Daily Archives: பிப்ரவரி 1st, 2012

அகில்

னித இனம் தழைத்தோங்கவும், நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழவும், சித்தர்கள் தங்களின் ஞான சிருஷ்டியால் ஆராய்ந்து கண்டறிந்து சொன்ன சித்த மருத்துவம் மிகச்சிறந்த மருத்துவமாகும். எத்தகைய பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாத மருத்துவமாகும்.

இயற்கையிலேயே மருத்துவ குணம் கொண்ட புல், பூண்டு, செடி, கொடி, மரம் போன்றவற்றைப் பற்றி சித்தர்கள் கூறியுள்ளனர். அவற்றைப் பற்றி ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம். இந்த இதழில் அகில் மரம் பற்றித் தெரிந்துகொள்வோம்.

அகில் பெருமர வகுப்பைச் சார்ந்தது. இமய மலையின் வடகிழக்கு மாநிலங்களில் அதிகம் காணப்படுகிறது. தென்னிந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரக் காடுகளில் தானாக வளருகிறது. இதுபோல் நேபாளம், மியான்மர், தாய்லாந்து, மலேசியா நாடுகளின் காடுகளில் காணப்படுகிறது.

இதற்கு அசுரு, அகருக்கட்டை, அகிற்கட்டை என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது.

Tamil – Agil
English – Aloewood
Sanskrit – Agaru
Telugu – Krishnagaru
Malayalam – Kayagahru
Hindi – Agar
Botanical name – Aquilaria agallocha

அகில் மரத்தின் கட்டையே மருந்தாகப் பயன்படுகிறது.

தளர்ந்த விருத்தருக்காந் தக்க மணத்தால்
உளைந்த சுரமனைத்து மோடும்- வளர்ந்திகழு
மானே யகிற்புகைக்கு வாந்தியரோ சுகம்போத்
தானே தளர்ச்சியறுஞ் சாற்று
-அகத்தியர் குணவாகடம்

பொருள் – அகில் கட்டை வயோதிகர்களுடைய தளர்ந்த தேகத்தையும் இறுகச் செய்யும். இதன் வாசனையால் சிற்சில சுரம் நீங்கும். புகையால் வாந்தியும், பசியின்மையும், அழற்சியும் நீங்கும். அகில் கட்டை இந்திய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேத மருத்துவ முறைகளில் அதிகம் சேர்க்கப்படுகிறது.

அகில் கட்டை தைலம்

அகில் கட்டையை சிறிது சிறிதாக நறுக்கி நீரில் போட்டு வற்றக் காய்ச்சி அதனுடன் நல்லெண்ணெய், பசுவின் பால் வகைக்கு 750 மி.லி. எடுத்து ஒன்றாக்கி வைத்துக்கொண்டு அதிமதுரம், தான்றிக்காய் தோடு வகைக்கு 35 கிராம் எடுத்து பசுவின் பால் விட்டு அரைத்து சேர்த்து லேசாக கொதிக்க வைத்து வடித்து எடுத்துக் கொள்ளலாம்.

இந்த தைலத்தை தலைக்கு தேய்த்து வந்தால் உடல் சூடு தணியும். மூக்கடைப்பு, தலையில் நீரேற்றம், ஒற்றைத் தலைவலி போன்றவை நீங்கும்.

· அடிக்கடி சளி பிடிப்பதைத் தடுக்கும்.

· தலைமுடி நன்கு வளரும். பொடுகு, முடி உதிர்தல், புழுவெட்டு நீங்கும்.

· அகில் எண்ணெயை சருமம் முழுவதும் பூசிக் கொண்டால் சரும நோய்கள் உண்டாகாது.

· அடிபட்ட வீக்கம், இரத்தக்கட்டு போன்றவற்றிற்கு அகில் எண்ணெயை பூசினால் வீக்கம் குறையும். வலி நீங்கும்.

· சரும எரிச்சல், புண், அரிப்பு, சொறி, சிரங்கு போன்றவைற்றைப் போக்கும்.

· இதன் நறுமணத்தை நுகர்ந்தால் வாந்தி, மயக்கம் நீங்கும்.

· கை, கால் மூட்டுகளில் வலி, இடுப்பு வலி, கழுத்து வலி போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணம் அளிக்கும்.

· அகில் கட்டையை நீர்விட்டு மை போல் நன்கு அரைத்து உடல் எங்கும் பூசி வந்தால் தளர்ந்த தசைகள் இறுகி வலுப்பெறும். உடல் பொலிவுபெறும்.

· அகில் கட்டையை நெருப்பில் காட்டி வரும் புகையை நுகர்ந்தால் சுரக்காய்ச்சல் நீங்கும். வாந்தி சுவையின்மையைப் போக்கும்.

· இதன் நறுமணம் மனதிற்கு நல்ல அமைதியையும் சாந்தத்தையும் கொடுக்கும்.

இந்திய இணைய சமையல் தளம்

இணையத்தில் என்னதான் இல்லை! என்று பெருமையுடன் பேசு பவர்களுக்கு உரம் ஊட்ட அண்மையில் சுவையான தளம் ஒன்றினை நம் வாசகர் ஒருவரின் துணை யுடன் காண நேர்ந்தது. அனைத்து வகை உணவினைத் தயாரிக்க உதவிடும் அந்த தளத்தின் முகவரி http://www.recipesindian. com/. சைவ, அசைவ உணவு வகைகள் என அனைத்து வகைகளுக்கும் இதில் உணவினைத் தயார் செய்திடும் குறிப்புகள் தரப்பட்டுள்ளன. இதன் வகைகளைப் படித்தாலே நாக்கில் எச்சில் ஊறுகிறது. ரொட்டி, தின்பண்டங்கள், அரிசி உணவுப் பண்டங்கள், ஊறுகாய்கள், சட்னி, ஸ்வீட், சூப், சாலட், பசி எடுக்க வைக்கும் சூப், குடிக்க பானங்கள் எனப் பல பிரிவுகள் இந்த தளத்தில் அவற்றிற்கான லிங்க்குகளுடன் காத்திருக்கின்றன.
தென்னிந்திய உணவு பண்டங்களுக்கென உள்ள தளத்தில், தமிழ்நாடு மட்டுமின்றி அனைத்து மாநிலங்களின் உணவு வகைகளைத் தயாரிப்பதற்கான பட்டியல் தரப்பட்டு செய்முறை விளக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொண்டாடப்படும் விழாக்களில் தயாரிக்க தனியான உணவுப் பண்டங்கள் கொண்ட தளம் ஒன்றும் தரப்பட்டுள்ளது. தீபாவளி, ஹோலி, கணேஷ் சதுர்த்தி என இது நீள்கிறது.
நான் டயட்டில் இருக்கிறேன். எனக்கு இது சரியாக வராதே என்று கூறுபவர்களுக்கு எனத் தனியே ஒரு பக்கம் உள்ளது. குறைந்த கலோரி உள்ள உணவுப் பண்டங்களை எப்படி, எந்த வகை தானியம், காய்கறி கொண்டு தயாரிப்பது எனவும் ஒரு பக்கம் உள்ளது. மைக்ரோ வேவ் அடுப்புதாங்க இன்றைக்கு நடைமுறை, இந்த ரெசிப்பியெல்லாம் சரியாக வருமா என்ற கேள்வி கேட்பவர்களுக்குத் தனியே மைக்ரோவேவ் அடுப்பில் உணவுப் பண்டங்களைத் தயாரிப்பது குறித்தான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. இதிலும் சைவம், அசைவம் என பிரிவுகள் உள்ளன.
தங்கள் மகள்களைத் திருமணம் முடித்துக் கொடுக்கும் தென் மாவட்டங்களில் உள்ளவர்கள், முன்பு விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மகளிர் அமைப்புகள் வெளியிட்டுள்ள சமையல் நூல்களை வாங்கி, சீதனத்தோடு கொடுத்து அனுப்புவது வழக்கம். இப்போது இந்த தளக் குறிப்புகளை டவுண்லோட் செய்து “சிடி’யாகத் தரத் தொடங்கி உள்ளதாக, இந்த குறிப்பு குறித்து கோடி காட்டிய வாசகி எழுதி உள்ளார். அந்த வாசகிக்கு நன்றி. உங்கள் மகள் மணமுடித்துப் போனாலும், வேலை நிமித்தம் வெளிநாடு சென்றாலும், சமையலுக்கு அவர்களுக்கு உதவ இந்த தளம் நிச்சயம் உதவிடும் என்பது உறுதி. ஒருமுறை சென்று பார்த்தால், தினமும் உங்கள் சமையலை இதன் அடிப்படையில் தான் முடிவு செய்வீர்கள்.

கருப்பட்டி ஆப்பம்!

தேவையான பொருட்கள்:
பச்சரிசி – 200 கிராம்
புழுங்கல் அரிசி – 200 கிராம்
உளுந்து – 50 கிராம்
வெந்தயம் – 1தேக்கரண்டி
தேங்காய் – 1 மூடி
கருப்பட்டி – 400 கிராம்
ஆப்ப சோடா – ஒரு சிட்டிகை
உப்பு -தேவையான அளவு

செய்முறை: பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்தெடுத்த மாவுடன் தேங்காய் துருவல், உப்பு சேர்த்துக் கலக்குங்கள். அதோடு கருப் பட்டியைப் பாகு காய்ச்சி ஊற்றவும். கலக்கிய மாவை கரண்டியில் எடுத்து, தோசைக் கல்லில் வார்த்தெடுங்கள். சுவை மிக்க, புதுமையான கருப்பட்டி ஆப்பம் ரெடி. தொட்டுக் கொள்ள தேங்காய் பால் போதும்.

அன்பா இருங்க, மன அழுத்தம் போகும்!

மன அழுத்தம், டென்சன் என்ற வார்த்தைகள் இன்றைக்கு அதிகம் பயன்படுத்தப்படும் வார்த்தைகளாகி வருகிறது. இதற்கு காரணம் மதிப்பெண்களுக்கா மாணவர்களுக்கு கொடுக்கப்படும் அழுத்தம், வாழ்க்கைப் பற்றிய பயமும் இள வயது பிள்ளைகளின் மன அழுத்தத்திற்கு காரணமாகிறது. இதனால் எதிர்மறை எண்ணங்களும், கவலை, பயம் போன்றவையும் ஏற்படுகின்றன. எனவே மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடமும், இளம் வயதினரிடமும் அன்பாக பழகினால் அவர்களை மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கலாம் என்று உளவியல் வல்லுநர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

அதிக சந்தோசம் அதிக கவலை

பெரும்பாலான குழந்தைகள் அதிக சந்தோசம், அதிக கவலையினால் பீடிக்கப்படுகின்றனர். இதற்கு மேனிக் டிப்ரசன் என்று மருத்துவ உலகினர் பெயரிட்டுள்ளனர். இதனால் குழந்தைகளின் மூட் எந்த நேரத்தில் எப்படி மாறும் என்று கண்டுபிடிக்க முடியாததாகிவிடுகிறது. நார்மல் போல தெரிந்தாலும், ஒருசில சமயங்களில் அதீத மகிழ்ச்சியுடன் உற்சாகமாக திரிகின்றனர். சில சமயங்களில் அதீத கவலையுடன் சோகத்தில் மூழ்கி

விடுகின்றனர். மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நண்பர்களுடன் உரையாடுவதை கூட விரும்புவதில்லை.தனிமையில் அமர்ந்து எதையாவது சிந்தித்த ண்ணம் இருக்கின்றனர். இதனால் பள்ளிகளில் கவனிக்கும் திறன் குறைகிறது. எனவே குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும் இந்த மன அழுத்தத்தை களைவது அவசியம் என்று தெரிவிக்கின்றனர் உளவியல் வல்லுநர்கள்.

எளிமையான எதிர்பார்ப்பு

கவுன்சிலிங், உளவியல் ரீதியான சிகிச்சை போன்றவற்றையும் அளிக்கலாம். அதேசமயம் இள வயதினருக்கு குரூப் சைக்கோ தெரபி என்னும் சிகிச்சை முறையினை கையாண்டு அவர்களை மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வாழ்க்கையை எளிமையான எதிர்பார்ப்புகளுடன் நடத்த பழக்க வேண்டும். சின்னச் சின்ன சந்தோஷங்களையும் கொண்டாடுவது போன்ற பழக்கங்களை சிறு வயது முதல் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் உளவியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

சத்தான உணவு அவசியம்

குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவுகளில் இருந்து உடலுக்கு போதுமான சத்து கிடைக்கிறதா, உழைப்புக்கு ஏற்ற உணவு கொடுக்கப்படுகிறதா என்பதை உணவியல் வல்லுநர்களிடம் ஆலோசகரிடம் உணவு முறையை அறிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் தவறான உணவு பழக்கம் வாழ்க்கை முறை இரண்டையும் சரி செய்வதன் மூலம் டென்ஷனை விரட்ட முடியும். இதே போல் பாரம்பரிய உணவுகளை விட்டுவிட்டு உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் மேற்கத்திய உணவுகள் மீதான ஆர்வத்தை குறைப்பது மிகவும் அவசியம் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள்.

குழந்தைகளுக்கும் துரித உணவு மற்றும் உடல்நலத்துக்கு ஒவ்வாத புதிய புதிய உணவுகளை சாப்பிடும் பழக்கத்தை நாமே வளர்க்காமல், அவர்களுக்கு பிடித்த ஆரோக்கியமான உணவுகளை அவர்களுடன் சேர்ந்து வீட்டிலேயே சமைத்து சாப்பிடலாம். இதன் மூலம் சத்தான உணவுப் பழக்கம் ஏற்படுவதுடன் தேவையற்ற உடல் பிரச்னைகளை தடுக்க முடியும். அஜீரணம், உடல் எடை அதிகரிப்பு, குடல் மற்றும் வயிற்றுப் புண் ஏற்படுதல், போன்றவற்றை தடுக்கலாம்.

நட்பான சூழல் அவசியம்

வயதுக்கு ஏற்ற உணவுடன் பள்ளிக் குழந்தைகள் ஏதாவது ஒரு விளையாட்டில் பயிற்சி செய்வதன் மூலம் உடல் வலிமை பெறும். உடல் எடை அதிகரிக்காது. டென்ஷனான மனநிலை மாறும். டீன் ஏஜ் பருவத்தில் உடல் மற்றும் மனதில் ஏற்படும் குழப்பங்களின் காரணமாக டென்ஷன் வர வாய்ப்புள்ளது. எனவே இளம் வயதிலே வாக்கிங் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்தலாம். மேலும் டீன் ஏஜ் குழந்தைகள் தங்களது பிரச்னைகளை மனம் விட்டு பேச வீட்டில் பெற்றோர் நட்பான சூழலை ஏற்படுத்தி தர வேண்டியதும் முக்கியம்.

நோய்கள் தரும் மன அழுத்தம்

குழந்தைகளின் உடலில் என்ன நோய் உள்ளது என்பதை கண்டறிய வேண்டும். வயதுக்கு ஏற்ப குழந்தைகளுக்கு சத்துக் குறைபாடு, ரத்தத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவு பிரச்னைகள் இருக்க வாய்ப்புள்ளது. இவற்றை மருத்துவரின் ஆலோசனைப்படி கண்டறிந்து சிகிச்சை எடுப்பதன் மூலம் நோய்களால் உண்டாகும் தேவையற்ற டென்ஷனை தடுக்கலாம். அவற்றை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் அதுவே மன அழுத்தமாக மாறிவிடும். இதனால் உடலின் எதிர்ப்பு சக்தி குறைந்து மற்ற நோய்களின் தீவிரத்தை அதிகரிக்கும். தலைவலி, காய்ச்சல், ஜலதோஷம் உள்ளிட்ட நோய்கள் உடலை அடிக்கடி தாக்கும் வாய்ப்பாக அமையும்.

நேரத்தை திட்டமிடாததும் டென்ஷனுக்கு அடிப்படை காரணமாக இருக்கிறது. வேலைகளை பகிர்ந்து கொள்வது, குறித்த நேரத்தில் வேலைகளை முடிப்பது மற்றும் அடுத்தவர் மீதான எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது, அடுத்தவர் சுதந்திரத்தில் தலையிடாமல் இருப்பது போன்றவற்றின் மூலம் மட்டுமே மனதை இயல்பாக வைத்திருக்க முடியும். இந்த பழக்கங்களை சிறு வயது முதலே பழக்க வேண்டும் என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள் இதன் மூலம் மன அழுத்தம் ஏற்படுவதில் இருந்து குழந்தைகளை காக்க முடியும் என்பது உளவியல் வல்லுநர்களின் கருத்தாகும்.

பார்வைக்கு உண்டு விசேஷ குணங்கள்!

மகான்கள் தரிசனம், புண்ணியம் என்பர். மகான்களுக்கு சுயநலம் இருக்காது. மக்கள் நலமாக இருக்க வேண்டும்; உலகம் நலமாக இருக்க வேண்டும் என்பதுதான், அவர்களது எண்ணம். அதனால், அவர்களை நேரில் தரிசிப்பதும் விசேஷம் தான்.
“நலமாக இரு…’ என்று மகான்கள் சொன்னாலே போதும், நலமாக இருக்கலாம். அவர்களுடைய கண் பார்வை பட்டாலே போதும்; நலமாக இருக்கலாம். மகானின் பார்வையை, “நேத்ர தீட்சை’ என்பர்.
கையசைத்து, “நலமாக இரு…’ என்று மகான்கள் சொல்வதற்கு, “ஹஸ்த தீட்சை’ என்று பெயர். மனதால் நினைத்து, “நலமாக இரு…’ என்பதற்கு, “மானச தீட்சை’ என்று பெயர். அதனால் தான், நாம் மகான்களை தேடிச்சென்று வணங்குகிறோம்; ஆசி பெறுகிறோம்.
ஆமையானது, மணலில் முட்டையிட்டு போய் விடும்; ஆனால், அது, தன் முட்டைகளையே மனதில் நினைத்திருப்பதால், குஞ்சு பொரித்து விடும்.
மீன் முட்டையிட்டு விட்டு, தண்ணீரில் போய் கொண்டிருந்தாலும், தன் முட்டைகளையே நினைத்துக் கொண்டிருக்கும். அடிக்கடி திரும்பித் திரும்பி, முட்டைகளைப் பார்த்தபடி இருப்பதால், முட்டைகள் குஞ்சு பொரித்து விடும்; தாய் மீனின் பின்னாடியே போகும்.
தன் குஞ்சுகளை திரும்பித் திரும்பிப் பார்க்கும் தாய் மீனின் பார்வை பட்டு, குஞ்சுகள் வளர்ந்துவிடும். இதை, “நேத்ர தீட்சை’ என்பர். இப்படியாக, கண் பார்வைக்கு சில விசேஷங்கள் உண்டு; ஆனால், சிலருடைய கண்கள், அப்படி இருக்காது.
“என்ன சார்… புது கடிகாரம் வாங்கியிருக்கீங்களா? பேஷ், பேஷ்… ரொம்ப அழகா இருக்கே…’ என்று சொல்வர்; தொப்பென்று கீழே விழுந்து, கடிகாரம் உடைந்து விடும்.
“என்ன மாமி… புதுப் புடவையா, எப்போ வாங்கினீங்க? ரொம்ப அழகா இருக்கே…’ என்று சொல்வாள் இன்னொரு மாமி. கண் திருஷ்டி சும்மா விடுமா? கம்பியில் மாட்டி, புடவை கிழிந்து விடும். இதுவும் ஒருவித பார்வை தோஷம்தான்.
சில குழந்தைகளை, கூப்பிட்டுக் கொஞ்சுவாள், பக்கத்து வீட்டு பாட்டி… “குழந்தை ரொம்ப சமர்த்து. எவ்வளவு அழகா இருக்கு…’ என்பாள். அன்று இரவே, குழந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்படும். அந்த பாட்டியின் கண் அப்படிப்பட்டது. கண்களால் நல்லதும் ஏற்படலாம்; கெடுதலும் ஏற்படலாம். நல்லதை நினைத்து, நல்லதை தேடிப் போக வேண்டும்.