சிறிதளவு மனஅழுத்தம் தேவைதான்!

“தலைப்பைப் பார்த்தாலே, என்னது இது என அழுத்தமாகக் கேள்வி கேட்கத் தோன்றும். ஆனால், சிறிதளவு அழுத்தம் அதாவது மன அழுத்தம் என்பது வாழ்க்கையில் வெற்றி கொள்ளத் தேவைதான்,’ என்கிறார் மனநல மருத்துவர் ஆனந்த்பாலன்.
“மன அழுத்தம் எல்லோருக்குள்ளும் இருப்பதுதான். அதற்கு எல்லோருமே ஆளாகிறோம். மிதமான மன அழுத்தம் இருக்கும்போது, அவர்கள் செய்யும் வேலையைத் துரிதமாகவும், அற்புதமாகவும் செய்து முடிக்க அது உதவுகிறது. உதாரணத்துக்கு, நாளைக்கு ஒரு நேர்முகத் தேர்வுக்குச் செல்ல வேண்டும் என்று இருந்தால், இன்று தோன்றும் அந்த மிதமான மன அழுத்தம் அவரை நேர்முகத் தேர்வுக்குச் சரியாகத் தயார் செய்ய வைக்கவும், உடைகளை கசங்கல் இல்லாமல் அணிந்து கொள்ளவும் ஊக்குவிக்கும். பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை எதிர்நோக்கும் மாணவனுக்கு, இந்த மிதமான மன அழுத்தம், காலையில் சீக்கிரம் எழுந்து, படிக்க வைக்க உதவும். மன அழுத்தம் என்பது இரண்டு நிலையில் வரும். முதலாவது eustress என்போம்; இது மிக மிக நல்ல மன அழுத்தம். ஒருவரின் முன்னேற்றத்திற்கு பெரிதும் துணை புரிவது இது தான். மற்றொன்று, disstress இதைத்தான் வரம்பு மீறிய சங்கடமான மன அழுத்தம் என்கிறோம்’ என மனஅழுத்ததின் வகைகளைப் பற்றிக் கூறிய மருத்துவர், “மன அழுத்தம் எல்லாருக்குமே வரக்கூடியது. இதை எப்படிச் சமாளிப்பது என்றுதான் தெரிந்து கொள்ள வேண்டுமே தவிர, எப்படித் தவிர்ப்பது என்பது எடுத்துக் கொள்ளக்கூடாது’ என்கிறார்.
“மன அழுத்தம் ஒருவருக்குச் சமாளிக்கவே முடியாத அளவு அதிகமாகி விட்டால், அவருக்கு மன பதற்றம் (anxiety) அல்லது மனச்சோர்வு (depression) வருவதற்கு வாய்ப்பு அதிகமாகி விடும். தினம் 45 நிமிடம் காலையில் நடைப் பயில்பவர்களுக்கும், யோகா, பிராணாயாமம் செய்பவர்களுக்கும், சரியான உணவை சரியான நேரத்தில் சாப்பிட்டு, சரியாகத் தூங்கி எழுந்து கொள்பவர்களும் தங்களை அறியாமல் தாங்களே மன அழுத்தத்தை மிக அழகாகச் சமாளித்து வருகிறார்கள்.
மனச் சோர்வை வெவ்வேறு சூழலில் எல்லோருமே அனுபவிக்கிறோம். ஆனால், காரணமே இல்லாமல், மனச்சோர்வு வரும்போது அது மனச்சோர்வு நோயாகவே மாறி விடுகிறது. பரீட்சையில் மதிப்பெண் குறைந்து விட்டால் மனச்சோர்வு ஏற்படுவது இயற்கையே. அதைப்போலவே வியாபாரத்தில் திடீர் நஷ்டம் ஏற்பட்டாலும் மனச்சோர்வு வரும். ஆனால், தன் வீட்டு நாய்க் குட்டி இறந்து விட்டதற்காக ஒருவர் தற்கொலை செய்து கொள்ள முற்பட்டால், அது மனச்சோர்வு நோயின் வெளிப்பாடு என்பதை உணர வேண்டும்.
அடுத்தது, மனப்பதற்றம். இதுவும் எல்லோருக்கும் தோன்றுவது இயற்கையே. திடீரென்று “டமால்’ என சத்தம் கேட்டால், நம்மை அறியாமலேயே நம் கை கால் உதறுவது, இதயம் வேகமாகத் துடிப்பது, வியர்த்துக் கொட்டுவது எல்லாம் நடக்கும். ஆனால், காரணமே இல்லாமல், இனம் புரியாமல் எதற்கெடுத்தாலும் பயப்படுவது, பதற்றப்படுவதும், நாள் பூரா, ஞாயிற்றுக் கிழமைகளில் கூடப் பட பட என இருப்பதை anxiety disorder அதாவது மனப்பதற்ற நோய் என்று சொல்லுவோம்.
மன நோயின் தீவிரத்தைப் பொறுத்து stress management செய்யச் சொல்லிக் கொடுப்பது அல்லது மன வழி (counselling) சிகிச்சை கொடுப்பது அல்லது மருந்து, மாத்திரைகளைக் கொடுத்து அவர்களின் மன நோயைக் குணமாக்க முடியும்’ என்கிறார் டாக்டர் ஆனந்த் பாலன்.

நன்றி-கல்கி

%d bloggers like this: