புத்தாண்டுக்கான `பொருளாதாரத் தீர்மானங்கள்’!

கைக்கெட்டும் தூரத்தில் `2012′. எவ்வளவுதான் சம்பளம் வாங்கினாலும் மாதக் கடைசியில் கையைக் கடிக்கிறதே என்று புலம்பும் ஆசாமியா நீங்கள்? நீங்கள் கொஞ்சம் மனது வைத்தால் அந்தக் கவலையில் இருந்து விடுதலை பெற முடியும். புத்தாண்டில் இந்த விஷயங்களைப் பின்பற்றிப் பாருங்கள். மாயாஜாலம் நிகழும்…

1. புகைப் பழக்கம் உடையவராக இருந்தால் அதை உடனே உதறுங்கள். அது உங்கள் உடல்நலம், பர்ஸ் இரண்டுக்குமே நல்லது.

2. குடும்பத்துடன் வாரம் ஒருதடவையாவது வெளியே சென்று ஓட்டலில் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறீர்களா? ஒவ்வொரு முறையும் எளிதாக 500 ரூபாய் பறந்துவிடுமே? மாதம் ஒரு தடவை வெளியே செல்வதைக் குறைத்தாலே ரூ. 500-க்கு மேல் மிச்சமாகும்.

3. தியேட்டருக்கான டிக்கெட், நொறுக்குத் தீனிகளில் பணம் காலியாகிறதா? இப்போதெல்லாம் டி.வி.டி.கள் வாடகைக்குக் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி, வீட்டிலேயே குடும்பத்துடன் ரிலாக்சாக அமர்ந்து படம் பாருங்கள். பணமும், போக்குவரத்து நேரமும் மிச்சம்.

4. வீட்டு மின்சாதனங்களை அவ்வப்போது முறையாகப் பராமரித்து, குறைகளை நீக்கினால் 15 சதவீதம் வரை மின்சாரச் செலவு குறையும். உதாரணமாக உங்கள் வீட்டில் ஏ.சி. இருக்கிறது என்றால், அதற்கான வெளி `யூனிட்’ நிழலில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள், பில்டர்கள் சுத்தமாக இருக்கிறதா, ஜன்னலில் இடைவெளி இல்லாமல் இருக்கிறதா, கண்ணாடிகளில் `டார்க் பிலிம்’ ஒட்டப்பட்டிருக்கிறதா என்று கவனியுங்கள்.

5. ஆரோக்கியமே உண்மையான செல்வம் என்பதெல்லாம் சரிதான். ஆனால் அதற்காக `ஜிம்’மில் உறுப்பினராகச் சேர்ந்துவிட்டு இரண்டொரு நாட்களுக்குப் பின் அப்பக்கம் தலைவைக்காமல் இருப்பதால் என்ன பிரயோஜனம்? அதற்குப் பதிலாக, அருகில் உள்ள பூங்காவில் அதிகாலையில் மெல்லோட்டம் (ஜாகிங்) ஓடுவது நன்மை பயக்கும்.

6. சூப்பர் மார்கெட்டுகளுக்குச் செல்லும்போதும், சிலவேளைகளில் விளம்பரங்களிலும் தள்ளுபடிக் கூப்பன் இணைந்துவரும். அவற்றால் என்ன பெரிதாக மிச்சமாகிவிடப் போகிறது என்று எண்ணாமல் சேகரித்துப் பயன்படுத்துங்கள். இந்த விஷயத்தில் தொடர் பழக்கம் பலன் தரும்.

7. வீட்டில் தொல்லைப்படுத்தும் குழந்தையை `ட்யூஷன் கிளாஸ்’ பக்கம் தள்ளிவிடுவது எளிதாகத்தான் இருக்கும். ஆனால் மாலையில் நீங்களே உட்கார்ந்து குழந்தைக்குச் சொல்லிக்கொடுத்துப் பாருங்களேன், குழந்தையுடனான பிணைப்பு வளரும், அவனது கல்விநிலை புரியும். மாதாந்திரச் செலவில் ஒரு தொகையும் குறையும்.

8. சாதாரண குண்டு பல்புகளுடன் ஒப்பிடும்போது `சி.எப்.எல்.’ விளக்குகள் கொஞ்சம் செலவு பிடிக்கும்தான். ஆனால் நீண்டகால அடிப்படையில் இவை நன்மை செய்யும். ஒரு சாதாரண குண்டு பல்பு உபயோகிக்கும் மின்சாரத்தில் 22 சதவீதத்தையே `சி.எப்.எல்.’ விளக்கு பயன்படுத்துகிறது. வீடு மட்டுமின்றி, உங்களின் பொருளாதாரமும் பிரகாசமாக `சி.எப்.எல்.’ விளக்குகள் உதவும்.

3 responses

  1. good idea……………………

  2. நல்ல அறிவுரைகள். மனமிருந்தால் மார்க்கமுண்டு. மனம் வைக்கவேண்டும்.

  3. அனைத்து டிப்ஸ்களும் அருமை தலைவா. இவற்றை விட குறுக்கு வழி ஒன்று உள்ளது. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று கூடி ஏதெனும் ஒரு தொழில் செய்து கூடுதல் வருமானம் பெற வகை செய்யலாம். சிங்கபூர் போன்ற நாடுகளில் கடைசி வரை உழைத்துக் கொண்டிருப்பர். அந்த உழைக்கும் மனசு அல்லொருக்கும் வந்தால் நாடும் வீடும் உருப்படும். அதை விடுத்து டாஸ்மாக் கடையில் கணக்கு வைத்துக் குடிக்கும் நமக்கு இந்த டிப்ஸ் பத்தாது.

%d bloggers like this: