பிறகு பார்க்கலாம். முதலில் இந்த டூவீலர் சமாச்சாரத்திற்கு வருவோம்.

இன்றைய தலைமுறை `டூவீலர்` வாங்குவதே தங்கள் ஜோடியை பின்னால் உட்கார வைத்துக் கொண்டு ஊரைச் சுற்றத்தானோ என்று சந்தேகப்பட வேண்டியிருக்கிறது. காதலுக்கு அவர்கள் செய்யும் முதல் முதலீடு டூவீலர்தான். கேர்ள் பிரெண்டை பின்னால் உட்கார வைத்துக் கொண்டு ஆளில்லாத ஹைவேயில் நீண்ட தூரம் பறப்பதைத்தான் இன்றைய இளைஞர்கள் சாதனையாக நினைக்கிறார்கள்.

பெண்களும், ஆண்களிடமிருக்கும் டூவீலரை வைத்துத்தான் அவர்களை எடை போடுகிறார்கள்.

இன்னும் சொல்லப்போனால் பாய் பிரண்ட்ஸை விட அவர்கள் வைத்திருக்கும் `பைக்கை’ அதிகம் காதலிக்கும் பெண்களும் உண்டு.

அதனால் இன்றைய இளைஞர்கள் எப்பாடுபட்டாவது ஒரு பைக்கை வாங்கிவிடுகிறார்கள். பைக் இல்லாவிட்டால் எனக்கு படிப்பே வராது என்று போராடி பெற்றோரின் கடன் சுமையை அதிகமாக்கி பைக் வாங்குபவர்கள் ஏராளம். அதனால்தான் பைக் கல்லூரி வாகனமாகவும், காதல் வாகனமாகவும் மாறிவிட்டது.

பைக்கில் பறக்கும் காதலர்கள் கரடு முரடான சாலைகளை பற்றியெல்லாம் கவலைப்படுவதே இல்லை. கரடு முரடை கடந்தால்தான் ஆளில்லாத ஹைவேயில் சந்தோஷப் பறவைகளாக பறக்க முடியும். சுற்றுச் சூழலைப் பற்றியோ, பெற்றோரைப் பற்றியோ எந்த கவலையும் அவர்களுக்கு இல்லை. சாலை விதிகளும் அவர்கள் கவனத்தில் இல்லை.

பைக்கை வேகமாக ஓட்டுவதை தங்களுடைய சாதனையாக காட்டிக் கொள்ள விரும்பும் ஆண்கள் சாலைவிதிகளை சகஜமாக மீறுகிறார்கள். அவர்களின் அழகான எதிர்கால வாழ்க்கையை அதிவேகம் கொடுக்கும் அற்ப சந்தோஷத்திற்காக இழக்கிறார்கள். சாலை விதி என்பது சாலைக்காக அல்ல, சாலையில் பயணிப்பவர்களுக்காக என்ற சின்ன விஷயம் கூட அவர்களுக்குப் புரிவதில்லை.

பைக்கில் அமர்ந்தவுடன் தங்களை ஒரு ரேஸ் சாம்பியனாக பாவித்துக் கொண்டு அவர்கள் போகும் வேகம், தன் பின்னால் இருக்கும் கேர்ள் பிரெண்ட் மெச்சிக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். அவளும் கண்மூடி மஞ்சத்தில் படுத்திருப்பதுபோல், அந்த வேகக் காதலன் மீது, படுத்து பிரிக்க முடியாத அளவுக்கு இறுகிக்கொள்கிறாள்.

இன்றைய வாகனங்கள் அதற்கேற்றாற்போலதான் வடிவமைக்கப்படுகின்றன. ஒரு காலத்தில் டூவீலர்கள் குடும்ப வாகனமாக இருந்தது. மனைவி, குழந்தைகளை ஏற்றிக் கொண்டு செல்ல பயன்பட்டது. வாங்கும் பொருட்களை பக்கவாட்டில் வைத்துக் கொள்ள வசதியாக பாக்ஸ், பைகள் மாட்ட இடம், பின்னால் கேரியர் என்று வடிவமைக்கப்பட்டது. இன்று இரண்டு பேர் மட்டுமே பயணிக்க வசதியாக உள்ளது. எவ்வளவு பணம் கொடுத்து வாங்கினாலும், அதில் இரண்டு பேர் மட்டுமே பயணிக்க முடியும். தேவையான பொருட்களையும் எடுத்துச்செல்ல முடியாது.

லீவு நாட்களில், கேர்ள் பிரண்டை பின்னால் உட்கார வைத்துக் கொண்டு கரடு முரடான சாலைகளை கடந்து, காற்றைக் கிழிக்கும் வேகத்தில் பறக்கும் இளைஞர்கள், ஏதோ உலகத்தையே வளைத்துவிட்டதுபோன்ற உணர்வில் மிதக்கிறார்கள். பின்னால் உட்கார்ந்திருக்கும் இளம்பெண்களோ யார் கண்ணிலும் பட்டுவிடாமல் இருக்க துப்பட்டாவால் முகத்தை சுற்றிக்கொள்கிறாள். முகமூடி கொள்ளையர்போல் மாறிவிடுகிறாள். இருவரும் இணைந்து ஹைவே சாலையைத் தொட்டுவிட்டால் பறக்கும் வேகத்தில் வானத்தையே தொட்டு விட்டதாக நினைக்கிறார்கள்.

இப்படி பறப்பவர்களுக்கு பெற்றோரைப் பற்றி மட்டுமின்றி, பெட்ரோலைப் பற்றியும் கவலையில்லை.

அவர்கள் சிந்தனைக்கு சில விஷயங்கள்:

* பின்னால் இருக்கும் பெண்கள், பைக்கை ஓட்டும் இளைஞரிடம் நிதானத்தை கையாளச் சொல்லுங்கள். வாகனத்தை நிதானமாக ஓட்டத் தெரியாதவருக்கு, வாழ்க்கையை நிதானமாக கொண்டு செல்லத் தெரியாது என்று சொல்லிக் கொடுங்கள்.

* மற்றவர்கள் கண்ணில் இருந்து தப்பிக்க பெண்களை ஏற்றிக்கொண்டு `பறக்கும்’ போது அத்தகைய வாகனங்கள் அதிகம் விபத்தில் சிக்குவதை உணருங்கள்.

இந்தியாவில் பரஸ்பர நிதியின் வகைகள்

 

நம் நாட்டில் பல்வேறு பரஸ்பர நிதி திட்டங்கள் உள்ளன என்பது நீங்கள் அறிந்ததே!

ஏன் இத்தனை திட்டங்கள் என்று எப்போதாவது நீங்கள் யோசித்ததுண்டா?

அதற்கு முன் பரஸ்பர நிதியை பற்றி தெரிந்து கொள்வோமா?

கைவசம் இருக்கும் சேமிப்புகளை ஆக்கபூர்வமான வகையில் முதலீடு செய்ய விரும்பும் சிறு முதலீட்டாளர்களின் சேமிப்புகளை பெற்று, அவற்றை முதலீடு செய்து அடையும் நிகர லாபத்தை அவர்களுக்கு பகிர்ந்தளிக்கும் பணியைச் செய்வது தான் பரஸ்பர நிதி நிறுவனங்களின் பணி, நோக்கம்.

இந்த பரஸ்பர நிதி நிறுவனங்கள், `செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸேஞ்ச் போர்டு ஆப் இந்தியா’ (சுருக்கமாக, `செபி’) என்ற அமைப்பிடம் தங்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். இந்த செபி அமைப்பு இந்திய அரசின் தன்னாட்சி பெற்ற ஒரு அமைப்பு. பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டி அதனை முதலீடுகள் மூலம் நிர்வாகம் செய்கிற அனைத்து நிறுவனங்களையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அதிகாரம் படைத்தது.

முதலீட்டாளர்களிடமிருந்து பெறும் நிதியை எந்தெந்தப் பங்குகள் (Equity) மற்றும் கடன் பத்திரங்களில் (Debentures and Bonds) லாபகரமாக முதலீடு செய்யலாம் என்பதை ஆய்ந்து தெரிவிக்க, பரஸ்பர நிதி நிறுவனங்களில், இத்துறையில் போதிய அறிவும், அனுபவமும் வாய்ந்த நிபுணர் குழு ஒன்று தொடர்ந்து செயல்படும்.

முதலீட்டாளர்கள் செலுத்தும் தொகைக்கு ஏற்ப அவர்களுக்கு அந்தப் பரஸ்பர நிதி நிறுவனத்தில் பங்குகள் வழங்கப்படும். இதற்கு `யூனிட்டுகள்’ என்று பெயர். இந்தத் தொகை, பங்குகள் மற்றும் கடன்பத்திரங்களில் முதலீடு செய்யப்படும்போது யூனிட்டுகள் பங்குகளாக மாறும்.

குறிப்பிட்ட கால முடிவில் கிடைத்த லாபம் அல்லது அடைந்த நஷ்டத்தை யூனிட்தாரர்கள் அவரவர் யூனிட்டுகளின் எண்ணிக்கை அடிப்படையில் பகிர்ந்துகொள்வர்.

முதலீடு செய்ய விரும்புபவர்களின் நோக்கங்கள் வேறுபடுவதால், அவரவர் விருப்பத்திற்கு ஏற்ற பல்வேறு பரஸ்பர நிதித் திட்டங்களும் அவசியமாகின்றன.

பரஸ்பர நிதி திட்டங்களின் வகைகள்:

முடிவுறும் திட்டங்கள் (Close Ended Scheme):

இத்திட்டம், குறிப்பிட்ட தேதியில் அறிவிக்கப்பட்டு மற்றொரு தேதியில் முடிவுக்கு வரும். அதாவது, முதலீட்டாளர்கள் எல்லா காலங்களிலும் இதுபோன்ற திட்டங்களில் சேர இயலாது. இருப்பினும், இத்திட்டம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுவதால் இதன் யூனிட்டுகளை பங்குச் சந்தை மூலமாக வாங்கவோ, விற்கவோ முடியும். இத்திட்டங்களின் முதலீட்டாளர்கள் தங்களது பங்குகளை, அதனை வெளியிட்ட பரஸ்பர நிதி நிறுவனத்திடமே அன்றைய மதிப்புக்கு விற்று திட்டத்தைவிட்டு வெளியேறலாம். இந்த திட்டத்தில் 5-ல் இருந்து 7 ஆண்டு காலத்துக்கு முதலீடு செய்யலாம்.

முடிவுறா திட்டங்கள் (Open Ended Scheme)

இது பிரபலமாக இருக்கும் ஒரு திட்டம். முதலில் சொல்லப்பட்ட திட்டங்களைப் போல் அல்லாமல் இவ்வகைத் திட்டங்களில் ஒருவர் எப்போது வேண்டுமானாலும் சேரலாம். இதில் எத்தனை பேர் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள், ஒருவரது முதலீட்டுக்கான வரம்பு எது, இத்திட்டத்தில் இந்நிறுவனம் எவ்வளவு தொகையை திரட்டும் என்பதற்கெல்லாம் கட்டுப்பாடுகள் இல்லை. அந்த நிறுவனம் விரும்புகிற காலம் வரையில் முதலீட்டாளர்களை சேர்த்துக்கொள்ளலாம்.

இடைவெளி திட்டங்கள் (Interval Scheme)

முடிவுறும் மற்றும் முடிவுறா திட்டங்களின் தன்மையையும் கொண்டவை இவ்வகைத் திட்டங்கள். இத்திட்டங்கள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுகின்றன. அதே நேரம் நிதி நிறுவனங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் முதலீட்டாளர்களிடமிருந்து இவற்றை அன்றைய மதிப்பில் திரும்ப வாங்கிக்கொள்கின்றன.

பங்கு முதலீட்டு திட்டம் (Equity Mutual Fund)

பரஸ்பர நிதி நிறுவனங்கள் இத்திட்டங்கள் மூலம் திரட்டும் நிதியை நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்து லாபம் ஈட்டுகின்றன.

கடன் பத்திரங்கள் (Debt Mutual Fund)

மத்திய மாநில அரசுகள், தனியார் நிறுவனங்கள், வங்கிகள் நிதி நிறுவனங்கள் வெளியிடும் கடன் பத்திரங்களில் பரஸ்பர நிதி நிறுவனங்கள் முதலீடு செய்கின்றன. நிரந்தர வட்டி வருவாய் மற்றும் ஆபத்தில்லாத தன்மைகளை கருத்தில் கொண்டு இவ்வகை முதலீடுகளை பரஸ்பர நிதி நிறுவனங்கள் அதிகம் விரும்புகின்றன.

சரிவிகிதத் திட்டங்கள்

பெயரிலிருந்தே புரிந்திருக்கும். இது பங்கு முதலீட்டுத் திட்டம் மற்றும் கடன் பத்திரங்கள் இரண்டையும் உள்ளடக்கியது. இதன் மூலம் திரட்டப்படும் நிதி, பங்குகளிலும், கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்யப்படும். பங்குகளில் முதலீடு செய்யப்படுவதால் நீண்டகால அடிப்படையில் வளர்ச்சியும், கடன் பத்திரங்களின் முதலீடு காரணமாக நிச்சயமான வருவாய் மற்றும் பாதுகாப்பும் உறுதியாகிறது.

வளர்ச்சித் திட்டங்கள்

முதலீடு நல்ல வளர்ச்சியடைய வேண்டும் என்ற நோக்குடன், பெருமளவு நிதியை பங்குகளில் முதலீடு செய்கின்றன பரஸ்பர நிதி நிறுவனங்கள். நீண்ட கால அடிப்படையில் முதலீடு வளர்ச்சி காண இத்திட்டம் பயன்படுகிறது.

வருவாய்த் திட்டங்கள்

முதலீட்டாளர்கள் மாதாமாதம் அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஒரு குறிப்பிட்ட வருவாயை எதிர்பார்க்கும்பட்சத்தில் பரஸ்பர நிதி நிறுவனங்கள் அரசு பாண்டுகளிலும் தனியார் கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்கின்றன. இதில் நீண்ட கால வளர்ச்சி அதிகமாக இருக்காது என்றாலும் மாதாமாதம் அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நிரந்தர வருமானம் நிச்சயமாக உண்டு.

குறியீட்டுத் திட்டங்கள்

இந்தத் திட்டங்களின் மூலமாகத் திரட்டப்படும் நிதியை பங்குச் சந்தை குறியீட்டு எண்களை முடிவு செய்யும் நிறுவனப் பங்குகளில் பரஸ்பர நிதி நிறுவனங்கள் முதலீடு செய்கின்றன.

காகத்திற்கு அன்னமிடுவது ஏன்?

சனி பகவானின் வாகனம்… காகம். நாம் உணவு உண்ணும் முன் காகத்துக்கு ஒரு பிடி உணவு வழங்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

இது ஏன் தெரியுமா?

நமது முன்னோர்கள் காகத்தின் வடிவில் பூலோகம் வருவதாக நம்பிக்கை. அவர்களுடைய ஆசியினால் தான் நாம் இவ்வுலகில் அமைதியாக, சந்தோஷமாக, நிம்மதியாக வாழ முடிகிறது. எனவே அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலேயே காகத்திற்கு தினசரி உணவிடுகிறோம்.

காகத்திற்கு உணவிடும் பழக்கத்தினால் கணவன், மனைவி ஒற்றுமை வளர்ந்து குடும்பத்தில் எப்போதும் அமைதி நிலைக்கும் என்பதும் நம்பிக்கை.

சனீஸ்வர பகவானின் வாகனம்தான் காகம் என்பதால், அதற்கு உணவளிப்பதன் மூலம் சனி பகவான் தரும் கெடுபலன்களில் இருந்து நாம் விடுபடலாம். அதேநேரம், இறைவனின் பரிபூரண அருளையும், அன்பையும் பெறலாம்.

இதில் இன்னொரு தத்துவமும் இருக்கிறது. காகத்தை `ஆகாயத்தோட்டி’ என்றும் அழைப்பார்கள். இந்தப் பறவை யாருக்கும் கெடுதல் செய்வதும் இல்லை. இது நம்மைச் சுற்றியுள்ள அசுத்தங்களை அடியோடு களைவதாலும், இந்த பறவை இனம் காப்பாற்றப்பட வேண்டும் என்ற அடிப்படையிலும் அதற்கு உணவிடும் பழக்கம் வந்ததாக சொல்வார்கள்.