வேர்ட்: வெட்டிச் செதுக்கிய எழுத்துக்கள்

வேர்ட்: வெட்டிச் செதுக்கிய எழுத்துக்கள்
வேர்ட் டாகுமெண்ட்டில், எழுத்துக்களைச் செதுக்கி ஒட்டி வைத்தவை போல தோற்றம் அளிக்கும்படி செய்திடலாம். ஆங்கிலத்தில் இதனை “Embossing” என அழைக்கின்றனர். ஓர் எழுத்தினை எம்பாஸ் செய்திடுகையில், அது பக்கத்திலிருந்து தூக்கி எடுக்கப்பட்டு, ஓரங்களில் நிழலோடு வைக்கப்பட்டது போலக் காட்சி அளிக்கும். இவ்வாறு அமைக்கக் கீழ்க்காணும் வழிகளைப் பின்பற்றவும்.
1. எந்த எழுத்துக்களை அல்லது சொல்லை எம்பாஸ் செய்திட வேண்டுமோ, அவற்றை தேர்ந்தெடுக்கவும்.
2. Format மெனுவிலிருந்து Font என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் இப்போது பாண்ட் டயலாக் பாக்ஸைக் காட்டும்.
3. இதில் உள்ள ’emboss’ என்பதில் டிக் அடையாளம் இருப்பதனை உறுதிப்படுத்தவும்.
4. ஓகே கிளிக் செய்திடவும்.
5. இதனை அமைக்கையில், வெவ்வேறு வண்ணங்களில் அந்த எழுத்துக்கள், அவற்றின் பின்னணி தோன்றும் வகையில் அமைக்க வசதிகள் தரப்பட்டுள்ளன.

பாராவினை நகர்த்த
சில வேளைகளில் நாம் உருவாக்கும் வேர்ட் டாகுமெண்ட்டில் ஏதேனும் ஒரு முழு பாராவை டாகுமெண்ட்டின் வேறு இடத்தில் அமைக்க விரும்புவோம். இதற்கு காப்பி அல்லது கட் மற்றும் பேஸ்ட் கட்டளை எல்லாம் வேண்டாம். எந்த பாராவினை நகர்த்த வேண்டுமோ அதனுள்ளாக கர்சரைக் கொண்டு சென்று வைக்கவும். பின் ஷிப்ட் மற்றும் ஆல்ட் கீகளை அழுத்தியவாறு அப் ஆரோ அல்லது டவுண் ஆரோவினை அழுத்தினால் பாரா மேலே கீழே முழுதாகச் செல்லும்.

டேப்பின் இடைவெளி அமைக்க
வேர்ட் ரூலர் நமக்குப் பல வழிகளில் உதவுகிறது. வழக்கமாக டேப்களை நாம் செட் செய்கிறோம். ஒவ்வொரு டேப்பிற்கும் இடையே உள்ள தூரத்தினை ரூலர் மூலம் அறிந்து கொள்கிறோம். ஆனால் ஒரு டேப் பாய்ண்ட் ரூலரின் இடது புறம் இருந்து எவ்வளவு தூரத்திலிருந்து உள்ளது என்றும் அதே போல வலது புறத்திலிருந்து எவ்வளவு தூரத்திலிருந்து உள்ளது என்றும் அறியலாம். இதற்கு ரூலரில் டேப் உள்ள இடத்தில் கர்சரைக் கொண்டு வைக்கவும். இப்போது இடது பக்க மவுஸ் பட்டனை அழுத்தவும். அதனை விட்டுவிடாமல் வலது பக்கம் மவுஸ் பட்டனையும் அழுத்தவும். இப்போது குறிப்பிட்ட டேப் இரு புறத்திலிருந்தும் எவ்வளவு தூரத்திலிருந்து உள்ளது என்று காட்டப்படும்.

எண்களை டேபிளில் அமைக்கும் வழி
வேர்ட் டாகுமெண்ட் ஒன்றில் அட்டவணை ஒன்றை நீளமாக உருவாக்கி வைக்கிறோம். ஏதேனும் ஒரு செல் நெட்டு வரிசையில், பெரும்பாலும் முதல் நெட்டு வரிசையில், வரிசையாக எண்களை அமைக்க விரும்புகிறோம். இதற்கு ஒவ்வொன்றாக எண்ணை அமைக்க வேண்டியதில்லை. எந்த நெட்டு வரிசையில் எண்கள் அமைய வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுத்து பின் புல்லட் அருகே உள்ள Numbering என்ற ஐகானை அழுத்தவும். வரிசையாக எண்கள் அமைக்கப்படும். ஆனால் ஏற்கனவே செல்களில் டெக்ஸ்ட் அமைத்து அவற்றையும் என்டர் தட்டி வரிசையாக டெக்ஸ்ட் அமைத்திருந்தால் எண்கள் சற்று தாறுமாறாக வரலாம்.

%d bloggers like this: