லாஸ் வேகாஸ் களிப்பின் பெருவெளி

முன்பெல்லாம் நான் இப்படி ஒரு கனவு காண்பதுண்டு. ஓர் ஊர் அல்லது ஒரு நகரம். நான் அங்கே நடந்து சென்றுகொண்டிருப்பேன். அந்தச் சாம்பல் நிறக் கனவில் ஊர் நகரமாக அல்லது நகரம் ஊராக நொடிப் பொழுதில் மாறிக்கொண்டேயிருக்கும். கட்டடங்களின் அளவும் மனம் துணுக்குறா வண்ணம் மாறிக்கொண்டேயிருக்கும். அங்கு நிறைய மனிதர்கள் இருப்பார்கள். அவர்கள் எதையோ உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருப்பார்கள். நான் அவர்கள் அருகில் சென்று, என்ன செய்கிறார்கள் என்று வினவினால் பதில் சொல்லமாட்டார்கள். என்னைக் கண்டுகொள்ளவேமாட்டார்கள். அத்தோடு கனவு முடிந்துவிடும். அல்லது அதனுடன் வேறொரு கனவு தன்னைப் பிணைத்துக்கொள்ளும்.

கனவில் கண்ட நகரம் லாஸ் வேகாஸ்தான் என்பதை நான் அங்கே சென்றிருந்தபோது உணர்ந்தேன். லாஸ் வேகாஸில் உள்ள மனிதர்கள் அனைவரும் ஒன்றை மட்டுமே செய்துகொண்டிருப்பார்கள். சாப்பிடுவது, நடப்பது, தூங்குவது போன்றவை உபகர்மங்கள். உடலையும் மனத்தையும் தயாராக வைத்துக்கொள்ள அவை தேவை. பிரதானமான காரியம் சூதாடுவது. அதற்கென்றே மக்கள் அங்கே உலகெங்கிலுமிருந்து குவிகிறார்கள். இரவு பகல் பாராது சூதாடுகிறார்கள். இன்னும் சில விநாடிகளில் லாஸ் வேகாஸை விமானம் தொடப் போகிறது என்னும் அறிவிப்பைக் கேட்ட மாத்திரத்திலேயே பயணிகள் விசிலடித்து ஆர்ப்பரிக்கிறார்கள். ரோம், லண்டன், பாரிஸ், நியூயார்க் போன்ற உலகின் பெரும் நகரங்களை நெருங்கும்போது இத்தகைய ஆரவாரத்தைப் பயணிகளிடம் காண முடிவதில்லை. அவர்களது சந்தோஷமான எதிர்பார்ப்பு சற்றும் பொய்த்துவிடாது என்பதைப் போல் லாஸ் வேகாஸ் அதிசய வண்ணங்களில் ஜொலிக்கிறது. விமான நிலையமே களியாட்ட மைதானமாக மாறி நிற்கிறது.

நகரம் முழுவதும் காஸினோக்கள். மாலையில் அவற்றில் கூட்டம் சேர ஆரம்பிக்கிறது. இரவு ஏற ஏறக் கூட்டமும் அதிகரிக்கிறது. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என்று மணியாகிக்கொண்டேயிருக்கிறது. சூதாட்டத்தின் சூடு சற்றும் குறைவதாயில்லை. விடியத் தொடங்கும்போது கூட்டம் மெல்லக் கலைந்து போகிறது. இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம். இல்லை, இல்லை. பகலையும் விட்டுவைப்பதில்லை. நேரத்தை வீணாக்கக் கூடாது என்னும் பரிதவிப்புடன் கணிசமான அளவில் காஸினோக்களில் சூதாடிகள் பகலிலும் நிரம்பியுள்ளனர். சூதாடி என்பது இங்கு அவப்பெயரல்ல. லாஸ் வேகாஸில் சூதாட்டம் சட்டபூர்வமானது. இங்கு வந்து எவரும் சூதாடாமல் செல்லக் கூடாது. சூதாட்டம் இங்கு நேர்த்திக்கடன்.

நமது புராணங்களில் வரும் மன்னர்கள் சூதாட அழைக்கப்பட்டால் மறுக்காமல் சென்று சூதாட வேண்டும். அது சத்திரிய தர்மம். நளன், தருமன் ஆகியோர் இப்படித்தான் சூதாட அழைக்கப்பட்டு எல்லாவற்றையும் தோற்றார்கள். ஆனால் இங்கு எல்லாவற்றையும் இழக்க வேண்டிய அவசியமில்லை. சூதாட்டம் இங்கு விளையாட்டு, பொழுதுபோக்கு, உல்லாசம் மட்டுமே. சூதாட வருபவர்கள் பலரும் முன்கூட்டியே இந்த அளவிற்கு இழக்கலாம் என்னும் முடிவுடன்தான் வருகிறார்களென நினைக்கத் தோன்றுகிறது. என் கண்முன்னால் அனாயாசமாக ஒருவர் பத்தாயிரம் டாலரை இழந்தார். அது அவரது அளவுக்குட்பட்டது போலும். நான் நூறு டாலர்களுடன் அமெச்சூர் சூதாடியாகக் கோதாவில் இறங்கினேன். அதற்கு மேல் வருமானம் கிட்டவே ஆட்டத்தை நிறுத்திக்கொண்டேன். தம் வசமிழந்து எல்லாவற்றையும் இழப்பவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள். டெரன்ஸ் வாடனாபி என்னும் தொழிலதிபர் ஒரே ஆண்டில் இங்கு நூற்றிருபத்தியேழு மில்லியன் டாலர்களை இழந்து சாதனை படைத்துள்ளார்.

புன்னகை பொதுவாக எல்லோர் முகத்திலும் குடிகொண்டுள்ளது. உற்சாகம் அனைவரிடமும் கரைபுரண்டோடுகிறது. என் கனவிற்கும் நேரடி அனுபவத்திற்கும் ஒரு வித்தியாசம். கனவில் என்னைக் கண்டுகொள்ளாமல் சென்றதைப் போல் நேரில் எவரும் நடந்துகொள்வதில்லை. முகத்திற்கு முகம் பார்த்துச் சிரிக்கிறார்கள். கை நீட்டினால் நிச்சயம் கைகுலுக்குவார்கள். இவ்வளவு துள்ளலுடன் இருப்பவர்கள் மன அழுத்தம் மிகுந்தவர்களாயும் வாழ்கிறார்களே என்று நினைக்கும்போது வருத்தமாகத்தான் இருக்கிறது.

இங்குள்ள காஸினோக்கள் பிரம்மாண்டமானவை. அவற்றிலுள்ள சூதாட்டக் கூடங்கள் அகலமானவை. பெரிய தெருக்களைப் போல் நீளமானவை. ஒரு தெரு முடிந்தவுடன் முச்சந்தி அல்லது நாற்சந்தியில் அடுத்த தெருவிற்குச் செல்வதுபோல் ஒரு கூடம் முடியும் சந்திப்பில் பிற திசைகளில் கூடங்கள் தொடங்குவதை இங்கே காண முடியும். ஒவ்வொரு கூடத்திலும் செல்வச் செழிப்பு பொங்குகிறது. கம்பளங்களாகட்டும் தொங்கு விளக்குகளாகட்டும் சூதாட்டத்தை நடத்துபவர்களின் ஆடை அலங்காரங்களா கட்டும் எல்லாவற்றிலும் அந்தச் செழிப்பைக் காண முடிகிறது. ரூலட், சீட்டுகள், கைப்பிடி அல்லது பட்டன் பொருத்தப்பட்ட இயந்திரங்கள் என்று பலவிதமான வகைகளில் சூதாட்டங்கள் நடைபெறுகின்றன. குறைந்தபட்சத் தொகையாக ஒரு டாலரை வைத்துக்கொண்டும் சூதாடலாம். ஜாக்பாட்டுகளும் உண்டு. ஆனால் எல்லாவற்றிலும் ஒரு லாட்டரி சீட்டின் கட்டணம் இவ்வளவுதான் என்பதைப் போன்ற நிர்ணயம் இதில் கிடையாது. பந்தயப் பணத்திற்கு ஏற்றாற்போல் பரிசுத் தொகையும் மாறுகிறது.பரிசுக் கூப்பன்களுக்கு உடனடியாகப் பணம் தரப்படுகிறது.

சூதாட வருபவர்களுக்கு ராஜ மரியாதையைக் கொடுக்கின்றன லாஸ் வேகாஸ் காஸினோக்கள். சாளரங்களற்ற அதன் கூடங்கள் வெளி உலகம் என்ற ஒன்றை நமக்கு ஞாபகம் வரவிடாது செய்கின்றன. சூதாடுபவர்கள் களைத்துப்போய்விடக் கூடாது என்பதால் ஆக்ஸிஜன் தொடர்ந்த அழுத்தத்துடன் கூடங்களில் நிரப்பப்படுகிறது. சதா வெயில் காயும் லாஸ் வேகாஸில் குளிர்ந்த ஏர்கண்டிஷன் காற்று வீசும் காஸினோக்களைவிட்டு வெளியே செல்வதற்கு யாருக்குத்தான் மனம் வரும்?

காஸினோக்களில் எல்லாம் கிடைக்கின்றன. அங்கேயே சாப்பாடு, மதுவகைகள் தரப்படுகின்றன. அது மட்டுமல்ல. பலரும் கூடியுள்ள கூடத்தில் பகிரங்கமாகப் புகைக்கலாம். அமெரிக்காவில் எந்தப் பொதுக்கழிப்பறையிலும் புகைபிடிக்க அனுமதியில்லை. ஆனால் ஆயிரக் கணக்கானோர் கூடியுள்ள காஸினோக்களில் தாராளமாக எவரும் புகைபிடிக்கலாம். சூதாட்டம் தரும் வருவாய் எல்லா விதிகளையும் காணாமல்போகச் செய்துவிடுகிறது. மலேசியாவில் முஸ்லிம்கள் சூதாடினால் கடும் தண்டனை. ஆனால் அந்நாடு முஸ்லிம் அல்லாதவர்களைச் சூதாட அனுமதித்துச் சம்பாதிக்கிறது. கம்யூனிசச் சீனாவும் சூதாட்டத்தில் காசு பார்ப்பதைத் தனது கொள்கைக்கு விரோதமாகக் கருதுவதில்லை. அந்த அளவிற்குச் சூதாட்டத்தில் வருமானம் இருக்கிறது. தவிரவும் பதிலுக்குத் தங்கள் நாட்டின் இயற்கைச் செல்வத்தையோ உற்பத்திப் பொருளையோ அந்நாடுகள் சிறிதும் இழக்க வேண்டியதில்லை. சூதாட்டத்தின் மூலம் மட்டுமே அப்படியொரு கொள்ளையை அடிக்க முடியும்.

சூதாடிகள் எப்போதும் இழந்துகொண்டிருக்கிறார்கள். இதை அவர்கள் உணர்ந்தாலும் உடனே நிராகரித்துவிடுகிறார்கள். ஏனெனில் வெற்றிபெறுவதற்கான எல்லாச் சாத்தியங்களையும் தயாராக முன்வைப்பது சூதாட்டம். நொடிப்பொழுதில் அவற்றை மாயமாய் மறைத்துவிடும் காரியத்தையும் சூதாட்டம் சாதுர்யமாக மேற்கொள்கிறது. இதனால் தோற்கடிக்கப்படுவதை ஒரு புதிராகக் காக்கிறது. அப்புதிரை விடுவிக்கும் தொடர்முயற்சியாகவே சூதாடிகள் அதில் திரும்பத் திரும்ப ஈடுபடுகிறார்கள். சூதாட்டம் பங்கேற்பவர்களுக்கான விளையாட்டு மட்டுமல்ல பார்வையாளர்களுக்கும் அது பெரும் சுவாரஸ்யம் தரவல்லது. தாஸ்தாவ்ஸ்கியின் சூதாடி நாவலில் கதாநாயகன் சூதாட்டத்தில் படிப்படியாக அதிக பரிசுத் தொகையை வென்றுகொண்டே செல்வான். ஆட்டத்தை நிறுத்தாமல் அவன் தொடர்ந்து விளையாடிக்கொண்டேயிருப்பான். அவன் அடுத்தாற்போல் சூதாடி அனைத்தையும் தோற்றுவிடக் கூடாது என்று மனம் பதைபதைக்க அவனை முன்பின் அறிந்திராத ஒரு பெண்மணி ஆட்டத்தை அத்தோடு நிறுத்திக்கொள்ளுமாறு அவனிடம் மன்றாடுவாள்.

லாஸ் வேகாஸ் மற்ற அமெரிக்க நகரங்கள் பலவற்றிலிருந்தும் வேறுபட்டது. அதன் கட்டடங்கள் ஒவ்வொன்றும் பிறிதொன்றைப் போலில்லாதவை. அது சர்ரியல் நகரம். வெனிஸ் மணிக்கூண்டு, ஏபில் டவர், எம்பயர் ஸ்டேட் கட்டடம் என்று பல நகரங்களின் முக்கியக் கட்டட முகப்புகளைக் காஸினோக்கள் கொண்டுள்ளன. இவை எல்லாவற்றிலும் பல வேடிக்கைக் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. அவை எல்லாமே இலவசம். எல்லாவற்றிலும் ஹாலிவுட் படப் பாணி சாகசங்களும் நேர்த்தியும் மிளிரும். சூதாடிகளுக்கு இந் நிகழ்ச்சிகள் இடைவேளைகளாகப் பயன்படுகின்றன. சூதாட்டம் மட்டுமே இங்கு நடைபெறவில்லை என்னும் எண்ணத்தையும் அவை தருகின்றன. சூதாட்ட விடுதிகள் தவிர ஹோட்டல்கள் நிறைந்த நகரம் லாஸ் வேகாஸ்.

சீசர்ஸ் பேலஸ் என்னும் மிகப் பெரிய ஓட்டலும் உள்ளது. அந்தக் காலத்து ரோமானிய அரச வாழ்க்கையை நினைவுபடுத்தும் விதமாகப் பணிப்பெண்கள் உடையணிந்து உலவுகிறார்கள். லாஸ் வேகாஸ் நகரிலேயே வாழ்பவர்களின் குடியிருப்புகள் சுலபமாகத் தென்படுவதில்லை. அவை எங்கேயோ ஒளிந்துகொண்டிருக்கின்றன. சூதாடிகள் மட்டுமே வந்து போகும் பாவ நகரமாக அது காட்சியளிக்கிறது.

இரவு நேரத்தில் நியான் விளக்குகள் பளிச்சிட ப்ரீமாண்ட் தெருகளை கட்டுகிறது. ப்ரீமாண்ட் பழைய லாஸ் வேகாஸ் பகுதி. ஜெர்ரி லூயிஸ்-டீன் மார்டின் படக் காலத்திய லாஸ் வேகாஸ் இது. இங்கு இரவில் விசேஷக் காட்சிகள் நடைபெறுகின்றன. கம்ப்யூட்டர் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு நிகழ்ச்சி நீளக் கூரைமீது ஒளிபரப்பப்பட்டுப் பிரமிக்கவைக்கிறது. ப்ரீமாண்டில்தான் முதலில் சூதாட உரிமம் தரப்பட்டதாகக் கூறுகிறார்கள். அமெரிக்கா முழுவதும் பெரும் பொருளாதாரச் சீர்குலைவு இருந்த காலகட்டம் அது. ஆனால் நெவேடா மாநிலத்தில் மட்டும் வேலை இருந்தது. நாடெங்கிலுமிருந்து தொழிலாளிகள் அங்கு வந்தனர். அவர்களுக்குத் தங்க இடமில்லை. திறந்த வெளிகளில் கூடாரம் அடித்துத் தங்கினார்கள். பாலைவன வெப்பத்தைச் சகித்துக்கொண்டு வேலைசெய்தார்கள். கொலராடோ ஆற்றைத் தடுத்து ஹூவர் அணையைக் கட்டினார்கள். அவர்களுக்குப் பொழுதுபோக்கு தர வேண்டி லாஸ் வேகாஸ் பகுதி சூதாட்ட நகரமாக உருவெடுத்தது. உழைத்துச் சம்பாதித்ததை அன்று அவர்கள் அங்கே (செல)விட்டார்கள். இன்று தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி அனைத்துத் தரப்பினருக்கும் அது கேளிக்கைத் தளமாக விளங்குகிறது.

லாஸ் வேகாஸில் விவாகரத்து விதிகள் எளிமையாக இருப்பதால் விவாகரத்து செய்துகொள்பவர்களும் இங்கே படையெடுக்கிறார்கள். தற்கொலை செய்துகொள்பவர்களும் இங்கு அதிகம். அதற்கும் சூதாட்டத்திற்கும் சம்பந்தம் இருப்பதாக எந்த ஆய்வும் தெரிவிக்கவில்லை. தற்கொலைசெய்துகொள்ள முடிவெடுப்பவர்கள் இறுதியாகத் தங்கள் பணத்தை எடுத்துகொண்டு போய் உல்லாசமாக இருந்துவிட்டுப் பின்னர் ‘ஆட்டத்தை’ ஒரேயடியாக முடித்துக்கொள்கிறார்கள்போலும். எவ்விதமான அத்துமீறலையும் காண முடிவதில்லை. நள்ளிரவில் டாக்ஸியில் பயணித்தபோது அதன் மெக்சிகோ பெண் ஓட்டுநர் லாஸ் வேகாஸில் பெண்கள் எந்நேரத்திலும் அச்சமின்றி நடமாடலாம் என்று கூறினார். அதுவே அந்நகரத்திற்கு வழங்கப்பட்ட உயரிய அத்தாட்சி.

லாஸ் வேகாஸ் பற்றி முடிவாக என்ன சொல்லலாம்?

அது அளவாகப் பாவம் செய்து மகிழ்வதற்கான நகரம்?

நன்றி-காலசுவடு

%d bloggers like this: