Daily Archives: பிப்ரவரி 13th, 2012

திருப்பதியில் ஓர் அதிசயம்!

இதோ இங்கே இருக்கும் படத்தைப் பாருங்கள். இரண்டு கற்பாறைகள் இணைந்து பாலம் போல் அமைந்திருக்கிறதா? இந்த அமைப்பினை சிலா தோரணம் என்பார்கள். சிலா என்றால் கல். தோரணம் என்றால் விளைவு. சிலா தோரணம். யாரோ செதுக்கியதல்ல இது; இயற்கையாகவே அமைந்தது. உலகிலேயே மூன்று இடங்களில் தான் இந்த அமைப்பு இருக்கிறதாம். ஒன்று அமெரிக்காவில் உள்ள கூடா வானவில். அடுத்தது, இங்கிலாந்தில் இருக்கும் பால்ட்ரேடியம் படிகப் பாறைகள். மூன்றாவது நம் திருப்பதியில் இருக்கிறது.

வேங்கடவன் ஆட்சி செய்யும் திருமலையில் ஒரு பாறைப்பகுதியில் அமைந்திருக்கிறது இந்த சிலா தோரணம். இது உருவாகி சுமார் 150 கோடி வருடங்களாவதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் சொல்கின்றனர். இந்த சிலா தோரண அமைப்புள்ள இடத்திற்கு சற்று தொலைவில் இருந்த புற்றில் இருந்துதான் வேங்கடவன் வெளிப்பட்டாராம். எனவே இது திருமலைவாசனின் அவதார இடமாகவும் கருதப்படுகிறது.

திருமலையானின் சந்நதிக்குப் பின்புறம் சுமார் 1 கி.மீ. தொலைவில் இந்த சிலா தோரணத்தை அருங்காட்சிப் பொருளாகப் பாதுகாத்து வைத்துள்ளனர். திருமலையான் கோயிலில் இருந்து இங்கு செல்ல ஆட்டோ வசதி உண்டு. அடுத்த முறை திருப்பதி செல்லும்போது இந்த சிலாதோரணத்தையும் கண்டு வாருங்களேன்.

2012ல் லினக்ஸ் பயன்பாடு

சென்ற ஆண்டு பெர்சனல் டெஸ்க் டாப் கம்ப்யூட்டருக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டம் பிரிவில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இதில் இயங்கும் அனைத்து நிறுவனங்களும் கொண்டு வந்த மாற்றங்கள், அறிவித்த புதிய திட்டங்கள் மக்களிடையே நிறைய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தின. குறிப்பாகச் சொல்வ தென்றால், மொபைல் சாதனங்களுக்கென வடிவமைக்கப்பட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டங்களின் சிறப்புகளை, பெர்சனல் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும் கொண்டு வர பல நிறுவனங்கள் முயற்சி செய்து வெற்றியும் பெற்றன. இதனைக் கண்ட மக்கள், கிடைக்கும் சிஸ்டத்திற்கு நாம் வளைந்து கொடுக்காமல், நாம் விரும்பும் வகையில் செயல்படக் கூடிய சிஸ்டம் இருக்குமா என்று தேடத் தொடங்கினார்கள். அவர்களுக்கு லினக்ஸ் கை கொடுத்தது. இந்த ஆண்டில் லினக்ஸ் சிஸ்டம் நிச்சயம் இன்னும் அதிகமாகப் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம். இதற்கான காரணங்களை இங்கு காணலாம்.
1. பலவகைத் தன்மை: லினக்ஸ் பற்றிக் குறிப்பிடுகையில், அதனை விரும்பாதவர் கள், அந்த சிஸ்டம் பல வகைகளில் துண்டு துண்டாக உள்ளது என்பார்கள். சொல்லப் போனால், அதுதான் லினக்ஸ் சிஸ்டத்தின் வலுவான சிறப்பு என்று சொல்லலாம். லினக்ஸ் டிஸ்ட்ரிபியூட்டர்கள் என்று சொல்லப்படுபவர்கள், பயனாளர்களின் தேவைகளை இலக்காகக் கொண்டு லினக்ஸின் வெவ்வேறு படிவங்களை வடிவமைக்கின்றனர். மின்ட் மற்றும் உபுண்டு (Mint / Ubuntu) போன்றவை பயன்பாட்டினை முன்னிறுத்துகின்றன. பெடோரா (Fedora) போன்றவை பாதுகாப்பி னையும், நிறுவனங்களின் தேவைகளையும் முன்னிறுத்தியுள்ளன.
2. தனிநபருக்கேற்றவை: லினக்ஸ் சிஸ்டம் பலவகையான பதிப்புகளில் கிடைப் பதனால், நம் செயல்பாடுகளின் தன்மைக் கேற்ப நமக்கு வேண்டிய பதிப்பினைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். உபுண்டு தரும் யூனிட்டி டெஸ்க்டாப் பிடிக்க வில்லையா? மிண்ட் தரும் ஜிநோம் 3 பிடிக்கவில்லையா? இவற்றை விடுத்து மற்றவற்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். இவற்றை வடிவமைத்தவர் யாரும், இந்த சிஸ்டத்தினை நீங்கள் இப்படித்தான் பயன்படுத்த வேண்டும் என எந்த வரையறையும் விதிப்பதில்லை.
3. திறவூற்று பெட்டகம்: லினக்ஸ் ஒரு திறவூற்றுப் பெட்டகம் (Open Source). ஓப்பன் சோர்ஸ் என அழைக்கப்படும் வகையினைச் சார்ந்தது. இதன் மூலக் குறியீட்டுக்கு யாரும் சொந்தம் கொண்டாடுவது இல்லை. யார் வேண்டு மானாலும் இதனைத் தங்கள் தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம். மிகப் பெரிய அளவிலான அப்ளிகேஷன்களின் தொகுப்பு இது என இதனைக் கூறலாம். இதனை யார் வேண்டுமானாலும் மாற்றிக் கொண்டு பயன்படுத்தலாம்.
4. இலவசம்: லினக்ஸ் சிஸ்டத்தினைப் பெற்று பயன்படுத்த எந்தக் கட்டணமும் இல்லை. வர்த்தக ரீதியாகப் பயன்படுத்த, தொடர்ந்து தனிக் கவனத்துடன் கூடிய சப்போர்ட் தேவை என்றால் மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும். தனி நபர்கள் மற்றும் பிற நிறுவன சப்போர்ட் வேண்டாதவர்கள் எந்தக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. திறவூற்றா கவும், இலவசமாகவும் இருப்பது லினக்ஸ் சிஸ்டத்தின் இரு தனி சிறப்புகளாகும்.
5. நம்பிக்கை தன்மை: இந்த சிஸ்டத்தினைச் சார்ந்து பயன்பாட்டினை தைரியமாக மேற்கொள்ளலாம். குறிப்பாக சர்வர்கள் இயக்கத்தில், லினக்ஸ் மிக அதிகமாக விரும்பப்படும் ஓர் இயக்கமாகும். லினக்ஸ் பயன்படுத்துகையில், கம்ப்யூட்டர் இயக்கம் முடங்கிப் போகுமோ என்ற கவலை இல்லாமல் இயங்கலாம்.
6. கூடுதல் வேகம்: மற்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் இயங்க, ஹார்ட்வேர் தேவை மிக அதிகமாக இருக்கும். ஆனால், லினக்ஸ் இயங்க அந்த அளவிற்கு ஹார்ட்வேர் தேவை இருக்காது. அதே நேரத்தில், இயக்க செயல் வேகம் மற்றவற்றைக் காட்டிலும் கூடுதலாகவே இருக்கும்.
7. பாதுகாப்பானது: வைரஸ் மற்றும் பிற மால்வேர் தொகுப்புகள் எப்போதும் குறி வைப்பது விண்டோஸ் இயக்கத்தினைத் தான். ஏனென்றால், அதிகம் பயன் படுத்தப்படுவது விண்டோஸ் தான். ஆனால், லினக்ஸ் உலகில் இது மிக, மிகக் குறைவு. மேலும் கூடுதல் பாதுகாப்பு வழங்க பல தர்ட் பார்ட்டி புரோகிராம்கள் கிடைக்கின்றன.
8. தேடுதல்கள் தரப்படும்: லினக்ஸ் பொறுத்தவரை அது ஓப்பன் சோர்ஸ் வகையாக இருப்பதால், உலகெங்கும் அதன் ரசிகர்கள், இந்த இயக்கம் சார்ந்த பல தீர்வுகளைத் தந்த வண்ணம் உள்ளனர். பல ஆயிரக்கணக்கான உதவிக் குழுக்கள் உள்ளன. கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும் என்றபடி, எந்த பிரச்னை என்றாலும் நொடியில் உங்களுக்குத் தீர்வு இணைய வழியாகக் கிடைக்கிறது.
9. தொடர் முன்னேற்றம்: பல்வேறு குழுக்கள் லினக்ஸ் சிஸ்டம் குறித்து தொடர்ந்து இயங்கி வருவதால், இந்த குழுக்களில் உள்ள வல்லுநர்கள், லினக்ஸ் சிஸ்டத்தினைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகின்றனர். புதிய வசதிகள் அளிப்பதோடு, ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், அவை உடனடியாகச் சரி செய்யப்படுகின்றன. மாதக்கணக்கில் பேட்ச் பைல்களுக்காகக் காத்திருக்க வேண்டியதில்லை.
10. இயைந்த இயக்கம்: லினக்ஸ் மற்ற இடங்களில் இயங்கும் சிஸ்டத்துடன் இயைந்ததாகவே உள்ளது. உலகின் எந்த மூலையில் இயங்கும் லினக்ஸ் சிஸ்டத்துடன் எந்த பதிப்பும் இயைந்து இயங்கும் தன்மை உடையதாகவே உள்ளது. இதனால், எந்தப் பிரச்னையும் இன்றி, உலகளாவிய சிஸ்டம் லினக்ஸ் மூலம் நமக்குக் கிடைக்கிறது.
இந்த சிறப்புகள், லினக்ஸ் சிஸ்டத்தினை கம்ப்யூட்டர் இயக்கத்தின் உற்ற தோழனாகக் காட்டுகின்றன. இதுவே தொடர்ந்து இதன் பயனாளர்களின் எண்ணிக்கையினை உயர்த்தும் காரணமாக வும் உள்ளது. இந்த ஆண்டில் இந்த உயர்வு சற்று அதிகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிவைஸ் மேனேஜர்

கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து ஹார்ட்வேர் சாதனங்கள் குறித்தும் தகவல்களைக் கொண்டுள்ள இடம் தான் டிவைஸ் மேனேஜர். மவுஸ், கீ போர்டு, மோடம், மானிட்டர், சவுண்ட் கார்ட் என அனைத்து ஹார்ட்வேர்களும் எப்படி ஒவ்வொன்றுடனும் இணைக்கப்படுகின்றன என்று இதில் தெரியவரும். அத்துடன் ஒவ்வொரு ஹார்ட்வேர் சாதனமும் எப்படி இயங்க வேண்டும் என்பதனையும் இதன் மூலம் சென்று கான்பிகர் செய்திடலாம். இதன் மூலம் டிரைவர்களை அப்டேட் செய்திடலாம்; ஹார்ட் வேர் செட்டிங்குகளை மாற்றிட லாம்; பிரச்னைகளை எளிதாக தீர்த்துவிடலாம். ஏதாவது ஒரு ஹார்ட்வேர் சாதனத்தில் பிரச்னை இருப்பதாகத் தெரிந்தால் டிவைஸ் மேனேஜர் சென்று அந்த குறிப்பிட்ட சாதனம் எப்படி கான்பிகர் செய்யப்பட்டிருக்கிறது என்று பார்த்து பிரச்னைகளைத் தீர்க்கலாம். தற்காலிகமாக அவற்றை நீக்கி மீண்டும் இன்ஸ்டால் செய்திடலாம். ஆனால் இவை எல்லாம் நன்றாகத் தெரிந்த பின்னரே இவற்றில் கை வைக்க வேண்டும். என்ன என்று தெரிந்து கொள்வதில் தவறில்லை. டிவைஸ் மேனேஜரைக் காண My Computer ஐகானை ரைட் கிளிக் செய்து Properties தேர்ந்தெடுக்கவும். அதில் உள்ள டேப்களில் Hardware என்ற டேபைக் கிளிக் செய்தால் கிடைக்கும் விண்டோவில் Device Manager என்ற பட்டனைக் கிளிக் செய்து டிவைஸ் மேனேஜரைப் பெறலாம். இங்கு கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து ஹார்ட் வேர் சாதனங்களும் இடம் பெற்றிருக்கும். ஏதாவது ஒரு சாதனத்தின் இயக்கநிலையை அறிய வேண்டும் என்றால் பட்டியலில் அதனைப் பார்த்து அதன் மீது இருமுறை கிளிக் செய்திடவும். அந்த சாதனத்துடன் தொடர்புடையவை தெரிய வரும். அதில் ஏதாவது ஒன்றில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Properties தேர்ந்தெடுக்கவும். இப்போது கிடைக்கும் டேப்களில் General என்ற டேபைக் கிளிக் செய்தால் Device status பாக்ஸ் கிடைக்கும். இங்கு அந்த சாதனம் சரியாகச் செயலாற்றுகிறதா என்ற தகவல் கிடைக்கும். உங்களைப் பொறுத்தவரை அதில் பிரச்னை இருப்பதாகத் தெரிந்தால் Troubleshoot பட்டனை அழுத்தி பிரச்னையைச் சரி செய்வதில் முனையலாம்.

வயிற்றிலும் “பவர் கட்டா’ மூலிகை மருத்துவம்

நமது உடம்பிற்கு தேவையான ஆற்றலை பெற நமது உதவுவது பசியே. பசி சீராக இல்லாவிட்டால் உடலுக்கு ஆற்றல் கிடைக்காது. பித்தம் நமது பசியை சீர்செய்யும் பொருளாக விளங்குகிறது. உடலின் ஆற்றலுக்கு பித்தமே அவசியம். பித்தம் அடங்கினால் பேசாமல் போய்விடு என்று சித்த மருத்துவம் பித்தநாடியின் சிறப்பை வலியுறுத்துகிறது. நமக்கு தேவையான பசியை உண்டாக்குவதும், தேவையற்ற கொழுப்பை கரைத்து, சக்தியாக மாற்றுவதும் பித்தத்தின் பணியாகும். நாம் உண்ணும் உணவை சரியானபடி செரிக்கவைத்து, தேவையற்ற கொழுப்புகள் அங்குமிங்கும் படியாமல் பாதுகாக்கும்

உணவுகள் பித்தசமனி என்று அழைக்கப்படுகின்றன. சீரகம், வெந்தயம், இஞ்சி, பூண்டு போன்ற உணவுகள் பித்தத்தை சமப்படுத்தும் உணவுகளாகும். பித்தம் சரியாக இயங்காவிட்டால் நமது உணவு செரிமானமாவதில் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. பித்தத்தின் இயக்கத்தில் ஏற்படும் மாறுபாடுகள் நமது உடலின் ஆற்றலை தடை செய்கின்றன.

நமக்கு பசி ஏற்படும்போதெல்லாம் ஒருவிதமான எரிச்சல் வயிற்றில் ஏற்பட்டு, உணவு உண்ணும் வேட்கை அதிகமாகிறது. நாம் உண்ணும் உணவிலுள்ள பல்வேறு வகையான சத்துகள் உடலின் எடையையும் பருமனையும் அதிகப்படுத்துகின்றன. உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் உணவின் அளவை குறைக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். இதனால் உடற்பருமன் அதிகமாவதுடன், உடற்பருமன் சார்ந்த சர்க்கரை நோய். ரத்தக்கொதிப்பு, மிகு கொழுப்பு போன்ற தொல்லைகளுக்கு ஆளாகின்றனர். உடற்பருமனின் காரணமாக மூச்சு வாங்குதல், உடலின் அங்கமைப்புகள் மாறுபடுதல், முழங்கால், கணுக்காலில் வலி உண்டாதல், தொண்டை வறட்சி, கழுத்து, புட்டம் போன்ற சதைப்பகுதிகள் தொங்கி காணுதல், நடக்கும்பொழுது அதிக உடல் எடையின் காரணமாக அசைந்து செல்வது போன்ற தோற்றம், பிறரின் கேலிக்கு ஆளாதல் போன்ற பாதிப்புகள் உண்டாகின்றன.

உண்ணும் உணவின் அளவை நமது வேலை மற்றும் எடைக்கு தகுந்தவாறு மாற்றிக்கொள்ள வேண்டும். கூடுதல் கலோரிகள் கொண்ட உணவை தவிர்த்து, நார்ச்சத்துகள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியமாகும். நாம் உண்ணும் உணவுடன் பசியை கட்டுப்படுத்தும் பொருட்களையும் சேர்த்து உட்கொள்வது நல்லது. இதனால் எடை குறையும். உணர்ச்சிவசப்பட்ட பசி என்ற எமோசனல் பசியை கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகும். நமக்கு பிடித்தமான உணவுகள் என்றால் அதிகமாக சாப்பிடுவதும், பிடிக்காத உணவுகள் என்றால் தவிர்ப்பதும் உடலின் செயல்பாட்டில் மாறுபாடுகளை ஏற்படுத்தி, பல்வேறு உடற்கோளாறுகளை உண்டாக்குகிறது. இதனால் தேவையற்ற கொழுப்புகள் உடலில் சேர்ந்து, பல நோய்கள் உண்டாகிறது. நாம் உண்ணும் உணவின் அளவை கட்டுப்படுத்தவும் அதிக பசியினால் உண்டாகும் நாப்புளிப்பு மற்றும் சுவையின்மை ஆகியவற்றை நீக்கவும் பயன்படுவதுடன், செரிமான ஆற்றலைநிலைநிறுத்தும்

அற்புதமூலிகை கள்ளி முளையான். கேரலுமா பிம்பிரியேட்டா என்ற தாவரவியல் பெயர் கொண்ட அப்போசினேசியே குடும்பத்தைச் சார்ந்த கள்ளி செடிகளின் தண்டுகள் மருத்துவ குணம் வாய்ந்தவை. எழுமான்புளி என்ற வேறு பெயர் கொண்ட இந்த மூலிகையின் புளிப்புச் சுவையானது ஊறுகாய்,துவையல் போன்றவை தயார் செய்ய உதவுகிறது. இதன் தண்டுகளிலுள்ள ஸ்டார்வோசைடுகள் மற்றும் பிரக்னின் கிளைக்கோசைடுகள் தேவையற்ற கொழுப்பை நீக்கி, பித்தத்தை கட்டுப்படுத்தி, உடலுக்கு தேவையான அளவு மட்டுமே பசியை உண்டாக்கு கிறது. அதுமட்டுமின்றி, உடலுக்கு வலுவையும் தருவதால்பஞ்சகாலத்தில்உட்கொள்ளக்கூடிய உணவாகவும் முற்காலத்தில் இவை பயன் பட்டன.

கள்ளிமுளையான் தண்டை மேல்தோல், நார், கணு நீக்கி, நல்லெண்ணெய் விட்டுவதக்கிக் கொள்ள வேண்டும். மிளகாய் வற்றல்,உளுத்தம்பருப்பு, கடுகை சிவப்பாக வறுத்து, இத்துடன் வதக்கிய கள்ளிமுளையான், தேங்காய் துருவல் சேர்த்து மைய அரைத்து, துவையல் போல் செய்துகொள்ள வேண்டும். இதனை உணவுக்கு தொட்டுக்கொண்டு சாப்பிட உடலில் தேங்கிய அதிகப்படியான கொழுப்பு கரையும். உடற்பருமன் நீங்கும். கள்ளிமுளையானை தோல் நீக்கி, நார், கணு நீக்கி, நல்லெண்ணெய்விட்டு வதக்கி மைய அரைத்துக்கொள்ள வேண்டும். மிளகாய்வற்றல், உளுத்தம்பருப்பு மற்றும் வெந்தயத்தை வறுத்து, பொடித்து வைத்துக்கொள்ள வேண்டும். பின் நல்லெண்ணெயில் கடுகை போட்டு பொரித்து, அத்துடன் வதக்கிய கள்ளிமுளையான் மற்றும் பொடிகளை கலந்து, சிறிது பெருங்காயத்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி, அத்துடன் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி மூடிவைத்துக்கொள்ள வேண்டும். இதனை உணவுடன் சேர்த்து சாப்பிட தேவையற்ற பசி குறையும். பித்தம் தணியும்.

-டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ்

உனக்குள்ளே நிம்மதி

 

`தேடுங்கள்; கண்டடைவீர்கள்’ என்பது ஏசுநாதர் வாக்கு.

`எங்கே நிம்மதி? அங்கே கிடைக்குமா? இங்கே கிடைக்குமா?’ என்று தேடினால் நீங்கள் காணமாட்டீர்கள்.

அது உங்கள் உள்ளத்துக்கு உள்ளேயே ஒளி மயமாக நிற்கிறது.

பாண்டவர்களும், வனவாசம் புரிந்தார்கள்; ராமனும் வனவாசம் சென்றான்; தேவர்களும் ஒளிந்து வாழ வேண்டியிருந்தது.

கேட்பவர்களுக்கெல்லாம் வரம் கொடுத்த சிவபெருமானுக்கும் நிம்மதியற்ற காலம் இருந்தது.

நிம்மதிக் குறைவு என்பது எல்லோருக்கும் ஒரு நாள் வந்தே தீர்கிறது.

பணக்காரனாயினும், ஏழையாயினும் வாழ்க்கைப் பயணத்தில், ஏதோ ஒரு சக்கரத்தில் காலைக் கொடுத்து விடுகின்றான்; கொஞ்சக் காலம் அவனை வாட்டி எடுக்கிறது.

ஜீரணிக்கத் தெரிந்தவனுக்கு மலை கடுகளவு; அது தெரியாதவனுக்கு கடுகு மலையளவு.

கொஞ்சம் மெளனத்தைக் கடைப்பிடியுங்கள். அதில் ஒருவகை நிம்மதியுண்டு.

`மெளனம் கலக நாஸ்தி’ என்பார்கள்.

அளந்து பேசி, அளந்து வாழ்கிறவனுக்கு அதிகபட்ச ஆசை கிடையாது.

ஆசை குறையக் குறையத் துன்பமும் குறைந்து போகிறது.

வாழ்க்கை கட்டுக்குள் வந்தால், மனமும் கட்டுக்குள் வந்து விடுகிறது; துன்பமும் கட்டுக்குள் நின்று விடுகிறது.

எதுவும் அளவு கடந்து போகும்போதுதான் ஒரு எதிரொலியைக் கொண்டுவந்து காட்டுகிறது.

இருட்டு வெளிச்சம், இன்பம் துன்பம் இரண்டையும் சமமாகக் கருதும்படி பகவான் கீதையிலே போதித்தான்.

பகலிலே, குருடனுக்கும் கண் தெரியும். ஆனால், இருட்டிலே எவனுக்குக் கண் தெரிகிறதோ அவனே ஞானி.

முதுகு சொரணையற்றுப் போய் எவனுக்கு வலி தெரியாமல் போய் விடுகிறதோ, அவனே நிம்மதியடைந்தவன்.

`உடம்பிலுள்ள எல்லா வாசல்களையும் செம்மையாக அடக்கி, மனத்தை உள்ளேயே நிலை நிறுத்தி, உயிரை அறிவோடு நன்றாக நிலைநாட்டித் தியானத்தைக் கைக்கொண்டு என்னையே நினைத்தவனாய் எவன் தன்னை மறந்து விடுகிறானோ, அவன் பரம்பொருளை அடைகிறான்’ என்கிறான் பகவான் கீதையிலே.

நீங்கள் பரம்பொருளை அடைகிறீர்களோ இல்லையோ… நிம்மதியை அடைகிறீர்கள்.

பகவத்கீதையிலே, `க்ஷேத்ரம்’ பற்றியும் `க்ஷேத்திரக்ஞன்’ பற்றியும் பேசப்படுகிறது.

`க்ஷேத்திரம்’ என்பது உடல், `க்ஷேத்திரக்ஞன்’ என்பது உயிர்.

எது நிம்மதி இழக்கிறது? க்ஷேத்திரமா? க்ஷேத்திரக்ஞனா?

உடலுக்கு நிம்மதி இல்லையென்றால், மருத்துவன் உண்டு. உயிருக்கு நிம்மதி இல்லையென்றால் நீங்களே மருத்துவர்கள்.

கட்டிக் கொடுத்த சோறும், சொல்லிக் கொடுத்த புத்தியும் தலைமுறைக்கு வரமாட்டா.

இந்த நூலில் கண்டபடி, நீங்கள் நடந்து கொண்டு விட்டாலும் கூட, உங்களை நீங்களே வாதித்துக் கொண்டிருந்தால் நெஞ்சுக்கு நிம்மதி வராது.

ஆன்மாவின் சொரூபத்தை உணர்ந்து. அதன் இயக்கத்திற்கு ஒத்துழைப்பதுதான் தேகம் என்பதை அறிந்து ஒழுங்காக இயங்கினால், நிம்மதி நெஞ்சுக்குள்ளே இருப்பதைக் காணலாம்.

அது ஒன்றும் கடையில் விற்கும் கத்திரிக்காய் அல்ல… வசதியுள்ளவன் வாங்கிக் கொள்வதற்கு!

மீண்டும் சொல்கிறேன், மனசுதான் காரணம்.

ஒன்றைச் `சரி’ என்று நினைத்து விட்டால் மனசு நிம்மதியடைகிறது. `தவறு’ என்று நினைத்து விட்டால் மனசு தாவிக் குதிக்கிறது.

அதனால்தான், `நடப்பதெல்லாம் நன்மைக்கே’ என்கிறார்கள்.

நல்ல மனைவியின் மேல் சந்தேகப்பட்டே, வாழ்க்கையை அழித்துக் கொண்டவர்களும் உண்டு.

மோசமான மனைவியையே முழுக்க நம்பி, நிம்மதியாக வாழ்ந்து முடித்தவர்களும் உண்டு.

பத்தாயிரம் ரூபாய் சம்பாதித்துப் புத்தி கெட்டு அலைந்தவர்களும் உண்டு; இருநூறு ரூபாய்ச் சம்பளத்தில் இணையற்ற அமைதி கண்டவர்களும் உண்டு.

அழுக்கு வேட்டியைத் துவைத்துக் கட்டுவதிலே ஆனந்தம் அடைந்தவர்களும் உண்டு; சலவை வேட்டியிலும் சரிகை இல்லையே என்று சலித்துக் கொண்டவர்களும் உண்டு.

மனது எந்த ஒன்றைக் காண்கிறதோ அப்படியே ஆகிவிடுகிறது.

அற்புதம் என்று அது முடிவு கட்டிவிட்டால், அது அற்புதமாகவே ஆகிவிடுகிறது.

மோசம் என்று தோன்றி விட்டால், மோசமாகவே காட்சி அளிக்கிறது.

பல நேரங்களில் மனது, தன் கணக்கை மாற்றிக் கொள்கிறது. நானே முதற் கட்டத்தில் ஒருவரைப் பற்றிப் போடுகிற கணக்கை மறு கட்டத்தில் மாற்றிக் கொண்டிருக்கிறேன்.

மாறுதல் மனிதன் இயற்கை. அதில் இன்பம் தோன்றும்போது உடனடியாக நிம்மதி.

`இந்தப் பேரிடியை என்னாலே தாங்கவே முடியாது’ என்று சில சமயங்களில் சொல்கிறோம். ஆனாலும், நாம் உயிரோடு தான் இருக்கிறோம்.

காரணம் என்ன? மனசு, வேறு வழி இல்லாமல் அதைத் தாங்கிவிட்டது என்பதே பொருள்.

உலகத்தில் எது தவிர்க்க முடியாதது?

பிறந்த வயிற்றையும் உடன் பிறப்புகளையும்தான் மாற்ற முடியாதே தவிர, பிற எதுவும் மாற்றத்திற்குரியதே.

நானே சொல்லி இருக்கிறேன்… `ஜனனத்தையும் மரணத்தையும் தவிர அனைத்துமே மறுபரிசீலனைக்குரியவை’ என்று.

மனைவியை மாற்றலாம். வீட்டை மாற்றலாம்; நண்பர்களை மாற்றலாம்; தொழிலை மாற்றலாம். எதையும் மாற்றலாம்.

மாறுதலுக்குரிய உலகத்தில் நிம்மதி குறைவதற்கு நியாயம் என்ன?

மனது நம்முடையது; நாம் நினைத்தால் அதை மாற்றிக் கொள்ளலாம்.

நமக்கு முன்னால் வாழ்ந்து செத்தவர்களெல்லாம், ஆயுட் காலம் அமைதியாக இருந்து செத்தவர்களல்ல.

இனி வரப் போகிறவர்களும், நிரந்தர நிம்மதிக்கு உத்தரவாதம் வாங்கிக் கொண்டு வரப் போகிறவர்களல்ல.

`அவரவர்க்கு வாய்த்த இடம்
அவன் போட்ட பிச்சை;
அறியாத மானிடர்க்கு
அக்கரையில் பச்சை’
எந்த துன்பத்திலும் சிக்கிக் கொள்ளாதீர்கள்.

மனத்தை எளிமையாக வைத்திருங்கள்.
கவலைகளற்ற ஒரு நிலையை மேற்கொள்ளுங்கள்.
நிரந்தரமான நிம்மதிக்கு ஈஸ்வரனை நாடுங்கள்.
`நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சந்நிதி
நினைத்தால் எல்லாம் உனக்குள்ளே!’

 

தகுதியானவர்களுக்கு உதவுங்கள்!-பிப். 18 – காரியார் குருபூஜை!

நாம் படிப்பது, கை நிறைய சம்பாதிக்க மட்டுமல்ல, தனக்குப் போக மிஞ்சியதை, தகுதியானவர்களுக்கு தர்மம் செய்வதற்கும் தான்! இதை, தன் வாழ்க்கையில் நிரூபித்துக் காட்டியவர், காரியார் எனும் புலவர்.
திருக்கடையூர் எனும் திருத்தலத்தை அறியாதவர்கள் மிகக்குறைவே. அபிராமி பட்டர் என்பவர், இங்குள்ள அமிர்தகடேஸ்வரர் கோவிலில் அருள்பாலிக்கும் அம்பாள் அபிராமியின் பக்தர், கோவிலில் பணி செய்து வந்தார். ஒரு கட்டத்தில், அம்பாள் மீது கொண்ட பக்தியால் பித்துப் பிடித்தவர் போல் ஆகி விட்டார். அவரது நடவடிக்கையில் சிலர், அதிருப்தி கொண்டனர்.
ஒரு சமயம், சரபோஜி மகாராஜா கோவிலுக்கு வந்தார். அப்போது, அம்பாளின் திருமுகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பட்டருக்கு, அது பூரண சந்திரன் போல் இருப்பதை உணர்ந்தார். அம்பாளின் அழகில் லயித்துப் போய் அமர்ந்திருந்தார். அந்த நேரத்தில், சரபோஜி மகாராஜா அங்கு தரிசனத்துக்காக வந்தார். ஒவ்வொரு அமாவாசை திதியன்றும், அவர் அம்பாளை தரிசிக்க வருவது வழக்கம். அவர் வந்ததைக் கவனிக்கவில்லை பட்டர்.
அங்கே இருந்தவர்கள், “நீங்கள் வந்தும், எழுந்து நின்று மரியாதை செய்யாமல் இருப்பதைக் கவனித்தீர்களா! உங்களுக்கே இந்தக் கதி என்றால், இங்கிருக்கும் மற்றவர்களை இவன் கவனிப்பானா! அம்பாளின் தீவிர பக்தர் போல காட்டிக் கொண்டு, ஒரு பணியும் செய்யாமல் இப்படியே <உட்கார்ந்திருக்கிறான்…’ என்றனர்.
பட்டரிடம், “பட்டரே… என்ன செய்கிறீர்கள்? நான் வந்ததைக் கவனிக்கவில்லையா? இன்று என்ன திதி என்று தெரியும் தானே…’ என்றார் மகாராஜா.
அம்பாளின் முகத்தை நிலவாகக் கற்பனை செய்து கொண்டிருந்த பட்டர், மன்னர் வந்திருப்பதைப் பார்க்காமலேயே, “இன்று பவுர்ணமி’ என்றார். மன்னருக்கு கோபம் வந்து விட்டது.
“இன்று இரவு நிலா வராவிட்டால், உமக்கு தண்டனை அளிப்பேன்…’ எனச் சொல்லி, சென்றார். அன்றிரவு, தன் காதணியைக் கழற்றி, வானில் எறிந்து, நிலாவாக ஒளிரச் செய்தாள் அம்பாள்.
இந்தக் கோவிலில் தான் சிவபெருமான் அமிர்தகடேஸ்வரர் என்ற பெயரில் அருளுகிறார். மார்க்கண்டேயனை, மரணத்தில் இருந்து காப்பாற்ற, எமனை எட்டி உதைத்த ஊர் இது. இந்த சிவனின் அரும்பெரும் பக்தரே காரியார். இவர் பெரும் புலவர். பல சிவத்தலங்களுக்கு திருப்பணி செய்து வந்தார். புதிய கோவில்கள் கட்டவும் ஏற்பாடு செய்தார். அமிர்தகடேஸ்வரர் மீது, அருமையான பாடல்களை இயற்றியவர். இன்னும் பல நூல்களை எழுதிய இவர், சிவனைப் புகழ்ந்து, தன் பெயரால், “காரிக்கோவை’ என்ற நூலை எழுதினார்.
அக்காலத்தில், நூல்களை மன்னர்களிடம் வாசித்து காட்டுவது புலவர்களின் வழக்கம். மன்னர்களும் அவற்றுக்காக பரிசுகளை வாரிக் கொடுப்பர். காரியாரும், தன் கோவை நூலை சேர, சோழ, பாண்டிய மன்னர்களிடம் வாசித்துக் காட்டினார். எல்லா நாட்டு மன்னர்களும், அந்நூலில் பொதிந்திருந்த கருத்துக்களை பாராட்டினர்.
ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்ல என்ற வகையில், காரியாருக்கு பொன்னையும், பொருளையும் அந்த மன்னர்கள் வழங்கினர். அவர், தனக்காகவோ, குடும்பத்துக்காகவோ அதைச் செலவழிக்கவில்லை. சிவன் கோவில் திருப்பணிகளுக்கு வழங்கினார். மேலும், ஏழைகளுக்கும், சிவனடியார்களுக்கும் வழங்கினார்.
தகுதியானவர்களுக்கு செய்யப்படும் தானம், அதைப் பெறுபவர்களுக்கு மட்டுமின்றி, நாட்டுக்கும் பயன்படும். ஒரு ஏழை மாணவனுக்கு தானம் செய்தால், அவன் குடும்பம் மட்டுமின்றி, நாட்டுக்கும், அவன் நன்மை செய்ய ஏதுவாக இருக்கும். அடியார்களுக்கு வழங்கினால், கோவில், குளங்கள் நன்மை பெறும். அதன் மூலம் அன்பும், பக்தியும் தழைக்கும்.
இவ்வாறு காலம் முழுக்க, தன் புலமைக்கு கிடைத்த பரிசுகளை, மற்றவர் நலனுக்காகவே செலவழித்தவர் காரியார். அந்த திருமகனாருக்கு மாசி பூராடம் நட்சத்திரத்தில், சிவாலயங்களில் குருபூஜை நடத்தப்படும். நாயன்மார் சன்னிதியில் இவர் வீற்றிருப்பார்.
இவரது குருபூஜை நன்னாளில், நாமும் தகுதியானவர்களுக்கு தானம் செய்து, அபிராமி மற்றும் அமிர்தகடேஸ்வரரின் அருளைப் பெறுவோம்.