Daily Archives: பிப்ரவரி 12th, 2012

ஹீரோயிசத்தால் வன்முறைக்கு மாறும் மாணவர்கள்

மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள திடீர் வன்முறை எண்ணங்களால், பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். சாதாரண பிரச்னைகளுக்கு கூட மாணவர்கள் வன்முறையிலும், கொலைவெறித் தாக்குதலிலும் ஈடுபடும் காரணத்தை அறிந்து, உடனடி தீர்வு காண வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

அச்சம்:மாணவர்கள் என்றால், பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் படிக்கிறவர்கள் என்று தான், இதுவரை நினைத்தோம். தற்போது, மாணவர்கள் கூட்டமாகக் கூடினாலே, பொதுமக்களும், பெண்களும் அச்சப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.கடந்த சில தினங்களுக்கு முன், சென்னையிலுள்ள ஆங்கிலோ-இந்தியன் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு மாணவன், தனது ஆசிரியரை, கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளான். பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் மத்தியில் நடந்த இந்த சம்பவம், தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே பீதியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர் சம்பவங்கள்:கொலை நடந்த நாளில், சென்னையில் பிரசித்தி பெற்ற பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், பஸ் “டே’ கொண்டாட அனுமதி கிடைக்காததால், கல்லூரிக்கு முன் திரண்டு, அரசு பஸ்சின் மீது, கற்களை வீசி ரகளை செய்தனர். இதில், பயணிகள் உயிருக்கு பயந்து, ஜன்னல் வழியே தப்பித்தனர். பிஞ்சுக் குழந்தையுடன் பஸ்சில் வந்த பெண்களையும், கொலைவெறி மிக்க ரகளை கும்பல், விட்டு வைக்காமல் விரட்டியது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது.இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன், சென்னை நந்தனம் கலைக் கல்லூரி அருகே, மாணவர்கள் கோஷ்டியில் ஏற்பட்ட தகராறில், பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த மாணவனை, எதிர்தரப்பு மாணவர்கள் விரட்டிச் சென்று வெட்டியதால், பயணிகள் அலறியடித்து ஓடினர்.கடந்த மாதம், சென்னை புறநகரில் தங்கியிருந்த வெளிமாநில மாணவர்களில் இருவர், பயங்கரவாதிகளுடன் தொடர்பிலிருந்ததாக, போலீசார் கைது செய்தனர்.

மேற்கத்திய கலாசாரம்:இப்படி மாணவர் சமுதாயத்திற்கும், குற்றங்களுக்கும் உள்ள தூரம் குறைந்து கொண்டே வருகிறது. அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகள் மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் தான், மாணவர்களின் வன்முறை சம்பவங்களை கேள்விப்பட்டுள்ளோம். ஆனால், தற்போது இந்தியாவில், அதுவும் பாரம்பரியமும், கல்வி, பொருளாதார வளர்ச்சியிலும் மேம்படும் தமிழகத்திலும், இந்த வகை வன்முறை அதிகரித்திருப்பது, பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பீதியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

காரணம்:இந்த சம்பவங்களுக்கு, பெரிய காரணங்களை கண்டுபிடிக்க தேவையில்லை என, அனைத்து தரப்பிலுமே கருத்துகள் நிலவுகின்றன. வீட்டிலேயே பெற்றோர், பிள்ளைகளிடையே தேவையான அன்பும், பாசமும், கண்டிப்பும், கண்காணிப்பும் குறைகிறது. அதேநேரம், வன்முறை விதைகளை தூவும் படங்கள் மற்றும் கார்ட்டூன் காட்சிகளை பெற்றோரின் ஆதரவுடன், ஊக்கத்துடன், “டிவி’யில் மாணவர்கள் பார்ப்பது தான் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.முன்பெல்லாம், தொலைக்காட்சிகளில் மாணவர்களுக்கு என்றால், அறிவியல் ரீதியான, தொழில்நுட்ப ரீதியான ஆக்கப்பூர்வ நிகழ்ச்சிகளும், பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்றால், சிறு வயது மாணவர்களுக்கு, கார்ட்டூன் விலங்குகள், அதிசயமான, நகைச்சுவை வடிவிலான மனிதர்களுடன் கூடிய படங்கள் காட்டப்படும்.ஆனால், தற்போது பெரும்பாலான சினிமா, தொலைக்காட்சி, கார்ட்டூன் நிகழ்ச்சிகளில், கொள்ளைக்காரன், ரவுடி, பயங்கரவாதி போன்ற தோற்றமளிக்கும் உடை உடுத்தி, துப்பாக்கியால் சுட்டு, கத்தியால் வெட்டி பழிவாங்கும், வெறித்தனமான காட்சிகள் காட்டப்படுகின்றன.

ஹீரோயிசம்:இதனால், பல மாணவர்கள் தங்களை தாங்களே ஹீரோக்களாக எண்ணி, பள்ளிகளில், கல்லூரிகளில் படிப்பை விட்டு விட்டு, ஹீரோயிசம் காட்டும் நிலை வந்துவிட்டது. இதனால், சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை, பொது இடங்களை, தங்களது ஹீரோயிசத்திற்கான தளமாக பயன்படுத்தி, சமூகத்தை சீரழிவுக்கு கொண்டு செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.இந்த சம்பவங்களை கருத்தில் கொண்டு, மத்திய, மாநில அரசுகள் பள்ளிக்கூடங்களிலும், பாடத்திட்டங்களிலும், மாணவர்களின் மனநிலையை மாற்றும் படிப்புகளை அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், பெற்றோர் அன்பையும், பாசத்தையும் சுதந்திரமாக கொடுக்கும் நிலையில், பிள்ளைகளுக்கு கண்டிப்பையும், கண்காணிப்பையும், சிறுவயதிலிருந்தே ஏற்படுத்த வேண்டும். வன்முறை சினிமாக்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பதிலிருந்து, தாங்களும் விலகுவதுடன், பிள்ளைகளையும் விலகியிருக்க செய்வதே, இனி வரும் காலம், வன்முறையை துறந்து, சமுதாயத்திற்கு வழிகாட்டும் மாணவர்களை உருவாக்க உதவும்.

சினிமா, “டிவி’ காட்சிகளுக்கு சென்சார்:சினிமா, “டிவி’யில் அதிகரிக்கும் வன்முறை காட்சிகள் தான், மாணவர்கள் மற்றும் இளைஞர்களை, திசை திருப்பி வன்முறை விதைகளை தூவக் காரணமாகின்றன. சில தினங்களுக்கு முன், ஆசிரியை மாணவன் கொலை செய்த சம்பவத்தில், “இந்தி திரைப்படம் ஒன்றைப் பார்த்து தான் கொலை செய்ய தெரிந்து கொண்டேன்’ என்று, மாணவன் கூறியிருப்பது, சிந்திக்க வேண்டிய ஒன்று. இப்போதாவது, தங்கள் சந்ததிகளின் நலன் மற்றும் சமுதாய மாணவர் நலனைக் கருத்தில் கொண்டு, வன்முறை காட்சிகளை, மனசாட்சியுடன் ரத்து செய்ய, சென்சார் போர்டு உறுப்பினர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உங்களுக்கு நிதி சுதந்திரம் இருக்கிறதா?

நிதி நிர்வாகம், அது தனி மனித நிதி நிர்வாகமோ அல்லது நிறுவனத்தின் நிர்வாகமோ அவை வளர்ச்சி பெற, `கட்டுப்பாடு’ மிக அவசியம். தனி மனித கட்டுப்பாடு, நிர்வாக கட்டுப்பாடு ஆகியவை வளர்ச்சி பெற `ஒழுக்கம்’ மிக அவசியம். திட்டமிடுதல், திட்டமிட்டபடி செயல்படுதல் ஆகியவை அவசியம்.

கட்டுப்பாடு என்பது அடிமைத்தனம் ஆகாது. மனமுவந்து ஏற்றுக்கொண்டால், இந்த கட்டுப்பாடு ஒரு சுதந்திரம் எனத் தெரிய வரும். எனவே, நிதி சுதந்திரம் பெற (Financial Freedom) இந்த ஒழுக்கமானது அவசியம்.

நிதி சுதந்திரம் என்றால் என்ன? நம்மில் எவ்வளவு பேருக்கு இந்த நிதி சுதந்திரம் உள்ளது? இந்த நிதி சுதந்திரம் அடைய என்ன செய்ய வேண்டும்? இவற்றை சற்று விரிவாக பார்ப்போம்.

நம்மில் எத்தனை பேர், நாளைய பற்றிய கவலைகள் ஏதுமின்றி நிம்மதியாக உறங்க முடிகின்றது? இந்த கவலைகளில் பல பணம் சார்ந்ததாகவே இருக்கும். எவர் ஒருவர், தான் இல்லாவிட்டாலும், தன் குடும்பம் பணம் சார்ந்த விஷயங்களில் பாதிப்பின்றி இருக்கும் வகையில் தன் வாழ்க்கையை திட்டமிட்டு அமைத்து கொண்டுள்ளாரோ, அவருக்கே இந்த `நிதி சுதந்திரம்’ உள்ளது எனக் கூறலாம்.

இந்த `நிதி சுதந்திரம்’ அனைவருக்கும் சாத்தியமா! என்றால் சாத்தியமே. அதற்கு, மேலே சொன்ன `கட்டுப்பாடு நிதி ஒழுக்கம்’ (Financial Discipline) மிக அவசியம். இந்த நிதி சுதந்திரம் கைகூட `நிதி திட்டமிடுதல்’ (Financial Planning) அவசியமாகிறது. நிதித் திட்டமிடுதல் என்பது ஒருவருடைய வாழ்க்கையின் குறிக்கோளுக்கான, அவருடைய நிதி நிர்வாகத்தின் மூலம் அடைவதற்கான ஒரு வழிமுறையாகும். இதில், சொந்த வீடு, சொந்த வாகனம், தரமான கல்வி, உயர் கல்வி, குழந்தைகளின் திருமணம் மற்றும் ஓய்வு ஊதியம் ஆகியவை அடங்கும்.

நிதித் திட்டமிடுதல் என்பது ஒரு வழிமுறை எனப் பார்த்தோம். இப்போது அதற்கான திட்டங்கள் யாவை என்றும், அவற்றின் பயன்பாடுகளையும் வரிசைப்படுத்துவோம்.

1. ஆயுள் காப்பீடு – டேர்ம் பிளான் (Term Plan)

2. ஆயுள் காப்பீடு – யூலீப் திட்டங்கள் (Unit Linked Insurance Plan)

3. மருத்துவக் காப்பீடு – (Mediclaim Policy)

4. பரஸ்பர நிதித் திட்டங்கள் (குறிப்பாக SIP/SWO) & (Mutual Fund)

5. மனை மற்றும் வீடு

6. பங்குச்சந்தை முதலீடு – நீண்ட கால அடிப்படையில் முதலீடு.

மேற்கூறிய நிதித் திட்டங்களின் பயன்பாடுகளை சுருக்கமாக கீழே காண்போம்.

1. ஆயுள் காப்பீடு – டேர்ம் பிளான் : குறைந்த பிரிமியம் அதிக காப்பீடு.

2. ஆயுள் காப்பீடு – யூலீப் திட்டங்கள் : நீண்ட கால அடிப்படையில் (20, 25 மற்றும் 30 ஆண்டு காலம்) ஒருவரின் வருமானத்தைப் பாதுகாக்கவும், மேலும் சிறப்பான ஓய்வூதியத்திற்காகவும் பயன்படுத்தலாம்.

3. மருத்துவக் காப்பீடு: குடும்பத்திற்கான Floater Policy திட்டங்கள் – முழு குடும்பத்திற்கான Cashless facility.

4. பரஸ்பர நிதித் திட்டங்கள்: மாதம் 100 முதல் 500, 1000 ரூபாய் என நாம் சேமிக்கும் திறனைப் பொறுத்து நீண்ட கால அடிப்படையில் நல்ல லாபம் அடைந்திட சிறந்தவழி.

5. மனை மற்றும் வீடு: வீட்டிற்கானத் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் இவற்றில் முதலீடு செய்வது நல்ல பலனை அளிக்கும்.

6. பங்குச்சந்தை முதலீடு : இ கோல்டு (Gold ETF) மற்றும் முன்னணியில் உள்ள நல்ல நிறுவனங்களில், பங்குச்சந்தை வீழ்ச்சியடைகின்ற காலங்களில், சிறிது சிறிதாக வாங்கி, நீண்ட காலத்திற்கு (3-5 ஆண்டுகள் வரை) முதலீடு செய்வது நல்ல எதிர்பார்த்த பலனை அளிக்கும்.

இப்போது உள்ள காலக்கட்டத்தில், தனியார் மயமாக்கப்பட்ட நிலையில் மேற்கூறிய திட்டங்களில் முதலீடு என்பது மிக சுலபமான ஒரு விஷயமாகும்.

இனி, நிதித் திட்டமிடுதலில் உள்ள சில அடிப்படையான உண்மைகளைப் பார்ப்போம். இந்த உண்மைகளை புரிந்து கொள்ளாமல், நிதித் திட்டமிடுதல் என்பது முழுமை பெறாத ஒரு விஷயமாகிவிடும்.

1. வட்டி விகிதம் (Interest Rate): நாம் ஆயுள் காப்பீடு திட்டங்களில் சேரும் போது நம் முதலீட்டிற்கு உரிய உண்மையான ஆதாயம் ஆண்டிற்கு 8 சதவீதம் வரை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அதாவது, வருமானவரி விலக்கு Sec 80 சி மற்றும் Sec 10 (10 ஞி) படி.

2. மாதம் ரூபாய் 1500 முதல் 2000 வரை 20 வருடங்கள் சேமித்தால், 9 சதவீத கூட்டு வட்டியில் நாம் லட்சாதிபதியாகலாம்.

3. உங்களுடைய முதலீட்டின் ஆதாயமானது, பணவீக்கத்தை விட குறைவாக இருப்பின் உங்கள் முதலீடு சிறுக, சிறுக கரைந்து விடும்.

கடன் அட்டைகள் (Credit Cards): 1. உங்களுடைய (EMI : Equated Monthly Instalment) மாதத் தவணை உங்களுடைய வருமானத்தை விட 40 சதவீதம் அதிகரிக்கும் போது, எதிர் காலத்தில் உங்களால் மாதத் தவணையை செலுத்த சிக்கல் வரும்.

2. உங்களுடைய கடன் அட்டைகளின் மாதத் தவணை உங்கள் வருமானத்தில் 40 சதவீதத்தை தாண்டும்போது நீங்கள் அபாய கட்டத்தில் இருக்கின்றீர்கள் என உணர வேண்டும்.

ஆயுள் காப்பீடு: யாருடைய குடும்பம் எல்லாம் ஒருவருடைய வருமானத்தை நம்பி இருக்கின்றதோ, அவருக்கெல்லாம் அவசியம் ஆயுள் காப்பீடு தேவை. எப்போது உங்கள் முதலீட்டின் ஆதாயம் எந்த ஒரு இடர்பாடு இன்றி (Risk free Returns) உங்கள் சராசரி செலவுகளை விட, அதிகமாக வருகின்றதோ, அப்போது உங்களுக்கு ஆயுள் காப்பீட்டின் தேவை குறைகின்றது.

பொதுவாக, ஒருவரின் ஆண்டு வருமானத்தில் 10 மடங்கு ஆயுள் காப்பீடு இருத்தல் அவசியம்.

உதாரணம்: ஆண்டு வருமானம் 2 லட்சம் எனில் ஆயுள் காப்பீட்டின் தேவை 20 லட்சம் ஆகும்.

உங்களுடைய ஆண்டு பிரிமிய தவணையானது, உங்களுடைய ஆண்டு வருமானத்தில் 10 சதவீதத்துக்கும் மேல் போகும் போது, எதிர்காலத்தில் உங்கள் தவணை செலுத்துவதில் சிரமம் ஏற்படலாம்.

திட்டமிடுதல், திட்டமிட்டபடி செயல்படுதல், தகுந்த நேரத்தில் தகுந்த ஆலோசனை படி, திட்டங்களில் சிறு சிறு மாற்றங்கள் செய்தல் ஆகியவை, நாம் மேற்கூறிய `நிதி சுதந்திரம்’ அடைவதற்கான உத்திகள் ஆகும். அச்சுதந்திரம் உங்கள் கைகளில்தான் உள்ளது.

`நம் முதல் செலவு சேமிப்பே!

சேமிப்போம், முதலீடு செய்வோம், வளம் பெறுவோம்.

மனிதனின் நினைவாற்றல்!

உங்களது நினைவாற்றலைக் கூர்மையாகவும், தீவிர மாகவும் வைத்திருங்கள். வெறுமனே திருப்பித் திருப்பி ஒன்றைப் படிப்பதை விட அந்த வாசகத்தை நாமே புரிந்து, பின்னர் அதை நமது சொந்த வார்த்தைகளில் வெளியிடுவது பயன் தரும். எதையேனும் ஒன்றைப் படித்தபிறகு மனதில் அதை மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்த்துக்கொள்ளுங்கள். உங்களால் அதை நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை என்றால் உடனே புத்தகத்தைத் திருப்பாதீர்கள். நினைவுக்குக் கொண்டுவர தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். சற்றுக் கஷ்டப்பட்டும் நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை என்றால் புத்தகத்தைத் திருப்பிப் பார்ப்பது நல்லது. நினைவாற்றலைப் பயிற்சியின் மூலம் வளப்படுத்த முடியும். பாடல்களை மனனம் செய்வது மிகச் சிறந்த பயிற்சி.

நினைவாற்றல் 20- 25 வயது வரை வளர்ச்சியடைகிறது. 40- 45 வயது வரை அது நிலையாக நíடிக்கிறது. அதற்குப் பின் பலவீனமடைகிறது. பிம்ப அடிப்படையிலான நினைவில் 75 சதவீதம் நமது 25 வயதுக்கு முன்னரே பெறப்பட்டது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எனினும் தர்க்க ரீதியான நினைவாற்றலுக்கு வயது வரம்பு ஏதும் கிடையாது.

கோவா ஸ்பெஷல் மீன்

சுற்றுலா நகரான கோவாவில் அதிகமான சுற்றுலா பயணிகளால் விரும்பிச் சாப்பிடப்படும் உணவுகளில் மீன் உணவு ஒன்று. பதமான பக்குவத்தில் வறுத்தும், பொறித்தும் எடுக்கப்படும் மீன்களை இதமான காற்றோட்டத்தில் நண்பர்கள், குடும்பத் தினருடன் அமர்ந்து ருசித்துச் சாப்பிடுவது சுகமோ சுகம்தான். வீட்டிலும் ஒருமுறை கோவா பக்குவத்தில் மீன் சமைத்து சாப்பிட்டுப் பாருங்களேன்.

தேவையான பொருட்கள்

வஞ்சிர மீன் – 1/2 கிலோ

மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்

வெங்காயம் – 250 கிராம்

தேங்காய் – 1/2 மூடி

புளி – 50 கிராம்

மிளகு – 6

செய்முறை

* மீனைச் சுத்தம் செய்து மஞ்சள்தூள், உப்பு தடவி சிறிது நேரம் ஊற வைக்கவும்.

* ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மீனைப் போட்டு வறுத்தெடுக்கவும்.

* தேங்காயையும், வெங்காயத்தில் பாதியளவும் எடுத்துக் கொண்டு விழுதாக்கவும்.

* மீதி வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகைத் தாளிக்கவும். வெங்காயத்தை வதக்கவும்.

* தேங்காய் விழுதைச் சேர்த்து, மிளகாய்த்தூள், போதுமான உப்பு நீர் சேர்த்துக் கிளறவும்.

* மசால் நன்கு வெந்து நீர்வற்றி கெட்டியானதும் வறுத்த மீனைச் சேர்த்துக் கிளறி இறக்கிப் பரிமாறவும்.

செப் தாமு