Daily Archives: நவம்பர் 21st, 2011

அமைதியான நதி‌யினிலே…குமரகம்.

ஆடி முடிந்தது. ஆவணி பிறந்தது. மனம் சிறகடிக்க திருமணம் முடிந்தது. அடுத்தது என்ன? தேன்நிலவு தான். எங்கே போவது? அருகிலேயே கடவுளின் தேசம் இருக்க குழப்பம் ஏன்? குமரகம். இங்கு குதூகலத்திற்கு அளவே இல்லை. இயற்கை அன்னை தன் செல்வங்களை எல்லாம் வாரி, வாரி இந்த குமரகத்திற்கு தானமாக கொடுத்து விட்டாளோ! என்ற எண்ணம் அங்கு சென்றதும் நிச்சயம் ஏற்படும். திரும்பிய இடமெல்லாம், நிலமங்கை பசுமை போர்வை போர்த்தி இருக்கிறாள். ஒரு புறம் செழித்து வளர்ந்த நெற்கதிர்களுடன் காணப்படும் வயல்கள்… மறுபுறம், குலைகுலையாக இளநீர்களை சுமந்து நிற்கும் தென்னை மரங்களை கொண்ட தோப்புகள்… இவைகளுக்கு இடையே, மழை வளத்தால் தேங்கி நிற்கும் குட்டைகளில் பூத்திருக்கும் அல்லி மலர்கள்… உல்லங்கழிகள், அதில் மிதந்து செல்லும் கட்டுமரங்கள்…என்று பூலோக சொர்க்கமாக காண்போரின் கண்களையும், கருத்தையும் கவர்கிறது குமரகம். இதனால் தானோ என்னவோ, நேஷனல் ஜியோகிராபிக் குழுவை சேர்ந்த பயணி ஒருவர் இந்த குமரகத்தினை, உலகின் பத்து அழகிய இடங்களில் ஒன்றாக கணித்திருக்கிறார்.

கொச்சியில் இருந்து கார் மூலமாக பயணித்தால் 90 கி.மீ. தூரம். அதுவே கோட்டயத்தில் இருந்து என்றால் 16 கி.மீ. பயணம் தான். சில நூற்றாண்டுகளுக்கு முன்பு, இந்த இடம் கொடியூர் என்று அழைக்கப்பட்டிருக்கிறது. பிற்காலத்தில் இங்கு குமரக் கடவுளின் கோவில் ஒன்றை கட்டியிருக்கிறார்கள். இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர் என்ற மத பேதம் இன்றி அனைவரும் வழிபடும் குமரன் வாசம் செய்யும் இடமானதால் குமரகம் என்ற பெயர் பெற்றிருக்கிறது இவ்விடம்.

குமரகத்தை தன்னுள் அரவணைத்து வைத்திருக்கிறது வேம்பநாடு ஏரி. இந்தியாவிலேயே நல்ல தண்ணீரை கொண்ட மிகப்பெரிய ஏரி இது தானாம். இதன் பரப்பளவு 205 சதுர மீட்டர். பம்பா, மீனசில், மணிமாலா. அச்சன்கோவில், பெரியார், மூவாட்டு புழா எனும் ஆறு ஆறுகளின் சங்கமமே இந்த வேம்பநாடு ஏரி என்ற செய்தி மலைக்க வைக்கிறது. பல திசைகளிலிருந்து ஓடிவரும் இந்த தண்ணீர், அழகிய கால்வாய்களாக உருவெடுத்து பின் இந்த ஏரியில் கலக்கிறது. இந்த கால்வாய்களில் படகு சவாரி செய்து மகிழலாம். கால்வாயில் கரைகளில் குமரகத்தை சேர்ந்த விவசாயிகள் வீடு கட்டி வாழ்கிறார்கள். வீடுகளில் இருந்து படி இறங்கினாலே தண்ணீர் தான். வாழ்நாளில் மறக்க முடியாத சுக அனுபவம் இது.

மீன்கள் நிறைந்து காணப்படும் இந்த ஏரியில்… மழைக்காலமான ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை தண்ணீர் உப்பு தன்னையில்லாமல் இருக்குமாம். இந்த ஏரியை சுற்றியுள்ள சதுப்பு நில மரங்களில், பல நாடுகளில் இருந்து வந்த பறவைகள் கூடு கட்டி வாழ் கின்றன. இந்த பறவைகள் சரணாலயத்தை கேரள சுற்றுலாத்துறை பராமரிக்கிறது. குமரகத்தில் வாழ்பவர்கள், ஓரிடத்திலிருந்து இன்னொரு இடம் செல்ல படகுகளை உபயோகிக்கிறார்கள். ஒவ்வொரு வீட்டில் முன்னும் கார், ஸ்கூட்டர் நிறுத்துவது போல அவர்களுடைய சொந்தப் படகுகளை நிறுத்தி வைக்கின்றனர். இதை பார்த்தால் நமக்கு வெனீஸ் நாடு நினைவுக்கு வரும். குமரகத்தை தென்னிந்தியாவின் வெனீஸ் என்று அழைத்தால் கூட அது மிகையாகாது.

அரபிக்கடவுள் உருவாகியிருக்கும் உப்பங்கழிகளின் கரைகளின் பல சொகுசு ஹோட்டல்கள் உள்ளன. இந்த ஹோட்டல்களின் உணவு வகைகள் அற்புதமானவை. சுவை நிறைந்தவை. இங்கு பல விதமான ஆயுர்வேத மசாஜ்களும் செய்கிறார்கள். மாலை நேரத்தில் ஹோட்டல்களில் இருந்து, படகுகளில் நம்மை அழைத்து சென்று சூரிய அஸ்தமானத்தை காட்டுகிறார்கள். சிலுசிலு காற்று முகத்தில் அறைய… அந்த மாலை நேர வானத்தில் , சிறகு பூரித்து கூடு திரும்பும் பறவைகளின் காட்சியை பார்க்கும் பொழுது, இனம் புரியாத இன்பத்தில் மனம் நிறைகிறது.

படகு வீடுகளில் தங்கி மகிழ நாம் காஷ்மீர் செல்ல வேண்டியதில்லை. இங்குள்ள ஹோட்டல்களுக்கு சொந்தமான கெட்டுவலம் என்றழைக்கப்படும் சொகுசு படகுகளில் தங்கினாலே போதும். பழமையும் புதுமையும் கலந்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படகுகளில் ஒரு 5 நட்சத்திர ஹோட்டல்களில் கிடைக்க கூடிய எல்லா வசதிகளுகளும் இருக்கின்றன.

இயற்கை விரும்பிகளுக்கு…. குறிப்பாக தேனிலவு தம்பதியர்களுக்கு சொர்க்க பூமி இந்த குமரகம்.

ஒரு பழம்… ஓஹோன்னு வாழ்க்கை!

சிறு வயதிலேயே தோன்றும் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பார்வைகுறைபாடு,தோல் நோய்கள், நோய் எதிர்ப்பு சக்தியின்மை, ரத்தசோகை, பெண்களுக்கு மாத விலக்கு கோளாறுகள், மகப் பேறின்மை போன்ற பல நோய் களும் எதிர்கால குழந்தைகளின் ஆரோக்கியமான வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிவிடுகின்றன. குழந்தைப்பருவத்திலேயே

ஊட்டச்சத்து குறைபாடு நோய்கள் தோன்றிவிடுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. பல்வேறுவகையான பழங்களையும், காய்கறிகளையும் உண்டுவந்த நமது பாரம்பரியமானது துரித உணவினாலும், சமைத்த உணவினாலும் நிலை தடுமாறி, ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள இயலாமல், சத்து மாத்திரைகளையும் சத்து டானிக்குகளையும் சிறுவயது முதலே எடுத்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம். பிறந்த குழந்தைகள் கூட தாய்ப்பாலை குடிக்கும் முன்பே சொட்டு மருந்துகளை உட்கொள்ளத் தொடங்கிவிடுகின்றன. புராணங்களிலும், வேதங்களிலும் பல்வேறு வகையானபழங்களையும் அவற்றின் பயன்களையும் நாம் புரிந்துகொள்ளும் வண்ணம் கதைகளாக சொல்லியுள்ளனர். மாம்பழம், நெல்லி, ஆப்பிள், நாவல் போன்ற பல பழங்களும், பல்வேறு வகையான சத்துக்களை உள்ளடக்கியுள்ளன.

நாம் உட்கொள்ளும் பழங்கள் அனைத்து நாட்களிலும் கிடைக்கக்கூடியதாகவும், மிகவும் குளிர்ச்சியினால் சளித்தொல்லை மற்றும் மலச்சிக்கலை தவிர்க்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும். அத்துடன் அனைத்து தரப்பினரும் உட்கொள்ளும் வண்ணம் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். சீனா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் அன்றாட உணவில் ஏதேனும் ஒரு வகையில் பழங்கள் சேர்க்கப்படுகின்றன. அதேபோல் நாகரீகத்தில் பாரம்பரியமிக்க நாமும் பழங்களை அடிக்கடி உட்கொள்வது அவசியம். பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கி, தோலுக்கு நல்ல நிறத்தையும், மினுமினுப்பையும் தருவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, கண் பார்வையை தெளிவாக்கி, உடலில் கொழுப்புகள் சேராமல் தடுத்து, இதயத்தை காக்கும் அற்புத பழம் ஆப்ரிகாட் என்ற துருக்கி ஆரஞ்சு.

புருனஸ் ஆர்மெனியேகா என்ற தாவரவியல் பெயர் கொண்ட ரோசேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த சிறிய மரங்களின் நன்கு பழுத்த ஆரஞ்சு நிற பழங்களே மருத்துவத்தில் பயன்படுகின்றன. பழங்களிலுள்ள வானிலிக் அமிலங்கள் மற்றும் ரூப்பின் என்ற நறுமண எண்ணெய் கை, கால் வலியை நீக்குகிறது. வைட்டமின் ஏ பார்வை திறனை அதிகப்
படுத்துகிறது. இரும்புச்சத்து மற்றும் பீட்டா கரோட்டின்கள் ரத்த உற்பத்தியை அதிகரிக்கின்றன. வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது. இதில் அடங்கியுள்ள நார்ச்சத்தானது மலச்சிக்கலை நீக்குகிறது. கரோட்டினாய்டுகள் எல்.டி.எல். என்னும் கெட்ட கொழுப்பை நீக்கி, இதய நோயை தடுக்கின்றது. இதிலுள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீர்செய்கிறது. லைகோபின் என்னும் சத்தானது செல் முதிர்வை தடுக்கிறது. இதிலுள்ள டிரிப்டோபேன்கள் நரம்புகளை வலுப்படுத்துகின்றது. தினமும் 1 அல்லது 2 ஆப்ரிகாட் என்ற துருக்கி ஆரஞ்சுப் பழங்களை இரவில் சாப்பிட்டு வர பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் உடலில் சேருவதுடன் செல் அழிவும் கட்டுப்படுத்தப்படும். மலைவாழைப்பழம்-1, ஆப்ரிகாட்-4 ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, தயிர்-அரை கோப்பை கலந்து ஒரு மணி நேரம் ஊறவைத்து, இரவில் படுக்கும்பொழுது சாப்பிட்டுவர பார்வைதிறன் அதிகரிப்பதுடன் தோல் மினுமினுப்பு உண்டாகும்.

-டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ், மதுரை

காலை உணவு, உடலுக்கு நல்லது!

சிலர் `டயட்’டில் இருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு காலை டிபனை தவிர்ப்பார்கள். இப்படிச் செய்வது நல்லதல்ல என்று ஆய்வு செய்து நிரூபித்து இருக்கிறார்கள்.

ஆரோக்கியமான வாழ்விற்கு காலை உணவு மிகவும் முக்கியமானது என்பது அந்த ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த சிக்ரிட் கிப்சன் தலைமையிலான குழுவினர் இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்டார்கள்.

இந்த ஆய்வில், மற்ற உணவு மற்றும் அதிலிருந்து கிடைக்கும் சத்துகள் ஆகியவற்றை காலை உணவு தான் நிர்ணயிக்கிறது என்பதும், பருப்பு வகைகள் மற்றும் பால் ஆகியவற்றைக் காலையில் உட்கொண்டு வருவது உடலுக்கு நோய் இல்லாத பாதுகாப்பைத் தருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.

19 முதல் 64 வயது வரையிலானவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த ஆய்வில், பெரும்பாலானவர்கள் திட உணவுக்கு முன்பாக காபி அல்லது டீ போன்றவற்றை அருந்த விரும்புவதும் தெரிய வந்தது.

ஆய்வு முடிவு குறித்து சிக்ரிட் கிப்சன் கூறும்போது, `பால் மற்றும் பருப்பு வகைகளை நாம் உணவாக எடுத்துக்கொள்ளும்போது உடலுக்குத் தேவையான கால்சியம், நார்ச்சத்து, புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் கிடைக்கின்றன. அதனால், அவற்றை காலை டிபனாக எடுத்துக் கொள்வது நல்லது’ என்றார்.

மன்னனின் மயக்கம் தெளிந்தது…பட்டினத்தார் வரலாறு

பத்ரகிரியார் கூறுகிறார்:

எனக்கும் அது புரியவில்லை. `அந்த ஆண்டி ஒரு மாய வேலைக்காரன். சித்து வேலைக்காரன்’ என்று என் ராணி புலம்பிக் கொண்டிருந்தாள்.

சிறைச் சாலையை நன்றாக கவனிக்கும்படி சில ஆட்களை அனுப்பிவிட்டு, நான் படுக்கையிலேயே கிடந்தேன்.

மூன்று தினங்கள் சென்றன.

என்னைச் சுற்றிலும் நான்கு அந்தப்புர நாயகிகள் இருந்தார்களே தவிர, ராணி இல்லை.

அவள் கழுமர நிகழ்ச்சியில் கலங்கி நிற்கிறாள் என்று எண்ணி சுவாமிகளை நானே கழுவில் ஏற்றுவது என்று முடிவுகட்டி, ஒரு நாள் மாலை நான் தனியாகவே சிறைக்கூடத்திற்குச் சென்றேன்.

அன்று கழுவேற்ற அல்ல; கழுவேற்றப் போகிறேன் என்ற செய்தியைச் சொல்ல.

அப்போது சுவாமிகள் வெறும் கோவணத்தோடு குளிர்ந்த தரையில் படுத்திருந்தார்கள்.

நான் ஆத்திரத்தோடு, `நாளை உன்னைக் கழுவேற்றப் போகிறேன்’ என்றேன்.

சுவாமிகள் அமைதியாக, `உன் கையால் நான் சாக வேண்டும் என்றுதான், அன்று நான் சாகவில்லை போலிருக்கிறது!’ என்றார்கள்.

`உன் சித்து வேலை என்னிடம் பலிக்காது!’ என்றேன்.

