Daily Archives: நவம்பர் 29th, 2011

நீங்கள் கமகமக்க…

“பூக்களுக்கு நீயே வாசமடி’ என்றும், “மங்கை அவள் வாய் திறந்தால் மல்லிகை பூ வாசம்’ என்றும், பெண் வாசம் பற்றி பெருமை பேசும் பாடல்கள் நிறைய. நிஜத்திலும் அது சாத்தியமாக

இதோ சில வாசனை டிப்ஸ்…:

பெண்ணின் உடலமைப்பு, செயல்பாடு காரணமாக பலருக்கும் உடல் துர்நாற்றம் என்பது தவிர்க்க முடியாமல் போகிறது. நாற்றத்துக்கு காரணங்கள் பல. முதலில் வியர்வை. இது ஆண்,பெண் எல்லாருக்கும் பொது. வியர்வைக்குத் தனியே எந்த வாசனையும் கிடையாது. அது, பாக்டீரியாவுடன் சேரும் போதுதான், ஒரு வித துர்நாற்றம் வெளிப்படுகிறது. வியர்வையை அசுத்தமாக நினைப்பவர்கள் பலர்; ஆனால், அது ஆரோக்கியத்தின் வெளிப்பாடு. வியர்வையின் மூலம் உடலில் தேவையற்ற கொழுப்பும் வெளியேறும். சருமத்தில் ரோம வளர்ச்சி அதிகமுள்ள இடங்களில், வியர்வை அதிகம் சுரக்கும். தினம் இரு வேளைகள் குளிப்பது, டியோடரன்ட் உபயோகிப்பது, காட்டன் உடைகளை அணிவது போன்றவை இப்பிரச்னைக்கு தீர்வளிக்கும்.

மாதவிலக்கு, வெள்ளைப்படுதல் போன்றவற்றின் காரணமாகவும், பெண்களின் உடலில் துர்நாற்றம் வரும். மாதவிலக்கு நாட்களில் தரமான சானிட்டரி நாப்கின்களை உபயோகிப்பது, அடிக்கடி அவற்றை மாற்றுவது போன்றவை இம்மாதிரி துர்நாற்றங்களை தவிர்க்கும். தினம் இரண்டு வேளை பல் தேய்த்தாலும், சிலருக்கு வாய் நாறும்; இவர்கள், மவுத் வாஷ் உபயோகிக்கலாம். கிராம்பை ஊற வைத்த தண்ணீரால் அடிக்கடி வாய் கொப்பளித்து வந்தாலும் நாற்றம் அகலும். அதே மாதிரி ஏலக்காயையும் மெல்லலாம்.

உடலை நாள் முழுதும் நறுமணத்துடன் வைத்திருக்க…: குளிக்கும் தண்ணீரில் வேப்பிலை, கற்பூரம் அல்லது எலுமிச்சை பழத்தின் தோல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை போட்டுக் குளிக்கவும்; உடல் மணக்கும். ரொம்பவும் வாசனையான சோப்புகள் சருமத்துக்கு நல்லவையல்ல. சோப்புக்கு பதிலாக பச்சைப்பயறு மாவு அல்லது கடலை மாவுடன், கஸ்தூரி மஞ்சள், சந்தனம், வெட்டி வேர், பூலாங்கிழங்கு, ரோஜா இதழ் போன்றவற்றை காய வைத்து, அரைத்து, உடம்புக்கு தேய்த்து குளிக்கலாம். இது, சரும அழகையும் அதிகரிக்கும்; உடலையும் இயற்கை நறுமணத்துடன் வைக்கும்.

சார் போஸ்ட்!-(POST Power On Self Test)

இது வழக்கமாக நமக்குத் தபால்களைக் கொண்டு வருபவர் நம் கதவுகளைத் தட்டி எழுப்பும் குரல் அல்ல. கம்ப்யூட்டரின் இயக்க தொடக்கத்தில் மேற்கொள்ளப்படும் ஒரு போஸ்ட் சோதனை (POST Power On Self Test) எப்போதாவது இதனைப் பற்றிக் கேள்விப் படுகையில், இந்த சோதனையின் போது கம்ப்யூட்டரில் என்ன நடக்கிறது என்று எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா! இப்போது காணலாம்.
ஒவ்வொருமுறை நம் கம்ப்யூட்டரை பூட் செய்திடும்போதும், இந்த சோதனை மேற்கொள்ளப்படுகிறது. சில வேளைகளில் கம்ப்யூட்டர் வேகமாக இயங்கி, வேலை களை மேற்கொள்ளத் தயாராக நிற்கிறது. சில வேளைகளில் தயங்குகிறது. இல்லையா? அதற்குக் காரணம் இந்த சோதனை தான். ஒவ்வொரு முறை கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்கும் போதும் தன் சிஸ்டம் தேவைகள் அனைத்தும் சரியாக உள்ளனவா என்று சோதனை செய்கிறது. இந்த சோதனையில் மொத்தம் குறைந்தது பத்து சோதனைகள் செய்யப்படுகின்றன. முதல் டெஸ்ட் அதன் மின்சக்தி தேவை குறித்து. அடுத்தது, தன் சென்ட்ரல் ப்ராசசிங் யூனிட் (CPU (Central Processing Unit)) என்னும் மையச் செயலகம், கட்டளைகளை இயக்கத் தயாராக உள்ளதா என்பது குறித்த சோதனை. மூன்றாவதாக, இரண்டு சோதனைகள் மேற்கொள்ளப்படும். அவற்றில் BIOS கட்டளைகள் படித்து அறிந்து இயக்கக் கூடியனவாக உள்ளனவா என்பது குறித்து மேற்கொள்ளப்பட்டு உறுதி செய்யப்படும்.
இதனை அடுத்த சோதனை சிமாஸ் CMOS (Complementary Metal Oxide Semiconductor) குறித்து. இதுவும் சரியாக உள்ளதா? ஆணைகளை எடுத்து இயக்குமா? என்ற ரீதியில் இருக்கும். ஏழாவது சோதனை கம்ப்யூட்டரின் மெமரி குறித்து. மெமரியின் அனைத்து பாகங்களும், மெமரி கண்ட்ரோலர், மெமரி பஸ் மற்றும் மெமரி மாட்யூல் போன்றவை இந்தச் சோதனைக்கு ஆளாகின்றன.
இந்த மெமரி சோதனைகளைத் தொடர்ந்து, மெமரி இயக்கத்தில் உள்ளதா? POST குறியீடுகளை மேற்கொண்டு இயங்குமா என்ற சோதனை தொடங்கி முடியும். இறுதியான இரண்டு சோதனைகளும் I/O bus மற்றும் controller என அழைக்கப்படும் சாதனங்கள் சம்பந்தப்பட்டது. இந்த இரண்டும் எப்போதும் அணுகப்படும் விதத்தில் தயாராக இருக்க வேண்டும். வீடியோ மெமரியை இது படிக்க முடியுமா என்பதும் இந்த சோதனையில் இருக்கும்.
உங்கள் கம்ப்யூட்டர் மேலே சொல்லப் பட்ட சோதனைகளில், ஏதாவது ஒரு சோதனையில் பிரச்னை ஏற்பட்டாலும், நமக்கு அதற்கான பிழைச் செய்தியைக் காட்டி கம்ப்யூட்டர் தொடர்ந்து இயங்காமல் நின்று விடும். இந்நேரத்தில் வழக்கத்திற்கு மாறான, தவறான POST ஒன்று பதியப்படும். அந்நேரத்தில் பீப் ஒலி ஒன்று நமக்குக் கிடைக்கும். நாம் இதற்கான தீர்வை மேற்கொண்டு பின்னர் மீண்டும் பூட் செய்திட வேண்டும். மறுபடியும் அனைத்து சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு, அவை அனைத்தும் சரியாக இருந்தால், கம்ப்யூட்டர் இயங்கத் தயாராய் இருக்கும். மேலே சொன்னவை தான் போஸ்ட் டெஸ்ட். ஒரு சிஸ்டம் இயங்கத் தேவையாகக் கம்ப்யூட்டர் மேற் கொள்ளும் சுய சோதனைகள். இதன் மூலம் கம்ப்யூட்டர், தன் இயக்கத்தில், எங்கு எந்த பிரச்னையை எதிர்கொள்கிறது என்பது நமக்கு அறிவிக்கப்படுகிறது. நாம் அதனைச் சரி செய்திட வழி காட்டப் படுகிறது.

“ஹெர்னியா’ ஏற்பட்டால் கவலைப்பட வேண்டாம்

அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஒருவர், ஐந்து முதல் ஏழு நாட்களுக்குப் பின் மறுபடி வேலைக்குச் செல்லலாம். ஆனால், இது அந்த நோயாளியின் உடல்கூறு எப்படிப்பட்டது என்பதையும், அவருக்கு இருந்த குடலிறக்கத்தின் அளவையும் பொறுத்தே இருக்கும்.

” ஏய்… எனக்கு, “ஹிரண்யா’ வந்திருக்காம்ப்பா… அடி வயித்த வலிக்குதுன்னு, டாக்டர்ட்ட போனா, அவர், எனக்கு, “ஹிரண்யா’ ஏற்பட்டிருக்குன்னு சொல்றார். சர்ஜரி செய்யணுமாம்…’ என, பக்கத்து வீட்டுப் பெண், வெலவெலத்துப் போய், உங்களிடம் “துக்கத்தை’ப் பகிர்ந்து கொண்டிருப்பாரே? அவரிடம், அது, “ஹிரண்யா’ இல்லம்மா… “ஹெர்னியா’ எனச் சொல்லி, திருத்தினீர்களா? திருத்தவில்லை எனில், உங்களுக்கும் அது குறித்துத் தெரியவில்லை எனப் பொருள். குடல் சிகிச்சை நிபுணர் டாக்டர் விக்ரம், “ஹெர்னியா’ பற்றிச் சொல்கிறார். படியுங்கள்:

குடலிறக்கம் (ஹெர்னியா) என்றால் என்ன?: வயிற்றுப் பகுதியின் அடிப்புறச் சுவர், சில பகுதிகளில் நலிந்து, வலுவிழந்து இருக்கும். அவ்வாறு வலுவிழந்து காணப்படும் பகுதி வழியே, சிறுகுடல் பிதுக்கிக் கொண்டு அல்லது துருத்திக் கொண்டு இறங்கி விடும். இதைத்தான், “ஹெர்னியா’ அதாவது, குடலிறக்கம் என்று கூறுகிறோம்.

இந்த குறைபாடு ஏன் ஏற்படுகிறது?: வயிற்றுப் பகுதி வலுவிழப்பது இயற்கை தான். ஆண்களுக்கு, அவர்களின் இடுப்புக்கு கீழ், அதாவது, அரைப்பகுதியில் (எணூணிடிண ச்ணூஞுச்) சிறுநீர் வெளியேறும் பகுதியை அடுத்து, விரைக்காய்கள் இருக்கும். அவை வயிற்றின் உட்பகுதியில் தொடங்கி, வெளியே நீண்டு தொங்குகின்றன. அந்த பாதையில் குடல் இறங்குவது தான், “ஹெர்னியா!’ சில நேரங்களில், அந்த பகுதி வலுவிழக்க நேரிடும். தொப்புள் பகுதியும் வலுவிழந்து விடுகிற பகுதி. இவற்றின் வழியாக, குடலிறக்கம் ஏற்படுகிறது.

பெண்களுக்கு எந்த வகை குடலிறக்கம் இயற்கையாகக் காணப்படுகிறது? ஏன்?: பெண்களுக்கு, வயிற்றுப் பகுதியில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டால், குடலிறக்கம் ஏற்பட வாய்ப்பு அதிகம். “சிசேரியன்’ அறுவைச் சிகிச்சை எனப்படும், பேறுகால அறுவைச் சிகிச்சைகள் மற்றும் கர்ப்பப்பை நீக்கும் அறுவைச் சிகிச்சைகளுக்குப் பின், குடலிறக்கம் ஏற்படுகிறது. பெண்களுக்கு, வயது ஏற ஏற, எடை கூடுவது இயற்கை. இப்படி எடை கூடுவது வயிற்றுப் பகுதியை பலவீனமாக்குகிறது. கருவுற்றிருக்கும் காலத்தில், மாதம் ஆக, ஆக, வயிறு விரிவடைகிறது. இதுவும் வயிற்றுப் பகுதியை பலவீனமாக்கி, வலுவிழக்கச் செய்கிறது. பெண்களிடையே தொப்புள் கொடிப்பகுதி வழியே ஏற்படும் குடலிறக்கம் வெகு சாதாரணமாகக் காணப்படுகிறது.

ஒருவர் இயற்கைக் கடன்களைக் கழிக்கும்போது, அளவுக்கதிகமாக (முக்குதல்) சிரமப்படுதல், சிறுநீர் கழிக்கும்போது எளிதாகச் செல்லாமல், துன்பப்படுதல் ஆகியவை எவ்வாறு குடலிறக்கத்துக்கு காரணமாகின்றன?: இயற்கைக் கடன்களைக் கழிக்கும்போது, ஒருவர் எந்த வகையில் சிரமப்பட்டாலும், அதன் காரணமாகக் குடலிறக்கம் ஏற்படும். ஆண்கள் முதுமையடையும் காலத்தில், “புரோஸ்டேட்’ சுரப்பிகள் வீங்கிப் பெரிதாகின்றன. அவைதான் சிறுநீர் கழிப்பதற்கு சிரமத்தை ஏற்படுத்துகின்றன. அந்த சிரமமே ஒருவருக்குக் குடலிறக்கம் ஏற்பட வழிவகுக்கிறது. இது போலவே, இயற்கைக் கடன்கழிக்க ஏற்படும் சிரமத்தாலும், இதே விளைவு தான் ஏற்படுகிறது.

ஒருவர் அதிகமான அளவிற்கு இருமுவதாலும், குடலிறக்கம் ஏற்படக்கூடுமா?: இருமல் வரும்போது, வயிற்றுக்குள் ஏற்படும் அழுத்தத்தின் அளவு அதிகரிக்கிறது. எனவே, இருமலினாலும் குடலிறக்கம் ஏற்படுகிறது.

பளு தூக்குதல், அதிக எடையுள்ள பொருட்களைத் தூக்குதலால் குடலிறக்கம் ஏற்படுகிறதா?: பளுதூக்குதல் மற்றும் அதிக எடையுள்ள பொருட்களைத் தூக்குவதால் குடலிறக்கம் ஏற்படுகிறது என்று உறுதிப்படுத்துவதற்கு, இது வரையில் சான்றுகள்(ஆதாரங்கள்) ஏதுமில்லை.

சிறிய அளவிலான குடலிறக்கத்திற்கு அறுவை சிகிச்சை தேவைப்படுகிறதா?: சிறிய குடலிறக்கம் காரணமாக, பெருங்குடல் வழி வெளியேறும் கழிவுப் பொருட்கள், நகராமல் நின்று அடைத்துக் கொள்வதற்கு, அதிக வாய்ப்பு உள்ளது. அப்போது, இது ஒரு நெருக்கடியான நிலைமையை ஏற்படுத்துகிறது. இதை, அந்த சமயத்தில் உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்து அகற்றாவிட்டால், அது இன்னும் பெரிய அளவிற்குச் சிக்கல்களை ஏற்படுத்திவிடும்.
குடலிறக்கத்தைச் சரி செய்வதற்கான சிறந்த வழி எது?: சிறிய துவாரங்கள் உடைய வலை போன்ற பொருளை (மெஷ்), இறங்கிய குடலைத் தூக்கிப் பிடித்துத் தாங்கிக் கொள்வதற்குப் பயன்படுத்தலாம். அப்படிப் பயன்படுத்தும் அந்தப்பொருள் (மெஷ்), குடலிறக்கம் மீண்டும் ஏற்படாமல் தடுக்கிறது. இது, திசுக்களின் மீது நிலையாகப் பொருந்தி அந்தப் பகுதிக்கு வலுவூட்டும். மிகச் சிலருக்கு நோய் தொற்று ஏற்பட லாம். “மெஷ்’ சுருண்டு விடலாம். இவற்றை, உடனுக்குடன் சரிசெய்ய வேண்டும்.

ஒருவர் அறுவை சிகிச்சை முடிந்து எத்தனை நாட்கள் கழிந்தபின் மீண்டும் வேலைக்குச் செல்ல முடியும்?: அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட ஒருவர், ஐந்து முதல் ஏழு நாட்களுக்குப் பின் மறுபடி வேலைக்குச் செல்லலாம். ஆனால், இது அந்த நோயாளியின் உடல்கூறு எப்படிப்பட்டது என்பதையும், அவருக்கு இருந்த குடலிறக்கத்தின் அளவையும் பொறுத்தே இருக்கும். “லாப்பரோஸ்கோப்’ மூலமாகவும், குடலிறக்கத்தை சரி செய்ய முடியும்.

குடலிறக்கத்தைச் சீர் செய்யும் பழைய முறைகள் சிறந்தவையா? என்னென்ன முறைகள்?: இதற்குக் கையாளப்படும் பழைய முறைகள், 150 ஆண்டுகளுக்கும் மேலாகப் பழக்கத்தில் இருந்து வந்துள்ளன. அவை, மிகவும் சிறந்தவையே. அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கைகள்:

  1. *இயன்ற வரை அதிகம் நடக்க வேண்டும்.
  2. *வழக்கமாக எந்த அளவுக்கு எடை தூக்கி வந்தாரோ, அந்த அளவு எடையைத் தூக்கலாம்.
  3. *நோயாளி மாடிப்படிகளில் ஏறி இறங்கலாம்.
  4. * குத்துக்காலிட்டு உட்காரும், இந்திய வகைக் கழிப்பிடத்தைப் பயன்படுத்தலாம். இவற்றால் எல்லாம் குடலிறக்கம் ஒரு போதும் மீண்டும் ஏற்படாது.

நன்றி-தினமலர்

அழகு.. இளமை.. கிரீன் டீ..

`நான் யாருக்கும் அடிமையில்லை, சுதந்திரமானவன்’ என்று மார்தட்டுபவர்கள் கூட, தேநீரின் சுவைக்கு சுகமான அடிமைகளாக இருப்பது சுவையான விஷயம் தான். உலகிற்கு காகிதம், பட்டு போன்றவற்றை கொடையாக அளித்த சீனர்கள் தாம் தேநீரையும் அறிமுகப்படுத்தினார்கள். கி.மு.2737-ல் சீனப்பேரரசர் சென்-நுங் என்பவரால் இது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. `கேமலியா சைனன்ஸிஸ்’ என்பது இதன் தாவரவியல் பெயராகும்.

`ச்சா’ என்பது சீன மொழியில் தேநீரை குறிப்பதாகும். இதுவே, பின்னர் மத்திய கிழக்கு நாடுகளில் `ச்சாய்’ என மாறியிருக்கக்கூடும். இன்று இந்தியா உட்பட 35-க்கும் மேலான நாடுகள் `டீ’ யை உற்பத்தி செய்கின்றன. உலகின் மொத்த `டீ’ உற்பத்தி ஆண்டுக்கு 3 மில்லியன் மெட்ரிக் டன்னை தாண்டுகிறது.

தேயிலை க்ரீன் டீ, பிளாக் டீ, ஒயிட் டீ, மஞ்சள் டீ, ஊலாங் டீ என பல்வேறு வகைகளாக அவதாரம் எடுத்து உள்ளது. இவை அனைத்துமே தேயிலையில் இருந்தே வந்தாலும், தயாரிக்கப்படும் முறைகளாலும், பதப்படுத்தப்படும் முறைகளாலும் வேறுபடுகின்றன. இவற்றின் விளைவாக பெரும்பாலான `டீ’ வகைகள் நல்ல மருத்துவ குணங்களை இழந்து விட, இவற்றுள் தன்மை மாறாமல் அப்படியே நம் கைகளில் கிடைப்பது `கிரீன் டீ’ மட்டுமே.

ஜப்பானில் உள்ள டோகோஹூ பல்கலைக்கழக விஞ்ஞானி ஷன்சிகுரியாமா 40,530 நபர்களை வைத்து கிரீன் டீயை பற்றி மிகப்பெரிய ஆராய்ச்சியை நடத்தினார். அது 1994-ல் தொடங்கி 11 ஆண்டுகளாக நீடித்தது. மட்டுமல்லா மல், உலகெங்கும் உள்ள ஹார்வேர்ட், டோக்கிலோ போன்ற எண்ணற்ற பல்கலைக்கழகங்களும் கிரீன் டீ குறித்து ஆராய்ச்சிகள் செய்தன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆச்சரியப்படத்தக்க ஆராய்ச்சி களின் முடிவுகள் வாழ்நாட்களையே நீட்டிக்க கூடிய அளவுக்கு நல்ல மருத்துவ குணங்கள் கொண்டது கிரீன் டீ என உறுதிப்படுத்தி உள்ளன.

`கிரீன் டீ’ யின் ரகசியமே அதில் அதிக அளவில் உள்ள உயர்தர `ஆன்டி ஆக்சிடெண்ட்கள்’ தான். இதனை `நோய் எதிர்ப்பு சக்தி’ என தமிழில் அழைக்கிறோம். பழங்கள், காய்கறிகள், கீரை களில் உள்ளதை விட பல மடங்கு அதிகமாக இதில் இருக்கிறது. சுருக்கமாக சொன்னால், ஒரு கப் கிரீன் டீ 10 கப் ஆப்பிள் ஜூஸுக்கு சமம்.

என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? தொடர்ந்து படியுங்க… நிறைய ஆச்சரியப்படலாம்.

சூரியனின் வெப்பம், புற ஊதாக்கதிர், மாசடைந்த காற்று, சிகரெட் மற்றும் வாகன புகை, அழுக்கான தண்ணீர் என வெளிச்சூழல்கள் அனைத்தும் நம் உடலில் `பிரீ ரேடிகல்ஸ்’ என்னும் கெடுதல் தரும் வேதிப்பொருட்களை ஏற்படுத்துகின்றன. இவைகளே நம் உடலின் ஒவ்வொரு செல்லையும் பாதித்து, சீரழித்து சிறிய நோய்கள் முதல் இதய, புற்று நோய்கள் வரை அனைத்து பெரிய நோய்களுக்கும் வழிவகுப்பதோடு சீக்கிரமே நம்மை முதுமை நிலைக்கும் தள்ளி விடுகின்றன. கிரீன் டீ யின் உயர் தர ஆன்டி ஆக்சிடெண்ட்கள் அபாயகரமான பிரீ ரேடிகல்களை சமன்படுத்தி, நம் உடலின் ஒவ்வொரு செல்லையும் புதுப்பித்து வாழ்நாட்களை நீடிக்க செய்கின்றன. எனவே தான் சீனர்கள் சராசரியாக 90 வயதை தாண்டி வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கிரீன் டீ யின் நன்மைகள்:

* ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.

* உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

* உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாக எரித்து தேவையற்ற கொழுப்பை குறைத்து உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது.

* ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படுவதை குறைக்கிறது. இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.

* ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

* நமது உடலின் திரவ அளவை சமன் செய்து சோம்பலை போக்குகிறது.

* புற்று நோய் வராமலும், புற்று நோய் செல்களை வளர விடாமலும் தடுக்கிறது.

* எலும்பில் உள்ள தாதுப்பொருட்களின் அடர்த்தியை அதிகரித்து எலும்பை பலப்படுத்துகிறது.

* பற்களில் ஏற்படும் பல் சொத்தையையும், வாய் துர்நாற்றத்தையும் நீக்குகிறது.

* ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.

* சருமத்தை பாதுகாத்து இளமையாக வைக்க உதவுகிறது. பருக்கள் வராமலும் தடுக்கிறது.

* வயதான பின் வரும் ஞாபக மறதி மற்றும் நரம்பு சம்பந்தமான நோய்களையும் தடுக்கிறது. (அல்சீமியர்ஸ் மற்றும் பார்க்கின்சன்ஸ்)

* மன அழுத்தத்திற்கும், தலைவலிக்கும் மருந்தாக செயல்படுகிறது.

* மூட்டு வாதத்தை குணமாக்க உதவுகிறது.

* உடலில் ஏற்படும் புண்கள், காயங்கள் விரைந்து குணமாக உதவுகிறது.

* புகை, மதுவின் விளைவாக உடலின் உள் உறுப்புகளில் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க உதவுகிறது.

* கிரீன் டீ உடலுக்கு ஆற்றலை தருவதிலும், நோய் எதிர்ப்பு சக்தி தருவதிலும் நிகரற்று விளங்குகிறது.