உடலில் குள்ளம்… புகழில் உச்சம்…

ஜோதி ஆம்கே உலகத்திலே உயரம் குறைந்த பெண். 2 வயது குழந்தையின் உயரத்தில் காணப்படும் இவர் வயது 18. நாக்பூரில் ஜூனபகாத்கஞ்ச்சில் உள்ள சிறிய வீட்டில் பெற்றோருடன் வசிக்கிறார். அப்பா கிஷன், அம்மா ரஞ்சனா. சகோதரிகள் வைசாலி, ரூபாலி. சகோதரன் சதீஷ். உடன் பிறந்த மூவருமே சராசரியான உயரம் கொண்டவர்கள்.

ஜோதிக்கு தன்னை அலங்காரம் செய்வதில் அதிக ஆனந்தம். காலையில் தூங்கிவிழித்ததும் அம்மா அவரை இடுப்பில் தூக்கிக்கொண்டுபோய், பாத்ரூமில் விடுகிறார். குளித்துவிட்டு, அவர் தன்னை அழகுபடுத்திக் கொண்டிருக்க, அம்மா ரஞ்சனாவிடம் பேச்சு கொடுத்தோம். அவர் 18 வருடங்களுக்கு முன்பு ஜோதியை பெற்றெடுத்த அனுபவங்களை பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார்.

“அழகான குழந்தையாக அவள் பிறந்ததால் ஜோதி என்று பெயரிட்டோம். பிறந்த குழந்தையின் அசைவு, பார்வை, தோற்றம் எல்லாவற்றிலும் அவள் சராசரியாகத்தான் இருந்தாள். அவளது ஆனந்தம், அழுகை எல்லாவற்றையும் ரசித்தபடி வளர்த்தோம். அவள் மூன்று வயதை எட்டினாள். அப்போதுதான் ஒருசிலர் குழந்தையை பார்த்துவிட்டு, `பார்த்தால் மூன்று வயதுபோல் தெரியவில்லையே’ என்றார்கள். நாங்களும் அப்போதுதான் குழந்தை வளர்ச்சி குறைபாட்டுடன் இருப்பதை உணர்ந்தோம்.

நாங்கள் உடனே இந்தியாவில் உள்ள பிரபலமான பல டாக்டர்களிடம் அவளை தூக்கிக்கொண்டுபோய் காண்பித்தோம். அனைவரும், `குழந்தைக்கு ஹார்மோன் பிரச்சினை. அதனால் இதற்கு மேல் வளராது’ என்று ஒரே மாதிரியான பதிலையே சொன்னார்கள்.

நானும், என் கணவரும் பயந்து போனோம். பல இரவுகள் தூங்காமல் அவளை பார்த்துக்கொண்டிருப்போம். `எங்கள் காலத்துக்கு பின்பு இவளை யார் கவனித்து பராமரிப்பார்கள்’ என்று கவலைப்பட்டோம்.

வருடங்கள் செல்லச்செல்ல எங்களுக்கு தைரியம் வந்தது. கடவுள் எப்படியாவது இவளுக்கு நல்லவழி காட்டுவார் என்று நம்பினோம். நம்பிக்கை வீண்போகவில்லை. கின்னஸ் புத்தகம் மூலம் எங்கள் மகள் உலகப் புகழ்பெற்றுவிட்டாள்..” என்றார்.

அப்போது உள்அறையில் இருந்து மின்னலடிக்க நடந்து வந்தார், ஜோதி. முகத்தில் பளிச் புன்னகை. உதடுகளில் லிப்ஸ்டிக். பட்டுப்புடவை உடுத்தி, முந்தானையை சரிசெய்தபடி அவர் நடந்து வரும் அழகே அழகு!

`நீங்கள் அழகில் அதிக கவனம் செலுத்துவீர்கள் போல் தெரிகிறதே?’ என்றதும் அவரிடம் இருந்து பதில் வருகிறது.

“நான் அலங்காரம் செய்துகொள்வதற்காகத்தான் அதிக நேரத்தை செலவிடுவேன். இந்த பருவத்தில் அழகில் அக்கறை செலுத்தாவிட்டால் எப்படி..!” என்று 18 வயது பருவத்திற்குரிய ஆசையை வெளிப்படுத்துகிறார்.

இவரை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி படிக்கவைப்பது சிரமம் என்று பெற்றோர் கருதினார்கள். அதனால் பள்ளிக்கான வயதான பின்பும், வீட்டில் அமர்ந்து விளையாடிக்கொண்டிருந்தாள், ஜோதி. அதைப் பார்த்த சில ஆசிரியைகள், `பள்ளிக்கு அனுப்பிவையுங்கள். நாங்கள் படித்துக்கொடுக்கிறோம்’ என்றார்கள். அதனால் பள்ளிக்கு அனுப்பிவைக்கப்பட்டாள், ஜோதி. படிப்பு, பெயிண்டிங், நடனம், பேஷன் ஷோ போன்றவைகளில் கலந்துகொண்டு பரிசுகளை குவித்தாள்.

“அப்பா என்னை பைக்கில் ஸ்கூலுக்கு கொண்டு போவார். என் நெருங்கிய தோழிகள் ஷபானாவும், பிரியங்காவும் பைக்கில் இருந்து என்னை இடுப்பில் தூக்கிச் செல்வார்கள். ஸ்கூலில் எல்லா இடத்திற்கும் அவர்கள்தான் என்னை தூக்கிச் செல்வார்கள். டீச்சர் என்னை அடிக்கவே மாட்டார். சாப்பிட்டாயா என்று வாஞ்சையுடன் கேட்பார்கள். நான் பத்தாம் வகுப்பு வரை படித்திருக்கிறேன்..”

பள்ளியில் தோழிகளோடு சண்டை போட்டிருக்கிறீர்களா?

“எங்களுக்குள் ஒரே ஒரு விஷயத்திற்குத்தான் சண்டை வரும். என்னுடைய கூந்தலைப் பார்த்து சில தோழிகளுக்கு சந்தேகம். ஒரிஜினல்தானா? என்று இழுத்துப் பார்ப்பார்கள். முடியை இழுத்தால் யாருக்குத்தான் கோபம் வராது? சிலரை அடித்திருக்கக்கூட செய்திருக்கிறேன்”- என்கிறார். இவருடைய ஜீன்ஸ்க்கு பின்னாலும் பெரிய கதை இருக்கிறது.

டீன்ஏஜ் பெண்கள் ஜீன்ஸ் அணிவதைப் பார்த்து இவருக்கும் ஆசை வந்திருக்கிறது. நாக்பூர் பஜாரில் கடைகடையாய் ஏறி இறங்கித் தேடியிருக்கிறார். இவர் அளவுக்கு ஜீன்ஸ் கிடைக்கவில்லை. `நீங்கள் எங்கு தேடினாலும் கிடைக்காது. துணி வாங்கி உங்கள் அளவுக்கு தைத்துவிடுங்கள் அல்லது மூன்று வயது குழந்தைகளுக்கு ஜீன்ஸ் விற்கும் கடைக்கு சென்று வாங்குங்கள்’ என்றிருக்கிறார்கள்.

பின்பு இவரது ஓயாத தேடுதல் வேட்டையை தெரிந்துகொண்ட ஜவுளி நிறுவனம் ஒன்று, ஜீன்ஸ் நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்க, அவர்கள் இவருக்காக சில சாம்பிள்களை பிரத்யேகமாய் தயாரித்து வழங்கியிருக்கிறார்கள். அதை `டைட்’டாக அணிந்து கொள்கிறார், ஜோதி. இவர் வளருவதில்லை என்பதால் ஜீன்ஸ் ஒருபோதும் இவருக்கு சிறிதாவதில்லை. தொடர்ந்து வருடக்கணக்கில் அணிந்துகொள்ளலாம்.

உலகத்திலே சிறிய பெண்ணாக இருப்பதால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் மகிழ்ச்சி?

“அதனால்தான் உலகப்புகழ் பெற்றிருக்கிறேன். ஜப்பான், இத்தாலிக்கெல்லாம் சென்றிருக்கிறேன். ஆனாலும் எனக்கு ஏற்படும் பிரச்சினைகள் பலருக்கும் தெரியாது. நான் மட்டுந்தான் அந்த கஷ்டங்களை அனுபவிக்கிறேன். 7 வயதிலும், 10 வயதிலும் விபத்துக்களில் சிக்கி கால் முறிந்திருக்கிறது. அப்போது நடிக்க முடியாது, நடனம் ஆட முடியாது என்றெல்லாம் கவலைப்பட்டேன். ஆனால் எனக்கு என்ன கஷ்டம் ஏற்பட்டாலும் உடனே எங்கள் வீட்டு முன்னால் இருக்கும் தேவி ஆலயத்திற்கு சென்று வழிபடுவேன். எல்லாம் சரியாகிவிடும். மகிழ்ச்சியாக இருக்கிறேன்..”

குள்ள பாப்பா மாதிரி நடந்துகொள்வீர்களா, அல்லது 18 வயது பருவப் பெண்ணிற்குரிய சேஷ்டைகளை செய்வீர்களா?

“எனக்குள் பருவப் பெண்ணிற்குரிய விஷயங்களும் உண்டு. குழந்தைத்தனமும் உண்டு. வெளியே பருவப் பெண்ணாக நடந்து கொள்வேன். வீட்டிற்குள் என் சகோதரிகளிடம் குழந்தையாகி விளையாடுவேன்..”

சினிமாவில் நடிக்கும் அனுபவம்?

“நன்றாக இருக்கிறது. கன்னட மொழி படத்திலும், இந்தி படங்களிலும் நடித்திருக்கிறேன். சினிமாவில் எனக்கு சில ஆசைகள் உள்ளன. கஜோல், ராணி முகர்ஜி போல் பெயர் வாங்கவேண்டும். சிறிய கதாபாத்திரத்திலாவது சல்மான்கானுடன் நடிக்கவேண்டும்..”

உங்கள் பலம் என்ன?

“தைரியம். என் பெற்றோர் ஒருபோதும் என்னிடம், நீ ஊனமுற்ற பெண் அங்கே போகாதே இங்கே போகாதே என்று சொன்னதில்லை. அவர்கள் எல்லா இடத்திற்கும் என்னை கொண்டு போனார்கள். எல்லோரிடமும் பேச எனக்கு தைரியம் தந்தார்கள். அந்த தைரியத்தால்தான் நான் சல்மான்கானுடன் நடிக்க வேண்டும் என்றெல்லாம் கனவு காண்கிறேன். மன தைரியம் இருந்தால் எதையும் சாதிக்கலாம்..”

திருமணத்தைப் பற்றி உங்கள் கனவு என்ன?

“என் மனதில் திருமணத்தை பற்றிய சிந்தனையே இல்லை. என்னால் திருமணம் செய்துகொள்ள முடியாது. அதனால் திருமண கனவு எதுவுமே நான் காண்பதில்லை. ஆனால், என்னால் சமூக சேவையாற்ற முடியும். முதியோர்களையும், அனாதை குழந்தைகளையும் பாதுகாக்க ஒரு மையம் தொடங்கவேண்டும். எனக்கு கிடைக்கும் பணத்தை எல்லாம் அதற்காக செலவிடுவேன். நான் இறந்து போனாலும் நான் வாழ்ந்ததற்கான அடையாளங்களை இந்த உலகில் சேவை மூலம் விட்டுச் செல்வேன். நான் இப்படி ஒரு ஜென்மம் எடுத்ததால் சிலராவது பலன் அடைவார்கள்” என்றார்.

***

`உலகிலே உயரம் குறைந்த பெண்’ என்ற அந்தஸ்தை கின்னஸ் புத்தகம் ஜோதிக்கு வழங்கியுள்ளது. அந்த அங்கீகாரத்தை வழங்க கின்னஸ் குழு ஜோதியின் வீட்டிற்கு வந்தது. 24 மணிநேரத்தில் அவருடைய உயரத்தில் ஏதேனும் மாற்றம் வருகிறதா? என்பதை அறிய ஒரு நாளில் 3 நேரம் அளந்து பார்த்தார்கள். நிற்கவைத்து, உட்காரவைத்து, படுக்கவைத்தெல்லாம் அளந்தார்கள். பல்வேறு கட்ட அளவீடுகளுக்கு பிறகு ஜோதியின் உயரம் 62.8 செ.மீ. என்று முடிவானது. (இந்த ஞாயிறு மலரை விட சற்று உயரம் அதிகம்.)

இதற்கு முன்பு குள்ள சாதனையாளராக இருந்தவர் அமெரிக்காவை சேர்ந்த பிரிஜட் ஜோர்டான். இவர் உயரம் 69 செ.மீ! 1876-ல் பிறந்த பவுலீன் மாஸ்டர்ஸ் என்பவர் உயரம், 61 செ.மீ.தான்! அந்த சாதனையை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை.

***

ஜோக் அடிக்கும் தந்தை

ஜோதியின் தந்தை கிஷனுக்கு 55 வயது. இவர் சரியான ஜோக் பேர்வழி. நாக்பூரில் வாகன தொழில் செய்து வரும் இவர், பத்திரிகையாளர்கள் பேட்டியை முடித்ததும், “என் மகளை ரொம்ப புகழ்ந்து எழுதிவிடாதீர்கள். அதை படித்து, மகிழ்ந்துபோய் இவள் வளர்ந்துவிடுவாள். வளர்ந்தால் சாதனை உயரம் தகர்ந்து போய் விடும்” என்று கலாய்க்கிறார். அதைக்கேட்டு ஜோதி வாயை பொத்திக்கொண்டு சிரிக்கிறார். அந்த சிரிப்புகூட அழகாகத்தான் இருக்கிறது.

நன்றி-தினத்தந்தி

%d bloggers like this: