Daily Archives: நவம்பர் 30th, 2011

இண்டர்நெட் எக்ஸ்புளோரரில் ஸ்பெல் செக்கர்

மைக்ரோசாப்ட் நிறுவனம் இதுவரை தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில் இல்லாத இரண்டு வசதிகளை, இதன் பதிப்பு 10ல் அறிமுகப் படுத்துகிறது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 10ல், ஸ்பெல் செக்கர் மற்றும் ஆட்டோ கரெக்ட் வசதி களை இணைத்துள்ளது.
இது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் இணைய தள வலைமனையில், விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் அப்ளிகேஷன் புரோகிராம்கள் அனைத்திலும், இன்டநெட் எக்ஸ்புளோரர் 10 உட்பட, இந்த இரண்டு வசதிகளையும் தந்துள்ளதாக அறிவித்துள்ளது.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9ல் ஸ்பெல் செக்கர் வசதி இல்லை. பல மைக்ரோசாப்ட் வாடிக்கையாளர்கள், இதனாலேயே இந்த பிரவுசரைப் பயன் படுத்துவதில்லை என்று தெரிவித் திருந்தனர். எனவே தான், மைக்ரோசாப்ட் நிறுவனம் இதனைத் தன் புதிய புரோகிராம்களில் தந்துள்ளது.
ஸ்பெல் செக்கருடன், ஆட்டோ கரெக்ட் வசதியும் தரப்படுகிறது. இதன் மூலம் வேர்ட் தொகுப்பில் நாம் எந்த சொற்களில் உள்ள பிழைகள் எல்லாம் தானாக திருத்தப்படுகின்றனவோ, அவை எல்லாம், இன்டர்நெட் எக்ஸ்புலோரர் பதிப்பு 10ல் தானாகவே திருத்தி அமைக்கப் படும்.
இந்த புதிய வசதிகளுடன் கூடிய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் எப்போது வெளியிடப்படும் என மைக்ரோசாப்ட் இன்னும் அறிவிக்கவில்லை. வெளி யானவுடன், இந்த இரண்டு வசதிகளும் எத்தனை வாடிக்கையாளர்களை இழுக்கும் என நாம் காணலாம்

மூலிகை மருத்துவம்: மு(பு)திய குழந்தைகள்

வயோதிகம் பெரும்பாலான முதியவர்களை குழந்தைகளாக மாற்றிவிடுகிறது. வயது அதிகரிப்பதால் முதியவர்களுக்கு மூளையின் ஆற்றல் குறைகிறது. எழுபது வயதிற்கு மேல் மூளையின் புறணியானது சுருங்கத் தொடங்குவதால், முதியவர்கள் தங்களது ஞாபக சக்தியையும் சிந்திக்கும் திறனையும் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கின்றனர். இளமைக்காலத்தில் தங்களது மனதில் பதிந்த நினைவுகள், மற்றவர்களைப்பற்றி கற்பனை செய்து வைத்திருந்த முடிவுகள், தங்களது நம்பிக்கைகள், அசைக்க முடியாத சில கருத்துக்கள் ஆகிய அனைத்தும் வயதான காலத்தில் ஒன்றன்பின் ஒன்றாக தோன்றி மூளையில் குழப்பத்தை ஏற்படுத்துவதால் முதியவர்கள் தங்களது சிந்தனைத்திறனை இழந்து, பேசியதையே திரும்ப திரும்ப பேசுவதும் நடக்காத விஷயங்களை நடந்ததுபோல பேசியும் தாங்களும் குழம்பி பிறரையும் குழப்புவர். அல்சீமர் என்ற நோய், மூளைச்சுருக்கம் போன்ற காரணங்களால் முதுமையில் ஐம்புலன்களும் குன்றுகிறது. மூளையின் எட்டாவது நரம்பான கேள்வி நரம்பும் பாதிக்கப்படுவதால் கேட்கும் திறனை இழப்பதுடன் சில உடல் உபாதைகளுக்கும் ஆளாகின்றனர். வெஸ்டிபில் என்னும் நரம்பின் ஒரு பாகமானது காதின் உட்புறம் இருந்து தலை மற்றும் உடல் சமநிலையை பாதுகாக்கிறது. இந்த நரம்பின் பாதிப்பால் காதின் உட்புறம் உள்ள நத்தைக்கூடு போன்ற பகுதியில் திரவ சமநிலையானது மாறுபட்டு, நரம்புகளுக்கு போதுமான மின்னோட்டம் கிடைக்காததால் மூளை தண்டுவடம் மற்றும் மூளை முன்புறத்தில் குழப்பம் உண்டாகி தலைசுற்றல் ஏற் படுகிறது.

இளமையில் எப்போதாவது வரும் தலைசுற்றல் முதுமையில் அடிக்கடி வருவது முதியவர்களுக்கு மனதளவில் பயத்தையும் உடலளவில் சோர்வையும் ஏற்படுத்தி விடுகிறது. நிற்கும்பொழுது தடுமாற்றம், நிலைகுத்திய பார்வை, குமட்டல், வாந்தி, இல்பொருள் காட்சி, சுற்றியுள்ள பொருட்கள் சுழல்வது போல் உணருதல், திடீர் வியர்வை, படபடப்பு, இதயத்துடிப்பு அதிகரித்தல், ரத்த அழுத்தம் குறைதல் போன்ற உணர்வுகளுடன் தலைசுற்றல் உண்டாவதை வெர்டிகோ என்று அழைக்கிறோம். தனக்குத்தானே சுற்றுவது போல் உணருதல் அல்லது தன்னைச் சுற்றியுள்ள பொருட்கள் சுற்றுவதுபோல் உணருதல் ஆகிய இரண்டு வகைகள் வெர்டிகோவில் காணப்புடுகின்றன. வெர்டிகோ தொல்லையினால் காதின் கேட்கும் திறனும் குறைகிறது. முதுமையில் ஏற்படும் இந்த தலைசுற்றல் பெரும்பாலும் குளிர்காலத்தில் அதிகரிக்கிறது. தலைசுற்றலினால் பாதிக்கப்படும் முதியவர்கள் நடப்பதற்கே பயப்படுவதுடன் தடுமாறவும் செய்கின்றனர். ஆகவே முதியவர்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அன்பும் அரவணைப்பும் காட்டவேண்டியது அவசியமாகும்.

வயோதிகத்தின் பயனாய் குழந்தைகள் போல் தடுமாறும் முதியவர்களை வெறுக்கக்கூடாது. அவர்களது வார்த்தைகளுக்கு அர்த்தம் கண்டு கோபப்படாமல் குழந்தையின் போக்காக நினைத்து அவர்களை புரிந்துகொள்ள வேண்டும். வயதான காலத்தில் புதிய குழந்தைகளாய் அவதாரமெடுக்கும் முதியவர்களின் வெர்டிகோ என்னும் தலைசுற்றலை கட்டுப்படுத்தும் மூலிகை மருந்துப் பொருள்தான் அரக்கு. சபின்டஸ் லாரிபோலியஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட சபின்டேசியே குடும்பத்தைச் சார்ந்த பெரிய மரங்களில் வளரும் ஒருவித பூச்சிகள் உற்பத்தி செய்யும் லாக்கோயர் என்னும் பொருளே அரக்கு என்ற பெயரில் சித்த மருந்துகளில் பயன்படுத்தப் படுகிறது. அரக்கு மரங்களின் கட்டை மற்றும் பூக்களில் உள்ள சப்போனின்கள் மூளையின் சமநிலையை நிலைநிறுத்தி காதின் உட்புறத்தில் ஏற்படும் நிலையின்மையை குணப்படுத்துகின்றன. அரக்குப்பூச்சிகள் உற்பத்தி செய்யக்கூடிய பொருளாக இருந்தபோதிலும், அரக்கு மரங்களில் கூடு கட்டக்கூடிய பூச்சியிலிருந்து கிடைக்கக்கூடிய அரக்கே மருத்துவ குணம் வாய்ந்ததாகும். நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் கொம்பரக்கை ஒரு துணியில் முடிந்து, நீரில் போட்டு கொதிக்கவைத்து, நன்கு கரைந்ததும் வடிகட்டி, அத்துடன் நல்லெண்ணெய் அரைபங்கு சேர்த்து கொதிக்கவைத்து, பதத்தில் வடிகட்டி, சூடுஆறிய பின் வாரம் இருமுறை தலையில் தேய்த்து இளவெந்நீரில் குளித்துவர வெர்டிகோ என்னும் தலை
சுற்றல் நீங்கும். சித்த மருந்துக்கடைகளில் கிடைக்கும் அரக்குத் தைலத்தை வாங்கி, வாரம் இரண்டு அல்லது மூன்று முறை தலைமுழுகி வர முதுமையில் தோன்றும் தலைசுற்றல், சைனஸ் பிரச்னையால் தோன்றும் தலைசுற்றல் ஆகியன நீங்கும்.

-டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ்,

விவாகரத்தின் `மறுபக்கம்’

பார்த்து வாங்கும் ஒரு மாம்பழத்தை சுவையாக இருக்கும் என்று நினைத்து சாப்பிட ஆரம்பிக்கிறோம். ஆனால் அது ஒரு புறத்தில் அழுகிப்போயிருந்ததைக் கண்டால் உடனே தூக்கி தூரவீசிவிடுகிறோம். அதுபோலத்தான் இப்போது திருமண வாழ்க்கையும் ஆகிக்கொண்டிருக்கிறது. அதனால் விவாகரத்துக்கள் பெருகிக் கொண்டிருக்கின்றன.

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று பலரும் சொல்வதை கேள்விப்பட்டிருக்கிறோம். அதன் பிறகும் விவாகரத்து ஏன் ஏற்படுகிறது? என்று ஆராய்ந்தால் விடை எளிதாகவே கிடைத்துவிடும்.

ஒரு காலத்தில் விவாகரத்து என்பது சமூகத்தினரால் கூர்ந்து கவனிக்கக்கூடிய பெரிய சம்பவமாக இருந்தது. ஆனால் இன்று அது வீட்டுக்கு வீடு நடக்கும் சாதாரண சம்பவமாக மாறிக்கொண்டிருக்கிறது. பெற்றோர்களை விட அதிகமாக படித்து விட்ட இளைஞர்கள் தங்களை புத்திசாலிகளாக நினைத்துக்கொண்டு அவர்கள் வாழ்க்கையை அவர்களே தீர்மானித்துக்கொள்ளும் மனநிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்கள். அந்த வாழ்க்கையில் சந்தாஷம் மட்டுமே இருக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். துயரங்கள் வரும்போது எளிதாக துவண்டு போய் அவசர முடிவு எடுத்துவிடுகிறார்கள்.

இன்றைய அவசர உலகில் நாம் பயன்படுத்துவதில் “யூஸ் அண்ட் த்ரோ” பொருட்கள் மிக அதிகம். அந்த பொருட்களை போலத்தான் ஆண்- பெண்ணையும், பெண், ஆணையும் கருதுகிறார்கள். `நாம் விரும்பும்போது திருமணம் செய்துக்கொள்ளலாம். ஏதாவது பிரச்சினை வந்தால் தூக்கி எறிந்துவிடலாம்’ என்று நினைக்கிறார்கள். அதன் பின்விளைவுகளைப் பற்றி அவர்கள் சிந்திப்பது குறைவு.

திருமணம் என்பது இருவர் ஒன்று சேர்ந்து வாழ்வது மட்டுமல்ல. 2 குடும்பங்கள் ஒன்று சேர்ந்து இயங்கி, புதுமண தம்பதியினருக்கு பலத்தை கொடுத்து புது தெம்பை அளிக்கிறது. சமூக கட்டமைப்புகளும் அதற்கு துணைபுரிகிறது. ஒரு திருமணத்தில் குடும்பங்கள் எந்த அளவிற்கு மகிழ்ச்சி அடைகிறதோ, அதைவிட அதிகமாக ஒரு விவாகரத்தில் குடும்பங்கள் துன்பத்தை சந்திக்கின்றன.

தற்போது விவாகரத்துகள் அதிகரித்துவரும் நேரத்தில், நியாயமான விவாகரத்துகள் மிகக் குறைவாகவே உள்ளன. ஒருவரை புறக்கணிக்க வேண்டும் என்று முடிவு செய்துகொண்டு, அவமானப்படுத்தி, அசிங்கமான காரணங்களைக் கூறி விவாகரத்துக்கு முயற்சிப்பது அதிகரித்து வருகிறது. இது ஒரு தொற்றுநோய் போல உலகெங்கும் பரவி வருகிறது.

இந்திய கலாசாரத்தை பொறுத்தவரையில் திருமணங்கள் என்பது இருவரை உலக வாழ்க்கைக்கு பக்குவப்படுத்தும் ஒரு புனித சடங்கு. நம்முடைய சாஸ்திர முறைகள் அதைத்தான் உணர்த்துகின்றன. ஆனால் இப்போது அவசரத் திருமணங்கள் அதிகரித்து, அவசர விவாகரத்துகளும் பெருகிவிட்டன.

பெண்கள் இப்போது நிறைய படித்து, வேலையில் சேர்ந்து கைநிறைய சம்பாதித்து சமூகத்தில் உயர்ந்த நிலைக்கு வருகிறார்கள். அவர்களில் சிலர் தங்கள் எதிர்காலத்தை பணம், பதவி, அந்தஸ்தாக மட்டுமே பார்க்கிறார்கள். சாப்பிடுவதும், தூங்குவதும், விதவிதமாக ஆடைகள் அணிவதும், ஆடிப்பாடி கொண்டாடுவதையும்தான் வாழ்க்கை என்று அவர்கள் கருதுகிறார்கள். அதனால் அவர்கள் திருமணத்தின் முக்கியத்தையும், திருமண வாழ்க்கையை காப்பாற்ற பல விதங்களில் முயற்சிக்க வேண்டும் என்பதை அவர்கள் அறியாதவர்களாகவும் இருக்கிறார்கள்.

கணவன், மனைவியில் யார் பெரியவர் என்ற கேள்வி எழுந்துவிடக்கூடாது. எழுந்துவிட்டால் அதில் யாராவது ஒருவர் தாழ்ந்து கொள்ள வேண்டும். ஒருவரின் சுயமரியாதையை கெடுக்கும் விதத்தில் அவமரியாதை செய்யாமல் இருக்க கற்றுக் கொள்ள வேண்டும்.

திருமணம் என்பது ஒருவரை ஒருவர் அடக்கி ஆள கொடுக்கும் உரிமை அல்ல. தவறுகளை எடுத்துச் சொல்ல இருவருக்குமே உரிமை இருக்கிறது. ஆனால் அடுத்தவர்கள் முன்னால் வைத்து பகிரங்கமாக தன் இணையை குறை சொல்ல இருவருக்குமே உரிமை இல்லை. அப்படிச் செய்தால் அது அவமானமாகிவிடுகிறது.

திருமணம் கணவன்- மனைவி இருவரின் எதிர்காலத்தை வளமாக்குவதற்காக அமைக்கப்படுகிறது. நிகழ்காலத்தில் சின்ன, சின்ன வேறுபாடுகளை நீக்கினால் மட்டுமே இருவரும் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக்கொள்ள முடியும். வளமான எதிர்காலத்தை பற்றிய சிந்தனையோடு செயல்பட்டால், நிகழ்காலத்தில் உள்ள சின்னச்சின்ன பிரச்சினைகளை எளிதாக களைந்துவிடலாம்.

ஆண், பெண் இருவருக்கும் குடும்பத்தை நிர்வகிப்பதில் பொறுப்பு இருக்கிறது. ஆனால் இன்றைய சூழலில், நாள் முழுவதும் உழைத்து விட்டு வீடு திரும்பும் நேரம் இரண்டு பேருக்குமே அந்த கூட்டுபொறுப்பை நிறைவேற்ற பொறுமை இல்லை.தேவையற்ற டென்ஷன், கோபம், வெறுப்பு போன்றவைகளால் இருக்கும் பொறுமையையும் இழந்து, மல்லுக்கட்ட தயாராகிவிடுகிறார்கள். அதுவே பிரச்சினைகளுக்கும், பிரிவுகளுக்கும் காரணமாக அமைந்துவிடுகிறது.

விவாகரத்து வழக்குகளில் டெல்லி முதல் இடத்தில் உள்ளது. தமிழ்நாடு, மேற்கு வங்காளம் ஆகியவை 2-வது இடத்திலும், கேரளா 3-வது இடத்திலும், பஞ்சாப், அரியானா ஆகிய மாநிலங்கள் 4-வது இடத்திலும் உள்ளன.

மீல்மேக்கர் மசாலா

தேவையானவை

மீல்மேக்கர் – 200 கிராம்

பெரிய வெங்காயம் – 2

தேங்காய் துருவல் – 1/2 கப்

இஞ்சி – சிறு துண்டு

பூண்டு – 8 பல்

சோம்பு – 1 ஸ்பூன்

மிளகாய் வற்றல் – 8

உப்பு எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

* 3 கப் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து, அதில் மீல் மேக்கரைப் போடவும். அரை, முக்கால் மணி நேரம் ஊற விடவும். ஊறியவுடன் இறுகப் பிழிந்து தண்ணீரை வடித்து எடுக்கவும்.

* தேங்காய், இஞ்சி பூண்டு, சோம்பு, மிளகாய் வற்றல், உப்பு சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.

* வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு, வதக்கவும். வதங்கியதும் அரைத்த கலவையை சேர்க்கவும். 2 நிமிடம் கொதிக்க விடவும். ஊறிய மீல் மேக்கர், 1/4 கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். வெந்ததும் சுருள சுருள கிண்டி இறக்கவும்.

கீதா தெய்வசிகாமணி