Monthly Archives: பிப்ரவரி, 2012

நோ அட்வைஸ், நோ ரூல்ஸ்!

தம்பதியருக்கிடையே புரிதல் இல்லாத காரணத்தினாலே சில ஆண்டுகளுக்குள்ளாகவே பிரிவுகள் ஏற்படுகின்றன. என்னை புரிஞ்சிக்கவே மாட்டேங்கிறா என்று கணவனும், நான் என்ன செய்தாலும் பிடிக்க மாட்டேங்குது என்று மனைவியும் புலம்பத் தொடங்கிவிடுகின்றனர். உணர்வுப் பூர்வமாக கணவரை புரிந்து கொண்டு மகிழ்ச்சிப்படுத்த உளவியல் வல்லுநர்கள் கூறும் சில ஆலோசனைகள்

புரிதல் வேண்டும்

நம்மை நாம் புரிந்து கொள்வது ஒரு புறம் இருக்கையில், திருமணம் செய்து கொண்டுள்ள கணவரைப் பற்றியும், அவருக்கு பிடித்தமானவைகளையும், புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுவது சற்று சிரமமான காரியம்தான். ஆண்கள் என்பவர்கள் வெளியில் சூரப்புலிகளாக செயல்பட்டாலும் வீட்டைப் பொருத்தவரை அம்மாபிள்ளைகளாகவோ, மனைவியின் முந்தானையை பிடித்துக்கொண்டோதான் இருக்க நினைப்பார்கள். எனவே முதலில் கணவரின் மனதை படியுங்கள். அவருக்கு பிடித்தமான விசயங்கள் என்பதை தெரிந்துகொண்டு அதன்படி நடந்து கொள்ளுங்கள். அப்புறம் பிரச்சினை எப்படி வரும்?

மனதை வருடும் பேச்சு

உளப்பூர்வமாகவும், உணர்வுப் பூர்வமாகவும் ஆண்களின் மனதை பெண்களின் அருகாமைக்காக ஏங்கும். எனவே தினசரி சில மணிநேரங்கள் உங்களுக்காக ஒதுக்குங்கள். இருவரும் மனம் விட்டு பேசுங்கள். கணவரின் அருகில் அமர்ந்து பத்திரிக்கையில் படித்த துணுக்கு, புதிதான ரிலீஸ் ஆன திரைப்படம் பற்றிய விமர்ச்சனம், பக்கத்து வீட்டு சமாச்சாரம் எதைப்பற்றி வேண்டுமானலும் இருக்கட்டும். பேசினால் தகவல் பரிமாற்றத்தோடு அன்றைய நிகழ்வுகள் உடனுக்குடன் தெரிகிறது என்ற நினைவு ஆண்களுக்கு ஏற்படும். பேச்சோடு பேச்சாக உறவுகளைப் பற்றியும், குழந்தைகளைப் பற்றியும் பேசலாம். கணவர் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை இந்த சூழ்நிலையில் தெரிந்து கொள்வது எளிது.

திருப்தி அடையச் செய்யுங்கள்

திருமணத்திற்குப் பின்னர் ஆண், பெண் இருவருக்கு இடையேயும் உடல் ரீதியான தேவைகளையும், உள ரீதியான ஆறுதல்களையும் எதிர்பார்ப்பது இயல்பு. எனவே இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்து அவரவர்களின் தேவைகளை நிறைவேற்ற ஒத்துழைக்கும் பட்சத்தில் பிரச்சினை எழ வாய்ப்பில்லை. ஆண்களுக்கு உணர்வு பூர்வமான தேவைகள் அதிகம் இருக்கும். எனவே பெண்கள் அதனை புரிந்து நடந்து கொள்வது ஆண்களை மகிழ்ச்சியுறச்செய்யும் என்கின்றனர் உளவியலாளர்கள்.

மனதில் நினைத்தால் தெரியாது

தம்பதியர் தங்களின் தேவைகளை வெளிப்படையாக தெரிவிக்கவேண்டும். அப்பொழுதுதான் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஏனெனில் மனதில் நினைத்தால் அதை அனைவராலும் புரிந்து கொள்ள முடியாது எனவே தன்னுடைய தேவைகளை மனைவிக்கு தெரிவிக்க வேண்டும் என்றும், கணவரிடம் கேட்டுப் பெறுவதில் மனைவியும் கெட்டிக்காரத்தனத்துடன் நடந்து கொள்ளவேண்டும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

நோ அட்வைஸ், நோ ரூல்ஸ்

தம்பதியருக்கிடையே சட்டதிட்டங்கள் வகுத்து அதற்கேற்ப வாழவேண்டும் என்ற அவசியம் இல்லை. அதேபோல் எதற்கெடுத்தாலும் அட்வைஸ் செய்வது எரிச்சலை ஏற்படுத்தும் என்கின்றனர் உளவியலாளர்கள். கணவரின் செயல்களை எப்போதும் விமர்ச்சிப்பதும் உறவுகளை பாதிக்கும்.

மிகச்சிறந்த நபர்

கணவரின் காயங்களுக்கு ஆறுதல் தரும் மிகச்சிறந்த நபர் என்பதை உணர்த்துவதும், புரியவைப்பதும் மனைவியின் கடமை. அவரின் உணர்வுப் பூர்வமான தேடல்களுக்கு வடிகாலாக இருக்கவேண்டியதும் மனைவிதான். எனவே அதை நினைவில் வைத்துக்கொண்டு கணவரை அணுகவேண்டும். அதைவிடுத்து எடுத்ததற்கெல்லாம் சந்தேகப்படுவதும், தேவையற்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்று உளவியலாளர்கள் கூறுகின்றனர். எனவே கணவரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அதற்கேற்ப நடந்துகொண்டால் இல்லறத்தில் பிரிவு ஏற்பட வழியில்லை என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள்.

இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

இன்றைய இளைய தலைமுறையினரின் வாழ்வில், “மேக்-அப்’ தவிர்க்க முடியாத அங்கமாகி விட்டது. திருமணம், பார்ட்டி, அலுவலகம் ஆகியவற்றுக்கு செல்லும் போது, எப்படி, வித்தியாசமாக மேக்-அப் போட்டுக் கொள்வது என, தங்களை அலங்கரித்துக் கொள்ளும் நடைமுறை அதிகரித்துள்ளது.
ஐநூறு முதல், 50 ஆயிரம் ரூபாய் வரை, விதவிதமான பேக்கேஜ்களில், அழகுபடுத்துவதற்காகவே, நகரின் மூலை முடுக்குகளில் எல்லாம், டீக்கடைகளை விட, பியூட்டி பார்லர்கள் அதிகம் முளைத்துள்ளன. இதுபோன்ற பியூட்டி பார்லர்களுக்கு சென்றால், சமையலுக்கு பயன்படுத்தப் படும் உணவுப் பொருட் களில், கடலை மாவு முதல், காய்கறிகள் வரை, ஒன்று விடாமல் முகத்தில் தேய்த்து, ” சான்சே இல்ல. கத்ரீனா கயீப், ஹிருத்திக் ரோஷன் போல் சும்மா, தக, தகன்னு மின்னுகிறீர் கள்…’ என, அளந்து விடு வதோடு, பர்சையும் காலி செய்து விடுவர்.
தங்களை அழகுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதில், ஒரு சிலருக்கு ஆர்வம் இருக்கும். சிலருக்கு, இதில், சாதாரண வெறி அல்ல, கொலை வெறியே வந்து விடும்.
அப்படிப்பட்டவர் தான், பயே டால்மி வயது 20. தென் கொரியாவைச் சேர்ந்த இவருக்கு, 14 வயதிலேயே, மேக்-அப் மீது காதல் வந்து விட்டது. ஆரம்பத்தில் வீட்டிலேயே தன்னை அழகுபடுத்திக் கொண்டவர், படிப்படியாக, பியூட்டி பார்லர்களுக்கு போகத் துவங்கினார். நாளடைவில், தினமும் பியூட்டி பார்லர்களிலேயே தவம் கிடந்தார்.
தூங்கும்போது கூட, மேக்-அப் போட்டுத்தான் தூங்குவார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு சில நாட்களிலேயே, இவருக்கு ஒரு வித்தியாசமான எண்ணம் தோன்றியது. “தினமும், மேக்-அப் போட்டு நேரத்தை செலவழிப்பதற்கு பதிலாக, நிரந்தரமாக, மேக்-அப் போட்டுக் கொள்ளலாமே. முகம் கழுவினால் கூட, போகாத அளவுக்கு மேக்-அப் போட்டுக் கொள்ளலாம்…’ என, நினைத்து, ஒரு பியூட்டி பார்லருக்கு சென்றார்.
“நிரந்தர மேக்-அப் தானே, இதற்கான ஸ்பெஷல் பேக்கேஜ் எங்களிடம் இருக்கிறது…’எனக் கூறி, ஏதேதோ, சில பொருட்களை முகத்தில் பூசி, கிட்டத்தட்ட முகமூடி போட்டது போன்ற ஒரு மேக்-அப்பை போட்டு விட்டனர். இந்த மேக்-அப்பை சாதாரணமாக களைத்து விட முடியாது. பியூட்டி பார்லருக்கு சென்று தான் கலைக்க முடியும். இந்த மேக்-அப்பை கலைக்க, பயே டால்மிக்கு மனது வரவில்லை. ஒரு மாதம், இரண்டு மாதம் அல்ல இரண்டு ஆண்டுகள், இந்த மேக்-அப்பை கலைக்காமலேயே வலம் வந்தார்.
இரண்டு ஆண்டுகளுக்கு பின், முகத்தில் அரிப்பு ஏற்படத் துவங்கியது. அலறியடித்து, டாக்டரிடம் ஓடினார். “உடனடியாக <<மேக்-அப்பை கலைத்து விடுங்கள். இல்லையெனில், விஷயம் விபரீதமாகி விடும்…’ என கூறினார் டாக்டர். வேறு வழியில்லாமல், மேக்-அப்பை கலைத்தார். இதன்பின், தன் முகத்தை கண்ணாடியில் பார்த்த பயே டால்மி , அதிர்ச்சியில் உறைந்து விட்டார்.
அவரின் உண்மையான வயதை விட, இரண்டு மடங்கு அதிக வயதானவர் போல், அவரது முகம் காணப்பட்டது. வெளியில் சென்றால், கேலி, கிண்டல் செய்வர் என பயந்து, வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்.
நம் நாட்டில் கூட சிலர், தங்களுக்கு இலியானா போல், “ஜீரோ’சைஸ் இடுப்பு அமைய வேண்டும் என ஆசைப்பட்டு, பல்லில் பச்சை தண்ணீர் கூட படாமல், பல நாட்களாக பட்டினி கிடந்து, கடைசியில் பரலோகம் போய்ச் சேர்ந்த சம்பவங்களும் நடந்து வருகின்றன.
அழகுக்கு ஆசைப்படலாம்; அழகு படுத்திக் கொள்கிறோம் என்ற பெயரில், அபாயத்துக்கு ஆசைப்படலாமா?

வண்ணம் மாற்றும் பிளாக் மேஜிக்

“பிளாக் மேஜிக்’ சாப்ட்வேர் விண்டோஸ் இயக்கத்தில் வண்ணம் மாற்றும் பணிக்காகவே வடிவமைக்கப் பட்டது. கருப்பு வெள்ளை படங்களை வண்ணத்தில் கொண்டு செல்வது மட்டுமின்றி, வண்ணப் படங்களையும் கருப்பு வெள்ளையில் மாற்றித் தருகிறது. போட்டோ எடிட் செய்வதற்கு நிறைய பாடங்களை எல்லாம் இதில் படிக்க வேண்டியதில்லை. இந்த சாப்ட்வேர் தொகுப்பில் “Timebrush” என்ற தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதனைப் பெற http://www.blackandwhitetocolor.com/html/blackmagic.html என்ற முகவரியில் உள்ள இணைய தளத் திற்குச் செல்லவும். Download BlackMagic என்ற லிங்க்கில் கிளிக் செய்து இதனை தரவிறக்கம் செய்திடலாம். இதன் இயக்க பைல் இறங்கியவுடன், இதனை இன்ஸ்டால் செய்திட ஒரு ஐகான் கிடைக்கும். blackmagic.exe என்ற இதன் பைலில் கிளிக் செய்தால், புரோகிராம் பதியப்படும். நீங்கள் விண்டோஸ் 7 பயன்படுத்துவதாக இருந்தால், இதில் ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில், Run as administrator என்ற இடத்தில் கிளிக் செய்திடவும். இன்ஸ்டால் செய்த பின்னர், புரோகிராமினை இயக்கவும். கிடைக்கும் மெனுவில், Load Image என்ற பட்டனில் கிளிக் செய்தால், வண்ணம் மாற்ற வேண்டிய படத்தை இமேஜ் எடிட்டரில் திறந்து வண்ணம் மாற்றும் வேலையைத் தொடங்கலாம். எந்த எந்த பகுதியில், என்ன வண்ணம் அமைக்க வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்க எளிதான மெனு தரப்படும். படத்திற்கான வண்ணம் மட்டுமின்றி, பின்புலத்தில் இருக்க வேண்டிய வண்ணத்தினையும் அமைக்கலாம். நீங்கள் இவற்றைத் தேர்ந்தெடுக்கையில், பிளாக் மேஜிக், என்ன மாதிரியான படத்தில் வண்ணங்கள் மாற்றப்படுகின்றன என்பதனை உணர்ந்து, உங்களுக்கு சில ஆலோசனைகளை வழங்கும். இறுதியாக அனைத்து வண்ணங்களும் உங்களுக்கு நிறைவாகத் தோன்றினால், அந்த படத்தினை புதிய பெயரில் சேவ் செய்துவிடலாம். இவை அனைத்தையும் மேற்கொள்ள ஒரு சில நிமிடங்களே ஆகின்றன என்பது இதன் சிறப்பு.

ஞாபக சக்தியை அதிகப்படுத்த…

சும்மா ஒரு ஸ்டைலுக்காக, வேலைப்பளு, மன உளைச்சல் மற்றும் காதல் தோல்வியை மறக்க போன்ற பல்வேறு காரணங்களினால் விளையாட்டாக புகைப்பழக்கம் தொடங்குகிறது. விளையாட்டு வினை ஆனது என்பது போல விளையாட்டாக தொடங்கும் இந்த புகைப்பழக்கம் ஒருவரது புத்திக்கூர்மையை குறைத்துவிடுகிறது, ரத்த அழுத்தத்தினை அதிகரிக்கிறது மற்றும் கண்புரை நோயை ஏற்படுத்துகிறது என்று குண்டைத் தூக்கிப்போடுகின்றன புகைப் பழக்கம் குறித்த ஆய்வுகள்.

புகைப்பழக்கத்தின் பாதிப்புகள் குறித்து இங்கிலாந்தின் நார்த்தம்பிரியா பல்கலைக்கழகத்தில் ஞாபக சக்தி குறித்த ஒரு செயல்முறை தேர்வு நடத்தப்பட்டது. இதில், சராசரியாக 2 1/2 வருடங்களுக்கு முன்பு புகைப்பழக்கத்தை கைவிட்டவர்கள், புகைப்பவர்களைவிட 25 சதவிகிதம் நன்றாகவும், புகைப்பழக்கமே இல்லாதவர்கள் 37 சதவிகிதம் நன்றாகவும் செயல்பட்டது தெரியவந்தது.

புகைப்பழக்கத்தை கைவிடுவது உடல் நலனுக்கு பல நன்மைகளை உண்டாக்கும் என்பது நாமனைவரும் அறிந்த செய்தி. ஆனால், புகைப்பழக்கத்தை கைவிடுவதால் அறிவு சார்ந்த செயல்திறனும் அதிகரிக்கிறது என்பது இந்த புதிய ஆய்வின் மூலம் நிரூபணமாகியுள்ளது என்கிறார் இந்த ஆய்வின் தலைமை ஆய்வாளர், முனைவர் டாம் ஹெபர்னான்!

இதற்கு முந்தைய ஆய்வுகளில் புகைப்பழக்கத்தை கைவிடுவதால் `பின்னோக்கிய ஞாபக சக்தி’ (அதாவது, ஒரு விஷயத்தை படித்து பின்னர் தேவைப்படும்போது அதை நினைவுகூரும் திறன்) மேம்படுகிறது என்பது தெரியவந்தது. ஆனால், இந்த புதிய ஆய்வின் நோக்கம் ஆய்வில் கலந்துகொண்டவர்களின் `தொலைநோக்கு ஞாபக சக்தி’யை (அதாவது, ஒரு குறிப்பிட்ட செயலை ஞாபகம் வைத்துக்கொண்டு எதிர்காலத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அதை செயல்படுத்தும் திறன்) கணக்கிடுவதே! உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட மாத்திரையை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எடுத்துக்கொள்ள தொலைநோக்கு ஞாபக சக்தி அவசியம்.

அதெல்லாம் சரிதான், புகைப்பழக்கம் எப்படி ஞாபக சக்தியை பாதிக்கிறது என்பது குறித்து எதுவும் தெரியவந்துள்ளதா?

புகைப்பழக்கம் எப்படி ஞாபக சக்தியை பாதிக்கிறது என்பது குறித்து திட்டவட்டமாக எதுவும் தற்போது தெரியவில்லையென்றாலும், நீண்டகால புகைப்பழக்கத்துக்கும் மூளையின் சில திசுக்கள் சிதைந்துபோவது அல்லது மூளையின் சில பாகங்களில் திசுத்திறன் இழப்பு ஏற்படுவதற்கும் தொடர்பு இருப்பதாக முந்தைய ஆய்வுகளில் கண்டறியப்பட்டது. மேலும், ஆய்வாளர் களின் யூகப்படி, புகைப்பழக்கமானது மூளையின் ப்ரீப்ரான்டல் கார்டெக்ஸ், ஹிப்போகேம்ப்பஸ் அல்லது தலாமஸ் ஆகிய பல பகுதிகளை சேதப்படுத்தக்கூடும் என்று தெரிகிறது. இவை அனைத்தும் `தொலை நோக்கு ஞாபக சக்தி’யுடன் தொடர்புடையவை என்பது குறிப்பிடத்தக்கது!

சிறிய அளவில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு முடிவுகளை, பல்லாயிரக்கணக்கான புகைப்பவர்களை நீண்டகாலம் சோதனை செய்வதன்மூலம் கிடைக்கும் முடிவுகளைக்கொண்டு மீண்டும் ஊர்ஜிதம் செய்ய வேண்டியது அவசியம் என்கிறார் மூத்த ஆய்வாளர் டாம் ஹெபர்னான்.

இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது? புகைப்பதால் கிக்கு மட்டும் ஏறவில்லை, நமக்குத் தெரியாமலேயே நமது தொலைநோக்கு ஞாபக சக்தியும் கொஞ்சம் கொஞ்சமாக குறைகிறது என்று தெரிகிறது. ஆக, இனி பொதுநல நோக்குள்ளவர்கள் `புகைக்காதே புகைக்காதே… உன் தொலைநோக்கு ஞாபக சக்தியை குறைக்காதே குறைக்காதே’ என்று கோஷம் போட்டுக்கொண்டு ஊர்வலம் போனால்கூட தப்பில்லை என்றே தோன்றுகிறது!

தாராளமாக தண்ணீர் குடிக்காவிட்டால் கல் தான்!

உடலில் உள்ள பாகங்களில், மூளை, இதயம் போன்ற உறுப்புகளுக்கு நிகரான முக்கியத்துவம் பெற்றது, சிறுநீரகம். ரத்தத்தை சுத்திகரித்து, கழிவுகளை வெளியேற்றும் இந்த உறுப்பின் பணி, அளவிடற்கரியது. பொதுவான காரணங்களால், உள்ளுறுப்புகள் பாதிக்கப்படுவது போல, சிறுநீரகமும் பாதிக்கப்படுகிறது. புகை பிடித்தல், உடற்பயிற்சி இன்மை, மதுப் பழக்கம், உடல் எடை, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் என, பல காரணங்களை அடுக்கலாம்.

சிறுநீரக கல்: சிறுநீரகத்தில் ஏற்படும் பிரச்னையில் முக்கியமானது, கல் உருவாகுதல். சிறுநீரில் உள்ள உப்புகள் ஒன்று திரண்டு, கற்களாக உருவெடுக்கின்றன. கால்சியம், மெக்னீசியம் ஆகியவற்றின் ஆக்சலேட், பாஸ்பேட் உப்புகளால், இவை உண்டாகின்றன. இது, மிகச் சிறு துகள் அளவில் துவங்கி, பிறந்த குழந்தையின் தலை அளவிற்குக் கூட வளரக் கூடும். பெரிய கற்கள் கூட, அறிகுறியை வெளிப்படுத்தாமல் இருக்கும். கற்களின் வெளிப்பரப்பு, முட்களைப் போல இருந்தால், அவை சிறுநீர் பாதையில் உராய்ந்து, சிறுநீரில் ரத்தம் வெளியாகலாம். இவை பரம்பரை காரணமாக, போதிய நீர் குடிக்காததால் உருவாகலாம். அசைவ உணவை தவிர்ப்பது, போதிய நீர் குடிப்பது, சிறுநீர் பாதை நோய் தொற்று மற்றும் அடைப்புக்கு தாமதமில்லாத சிகிச்சையால், கல் உருவாவதை தவிர்க்கலாம்.

அறிகுறிகள்: இதன் முக்கிய அறிகுறி, வயிற்று வலி. சிறுநீர் பாதையில் வலது, இடது பக்க கீழ் முதுகு பகுதியில் வலி வந்து, விரைகள் வரை பரவலாம். வாந்தி, நீர்க்கடுப்பு, சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுதல், சிறுநீரின் வேகம் தடைபடுதல், காய்ச்சல் ஏற்படலாம். பெண்களை விட ஆண்களுக்கு, சிறுநீரக கல் உருவாகும் வாய்ப்பு, மூன்று மடங்கு அதிகம். இந்நோயாளிகள் தக்காளி, நெல்லி, முந்திரி பருப்பு, வெள்ளரி, கறுப்பு திராட்சையை தவிர்க்கலாம். பால், 250 மி.லி.,க்கு மிகாமல் எடுக்கலாம். எலுமிச்சை ஜூஸ், இளநீர் நிறைய குடிக்கலாம். முள்ளங்கி, வாழைத்தண்டு, சிறுநீர் பெருக்கியாக செயல்படுவதால், பெரும் பயன் உள்ளதாகக் கருத முடியாது. பார்லி, கொள்ளு, பாகற்காய், காரட் சேர்த்துக் கொள்ளலாம். ஒருவரின் சராசரி சிறுநீர் அளவு, ஒன்று முதல் ஒன்றரை லிட்டர் வரை இருக்கலாம். கல் உருவாகும் பிரிவினர், 2 லிட்டர் சிறுநீர் வெளியேறும் அளவு, 3 முதல் 4 லிட்டர், தண்ணீர் குடிக்க வேண்டும். 4 மி.மீ.,க்கு கீழ் உள்ள கற்கள், பெரும்பாலும் தானாகவே வெளியேறி விடுகின்றன. 6 மி.மீ.,யை விட பெரியவை, தானாக வெளியேறுவதில்லை. இதற்கு தாராளமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

சிறுநீர் சிக்கல்: புராஸ்டேட் சுரப்பி, ஆண்களுக்கே உரியது; இனப் பெருக்கத்துடன் தொடர்புடையது. இது, சிறுநீர் பாதையின் அடியில், சிறுநீர்த் தாரையின் முதற்பகுதியை சூழ்ந்துள்ளது. வயது முதிர்ந்தவர்களுக்கு மிகவும் வளர்ச்சி அடைந்த நிலையில், சிறுநீர்த் தாரையை அமுக்குகிறது. இதனால், சிறுநீர் பாதை அடைபட்டு, சிறுநீர் கழிக்க முடியாமல் தேங்கும். அந்நிலையில், உடனடியாக அடைப்பை நீக்க வேண்டும்.

வயதானவர்களுக்கு சிறுநீர் சிக்கல் ஏற்படும்போது, ஆசன வாய்க்குள் விரல் விட்டு பார்த்தால், புராஸ்டேட் சுரப்பியின் இருபக்க மடல்கள் துருத்திக் கொண்டிருப்பதை உணரலாம். அடிக்கடி சிறுநீர் கழித்தல், முயற்சிக்கும்போது உடனடியாக சிறுநீர் வெளி வராதது, சிறுநீர் வெளி வருவதை கட்டுப்படுத்த முடியாதது, சிறுநீர் நின்று நின்று வருவது, நாட்கள் செல்லச் செல்ல, கிருமி தாக்கம் ஏற்பட்டு, சிறுநீர் தொற்றின் அறிகுறிகளாக, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், காய்ச்சல், அடிவயிற்றில் வலி தோன்றுவது என, பாதிப்பை ஏற்படுத்தும். புராஸ்டேட் எந்தளவு வளர்ந்துள்ளது, மலக்குடலின் சீதச்சவ்வை பாதித்துள்ளதா, புற்றுநோய் வளர்ச்சியா என அறிவது அவசியம். 50 வயதானவர்கள், ஆண்டுக்கு ஒருமுறை பரிசோதனை செய்ய வேண்டும். அறுவை சிகிச்சை தேவைப்படுவோருக்கு, “எண்டோஸ்கோபி’ சிகிச்சை செய்யப்படுகிறது. முன்னதாக, வழக்கமான ரத்தம், சிறுநீர் பரிசோதனைகளுடன், ரத்தத்தில் யூரியா, கிரியாட்டினின், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் தேவைப்படும். மேலும், சிஸ்டோஸ்கோபி, பை உள்நோக்கல் சோதனையும் செய்யப்படும். இதன் மூலம், பாதிப்புக்கான வேறு காரணங்களையும் அறியலாம்.

டாக்டர் டி.ஆர்.முரளி,
சிறுநீரியல் துறை நிபுணர்,
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை.

உடலுக்கு பலம் தரும் கைக்குத்தல் அரிசி!

பண்டைய காலத்தில் நம் முன்னோர்கள் கைக்குத்தல் அரிசியையே உணவிற்காக பயன்படுத்திவந்தனர். கைக்குத்தல் அரிசி எனப்படும் பாலீஸ் செய்யப்படாத அரிசியில் நார்ச்சத்தும் எண்ணற்ற வைட்டமின் சத்துக்களும், புரதச்சத்தும் அடங்கியுள்ளன. ஆனால் இன்றைக்கு அரிசியை பலமுறை பாலீஸ் செய்து எந்த சத்தும் இல்லாத வெறும் மாவுப்பொருளை மட்டுமே கொண்ட அரிசியை பயன்படுத்துகின்றனர். இதனால் உடலானது நோய்களின் கூடாரமாகிறது. பாலீஸ் செய்யப்படாத அரிசியை உணவாக உட்கொண்டால் நீரிழிவு, இதயநோய் உள்ளிட்ட நோய்களை தவிர்க்கலாம் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள்.

வைட்டமின் சத்துக்கள்

உலகில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் அரிசியையே உணவாகக் கொண்டுள்ளனர். இந்தியாவில் குறிப்பாக தென்னிந்திய மாநில மக்களின் மிக முக்கிய உணவுப்பொருள் அரிசி. இது ஒரு மாவுப் பொருளாகும். பாலீஸ் செய்யப்படாத அரிசியில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி12, வைட்டமின் கே, வைட்டமின் இ, மாவுச்சத்து, புரதச் சத்துக்கள் நிரம்பியுள்ளன.

