Daily Archives: பிப்ரவரி 7th, 2012

ஏப்ரல் முதல் முழு வீச்சில் “ஆதார்’ : தமிழக தபால் வட்டம் தகவல்

மத்திய திட்டக் கமிஷன், உள்துறை அமைச்சகம் இடையேயான மோதல் முடிவுக்கு வந்ததை அடுத்து, தமிழகத்தில் ஏப்ரல் முதல், ஆதார் பணி முழு வீச்சில் துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய பிரத்யேக அடையாள அட்டை ஆணையத்துடன் (யு.ஐ.டி.ஏ.ஐ.,) மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், இந்திய குடிமக்கள் அனைவருக்கும், “ஆதார் அடையாள அட்டை’ வழங்குவதற்கான பதிவுப் பணிகளை, இந்திய தபால் துறை மேற்கொண்டுள்ளது.

இந்த அட்டை பதிவு செய்யும் பணியை, தமிழக தபால் வட்டம், கடந்தாண்டு அக்., 25ல் துவங்கியது. யு.ஐ.டி.ஏ.ஐ., பிறப்பித்த உத்தரவை அடுத்து, தமிழகம் உட்பட நாடு முழுவதும், “ஆதார்’ பதிவு செய்யும் பணி நிறுத்தப்பட்டது.

உள்துறை – திட்டக் கமிஷன் மோதல்

இந்நிலையில், “ஆதார்’ அட்டை வழங்கும் பணியால், தேசப் பாதுகாப்பு கேள்விக்குறியாகும்’ எனக் கூறி, மத்திய உள்துறை அமைச்சகம், தேசிய மக்கள் தொகை பதிவகம் மூலம் (என்.பி.ஆர்.,), தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான பணியை துவக்கியது. இதற்கு மத்திய திட்டக் கமிஷன் ஆட்சேபம் தெரிவித்ததோடு, விரல் ரேகை மற்றும் கருவிழி பதிவு விவரங்களுடன் கூடிய, அங்க அடையாள விவரத்தை, இரண்டு அமைப்புகள் சேகரிப்பதால், கூடுதல் செலவு ஏற்படும் எனக் கூறியது. இதனால், மத்திய திட்டக் கமிஷனுக்கும், உள்துறை அமைச்சகத்துக்கும் இடையே மோதல் எழுந்தது. இப்பிரச்னைகளுக்கு, பிரதமர் மன்மோகன் சிங், மூத்த அமைச்சர்களுடன் நடத்திய ஆலோசனைக்கு பின், சுமூக முடிவு காணப்பட்டது. அதன்படி பிரத்யேக அடையாள அட்டை ஆணையம், 60 கோடி பேருக்கும், மக்கள் தொகை பதிவகம், 60 கோடி பேருக்கும் அங்க அடையாளங்களை சேகரிக்கலாம் என, முடிவானது.

“இரு முறை தேவையில்லை’
என்.பி.ஆர்., தேசிய அடையாள அட்டைக்காக ஒரு குறிப்பிட்ட நபரை அணுகும் போது, தான் ஏற்கனவே, “ஆதார்’ அடையாள அட்டைக்காக பதிவு செய்துள்ளதாக அவர் கூறினால், அந்த நபரின் அங்க அடையாளம் பதிவு செய்யப்பட மாட்டாது. அவரின் ஆதார் எண்ணைப் பெற்று, அதிலிருந்து அவரைப் பற்றிய தகவல்களை, தேசிய மக்கள் தொகை பதிவகம் எடுத்துக் கொள்ளும். ஆனால், இரு அமைப்புகளிடமும் தரும் அடிப்படை தகவல்களில் முரண்பாடு காணப்பட்டால், என்.பி.ஆர்., தகவல்களே சரியானதாக எடுத்துக் கொள்ளப்படும் என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் “ஆதார்’
தமிழகத்தில், 23 மாவட்ட தலைமை தபால் நிலையம் உட்பட, 28 இடங்களில், “ஆதார்’ பதிவு செய்யும் பணி நடந்து வந்தது. தமிழகத்தில் மக்கள் தொகை பதிவகத்தின் திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் துவங்கி வைத்ததால், யார் தமிழகத்தில் விவரங்களை சேகரிப்பர் என்ற குழப்பம் இருந்தது. இந்த நிலையில், திட்டமிட்டபடி “ஆதார்’ பதிவை விரைவுப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படவில்லை. இருப்பினும், ஏற்கனவே துவக்கப்பட்ட மையங்களில் நாளொன்றுக்கு, 100 வரை, “ஆதார்’ அட்டைக்கான பதிவு நடந்து வருகிறது.

புதிய மென்பொருள்
இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆதார் அட்டைக்கான பதிவுப் பணி, வரும் பிப்., 15ம் தேதி முதல், முற்றிலும் நிறுத்தப்படுகிறது. தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களில், 71 ஆயிரத்து, 533 பேர் பதிவு செய்துள்ளனர். “ஆதார்’ பதிவுக்கு ஏற்கனவே பயன்படுத்தி வந்த மென்பொருளுக்கு பதிலாக, கூடுதல் பாதுகாப்பு நிறைந்த புதிய மென்பொருளை வடிவமைக்க, ஆணையம் திட்டமிட்டுள்ளது. தேசிய அளவில், பொதுமக்களிடம் இருந்து திரட்டும் தகவல்களையும் பாதுகாப்பாக வைக்க, தேசிய தகவல் மையத்தை அமைப்பதற்கான முயற்சியையும், இந்திய பிரத்யேக அடையாள அட்டை ஆணையம் எடுத்து வருகிறது.இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

ஏப்ரல் முதல்
மத்திய அரசின் 2012-13 நிதி நிலை அறிக்கை மார்ச் மாதம் வெளியானதற்கு பின், பிரத்யேக அடையாள அட்டை ஆணையத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும். இது பெறப்பட்ட பின், அடுத்த கட்ட பணிகளை துவங்க முடியும்.
இதனால், ஏப்ரல் முதல் முழு வீச்சில், “ஆதார்’ பணிகள் தமிழகத்தில் மீண்டும் நடக்கும் என, அந்த துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அட்டை அச்சடிப்பு கூடுதலாக 4 மையம்

தற்போது, கோல்கட்டாவில் மட்டும், “ஆதார்’ அடையாள அட்டை அச்சடிக்கும் பணி நடந்து வருகிறது. “ஆதார்’ அடையாள அட்டை வழங்கும் ஆணையத்திற்கு, மத்திய அரசு கூடுதலாக 5,791 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.
இதற்கான பணி, ஏப்ரல் முதல் முழு வீச்சில் நடைபெற உள்ளதால், பதிவுக்கு ஏற்ப அட்டைகளை விரைந்து அச்சடித்து வழங்க; மணிப்பால், டில்லி, மும்பை, ஐதராபாத் ஆகிய இடங்களில் அச்சடிக்கும் மையங்களை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், நாளொன்றுக்கு ஒரு மையத்தில் ஐந்து லட்சம் கார்டுகள் வீதம், ஐந்து மையங்களில், 25 லட்சம் கார்டுகள் அச்சடித்து வழங்குவதற்கான நடவடிக்கைகளை, இந்திய பிரத்யேக அடையாள அட்டை ஆணையம் மேற்கொண்டுள்ளது.

அவசரமா ‘சாப்பிட’ இதென்ன ‘பாஸ்ட் புட்டா’? ரசிச்சு அனுபவிங்க!

இல்லற வாழ்க்கையில் தாம்பத்யம் என்பது புனிதமானது; அதனைத் தவிர்த்து மனித வாழ்க்கை அமைவதில்லை. பாலுறவு என்பதே இனவிருத்திக்கும், மனிதன் தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்குமான ஒரு புனிதமான உறவு என்பது அனைவருக்கும் தெரியும். எனவே உறவின் போது இருவருமே ஒரே மனநிலையில் இருத்தல் அவசியம். உறவானது மன அழுத்தத்தை போக்கும் மருந்து எனவே உறவின் போது மன அழுத்தம் கொள்ளத் தேவையில்லை என்கின்றனர் உளவியலாளர்கள்.

அச்சம் தவிருங்கள்

பலருக்கு தாம்பத்ய வாழ்க்கையைப் பற்றிய பல எதிர்பார்ப்புகளும், அதே அளவுக்கு சந்தேகங்களும் இருக்கலாம். என்னதான் உடலளவில் பலசாலியாக இருப்பவர்களுக்கும் முதலிரவை நினைத்தே ஒருவித பயம் ஏற்படக்கூடும், இந்த பயம் இருபாலருக்கும் இருப்பது இயல்பே.

முன் கூட்டியே விந்தணு வெளியேறி விடுமோ? முழு அளவில் உறவில் ஈடுபட என்பன போன்ற பலவாறான சந்தேகங்கள் எழலாம். அந்த சந்தேகங்கள் உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால், உறவின் போது இருவரும் ஒரே நோக்கத்துடன் மாற்று சிந்தனைகளுக்கு இடம் அளிக்காமல் ஈடுபட வேண்டும் என்கின்றனர் உளவியலாளர்கள்.

மன அழுத்தம் கூடாது

உறவின் போது மன அழுத்தம் அறவே கூடாது என்கின்றனர் உளவியலாளர்கள். மனதை இலேசாக வைத்துக் கொண்டு, உறவை மேற்கொள்ளுங்கள். ஒருவித பயம் அல்லது மன அழுத்தத்துடன் உறவில் ஈடுபடும் போது இருவருக்குமே திருப்தி ஏற்படாது என்கின்றனர் அவர்கள்.

சந்தேகம் வேண்டாம்

திருமணம் ஆன புதுத் தம்பதிகளை ஹனிமூன் அனுப்பி வைப்பதே இருவரும், வேறு எந்த சூழ்நிலையையும் யோசிக்காமல், மனம் மகிழ ஒரே சிந்தனையில் உறவில் ஈடுபடவேண்டும் என்ற நோக்கத்தில்தான். வேறு எதைப்பற்றியும் கவலை கொள்ள வேண்டாம். அப்படியே ஏதேனும் குறை இருப்பதாக, இருபாலரில் யாராவது உணர்ந்தால், திருமணம் ஆகி ஓரிரு மாதங்களுக்குள் உரிய மருத்துவரை அணுகி உங்களின் சந்தேகங்களுக்கு விடை காணவும்.

அவசரம் ஆகாது

உறவிற்கு முந்தைய கிளர்ச்சி தூண்டல் எனப்படும் முன்விளையாட்டு மிகவும் முக்கியப் பங்காற்றுகிறது. இந்த தூண்டல் நபருக்கு, நபர் வேறுபடும் என்பதோடு, பாலுறவில் இருவரில் யாருக்காவது ஒருவருக்கு நாட்டம் இல்லாதபோது, என்னதான் கிளர்ச்சியைத் தூண்டினாலும் அது சுவாரஸ்யத்தை அளிக்காது. எனவே உறவின் போது, அவசரத்தை கடைபிடித்தல் தேவையற்றது என்பதே உளவியலாளர்களின் அறிவுரை.

ஒரே மனநிலை அவசியம்

பாலுறவு என்பதே இனவிருத்திக்கும், மனிதன் தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்குமான ஒரு புனிதமான உறவு என்பது அனைவருக்கும் தெரியும். எனவே உறவின் போது இருவருமே ஒரே மனநிலையில் இருத்தல் அவசியம். மனைவிக்கு மூடு உள்ள போது கணவன் களைப்புடன் இருந்தாலோ, அல்லது மனைவிக்கு விருப்பமில்லாமல் கணவன் விடாப்பிடியாக உறவு கொண்டாலோ, அது சுவரஸ்யமானதாக அமைய வாய்ப்பில்லை என்பதே நிபுணர்களின் கருத்து.

உற்சாகம் ஊற்றெடுக்கும்

திருமணமாகி ஒரு சில ஆண்டுகளுக்குப் பின் பல்வேறு காரணங்களால் இருபாலருக்குமே பாலுறவில் நாட்டம் இன்றி இருப்பது சகஜம்தான்.

அதுபோன்ற சூழ்நிலையில், குறிப்பிட்ட இடைவெளியில், அவரவர் சூழ்நிலைக்கேற்ப, அவ்வப்போது உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே உளவியலாளர்களின் அறிவுரை. இதனால் இருவரின் உள்ளத்திலும் மன அழுத்தம் நீங்கி உற்சாகம் நீடிக்கும். என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள்.

சுமை தீர்ப்பார் சுப்பிரமணியர்!

தைப்பூசத் திருவிழா, நம் சுமையை இறைவனிடம் ஒப்படைக்கும் நன்னாளாகத் திகழ்கிறது. வாழ்க்கையில் மனிதன், பல கஷ்டங்களை அனுபவிக்கிறான். அந்தக் கஷ்டத்தை சிலரிடம் சொல்லி, ஆறுதல் தேட முயற்சிக்கலாம். ஆனால், அந்த சிலர், எந்தளவுக்கு நம்பிக்கைக்கு உரியவர்களாக இருப்பர்… அவர்கள், நம் கஷ்டத்தையே அவர்களுக்கு சாதகமாக்கி, ஆதாயம் தேட முயற்சிக்கலாம்; கேலி செய்யலாம்.
ஆனால், கடவுள் அப்படியல்ல… கல்லாயிருந்தாலும்; கருணையோடு நம் குறையைக் கேட்பான். அவன் முன்னால் அமர்ந்து கண்ணீர்விட்டு, கவலையைத் தெரிவித்தால், நம் மனச்சுமை இறங்கி விடும். இதையே தான், முருக பக்தர்கள் காவடி எடுத்து கடன் தீர்க்கின்றனர். காவடியில் என்ன இருக்கிறது? பால், பன்னீர், சந்தனம், புஷ்பம், மீன் (மச்சகாவடி), பாம்பு (சர்ப்பக்காவடி), சேவல் ஆகியவற்றை காவடிச் சுமையாகக் கொண்டு செல்கின்றனர்.
ஒரு தண்டத்தில், இரண்டு புறமும் கலசம் அல்லது பானை கட்டி, அதனுள் அபிஷேகப் பொருட்களை இடுவர். சேவல் காவடியாக இருந்தால், அதை காவடியின் ஒருபுறம் கட்டி வைக்கின்றனர். இப்பொருட்களின் தாத்பர்யம் என்ன?
ஒரு உயிர் பிறந்ததும் தாயிடம் பால் குடிக்கிறது. சற்று வயதான பின், பசுவின் பால் குடிக்கிறது. இறப்பதற்கு முன், உயிர் வதைக்கும் போது, பால் ஊற்றுகிறோம். மறைந்த பிறகு, சதையிலும் பால் ஊற்றப்படுகிறது. “முருகா… என் பிறப்பு முதல், இறப்பு வரை சுமை தான். அச்சுமையை தாங்குபவனாக என்னுடன் வா…’ என்றழைப்பதே பால் காவடி தத்துவம்.
“உலகத் துன்பங்களால் சூடேறிக் கிடக்கும் என் மனதின் சூட்டை தணித்து வை…’ என, முருகனை வேண்டுவது, பன்னீர் மற்றும் சந்தனக்காவடி தத்துவம்.
“என் வாழ்க்கைப் பாதையில் மனைவி, குழந்தைகள், உற்றார், உறவினர் என, எத்தனையோ பேர் உதிரிப்பூக்களாய் வந்திருக்கின்றனர். என்னுடன் அவர்களையும் கரை சேர்…’ என்று வேண்டுவது புஷ்பக்காவடி தத்துவம்.
“மீன் போல் பிறவிக் கடலில் கிடந்து தத்தளிக்கிறேன். கருடனைக் கண்டு மிரளும் பாம்பைப் போல், வாழ்க்கை என்னும் புற்றுக்குள் கிடந்து தவிக்கிறேன். இந்த பிறவியில் இருந்து என்னை மீட்டு, உன்னோடு சேர்த்துக் கொள்…’ என்பது மச்ச, சர்ப்பக்காவடி தத்துவம்.
“விடியலுக்காக காத்திருக்கும் சேவல் போல், பிறவியாகிய இருளில் இருந்து, எனக்கும் எப்போது விடிவு காலம் வரும்?’ என்று கேட்டு சேவல் காவடி எடுக்கிறோம்.
நம்மை மனக் கவலைகளில் இருந்து மீட்டு, சுமையை, தானே ஏற்றுக்கொள்ளும் கருணை தெய்வமாக விளங்குபவர் கந்தப்பெருமான்.
“கந்தன்’ என்ற சொல்லுக்கு, “பகைவர்களின் பராக்கிரமத்தை வற்றச் செய்பவர்’ எனப் பொருள் கூறுகிறது வடமொழி நிகண்டு. பகைவர் என்றால் எங்கோ வெளியில் இருந்து வருபவர் அல்ல; நம் மனமே நமக்குப் பகையாக இருக்கிறது; தேவையில்லாததை எல்லாம் சிந்திக்கிறது. இந்த மனப்பகைவனிடம் இருந்து, நம்மைக் காப்பவன் கந்தன்.
“கந்து’ என்றால் “யானையைக் கட்டிப்போடும் தறி’ என்று பொருள். <உயிர்கள் என்னும் யானைகளை, ஆசைகளில் இருந்து மீட்டு, அவர்களைக் கட்டிப் போடுபவன் என்பதால் அவர், “கந்தன்’ ஆனார்.
“கந்து’ என்ற சொல்லுக்கு, “பற்றுக்கோடு’ என்ற பொருளும் இருக்கிறது. உயிர்கள் கந்தப்பெருமானை பற்றிக் கொண்டால், அவர்கள் பிறவிச் சுழலில் இருந்து மீள்வர்.
இந்த உலக வாழ்க்கை, மாயையானது; ஆனாலும், இங்கு கிடைக்கும் தற்காலிக சுகத்திற்காக, மனிதன் இதை விட மறுக்கிறான்; இறந்தாலும், மீண்டும் இங்கேயே வந்து பிறக்கிறான்.
கந்தப்பெருமானை மனதார வணங்குபவர்களுக்கு, இந்த துன்பம் இராது. அவர்கள் அந்தக் கந்தனுடனேயே கலந்து விடுவர்.
தைப்பூசத் திருநாளில் காவடி எடுத்து, முருகன் கோவில்களுக்கு செல்வோம். நம் மனச் சுமையை பெருமானிடம் இறக்கி வைப்போம்; நம் பணிகளைத் தொடர்வோம்; மற்றதை அவன் பார்த்துக் கொள்வான்.

சிலிர்க்க வைக்கும் ஐஸ் சிற்பங்கள்!

பனிக்கட்டிகளால் செதுக்கப்பட்ட சிற்பங்களுக்காகவே ஜப்பான், கனடா, நார்வே, சீனா போன்ற நாடுகளில், உறை பனிக் காலங்களில் சர்வதேச அளவிலான திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. அழகான வளைவுகள், தத்ரூபமான உருவங்கள், கண்களையும், மனதையும் கொள்ளையடிக்கும், பல்வேறு வண்ண ஒளி பாயும் வகையில் வடிவமைக்கப்படும் இந்த பனிச் சிற்பங்களை, “ஜில்’லிடச் செய்யும் மைனஸ் டிகிரி செல்சியசில் பார்த்து, ரசிப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
பல நாடுகளில், இந்த பனிச் சிற்ப திருவிழா நடந்தாலும், சீனாவின் குளிர் பிரதேசமான ஹார்பின் நகரில், கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்படும் இந்த திருவிழா, மிக பிரமாண்டமாகவும், உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை கவரும் வகையில் உள்ளது.
வழக்கம்போல் இந்தாண்டும், ஹார்பின் நகரில் இந்த திருவிழா துவங்கியுள்ளது. மைனஸ் 17 டிகிரி செல்சியசில், பரந்து விரிந்த, 150 ஏக்கர் பரப்பளவில், 95 கோடி ரூபாய் செலவில், கடந்த இரண்டு மாதத்துக்கும் மேலாக, 45க்கும் மேற்பட்ட பனிச் சிற்பங்கள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
உலக அதிசயங்களாக கருதப்படும் பைசா நகரின் சாய்ந்த கோபுரம், தாஜ்மகால், சீனப் பெருஞ்சுவர் மற்றும் மன்னர் காலத்து அரண்மனைகள் ஆகியவை, பனிக் கட்டிகளால் பிரமாண்டமாகவும், எழில் கொஞ்சும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளன.
சீனா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிற்ப கலைஞர்கள் இவற்றை உருவாக்கியுள்ளனர். இந்தாண்டு நடக்கும் பனிச் சிற்ப திருவிழாவின் ஸ்பெஷல் என்ன தெரியுமா? மறைந்த ஹாலிவுட் நடிகை மர்லின் மன்றோவின் பனிச் சிற்பம் தான்.
முழங்காலுக்கு மேல் காற்றில் பறக்கும் கவுனை, “அழகிய லைலா’ போல், அழகாக கைகளால் இறுக்கிப் பிடித்தபடி தோன்றும் மர்லின் மன்றோவின் புகைப்படம், <உலகப் பிரசித்தம். இந்த புகைப்படத்தை முன் மாதிரியாக வைத்து, இதே போன்ற பனிச் சிற்பத்தை, தற்போது சீனாவில் உருவாக்கியுள்ளனர்.
பல வண்ண மின் விளக்குகளின் ஒளி, அந்த சிற்பத்தில் பாயும்போது, வெள்ளை மலை பிரதேசத்திலிருந்து, மர்லின் மன்றோவே நேரில் இறங்கி வருவது போல், இந்த சிற்பம் இருப்பதாக, பார்வையாளர்கள் சிலிர்க்கின்றனர்.
ஆனாலும், காதலர்களை பொறுத்தவரை, “எவர் கிரீன்’ பனிச் சிற்பமாக திகழ்வது, தாஜ்மகால் தான். இந்த சிற்பத்துக்கு முன், காதலர்கள் ஜோடி, ஜோடியாக புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர்.
கடந்தாண்டு இங்கு நடந்த பனிச் சிற்ப திருவிழாவுக்கு, பத்து லட்சம் பார்வையாளர்கள் வந்திருந்தனர். இந்தாண்டு அதை விட, 20 சதவீதம் கூடுதல் பார்வையாளர்கள் வரக் கூடும் என்றும், அதன் மூலம் அரசுக்கு வருவாய் அதிகரிக்கும் என்றும், சீன அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.