Daily Archives: பிப்ரவரி 8th, 2012

உலகின் மிக உயரமான தொங்கு பாலம்!

உலகின் மிக உயரமான தொங்கு பாலம், மெக்சிகோவில் அமைக்கப்பட்டுள்ளது. மெக்சிகோவில் பலுவார்ட் ஆற்றின் குறுக்கே, இரண்டு மலை முகடுகளுக்கிடையில், அந்தரத்தில் இந்த பாலம் அமைக்கப் பட்டுள்ளது. பள்ளத்தாக்கின் அடியில் இருந்து, 403 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ள இந்த பாலத்தின் மொத்த நீளம், 1,124 மீட்டர்.
மலை முகடுகளின் இரு பக்கமும் அமைக்கப்பட்டுள்ள கேபிள்கள், இந்த பாலத்தை தாங்கி நிற்கின்றன. 2008 ஜனவரியில் துவங்கிய இதன் கட்டுமானப் பணி, சமீபத்தில் முடிவடைந்து, பொது மக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது. மெக்சிகோவில் இருந்து மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் இருந்தும், ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த பாலத்தை காண்பதற்காக வந்து செல்கின்றனர். மெக்சிகோவின் சியரோ மலைத் தொடருக்கு மேலும் அழகு சேர்க்கும் வகையில், இந்த பாலம் அமைந்துள்ளதாக, சுற்றுலா பயணிகள் தெரிவிக்கின்றனர்.

மன அழுத்தத்தை போக்க தலையணைச் சண்டை!

சீனாவில், அலுவலகங்களில் பணி புரியும் இளைஞர்கள், தங்கள் உயரதிகாரி களின் நெருக்கடிக்கு ஆளாவதாலும், கல்லூரியில் படிக்கும் இளைஞர்கள், ஆசிரியர்களின் நெருக்கடிக்கு ஆளாவதா லும், தங்களுக்கு கடுமையான மன அழுத்தம் ஏற்படுவதாக புலம்புகின்றனர். இந்த மன அழுத்தத்தை போக்குவதற்காக, சமீபகாலமாக, “பில்லோ பைட்’ என அழைக்கப்படும் தலையணைச் சண்டை என்ற வித்தியாசமான நிகழ்ச்சியை அரங்கேற்றுகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் இறுதியில், ஷாங்காய், பீஜிங் உள்ளிட்ட நகரங்களில், இந்த வித்தியாசமான நிகழ்ச்சி நடக்கிறது. குறிப்பிட்ட, நாளில், இளைஞர்கள் அனைவரும், வீதிக்கு வந்து, தலையணைகளால் ஒருவரை ஒருவர், விளையாட்டாக தாக்கிக் கொள்கின்றனர். தலையணைகளில் இருக்கும் பஞ்சுகள், பிய்ந்து போகும் வரை, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்கின்றனர்.
“இப்படி தலையணைகளால் தாக்கிக் கொள்வதன் மூலம், எப்படி உங்களின் மன அழுத்தம் நீங்கும்?’ என, கேட்டால்,”ஹி, ஹி… சண்டைக்கு கொண்டு வரும் தலையணைகளின் மீது, உயரதிகாரிகளின் பெயர் அல்லது ஆசிரியர்களின் பெயரை எழுதி விடுவோம். இதன் மூலம், அவர்களை பழி வாங்கி விட்ட உணர்வு எங்களுக்கு ஏற்படும்; அவர்களால், எங்களுக்கு ஏற்பட்ட மன அழுத்தமும் போய் விடும்…’ என, அசட்டுச் சிரிப்புடன் பதில் அளிக்கின்றனர் சீன இளைஞர்கள்.

உடற்பயிற்சியில் சில உண்மைகள்…

டற்பயிற்சி குறித்து நாம் வைத்திருக்கும் நம்பிக்கைகளில் எவையெல்லாம் சரியானவை? இதோ, நீங்களே `செக்’ செய்துகொள்ளுங்கள்…நம்பிக்கை: உடல் நல்ல வடிவம் பெறுவதற்குச் சிறந்த வழி, ஓட்டம்.

உண்மை: ஓட்டமும், மெல்லோட்டமும் (ஜாகிங்) நல்ல உடற்பயிற்சிகள்தான். ஆனால் அவை கால் மூட்டுகளில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். ஒருவர் நீச்சல், நடை, சைக்கிளிங் போன்றவைகளில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யவேண்டும். அதன் மூலம், தான் சாப்பிட்டதை விட அதிக கலோரிகளை எரிக்க முடிந்தால் அது சிறந்த உடற்பயிற்சிதான்.

நம்பிக்கை: வலியில்லாத உடற்பயிற்சிகளால் பெரிதாக நன்மை இல்லை.

உண்மை: `ஜிம்’ பயிற்சியின்போது தசைகளில் வலி எடுக்காவிட்டால் அதனால் பிரயோஜனமில்லை என்று பொதுவாகப் பலரும் கருதுகிறார்கள். தீவிர உடற்பயிற்சியின்போது சிறிது கஷ்டம் ஏற்படலாம். ஆனால் நல்ல உடற்பயிற்சிக்கு வலிதான் அடையாளம் என்பதில்லை. தசை சோர்வு அல்லது தசைநார் கிழிந்திருப்பதையும் வலி சுட்டிக்காட்டலாம்.

நம்பிக்கை: அதிகாலையில் உடற்பயிற்சி செய்வதே நல்லது.

உண்மை: நேரத்தை விட பயிற்சிதான் முக்கியம். பகல் வேளையில் வசதியான எந்த நேரத்திலும் பயிற்சி செய்யலாம்.

நம்பிக்கை: உடம்பின் ஒரு பகுதிக்கு மட்டும் தொடர்ந்து பயிற்சி செய்தால் அந்த பகுதியில் வலிமை அதிகரிக்கும்.

உண்மை: மனித மனதுக்கு ஓய்வும், சவாலும் தேவை. அதுபோல் உடற்பயிற்சியிலும் ஓய்வும் தேவை. தொடர்ச்சியான செயல்பாடும் தேவை.

நம்பிக்கை: காலைச் சிற்றுண்டியைத் தியாகம் செய்யலாம். விரைவாக எடையைக் குறைக்க பட்டினி கிடப்பதே சிறந்த வழி.

உண்மை: தசைகளின் தினசரிப் பராமரிப்புக்கு ஊட்டச்சத்துகள் அவசியம். கலோரி நிறைந்த உணவுகளை சாப்பிடு கிறவர்கள்தான் அதிக எடை போடுகிறார்கள். அதனால் அவர்கள் ஆரோக்கியமும் குறையும்.

நம்பிக்கை: வயது முதிர்ந்தவர்களும், மிகவும் இள வயதினரும் உடற்பயிற்சி செய்யத் தேவையில்லை.

உண்மை: உடற்பயிற்சி செய்யும் முதியவர்களுக்கு `ஆஸ்டியோஆர்த்ரைட்டிஸ்’ அறிகுறி குறையும். மூட்டு நிலைத்தன்மை அதிகரிக்கும். தவறி விழுந்தால் எலும்பு முறிவைத் தடுக்கும் வகையில் எலும்பு அடர்த்தி பராமரிக்கப்படும்.

மிக இளவயதினருக்கு, உடற்பயிற்சி அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

நம்பிக்கை: உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்கு, நாம் ரசித்துச் சாப்பிடும் அனைத்து உணவுகளையும் துறக்க வேண்டும்.

உண்மை: சரியான உணவுமுறை என்பது உடலை சிறப்பாக்கும். பிடித்த உணவை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டியதில்லை. உணவில் கட்டுப்பாடும், அளவும்தான் முக்கியம். முறையாகவும், மிதமாகவும் சாப்பிட்டால் எந்த உணவும், யாரையும் குண்டாக்காது. விருப்பமற்ற உணவை கட்டாயமாக சாப்பிட்டால் மன ஆரோக்கியம் குறையும்.

நம்பிக்கை: கனமான பொருட்களைத் தூக்குவது தசைகளை வலுப்படுத்தும். எனவே ஒரு பெண், பெண்மையுடன் திகழ எடை குறைந்த எடையுள்ள பொருட்களையே தூக்க வேண்டும்.

உண்மை: கனமான பொருட்களைத் தூக்குவது ஒரு பெண்ணை, தசைகள் திரண்ட அழகி ஆக்கிவிடாது. ஆரோக்கியமானவர்களாகவும், பலமானவர்களாகவும் மாற்றும்.

நம்பிக்கை: எல்லா உடற்பயிற்சிக் கருவிகளும் நம் உடம்புக்கு ஏற்றவைதான்.

உண்மை: வீட்டில் வைத்து உபயோகப்படுத்தும் சில உடற்பயிற்சிக் கருவிகள் நன்றாக அமைக்கப்பட்டிருக்கவில்லை. அதில் நீங்கள் பயிற்சி செய்தால், உங்களுக்கு ஏற்கனவே உடல்ரீதியான பாதிப்புகள் இருந்தால் அவை மேலும் சேதத்தை ஏற்படுத்தக்கூடும். ஒரு குறிப்பிட்ட உடற்பயிற்சிக் கருவியில் பயிற்சி செய்யும்முன், உடற்பயிற்சி வல்லுநரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது

ஒரு மனைவி… பல கணவர்கள்!

ங்கள் பக்கத்துப் பழக்கடையில் `கின்னூர் ஆப்பிள்’ பற்றிக் கேட்டால் மிகவும் சிலாகித்துச் சொல்வார்கள். இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள கின்னூர், ஆப்பிள்களுக்கு மட்டுமல்ல, வேறு ஒரு விஷயத்துக்கும் `பிரசித்தி’ (?) பெற்றது. அதாவது, ஒரே பெண்ணை பல ஆண்கள் மணப்பது.

உங்களுக்கு இது அதிர்ச்சியான விஷயமாக இருக்கலாம், ஆனால் மலை மாவட்டங்களான கின்னூர் மற்றும் லாஹால்- ஸ்பிதியில் இது பல நூற்றாண்டுகளாகத் தொடரும் பழக்கம்.

பொதுவாக இந்தப் `பல கணவர்’ மணம் ஒரே குடும்பத்தில் நடக்கும். ஒரு குடும்பத்தின் அண்ணன்- தம்பிகள், ஒரே பெண்ணை மணந்துகொள்வார்கள். குடும்பத்தின் சொத்து பிரியக்கூடாது என்பதற்காக இப்படி ஒரு ஏற்பாடு.

இப்பகுதிகளில் விவசாயமே பிரதானம். ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு சிறு துண்டு நிலம்தான் இருக்கும், அதை மேலும் துண்டு போடும் நிலைமை வரக் கூடாது என்பதற்காக இந்த வழக்கத்தைக் கடைப்பிடித்து வருகிறார்கள்.

சகோதரர்களில் யார், எப்போது `பொது’ மனைவியுடன் இருப்பது, யதேச்சையாகத் தான் மனைவியுடன் இருந்தால், அதை பிற சகோதரர்களுக்கு எந்த அடையாளம் மூலம் உணர்த்துவது என்பதற்கெல்லாம் பக்காவான ஏற்பாடு உண்டு.

வெளியுலகத்தினருக்கு இது வித்தியாசமாகத் தெரிந்தாலும், சிறிதுகாலம் முன்புவரை இங்கு இந்தத் திருமண முறை வெகு இயல்பான, பரவலான விஷயம். ஆனால் எல்லா இடங்களையும் மாற்றம் எனும் காற்றுத் தழுவும்போது அது இந்தப் பனிப் பள்ளத்தாக்கில் மட்டும் வீசாதா?

இன்றைய கின்னூர் இளந்தலைமுறையினர், இந்த பல கணவர் திருமண முறையை சங்கடமானதாகவும், வசதியற்றதாகவும் நினைக்கிறார் கள். கல்வி அறிவு, வெளியுலகத் தொடர்பு அதிகரித்திருப்பதுதான் இந்த விழிப்புணர்வுக்குக் காரணம்.

தற்போது கொஞ்சம் அரிதானதாக மாறிவிட்ட இத்திருமண முறை, இன்னும் சில ஆண்டுகளில் முற்றிலுமாக மறைந்துபோகும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். இது அவமானகரமானது, நடைமுறை சாராதது என்பது இன்றைய கின்னூர் இளம் ஆண்கள், பெண்களின் கருத்து.

“இன்றைய நவீன காலத்தில், பொதுத் திருமணம் என்பதை நினைச்சுப் பார்க்கவே முடியாது. எப்படி ஒரு பெண்ணை சகோதரர்கள் பகிர்ந்துகொள்ள முடியும்? பெண்களுக்கு என்று தனிப்பட்ட பார்வைகளும், விருப்பங்களும் இருக்கின்றன. காலம் மாறிப் போச்சு. எனவே இந்தப் பாரம்பரியப் பழக்கமும் மாறித்தான் ஆகணும்” என்கிறார், அந்தப் பகுதியில் வசிக்கும் சுனிதா.

இதே பகுதியைச் சேர்ந்த இளைஞரான குங்கா, பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் படிக்கிறார். இவர், “இன்றைக்கு எங்கள் மக்கள் பாரம்பரிய ஆடைகளையே அணியத் தயாராயில்லை. அப்படியிருக்கும்போது அவர்கள் எப்படி பழைய பொது மனைவித் திருமணத்துக்கு ஒத்துக்குவாங்க?” என்கிறார்.

பல நூற்றாண்டுகளாக வெளியுலகத் தொடர்பு இல்லாமல் இருந்ததும் இந்தப் பனிப் பிரதேசத்தில் இத்திருமண வழக்கம் நிலைபெற்று வந்ததற்கு ஒரு காரணம். ஆனால் தற்போது வெளியுலக வெளிச்சம் விழத் தொடங்கியதும் மாற்றம் ஆரம்பித்திருக்கிறது.

இப்பகுதியின் பாரம்பரியத் தொழிலான விவசாயத்தில் இருந்து பலர் விலகி வருகிறார்கள். வேலை தேடி வெளியுலகுக்குப் போகிறார்கள். அப்போதுதான் தங்களின் வழக்கம் குறித்து வருத்தமாக உணர்கிறார்கள்.

“நவீனமும், பொருளாதார வளர்ச்சியும் இந்த மலைப் பகுதி மக்களின் மனோபாவத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. பொது தார முறையைப் பெண்களும் எதிர்க்கத் தொடங்கியிருக்கிறார்கள்” என்கிறார், கின்னூரைச் சேர்ந்த பிரபல பெண்ணுரிமைச் செயல்பாட்டாளரான ரத்தன் மஞ்ரி.

பட்டான் பள்ளத்தாக்கைச் சேர்ந்த பல்தேவ் சிங் என்பவர், இப்பிராந்தியத்தின் பொதுத் திருணத்துக்கான வேர்கள், பண்டைய புத்த மற்றும் இந்துக் கலாசாரத்தில் அடங்கியிருக்கின்றன என்கிறார். முன்பு, இந்தத் திருமண முறையில், சம்பந்தப்பட்ட எல்லோருமே சந்தோஷமாக இருந்தார்கள் என்பதும் உண்மையே என்கிறார் பல்தேவ்.

ஆனால் இன்றைய இளைஞர்கள், பல கணவர் முறை, குடும்பத்துக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் விஷயம், பெண்களைத் தவறாகப் பயன்படுத்தும் முறை என்று கருதுவதால் இது விரைவில் வழக்கொழிந்துவிடும் என்று கருதலாம்!

நன்றி-தினத்தந்தி

புண்ணியம் செய்தால்…

பிறவி ஜென்மம் நன்றாக அமைய வேண்டும் என்று எல்லாரும் விரும்புவர்; ஆனால், அவரவர் விருப் பப்படி அது அமைவதில்லை. காரணம், பூர்வ ஜென்ம பாவ – புண்ணியங்கள்.
புண்ணிய கர்மா செய்திருந்தால், அடுத்த ஜென்மாவில் குறை எதுவுமின்றி சுகமாக வாழலாம்; பாவ கர்மா செய்திருந்தால், ஏதோ ஒரு ஏழ்மையான இடத்தில் சில ஊனங்களுடன் பிறக்க வேண்டி இருக்கும். அப்போது தெய்வத்தை நிந்தித்து பயனில்லை.
சிறு வயதிலேயே சிலர் புத்திசாலிகளாகவும், சிலர் முட்டாள்களாகவும் இருப்பர். சிலர், உடல் ஊனத்தோடு பிறக்கின்றனர். இதற்கெல்லாம் காரணம், பூர்வ ஜென்ம பாவங்கள் தான்.
தங்கள் பிள்ளைகளை சரியானபடி வளர்த்து, பாவ- புண்ணியங்களைப் பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டும்; பிள்ளைகளும், பூர்வ ஜென்மத்தின் பாவ, புண்ணியங்களுக்கு தகுந்தபடி பிறந்து வளரும்.
நாம் பூர்வ ஜென்மத் தில் செய்த பாவ, புண்ணியங்கள், நாம் மறு ஜென்மம் எடுக்கும் போது, அவைகளின் பலனை கொடுக்கிறது. இப்படிப் பட்ட பூர்வ ஜென்ம பாவ, புண்ணியங்களை சேர்த்து வைத்து, சஞ்சித கர்மா என்பதை அனுபவிக்க வேண்டும்.
இந்த சஞ்சித கர்மாவை, ஒரே ஜென்மத்தில் அனுபவித்து ஒழித்து விட முடியாது. இதில், ஒரு பாகம் மட்டுமே இந்த ஜென்மத்தில் அனுபவிக்க வேண்டும். இதற்கு, பிரார்த்த கர்மா என்று பெயர்.
ஒரு அசட்டுப் பிள்ளையைப் பார்த்து, “ஹூம்! எனக்குன்னு இந்த பிராப்தம் வந்திருக்கு பாரு…’ என்கின்றனரே… அதுதான் சஞ்சித கர்மாவின் ஒரு பாகம். மீதியுள்ள பாகம், அடுத்து வரும் ஜென்மாக்களில் தொடரும். ஆனால், இந்த ஜென்மாவில் செய்யும் பாவ- புண்ணியங்களுக்கு, அனுமி கர்மா என்று பெயர். இந்த கர்ம பலன், சஞ்சித கர்மாவுடன் சேர்ந்து விடும்.
அதனால், சஞ்சித கர்மா எப்போதும் போல் குறையாமலே இருக்கும். நாம் அனுபவிப்பது பிராப்த கர்மாவின் பலன். நாம் செய்யும் நல்ல கர்மாவின் பலனை, அடுத்த ஜென்மத்தில் அனுபவிக்க வேண்டும். அதேபோல் பாவ கர்மா செய்திருந்தால், அதையும் அடுத்த ஜென்மாவில் அனுபவிக்க வேண்டியிருக்கும்.
புண்ணியமோ, பாவமோ எதைச் செய்தாலும் பலனை அனுபவிக்கத் தான் வேண்டும். அதனால் தான், “பாவத்தை செய்யாதே…’ என்கின்றனர். ஆனால், சுயலாபத்துக்காக பாவங்களை செய்கின்றனர்.
“வேண்டாம்டா… இது மகா பாவம்; இதைச் செய்யாதே…’ என்றால் கேட்பதில்லை. பாவ காரியங்களை செய்வதில் ஒரு சந்தோஷம். இந்த பாவங்களில், பரிகாரமே இல்லாதது பஞ்ச மகா பாவங்கள்.
அதனால், “வாழ்க்கையில் எந்தவித பாவமும் செய்யாதே…’ என்கின்றனர். ஒரு ஜீவனுக்கு ஏதாவது துன்பம் செய்தாலும் அது பாவம்; அதற்கான பலனை அனுபவிக்க வேண்டும் என்றுள்ளது.
எதையெல்லாம் செய்தால் புண்ணியம்; எதையெல்லாம் செய்தால் பாவம் என்று சாஸ் திரங்களில் சொல்லப்பட்டுள்ளன.
கூடுமான வரையில் அவைகளை தெரிந்து, வாழ்க்கையை நடத்தினால் நல்லது; பாவத்தை செய்து பரிகாரம் தேட வேண்டாம்; கடவுளுக்கு பயந்து நடக்க வேண்டும்!