`நான் செத்த மனிதன், எனக்கேனப்பா சித்து வேலை?’

`பர்த்ருஹரியின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவள்’ என்றேன்.

`சந்தேகம் பர்த்ருஹரிக்கும் அப்பாற்பட்டது’ என்றார்கள்.

`என் ராணிக்கும் இரண்டு மனம் என்று சொன்னதற்கு மன்னிப்புக் கேள்!’ என்றேன்.

`மகேசனைத் தவிர மற்றவர்களிடம் மன்னிப்புக் கேட்பதில் இகத்துக்கும் லாபமில்லை; பரத்துக்கும் லாபமில்லை!’ என்றார்கள்.

`அப்படி என்றால் நாளைக் காலையில் சாவதற்குத் தயாராயிரு’ என்றேன்.

`நான் இப்பொழுதே தயார். நீ போ, முடியுமானால் நிம்மதியாகத் தூங்கு! காலையில் வா!’ என்றார்கள்.

நான் அரண்மனைக்குத் திரும்பினேன்; மாடத்தில் உலாத்தினேன். காலையில் சுவாமிகளைக் கழுவேற்றப் போகும் செய்தியை ராணிக்குச் சொல்ல விரும்பினேன்.

பள்ளி அறையில் தேடினேன்; அவளில்லை.

அந்தப்புரத்திலே தேடினேன்; அவளில்லை.

அந்த நள்ளிரவிலே ஏதோ ஒரு சக்தி என்னைக் குதிரை லாயத்தின் பக்கம் இழுத்துச் சென்றது.

அங்கே நான் கண்ட காட்சி…

அதை விவரிக்க என்னால் முடியவில்லை.

அஸ்வபாலன் என்ற குதிரைக்காரன் மடியில் எனது பட்டத்து ராணி படுத்திருந்தாள்.

அப்போது எனக்கு ஒரு நிகழ்ச்சி புலனாயிற்று.

என் மனைவி அந்த அஸ்வபாலனைக் கேட்டாள்: `நீண்ட நாட்கள் வாழக்கூடிய ஒரு கனியை, ஒரு முனிவர் என் கணவருக்குக் கொடுத்தார். என் கணவர் அதை என்னிடம் கொடுத்தார்; நான் உங்களிடம் கொடுத்தேன். நீங்கள் சாப்பிட்டீர்களா?’ என்று.

அதற்கு அவன் சொன்னான்: `இல்லை; அதை என் ஆசை நாயகி காமினியிடம் கொடுத்தேன்!’ என்றான்.

நான் மயங்கிக் கிடந்த போது அதே காமினி, அதே பழத்தை என்னிடம் கொடுத்தாள், அந்தப்புரநாயகி என்ற முறையில்.

எனக்கிருந்த போதை மயக்கத்தில் அது அவளிடம் எப்படி வந்தது, என்று கேளாமல் தூங்கிவிட்டேன்.

இப்போது புரிந்தது.

காமனை மிஞ்சும் அழகனெனப் புகழப்பட்ட பர்த்ருஹரியின் மனைவி, உலகத்திலேயே கோரமான ஒரு குதிரைக்காரன் மடியில் படுத்திருப்பதைப் பார்த்தேன்.

`பெண்ணுக்கு இரண்டு மனம்’ என்று சுவாமிகள் சொன்னது பொய்யல்ல.

ஒரு மனம் பூக்கடை; ஒரு மனம் சாக்கடை!

குதிரைக்காரனிடம் அவள் சொன்னாள்: `நீ கொடுத்த விஷத்தைப் பாலிலே போட்டு, என் கணவரின் பள்ளியிலே வைத்திருக்கிறேன்; நாளை அவர் உயிரோடு இருக்க மாட்டார். பிறகு நீதான் ராஜா!’ என்று.

நல்லவேளை; அந்தப் பாலை நான் குடிக்கவில்லை.

நான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அஸ்வபாலன், `மூன்று நாட்களாக என்னை ஏன் ஏமாற்றினாய்?’ என்று அவளை அடித்தான்.

அவள், அவன் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டாள்.

`குடிப்பிறப்பு என்றால் என்ன?’ என்று அப்போது எனக்குப் புரிந்தது.

அவள் `பள்ளி அறைக்குப் போகலாம்’ என்றாள்.

`இல்லை; இங்கேயே’ என்று அவன் அவளோடு உறவு கொண்டான்.

`இதற்கு மேல் என்னைப் பேச வைக்காதீர்கள்’ என்று பத்ரகிரியார் விக்கி அழுதார்.

அவரைத் தட்டிக் கொடுத்தபடி பட்டினத்தார் முடித்து வைக்கிறார்.

பட்டினத்தார் முடிவுரை:

பந்த பாசங்களை அறுத்து விட்டாலும் பழைய பாவங்களை எண்ணும்போது, மனிதனுக்கு கண்ணீர் பெருக்கெடுக்கிறது.

தீண்டக்கூடாத ஒன்றைத் தீண்டிவிட்டபின், கையைக் கழுவித் துடைத்துவிட வேண்டுமே தவிர, அடிக்கடி வாசனை பார்க்கக் கூடாது.

கோபிகள், பாவிகள், இழி மக்கள் இவர்களின் தொடர்பிலே தான் மனிதனுக்கு ஞானம் பிறக்கிறது.

தரமில்லாத ஒரு இடத்தில் பெண் எடுத்த காரணத்தால், சக்கரவர்த்தியாக வேண்டிய பத்ரகிரியார் தத்துவ ஞானியாகி விட்டார்.

தமிழ்ப் பெரியவர்கள் எல்லாம் குடிப்பிறப்பை அடிக்கடி வலியுறுத்தியதற்குக் காரணம் இதுதான்.

நலத்தின்கண் நாரின்மை தொன்றின்

அவனைக்

குலத்தின்கண் ஐயப்படும்.

– என்றார் வள்ளுவப் பெருந்தகை.

ஒருத்தியின் நடத்தை தவறாகத் தோன்றுமானால் அவள் பிறந்த குடும்பத்தையே கவனிக்க வேண்டும்.

குடிப்பிறப்பைப் பார்த்துப் பெண் எடுத்து விட்டால், எடுக்கப்பட்ட பெண் கோபக் காரியாக, கொடுமையாக மாறினாலும் மாறலாமே தவிர, நடத்தை கெட்டவளாக ஆக மாட்டாள்.

யாரோ ஒருத்தி- அழகியாயிருந்தாள்- அது ஒன்றே போதுமானதாக இருந்தது பத்ரகிரிக்கு; விளைவு, நரக வேதனை; சித்ரவதை.

மேனி மயக்கத்தின் முடிவு, ஞான மயக்கமாகத்தானே இருக்க முடியும்?

சிறைக்கூடத்திலே நான் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தேன்.

கம்பிக் கதவுகளுக்கு வெளியே விம்மல் சத்தம் கேட்டது. பிற உயிர்களின் அழுகை ஒலி, எப்போது உன் ஆன்மாவுக்குள் இருந்து நீ அழுவது போலவே கேட்கிறதோ, அப்போது தான் நீ பக்குவம் பெற்ற ஞானி ஆகிவிட்டாய் என்று அர்த்தம்.

படுத்த நிலையிலேயே கண்ணை விழித்துப் பார்த்தேன்.

பத்ரகிரியார் நின்றிருந்தார்.

தூரத்தில் சில காவலாளிகள் கையைக் கட்டிக் கொண்டு நின்றார்கள்.

அவரது கண்ணீரைப் பார்த்தவுடனேயே எனக்கென்னவோ, `பெண்ணுக்கு இரண்டு மனம்’ என்ற வார்த்தை நினைவுக்கு வந்தது.

`கதவை நீங்கள் திறப்பதா, நான் திறப்பதா?’ என்றேன்.

`நீங்கள்தான் திறக்க வேண்டும்’ என்று சாவியை என்னிடம் நீட்டினார் பத்ரகிரியார்.

நான் கம்பிகளுக்கு வெளியே கையைவிட்டுச் சிறைக்கூடப் பூட்டைத் திறந்தேன்.

`சுவாமி! நீங்கள் திறந்தது பூட்டையல்ல; என் அகக் கண்களை’ என்றார் பத்ரகிரியார்.

`அல்ல; வேறு யாரோ அந்தக் கண்களைத் திறந்த பிறகுதான் நீங்கள் இங்கே வந்திருக்கிறீர்கள்!’ என்றேன்.

`உண்மைதான் சுவாமி; தீயொழுக்கம் கொண்டவள் தான் கணவனின் ஞானக் கண்களைத் திறக்கிறாள்’ என்றார் பத்ரகிரியார்.

`எல்லார் கதையுமே அதுவல்ல; நான் கூட ஒரு முறை:

கைப்பிடி நாயகன் தூங்கையி லேயவன் கையெடுத்

தப்புறந்தன்னி லசையாமல் முன்வைத் தயல்வளவில்

ஒப்புடன் சென்று துயனீத்துப் பின்வந்து உறங்குவாளை

எப்படி நானம்புவேன் இறைவா! கச்சி ஏகம்பனே!

…. என்ற பாடலை, காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் சந்நிதியில் பாடினேன்.

பலர் என் மனையாளே அப்படி என்று கருதி விட்டார்கள்.

மனைவியால் நிலை குலைந்தவர்களின் மனசாட்சியாக நின்று நான் பாடினேனே தவிர, என் மனையாள் அப்படி அல்ல.

பொன்னாசையையும், மண்ணாசையையும் வெறுத்து, என்னை எண்ணாத எண்ணமெல்லாம் எண்ண வைத்தவன் ஒரு பிராமணச் சிறுவன்.

`பர்த்ருஹரி, காலையில் என்னைக் கழுவேற்ற வருவாய் என்று கருதினேன்; நீயே கழுவேற்றப்பட்ட நிலையில் கண்ணீரோடு வருவாய் என்று நான் கருதியதில்லை’ என்றேன்.

`சுவாமி! என்னை மணந்து கொண்ட ஒருத்தி, ஒரு கோரமான குதிரைக்காரன் மீது ஆசை வைத்தாளே! விதியின் விளையாட்டில் இத்தகைய விபரீதம் உண்டா?’ என்று கேட்டார் பத்ரகிரியார்.

`அது தேனீயாக இருந்தால் தேனை மட்டும்தான் அருந்தும்; சாதாரண ஈயாக இருந்தால் நைவேத்தியத்திலும் உட்காரும், மலத்திலும் உட்காரும். சுவாமியின் பிரசாதத்தில் உட்கார்ந்த நாமா மலத்தில் உட்காருகிறோம் என்று சிந்தித்துப் பார்ப்பதில்லை.

அன்று உன் பட்டத்து ராணி என்னிடம் பேசிய வார்த்தைகளில் இருந்தே, அவள் நலங்கெட்ட குடும்பத்தில் பிறந்தவள் என்பதை நான் கண்டு கொண்டேன். வார்த்தைகளே, பிறப்பை வெளிப்படுத்துகின்றன!’ என்றேன்.

`என் மோக வெறியில் உங்களை அலட்சியப்படுத்தி விட்டேனே…!’ என்று கண்ணீர் வடித்தார் பத்ரகிரியார்.

`நீ எதை விரும்புகிறாயோ அதை ஒரு கட்டத்தில் வெறுக்கவும், எதை வெறுக்கிறாயோ அதை ஒரு கட்டத்தில் விரும்பவும் வைப்பதே இறைவனுடைய லீலை!’ என்றேன் நான்.

`ஒன்றை விரும்பும் போதே, ஒரு நாள் வெறுக்க வேண்டி இருக்கும் என்று எண்ணி கொண்டு விட்டால், விருப்பு வெறுப்புகள் சமமாகி விடும்’ என்றேன்.

`நான் இனி என்ன செய்ய வேண்டும் சுவாமி’ என்று கேட்டார் பத்ரகிரியார்.

`அவளைத் துறந்துவிடு’ என்றேன்.

`இல்லை, அவளுக்கு மரண தண்டனை விதிக்கப் போகிறேன்!’ என்றார்.

`ஒழுக்கம் தவறுவதே ஒருத்திக்கு மரண தண்டனை தானே… இனி, புதிய தண்டனை எதற்கு?’ என்றேன்.

`அவளை மட்டும் துறப்பதா? அரசையும் துறப்பதா?’ என்று கேட்டார்.

`மேலாடையை இழப்பதா, கீழாடையையும் சேர்த்து இழப்பதா என்று நீதான் முடிவு செய்யவேண்டும்’ என்றேன்.

`சுவாமி! நீங்கள் உடனே அரண்மனைக்கு வர வேண்டும்!’ என்றார்.

அரண்மனைக்கெல்லாம் போகமாட்டேன் என்று சொல்வது போலித்தனமான ஞானம் அல்லவா?

`வருகிறேன்’ என்று சீடர்களோடு புறப்பட்டேன்.

வானளாவிய அரண்மனை கண்டேன்; வாரணம் கண்டேன்; பரிகள் கண்டேன்; மானுடத்தின் மகத்துவத்தைக் காணவில்லை.

மண் குடிசைக்கும் ஒளியூட்டக்கூடிய மாபெரும் பத்தினிகள் பலருண்டு; பளிங்கு மாளிகையையும் ஒளியிழக்க வைக்கும் ஒரு பத்தினியல்லவா இந்த மாளிகையில் குடியிருக்கிறாள் என்றெண்ணிய போது, எனக்குச் சிரிப்பு வந்தது.

நேரே அரியாசனத்திற்கு என்னை அழைத்துப் போனார் பத்ரகிரியார்.

`தன் நிலை அறிவான் நாயகன்’ என்பதை அறியாத அவரது பத்தினி அதைத் தடுத்தாள்.

`அரசனது ஆசனத்தில் ஆண்டியா?’ என்றாள் அவள்.

`ஏன்? அரசன் உட்காரக் கூடிய இடத்தில் ஒரு குதிரைக் காரனும் உட்காரலாம்!’ என்றார் பத்ரகிரியார்.

சிருங்கார சதகம் பாடியவர் அல்லவா?

வைராக்கியம் அவரை நோக்கி வந்து கொண்டிருந்தது.

`இந்த ஆண்டியை விட குதிரைக்காரர்கள் மோசமானவர்கள் அல்ல!’ என்றாள் அவள்.

`அனுபவித்தவர்களுக்குத்தானே தெரியும்… எனக்கென்ன தெரியும்?’ என்றார் அவர்.

`நான் பத்தினியானால், இந்த அரியாசனம் அவருக்கு இடம் கொடுக்காது!’ என்றாள் அவள்.

பத்ரகிரியார் சிரித்தார். நான் சிரிக்கவில்லை.

`பத்தினி’ என்றொரு வார்த்தை இருப்பதையாவது அவள் அறிந்திருக்கிறாளே! போதாதா?

திடீரென்று அவர் என்ன நினைத்தாரோ, அவளது ஆடைகளைக் கிழித்து நிர்வாணமாக்கினார்.

நான் தடுக்க முயன்றேன்; முடியவில்லை.

பத்ரகிரியார் வெறிபிடித்த வேங்கையானார்.

அவள் முகத்திலே கரும்புள்ளி, செம்புள்ளி குத்த வைத்தார். அந்தக் கோலத்திலேயே அவளைக் குதிரையில் ஏற்றி உட்கார வைத்தார்.

முன்னாலே ஒருவனைத் தண்டோராப் போட வைத்தார்.

`பதித் துரோகத்திற்கு இது பரிசு’ என்று அவனைச் சொல்ல வைத்தார்.

அவளை நகர்வலம் வர வைத்தார்.

ஆத்திரமடைந்த ஒருவன், கடைசியாகத் தன் ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்வதை யாரும் தடுக்க முடியாது;

ஆனால், அந்த ஆத்திரம் தீர்ந்ததும் அவன் அழுவான்;

அப்போது தான் அவனுக்கு விஷயங்களைச் சொல்ல முடியும்.

பத்ரகிரியாரும் அழுதார். நான் அவருக்கு ஞான தீட்சை நடத்தி வைத்தேன்.

 

காயத்ரி மகிமை

“ஓம் பூர்புவஸ்ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ நஹ் ப்ரசோதயாத்”

– ஐந்து முக தெய்வமான அன்னை காயத்ரியை வணங்க நாம் பயன்படுத்தும் மந்திரம் இது.

இதன் பொருள் தெரியுமா?

`எல்லா பாவங்களையும், அறியாமையையும் போக்குகிறவரும், வணங்குவதற்குரியவரும், இவ்வுலகத்தைப் படைத்த கடவுளையும், அவரது புகழையும் தியானிப்போமாக. அவர் நம் புத்தியை வழிநடத்துவாராக’ என்பதுதான், இதன் பொருள்.

சரி, யார் இந்த காயத்ரி?

வேதங்களின் தாயே காயத்ரி. பசுவின் பாலை விடச் சிறந்த உணவு கிடையாது. அதுபோல காயத்ரி மந்திரத்தை விடச் சிறந்த மந்திரம் வேறில்லை. காயத்ரி மந்திரத்தின் அதிதேவதை சவிதா. விஸ்வாமித்திரரே ரிஷி. அதிகாலைப் பொழுதில் கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து இந்த மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். நீராடியபின் ஜெபிப்பது சிறப்பு. முடியாவிட்டால் பல்தேய்த்து கால், கைகளை சுத்தம் செய்துவிட்டு சொல்லத் தொடங்கலாம்.

இந்த மந்திரத்தை தெளிவாகவும், தவறின்றியும் உச்சரிப்பது சிறப்பு. முடியாவிட்டால், இதன் பொருளை மனப்பாடமாக்கிக் கொண்டு தொடர்ந்து சொல்லி வரலாம்.

இந்த மந்திரத்தை தொடர்ந்து ஜெபித்து வந்தால் நம் மனத்தூய்மை பெருகும். மனம், வலிமை பெறும். ஞாபக சக்தி அபரிமிதமாகும்.

காயத்ரி சொல்லும்போது எந்தவொரு இஷ்ட தெய்வத்தையும் மனதில் தியானிக்கலாம். காயத்ரி பெண் தேவதை என்பதால் சக்தி வழிபாட்டுக்குரியதாக பலரும் எண்ணுகிறார்கள். ஆனால், தெய்வ நம்பிக்கை கொண்டவர்கள் யாராக இருந்தாலும், நம்பிக்கையோடு இந்த மந்திரத்தை ஜெபித்து வந்தால் நன்மை பல பெறலாம்.

 

தம்பதி சமேதரா கிளம்புங்க!-நவ., 21 – கார்த்திகை முதல் சோமவாரம்!

கார்த்திகை மாத திங்கள் கிழமைகள், சிவ வழிபாட்டுக்கு உகந்தவை. இந்நாட்களில், குடும்ப சகிதமாக கோவிலுக்குச் சென்றால், அந்தக் குடும்பம் பிரியாமல் இருக்கும் என்பது ஐதீகம். குறிப்பாக, கார்த்திகை திங்களன்று, கணவனும், மனைவியும் இணைந்து கோவிலுக்குச் சென்று வருவது, காலமெல்லாம் அவர்கள் கருத்து வேறுபாடின்றி இணைந்திருக்க வகை செய்யும்.
நவக்கிரகங்களில் சந்திரனை, “மனோகாரகன்’ என்பர்; இவர், மனதில் எழும் எண்ணங்களுக்கு அதிபதி. பவுர்ணமியன்று இயற்கையாகவே மனதில் எழுச்சி இருக்கும். கடல் அலைகள் கூட, அன்று வழக்கத்தை விட <அதிக உயரத்துக்கு எழுவதைக் காணலாம்.
சந்திரனுக்குரிய கிழமை திங்கள். பிறைநிலவை சிவபெருமான் அழகாக அணிந்துள்ளார். சந்திரனுக்கு, “சோமன்’ என்ற பெயருண்டு. அதனால், சோமனை சூடிய சிவன், “சோமசுந்தரர்’ எனப்படுகிறார். திங்களை முடியில் சூடியவர் என்பதாலும், சிவ வழிபாட்டில் திங்கட் கிழமைக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.
சந்திரனுக்கு, தட்சன் என்பவர், தன் மகள்களை திருமணம் செய்து கொடுத்தார். ஆனால், அவர்களில் ரோகிணி, கார்த்திகை என்ற மனைவியரிடம் மட்டுமே அதிக அன்பு காட்டினான் சந்திரன். இதனால், வருத்தமடைந்த மற்ற பெண்கள் தந்தையிடம் புகார் கூறினர். தன் மருமகனுக்கு புத்தி சொல்லி பார்த்தான் தட்சன். சந்திரன் அதை பொருட்படுத்தாததால், “நீ அழகாக இருக்கிறாய் என்ற கர்வத்தால் தானே இப்படி செய்கிறாய். உன் அழகு அழிந்து போகட்டும்…’ என சாபமிட்டான். அதுவரையில், சந்திரன், 30 நாட்களும் வானில் மின்னினானாம். சாபம் காரணமாக சந்திரன் ஒளியிழந்தான். இரவு வேளையில், உலகமும் இருள் மயமானது.
தன் சாபம் நீங்க சந்திரன், திங்கட் கிழமைகளில் சிவ வழிபாடு செய்தான். இதனால் மகிழ்ந்த சிவன், சந்திரனுக்கு மீண்டும் ஒளியைக் கொடுத்தார். அதன் பிறகும், சந்திரனின் செருக்கு அடங்கவில்லை. ஒரு சமயம், குள்ள வடிவமும், யானை முகமும் கொண்ட விநாயகரை அவன் கேலி செய்தான். இதனால், விநாயகரின் சாபத்துக்கு ஆளாகி, ஒளியிழந்தான். மீண்டும் சிவ வழிபாடு செய்த அவன், அவருக்கு, 108 சங்குகளில் தீர்த்தம் எடுத்து அபிஷேகம் செய்தான். அவன் முன் தோன்றிய சிவன், “ஒருவர் செய்யும் தவறை ஒருமுறை மன்னிக்கலாம்; மறுபடியும் மன்னிக்க இயலாது. இருப்பினும், என்னை அபிஷேகித்து வழிபட்டதால், ஒரு பட்சம் வளர்ந்தும், ஒரு பட்சம் தேய்ந்தும் போவாயாக. இதில், ஒருநாள் முழுமையாக மறைந்தும், ஒருநாள் முழுமையாக ஒளிரவும் செய்வாய்…’ என்றார்.
அவரது தலையில் ஒளிவீசும் பாக்கியத்தை தந்தருள வேண்டும் என அவன் வேண்டிக் கொள்ளவே, அந்த வரத்தையும் நல்கினார்.
மனைவியரிடம் சரியாக நடந்து கொள்ளாததால், சந்திரனுக்கு சாபம் வந்தது. இப்போதும் ஒற்றுமையில்லாத பல தம்பதியினர் உள்ளனர். அவர்களும் சிவபெருமானின் சாபத்திற்கு ஆளாகலாம். இவர்கள் மனம் ஒருமித்து, ஒற்றுமையாக வாழ கார்த்திகை சோமவார விரதம் அனுஷ்டிக்கலாம். இந்நாளில், பகலில் பழம், பால் மட்டும் சாப்பிட்டு, சிவாலயத்துக்கு சென்று வர வேண்டும். இரவில் எளிய உணவு சாப்பிடலாம். இந்நாளில், தம்பதி சமேதரா சிவன் கோவிலுக்குச் சென்று சுவாமி, அம்பாளை வணங்கி வந்தால், சிவசக்தியின் ஆசியால் காலம் முழுவதும் ஒற்றுமையாக வாழலாம்.
ஜோதிடத்தில் சந்திரனை, “மாத்ருகாரகன்’ என்பர். அதாவது, இவர் தாய் ஸ்தானத்தைக் குறிப்பவர். தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்றாலோ, அவருடன் மனஸ்தாபம் இருந்தாலோ இந்த விரதம் நிவர்த்தியைத் தரும். சந்திரதசை மற்றும் சந்திரபுத்தி நடப்பில் உள்ளவர்களும் இந்த விரதத்தை மேற்கொண்டால் நன்மை உண்டாகும்.
கார்த்திகை சோமவாரத்தன்று அருவிகளில் நீராடுவது உடலுக்கும், மனதுக்கும் நன்மை தரும். புண்ணிய அருவிகளான குற்றாலம், பாபநாசம் அகத்தியர் அருவிகளுக்கு தம்பதி சமேதரா நீராடி, குற்றாலநாதர் – குழல்வாய்மொழி அம்பிகை, பாபநாசநாதர் – உலகாம்பிகையை வணங்கி வந்தால், காலமெல்லாம் களித்திருக்கலாம்.