Daily Archives: பிப்ரவரி 15th, 2012

கூகுள்-பேஸ்புக் போட்டி

தன்னுடைய கூகுள் ப்ளஸ் மூலம், சரியான போட்டியைச் சென்ற ஆண்டில் பேஸ்புக் தளத்திற்கு வழங்கியது கூகுள். இது நடப்பாண்டில் இன்னும் அதிகமாகும் என்று இத்துறை வல்லுநர் களால் எதிர்பார்க்கப் படுகிறது. உலகின் மிகப் பெரிய சமூக தளமாக பேஸ்புக் விளங்குகிறது. பெரிய இன்டர்நெட் நிறுவனமாக கூகுள் இயங்குகிறது. இதில் சமூக தளத்தில் முதல் இடத்தைப் பெற இரண்டிற்கும் இடையே போட்டி நிலவுகிறது. இதன் மூலம் வரும் விளம்பர வருமானத்தை அதிக அளவில் கைப்பற்றவே இந்த போட்டி.
இந்தப் போட்டியில் இதுவரை பேஸ்புக் தளத்தின் கை தான் ஓங்கி உள்ளது. இருப்பினும் இந்த ஆண்டில் கூகுள் ப்ளஸ் சரியான போட்டியைத் தரும். இதனால், இந்த இரண்டினையும் பயன்படுத்து வோருக்கும் லாபம் தான். பலவிதமான புதிய வசதிகளைத் தந்து தங்கள் வாடிக்கையாளர்களைத் தக்க வைப்பதுடன், புதிய வாடிக்கையளர் களையும் இழுக்க இவை இரண்டும் முயற்சிக்கும். அதே போல, தர்ட் பார்ட்டி என அழைக்கப்படும் பிற நிறுவனங்களும், இந்த இரண்டு தளங்களுக்குமான ஆட் ஆன் தொகுப்புகளைத் தந்து, இந்த சந்தையில் தங்களுக்குமான பங்கினைப் பெற முயற்சிக்கும்.
இந்நிலையில், 2012 முதல் பாதியில், பேஸ்புக் பங்குகளை வெளியிட்டு மூலதன நிதி திரட்டலாம். இது கூகுள் நிறுவனத்துடன் போட்டியிட கூடுதல் சக்தியைத் தரும். ஆனால், பங்கு வெளியீட்டிற்கு ஆதரவு கிடைக்கவில்லை என்றால், அந்த சூழ்நிலை பேஸ்புக் இணைய தளத்தைப் புரட்டிப் போட்டுவிடும். கூகுளின் கை ஓங்கிவிடும். எனவே தான் இந்த ஆண்டு இவை இரண்டின் இடையேயான போட்டி பல முனைகளில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பயமுறுத்தும் குறட்டை

திருப்தியாகச் சாப்பிட்டதன் அடையாளமாகவே முன்பு குறட்டை கருதப்பட்டது.
ஒரு அறையின் கதவை மூடிய பிறகும் கூட அறைக்குள் தூங்குபவரின் குறட்டைச் சத்தம் வெளியே கேட்டால் அது மிகவும் ஆபத்தானது. இத்தகைய குறட்டைக்கு ஹீரோயிக் ஸ்நோரிங் என்று பெயர்.
மூச்சுப்பாதையில் ஏற்படும் தடை காரணமாகவே, குறட்டை ஏற்படுகின்றது. குறட்டைப் பிரச்சனை உள்ளவர்களுக்கு மூக்கின் பின்புறமும் தொண்டைக்குழியும் சேரும் இடத்தில் உள்நாக்கிலும் அதன் அருகில் உள்ள தசைகளிலும் அழற்சி ஏற்படும். இதனால் தூக்கத்தில் மூச்சு தடைப்பட்டு ஏற்படுகின்ற இந்த தசை அதிர்வு குறட்டையாக வெளியில் கேட்கின்றது.
உடல் ஆரோக்கியமாக உள்ளவர்களுக்குக் கூட இரவில் தூங்கும் போது ஆறு அல்லது ஏழு முறை 10 வினாடிகள் மூச்சு தடைப்படும். இது இயல்பாக ஏற்படக்கூடியது.
ஆனால் குறட்டைப் பிரச்சனை உள்ளவர்களுக்கு இவ்வாறு 30 அல்லது 40 முறை மூச்சு தடைப்பட வாய்ப்பு உண்டு. இதனால் மூச்சு தடைப்பட்டு, ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைந்து விடும். இதனால் உடலில் கார்பன் டை ஆக்ஸைடு அளவு அதிகரித்துவிடும். ஆக்ஸிஜன் அளவு குறைவதால் உடலின் முக்கிய உறுப்புகளான மூளை, இதயம், சிறுநீரகம் ஆகியவற்றில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு. நினைவுத்திறன், மூளையின் கணிக்குள் திறன் குறைவு ஆரம்பிக்கும். ஆண்மைக் குறைவு ஏற்படவும் வாய்ப்பு உண்டு.
ஆஸ்துமா, மார்புக்குழல் பிரச்சனையைக் குறட்டை தீவிரப்படுத்தும். குறட்டைப் பிரச்சனை உள்ளவர்கள், இரவில் அடிக்கடி மூச்சுத் தடைப்படும் நிலையில் திடீரென எழுந்து மீண்டும் தூங்கி விடுவார்கள். இவ்வாறு தூக்கத்தில் நடுவில் எழுந்திருப்பது அவர்களுக்கு நினைவிருக்காது. உடலின் சுயபாதுகாப்பு காரணமாகவே, மூளையில் உள்ள தூக்கத்திற்கான பகுதி செயலாக்கம் பெற்று, இவர்களைத் தட்டி எழுப்புகின்றது.
குறட்டைப் பிரச்சனை தீவிரமாகும் நிலையில் இரவில் தூக்கம் அடிக்கடி தடைபடும். இதனால் பகலில் அலுவலக நேரங்களில் இவர்களுக்குத் தவிர்க்க இயலாத தூக்கம் வரக்கூடும். இத்தகையோர் வாகன ஓட்டுநர்களானால், விபத்துக்களும் ஏற்படுவதுண்டு.
சிகரெட், மது போன்றவை குறட்டைப் பிரச்சனையைத் தீவிரப்படுத்தும் தன்மை உடையவை.
பெண்களை விட ஆண்கள் அதிகம் குறட்டை விடுகின்றார்கள். உடல் பருமன், காரணமாகவும் குறட்டைப் பிரச்சனை ஏற்படுகின்றது. குறட்டைப் பிரச்சினை உள்ளவர்களுக்கு உடலில் ஆக்ஸிஜன் அளவு 50 சதவீதத்திற்கும் கீழே இறங்க வாய்ப்பு உண்டு. இதனால் இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் போன்றவற்றில் மாறுதல்கள் ஏற்படும். மாரடைப்பு நோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உண்டு.
குறட்டைப் பிரச்சனை தீவிரமாக இல்லாவிட்டால் மாத்திரை எதுவும் தேவையில்லை. உடல் பருமனைக் குறைத்தல், புகை – மது பழக்கங்களைக் கைவிடுதல் பலன் அளிக்கக்கூடும். பிரச்சனை தீவிரமாக இருப்பின் டான்சிலுக்கு அருகில் குறட்டைக்குக் காரணமாக இருக்கும் சதையை லேசரைக் கொண்டு பஸ்பமாக்கி விடுவதே நவீன சிகிச்சை முறையாகும். இச்சிகிச்சைக்கு Laser Assisted Uvulo plasty என்று பெயர்.

– டாக்டர் எஸ். சிவசக்தி பாலன்

குழந்தை உணவு சாப்பிட மறுத்தால்…


குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவது என்பது ஒரு கஷ்டமான காரியம்தான். கொடுக்கும் உணவை, வயிறு நிறையும் வரையில் சமர்த்தாக சாப்பிடும் குழந்தைகள் மிகக்குறைவு.

சில குழந்தைகள் உணவை விழுங்காமல் நாக்கால் வெளியே தள்ளிவிடுவார்கள். உங்கள் குழந்தையும் இப்படிச் செய்தால், உடனே சோர்ந்து விடாமல் அப்போதைக்கு நிறுத்தி விட்டு, ஒரு வாரம் கழித்து அதே முறையை மீண்டும் முயற்சிக்கலாம்.

சரி, வேறு ஏன் குழந்தைகள் உணவை வாயில் இருந்து வெளியே தள்ள முயற்சிக்கின்றன?

குழந்தைகள் இயல்பிலேயே வாயில் படும் பொருட்களை வெளியில் தள்ள முயற்சி செய்யும். நாளடைவில் அந்த பழக்கம் மாறிய பின்னர் உணவை விழுங்கத் தொடங்கும். அதனால், நாம்தான் பொறுமையாக உணவை அவர்களுக்கு ஊட்டிவிட வேண்டும்.

இன்னும் சில குழந்தைகளுக்கு முதன் முறையாக ஸ்பூன் கொண்டு உணவை கொடுக்கும் போது பிடிக்காமல் போகலாம். உணவை சாப்பிட மறுத்தால், நமது ஆள்காட்டி விரலை நன்கு சுத்தமாக கழுகி அதில் உணவை சிறிய அளவில் தடவி குழந்தைக்கு கொடுக்கலாம். உணவு சுவை பழகிய பின்னர் ஸ்பூன் கொண்டு கொடுக்கலாம்.

குழந்தைகளுக்கு ஸ்பூன்கள் கொண்டு உணவு ஊட்டும் போது மிகவும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். சிறு குழந்தைகள் மிக வேகமாக கையால் தட்டிவிடும். அப்போது குழந்தையின் வாயில் அல்லது முகத்தில் ஸ்பூன் பட்டு காயம் ஏற்பட்டுவிட வாய்ப்பு உள்ளது.

அதனால், எக்காரணம் கொண்டும் கூர்மையான, வெட்டும்படி உள்ள சில்வர் ஸ்பூன்களை உபயோகிக்கக் கூடாது. குழந்தைகளுக்கு என்றே உள்ள பிரத்தியோக குட்டி ப்ளாஸ்டிக் ஸ்பூன்களை பயன்படுத்துவதுதான் பாதுகாப்பானது.

லாஸ் வேகாஸ் களிப்பின் பெருவெளி

முன்பெல்லாம் நான் இப்படி ஒரு கனவு காண்பதுண்டு. ஓர் ஊர் அல்லது ஒரு நகரம். நான் அங்கே நடந்து சென்றுகொண்டிருப்பேன். அந்தச் சாம்பல் நிறக் கனவில் ஊர் நகரமாக அல்லது நகரம் ஊராக நொடிப் பொழுதில் மாறிக்கொண்டேயிருக்கும். கட்டடங்களின் அளவும் மனம் துணுக்குறா வண்ணம் மாறிக்கொண்டேயிருக்கும். அங்கு நிறைய மனிதர்கள் இருப்பார்கள். அவர்கள் எதையோ உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருப்பார்கள். நான் அவர்கள் அருகில் சென்று, என்ன செய்கிறார்கள் என்று வினவினால் பதில் சொல்லமாட்டார்கள். என்னைக் கண்டுகொள்ளவேமாட்டார்கள். அத்தோடு கனவு முடிந்துவிடும். அல்லது அதனுடன் வேறொரு கனவு தன்னைப் பிணைத்துக்கொள்ளும்.

கனவில் கண்ட நகரம் லாஸ் வேகாஸ்தான் என்பதை நான் அங்கே சென்றிருந்தபோது உணர்ந்தேன். லாஸ் வேகாஸில் உள்ள மனிதர்கள் அனைவரும் ஒன்றை மட்டுமே செய்துகொண்டிருப்பார்கள். சாப்பிடுவது, நடப்பது, தூங்குவது போன்றவை உபகர்மங்கள். உடலையும் மனத்தையும் தயாராக வைத்துக்கொள்ள அவை தேவை. பிரதானமான காரியம் சூதாடுவது. அதற்கென்றே மக்கள் அங்கே உலகெங்கிலுமிருந்து குவிகிறார்கள். இரவு பகல் பாராது சூதாடுகிறார்கள். இன்னும் சில விநாடிகளில் லாஸ் வேகாஸை விமானம் தொடப் போகிறது என்னும் அறிவிப்பைக் கேட்ட மாத்திரத்திலேயே பயணிகள் விசிலடித்து ஆர்ப்பரிக்கிறார்கள். ரோம், லண்டன், பாரிஸ், நியூயார்க் போன்ற உலகின் பெரும் நகரங்களை நெருங்கும்போது இத்தகைய ஆரவாரத்தைப் பயணிகளிடம் காண முடிவதில்லை. அவர்களது சந்தோஷமான எதிர்பார்ப்பு சற்றும் பொய்த்துவிடாது என்பதைப் போல் லாஸ் வேகாஸ் அதிசய வண்ணங்களில் ஜொலிக்கிறது. விமான நிலையமே களியாட்ட மைதானமாக மாறி நிற்கிறது.

நகரம் முழுவதும் காஸினோக்கள். மாலையில் அவற்றில் கூட்டம் சேர ஆரம்பிக்கிறது. இரவு ஏற ஏறக் கூட்டமும் அதிகரிக்கிறது. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என்று மணியாகிக்கொண்டேயிருக்கிறது. சூதாட்டத்தின் சூடு சற்றும் குறைவதாயில்லை. விடியத் தொடங்கும்போது கூட்டம் மெல்லக் கலைந்து போகிறது. இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம். இல்லை, இல்லை. பகலையும் விட்டுவைப்பதில்லை. நேரத்தை வீணாக்கக் கூடாது என்னும் பரிதவிப்புடன் கணிசமான அளவில் காஸினோக்களில் சூதாடிகள் பகலிலும் நிரம்பியுள்ளனர். சூதாடி என்பது இங்கு அவப்பெயரல்ல. லாஸ் வேகாஸில் சூதாட்டம் சட்டபூர்வமானது. இங்கு வந்து எவரும் சூதாடாமல் செல்லக் கூடாது. சூதாட்டம் இங்கு நேர்த்திக்கடன்.

நமது புராணங்களில் வரும் மன்னர்கள் சூதாட அழைக்கப்பட்டால் மறுக்காமல் சென்று சூதாட வேண்டும். அது சத்திரிய தர்மம். நளன், தருமன் ஆகியோர் இப்படித்தான் சூதாட அழைக்கப்பட்டு எல்லாவற்றையும் தோற்றார்கள். ஆனால் இங்கு எல்லாவற்றையும் இழக்க வேண்டிய அவசியமில்லை. சூதாட்டம் இங்கு விளையாட்டு, பொழுதுபோக்கு, உல்லாசம் மட்டுமே. சூதாட வருபவர்கள் பலரும் முன்கூட்டியே இந்த அளவிற்கு இழக்கலாம் என்னும் முடிவுடன்தான் வருகிறார்களென நினைக்கத் தோன்றுகிறது. என் கண்முன்னால் அனாயாசமாக ஒருவர் பத்தாயிரம் டாலரை இழந்தார். அது அவரது அளவுக்குட்பட்டது போலும். நான் நூறு டாலர்களுடன் அமெச்சூர் சூதாடியாகக் கோதாவில் இறங்கினேன். அதற்கு மேல் வருமானம் கிட்டவே ஆட்டத்தை நிறுத்திக்கொண்டேன். தம் வசமிழந்து எல்லாவற்றையும் இழப்பவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள். டெரன்ஸ் வாடனாபி என்னும் தொழிலதிபர் ஒரே ஆண்டில் இங்கு நூற்றிருபத்தியேழு மில்லியன் டாலர்களை இழந்து சாதனை படைத்துள்ளார்.

புன்னகை பொதுவாக எல்லோர் முகத்திலும் குடிகொண்டுள்ளது. உற்சாகம் அனைவரிடமும் கரைபுரண்டோடுகிறது. என் கனவிற்கும் நேரடி அனுபவத்திற்கும் ஒரு வித்தியாசம். கனவில் என்னைக் கண்டுகொள்ளாமல் சென்றதைப் போல் நேரில் எவரும் நடந்துகொள்வதில்லை. முகத்திற்கு முகம் பார்த்துச் சிரிக்கிறார்கள். கை நீட்டினால் நிச்சயம் கைகுலுக்குவார்கள். இவ்வளவு துள்ளலுடன் இருப்பவர்கள் மன அழுத்தம் மிகுந்தவர்களாயும் வாழ்கிறார்களே என்று நினைக்கும்போது வருத்தமாகத்தான் இருக்கிறது.

இங்குள்ள காஸினோக்கள் பிரம்மாண்டமானவை. அவற்றிலுள்ள சூதாட்டக் கூடங்கள் அகலமானவை. பெரிய தெருக்களைப் போல் நீளமானவை. ஒரு தெரு முடிந்தவுடன் முச்சந்தி அல்லது நாற்சந்தியில் அடுத்த தெருவிற்குச் செல்வதுபோல் ஒரு கூடம் முடியும் சந்திப்பில் பிற திசைகளில் கூடங்கள் தொடங்குவதை இங்கே காண முடியும். ஒவ்வொரு கூடத்திலும் செல்வச் செழிப்பு பொங்குகிறது. கம்பளங்களாகட்டும் தொங்கு விளக்குகளாகட்டும் சூதாட்டத்தை நடத்துபவர்களின் ஆடை அலங்காரங்களா கட்டும் எல்லாவற்றிலும் அந்தச் செழிப்பைக் காண முடிகிறது. ரூலட், சீட்டுகள், கைப்பிடி அல்லது பட்டன் பொருத்தப்பட்ட இயந்திரங்கள் என்று பலவிதமான வகைகளில் சூதாட்டங்கள் நடைபெறுகின்றன. குறைந்தபட்சத் தொகையாக ஒரு டாலரை வைத்துக்கொண்டும் சூதாடலாம். ஜாக்பாட்டுகளும் உண்டு. ஆனால் எல்லாவற்றிலும் ஒரு லாட்டரி சீட்டின் கட்டணம் இவ்வளவுதான் என்பதைப் போன்ற நிர்ணயம் இதில் கிடையாது. பந்தயப் பணத்திற்கு ஏற்றாற்போல் பரிசுத் தொகையும் மாறுகிறது.பரிசுக் கூப்பன்களுக்கு உடனடியாகப் பணம் தரப்படுகிறது.

சூதாட வருபவர்களுக்கு ராஜ மரியாதையைக் கொடுக்கின்றன லாஸ் வேகாஸ் காஸினோக்கள். சாளரங்களற்ற அதன் கூடங்கள் வெளி உலகம் என்ற ஒன்றை நமக்கு ஞாபகம் வரவிடாது செய்கின்றன. சூதாடுபவர்கள் களைத்துப்போய்விடக் கூடாது என்பதால் ஆக்ஸிஜன் தொடர்ந்த அழுத்தத்துடன் கூடங்களில் நிரப்பப்படுகிறது. சதா வெயில் காயும் லாஸ் வேகாஸில் குளிர்ந்த ஏர்கண்டிஷன் காற்று வீசும் காஸினோக்களைவிட்டு வெளியே செல்வதற்கு யாருக்குத்தான் மனம் வரும்?

காஸினோக்களில் எல்லாம் கிடைக்கின்றன. அங்கேயே சாப்பாடு, மதுவகைகள் தரப்படுகின்றன. அது மட்டுமல்ல. பலரும் கூடியுள்ள கூடத்தில் பகிரங்கமாகப் புகைக்கலாம். அமெரிக்காவில் எந்தப் பொதுக்கழிப்பறையிலும் புகைபிடிக்க அனுமதியில்லை. ஆனால் ஆயிரக் கணக்கானோர் கூடியுள்ள காஸினோக்களில் தாராளமாக எவரும் புகைபிடிக்கலாம். சூதாட்டம் தரும் வருவாய் எல்லா விதிகளையும் காணாமல்போகச் செய்துவிடுகிறது. மலேசியாவில் முஸ்லிம்கள் சூதாடினால் கடும் தண்டனை. ஆனால் அந்நாடு முஸ்லிம் அல்லாதவர்களைச் சூதாட அனுமதித்துச் சம்பாதிக்கிறது. கம்யூனிசச் சீனாவும் சூதாட்டத்தில் காசு பார்ப்பதைத் தனது கொள்கைக்கு விரோதமாகக் கருதுவதில்லை. அந்த அளவிற்குச் சூதாட்டத்தில் வருமானம் இருக்கிறது. தவிரவும் பதிலுக்குத் தங்கள் நாட்டின் இயற்கைச் செல்வத்தையோ உற்பத்திப் பொருளையோ அந்நாடுகள் சிறிதும் இழக்க வேண்டியதில்லை. சூதாட்டத்தின் மூலம் மட்டுமே அப்படியொரு கொள்ளையை அடிக்க முடியும்.

சூதாடிகள் எப்போதும் இழந்துகொண்டிருக்கிறார்கள். இதை அவர்கள் உணர்ந்தாலும் உடனே நிராகரித்துவிடுகிறார்கள். ஏனெனில் வெற்றிபெறுவதற்கான எல்லாச் சாத்தியங்களையும் தயாராக முன்வைப்பது சூதாட்டம். நொடிப்பொழுதில் அவற்றை மாயமாய் மறைத்துவிடும் காரியத்தையும் சூதாட்டம் சாதுர்யமாக மேற்கொள்கிறது. இதனால் தோற்கடிக்கப்படுவதை ஒரு புதிராகக் காக்கிறது. அப்புதிரை விடுவிக்கும் தொடர்முயற்சியாகவே சூதாடிகள் அதில் திரும்பத் திரும்ப ஈடுபடுகிறார்கள். சூதாட்டம் பங்கேற்பவர்களுக்கான விளையாட்டு மட்டுமல்ல பார்வையாளர்களுக்கும் அது பெரும் சுவாரஸ்யம் தரவல்லது. தாஸ்தாவ்ஸ்கியின் சூதாடி நாவலில் கதாநாயகன் சூதாட்டத்தில் படிப்படியாக அதிக பரிசுத் தொகையை வென்றுகொண்டே செல்வான். ஆட்டத்தை நிறுத்தாமல் அவன் தொடர்ந்து விளையாடிக்கொண்டேயிருப்பான். அவன் அடுத்தாற்போல் சூதாடி அனைத்தையும் தோற்றுவிடக் கூடாது என்று மனம் பதைபதைக்க அவனை முன்பின் அறிந்திராத ஒரு பெண்மணி ஆட்டத்தை அத்தோடு நிறுத்திக்கொள்ளுமாறு அவனிடம் மன்றாடுவாள்.

லாஸ் வேகாஸ் மற்ற அமெரிக்க நகரங்கள் பலவற்றிலிருந்தும் வேறுபட்டது. அதன் கட்டடங்கள் ஒவ்வொன்றும் பிறிதொன்றைப் போலில்லாதவை. அது சர்ரியல் நகரம். வெனிஸ் மணிக்கூண்டு, ஏபில் டவர், எம்பயர் ஸ்டேட் கட்டடம் என்று பல நகரங்களின் முக்கியக் கட்டட முகப்புகளைக் காஸினோக்கள் கொண்டுள்ளன. இவை எல்லாவற்றிலும் பல வேடிக்கைக் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. அவை எல்லாமே இலவசம். எல்லாவற்றிலும் ஹாலிவுட் படப் பாணி சாகசங்களும் நேர்த்தியும் மிளிரும். சூதாடிகளுக்கு இந் நிகழ்ச்சிகள் இடைவேளைகளாகப் பயன்படுகின்றன. சூதாட்டம் மட்டுமே இங்கு நடைபெறவில்லை என்னும் எண்ணத்தையும் அவை தருகின்றன. சூதாட்ட விடுதிகள் தவிர ஹோட்டல்கள் நிறைந்த நகரம் லாஸ் வேகாஸ்.

சீசர்ஸ் பேலஸ் என்னும் மிகப் பெரிய ஓட்டலும் உள்ளது. அந்தக் காலத்து ரோமானிய அரச வாழ்க்கையை நினைவுபடுத்தும் விதமாகப் பணிப்பெண்கள் உடையணிந்து உலவுகிறார்கள். லாஸ் வேகாஸ் நகரிலேயே வாழ்பவர்களின் குடியிருப்புகள் சுலபமாகத் தென்படுவதில்லை. அவை எங்கேயோ ஒளிந்துகொண்டிருக்கின்றன. சூதாடிகள் மட்டுமே வந்து போகும் பாவ நகரமாக அது காட்சியளிக்கிறது.

இரவு நேரத்தில் நியான் விளக்குகள் பளிச்சிட ப்ரீமாண்ட் தெருகளை கட்டுகிறது. ப்ரீமாண்ட் பழைய லாஸ் வேகாஸ் பகுதி. ஜெர்ரி லூயிஸ்-டீன் மார்டின் படக் காலத்திய லாஸ் வேகாஸ் இது. இங்கு இரவில் விசேஷக் காட்சிகள் நடைபெறுகின்றன. கம்ப்யூட்டர் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு நிகழ்ச்சி நீளக் கூரைமீது ஒளிபரப்பப்பட்டுப் பிரமிக்கவைக்கிறது. ப்ரீமாண்டில்தான் முதலில் சூதாட உரிமம் தரப்பட்டதாகக் கூறுகிறார்கள். அமெரிக்கா முழுவதும் பெரும் பொருளாதாரச் சீர்குலைவு இருந்த காலகட்டம் அது. ஆனால் நெவேடா மாநிலத்தில் மட்டும் வேலை இருந்தது. நாடெங்கிலுமிருந்து தொழிலாளிகள் அங்கு வந்தனர். அவர்களுக்குத் தங்க இடமில்லை. திறந்த வெளிகளில் கூடாரம் அடித்துத் தங்கினார்கள். பாலைவன வெப்பத்தைச் சகித்துக்கொண்டு வேலைசெய்தார்கள். கொலராடோ ஆற்றைத் தடுத்து ஹூவர் அணையைக் கட்டினார்கள். அவர்களுக்குப் பொழுதுபோக்கு தர வேண்டி லாஸ் வேகாஸ் பகுதி சூதாட்ட நகரமாக உருவெடுத்தது. உழைத்துச் சம்பாதித்ததை அன்று அவர்கள் அங்கே (செல)விட்டார்கள். இன்று தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி அனைத்துத் தரப்பினருக்கும் அது கேளிக்கைத் தளமாக விளங்குகிறது.

லாஸ் வேகாஸில் விவாகரத்து விதிகள் எளிமையாக இருப்பதால் விவாகரத்து செய்துகொள்பவர்களும் இங்கே படையெடுக்கிறார்கள். தற்கொலை செய்துகொள்பவர்களும் இங்கு அதிகம். அதற்கும் சூதாட்டத்திற்கும் சம்பந்தம் இருப்பதாக எந்த ஆய்வும் தெரிவிக்கவில்லை. தற்கொலைசெய்துகொள்ள முடிவெடுப்பவர்கள் இறுதியாகத் தங்கள் பணத்தை எடுத்துகொண்டு போய் உல்லாசமாக இருந்துவிட்டுப் பின்னர் ‘ஆட்டத்தை’ ஒரேயடியாக முடித்துக்கொள்கிறார்கள்போலும். எவ்விதமான அத்துமீறலையும் காண முடிவதில்லை. நள்ளிரவில் டாக்ஸியில் பயணித்தபோது அதன் மெக்சிகோ பெண் ஓட்டுநர் லாஸ் வேகாஸில் பெண்கள் எந்நேரத்திலும் அச்சமின்றி நடமாடலாம் என்று கூறினார். அதுவே அந்நகரத்திற்கு வழங்கப்பட்ட உயரிய அத்தாட்சி.

லாஸ் வேகாஸ் பற்றி முடிவாக என்ன சொல்லலாம்?

அது அளவாகப் பாவம் செய்து மகிழ்வதற்கான நகரம்?

நன்றி-காலசுவடு

லேப்டாப் நம் வசமாக

லேப்டாப் கம்ப்யூட்டர் இன்று பலரின் விசுவாசத் தொண்டனாக இயங்கி வருகிறது. சிலருக்கு அதுவே எஜமானனாகவும் உள்ளது. எங்கும் எடுத்துச் சென்று பயன்படுத்தும் வகையில் இருப்பதால், இதனைப் பயன்படுத்து வோருக்கு நடமாடும் அலுவலகமாகவும் இது செயல்படுகிறது. தொடர்ந்து விலை குறைந்து வருவதனாலும், வசதிகள் கூடுதலாகக் கிடைப்பதனாலும் இன்று டெஸ்க்டாப் கம்ப்யூட்டரின் இடத்தை லேப்டாப் கம்ப்யூட்டர் பிடித்து வருகிறது. இப்போது அரசே மாணவர்களுக்கு இலவசமாக இதனை வழங்கி வருவதால், அடுத்த சந்ததியினர் லேப்டாப் கம்ப்யூட்டரை மட்டுமே பயன்படுத்தக் கூடிய சூழ்நிலை எழுந்து வருகிறது. லேப்டாப் கம்ப்யூட்டருக்குப் புதியதாக அறிமுகமாகும் பலர் சின்ன சின்ன பிரச்னைகளைச் சந்திக்கின்றனர். அவற்றை எப்படி சந்தித்து, சமாளித்து, லேப்டாப் கம்ப்யூட்டரை நம் வசமாக்கலாம் என்று இங்கு பார்க்கலாம்.
முதலில் தேவையில்லாத சாப்ட்வேர் தொகுப்புகளை கம்ப்யூட்டரிலிருந்து நீக்குங்கள். இவை வெளிப்படையாக இயங்கவில்லை என்றாலும், பின்னணியில் இயங்கி, உங்கள் லேப்டாப்பின் இயங்கும் திறனைத் தாமதப் படுத்தும். உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டம் எக்ஸ்பி என்றால் கண்ட்ரோல் பேனல் சென்று அதில் ஆட்/ரிமூவ் புரோகிராம் தேர்ந்தெடுத்து தேவையற்ற புரோகிராம்களை அன் இன்ஸ்டால் செய்திடுங்கள். விஸ்டா எனில் புரோகிராம்ஸ் அன்ட் பீச்சர்ஸ் தேர்ந்தெடுத்து நீக்குங்கள்.
அடுத்ததாக உங்கள் கீழாக உள்ள உங்கள் டாஸ்க் பாரில் கடிகார நேரத்திற்கு அருகே உள்ள ஐகான்களைக் கவனியுங்கள். இவை எல்லாம், நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் லேப்டாப்பில் பின்புலத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராம்கள் சார்பாக இருக்கும் ஐகான்கள். உங்கள் மவுஸின் கர்சரை, அவற்றின் மேலாகக் கொண்டு சென்றால் அந்த ஐகான்கள் எந்த புரோகிராம்களைக் காட்டுகின்றன என்று தெரியவரும். அவை வேண்டுமா என்று முடிவு செய்து, தேவையில்லை என்றால் உடனே அவற்றை நீக்கலாம்.
இந்த புரோகிராம்களை நீக்குவதால் உங்கள் ராம் மெமரியில் இடம் மற்ற புரோகிராம்கள் தாராளமாகவும் விரைவாகவும் இயங்க இடம் கிடைக்கும். ஆனால் மெமரியின் அளவு கூடாது. இதற்கு சிறிது செலவாகும். இப்போதைய லேப் டாப் கம்ப்யூட்டர்கள் ராம் மெமரியை அதிகப்படுத்தும் வசதி களோடுதான் வருகின்றனர். எனவே உங்களுடைய லேப்டாப்பில் 512 எம்பி மெமரி உள்ளது எனில் அதனை 2 ஜிபி வரை உயர்த்தலாம். அப்படி உயர்த்தினால் உங்கள் எக்ஸ்பி அல்லது விஸ்டா நிச்சயம் சண்டிக் குதிரை வேகத்தில் ஓட ஆரம்பிக்கும்.
இது மிகவும் எளிதான வேலைதான். உங்கள் கம்ப்யூட்டரில் ஏற்கனவே உள்ள ராம் மெமரி சிப்கள் மற்றும் அவற்றினை ஏற்றுக் கொள்ளும் போர்ட்களின் தன்மை குறித்து அறிந்து கொண்டு அதற்கான கூடுதல் மெமரி சிப்களை வாங்கி பொருத்த வேண்டியது தான்.
அடுத்ததாக லேப்டாப் கம்ப்யூட்டர்களின் பேட்டரி. காலப் போக்கில் இவை தங்களின் முழுத் திறனை இழக்கத் தொடங்கும். இதன் இடத்தில் புதிய பேட்டரிகளை வாங்கிப் பொருத்துவது நல்ல முடிவு என்றாலும், இப்போதைய லேப்டாப்களில் பேட்டரி மேனேஜ்மென்ட் சாப்ட்வேர் தரப்பட் டுள்ளன. அவற்றைப் பயன் படுத்தலாம். மெயின் இணைப்பி லிருந்து லேப்டாப் பினை நீக்கியவுடன், குறைவான மின்சக்தியைப் பயன்படுத்த இந்த சாப்ட்வேர்கள் இயங்கும். மேலும் தேவையில்லாத போது ஹார்ட் டிஸ்க்குகள் சுழல்வது நிறுத்தப்படும்.
இந்த ஏற்பாட்டினை நாமாகவும் மேற்கொள்ளலாம். கண்ட்ரோல் பேனல் சென்று பவர் ஆப்ஷன்ஸ் என்பதனைத் தேர்ந்தெடுத்து அந்த விண்டோவில் தந்திருக்கும் ஒவ்வொன்றையும் செட் செய்திடலாம். இதில் மானிட்டர் மற்றும் ஹார்ட் டிஸ்க்கினை, லேப்டாப் எவ்வளவு நேரம் வேலை எதுவுமின்றி இருந்தால், நிறுத்தி வைக்க வேண்டும் என்பதனை செட் செய்திடலாம். இதனால் பேட்டரியின் சக்தி கணிசமாக மிச்சம் ஆகும். இதனால் பெரிய அளவில் மின்சக்தி மிச்சமாகும் என எதிர்பார்க்க முடியாது என்றாலும், ஓரளவிற்கு பேட்டரியின் வாழ் நாள் கூடும்.
நீங்கள் விஸ்டா ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்துபவராக இருந்தால், பேட்டரியின் திறனை அதிகப்படுத்த இலவச புரோகிராம் ஒன்றை டவுண்லோட் செய்து இயக்கலாம். இந்த புரோகிராமின் பெயர் விஸ்டா பேட்டரி சேவர் (Vista Battery Saver). இதனை www.codeplex.com/vistabattery என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து பெறலாம். இதனை டவுண்லோட் செய்து இயக்கி விட்டால், அது தானாகவே, லேப்டாப் மெயின் இணைப்பிலிருந்து விலக்கப்படுகையில், அதிகம் பவர் எடுக்கும் ஏரோ ஸ்பேஸ் மற்றும் சைட் பார் டூல் ஆகியவற்றின் செயல்பாட்டினைத் தற்காலி கமாக நிறுத்தி வைக்கும்.
இன்னொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையினையும் நாம் மேற்கொள்ளலாம். சிடி அல்லது டிவிடி ட்ரைவில் எந்த ஒரு சிடியும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சிடி ஏதேனும் இருந்தால், நீங்கள் விண்டோஸ் எக்ஸ்புளோரரைத் திறக்கும் போதெல்லாம், இந்த டிரைவ் சுழன்று செயல்பட ஆரம்பிக்கும்.
புதிய பேட்டரி ஒன்றை லேப்டாப்பிற்கென வாங்குவதாக இருந்தால், லேப்டாப் தயாரித்த நிறுவனம் பரிந்துரைத்த பேட்டரியினை மட்டுமே வாங்கிப் பொருத்த வேண்டும். அந்நிறுவனத்தின் இணையதளத்தினைக் காண்பது இதற்கு உதவிடும். விலை குறைவாக உள்ளது என்று அதே போன்ற பேட்டரியினை வாங்கிப் பயன்படுத்துவது லேப்டாப்பிற்கு கேடு விளைவிக்கும்.
புதிய லேப்டாப்கம்ப்யூட்டர்களில் தரப்படும் சில கூடுதல் வசதிகள் பழைய மாடல் லேப்டாப்களில் இல்லை என்பது பலரின் குறை. எடுத்துக் காட்டாக வெப் கேம், டிவி ட்யூனர் போன்றவற்றைக் கூறலாம். இது கம்ப்யூட்டர் உலகில் சகஜம் தான். தொடர்ந்து நமக்கான வசதிகள் பெருகி, நவீன சாதனங்கள் வந்து கொண்டு தான் உள்ளன. இதனை எளிதாகச் சமாளிக்கலாம். நூற்றுக்கணக்கான சாதனங்கள் இன்று லேப்டாப்பின் யு.எஸ்.பி. போர்ட்டில் இணைக்கும் வகையில் உள்ளன. எடுத்துக்காட்டாக டிவி ட்யூனரை இணைக்கலாம்; இணைத்த பின்னர் உங்கள் லேப்டாப் ஒரு டிவியாகவும், வீடியோ ரெகார்டராகவும் செயல்படும்.
இதே போல வீடியோ சேட்டிங் செய்திடப் பயன்படும் வெப் கேமரா, வேகமான இணையத் தேடலுக்கு மொபைல் பிராட்பேண்ட் சாதனம் ஆகியவற்றை, லேப்டாப்பின் இயக்கத் தினை நிறுத்தாமலேயே, இணைத்துப் பயன்படுத்தலாம்.
யு.எஸ்.பி.போர்ட் தவிர, இன்றைய லேப்டாப் கம்ப்யூட்டர்களில் வேறு வகை இணைப்பு முகங்கள் உள்ளன. உங்கள் லேப்டாப் கம்ப்யூட்டரின் பக்கவாட்டில் பாருங்கள். அங்கு பி.சி. கார்ட் அல்லது எக்ஸ்பிரஸ் கார்ட் ஸ்லாட் இருக்கும். இதன் மூலம் கூடுதல் சாதனங்களை இணைக்கலாம்.
எவ்வளவுக்கெவ்வளவு கூடுதலான நேரம் உங்கள் லேப்டாப்பினைப் பயன்படுத்து கிறீர்களோ, அந்த அளவிற்கு அது வெப்பத்தை வெளியிடும். இது போகப் போக அதிகரித்துக் கொண்டே இருக்கும். லேப்டாப் செயல்படாமல் போவதற்கான காரணங்களில் வெப்பமும் ஒன்று. லேப்டாப் பின் உள்ளே தரப்பட்டிருக்கும் சிறிய மின்விசிறிகள் இந்த வெப்பத்தைக் கடத்தி உள்ளே உள்ள சிப்களைக் காப்பாற்றும் என்றாலும், கூடுதலாக ஒரு கூலிங் பேட் ஒன்றை வாங்கி இணைத்துப் பயன்படுத்துவது இவ்வகையில் பாதுகாப்பினைத் தரும்.
லேப்டாப் வேகமாகவும், சிறப்பாகவும் இயங்கினாலும் அது மற்றவர்களால் தவறான வழிகளில் பயன்படுத்தப்படக் கூடாது; மேலும் அது திருடப்படக் கூடாது என்ற இரண்டு பயம் நம்மிடம் எப்போதும் உண்டு. ஏனென்றால் எங்கும் எடுத்துச் செல்லும் வகையில் உள்ளதால், இது திருடு போகும் வாய்ப்பு அதிகம். மேலும் நாம் இதனைப் பயன்படுத்தாமல் வைத்திருக்கையில், நாம் அறியாமல் மற்றவர் இதனைப் பயன்படுத்தவும் கூடும். இதனைத் தடுக்கக் கம்ப்யூட்டரில் ஒவ்வொரு விண்டோஸ் அக்கவுண்ட்டுக் கும் ஒரு பாஸ்வேர்ட் கொடுத்து வைப்பது அவசியம். லேப்டாப்பினை இன்ஸூர் செய்வதும் நம் இழப்பை ஒரு வகையில் ஈடு செய்திடும்.
அடுத்ததாக உங்கள் லேப்டாப்பினை உங்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும். பலர் லேப்டாப் பினைச் சாதாரண லெதர் பேக்குகளில் வைத்து எடுத்துச் செல்லும் பழக்கம் கொண்டுள்ளனர். அல்லது சூட்கேஸ்களில் மற்ற பொருள்களுடன் வைத்து எடுத்துச் செல்கின்றனர். இது தவிர்க்கப்பட வேண்டும். ஒவ்வொரு நிறுவனமும் தன் லேப் டாப் கம்ப்யூட்டரினை, அதற்கெனத் தயாரிக்கப்பட்ட கேரி பேக்கில் வைத்தே விற்பனை செய்கின்றன. எனவே அவற்றையே பயன்படுத்த வேண்டும்.
இறுதியாக இன்னொன்றையும் கூற வேண்டும். லேப்டாப்பினை அப்படியே மின்சாரம் தரும் ப்ளக் ஹோலில் இணைத்துப் பயன்படுத்தலாம் என்றாலும், ஒரு சிறிய சர்ஜ் புரடக்டர் ஒன்றில் இணைத்துப் பயன்படுத்துவது நல்லது. இது மெயின் பவர் சாக்கெட்டுக்கும், லேப் டாப் அடாப்டருக்கும் இடையே அமர்ந்து தேவையற்ற மின் ஏற்ற இறக்கத்தினைச் சமாளிக்கின்றன.
எந்த சாதனமும் பயன்படுத்தத் தொடங்கிவிட்டால் தன் புதுமையையும், பயன்பாட்டுத் தன்மையையும் சிறிது சிறிதாக இழக்கத் தொடங்கிவிடும். இருப்பினும் மேலே கூறப்பட்டுள்ள சில வழிகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் நம் லேப்டாப் கம்ப்யூட்டரின் பயன்பாட்டு நலனை கூடுதலாகச் சில ஆண்டுகள் தக்கவைக்கலாமே!

நீர், நிலத்தில் செல்லும் புதிய சூப்பர் கார்!

நீர், நிலம், பனிக்கட்டி ஆகியவற்றில் செல்லக் கூடிய சூப்பர் காரை, சீனாவைச் சேர்ந்த, யுகான் ஜாங் என்ற இளைஞர் வடிவமைத்துள்ளார். நிலத்திலிருந்து நீருக்குள் செல்ல, காரில் உள்ள ஒரு இன்ஜினை இயக்கினால் போதும். காருக்கு அடியில், பலூன் போன்ற அமைப்பிலான, “ஏர்பேக்’ உருவாகும். தண்ணீரில் இருந்து சாலைக்கு வரும் போது, இந்த, “ஏர்பேக்’ சுருங்கி விடும். அடர்ந்த பனிக் கட்டியிலும், இந்த காரை, மணிக்கு, 52 கி.மீ., வேகத்தில் இயக்க முடியும்.
மேலும், சுற்றுச் சூழலுக்கு பாதுகாப்பான தொழில்நுட்பமும் இதில் உள்ளது. சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் கார்பன், இந்த காரில் இருந்து, ஒரு சதவீதம் கூட வெளி வராது. சீனாவை தொடர்ந்து, மற்ற நாடுகளிலும், இந்த காரை பிரபலப்படுத்த திட்டமிட்டுள்ளார், யுகான் ஜாங். இந்த காருக்கான விலை, இன்னும் நிர்ணயிக்கப் படவில்லை.

ஆ.. அச்.. அழகான மூக்குக்குள் ஆபத்தான நோய்கள்

னித முகத்தை அழகாக்கி, முழுமைப்படுத்திக்காட்டுவது மூக்கு. முகத்திற்கு நடு நாயகமாக அமைந்து, எல்லோரையும் ஈர்க்கும் உறுப்பாக அது இருப்பதால்தான் பெண்கள் அதன் அழகுக்கு முத்திரை பதிப்பதுபோல் மூக்குத்தி அணிந்துகொள்கிறார்கள். மூக்கைப் பார்த்து அவர் எந்த நாட்டை சேர்ந்தவர், எந்த மாநிலத்தை சேர்ந்தவர், ஆணா- பெண்ணா என்றுகூட அடையாளம் காண முடியும்.

மேலோட்டமாக பார்த்தால் அழகுக்கு முக்கியத்துவம் கொண்டதாக தோன்றும் மூக்கு, உடற்கூறுபடி பார்த்தால் ஆரோக்கியத்திற்கும் மிகவும் அடிப்படையானது. மூக்கின் வடிவம் பெரும்பாலும் தாத்தா, அப்பா, அம்மாவைப் போன்று பாரம்பரிய அடையாளமாக காணப் படும். கருவிலே வளரத் தொடங்கிவிடும் மூக்கு, பிறந்த பின்பும் கிட்டத்தட்ட 18 வயது வரை வளரும்தன்மை கொண்டது.

மனிதன் உயிர் வாழ அடிப்படை யான சுவாச உறுப்பாக மூக்கு இருப்பதால், அது நுட்பமாகவும், பாதுகாப்பாகவும், நேர்த்தியாகவும் இயற்கையாகவே உருவாகிறது. நடுச்சுவர் எலும்பு மூக்கை இரு பாகமாக பிரிக்கிறது. மேல் பாகத் தில் `நேசல் போன்’ என்ற எலும்பு உள்ளது. உள்பக்க குழாய் போன்ற அமைப்பின் இரு பக்க மும் தசை இடம்பெற்றிருக்கிறது. இந்த தசை `ஏ.சி’ மெஷின்போல் செயல்படும். அதாவது சுவாசிக் கப்படும் காற்றின் தட்பவெப்ப நிலையை சீராக்கி, நுரையீரலுக்கு அனுப்பும். இந்த தசை கோடை காலத்தில் சிறிதாகி, குளிர்காலத் தில் பெரிதாகும். ஜலதோஷம் ஏற்படும்போது தொற்றுக்கிருமிக ளின் தாக்குதலால் தசை வீங்கி விடும். காற்று செல்லும் வழியை அடைத்து மூச்சுவிட சிரமமாகும். அதைத்தான் நாம் மூக்கடைப்பு என்கிறோம்.

மூக்கின் இருபுறத்தையும், கண்க ளின் மேல் பகுதியையும் கொண்ட கபால அமைப்பை சைனஸ் என்கிறோம். இது எலும்பால் ஆன `ஏர்பில் கேவிட்டி’ என்ற வெற்றிடமாகும். அதில், மூக்கை வழு வழுப்பாக்கும் திரவம் சுரக்கும். கிருமித் தொற்று எதுவும் இல்லாத நிலையில் அந்த திரவம் இயல்பாக இருக்கும். ஆ…அச்… என்ற தும்மலோடு ஜலதோஷம் வந்தால், அந்த திரவத்தின் அடர்த்தி அதிகரிக்கும். வெளியே வராமல் சேர்ந்து, சைனஸ் பகுதியை அடைத்து தொந்தரவு தரும். இதற்கு ஆன்டிபயாடிக் மாத்திரைகள் கொடுப்போம். இந்த தொந்தரவு ஒரு வாரம் அல்லது இரண்டு வாரத்தில் சரியாகிவிட வேண்டும். சரியாகாமல் 3, 4 வாரம் என்று நீடித்து அவஸ்தை தந்தால், அந்த பாதிப்பிற்கு வேறு காரணங்கள் இருக்கக்கூடும். அந்த காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை தரவேண்டும்.

ஜலதோஷத்திற்கு முறையான சிகிச்சை பெறாமல் கிருமித் தொற்று அதிகரித்து, அது நாள்பட `இன்பெக்டிவ் சைனசைட்டீஸ்’ ஆக மாறியிருக்கலாம். உணவாலோ, சுற்றுப்புற சூழலாலோ, வேறு காரணங்களாலோ அலர்ஜி தொடர்புடைய `ரைனோ சைனசைட்டீஸ்’ தோன்றும். அடிக்கடி தும்மல் ஏற்படுதல், தலை பாரம், மூக்கு ஒழுகுதல், காதில் அரிப்பு, கண்ணில் நீர் வழிதல் போன்றவை இதன் அறிகுறியாகும். இதற்கு சரியான சிகிச்சையை பெறாவிட்டால் மூக்கின் உள்ளே தசை வளர்ந்து, மூக்கை அடைக்கும். சிலருக்கு மூக்கின் பின்பகுதியில் வளரும் தசை, வாயின் பின்பகுதி வரை வளர்ந்து அதிக தொந்தரவு தரும்.

இந்த நோயின் பாதிப்பு எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை கண்டறிய பொதுவாக எக்ஸ் ரே எடுக்கப்படுவதுண்டு. சி.டி.ஸ்கேன் எடுத்தால் மூக்கின் மேல் எலும்பு, நடுச்சுவர், தசை வளர்ச்சி, சைனஸ் பாதிப்பு போன்ற அனைத்தையும் கண்டறிந்து துல்லியமான சிகிச்சை பெறலாம். சைனஸ் பகுதியில் சளி அடைப்பு இருந்தால் `என்டோஸ்கோபிக் சைனஸ் சர்ஜரி’ தேவைப்படும். லேசர் சிகிச்சையும் கொடுக்கலாம். அலர்ஜியால் உருவான பாதிப்பு என்றால், மருந்து- மாத்திரைகள் மூலம் கட்டுப்படுத்தலாம்.

தற்போது மக்களை அச்சுறுத்தும் விதமாக அதிகரித்து வருவது, குறட்டை! இதன் கொர்.. கொர்.. ஓசை இரவில் நான்கு சுவருக்குள்ளே அடங்கிப்போவதால், விடிந்ததும் அதை பலரும் நினைத்துப்பார்ப்பதில்லை. ஆனால், அலட்சியப்படுத்தப்படும் இந்த குறட்டைக்கு சரியான சிகிச்சை பெறா விட்டால் அது ஆபத்தை உருவாக்கிவிடும். தற்போதைய ஆய்வு விவரங்கள்படி குறட்டை விடும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டி ருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் உடல் பருமன். குண்டான பெண்களில் ஏராள மானவர்கள் குறட்டையால் தூக்கத்தை தொலைத்து, நோய்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இப்போது சிறுவர் சிறுமியர்கள் மைதானங்களுக்கு சென்று ஓடி ஆடி விளையாடுவ தில்லை. உட்கார்ந்து டி.வி. பார்ப்பது, கம்ப்யூட்டரில் விளையாடுவது- வறுத்த, பொரித்த உணவுகளை உண்பது போன்றவைகளால் இளைய தலைமுறை குண்டாகிவருகிறது. எதிர்காலத்தில் அவர்களும் குறட்டையால் பாதிக்கப்படும் சூழல் உருவாகும்.

தூங்கும்போது சுவாசப்பாதையில் அடைப்பு ஏற்பட்டு, மூச்சுவிடுவதில் ஏற்படும் சிரமம்தான் குறட்டை சத்தமாக வெளிவருகிறது. மூக்கின் பின்புறம் `அடினாய்ட்’ தசையும், தொண்டைக்குள் `டான்சிலும்` இருக்கிறது. பல்வேறு காரணங்களால் இவை பெரிதாகும் போது, நாம் சுவாசிக்கும் காற்று எளிதாக உள்ளே போய் வெளியே வர முடியாத நெருக்கடி ஏற்படும். அந்த நெருக்கடியால் அழுத்தம் கொடுத்து மூச்சு இழுக்கும்போது காற்று பக்கத்து தசைகளிலும் அதிர்வை ஏற்படுத்தும். அந்த அதிர்வே குறட்டை சத்தமாக வெளிவருகிறது.

ஆரோக்கியமான மனிதர் ஒருவர் 8 மணி நேரம் தூங்குகிறார் என்றால், அவருக்கு பத்து வினாடிகள் வரை மூச்சு விடுவதில் லேசான தடை ஏற்படும். அப்போது அவரது மூளைக்கு செல்லும் ஆக்சிஜனின் அளவு குறையும். அவர் ஆரோக்கியமான மனிதராக இருந்தால், உடனே உடலில் இருக்கும் இயற்கையான விழிப்புணர்வு மெக்கானிசம், அதை சரிக்கட்டும் விதத்தில் அவருக்கு விழிப்பை கொடுத்து, சுவாசத்தை சரிசெய்துவிடும். இது இயல்பான, இயற்கையான நிகழ்வு. ஆனால் குறட்டை விடுபவர்களுக்கு இந்த இயற்கை விழிப்புணர்வு மெக்கானிசம் சரியாக செயல்படாது. அப்படியிருக்க, அவர்கள் குடித்துவிட்டு தூங்கினாலோ, அதிக அளவில் தூக்க மாத்திரைகளை பயன்படுத்தி தூங்கினாலோ இயற்கை மெக்கானிசத்தின் விழிப்பு நிலை மிகவும் குறைந்துவிடும். அப்போது அவர்களுக்கு குறட்டையால் தூக்கத்தில் மூச்சுவிட சிரமம் ஏற்பட்டால், விழிப்பு ஏற்படாமல் தூக்கத்திலே உயிர் பிரியும் சூழல் ஏற்படலாம்.

குறட்டைவிடுபவர்கள் இரவில் தூங்கும்போது 30 முதல் 40 தடவை மூச்சுவிட திணறுவார்கள். அதனால் அவர்கள் தூக்கம் அவ்வப்போது தடைபட்டு அவர்கள் தூங்கும் நேரம் குறையும். மறுநாள் சோர்வுடன் இருப்பார்கள்.

இரவில் தூக்கம் இல்லாமல் பகலில் தூங்குவது, தலைவலியோடு விழிப்பது ஆகியவை களால் `ஸ்லீப் அப்னீயா சின்ட்ரோம்` என்ற பாதிப்பு ஏற்படும். இந்த பாதிப்பு வந்துவிட்டால் மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் அளவு குறையும். கார்பன்டை ஆக்சைடு அளவு அதிகரிக்கும். அதனால் மூளை மட்டுமின்றி, இதயம், சிறுநீரகம் ஆகியவற்றின் செயல் பாடுகளும் பாதிக்கும். ஞாபக மறதி, ரத்த அழுத்த நோய்கள், ஆண்மைக்குறைவு போன்ற பிரச்சினைகளும் தோன்றக்கூடும்.

குறட்டை விடுபவர்களுக்கு அதன் பாதிப்பு எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை தெரிந்துகொள்வதற்காக `ஸ்லீப் ஸ்டெடி’ செய்யவேண்டும். வீட்டிலே அவர்களை தூங்க வைத்து `பாலி சோம்னா கிராபி’ என்ற கருவி மூலம் பாதிப்பை அளவிடலாம். ஆஸ்பத்திரியில் தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து, `ஸ்லீப் எம்.ஆர்.ஐ.’ செய்து குறட்டையின் பாதிப்பை அறிந்து அதற்கு தகுந்தபடியும் நவீன சிகிச்சைகள் கொடுக்கலாம்.

சிலர் குறட்டையின் பாதிப்பிற்கு சிகிச்சை பெற முடியாத அளவிற்கு உடல் பருமன், வயது முதிர்வு, குள்ளமான கழுத்து, மூக்கு- வாய் பகுதியில் தசை வளர்ச்சி போன்றவைகளால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் மூச்சு திணறல் இல்லாமல் இரவில் தூங்குவதற்காக `சி.பி.ஏ.பி’ என்ற கருவி உள்ளது. இதனை பொருத்திக்கொண்டு தூங்கினால் மூச்சு திணறலோ, குறட்டை தொந்தரவோ ஏற்படாது.

குறட்டைக்கு சிகிச்சை மட்டும் போதாது. அவர்கள் உடல் பருமனை கட்டுக்குள்கொண்டு வர வேண்டும். அதற்காக உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு போன்றவைகளில் கவனம் செலுத்தவேண்டும். பஞ்சுவைத்த தலையணையை சற்று உயரமாக வைத்து அவர்கள் தூங்க வேண்டும். மல்லாந்து படுக்காமல் ஒருக்களித்து அவர்கள் தூங்கவேண்டும்.

நாம் மூக்கின் வழியாகத்தான் சுவாசித்து உயிர்வாழ்கிறோம். அதனால் மூக்கில் ஏற்படும் நோய்களையும், குறட்டையையும் அலட்சியம் செய்யாமல் அவ்வப்போது அதற்குரிய சிகிச்சைகளை பெற்றுவிடவேண்டும். நோய் வரும் முன்பு காக்கும் விழிப்புணர்வும் மனித சமூகத்திடம் வளர வேண்டும்.

கட்டுரை :

டாக்டர் ரவி.கே.விஸ்வநாதன்,
Ms, fics, DLo, Do.
(காது, மூக்கு, தொண்டை நிபுணர்)
சென்னை – 4.