முற்காலத்தில் உரலில் நெல்லை போட்டு உலக்கையால் அந்த நெல்லினை இடித்து அதன் உமியைப் பிரித்து சுத்தம் செய்து அந்த அரிசியை சமைத்து சாப்பிட்டனர். இந்த வகையில் எடுக்கப்படும் அரிசியில் தவிடு நீக்கப்படுவது இல்லை. இவ்வாறு அரிசியை தவிட்டுடன் சேர்த்து சாப்பிடும்போது உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும். அதுபோல் அரிசியில் அடங்கியுள்ள மாவுப் பொருளை எளிதில் ஜீரணிக்கச் செய்யும்.

நீரிழிவு வராது

தவிடு நீக்காத அரிசியை சாப்பிடுவதால் அதன் பலன்கள் அனைத்தும் சரிசமமாக உடலுக்கு சேர்கிறது. இந்த அரிசியை உண்பதால் உணவு எளிதில் சீரணமடையும். மலச்சிக்கலைப் போக்கும், சிறுநீரை நன்கு பிரிக்கும். இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் நீரிழிவு நோயின் தாக்கம் இருக்காது. இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும். பித்த அதிகரிப்பை குறைக்கும். உடலில் தேங்கியுள்ள கொழுப்பை நீக்கும். சருமத்தைப் பாதுகாக்கும். வாத பித்த, கபத்தை அதனதன் நிலையில் வைத்திருக்கும்

இந்த தவிடு நீக்காத அரிசி இந்தியாவில் கேரளாவிலும், இலங்கையிலும் மட்டுமே அதிகம் பயன்படுத்துகின்றனர். தமிழ்நாட்டில் இந்த அரிசியை பயன்படுத்துவது தற்போது வெகுவாக குறைந்துவிட்டது.

சத்து நீக்கப்பட்ட அரிசி

தமிழ்நாட்டில் அனைவருமே கண்ணைப் பறிக்கும் வெண்மையான அரிசியையே விரும்புகிறோம். இரண்டு மூன்று முறை பாலீஷ் செய்யப்பட்ட இவ்வகையான அரிசியில் உள்ள எல்லா வைட்டமின் சத்துக்களும் வெளியேற்றப்பட்டு விடுகிறது. இதில் நாவிற்கு சுவை மட்டுமே உண்டு. ஆனால் மாவுச்சத்தைத் தவிர வேறெந்த சத்துக்களும் கிடைப்பதில்லை.

நோய்கள் அதிகரிப்பு

இந்த அரிசியை சமைத்து உண்பதால் மாவுச் சத்து அதிகம் உடலில் சேருகிறது. ஆரம்பத்தில் அந்த மாவுச்சத்தைக் கட்டுப்படுத்த உடலில் இன்சுலின் சுரப்பு அதிகமாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இன்சுலின் சுரப்பு குறைவதால் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. இதனால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது.

கைக்குத்தல் அரிசி தற்போது அதிகம் கிடைப்பதில்லை. உமி நீக்கி பாலீஷ் செய்யாத அரிசியை வாங்கி சமைத்து சாப்பிடுங்கள். நாவிற்கு ருசி, தொண்டைவரை, ஆனால் பலன் ஒன்றுமில்லை. ஆரோக்கிய உடலுக்கு கைக்குத்தல் அரிசி சிறந்தது. பாலீஷ் செய்த வெள்ளை அரிசி சத்தற்றது. எனவே அவற்றை சாப்பிடுவதை குறைத்து தவிடு நீக்காத அரிசியை வாங்கி உண்பதே ஆரோக்கியத்திற்கு ஏற்றது என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள்

அரைமணி நேரத்தில், 337 சிக்கன் லெக் பீஸ்!

அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில், ஆண்டுதோறும் சிக்கன் சாப்பிடும் போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டியில், யார் அதிகமான சிக்கன் லெக் பீஸ் சாப்பிடுகின்றனரோ, அவர்கள் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டு, பத்து லட்சம் ரூபாய் பரிசு தரப்படும். இந்தாண்டுக்கான போட்டி, சமீபத்தில் நடந்தது. போட்டியை காண்பதற்காக, 20 ஆயிரம் பேர் திரண்டிருந்தனர்.
மசாலா தடவப்பட்டு, நன்றாக பொரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான லெக் பீஸ்கள், தயாராக இருந்தன. மணி ஒலித்ததும், போட்டி துவங்கியது. இறுதியில் ஜப்பானைச் சேர்ந்த டகெரு கொபாயஷி என்ற இளைஞர், அரை மணி நேரத்தில், 337 லெக் பீஸ்களை, அசால்டாக உள்ளே தள்ளி, பரிசைத் தட்டிச் சென்றார். இதற்கு முன், ஜெர்மனியைச் சேர்ந்த ஒருவர், 255 லெக் பீஸ்களை சாப்பிட்டு, சாதனை படைத்திருந்தார். தற்போது, அந்த சாதனையை, ஜப்பான் நாட்டு சாப்பாட்டு ராமன் தகர்த்து விட்டார்.

ரயில் கூரைகளில் பயணித்தால் இரும்பு குண்டு தாக்குதல்!

இந்தோனேசியாவின் ஜகர்த்தாவில் மக்கள் தொகை அதிகம். அதற்கு தகுந்தாற்போல், போதிய போக்குவரத்து வசதி செய்யப்படவில்லை. பணியை முடித்து விட்டு, வீடுகளுக்கு திரும்பும் மக்கள், ரயில் போக்குவரத்தை தான் நம்பியுள்ளனர். “பிசி’யான நேரங்களில் புறப்படும் ரயில்களில், கூட்டம் மிகவும் அதிகமாக இருக்கும். ரயில் பெட்டிகள் நிரம்பியதும், ரயிலின் கூரை மீதும், பொதுமக்கள் ஏறி அமர்ந்து விடுவர். சில நேரங்களில், ரயில் பெட்டிகளுக்குள் இருப்பதை விட, கூரை மீது அமர்ந்து பயணிப்போரின் எண்ணிக்கை தான் அதிகமாக இருக்கும்.
இதனால், பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், ரயில் கூரை பயணத்தை தவிர்க்க, போலீசார் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஆனாலும், ரயில் கூரை பயணத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
இதையடுத்து, தற்போது மிகவும் அபாயகரமான ஒரு விபரீத முடிவை அதிகாரிகள் எடுத்துள்ளனர். இதன்படி, ரயில் பாதையில் போதிய இடைவெளியில், கம்பிகளால் ஆன வளைவுகளை அமைத்து, அவற்றில் சங்கிலியால் கட்டப்பட்ட பெரிய அளவிலான இரும்புக் குண்டுகளை தொங்க விட்டுள்ளனர். ரயில் கூரை மீது அமர்ந்து பயணிப்போரின் தலைகளில், இந்த இரும்புக் குண்டுகள் தாக்கினால், <உயிருக்கே ஆபத்து ஏற்படும். ஆனால், இதைப் பற்றி எல்லாம் கண்டு கொள்ளாத ரயில்வே அதிகாரிகள், “ரயில் கூரை பயணத்தை கட்டுப்படுத்துவதற்கு எவ்வளவு கடுமையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தயாராக இருக்கிறோம்…’ என, அலட்சியமாக பதில் அளிக்கின்றனர். விஷயம், விபரீதத்தில் முடியாமல் இருந்தால் சரி.

கூடுதல் கடிகாரங்கள் அமைக்க

விண்டோஸ் 2000 மற்றும் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டங்களில் இல்லாத சிறப்புகளில் ஒன்று, விண்டோஸ் 7 அல்லது விஸ்டா சிஸ்டத்தில் அமைக்கக் கூடிய கூடுதல் கடிகாரங்கள் ஆகும். வழக்கமாக, ஒரு கடிகாரம் மட்டுமே டாஸ்க் பாரில் காட்டப்படும். உலகம் சுருங்கி, தகவல் தொடர்புகள் அதிகரித்துவரும் இந்நாளில் நாம் மற்ற நாடுகளில் அப்போது உள்ள நேரத்தினையும் தெரிந்து கொள்ள வேண்டிய சூழ்நிலைகளைச் சந்திக்கிறோம். இதற்காகவே, அண்மையில் வந்துள்ள விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட, நான்கு வரையிலான, கடிகாரங்களை அமைக்கக் கூடிய வசதி தரப்பட்டுள்ளது. இந்த வசதியினை எப்படி அமைத்துப் பயன்படுத்துவது எனப் பார்க்கலாம்.
1.முதலில் டாஸ்க் பாரில் நேரம் காட்டப்படும் Time என்ற இடத்தில் கிளிக் செய்து பின்னர் Change Time and date Settings. என்பதில் கிளிக் செய்திடவும்.
2. அல்லது நேரடியாக Time என்பதில் ரைட் கிளிக் செய்து, Adjust Date/ Time என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கலாம்.
3. மாறாக, கண்ட்ரோல் பேனல் திறந்து Date and Time என்ற ஐகானில் கிளிக் செய்திடவும்.
4. இப்போது திறக்கப்படும் விண்டோவில் Additional Clocks என்ற ஆப்ஷன் மேல் பிரிவில் கிடைக்கும்.
5. இங்கு கிடைக்கும் add a clock என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்தால், மற்ற டேட்டா கேட்கும்.
6. இங்கு நீங்கள் அமைக்க விரும்பும் கடிகாரத்தின் Time Zone ஐத் தேர்ந்தெடுக்க வேண்டியதிருக்கும்.
7. அடுத்து இறுதியாக, நீங்கள் அமைக்க விரும்பும் கடிகாரத்திற்கான பெயரை அதிக பட்சம் 15 கேரக்டர்களில் தரலாம்.
இவை எல்லாம் முடிந்த பின்னர், Finish என்பதில் கிளிக் செய்திடவும். அவ்வளவு தான்!. கடிகாரம் டாஸ்க் பாரில் காட்டப்படும்.

குழந்தைகளுக்கான உணவு ஊட்டறீங்களா? பொறுமை தேவை….

குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவது என்பது ஒரு கலை. ஆனால் அதையே மிகவும் கஷ்டமான காரியமாக நினைத்து குழந்தைகளை உண்ணவைக்க பாகீரத பிரயத்தனம் செய்கின்றனர் சில பெற்றோர்கள். ஏனெனில் கொடுக்கும் உணவை, வயிறு நிறையும் வரையில் சமர்த்தாக சாப்பிடும் குழந்தைகள் மிகக்குறைவு. சில குழந்தைகள் உணவை விழுங்காமல் அப்படியே வெளியே தள்ளிவிடுவார்கள். குழந்தைகளின் உண்ணும் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்ய அவர்களுக்கு ஏற்ற உணவுகளை தயாரித்து அளிக்கவேண்டும் என்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள். அவர்கள் தரும் ஆலோசனைகள் உங்களுக்காக.

ருசியான உணவு

குழந்தைகளுக்கு மூன்று மணிநேரத்திற்கு ஒருமுறை சிறிதளவு ஆகாரம் கொடுப்பது அவசியம். அதில் மூன்று முறை சாதம், காய்கறி உள்ளிட்ட உணவுகளும், இருமுறை சிநாக்ஸ்வகையாகவும், பின்னர் ஜூஸ், பால் போன்றவகையாகவும் இருப்பது அவசியம். தயிர் சாதம், காரட் மசியல், பழக்கூழ் என குழந்தைகளுக்கு பிடித்தமாதிரியான உணவுகளை தயாரித்து அளிப்பது அவர்களின் உண்ணும் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்யும்.

தானியங்கள், பயிறு, பருப்பு வகைகள், பழங்கள், காய்கறிகள் என குழந்தைகளின் உணவுகளை திட்டமிட்டு தயாரித்து அளிக்கவேண்டும். புரதச்சத்து நிறைந்த மாமிச உணவுகள், சீஸ், பீன்ஸ் போன்றவைகளைக் கொண்டு தயாரித்த உணவுகளை அளிக்கவேண்டும். பிரட், ஆப்பிள், சூப், போன்றவைகளை இரவு நேரங்களில் கலர்புல்லாக தயாரித்து அளித்தால் குழந்தைகள் ஆர்வமுடன் சாப்பிடுவார்கள்.

சரியான அளவு

குழந்தைகளின் வாய்க்குள் எந்த அளவிற்கு உணவு பிடிக்குமோ அந்த அளவிற்கு மட்டுமே உணவுப்பொருளை வைக்கவேண்டும். அதிகமாக சாப்பிடவேண்டும் என்பதற்காக எக்கச்சக்க உணவுகளை திணிப்பதால் தொண்டைக்குழியில் சிக்கி குழந்தைகள் சிரமப்படும். அதுவே உணவின் மீதான வெறுப்பை ஏற்படுத்திவிடும்.

ஊட்டச்சத்து உணவுகள்

புதிய வகை உணவுகளை அறிமுகப்படுத்தும் போது குறைந்த அளவு கொடுத்து குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுகிறதா? என்பதை கவனித்து பின்னர் உணவை அளிக்கவேண்டும். குழந்தைகளுக்கு வறுத்த, பொரித்த உணவுகளை கொடுப்பதை விட நார்ச்சத்துள்ள உணவுகளை அறிமுகப்படுத்தினால் அவர்களுக்கு வயிறு தொடர்பான நோய்கள் ஏற்படுவது தவிர்க்கப்படும்.

ஜங்க் ஃபுட் வகைகளைகளை அதிகம் தருவதற்கு பதிலாக மாலை நேரங்களில் பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள் உணவுகளை பழக்கப்படுத்துவது அவர்களுக்கு ஊட்டச்சத்து கிடைக்க வழி ஏற்படும்.

பொறுமை அவசியம்

குழந்தைகள் இயல்பிலேயே வாயில் படும் பொருட்களை வெளியில் தள்ள முயற்சி செய்யும். நாளடைவில் அந்த பழக்கம் மாறிய பின்னர் உணவை விழுங்கத் தொடங்கும். அதனால், நாம்தான் பொறுமையாக உணவை அவர்களுக்கு ஊட்டிவிட வேண்டும்.

குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்டிக்கொண்டே மெதுவாக உணவு ஊட்டவேண்டும். குழந்தையில் நாவில் உள்ள சுவை நரம்புகளுக்கு ஏற்ப உணவை ருசியாக தயாரித்து அளித்தால் குழந்தைகள் உணவு உட்கொள்வார்கள்.

ஸ்பூன் எச்சரிக்கை

இன்னும் சில குழந்தைகளுக்கு முதன் முறையாக ஸ்பூன் கொண்டு உணவை கொடுக்கும் போது பிடிக்காமல் போகலாம். உணவை சாப்பிட மறுத்தால், நமது ஆள்காட்டி விரலை நன்கு சுத்தமாக கழுகி அதில் உணவை சிறிய அளவில் தடவி குழந்தைக்கு கொடுக்கலாம். உணவு சுவை பழகிய பின்னர் ஸ்பூன் கொண்டு கொடுக்கலாம்.

குழந்தைகளுக்கு ஸ்பூன்கள் கொண்டு உணவு ஊட்டும் போது மிகவும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். சிறு குழந்தைகள் மிக வேகமாக கையால் தட்டிவிடும். அப்போது குழந்தையின் வாயில் அல்லது முகத்தில் ஸ்பூன் பட்டு காயம் ஏற்பட்டுவிட வாய்ப்பு உள்ளது.

அதனால், எக்காரணம் கொண்டும் கூர்மையான, வெட்டும்படி உள்ள சில்வர் ஸ்பூன்களை உபயோகிக்கக் கூடாது. குழந்தைகளுக்கு என்றே உள்ள பிரத்தியோக குட்டி ப்ளாஸ்டிக் ஸ்பூன்களை பயன்படுத்துவதுதான் பாதுகாப்பானது.

முன் உதாரணம்

நம்முடைய உணவுப் பழக்கமே குழந்தைகளை தொற்றிக்கொள்ளும். ஊட்டச்சத்து எதுவும் இல்லாத உணவுகளை பெற்றோர்களே ருசிக்காக வாங்கி உண்ணும் போது அந்த பழக்கம் குழந்தைகளை தொற்றிக்கொள்கிறது. எனவே வீடுகளில் நாம் சத்தான உணவுகளை தயாரித்து உண்பதனால் அதனை குழந்தைகளுக்கு வழங்க முடியும். அவர்களுக்கும் சரிவிகித சத்துணவு கிடைக்கும். எனவே குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு நம்முடைய உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்வது நலம் என்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள்.