`ஹெட்போன்’ ஆபத்து!

நடந்து செல்லும்போது `ஹெட்போன்’ அணிந்திருப்பவர்கள் விபத்தைச் சந்திப்பது தடாலடியாக அதிகரித்து வருகிறது, எனவே பாதசாரிகள் `ஹெட்போன்களை’ தவிர்க்க வேண்டும் என்று எச்சரிக்கிறார்கள் ஆய்வாளர்கள்.

செல்போன், ஐபாட் போன்ற மின்னணு சாதனங் களுக்காக ஹெட்போன்களை உபயோகிப்போர், கடுமையான விபத்தில் சிக்கிப் பாதிக்கப்படும் எண்ணிக்கை `பகீரிட’ச் செய்வதாக உள்ளதாம்.

ஹெட்போன்களை பயன்படுத்துவதால் பிரச்சினை ஏற்படுவதற்குக் காரணமாகும் நிலையை, `பிரிக்கப்பட்ட கவனம்’ அல்லது `கவனக்குறைவு பார்வையின்மை’ என்கிறார்கள் மனோவியல் நிபுணர்கள்.

அமெரிக்காவில் 2004-ம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை பாதசாரிகளுக்கு ஏற்பட்ட விபத்துகள் தொடர்பான பல்வேறு தகவல் தொகுப்புகளை அலசியதன் மூலம் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள் ஆய்வாளர்கள்.

ஹெட்போன் இல்லாமல் செல்போன் பயன்படுத்தியவர்கள், ஹேண்ட்ஸ் பிரீ உபயோகித்தவர்கள், சைக்கிள் ஓட்டிகள் ஆகியோர் இந்தக் கணக்கில் சேர்க்கப்படவில்லை.

ஹெட்போன் பயன்படுத்தியதால் விபத்தில் சிக்கி மரணம் அல்லது காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 2004- 2005-ம் ஆண்டுவாக்கில் 47 ஆக இருந்தது என்றால், அது 2010- 2011-ல் 116 ஆக இருமடங்காகியுள்ளது.

இந்த 116 விபத்துகளிலும் 70 சதவீதம், உயிரிழப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. இதில் கால்பங்கு கேஸ்களில், மோதலுக்கு முன் ஹாரன் அல்லது எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டிருக்கிறது. ஆனால் ஹெட்போனில் ஆழ்ந்திருந்ததால் அதைக் கவனிக்காது விபத்தில் சிக்கியிருக்கிறார்கள்.

நீங்கள் ஹெட்போன் பயன்படுத்துபவரா? கவனமாயிருங்கள்!

%d bloggers like this: