Daily Archives: பிப்ரவரி 10th, 2012

இந்திய மொழிகளில் யாஹூ

யாஹூ இணைய தளம் மேலும் சில இந்திய மாநில மொழிகளில் தன் தளத்தை வழங்க திட்டமிடுகிறது. இந்திய இன்டர்நெட் பயனாளர்களில் 80% பேர் இப்போது யாஹூ தளத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது தமிழ், இந்தி மற்றும் மராத்தி ஆகிய மொழிகளில் இத்தளம் கிடைக்கிறது. இந்தியர்கள் காட்டும் ஆர்வத்தினை அடுத்து, மேலும் ஐந்து இந்திய மொழிகளில் தன் தளத்தினை யாஹூ அமைக்க உள்ளது. யாஹூ தளத்தின் முகப்பு பக்கத்தினையும், இளைஞர்கள் மற்றும் முதியோர்கள் என அனைவரையும் ஈர்க்கும் வகையில் மாற்றி அமைக்கும் முயற்சியில் யாஹூ ஈடுபட்டு வருகிறது. யாஹூவின் போட்டியாளரான கூகுள், தன் தளத்தினை தமிழ், வங்காளி, குஜராத்தி, கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிட்டு வருகிறது. இதனை யாஹூ நிறுவனத்தின் இந்திய ஆய்வு மையத்தின் தலைவர் அருணவ் சின்ஹா தெரிவித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் இயங்கும் தன் ஆய்வு மற்றும் வளர்ச்சி மையத்திற்கென நூறு கோடி டாலர் நிதியினை யாஹூ நிறுவனம் வழங்கி வருகிறது. இதில் பெரும்பகுதி பெங்களூருவில் இயங்கும் மையத்திற்குக் கிடைக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

`டீ’ செலவு மாசத்துக்கு ரூ.50 ஆயிரம்!

வேலை செய்யும் இளைஞர்களின் `டீ` மற்றும் நொறுக்குத் தீனிச் செலவு பற்றி ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. நிறுவனங்களுக்கு தொழிலாளர்களை தேர்வு செய்து அனுப்பும் ஒரு அமெரிக்க நிறுவனம் இந்த கணக்கெடுப்பை நடத்தியது.

அந்த ஆய்வின்படி, அமெரிக்க தொழிலாளர்கள் ஆண்டுக்கு சுமார் 50 ஆயிரம் ரூபாயை (ஆயிரம் டாலர்) டீ, காபி குடிக்கவும், ஒரு லட்சம் ரூபாயை மதிய உணவு நொறுக்குத் தீவனத்துக்காகவும் செலவிடுகிறார்களாம். இளைஞர்கள், பெண்களை விட தினமும் ரூ.250 கூடுதலாக செலவழிப்பதாக தெரிய வந்துள்ளது.

அமெரிக்கர்கள், சராசரியாக வாரத்திற்கு 37 டாலர் சிற்றுண்டிக்காக செலவிடுகிறார்கள். ஆண்கள் கொஞ் சம் அதிகமாக 47 டாலர் செலவழிக்கிறார்கள். பெண் கள் இந்த விஷயத்திற்கு 27 டாலர்களே செலவு செய்கிறார்கள்.

ஆண்கள் காபி, டீ குடிப்பதற்காக வாரத்திற்கு 26 டாலர் செலவிடுகிறார்கள். இப்படி உபரி செலவு செய்வதில் ஆண்களில் இளைஞர்களுக்கும், குடும்பஸ்தர்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. 18 முதல் 34 வயதுள்ள இளைஞர்கள் வாரத்திற்கு காபிக்காக 25 டாலர் செலவிடுகிறார்கள். 35-45 வயதுடையவர்கள் 11 டாலர் தான் செல விடுகிறார்கள்.

அலுவலகத்திற்கு வெளியே செலவு செய்யாமல், அலுவலகத்திற்குள் சலுகை கட்டணத் தில் கிடைக்கும் டீ மற்றும் நொறுக்குத் தீனிகளை சாப்பிட்டு பணம் மிச்சப்படுத்தும் இளைஞர்களும் சரி பாதி உள்ளனராம்.

நிறைய அமெரிக்க பணியாளர்களின் குமுறல் என்னவென்றால், காபி தரும் லென்டிங் மெஷின் சரிவர வேலை செய்யவில்லை என்பதுதான். அவர்களின் அடுத்த புகார் பட்டியலில் இடம் பெறுவது, அலுவலகத்தில் இருக்கைகளும், கணினியும் தரமாக இல்லை என்பது!

ஆயிரம் ஊழியர்களை ஆய்வு செய்து முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

`மாசம் அம்பதாயிரத்துக்கு டீ குடிக்கிறாங்களா? அம்மாடியோவ்…!`

பூமித்தாயின் அணிகலன்களை சேதமின்றி காப்போம்!

ந்த உலகம் அழகானது. அழகான இந்த உலகில் படைக்கப்பட்ட உயிர்கள் அனைத்தும் வாழ வழி இருக்கிறது. எல்லா உயிர்களுக்கும் மகிழ்ச்சியை அளிக்கக்கூடியது இந்த பூமி. அதனால்தான் பூமியை தாய் என்கிறோம். தாயாக இருப்பதால்தான் உயிர்கள் அனைத்திற்கும் பாகுபாடின்றி உணவளிக்கிறது, இந்த பூமி. உயிர்களுக்கு உறைவிடமாகவும், பாதுகாப்பு அரணாகவும் இயற்கை அமைந்துள்ளது.

இயற்கையை புரிந்து கொண்டு உயிரினங்கள் வாழ்கின்றன. அதனால் அவை இயற்கையை அழிக்க முற்படுவதில்லை. ஆனால் அந்த அறிவும், உணர்வும் மனிதனிடம் மிக குறைவாகவே இருக்கிறது. ஆறறிவு கொண்ட மனிதன் வாரி வழங்கும் இயற்கையை வறண்டு போகச்செய்கிறான். இதை ஒரு அழிவின் தொடக்கம் என்று சொல்லலாம்.

மாசுபட்ட இயற்கை மனிதனுக்கு உதவாது. காசுக்காக அழிக்கப்படும் இயற்கை, காசு கொடுத்தாலும் மீண்டும் திரும்பவராது. மனித மனங்களுக்குள் தேவைகள் திணிக்கப்படும்போது அவை ஆசைகளாக உருவாகி, விரைவாகவே பேராசையாகிவிடுகிறது. அந்த பேராசை தீயில் மெல்ல மெல்ல இயற்கை அழிக்கப்படுகிறது. அதை உணரும் நேரத்தில் நம்மை சுற்றி பேரிழப்புகள் பல நிகழ்ந்திருக்கும்.

மனிதனைத் தவிர இந்த பூமியில் வாழும் எந்த உயிரினமும் இயற்கையை அழிப்பதில்லை. கொடூரமான சிங்கம், புலி கூட பசிக்கும்போது மட்டுமே பிராணிகளை வேட்டையாடுகிறது. கண்ணில்படும் உயிரினங்களை எல்லாம் அது அழித்துவிட்டு செல்வதில்லை. தனது உடல் தேவைக்கு மட்டும் அது இயற்கையிடம் அனுமதிபெற்று அழிக்கிறது. மனிதன் மட்டும் பின் விளைவுகளை பற்றி சிந்திக்காமல் இயற்கையை சீண்டி பார்க்கிறான்.

கடலோர பகுதிகளில் இருக்கும் சவுக்கு காடுகளை கண்மண் தெரியாமல் அழித்ததன் விளைவு, சுனாமியால் நாம் பேரழிவை சந்தித்தோம். இயற்கைக்கு மனிதன்மேல் எந்த கோபமும் இல்லை. மனிதனின் இயற்கை மீதான முரட்டுத்தனம்தான் அவனுக்கு வினையாக முடிகிறது. விலங்குகளின் இருப்பிடமான காடுகளை அழிப்பதால் அது இருக்க இடமின்றி ஊருக்குள் புகுந்து விடுகிறது. மனிதன் காடுகளை அழிப்பது, அவனுக்கே அழிவாக மாறுகிறது.

நம்மை சுற்றி இருக்கும் இயற்கை நமக்கு சொந்தம். அதை நாம் சவுகரியங்களுக்காகவும், பணத்திற்காகவும் அழிப்பது, நம் வீட்டுக்கூரையில் நாமே தீ வைத்துக்கொள்வது போன்றதாகும். தற்போது நமது வீட்டுக்கு தீவைத்துக்கொண்டு நாமே குளிர் காய்வதுபோல் இயற்கையை அழித்துக்கொண்டிருக்கிறோம்.

அறிவியல் வளர்ச்சியும் இயற்கையை அழிக்கிறது. நவீன கண்டுபிடிப்பான பூச்சிக்கொல்லி மருந்துகள், இருதலைக்கொள்ளியாக இயற்கையையும் அழிக்கிறது. மனிதனையும் அழிக்கிறது. அறிவியலின் அசுர வளர்ச்சி பூமியின் மேற்பரப்பில் உள்ள ஓசோன் மண்டலத்தில் துளைகளை ஏற்படுத்தி புற ஊதாக்கதிர்களை பூமிக்கு அனுப்பி, பூமியை வெப்ப மண்டலமாக மாற்றி, இயற்கையை அழித்துக் கொண்டிருக்கிறது.

`பிக்கினி’ என்னும் பவளத்தீவில் அணுகுண்டை வெடித்து சோதனை செய்தார்கள். அதனால் கடலில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டு, பல கோடி டன் எடையுள்ள நீர் மேலே எழும்பியது. வானை நோக்கி சிதறிய அதன் அதிர்ச்சியில் மேகங்கள் குளிர்ந்து மாதக்கணக்கில் பேய் மழையாக கொட்டியது. அதனால் ஏற்பட்ட சீதோஷ்ண மாற்றத்தால் கடலடியில் வாழ்ந்த உயிரினங்கள் அழிந்தன.

அந்த பகுதியில் தொடர்ந்து எழும்பும் உயரமான அலைகள் அந்த கடற் பகுதியையே, ஆபத்தான இடமாக மாற்றிவிட்டது. ஆக மனிதனை அழிக்க பரிசோதிக்கப்படும் அணுகுண்டுகள் இயற்கையை துவம்சம் செய்துகொண்டிருக்கின்றன. இயற்கையை பேரழிவை நோக்கி இழுத்து செல்லும் விஷயங்களில் பிளாஸ்டிக்கும் ஒன்று. மட்காத இந்த பிளாஸ்டிக், கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்தாக முடிவது மட்டுமின்றி நிலப்பரப்பையே மாசுபடுத்தி நிலத்தடி நீரை பூமிக்கு செல்லவிடாமல் தடுக்கிறது.

இயற்கையின் அழிவால் இன்று பல உயிரின வகைகளே இல்லாமல் போய்விட்டன. இன்னும் பல மெல்ல மெல்ல அழிந்து கொண்டிருக்கின்றன.

இயற்கையை நேசித்த ரவீந்தரநாத் தாகூர் அதனை வரமாக நினைத்து பூஜித்தார். மனிதர்களை இயற்கையை நோக்கி பயணிக்க வைத்தார். இந்திய மண்ணின் இயற்கை வளங்களை பொக்கிஷமாக வர்ணித்தார். விந்திய, ஹிமாசல, யமுனா கங்கா… என்று இயற்கை போகும் பாதையில் எண்ணத்தை செலுத்தி இவையே தெய்வம் என்று குறிப்பிடுகிறார்.

கேட்கும் வரம் தரும் தெய்வமாக இயற்கை இருக்கும்போது அதை காக்கும் மனிதர்களாக நாம் உருவெடுக்கவேண்டும். அழகான இயற்கை நம்மை வாழ வைக்கிறது. பூமித்தாயின் அழகுமிக்க அணிகலன் இயற்கை. இதை மாசுபடுத்தாமல் வாழ்வதுதான் மனிதனுக்கு பெருமை.

இம்மையிலேயே பிறவிப் பயன் அருளும் தெய்வம்

எந்தப் பிறவியில் என்ன புண்ணிய பாவம் செய்துள்ளோமோ அதைப் பொருத்தே அவரவர் வாழ்க்கை அமையும் என்பார்கள். அதேநேரம், இந்தப் பிறவியில் புண்ணியம் செய்திருந்து, அதற்குரிய பலனை உடனே அனுபவிக்க வேண்டுமானால், நாம் வழிபட வேண்டிய தெய்வம், மதுரையில் எழுந்தருளி அருள்பாலிக்கும் இம்மையிலும் நன்மை தருவார். இம்மை என்றால் `இப்பிறவி’ என்று பொருள். இந்த பிறவியிலேயே நன்மைகள் அருள்வதால் அவருக்கு அந்தப் பெயர் ஏற்பட்டது.

இவரை, `இன்மையில் நன்மை தருவார்’ என்றும் சொல்வதுண்டு. `இன்மை’ என்றால் `இல்லை’ என்று பொருள். கடந்த பிறவியில், புண்ணியமே சேர்த்து வைக்காமல் போயிருந்தாலும் கூட, அதற்காக பிராயச்சித்தம் கேட்டு பிரார்த்தித்தாலும், அவர்களுக்கு அப்போதே நன்மை அருளுபவர் இவர் என்பதால் இந்த பெயர் ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள்.

இக்கோவில் கருவறையில் சிவனும், மத்தியபுரிநாயகி அம்மனும் ஒரே பீடத்தில் அமர்ந்திருக்க, அவர்கள் முன்னால் சிவலிங்கம் இருக்கிறது. இவர்கள் லிங்க பூஜை செய்வதாக ஐதீகம்.

ஒருமுறை சக்தியும், சிவனும் மானிட வடிவெடுத்து மீனாட்சியாகவும், சுந்தரேஸ்
வரராகவும் மதுரை வந்தனர். அவர்கள் மதுரை நகரின் ஆட்சிப்பொறுப்பைக் கையில் எடுத்தனர். பட்டாபிஷேகம் நடக்கும் முன், இறைவனை வழிபட எண்ணினர். சிவன் மானிடப்பிறவியாக வந்து விட்டதால், லிங்க பூஜையின் மகிமையை உலகுக்கு வெளிப்படுத்தும் விதத்தில், தனக்குத்தானே பூஜை செய்வதற்காக லிங்கம் ஒன்றை வடித்தார்.

அந்த லிங்கமே இக்கோவிலில் உள்ள சிவலிங்கம். அந்த லிங்கத்துக்கு பூஜை செய்ய கையில் மலர் ஏந்தியுள்ளார் இறைவனாகிய இம்மையிலும் நன்மை தருவார். இவரது அருகிலுள்ள அம்பிகை கையில் மலர் வைத்திருக்கிறாள்.

இப்போதும், ஆவணி மாதத்தில் சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம் நடக்கும் முன், இந்தக் கோவிலுக்கு வந்து லிங்க பூஜை செய்யும் வழக்கம் உள்ளது.

இங்குள்ள அம்மன் மத்தியபுரிநாயகி கருணை மிக்கவள். திருமணத் தடையுள்ள கன்னிப்பெண்கள், இவளுக்கு மாங்கல்யம் அணிவித்து வணங்கினால் உடனடியாக திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.

அதேநேரம், இவளை கண்டிப்பானவள் என்றும் சொல்கிறார்கள். நம்மிடம் யாரேனும் நீதி தவறி நடந்து கொண்டாலோ, ஏமாற்றினாலோ அல்லது பிறவகையில் துன்பம் செய்தாலோ இவளிடம் முறையிட்டால் போதும், தக்க தண்டனையை அந்த நபர்களுக்கு கொடுத்து விடுவாள் என்கிறார்கள்.

இப்படி கருணையும், கண்டிப்பும் மிக்க மத்தியபுரி நாயகிக்கும், இம்மையில் நன்மை தருவாருக்கும் நடக்கும் திருமணத்தைக் காண்பவர்கள் இந்தப் பிறவி எடுத்த பயனை இப்போதே அடைவர்; வாழும் காலத்தில் நிறைந்த செல்வமும், வாழ்வுக்குப் பிறகு மோட்சமும் பெற்று சிறப்படைவர் என்பது ஐதீகம்.

மதுரை நகரின் மத்தியில், பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் இக்கோவில் அமைந்துள்ளது.