Monthly Archives: திசெம்பர், 2011

`வாசம்’ பிடித்தால் குணத்தைக் கண்டுபிடிக்கலாம்!


ஒருவர் எப்படிப்பட்டவர் என்று அறிய வேண்டுமா? அவரது வாசத்தைக் கொஞ்சம் மோப்பம் பிடித்தாலே போதும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இதுதொடர்பான ஆய்வை போலந்து நாட்டு விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். அவர்கள் தங்கள் ஆய்வுக்கு உதவிய தன்னார்வலர்களிடம், சிலரின் ஆடை மணத்தை மோப்பம் பிடிக்கச் செய்து, அதன் மூலம் அவர்களைப் பற்றிக் கணிக்கச் செய்தனர்.

அப்போது அவர்களின் கணிப்பு முழுக்க முழுக்கச் சரியாக இல்லாவிட்டாலும், பெரும்பாலும் பொருந்துவதாக இருந்தது. நமக்கு ஒருவரைப் பற்றிய முதல் அபிப்பிராயத்தை ஏற்படுத்துவதில், காணும், கேட்கும் விஷயங்களுடன், அவரது `வாசமும்’ முக்கியப் பங்கு வகிக்கிறது என்கிறார்கள் போலந்து ஆய்வாளர்கள்.

“நாம் ஒவ்வொருவரும் நமது தோற்றத்தின் மூலம் மட்டுமின்றி, வாசத்தின் மூலமாகவும் நம்மை வெளிப்படுத்துகிறோம்” என்று இந்த ஆய்வுகளில் ஈடுபட்டவர்களில் ஒருவரான, வுரோகிளாவ் பல்கலைக்கழகத்தின் அக்னீஷ்கா சொரோகோவ்ஸ்கா கூறுகிறார்.

இந்த ஆய்வுக்காக ஆய்வாளர்கள் 30 ஆண்களையும், 30 பெண்களையும் தொடர்ந்து 3 நாள் இரவு வெள்ளை காட்டன் டீ-ஷர்ட்களை அணியும்படி கேட்டுக்கொண்டனர். அவர்கள் எந்த வாசனைத் திரவியங்களையும் பயன்படுத்தக் கூடாது, சோப் கூட உபயோகிக்கக் கூடாது என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்த `வாசனை தானக்காரர்களிடம்’ இருந்து பெறப்பட்ட டீ-ஷர்ட்களை 100 ஆண்களும், 100 பெண்களும் மோப்பம் பிடித்துக் கருத்துக் கூறுமாறு கேட்கப்பட்டது. பின்னர் அந்தக் கருத்துகளை, டீ-ஷர்ட்களை அணிந்தவர்களிடம் தெரிவித்து, எதெல்லாம் சரி என்று கேட்கப்பட்டது. அப்போது, சில கணிப்புகள் பொருந்தவில்லை என்றபோதும், சில கணிப்புகள் மிகப் பொருத்தமாக இருந்தன. வாசத்தைக் கொண்டே ஒருவரின் ஆளுமையைக் குறிப்பிடத்தக்க அளவு கண்டுபிடித்துவிடலாம் என்பது புதுமையான விஷயமாகக் கருதப்படுகிறது.

ரத்தத்தில் இருந்து நோய் அகற்றும் நுண்ணிய காந்தங்கள்!

நமது உடலின் ரத்தத்தில் இருந்து தீங்கு செய்யும் மூலக்கூறுகளை ஈர்த்து அகற்றக்கூடிய காந்தப்புலம் வாய்ந்த நுண்ணிய துகள்களை (நானோ பார்ட்டிக்கிள்கள்) விஞ்ஞானிகள் உருவாக்கியிருக்கின்றனர்.

இவற்றின் பிரம்மாக்களான சுவிட்சர்லாந்து ஜூரிச் நகர ஆராய்ச்சியாளர்கள், ரத்தத்தைச் சுத்தப்படுத்த இது ஒரு நல்ல வழியாக இருக்கும் என்கிறார்கள். நச்சுப் பாதிப்பு, ரத்த ஓட்டத் தொற்று மற்றும் சில குறிப்பிட்ட வகை புற்றுநோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தத் தொழில்நுட்பம் மிகவும் கைகொடுக்கும் என்பது இவர்களது கருத்து.

இந்த `நானோ பார்ட்டிக்கிள்கள்’, கார்பன் பூச்சு செய்யப்பட்டு, ரத்தத்தில் இருந்து அகற்றவேண்டிய பொருட்களுக்கு ஏற்ற `ஆன்டிபாடிகள்’ சேர்க்கப்பட்டதாக இருக்கின்றன. இந்த நுண்ணிய காந்தங்களை ரத்த ஓட்டத்தில் செலுத்தி, பின்னர் டயாலிசிஸ் செய்வதன் மூலம் இன்டர்லியூகின்ஸ் போன்ற தீங்கு தரும் புரதங்கள், காரீயம் போன்ற அபாயகரமான உலோகங்களை அகற்றலாம் என்கிறார்கள்.

“ரத்தத்தில் குறிவைக்கப்பட்ட பொருட்களை இந்த நானோ மேக்னட் ஈர்க்கும், பின்னர் அவை மறுபடி ரத்த ஓட்டத்தில் சுழலாமல் ஒரு செப்பரேட்டர் தடுக்கும்” என்று இந்த ஆய்வில் ஈடுபட்டிருக்கும் ஜூரிச் பல்கலைக்கழக வேதிப் பொறியாளர் இங்கே ஹெர்மான் கூறுகிறார்.

இதய நோய்க்குக் கொடுக்கப்படும் மருந்து, `டிகோக்ஸின்’. இதன் அளவு அதிகமானால் மரணத்தை ஏற்படுத்தும். இந்த மருந்தை, மேற்கண்ட நானோ பார்ட்டிக்கிள்கள் ஒரே சுற்றில் 75 சதவீதம் அகற்றியுள்ளன. சுமார் ஒன்றரை மணி நேரம் பயன்படுத்தியபிறகு 90 சதவீதம் அகற்றியிருக்கின்றன.

இந்த நுண்ணிய துணுக்குகள் உடம்புக்கு வேறு தீமை பயக்காது, ரத்தத்தின் பிற பணிகளிலும் குறுக் கிடாது என்று விஞ்ஞானிகள் உறுதியளிக்கின்றனர்.

புத்தாண்டுக்கான `பொருளாதாரத் தீர்மானங்கள்’!

கைக்கெட்டும் தூரத்தில் `2012′. எவ்வளவுதான் சம்பளம் வாங்கினாலும் மாதக் கடைசியில் கையைக் கடிக்கிறதே என்று புலம்பும் ஆசாமியா நீங்கள்? நீங்கள் கொஞ்சம் மனது வைத்தால் அந்தக் கவலையில் இருந்து விடுதலை பெற முடியும். புத்தாண்டில் இந்த விஷயங்களைப் பின்பற்றிப் பாருங்கள். மாயாஜாலம் நிகழும்…

1. புகைப் பழக்கம் உடையவராக இருந்தால் அதை உடனே உதறுங்கள். அது உங்கள் உடல்நலம், பர்ஸ் இரண்டுக்குமே நல்லது.

2. குடும்பத்துடன் வாரம் ஒருதடவையாவது வெளியே சென்று ஓட்டலில் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறீர்களா? ஒவ்வொரு முறையும் எளிதாக 500 ரூபாய் பறந்துவிடுமே? மாதம் ஒரு தடவை வெளியே செல்வதைக் குறைத்தாலே ரூ. 500-க்கு மேல் மிச்சமாகும்.

3. தியேட்டருக்கான டிக்கெட், நொறுக்குத் தீனிகளில் பணம் காலியாகிறதா? இப்போதெல்லாம் டி.வி.டி.கள் வாடகைக்குக் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி, வீட்டிலேயே குடும்பத்துடன் ரிலாக்சாக அமர்ந்து படம் பாருங்கள். பணமும், போக்குவரத்து நேரமும் மிச்சம்.

4. வீட்டு மின்சாதனங்களை அவ்வப்போது முறையாகப் பராமரித்து, குறைகளை நீக்கினால் 15 சதவீதம் வரை மின்சாரச் செலவு குறையும். உதாரணமாக உங்கள் வீட்டில் ஏ.சி. இருக்கிறது என்றால், அதற்கான வெளி `யூனிட்’ நிழலில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள், பில்டர்கள் சுத்தமாக இருக்கிறதா, ஜன்னலில் இடைவெளி இல்லாமல் இருக்கிறதா, கண்ணாடிகளில் `டார்க் பிலிம்’ ஒட்டப்பட்டிருக்கிறதா என்று கவனியுங்கள்.

5. ஆரோக்கியமே உண்மையான செல்வம் என்பதெல்லாம் சரிதான். ஆனால் அதற்காக `ஜிம்’மில் உறுப்பினராகச் சேர்ந்துவிட்டு இரண்டொரு நாட்களுக்குப் பின் அப்பக்கம் தலைவைக்காமல் இருப்பதால் என்ன பிரயோஜனம்? அதற்குப் பதிலாக, அருகில் உள்ள பூங்காவில் அதிகாலையில் மெல்லோட்டம் (ஜாகிங்) ஓடுவது நன்மை பயக்கும்.

6. சூப்பர் மார்கெட்டுகளுக்குச் செல்லும்போதும், சிலவேளைகளில் விளம்பரங்களிலும் தள்ளுபடிக் கூப்பன் இணைந்துவரும். அவற்றால் என்ன பெரிதாக மிச்சமாகிவிடப் போகிறது என்று எண்ணாமல் சேகரித்துப் பயன்படுத்துங்கள். இந்த விஷயத்தில் தொடர் பழக்கம் பலன் தரும்.

7. வீட்டில் தொல்லைப்படுத்தும் குழந்தையை `ட்யூஷன் கிளாஸ்’ பக்கம் தள்ளிவிடுவது எளிதாகத்தான் இருக்கும். ஆனால் மாலையில் நீங்களே உட்கார்ந்து குழந்தைக்குச் சொல்லிக்கொடுத்துப் பாருங்களேன், குழந்தையுடனான பிணைப்பு வளரும், அவனது கல்விநிலை புரியும். மாதாந்திரச் செலவில் ஒரு தொகையும் குறையும்.

8. சாதாரண குண்டு பல்புகளுடன் ஒப்பிடும்போது `சி.எப்.எல்.’ விளக்குகள் கொஞ்சம் செலவு பிடிக்கும்தான். ஆனால் நீண்டகால அடிப்படையில் இவை நன்மை செய்யும். ஒரு சாதாரண குண்டு பல்பு உபயோகிக்கும் மின்சாரத்தில் 22 சதவீதத்தையே `சி.எப்.எல்.’ விளக்கு பயன்படுத்துகிறது. வீடு மட்டுமின்றி, உங்களின் பொருளாதாரமும் பிரகாசமாக `சி.எப்.எல்.’ விளக்குகள் உதவும்.

எத்தனை வகை தொடுதிரைகள்

மொபைல் போனில் இப்போது வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பி எதிர்பார்க்கும் ஓர் ஆடம்பரம் தொடுதிரையாகும். இது ஆடம்பரம் என்ற நிலையை விட்டு, இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற நிலையை நோக்கி, கட்டாய அம்சமாக மாறி வருகிறது. இது பற்றி மேலும் அறியச் செல்கையில் இருவகை தொடுதிரைகள் இருப்பதாக நிறுவனங்கள் அறிவிக்கின்றன. அவை கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் மற்றும் ரெசிஸ்டிவ் டச் ஸ்கிரீன். அவை குறித்து இங்கு காணலாம்.
தொடுதிரைகள் மொபைல் போனில் மட்டுமின்றி, டேப்ளட் பிசி, லேப்டாப் மற்றும் பெர்சனல் கம்ப்யூட்டர் மானிட்டர் களிலும் தற்போது கிடைக்கின்றன. ரெசிஸ்டிவ் ஸ்கிரீன் தொழில் நுட்பம் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த தொழில் நுட்பத்தில், திரையின் மேல் புறமாக எந்த ஒரு தொடுதலையும் சந்தித்து எதிர்கொண்டு செயல்படும் பொருள் பூசப்படுகிறது. கீழாக கடத்தும் தகடு ஒன்று அமைக்கப்படுகிறது. இரண்டிற்கும் இடையே மிகச் சிறிய அளவிலான காற்று இடைவெளி தரப்படுகிறது. இதனால், இத்திரையைத் தொடுகையில் அந்த உணர்வானது நெட்டு மற்றும் படுக்கை வச அழுத்ததின் அளவில் உணரப்பட்டு அதற்கான சர்க்யூட் இணைக்கப்பட்டு சிக்னல் உள்ளே அனுப்பப்படுகிறது. தொடு உணர்ச்சியில் இது செயல்படுவதால், இதனை இயக்க தனியான ஒரு ஸ்டைலஸ் எனப்படும் பேனா தேவை இல்லை. ஆனால், தேவையற்ற தொடுதலையும் இது எடுத்துக் கொண்டு செயல்படுவதால், நாம் எதிர் பார்க்காத அழைப்புகளை இது ஏற்படுத்த லாம். கம்ப்யூட்டர்களில், தேவைப்படாத செயல்பாடுகளை இயக்கலாம்.
கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் தொழில் நுட்பமும் அதிகமாகவே பயன்படுத்தப்படுகிறது. இந்த தொழில் நுட்பத்தில், பாதுகாப்பான, காப்பிடப் பட்ட வகையிலான பூச்சின் உள்ளாக ஊடுகடத்தும் பொருள் வைக்கப் படுகிறது. பொதுவாக ஊடுகடத்தும் பொருளாக இண்டியம் டின் ஆக்ஸைட் பயன்படுத்தப்படுகிறது. காப்பிடப்பட்ட பூச்சாக கிளாஸ் பயன்படுத்தப்படுகிறது. ஊடு கடத்தும் பொருள், மேலாக உள்ள கண்ணாடித் திரையுடன் தொடர்பு கொள்கையில், அதன் எலக்ட்ரிக் பீல்டு தன்மை மாறுகிறது. தொடர்பு ஏற்படுத்தும் தொடும் இடத்தின் நான்கு முனைகளுக் கேற்றபடி சிக்னல்கள் செலுத்தப் படுகின்றன. இதில் என்ன சிக்கல் எனில், கை விரல்களில் உறை அணிந்து கொண்டோ, அல்லது வேறு பொருள் கொண்டு மூடியோ இதனை இயக்கினால், செயல்பாடுகள் நாம் எதிர்பார்க்காத வகையில் இருக்கும்.
இந்த தொழில் நுட்பங்கள் கொண்ட இருவகை திரைகளும் தற்போது புழக்கத்தில் செம்மையாகவே இயங்கி வருகின்றன. இருப்பினும், நாம் பயன்படுத்தும் மொபைல் போனில் எந்த வகை உள்ளது என்று தெரிந்து கொண்டு பயன்படுத்துவது நல்லது.

ஆண்கள் மட்டுமே ‘ஆரம்பிப்பது’ ஏன்?

பெரும்பாலான ஆண்களுக்கு இந்தக் கவலை இருக்கும். ‘எல்லாத்தையும்’ நாமதான் ஆரம்பிக்கனும், நம்மாளு எதையுமே செய்வதில்லை என்ற கவலைதான் அது.

செக்ஸ் உறவின்போது பெரும்பாலான ஆண்களின் மனதில் தோன்றும் சலிப்புதான் இது. நான்தான் தொடங்க வேண்டும். அவங்க பாட்டுக்கு கம்முன்னு இருப்பாங்க, என்னிக்காச்சும் அவங்க ஆரம்பிச்சு வச்சுருக்காங்களா என்ற சலிப்பும் பல ஆண்களிடம் உள்ளது.

ஏன் பெண்கள் செக்ஸ் விஷயத்தில் ‘லீட்’ பண்ண மாட்டார்கள், அவரே ஆரம்பிக்கட்டும், முன்னேறட்டும் என்று காத்திருக்கிறார்கள்?. இதற்கு நிபுணர்கள் தரும் பதில் இது…

பெரும்பாலான ஆண்கள் என்றில்லை, கிட்டத்தட்ட அத்தனை ஆண்களுக்குமே இந்தக் கேள்வி மனதில் எழுவதற்கு வாய்ப்புள்ளது. காரணம், பெரும்பாலும் ஆண்கள்தான் செக்ஸ் உறவின்போது பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து வைக்கிறார்கள். அதன் பிறகுதான் பெண்கள் டேக் ஓவர் செய்து கொள்கிறார்கள்.

சில சமயங்களில், நமது மனைவிக்கு செக்ஸ் பிடிக்கவில்லையா, இப்படி அமைதியாக இருக்கிறாரே என்ற சந்தேகம் கூட சிலருக்கு எழலாம். பலருக்கு ஒரு வேளை நமது ‘மூவ்’கள் சரியாக இல்லையோ என்ற சந்தேகம் கூட எழலாம்.

முன் விளையாட்டுக்களில் மனைவிக்கு ஆர்வம் இருக்கிறதா, இல்லையா என்பது கூட பலருக்குப் புரிபடுவதில்லை. இப்படிப்பட்ட சிந்தனைகளால் பல ஆண்கள் குழம்பிப் போவது நிஜம்தான்.

ஆனால் இதெல்லாம் இந்த அளவுக்கு குழம்பிப் போக வேண்டிய பெரிய விஷயமில்லை. சாதாரணமானவைதான்.

பெண்கள் எதையும் ஆரம்பிப்பதில் தயக்கம் காட்ட சில காரணங்கள் உள்ளன. நாமே தொடங்கினால் நம்மவருக்கு ஏதாவது ஈகோ பிரச்சினை வந்து விடுமோ என்று பல பெண்கள் முதல் அடி எடுத்து வைக்க தயக்கம் காட்டுகிறார்களாம்.

நாமே முந்திக் கொண்டு போனால் நம்மைப் பற்றித் தவறாக நினைத்து விடுவாரா என்ற சந்தேகமும் பல பெண்களுக்கு எழுகிறதாம். நாம்தான் சரியான ‘சிக்னல்’ கொடுத்தாச்சே, புரிந்து கொண்டு களம் இறங்க வேண்டியதுதானே என்று பலர் நினைக்கிறார்களாம்.

நான் சரியான முறையில்தான், உறவுக்கு ரெடி என்பதை மறைமுகமாக உணர்த்துகிறேன். அவர்தான் சரியாக புரிந்து கொள்ளாமல் இருக்கிறார் என்று பல பெண்கள் புகார் பட்டியலுடன் உட்கார்ந்திருக்கிறார்கள்.

பட்டவர்த்தனமாக எப்படி பளிச்சென சொல்வது என்ற தயக்கம் ஏற்படுவதாக பல பெண்கள் சொல்கிறார்கள்.

ஆரம்பிப்பதில் அவர் தான் கில்லாடி, எக்ஸ்பர்ட், அதனால்தான் நான் மெளனம் காக்கிறேன் என்பதும் பல பெண்கள் சொல்லும் வாதமாக இருக்கிறது.

எனவே காதல் மற்றும் உறவில் ஈகோ என்பது பார்க்கப்படக்கூடாத ஒன்று. யார் ஆரம்பித்தால் என்ன, முடியும்போது அது சிறப்பாக, சந்தோஷமாக இருக்கிறதா என்பதுதான் முக்கியம்.

அந்த நான்கு சுவருக்குள் தனிமையில் இருக்கும்போது இருவருக்கும் இடையே எந்தவிதமான தயக்கமோ, வெட்கமோ, கெளரவம் பார்ப்பதோ இருக்கக் கூடாது. ஆடைகளுடன் சேர்த்து அவற்றையும் தூரப் போட்டு விட வேண்டும். அப்போதுதான் உறவு இனிக்கும், சிறக்கும்.

மேலும், பார்ட்னரிடமிருந்து வரும் ‘சிக்னலை’ சரியாக புரிந்து கொள்ள வேண்டியது இருவரின் கடமையுமாகும். சிக்னல் வந்து விட்டால், அடுத்தவர் வேலையை ஆரம்பிக்க வேண்டியதுதான். அதை விட்டு விட்டு, இல்லை, இல்லை வாயைத் திறந்து கேட்டால்தான் ஆச்சு என்று வறட்டுப் பிடிவாதமாக இருக்கக் கூடாது.

ஒரு வேளை கணவர் பிசியாக இருந்து கொண்டிருப்பார். அப்போது பார்த்து மனைவி அருகே வந்து கன்னத்தில் முத்தமிடலாம், கொஞ்சலாம். அதெல்லாம்தான் உறவுக்கு அழைப்பதற்கான ‘சிக்னல்’கள். எனவே பிசியாக இருந்தாலும் கூட அந்த சமிக்ஞைகளை சரியாக புரிந்து கொண்டு செயல்பட்டால் பிரச்சினை இல்லை.

மனைவி ஆரம்பிக்கட்டும், அவரே எல்லாவற்றையும் தொடங்கட்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை தாராளமாக அவரிடம் வெளிப்படையாக சொல்லி விடலாம். அடுத்த முறை உங்களை அசத்த அவரும் தயாராக இருப்பார்.

மொத்தத்தில் அன்பைக் காட்டவும், அருகாமையை இனிமையாக்கவும் வெளிப்படையான மனதும், செயல்பாடுகளும் முக்கியம் என்பதைப் புரிந்து கொண்டால், ‘ஸ்டார்ட்டிங் டிரபுள்’ இருக்கவே இருக்காது.

மனிதனின் ஞாபக சக்தி!

மனிதனுக்கு உள்ள சிறப்பம்சங்களில் ஒன்று, அவனது நீளமான, ஆழமான ஞாபகத் திறன்.

ஆனால் ஓர் உண்மை தெரியுமா? மனித மூளையின் செல்களில் 96 சதவிகிதம், ஞாபக சக்தி தொடர்பான பணிகளில் ஈடுபடுவதில்லை. மனிதன் தனக்குள்ள மொத்த நினைவாற்றல் திறனில் 4 சதவிகிதத்தைத்தான் பயன்படுத்துகிறான். உலக மக்களில் ஒரு சதவிகிதத்தினரே தங்களின் ஞாபகசக்தியைத் திறமையுடன் பயன்படுத்துகின்றனர் என்று தெரியவந்திருக்கிறது.

அபார ஞாபகத்திறன் கொண்டவர்களும் உள்ளனர். அளப்பரிய உண்மைகளையும், எண்ணிக்கைகளையும் அவர்களால் நினைவில் வைத்திருக்க முடிகிறது. அதேபோல, கால்குலேட்டர் போல விரைவாகக் கணக்குகளைச் செய்து முடிக்கும் நபர்களும் உள்ளனர். அத்தகையவர்கள் தங்களின் நினைவாற்றல் திறனில் ஏறக்குறைய 50- 60 சதவிகிதத்தையே பயன்படுத்துகின்றனர்.

பல்வேறு வழிகளில், பல்வேறு புலன்களின் மூலம் நாம் பலவற்றை அறிகிறோம். பார்வை, கேள்வி, சுவை, தொடுபுலன், செயல் ஆகிய பல உணர்வுகளின் மூலம் நமக்கு நினைவு பெறப்படுகிறது. பல்வேறு புலன்களின் மூலம் நமது நினைவுக்குப் பல்வேறு விஷயங்கள் கொண்டு வரப்படுகின்றன.

சாதாரணமாக, ஒன்றுக்கு மேற்பட்ட புலன்களின் மூலமாகவே நினைவு ஏற்படுகிறது. பெருமளவுச் செய்திகள் பார்வையின் மூலமாகவே பெறப்படுகின்றன.

இதைச் சரிவரப் பயன்படுத்த வேண்டும். எனினும், பிற புலன்களையும் நன்கு தூண்டிவிடுவது அவசியமாகும். பல்வேறு புலன்களின் மூலம் பெறப்படும் விவரங்
களைத்தான் மனிதனால் நன்கு நினைவு வைத்துக்கொள்ள முடிகிறது. ஒரு முக்கியமான வாசகத்தைப் படித்துப் புரிந்துகொண்ட பின், அதை உரக்க மீண்டும் சொல்வது பயனளிக்கும். அதன்மூலம் கேள்விப் புலனும், செயல் பதிவும் நன்கு வலுப்பெறும்.

கிடைத்த விவரங்களை நினைவில் கொண்டிருப்பதை `பிம்ப நினைவு’ என்று கூறலாம். அந்த விவரங்கள் அனைத்தையும் பகுத்து ஆராய்ந்து, பழையவற்றுக்கும், புதியவற்றுக்கும் தொடர்புகளை நிறுவுவது `தர்க்க நினைவு’ ஆகும்.

அதனால்தான் நாம் சரிவர அறிந்திராதவற்றை விட, நன்கு அறிந்துள்ளவற்றை நினைவில் வைத்திருப்பது எளிதாக உள்ளது. பொருள் புரியும் வார்த்தைகளை நினைவில் கொள்வது, பொருளற்ற சொற்குவியலை நினைவில் வைத்திருப்பதை விட எளிதல்லவா?

உணர்ச்சி நினைவும் மக்களுக்கு உண்டு. அறிவு அல்லது தர்க்க நினைவைக் காட்டிலும் உணர்ச்சி நினைவு வலுவானது. அதனால்தான் சுவையான புத்தகங்களை வாசிப்பது, திரைப்படங்களையும், நாடகங் களையும் காண்பது போன்றவை நம் நினைவை விட்டு அகலாதிருக்கின்றன. ஆகவே நாம் கற்றுக்கொள்ள வேண்டியவற்றில் சில சுவையான அம்சங்களைக் கண்டுபிடித்தால் அவற்றை எளிதாகக் கற்றுக்கொள்ள முடியும்.

மேக நோய்களை குணமாக்கும் சீந்திற்கிழங்குகள்

மண்ணுக்கு அடியில் விளையும் கிழங்கில் மகத்துவம் தரும் மருத்துவ குணம் உண்டு. சித்த, ஆயுர்வேத, யுனானி மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் சீந்திற்கிழங்கு உயிர் சத்து மிக்கது. கொடி வகையைச் சேர்ந்த இந்த கிழங்கு, சீந்தில், பேய்ச்சீந்தில், பொற்சீந்தில் என பலவகையை கொண்டுள்ளது. இந்த கிழங்கு பல்வேறு நோய்களை போக்குவதால் அமிர்தக்கொடி, அமிர்தவல்லி, சோமவல்லி, குண்டலி எனவும் இதனை அழைக்கின்றனர்.

மேகநோய்களை நீக்கும்

சீந்திற்கிழங்கு அஜீரணத்தைப் போக்கி பசியை தூண்டவல்லது. இது 21 வகையான மேகநோய்களையும் நீக்க வல்லது என்று மருத்துவ நூல்கள் தெரிவிக்கின்றன. இரத்தத்தில் உள்ள நச்சுத்தன்மையை போக்கும். பித்தம் அதிகரிப்பதினால் ஏற்படும் நோய்களை குணமாக்கும். ரத்த பித்தத்தைப் போக்கும்.

பேய்ச்சீந்தில் எண்ணெய்

பேய்ச்சீந்திலை ஆகாசகருடன், என்று கூறுவர். இக்கிழங்கிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் அனைத்துவகை சருமநோய்களையும் போக்க வல்லது. இதனை மேல்பூச்சாக பூச குழிப்புண்களையும் ஆற்றும். இந்த எண்ணெய் கால்நடைகளின் கழுத்தில் ஏற்படும் புண்கள், கழலைகளை குணமாக்கும்.

குடல்நோய் குணமடையும்

பேய்ச்சீந்திற்கிழங்கின் மேல் தோலை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக்கி நிழலில் நன்கு உலர்த்த வேண்டும். பின்பு பொடியாக்கி துணியில் சலித்து எடுத்துக்கொண்டு மருந்தாக பயன்படுத்தலாம். இதனால் ரத்தம் சுத்தமாகும். குடல் தொடர்புடைய நோய்கள் குணமாகும். காமாலை நோய் பித்தபாண்டு ஆகியவற்றைப்போக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. இது கழுத்தில் வரும் கழலைக்கட்டிகளை ஆற்றும். நாள்பட்ட தோல்நோய்களை குணமாக்கும்.

பொற்சீந்தில் வற்றல்

பொற்சீந்தில் பித்தம் தொடர்புடைய காய்ச்சல், வாந்தி போன்றவற்றை நீக்கும். காசநோய், நீரிழிவு போன்ற நோயால் சிரமப்படுபவர்களுக்கு வரப்பிரசாதமாகும். இக்கிழங்கை வற்றலாக காயவைத்து உட்கொண்டால் உடலின் நச்சுத்தன்மை நீங்கும். நீரிழிவு மற்றும் காசநோய் குணமாகும்.

எக்ஸெல் : செல் ரேஞ்ச் – சில விளக்கங்கள்

எக்ஸெல் தொகுப்பில் பார்முலாக்களில் செல்களின் ரேஞ்சினைக் குறிப்பிட வேண்டும். ரேஞ்ச் குறிப்பிடுகையில் கமா, கோலன் (இரு புள்ளி) ஸ்பேஸ் எனப் பலவகைகளைப் பயன் படுத்தப்படுகின்றன. ஆனால் இதனை அமைப்பதில் பலருக்கும் சந்தேகம் உள்ளது என்பது நமக்கு வரும் கடிதங்களிலிருந்து தெரிகிறது. இந்த வகையில் சில அடிப்படையான விஷயங்கள் இங்கு காட்டப்படுகின்றன.
முதலில் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். இந்த நிறுத்தக் குறியீடுகள் சாதாரண டெக்ஸ்ட்டில் வருவது போல சொற்களுக்கிடையேயான நிறுத்தக் குறிகள் அல்ல. இவை பார்முலாவின் ஓர் அங்கமாகும். எனவே இவற்றைக் கவனமுடன் அமைக்க வேண்டும்.
(:) : கோலன். இது ஒரு சிங்கிள் ரேஞ்சினைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக A1:C2 என்பது A1 முதல் C2 வரையிலான செல்களைக் குறிக்கிறது.
(,) : கமா என்னும் காற்புள்ளி இரண்டு ரேஞ்ச் செல்கள் இணைந்ததைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக A1:C2, B1:B4 என்பது ஏ1 முதல் சி2 வரையிலான ரேஞ்சையும் பி1 முதல் பி4 வரையிலான ரேஞ்ச் செல்களையும் இணைந்த தொகுதியைக் குறிக்கிறது. இது போன்ற இணைப்பு செல்களைக் குறிப்பிடுகையில் கவனமாகக் கண்காணித்துக் கொள்வது நல்லது. நீங்கள் விரும்புகின்ற வகையில் பார்முலா செயல்படுகிறதா என்பதனைக் கவனிக்க வேண்டும். இறுதியாக ஸ்பேஸ் என்னும் இடைவெளி செல் ரேஞ்ச்களில் குறுக்கிடும் செல்களை மட்டுமே குறிப்பிடுகிறது. எடுத்துக் காட்டாக A1:C2, B1:B4 எனக் குறிப்பிட்டால் இந்த இரு ரேஞ்ச் செல்களும் எங்கு குறிக்கிடுகின்றனவோ அந்த செல்கள் மட்டுமே பார்முலாவில் இயக்கப்படும்.
இங்கு எடுத்துக் காட்டுக்களில் செல்களின் பெயர்கள் தரப்பட்டிருக்கின்றன. ஆனால் பார்முலா இயங்கும் போது அவற்றின் மதிப்புகள் கணக்கிடப்படும்

பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அம்மன்

பக்தர்கள் அம்மனை வேண்டி விரதம் இருப்பதுதான் நடைமுறை. ஆனால், இங்கு பக்தர்களுக்காக அம்மனே விரதம் இருக்கிறாள். இதை `பச்சைப் பட்டினி’ விரதம் என்கிறார்கள். மாசி மாத கடைசி ஞாயிறு அன்று நடைபெறும் பூச்சொரிதல் திருவிழாவுடன் அம்மனின் இந்த பச்சை பட்டினி விரதம் ஆரம்பிக்கிறது.

பல்வேறு சிறப்புகள் கொண்ட இந்த சமயபுரம் மாரியம்மன் முற்காலத்தில் `வைஷ்ணவி’ என்ற நாமத்தில் ஸ்ரீரங்கத்தில் குடிகொண்டிருந்ததாக கூறுகிறார்கள். அங்கிருந்த இந்த அம்மனை வேறொரு இடத்திற்கு கொண்டு சென்ற சிலர், கண்ணனூர் என்ற இடத்தில் அம்மனை வைத்துவிட்டு சென்றுவிட்டனர். அவ்வாறு சிலை வைக்கப்பட்ட கண்ணனூர்தான் இன்றைய சமயபுரம் என்றும், அந்த அம்மன்தான் இன்றைய சமயபுரத்தம்மன் என்றும் சொல்கிறார்கள்.

இந்த நிலையில், தென்னாட்டின் மீது படையெடுத்து வந்த விஜயநகர மன்னர், கண்ணனூர் காட்டுப்பகுதியில் முகாமிட்டிருந்தார். அப்போது, அங்கிருந்த மாரியம்மனை வழிபட்டார். போரில் வெற்றிபெற்றால் கோவில் கட்டுவதாகவும் வேண்டிக்கொண்டார்.

அதன்படி, போரில் ஏற்பட்ட வெற்றியை அடுத்து மாரியம்மனுக்கு கோவில் எழுப்பினார். தற்போதுள்ள கோவில் கி.பி.1804-ல் விஜயரங்க சொக்கநாத நாயக்க மன்னரால் கட்டப்பட்டதாகும்.

சோழர் காலத்திலேயே இங்கு மாரியம்மன் கோவில் இருந்திருக்க வேண்டும். தற்போதுள்ள கோவில், பிந்தைய விஜய நகர மற்றும் நாயக்க மன்னர்கள் காலத்தில் சிறப்பு பெற்றிருக்க வேண்டும் என்பது ஆய்வாளர்களின் கருத்து.

சமயபுரம் கோவிலின் கருவறையைச் சுற்றி எப்போதும் நீர் நிறைந்திருக்குமாறு ஈரத் தன்மையுடன் வைத்திருக்கிறார்கள். அம்மன் எப்போதும் குளிர்ச்சியாக இருப்பதற்காக இப்படிச் செய்கிறார்கள்.

சமயபுரத்து மாரியம்மனின் விக்ரகம் மூலிகைகளால் ஆனது என்பதால் இதற்கு அபிஷேகம் செய்வதில்லை. அதற்கு பதிலாக உற்சவர் அம்மனுக்கு அபிஷேகம் செய்கிறார்கள்.

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் சென்னைக்கு செல்லும் வழியில் சமயபுரம் அமைந்துள்ளது.

 

 

குங்குமப் பூ!

குங்குமப் பூவின் மகிமையை பெண்களைக் கேட்டால் சொல்வார்கள். நம் நாட்டிலும், பிரான்ஸ், சீனா போன்ற நாடுகளிலும் குங்குமப் பூ பயிரிடப்பட்டு வருகிறது.

காஷ்மீரில் பயிராகும் குங்குமப் பூ, மென்மையிலும், சிவப்பிலும், மணத்திலும் மிகச் சிறந்ததாக உள்ளது. ஈரானில் விளையும் குங்குமப் பூ தேனைப் போல மணக்கும். ஸ்பெயின் நாட்டுக் குங்குமப் பூவும் நல்ல மணம் வாய்ந்தது.

கிரேக்க நாட்டினரும், ரோமாபுரி மக்களும் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்திவரும் குங்குமப் பூ, இந்தியாவுக்குக் கடல் வணிகர்கள் மூலம் பரவியிருக்க வேண்டும் என்று `ராஜதரங்கிணி’ என்ற நூல் கூறுகிறது.

காஷ்மீரைத் தவிர உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த குமாபுமிலும், உத்தரகாண்டிலும் இது பயிராகிறது. கி.மு. 750-ம் ஆண்டுக்கு முன்பே நம் நாட்டுக்குக் குங்குமப் பூ வந்து சேர்ந்திருக்க வேண்டும் என்பது பழம்நூல்கள் மூலம் தெரியவருகிறது. காஷ்மீரின் ஸ்ரீநகரில் இருந்து சிறிது தொலைவில் உள்ள, பண்டைய காலத்தில் `பத்மபூர்’ என்றும் தற்போது `பாம்பர்’ என்றும் அழைக்கப்படும் கிராமத்தில் விளையும் குங்குமப் பூ மிகவும் பிரசித்தி பெற்றது.

சுமார் ஐயாயிரம், ஆறாயிரம் அடி உயரத்தில் இருக்கும் மலைப் பிரதேசங்களில், குளிரும் வெயிலும் ஒருங்கே கூடிய பள்ளத்தாக்குகளில் குங்குமப் பூ அமோகமாய் தளதளவென்று விளைகிறது. இதைத் தவிர மூவாயிரம், நான்காயிரம் அடி உயர்ந்த பிரதேசங்களில் 40-ல் இருந்து 60 அங்குல மழையும், குளிர்காலத்தில் பனியும் பெய்யும் இடங்களில் எல்லாம் குங்குமப் பூ பயிராகிறது.

குங்குமப் பூ செடி உயரமாக வளர்வதில்லை. ஆனால் ஐந்தாறு ஆண்டுகள் வரை குங்குமப் பூ இதில் மலர்கிறது. வெங்காய வடிவத்தில் உள்ள குங்குமப் பூ கிழங்கை பூமியில் நட்டு இதைப் பயிராக்குகிறார்கள். இந்தக் கிழங்கை மக்கள் உண்ணவும் செய்கிறார்கள்.

காஷ்மீரில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதக் கடைசியில் குங்குமப் பூக்களைச் சேகரிக்கும் வேலை தொடங்குகிறது. கைகளாலே பறித்து வெயிலில் மூன்று, நான்கு நாட்கள் உலர வைக்கிறார் கள். நன்றாக உலர்ந்த பிறகு மலரில் இருந்து இதழ் நரம்புகளைப் பிரித்தெடுக்கிறார்கள். நரம்பின் மேல்பாகம் ஆரஞ்சு நிறத்தில் இருந்தால் அது உயர்தரமான குங்குமப் பூவாகக் கருதப்படுகிறது.