Daily Archives: பிப்ரவரி 3rd, 2012

மலரும் மருத்துவமும்- தாமரை…

புல் பூண்டு, செடி, கொடி, மரம் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. இவை பருவ காலத்திற்கும் வளரும் பகுதிக்கேற்பவும் அவற்றின் குணங்கள் சிறிது மாறியிருக்கும்.

இவ்வாறு மனிதர்களுக்கு பயன்படுபவையில் மலர்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

மலர்களும் மருத்துவப்பயன் கொண்டவை. இன்று உலகெங்கும் மலர் மருத்துவம் பிரசித்திப் பெற்று வருகிறது. இத்தகைய மருத்துவக் குணம் கொண்ட மலர்களில் தாமரையும் ஒன்று தாமரை மலர் நம் இந்தியாவின் தேசிய மலராகும். தாமரையில் கல்விக்கு உரிய சரஸ்வதியும், செல்வத்துக்கு உரிய மஹாலட்சுமியும் அமர்ந்திருப்பதாக இந்து மதத்தினர் நம்புகின்றனர். தாமரைப் பூவை இறைவனுக்கு பூஜைப் பொருளாகவும் பயன்படுத்துகின்றனர்.

தாமரையில் வெண்மை, சிவப்பு, நீலம், மஞ்சள் என பல வகைகள் உண்டு.

தாமரைப் பூவை அரவிந்தம், பொன்மனை, கமலம், சரோகம், கோகனம், சலசம், வாரிசம், பங்கசம், நளினம், சரோருகம் என பல பெயர்களில் அழைக்கின்றனர்.

Tamil – Thamarai

Sanskrit – Padma

English – Lotus

Telugu – Tamara

Malayalam – Thamara

Botanical Name – Lelumbo nucifera

தாமரைப் பூ மருத்துவப் பயன்கள்

ஈரலைப் பற்றிமிக ஏறுகின்ற வெப்பமும்போங்
கோர மருந்தின் கொடுமையறும்-பாருலகில்
தண்டா மணத்தையுள்ள தாழ்குழலே! காந்தல்விடும்
வெண்டா மரைப்பூவால் விள்

-அகத்தியர் குணவாகடம்

பொருள் – வெண்தாமரைப்பூவால் ஈரல் பாதிப்பு, குடல்புண், வெப்பமுள்ள மருந்துகளின் உட்சூடும் நீங்கும். தேக எரிச்சல் நீங்கும்.

தாமரையின் இதழ்களை நீரில் கொதிக்க வைத்து பனை வெல்லம் கலந்து அருந்தி வந்தால் உடல் சூடு தணியும். பித்தத்தைக் குறைக்கும்.

நீர்ச்சுருக்கு, நீர்த்தாரை எரிச்சல் போன்றவற்றைப் போக்கும்.

சுரக் காய்ச்சலுக்கும் இதனைக் கொடுத்து வந்தால் காய்ச்சல் படிப்படியாகக் குறையும்.

ஞாபக சக்தியைத் தூண்டும். மூளைக்கும், நரம்புகளுக்கும் புத்துணர்வூட்டும்.

வயிற்றுப் புண்ணை ஆற்றும். சரும எரிச்சலைப் போக்கும்.

இதயத்தைப் பாதுகாக்கும். இதய தசைகளை வலுப்படுத்தும். இரத்த நாளங்களில் படிந்துள்ள கொழுப்புச்சத்தைக் குறைக்கும்.

தாமரைப் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி பனை வெல்லத்துடன் கலந்து பாகுபோல் காய்ச்சி சாப்பிட்டு வந்தால், இருமல், அதிக உதிரப் போக்கு போன்றவற்றிற்கு நிவாரணம் அளிக்கும்.

வெண்தாமரைப் பூ மூளையின் வளர்ச்சிக்கு உதவுகிறது. ஞாபக சக்தியைத் தூண்டுகிறது. நரம்புகளுக்கு பலம் கொடுக்கிறது என சித்தர்கள் பலர் கூறியுள்ளனர்.

தாமரைப் பூவின் மகரந்தப் பொடியுடன் தேன் சேர்த்து காலையில் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவுபெறும். காது கேளாமை நீங்கும். ஆண்மைத் தன்மை அதிகரிக்கும்.

மருந்துகளால் சிலருக்கு ஒவ்வாமை உண்டானால் அது பலவகைகளில் பாதிப்பை உண்டுபண்ணும். அப்பாதிப்புகளைக் குறைக்க தாமரைப்பூவின் இதழ்களை நீரில் கொதிக்கவைத்து குடிநீராக தினமும் அரை அவுன்ஸ் அளவு அருந்தி வந்தால் ஒவ்வாமையால் உண்டான பாதிப்பு குறையும்.

தாமரை விதையை தேன் விட்டு அரைத்து நாக்கில் தடவினால், விக்கல், வாந்தி நிற்கும்.

தாமரைப் பூவின் மருத்துவப் பயன்களை நாமும் அறிந்து அதன் முழுப் பயனையும் பெற்று நீண்ட ஆரோக்கியம்பெறும்வோம்.

விபத்துகளை தடுக்க சீனாவில் புது ஐடியா!

சீனாவில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளை தடுப்பதற்காக, போலீசார், புதுவிதமான திட்டத்தை செயல்படுத்தி, அதில் கணிசமாக, வெற்றியும் அடைந்துள்ளனர். பரீட்சார்த்த முயற்சியாக, ஜியாங்சு மாகாணத்தில் உள்ள, ஒரு நெடுஞ்சாலையில், போலீஸ் ரோந்து வாகனத்தின் பின்புறத் தோற்றத்தை, அட்டையில் (கார்ட்போர்டு), அச்சு அசலாக வரைந்து, குறிப்பிட்ட இடைவெளிகளில், சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைத்தனர். சந்தேகம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக, சோலார் விளக்குகளையும் அதில் பொருத்தி இருந்தனர்.
கார்களை வேகமாக ஓட்டி வரும் டிரைவர்கள், சாலை ஓரத்தில் இருக்கும் அட்டைகளை பார்த்து, போலீஸ் ரோந்து வாகனம் தான் நிறுத்தப்பட்டுள்ளதோ என பயந்து போய், காரின் வேகத்தை குறைத்து, மெதுவாக செல்லத் துவங்கினர். இதையடுத்து, மேலும், சில சாலைகளிலும், இதுபோன்ற போலி போலீஸ் ரோந்து வாகனத்தை நிறுத்த, போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
டிரைவர் ஒருவர் கூறும்போது, “காரை வேகமாக ஓட்டி வந்த போது, சாலை ஓரத்தில், ரோந்து வாகனம் தான் நிற்கிறது என நினைத்து, வேகத்தை குறைத்தேன். அதை கடந்து சென்றபின், திரும்பி பார்த்த போது தான், அது ரோந்து வாகனம் இல்லை, வெறும் அட்டை என்பது தெரிய வந்தது…’ என்றார்.
“இவை வெறும் அட்டைகள் தான் என்பது, அடுத்த முறை வரும் போது டிரைவர்களுக்கு தெரிந்து விடுமே…’ என, போலீசாரிடம் கேட்டால், “இதையெல்லாம் யோசிக்காமலா இருப்போம். குறிப்பிட்ட இடைவெளிகளில் நிறுத்தப்பட்டுள்ள அட்டைகளை தவிர, சில இடங்களில் நிஜமான ரோந்து வாகனத்தை நிறுத்தி, கண்காணிப்போம். எனவே, எது போலி, எது நிஜம் என டிரைவர்களால், அத்தனை சீக்கிரமாக கண்டுபிடித்து விட முடியாது…’ என, சிரிக்கின்றனர்.

ஆபீஸ் 2010ல் பழைய மெனு

பல ஆண்டுகளாக எம்.எஸ். ஆபீஸ் 2003 ஐத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தவர்களுக்கு, எம்.எஸ். ஆபீஸ் 2010 தரும் ரிப்பன் வழி இன்டர்பேஸ் சிறிது தடுமாற்றத்தினைக் கொடுக்கும்.
ஆபீஸ் 2007 வெளியானவுடன், அதனு டைய ரிப்பன் இன்டர்பேஸ் வசதியினை ஒரு சிலர் புகழ்ந்தாலும், பலர் அதனை வரவேற் கவில்லை. தடுமாற்றத்துடன் தொடங்கிய பலரும், இதனை ஏன் மாற்றினார்கள்? எது எங்கு இருக்கிறது என்று தெரிய வில்லையே? என்ற கேள்விகளுடன் இயங்குகிறார்கள். ஒரு சிலர், ஆபீஸ் 2003 தொகுப்பே போதும் என அதற்கு மாறிக் கொள்கிறார்கள். இப்போது வந்திருக்கும் ஆபீஸ் 2010 தொகுப்பில், ரிப்பன் இன்டர்பேஸ் அனைத்து அம்சங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இதிலும் பழைய படி மெனு எதிர்பார்ப்பவர்கள் அதிக பிரச்னையைச் சந்திக்கின்றனர். கூடுதல் நேரம் செலவழிக்க வேண்டியுள்ளதே என கவலைப்படுகின்றனர்.
இவர்களின் சிரமத்தினைப் போக்கும் வகையில், பழைய எம்.எஸ். ஆபீஸ் 2003 தொகுப்பில் எப்படி மெனு இருந்ததோ, அதே போல வசதியினை எம்.எஸ். ஆபீஸ் 2010லும் கிடைக்கச் செய்திட வழி கிடைத்துள்ளது. க்ஆடிtMஞுணத என்ற புரோகிராம் இதற்கான தீர்வைத் தருகிறது. புதிய தொகுப்பில் உள்ள ரிப்பன் இன்டர்பேஸ் வசதியுடன், பழைய வகை மெனுக்களையும், டூல் பார்களையும் தருகிறது. கூடுதலாக நாம் எண்ணும் அனைத்து ரிப்பன் இன்டர் பேஸ் வகை அனைத்தையும் நீக்கிவிடலாம். இந்த புரோகிராம் http://www.ubit.ch/software/ ubitmenu-languages/ என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. இதனைத் தரவிறக்கம் செய்து எப்படி மாற்றுவது எனப் பார்க்கலாம்.
புரோகிராம் ஒன்றினை எப்படி தரவிறக்கம் செய்து, கம்ப்யூட்டரில் பதிவோமோ அதன் படி யுபிட் மெனுவினையும் அமைத்துக் கொள்ளவும். இது மிகவும் சிறிய புரோகிராம். இன்ஸ்டால் செய்திட மிகக் குறுகிய நேரமே எடுத்துக் கொள்கிறது. இதனை இன்ஸ்டால் செய்கையில் அனைத்து எம்.எஸ். ஆபீஸ் புரோகிராம்களையும் மூடிவிடுங்கள். ஒன்று கூட இயங்கக் கூடாது. இன்ஸ்டால் செய்த பின்னர், வேர்ட், எக்ஸெல் அல்லது பவர்பாய்ண்ட் என ஏதேனும் ஒரு புரோகிராமினை இயக்கவும். ரிப்பனில், Home மெனு அடுத்து புதிய மெனு ஒன்று கிடைப்பதனைப் பார்க்கலாம். இந்த மெனு மூலம், உங்கள் பழைய ஆபீஸ் 2003 தொகுப்பில் கிடைத்த மெனு, கட்டளைகள் அனைத்தும் கிடைப்பதனைப் பார்க்கலாம், பயன்படுத்தலாம். புதிய தொகுப்பில் தரப்பட்டுள்ள SmartArt போன்ற வசதிகளும், இந்த வகை மெனு வில் காட்டப்படுவதனைக் காணலாம்.
எக்ஸெல் தொகுப்பினைத் திறந்து இயக்கினால், புதிய PivotTable மற்றும் PivotCharts ஆகியவற்றிற்கான சப்போர்ட் இருப்பதையும் பார்க்கலாம். ஒரு வித்தியாசம் இங்கு தென்படும். அனைத்து டூல் பார்களும் ஒரு கீழ்விரி மெனுவிற்குள் சுருக்கமாக அடைபட்டிருக்கும். இதனால், உங்கள் ஸ்கிரீன் ரெசல்யூசன் மிகவும் குறைவாக செட் செய்தவர்களுக்கு, இதன் தோற்றத்தைச் சற்று வித்தியாசமாகக் காண்பார்கள். இதனைச் சற்றுப் பெரிதான தோற்றத்தில் இருக்குமாறு விரும்புவார் கள்.
இதற்கு Menu டேப்பில், Tools தேர்ந்தெடுத்து, பின்னர் Word Options தேர்ந்தெடுக்கவும். இடது பக்கம் உள்ள பாரில், Customize Ribbon என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து, வலது பக்கம் நீங்கள் மறைக்க விரும்பும் அனைத்து வசதிகளுக்கும் எதிரே உள்ள கட்டங்களில் டிக் அடையாளத்தினை நீக்கி விடவும். இவற்றை முடித்த பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இந்த வேலை நடைபெறும் போதே, இன்டர்பேஸ் வண்ணத்தினையும் மாற்றலாம். ஆனால் எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பின் எந்த புரோகிராமில் (வேர்ட், எக்ஸெல், பவர்பாய்ண்ட்) வண்ண மாற்றத்தினை ஏற்படுத்தினாலும், அந்த மாற்றங்கள் மற்ற புரோகிராம்களிலும் காட்டப்படும்.
இப்போது ரிப்பனில் இரண்டு டேப்கள் மட்டுமே இருப்பதைக் காணலாம். புதிய தோற்றத்தைக் காட்ட File டேப்; அடுத்து தற்போது இன்ஸ்டால் செய்த யுபிட் மெனு டேப். இதில் கிட்டத்தட்ட பழைய ஆபீஸ் 2003 தொகுப்பின் அனைத்து மெனுக்களும் இருப்பதனைக் காணலாம். இந்த மெனு மூலம் புதிய ஆபீஸ் 2010 தொகுப்பின் அனைத்து வசதிகளையும் பெறலாம் என்பது இதன் சிறப்பு.
இது போன்ற செட்டிங்ஸ் மாற்றத்தினை, வேர்ட், எக்ஸெல், பவர்பாய்ண்ட் என அனைத்து ஆபீஸ் தொகுப்புகளிலும் மேற்கொள்ள வேண்டும். இந்த மாற்றங்களை ஆபீஸ் 2007 தொகுப்பிலும் மேற்கொள்ளலாம். தனிநபர் பயன்பாட்டிற்கு யுபிட் மெனு இலவசமாகக் கிடைக்கிறது. வர்த்தக ரீதியாகப் பயன்படுத்த, இதனை கட்டணம் செலுத்திப் பெற வேண்டும்.