ஐ.நா. பருவநிலை மாற்றம் மாநாடு-2011

பூமியின் சுற்றுச்சூழலில் மனிதர்களால் பல்வேறு வகையில் வெளியேற்றப்படும் கார்பன் டை ஆக்சைடு உள்ளிட்ட கார்பனின் அளவு தொடர்ந்து அதிகரித்தபடியே இருப்பதால், பூமியின் சுற்றுச்சூழலில் வெப்பத்தின் அளவு அதிகரித்தபடியே உள்ளது. இப்படி பூமியின் வெப்பம் தொடர்ந்து அதிகரித்தால், பூமியில் வாழும் உயிரினங்கள் பலவகையிலும் பாதிக்கப்படும். ஆகையால் வெளியிடப்படும் கார்பன் டை ஆக்சைடு உள்ளிட்ட கார்பனின் அளவை கடுமையாக குறைக்க வேண்டும். இதன் விளைவாக இந்த கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்து வதற்காக ஐ.நா. அமைப்பு சர்வதேச அமைப்பு ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் சர்வதேச மாநாடுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் அண்மையில் தென் ஆப்பிரிக்கா நாட்டில் டர்பன் நகரில் பருவநிலை மாற்றம் மாநாடு-2011 நடந்து முடிந்தது. உலக நாடுகள் வெளியிடும் கார்பனின் அளவை கட்டுப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட கியோடோ ஒப்பந்தம் விரைவில் முடிவடைய இருக்கும் பின்னணியில் இந்த டர்பன் மாநாடு நடத்தப்பட்டது.

கார்பன் வெளியேற்ற கட்டுப்பாடு 

வளரும் பொருளாதாரங்களைக் கொண்ட சீனாவும், இந்தியாவும், புவியை வெப்பமடையச் செய்யும் வாயுக்களின் வெளியேற்றத்தை குறைப்பதற்காக தற்போது அமலிலில் இருக்கும் சர்வதேச ஒப்பந்தமே தொடர வேண்டும் என்று கூறின. அடுத்த வருடம் முடிவுக்கு வரவிருக்கும் கியோட்டோ உடன் பாடுதான், செல்வந்த நாடுகள் தமது கார்பன் வெளியேற்ற அளவை குறைப்பது தொடர்பில் அவற்றை சட்டப்படி கட்டுப் படுத்தக் கூடிய ஒரே ஆவணம் என்று அவை வாதிட்டன.

ஆனால், பல தொழில்வள நாடுகள் புதிய காலநிலை ஒப்பந்தம் ஒன்று கொண்டுவரப்பட வேண்டும் என்று கோருகின்றன. 11 வருடமாக அமலில் இருக்கும் கியோட்டோ ஒப்பந்தத்தில் அதி வேகமாக வளரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகள் உள்ளடக்கப்படவில்லை. இந்த முரண்பாடான நிலைப்பாடுகள், தென்னாபிரிக்காவின் டர்பன் நகரில் நடந்த ஐ.நா.வின் வருடாந்த காலநிலை மாநாட்டில் ஒரு சுமூகமாக தீர்வு எட்டப் படவில்லை. இந்த இழுபறிநிலை காரணமாக கார்பன் வெளி யேற்றம் அதிகரித்து அதன் மூலமான அச்சுறுத்தல்களை தாம் அனுபவிக்க நேரிடும் என்று வளரும் நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கவலை வெளியிட்டனர்.
முன்னதாக காலநிலை மாற்றம் குறித்த புதிய ஒப்பந்தத்துக்கான எதிர்பார்ப்புக்கள் குறைந்து வந்தபோதிலும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான நிதி குறித்த பேச்சுவார்த்தைகள் பற்றி சிறிதளவாவது இருந்தது.
ஆனால், கடந்துபோன சமரசப் பேச்சுக்களில் ஒரு பரந்துபட்ட பொது நிகழ்ச்சித் திட்டத்துக்கான உடன்பாடுகள் ஏற்படாததால்,தனிப்பட்ட விவகாரங்கள் முன்னிலைப்படுத்தப்படத் தொடங்கிவிட்டன. சில செல்வந்த நாடுகளைப் பொறுத்தவரை, இவையெல்லாவற்றையும் உள்ளடக்கியதாக ஒரு உடன்பாடு வரவேண்டும் இல்லாவிட்டால், எதுவும் இல்லை என்று கருத்தில் அவை இருக்கின்றன. கார்பன் வெட்டு தொடர்பில் சட்டரீதியாக அனைவரையும் கட்டுப்படுத்தக் கூடிய ஒரு உடன் படிக்கையை ஏற்க மறுக்கும் வளரும் நாடுகளுக்கு எதிராக செல்வந்த நாடுகளின் கருத்துக்கள் இருந்தன.
கார்பன் வெளியேற்ற குறைப்பு விவகாரத்தில் இருதரப்பும்  (வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள்)  இன்னமும் இழுபறியில் இருக்கும் நிலையில், அனைத்து நாடுகளையும் உள்ளடக்கிய தான புதிய காலநிலை உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று மிகவும் வளரும் நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. அது நடந்தால்கூட அடுத்த வருடம் நடக்கக்கூடிய ஐ.நா.வின் காலநிலை மாநாடு வரை அது தொடரரும்.
இந்த நிலையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான நிதி பற்றித்தான் தாம் மிகுந்த கவலை கொண்டிருப்பதாக வளரும் நாடுகள் கூறுகின்றன.
இருந்த போதிலும், காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்காக அண்மை வருடங்களில் வழங்கப்பட்ட சிறிய அளவிலான நிதியைக்கூட இந்த வளரும் நாடுகள் துஷ்பிர யோகம் செய்வதாகவும் பல வளரும் நாடுகள் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மாநாட்டின் புதிய தீர்மானங்கள்
பருவநிலை மாற்றம் தொடர்பான புதிய ஒப்பந்தத்தை 2015-ஆம் ஆண்டுக்குள் மேற்கொள்ள வேண்டும் என டர்பன் நகரில் நடைபெற்ற மாநாட்டில் உலக நாடுகள் முடிவு செய்துள்ளன. இந்த ஒப்பந்தம் 2020-ஆம் ஆண்டிலிலிருந்து நடை முறைக்கு வரும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன் விவரம்:
பருவநிலை மாற்றம் தொடர்பாக இப்போது நடைமுறையில் உள்ளது கியோட்டோ ஒப்பந்தம். 2008-ஆம் ஆண்டில் இருந்து 2012-ஆம் ஆண்டுக்குள் உலகின் வெப்பநிலையை 5 சதவீத அளவுக்கு குறைக்க இந்த ஒப்பந்தத்தின் மூலம் வகை செய்யப் பட்டது. இந்த அளவானது 1990-ஆம் ஆண்டுக்கும் முன்பிருந்த நிலையாகும். இதன்படி பசுமை இல்ல வாயுவை (கார்பன் டை ஆக்ஸைடு) அதிகம் வெளியிடும் நாடுகள் இந்த அளவை எட்ட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் 194 நாடுகளின் பிரதிநிதிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். விரைவாக முடிய வேண்டிய இந்த மாநாட்டின் பேச்சுவார்த்தை இந்தியா மற்றும் சீனாவின் எதிர்ப்பு காரணமாக 36 மணி நேரம் தாமதமாக முடிவுற்றது. இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகளே பசுமை இல்ல வாயுவை அதிகளவு வெளியிடுவதாகவும், இந்நாடுகள்தான் புதிய கட்டுப்பாடுகளுக்கு உட்பட வேண்டும் என்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு கருத்துத் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த இந்தியாவும், சீனாவும் புதிய கட்டுப்பாடுகளினால் தங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படுவதுடன், லட்சக்கணக்கான மக்கள் வறுமையை எதிர்நோக்க நேரிடும் என்றன.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த இந்திய சுற்றுப்புறச் சூழல் அமைச்சர் ஜெயந்தி நடராஜன், ஐரோப்பிய கூட்டமைப்பு தெரிவிக்கும் திட்டத்தில் அடங்கியுள்ள விஷயங்கள் என்ன என்பது தெரியாமலே, லட்சக்கணக்கான மக்களின் வாழ்வை எங்கள் நாட்டினால் பணயம் வைக்க இயலாது என்று தெரிவித்தார். மேலும் தங்களைப் பிணையாக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
சுற்றுப்புறச் சூழல் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளுக்கான பொறுப்பு அனைவருக்கும் சமமானதே என்றும் அவர் தெரிவித்தார். தொழில்மயமாக்கப்பட்ட நாடு களைவிட, வளரும் நாடுகளின் பொறுப்புணர்ச்சி இவ் விஷயத்தில் குறைவு என்ற வாதத்தையும் அவர் நிராகரித்தார். ஐரோப்பிய கூட்டமைப்பின் ஆணையர் கோனி ஹெடிகார்டு மற்றும் ஜெயந்தி நடராஜன் ஆகியோர் சந்தித்துப் பேசி ஓர் சமரச முடிவை எட்ட வேண்டும் என்றும் பேசப்பட்டது. இதையடுத்து இரு தலைவர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொடர்ந்து இருதரப்பினரும் 2015-ஆம் ஆண்டுக்குள் ஓர் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த ஒப்புக் கொண்டனர். மேலும் சுற்றுச் சூழல் மேம்பாட்டுக்கென வளரும் நாடுகளுக்கு நிதியளிக்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.  அதுவரை கியோட்டோ ஒப்பந்தத்தின் நிபந்தனைகளைப் பின் பற்றுவதாக ஐரோப்பிய கூட்டமைப்பு தெரிவித்தது. இது குறித்துக் கருத்துத் தெரிவித்த சீனப் பிரதி நிதிகளின் தலைவர் ஸிஸன்ஹுவா  அமையவுள்ள ஒப்பந்தம் ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்றம் தொடர்பான அமைப்பின் விதிகளின்படியே அமையும் என்று தெரிவித்தார். இந்தியாவின் கருத்துகள் குறித்துத் தெரிவித்த ஐரோப்பிய கூட்டமைப்பின் ஆணையர் ஹெடிகார்டு, தனது பொருளா தாரத்துக்கு ஆபத்தான முடிவை எடுக்கும்படி இந்தியாவைத் தாங்கள் வலியுறுத்தவில்லை என்றும், அந்நாட்டின் வளர்ச்சியை முழுமையாக அங்கீகரிப்பதாகவும் தெரிவித்தார். அதேசமயம் ஒப்பந்தம் என்பது அனைத்து நாடுகளுக்கும் பொதுவானது என்பதையும் மறுப்பதற்கில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மாநாட்டில் எந்த உறுதியான முடிவும் எட்டப்படாமல் அரைகுறையாக முடிந்துள்ளது. கார்பன் உமிழ்வை கட்டுப் படுத்தாத நிலையில் பூமியின் சராசரி வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் உயரும் என்று விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ள னர். அதனால் ஏற்படும் காலநிலை மாற்றத்தின் பயங்கரமான விளைவுகள் இந்தியாவில் மட்டும் எப்படியிருக்கும். சில எடுத்துக்காட்டுகள்:
 இந்தியா முழுவதும் 1 செ.மீ. கடல்மட்டம் சராசரியாக உயர்ந்து வருகிறது. கடல்மட்டம் ஒரு மீட்டர் உயர்ந்தால் இந்திய கடற்கரைப் பகுதியில் 1,700 சதுர கி.மீ. மூழ்கி விடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
 மேற்குவங்கம் மாநிலத்தின் சுந்தரவனக் காடு பகுதியில் கடல்மட்ட உயர்வால் ஒரு தீவு முற்றிலும் மூழ்கிவிட்டது. 6000 குடும்பங்கள் வாழ்விழந்துள்ளன. 40 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள். கடல்மட்டம் உயரும் நகரங்கள்  பட்டியலிலில் சென்னை, நாகப்பட்டினம் உள்ளன.
 இந்திய விவசாயம் 65 சதவீத பாதிப்பை சந்திக்கலாம். ஏற்கனவே இந்த ஆண்டு பருவமழை பொய்த்தது.
 ஒவ்வொரு 0.5 டிகிரி செல்சியஸ் வெப்ப உயர்வுக்கும் 17 முதல் 30 சதவீத அரிசி, கோதுமை விளைச்சல் பாதிக்கப் படும். ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்ந்தால், 40-50 லட்சம் டன் கோதுமை விளைச்சல் குறையும்.
 50 சதவீத இந்தியக் காடுகள் பாதிக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், நமது பருவநிலை காடுகளைச் சார்ந்து வாழும் மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
 2035-ஆம் ஆண்டுக்குள் வடக்கில் ஓடும் ஜீவநதிகளின் தாயான இமயமலை பனிச்சிகரங்கள் முற்றிலும் மறைந்து விட வாய்ப்புள்ளது.
 இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) 27 சதவீதம் பாதிக்கப்படலாம்.
 கொசுக்களால் பரவும் மலேரியா, டெங்கு, சிக்குன் குன்யா போன்ற நோய்களின் தாக்குதல் அதிகரிக்கும்.
 இதுவரை 1998-ஆம் ஆண்டுதான் மிக வெப்பமான ஆண்டு. உலகின் மிக வெப்பமான 20 ஆண்டுகளில் 19 ஆண்டுகள், 1980-க்குப் பிறகே வந்துள்ளன. 2009 மிக வெப்பமான ஐந்தாவது ஆண்டு.
 20-ஆம் நூற்றாண்டில் பூமியின் சராசரி வெப்பநிலை 0.6 டிகிரி அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் 2050க்குள் குளிர்கால சராசரி வெப்பநிலை 3.2 டிகிரி வரை, கோடை காலத்தில் சராசரி வெப்பநிலை 2.2 டிகிரி வரை உயர்ந்து விடும். ஆகையால் வல்லரசு இந்தியா என்ற லட்சியத்தைவிட பசுமையான இந்தியா என்பதே இன்று அவசியமான லட்சியம் ஆகும்.
%d bloggers like this: