Daily Archives: நவம்பர் 22nd, 2011

புதிய மின் கட்டண முறைகளில் அதிரடி மாற்றம்: ஏப்ரல் வரை நிம்மதியாக இருங்க.

மின் கட்டண முறைகளில், ஒவ்வொரு பிரிவிலும் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்புதிய கட்டண முறை, ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக மின் வாரியம், 53 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தில் தவிக்கிறது. இதை சரி செய்ய, மின் கட்டணத்தை உயர்த்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.இதற்காக, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில், மின் கட்டண உயர்வு கோரி, மனு தாக்கல் செய்துள்ளது. இதில், மின் கட்டண முறைகளில் அதிரடி மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

என்ன மாற்றம்?இதுகுறித்து, எரிசக்தி துறை வட்டாரத்தில் கிடைத்த தகவல்கள்:செயல்பாட்டில் இருக்கும் கட்டண முறைப்படி, இரண்டு மாதங்களில், 100 யூனிட்களுக்குள் பயன்படுத்துவோர் மற்றும் இரண்டு மாதங்களில், 100 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்துவோர் என, இரண்டு பிரிவாகவும், ஒன்று முதல் 50 யூனிட்களுக்கு ஒரு கட்டணமும், 51 முதல் 100 யூனிட்களுக்கு ஒரு கட்டணமும் இருந்து வந்தது.இதேபோல், ஒவ்வொரு பிரிவிலும், யூனிட்களின் பயன்பாடுகளுக்கு ஏற்ப, கட்டண விகிதம் மாறுபாடாக உள்ளது. இக்கட்டண முறை அனைத்தும், தற்போது அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது.அதன்படி, ஒன்று முதல், 200 யூனிட்களுக்கு ஒரு கட்டணம், 201 முதல், 500 யூனிட்களுக்கு ஒரு கட்டணம், 501 யூனிட்களுக்கு மேல் ஒரு கட்டணம் என, மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், விசைத்தறி பிரிவில், 500 யூனிட்கள் வரை இலவசமாகவும், அதற்கு மேல் பயன்படுத்தும் யூனிட்டிற்கு ஒரு கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்கள், சிறு, குறு தொழிற்சாலைகள், சினிமா தியேட்டர்கள், சினிமா ஸ்டூடியோக்கள், படப்பிடிப்பு தளங்கள், கல்வி நிறுவனங்கள், ரயில்வே ஆகியவற்றிற்கு, ஒரே விதமான கட்டண முறை அமலுக்கு வரவுள்ளது.இவ்வாறு எரிசக்தி துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

துரத்தும் நஷ்டக்கணக்கு… : புதிய கட்டண முறை, வரும் ஏப்ரல் முதல் அமலுக்கு வர உள்ளது. இக்கட்டண உயர்வு குறித்த மின் வாரியத்தின் கணிப்பு பட்டியலுக்கு, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி கொடுத்து, மாற்றமின்றி அமலுக்கு வந்தால், மின் வாரியத்திற்கு, ஆண்டுக்கு, 9,500 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் வரும்.அதேநேரம், 2012-13ம் நிதியாண்டிற்கான கணக்கில், 63,593 கோடி ரூபாய் செலவாகும் என்றும், ஆண்டு நஷ்டம், 14,500 கோடி ரூபாய் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. மின் கட்டண உயர்வால், வாரியத்திற்கு வரும் 9,500 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் போக, மீதமுள்ள 5,000 கோடி ரூபாய், மின் வாரிய நஷ்டத்தை மேலும் அதிகரிக்கும்.மின் உற்பத்தி, நிலக்கரி கொள்முதல், நிலக்கரி இறக்குமதி, வெளிச்சந்தை மின்சாரம், ஊழியர்கள் சம்பளம் மற்றும் ஓய்வு பென்ஷன், தேய்மானம், பராமரிப்பு, மின்பகிர்மான இழப்பு ஆகிய செலவுகளை கணக்கிடும்போது, மின் கட்டணத்தை உயர்த்தினாலும், மின் வாரியம் மீள முடியாத நிலையையே காட்டுகிறது.

ஆணையம் மாற்றும்?தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், புதிய மின் கட்டணத்தில், மேலும் மாற்றம் கொண்டு வர உத்தரவிடும் எனத் தெரிகிறது. ஏனெனில், மின் வாரிய நிறுவனங்களின் இழப்புகளை சரிகட்டும் விதத்தில், மின் கட்டண மாற்றம் இருக்க வேண்டும் என, மின்சார மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.அதேபோல், இந்திய மின்சார சட்டப்படி, மின்சாரம் வழங்குவதற்கு ஆகும் செலவில், 20 சதவீதம் குறைவாகவோ அல்லது 20 சதவீதம் அதிகமாகவோ மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று இருப்பதால், தமிழக மின் துறையின் கணக்குகள், மாறுபட வாய்ப்பு உள்ளது.

மக்களிடம் கருத்து கேட்பு…:புதிய மின் கட்டணம் குறித்து, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், விரைவில் விசாரணை நடத்தி, பொதுமக்கள், தொழிற்சாலை அதிபர்கள், நுகர்வோர் அமைப்புகள் உள்ளிட்டோரிடம் கருத்து கேட்கும்.இக்கருத்து கேட்பு கூட்டங்கள், சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட குறிப்பிட்ட மாவட்டங்களில் நடக்கும். இதையடுத்து, ஏப்ரல் 1ம் தேதிக்குள் கட்டணம் நிர்ணயிக்கப்படும்.

நன்றி-தினமலர்

கொசுத் தொல்லையா?

நம் நாட்டைப் பொறுத்தவரை கொசுத் தொல்லையால் அவதிப்படாதவர்கள் குறைவு. பல்வேறு கொசுத் தடுப்பு முறைகளைப் பயன்படுத்தியும் கொசுக்களிடம் இருந்து முழுமையாகச் சுதந்திரம் பெற முடியவில்லையா? கவலைப்படாதீர்கள். கொசுக்கடிக்கு நிரந்தரத் தீர்வாக ஒன்று வந்துவிட்டது.

அது, `லேசர் சுவர்’. இந்தச் சுவர், அதிகச் செலவு வைக்காமலே பெரும் பரப்பளவை கொசுக்களின் தாக்குதலில் இருந்து தற்காக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

கொலம்பியா பல்கலைக்கழகத்தின் சபோல்க்ஸ் மார்க்கா அமைப்பினர் இந்த லேசர் சுவரை உருவாக்கியிருக்கின்றனர். இது ஒருவரது வீட்டை கூடாரம் போல மூடியிருக்கும். ஒரு கொசு கூட இந்தக் கவசத்தைத் தாண்டி வீட்டுக்குள் பிரவேசிக்க முடியாது. குடும்பத்தினரின் தூக்கத்தையும் கெடுக்க முடியாது.

நாம் இதுவரை பயன்படுத்தி வரும் எல்லா தடுப்பு முறைகளையும்விட இது சிறப்பானது என்று உறுதியாகக் கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.

கொசுக்களின் உணர்வுறுப்புகளுக்கு வெளிச்சமானது தொந்தரவாக அமையும், குழப்பும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பே மார்க்கா கண்டுபிடித்துவிட்டார். தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வுகளின் விளைவாக மார்க்கா தனது மனைவி சுஸா, சக ஆய்வாளர் இம்ரே பரோட்ஸுடன் இணைந்து, ஒளிச் சுவர் எனப்படும் இந்த லேசர் தடையை உருவாக்கியிருக்கிறார். கொசுக்களைப் பொறுத்தவரை இது இரும்புச் சுவர் என்கிறார்.

“நாங்கள் யதேச்சையாகத்தான் இதைக் கண்டுபிடித்தோம். நடந்தோ, பறந்தோ வரும் கொசுக்கள் இந்தச் சுவரைத் தாண்டாமல் திரும்பிச் சென்றதைக் கண்டோம்” என்று மார்க்கா கூறுகிறார்.

ரொம்பச் செலவு வைக்காமல் அதிகப் பரப்பளவை கொசுக்களிடம் இருந்து காக்கும் இந்தத் தடுப்பு முறை பலரையும் ஆச்சரியத்துக்குள்ளாகியிருக்கிறது. தொடர்ந்து பல கோடி ரூபாய் உதவியுடன் இதுதொடர்பான கூடுதல் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

 

எல்லாம் நன்மைக்கே…

நமக்கு நல்லதைத்தான் செய்வார் பகவான்; நாம் அதைப் புரிந்து கொள்ள வேண்டும். எது நடந்தாலும் இது பகவான் சித்தம் என்று ஆறுதல் பெற வேண்டும்; அது, நல்லதாகவே முடியும்.
ஒரு ராஜாவும், மந்திரியும் இருந்தனர். ஒரு நாள் மாம்பழம் நறுக்கினார் ராஜா. அப்போது, அவரது விரல் ஒன்று கத்திபட்டு, துண்டாகி கீழே விழுந்து விட்டது. பக்கத்திலிருந்த மந்திரி, “எல்லாம் நன்மைக்குத் தான்…’ என்றார். ராஜாவுக்குக் கோபம் வந்து விட்டது. விரல் துண்டாகி விட்டது; இவர், எல்லாம் நன்மைக்குத்தான் என்கிறாரே என்று கோபப்பட்டு, மந்திரியை சிறையிலிட்டார். மந்திரியும் எல்லாம் நன்மைக்குத் தான் என்று சொல்லிவிட்டு, சிறைக்குச் சென்றார்.
ஒரு நாள் தனியாக காட்டுக்குச் சென்றார் ராஜா. அங்கே சிலர் நர பலி கொடுப்பதற்காக ஆளைத் தேடிக் கொண்டிருந்தனர். ராஜாவைப் பார்த்ததும், அவரை இழுத்துக் கொண்டு தங்கள் தலைவனிடம் சென்றனர். ராஜாவை ஒவ்வொரு அங்கமாக பரிசோதித்தான் தலைவன். ராஜாவுக்கு ஒரு விரல் இல்லாததை பார்த்து, இப்படி அங்கஹீனம் உள்ளவன் நரபலிக்கு பிரயோஜனமில்லை என்று ராஜாவை, “ஓடிப்போ’ என்று விட்டு விட்டான்; ராஜாவுக்கு சந்தோஷம்.
அன்று, “எல்லாம் நன்மைக்கு தான் என்று மந்திரி சொன்னது எவ்வளவு உண்மையாகி விட்டது! நாம் அவரை சிறையிலடைத்தது தவறு. உடனே, அவரை விடுதலை செய்து, மன்னிப்பு கேட்க வேண்டும்…’ என்று எண்ணி, உடனே சிறைச்சாலைக்கு வந்து மந்திரியிடம் விவரம் சொல்லி, அவரை விடுதலை செய்தான்.
அப்போது, மந்திரியை பார்த்து, “உங்களை சிறையிலடைக்கும் போது, வருத்தப்படாமல், எல்லாம் நன்மைக்கே என்று சொன்னீர்களே… அது எப்படி?’ என்று கேட்டான். அதற்கு மந்திரி, “தாங்கள் என்னை சிறையில் அடைக்காமல் இருந்திருந்தால் நானும், உங்களுடன் காட்டுக்கு வந்திருப்பேன். நரபலி கொடுப்பவர்கள் என்னையும் பிடித்து
போயிருப்பர்.
“எனக்கு அங்கஹீனம் எதுவும் இல்லாததால், என்னை நரபலி கொடுத்திருப்பர். தாங்கள் என்னை சிறையிலிட்டதால், நான் உங்களோடு வராமல் தப்பினேன். அதனால், எது நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே என்று எண்ணினேன். இப்போதாவது புரிந்ததா? எது நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே என்றும், எல்லாம் அவன் செயல் என்றும் நினைக்க வேண்டும்…’ என்றார் மந்திரி.
ராஜாவும், “நீங்கள் சொல்வதும் சரி தான்…’ என்றார்.
அதனால், நமக்கு எப்போது என்ன நடக்க வேண்டும் என்றுள்ளதோ, அப்போது, அது நடந்து விடும்.

ஓட்ஸ் பெப்பர் கோழிக்கறி மசாலா


தேவையான பொருட்கள்

கோழிக்கறி – 1/2 கிலோ
ஓட்ஸ் – 100 கிராம்
மிளகுதூள் – 1 டீஸ்பூன்
வெங்காயம் – 1 நறுக்கியது
தக்காளி – 1 நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது – 11/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி இலை – சிறிதளவு
மஞ்சள்தூள் – 1 சிட்டிகை
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை

* கடாயில் எண்ணை ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். அதனுடன் இஞ்சி பூண்டு விழுதைச் சேர்க்கவும்.

* கறிவேப்பிலை, தக்காளி, மஞ்சள்தூள், மிளகுத்தூள், போதுமான உப்புசேர்க்கவும்.

* காரம் அதிகம் விரும்புபவர்கள் சிறிது கூடுதலாக மிளகுத்தூள் சேர்க்கலாம்.

* தக்காளி வெந்ததும் மசித்துவிட்டு, சிக்கனைச் சேர்க்கவும்.

* சிக்கன் வேகுமளவு சிறிதளவு மட்டும் நீர் விடவும். ஓட்சை லேசாக மிக்சியில் ஒரு சுற்று சுற்றி சிக்கன் வெந்ததும் சேர்க்கவும்.

* மசாலாவுடன் சிக்கனும் ஓட்சும் வெந்ததும் சிறிது கிரேவியாக இருக்கும் பொழுது சிக்கனை இறக்கி வைத்து கொத்தமல்லி இலை தூவி அலங்கரிக்கவும். சூடாகப் பரிமாறவும்.

`செப்’ தாமு

சர்க்கரை நோய்

இனிப்பு அதிகம் சாப்பிடவில்லை எனில் சர்க்கரை நோய் வராது. உலகில் உள்ள சர்க்கரை நோயாளிகளில், மூன்றில் ஒரு பங்கினர், இந்தியாவில் இருந்தாலும், சர்க்கரை நோய் குறித்து சரியான புரிதல் ஏற்படவில்லை.

 

அதிகம் இனிப்பு சாப்பிடுவதால், ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்து விடாது. ஒருவர் இனிப்பே சாப்பிடுவதில்லை என்பதால், அவருக்கு சர்க்கரை நோய் வராது என்று சொல்லவும் முடியாது. கணையத்தில் பீட்டா செல்கள் இன்சுலினை சுரக்காமல் போனால், அல்லது குறைவாக சுரந்தால், அவர் இனிப்பு சாப்பிடாமல் இருந்தால் கூட, சர்க்கரை நோய் வரும். இன்சுலின் இயல்பாக சுரக்கும் தன்மை கொண்ட ஒருவர், இனிப்பு அதிகம் சாப்பிட்டாலும் சர்க்கரை நோய் வராது. ஆனால், அளவுக்கு அதிகமாக இனிப்பு சாப்பிடுவதால், உடல் எடை அதிகரித்து, அது சர்க்கரை நோய்க்கு வழிவகுத்து விடும்.

 

சர்க்கரை நோய் தொற்று நோயா?

 

சர்க்கரை நோய், தொற்று நோய் என்ற எண்ணம் கொண்டவர்கள் அதிகம் உள்ளனர். கணவனுக்கு இருந்தால் மனைவிக்கு சர்க்கரை நோய் தொற்றி விடாது. ஆனால், பாரம்பரியத்தில் தாத்தாவுக்கு சர்க்கரை நோய் இருந்தால், பேரனுக்கு சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு அதிகம்.

 

சர்க்கரை நோயாளிகள் அனைவரும், இன்சுலின் ஊசி எடுத்துக் கொள்ள வேண்டுமா?

 

முதல் வகை சர்க்கரை நோயாளிகள் (ஜுவனைல் டயாபடிக்), இன்சுலின் ஊசி இல்லாமல் வாழ முடியாது. ஆனால், இரண்டாம் வகை சர்க்கரை நோயாளிகள், இன்சுலின் ஊசி எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சியோடு, மாத்திரைகள் எடுக்காமலேயே, சர்க்கரை நோயை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர்களும் உண்டு. சர்க்கரை நோயை, 24 மணி நேரமும், வாரம் முழுவதும், மாதத்தில் முப்பது நாள்களும், ஆண்டு முழுவதும், ஆயுட்காலம் வரை, கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள், சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை, மருத்துவரின் அறிவுரைப்படி ரத்தப் பரிசோதனை செய்து, அதற்கு ஏற்ப சிகிச்சை பெற வேண்டும். கட்டுப்பாட்டில் இல்லாத சர்க்கரை நோயால், கண், சிறுநீரகம், கால் நரம்புகள், ரத்தக் குழாய்கள், இதயம், மூளை மற்றும் உடல் உறுப்புகள் அனைத்தும் பாதிக்கப்படுகின்றன. சில நேரங்களில் மயக்க நிலைக்கு சென்று விடுவர். சர்க்கரை நோய் ஒரு தொடர் நோய், சில நாள்களுக்குள் அல்லது சில வாரங்களுக்குள் அல்லது சில ஆண்டுகளில் குணமாகும் நோய் அல்ல. எனவே, வாழ்நாள் முழுவதும் சிகிச்சை அவசியம்.

 

இன்சுலினை வாய் வழியாக எடுத்துக் கொள்ள முடியுமா?

 

முடியாது. இன்சுலினை ஊசி மூலமே எடுத்துக் கொள்ள முடியும். வாய் வழியாக அல்லது வேறு வழியில் இன்சுலினை உட்கொள்வதற்கான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இரண்டாம் வகை சர்க்கரை நோயாளிகள் எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள் இன்சுலின் மாத்திரைகள் அல்ல. அது இன்சுலின் சுரப்பை தூண்டும் மாத்திரைகள்.

 

சர்க்கரை நோய் உயிர்க்கொல்லி நோய் அல்ல

 

தவறு. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கும் வரை சர்க்கரை நோயால் ஆபத்தில்லை. ஆனால், ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இல்லாவிட்டால், கண், இதயம், சிறுநீரகம், கால்கள் என எல்லா உறுப்புகளையும் பாதித்து உயிருக்கு உலை வைத்துவிடும்.

 

சர்க்கரை நோயை முழுமையாக குணப்படுத்த முடியாது: சர்க்கரை நோயை முழுமையாக குணப்படுத்த, இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. ஆங்கில மருத்துவம் அல்லாத பிற மருத்துவத்தில் சர்க்கரை நோய்க்கு நல்ல மருந்துகள் இருப்பதாக சொல்லப்பட்டாலும், முழுமையாக குணப்படுத்த முடியும் என்பது நிரூபிக்கப்படவில்லை. சித்த மருத்துவத்தில் உள்ள மதுமேக சூரணம் நல்ல மருந்து என சொல்லப்பட்டாலும், எல்லாம் ஆராய்ச்சி அளவிலேயே உள்ளது.