Daily Archives: பிப்ரவரி 21st, 2012

காதலி உண்மையானவளா? காதலன் நல்லவனா?


உருகி உருகி காதலை வெளிப்படுத்தி விட்டு உறவுக்குப் பிறகு வேறு பெண்ணைத் தேடிச் செல்லும் ஆண்களும் இருக்கிறார்கள். பீச், பார்க், தியேட்டர் என்று சுற்றி உல்லாசமாக இருந்துவிட்டு வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளைகளை கட்டிக் கொண்டு காதலுக்கு `டாட்டா’ காட்டும் பெண்களும் இருக்கிறார்கள்.

காதலில் இப்படி இடையூறுகளை சந்திக்காமல் இருக்க என்ன வழி? உண்மையான காதலை கண்டு பிடிப்பது எப்படி? அதற்கு சில எளிய வழிகள்…

`நீ இல்லாம என்னால வாழவே முடியாது. நீ தான் என் உயிர்’ என்று டயலாக் விடுபவர்களிடம் உஷாராக இருங்கள். அதிகமாக உணர்ச்சிவசப்படுவது ஈர்ப்பின் அறிகுறி தான். புரிதலுடன் பழகியபின் வருவதே காதல்.

காதலிப்பவர் கொடுக்கும் தகவல்கள் உண்மையானதா என்பதை வைத்து அவரது காதலையும் உண்மையா? இல்லையா? என்று அறியலாம். வேலை பார்க்கும் இடம், வீட்டு முகவரியை சொல்லாதவர்களும், தவறான தகவல் தருபவர்களும் ஏமாற்றுப் பேர்வழிகளாக இருப்பார்கள்.

உங்கள் காதலர் நண்பர்கள், தோழிகளை உங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறாரா? என்று பாருங்கள். அதுபோல நீங்களும் அவரை உங்கள் தோழிகளுக்கு அறிமுகப்படுத்தி வையுங்கள். பிறருக்குத் தெரிந்து காதல் செய்வது ஒருவிதத்தில் பாதுகாப்பு உணர்வையும் ஏற்படுத்தும். அதிக அளவிலான ஏமாற்றத்தையும் தடுக்கும்.

அதேபோல அவரோடு நீங்கள் பழகுவது உங்கள் வீட்டிற்கு பட்டும் படாமலும் தெரிந்திருந்தால் இன்னும் நல்லது. பெற்றோரும் அவரைப் பற்றிய விஷயங்களில் `உஷார்’ காட்டுவார்கள்.

காதலர் உரிமையுடன் உங்களிடம் கோபப்படுகிறாரா? திட்டுகிறாரா? சில நேரங்களில் கைநீட்டி அடிக்கவும் செய்கிறாரா? அவை உரிமை எடுத்துக் கொண்டு செய்யும் காரியமாக மட்டும் எண்ணிவிடாதீர்கள். உங்கள் மீதுள்ள நம்பிக்கைக் குறைவும், தன்னம்பிக்கை இல்லாததன் வெளிப்பாடும் கூட இம்மாதிரி கோபமாக வெளிப்படும். இதுபோன்ற குணம் உடையவர்களுடன் நீண்டகாலம் சேர்ந்து வாழ முடியாது. எனவே கோபத்தின் காரணத்தையும், அவரது நடவடிக்கைகளையும் கவனமாக கவனியுங்கள்.

`நாம தான் ஒருவருக்கொருவர் புரிஞ்சிக்கிட்டோமே, தொட்டுப் பேசக்கூடாதா?’ என்று பீடிகை போடுவதும், உறவை வற்புறுத்துவதும் உண்மையான காதலாக இருக்க முடியாது. எல்லை மீறாத காதல் நூலிழை இடைவெளியில் தான் இருக்கிறது.

மேற்கண்ட விஷயங்களை வைத்து உண்மையான காதலை கண்டு பிடிக்கலாம். அவரது அன்பு உண்மையானாலும் அவர் உங்களுக்கு சரியான துணைவரா? என்பதை முடிவு செய்ய இன்னும் யோசிக்க வேண்டும். அதற்கான சில விஷயங்கள்…

தன்னையே சுற்றிச் சுற்றி வந்தார் என்பதற்காக காதலை ஏற்றுக் கொள்ளக்கூடாது.

`நீ குழந்தை மாதிரி நடந்துக்கிறது தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்’ என்று சொல்கிற காதலர், திருமணத்துக்குப் பிறகு, `நமக்கு திருமணம் ஆகி விட்டது, கொஞ்சம் பொறுப்பா நடந்துக்கோ, குழந்தை மாதிரி நடந்துக்காதேன்னு’ திட்டினால் வெறுப்பு விளையும். எனவே பொடி வைத்துப் பேசினாலும் மயக்கத்தில் வீழாதீர்கள்.

நான் உனக்காக எதுஎதையெல்லாம் விட்டுக்கொடுத்தேன், நீ எனக்கு இதைக்கூட செய்யமாட்டியா, இந்த தப்பை பொறுத்துக்க மாட்டியா? என்று உணர்ச்சி பொங்க பேசுபவரும், கெஞ்சுபவரும் சரியான நபரல்ல. அதேபோல `நீ தானே என்ன பிடிச்சிருக்குன்னு சொன்னே, நான் இப்படித்தான் இருப்பேன் அட்ஜஸ்ட் பண்ண முடிஞ்சா ஓகே’ என்று கண்டிஷன் போடும் பெண்ணும் சரியல்ல. அன்பும், விட்டுக்கொடுத்தலும் இயல்பாக நிகழ வேண்டும்.

வேலையில் இருக்கும் பெண், தனக்கு நிகரான பணியில் இருப்பவரையோ, இணையாக சம்பாதிப்பவரையோ திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால் இருவரும் ஒருபோதும் சம்பளத்தை ஒப்பிட்டுப் பார்ப்பவராகவோ, தொழிலை ஒப்பிட்டுப் பேசி வாக்குவாதம் செய்பவராகவோ இருந்தால் காதல் அம்பேல்.

அதுபோலத்தான் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் காதலித்தால் ஒருவர் மற்றவர் மதத்தையோ, நம்பிக்கையையோ விளையாட்டாகக்கூட கேலி செய்யக்கூடாது. உங்கள் காதலர் அப்படிப்பட்டவர் என்றால் ஓ.கே.

ஒருவேளை நல்லவர் என்று நம்பி பழகியபின்பு உங்கள் காதலர் மோசமானவர் என்று தெரிந்தால், தயங்காமல் அவரை விட்டு விலக வேண்டும். அதுதான் தெளிவான முடிவு! `இல்லை, நான் அவரை நம்புகிறேன், அவரை மாற்றிக் காட்டுவேன், என்னால் அவரை மறக்க முடியாது’ என்று பிடிவாதம் காட்டுவது உங்களை இழப்புகளில் இட்டுச் செல்லும்.

பள்ளி, கல்லூரியில் தொடங்கும் காதல் பெரும்பாலும் வாழ்க்கை முழுவதும் வருவதில்லை. இதற்குள்ளாக உறவில் கலந்து விடுபவர்கள் வாழ்க்கையில் மோசமான விளைவுகளை சந்திக்கிறார்கள்.

எனவே பக்குவப்பட்ட வயதுக்குப் பிறகு தனது ஆசையை விருப்பப்பட்டவரிடம் தெரிவிப்பவரையும், உறவுக்குள் நுழையாமல் திருமணத்தை எதிர்கொள்ள தயாராக இருப்பவரையும் வாழ்க்கைத் துணையாக தேர்வு செய்யுங்கள். காதல் மாதிரியே வாழ்க்கையும் இனிக்கும்.

***

காதல் இன்று பொழுதுபோக்கே!

`காதலில் ஆண்கள்தான் ஏமாற்றுகிறார்கள்’ என்று பெண்கள் குமுறிய காலம் மாறிவிட்டது. `ஏமாற்றும் பெண்களும் இருக்கிறார்கள்’ என்பதை இன்றைய இளைஞிகளே ஒப்புக் கொள்கிறார்கள். காதல் இன்று எப்படி இருக்கிறது, பெண்கள் காதலை எப்படி பார்க்கிறார்கள் என்பது பற்றி கல்லூரி மாணவிகள் சிலரது கருத்து…

* இன்றைய காதல் 90 சதவீதம் பொழுதுபோக்காகவே இருக்கிறது.

* பெண்களை எளிதில் மயக்கிவிடுவது ஆண்களின் வர்ணனை தான். “நீ ரொம்ப அழகா இருக்கே” என்று சொல்லிவிட்டால் பெண்ணிற்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும். அப்படிச் சொல்லியவரை பெண் காதலராக தேர்வு செய்யாவிட்டாலும், பல நேரங்களில் அவர் சொல்லியதை தன் தோழிகளிடம் சொல்லி சந்தோஷப்பட்டுக் கொள்வார்கள் பெண்கள்.

* பல ஆண்களைப் போன்று பெண்களும் பழகி விட்டு பிரிந்து விடுவதை விரும்புகிறார்கள். அதற்கு முக்கியக் காரணம், பெண்கள் பெற்றோர் கண்காணிப்பைத் தாண்டி சென்னை போன்ற நகர்ப்புறங்களில் குடியேறி படிப்பதும், வேலை செய்வதும் தான். அவர்கள், தங்களை விரும்பி வரும் ஆண்களை பயன்படுத்திக் கொள்ளவே விரும்புகிறார்கள்.

* காதலர் தினமென்றால் காதலருடன் ஜாலியாக பொழுதுபோக்கும் நாள் என்று எண்ணும் பெண்களும் ஏராளம். `பப்’ பார்ட்டிக்குச் சென்று நடனம் ஆடுவதை காதலர்கள் பெரிதும் விரும்புகிறார்கள். மேல்தட்டு மக்களின் பழக்கமான `பப்’ பார்ட்டி இன்றைய காதலர்களுக்கும் இனிக்கிறது.

* ஆண்கள் இப்போது காதலைச் சொல்வதற்கு ரோஜா கொடுப்பதில்லை. எஸ்.எம்.எஸ்.களில் தான் இன்றைய காதல் வளர்கிறது. அத்துடன் தோழிகளிடம் விசாரித்து காதலிக்கு என்ன கலர் பிடிக்கும், என்ன உணவு பிடிக்கும், என்ன கிப்ட் பிடிக்கும் என்பதை தெரிந்து `திடீர் சர்ப்ரைஸ்’ கொடுத்து கவர்ந்து விடுவதை நிறைய ஆண்கள் தங்கள் பாணியாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

* பெண்கள் ஒரே நேரத்தில் ஒருவரை மட்டும் காதலிப்பதில்லை என்றும் கல்லூரி மாணவிகள் சொல்கிறார்கள். இது அதிர்ச்சியாக இருந்தாலும் அதுதான் உண்மை. தன்னைச் சுற்றும் ஆண்களில் நாலைந்து பேரை அவர்களும் கணக்கு பண்ணுகிறார்கள். அதில் பெஸ்ட்டாகத் தோன்றும் ஒருவரை நேசிக்கத் தொடங்குகிறார்கள். அவரிடம் வசதிக்குறைவு தெரிந்தால் இரண்டாம் நபரை தேர்வு செய்யும் வகையிலேயே பழக்கத்தில் வைத்திருப்பார்கள். இருந்தாலும் திருமணத்துடன் இந்த ஆண் நண்பர்களை கைகழுவி விடுகிறார்கள் பெண்கள்.

காதலும், பெண்களின் சிந்தனையும் இன்று ரொம்பத்தான் மாறியிருக்கிறது இல்லையா?!
நன்றி-தினத்தந்தி

முன்னாடி விளையாடினால் பின்னாடி நல்லா இருக்கும்!

திருமணத்திற்கு பின்னர் கணவன் மனைவி இடையே தாம்பத்யத்தில் ஏற்படும் மகிழ்ச்சியானது படுக்கையறையோடு நின்றுவிடுவதில்லை. ஆங்காங்கே இலைமறை காயாக சமையலறையில் எழும் சின்ன சின்ன சங்கீதமும், கிணற்றடியில் யாருக்கும் தெரியாமல் நிகழும் சின்ன ஸ்பரிசமும் தம்பதியரை உற்சாகத்திற்கு கொண்டு செல்லும். உறவு மட்டுமல்லாது வீட்டுக்குள் தம்பதியருக்கிடையே நிகழும் முன்விளையாட்டுகளும் அவசியம் என்கின்றனர் உளவியலாளர்கள்.

புதுமண தம்பதியர்களுக்கு உறவைப் பற்றி ஒரு எதிர்பார்ப்பும், குறுகுறுப்பும் இருந்து கொண்டேதான் இருக்கும் அதனால்தான் கோவில் குளத்திற்கோ, திரைப்படங்களுக்கோ தம்பதியர்கள் தனியாக சென்றுவர வேண்டும் என்று வற்புறுத்தினர் முன்னோர்கள். திருமண தினத்தன்று நிகழும் சின்ன சின்ன வேடிக்கை, விளையாட்டுக்களும் இத்தகையதே.

தண்ணீர் குடத்திற்குள் ரொமான்ஸ்

ஒரு சின்ன குடத்திற்குள் மஞ்சள் தண்ணீரை ஊற்றி அதனுள் சிறிய மோதிரத்தைப் போட்டு புதுமணத்தம்பதியரை எடுக்கச் சொல்லி அனைவரும் வற்புறுத்த வெட்கத்தால் நெளிந்துகொண்டே இருவரும் கைகளை குடத்தினுள் விட அந்த சின்ன மோதிரத்தை தேடும்போதே இருவரின் கைகளும் உரசிக் கொள்ளுமே,அப்பொழுதே தொடங்கிவிடுகிறது காதலின் முன்விளையாட்டு.

காதல் பாடல்கள்

இது கொஞ்சம் ஒல்டு பேசன்தான் என்றாலும் அவசியமானது. காதல் பாடல்களை மெதுவாய் மனைவியின் காதுகளுக்கு மட்டுமே கேட்குமாறு பாடலாம். அதன் மூலம் உங்களின் எண்ணத்தை நீங்கள் வெளிப்படுத்தியத போலவும் ஆச்சு. உங்கள் மனைவியின் உற்சாகத்தை தூண்டிவிட்டது போலவும் ஆச்சு. என்ன பாட ரெடியாகிட்டீங்களா?

சமையலறை சங்கீதம்

உண்மையிலேயே ரொமான்ஸ் செய்ய ஏற்ற இடம் எதுவென்றால் அது சமையலறைதான். ஏனென்றால் அதில்தான் மையல் ஒளிந்திருக்கிறதே. அவ்வப்போது சமையலில் உதவுவது போல சென்று சின்ன சின்ன ஸ்பரிசங்களின் மூலம் உங்களின் எண்ணத்தை மெதுவாக வெளிப்படுத்தலாம்.

அசத்தலான ஆல்பம்

போராடிக்கும் தருணங்களில் திருமண ஆல்பம், ஹனிமூன் போட்டோக்களை எடுத்து பார்த்து அந்த இன்பத்தருணங்களை மறுபடியும் கண்முன் கொண்டுவரலாம். நெருக்கமாக அமர்ந்து திருமண நாளில் நடந்த விளையாட்டுக்களை வீடியோவில் கண்டு ரசிக்கலாம்.

சின்னதாய் ஒரு ஷாப்பிங்

வீட்டிற்கு அருகில் உள்ள ஷாப்பிங் மால்களுக்கு சென்று உங்கள் வாழ்க்கைத்துணைக்கு ஏற்ற பொருட்களை சர்ப்ரைசாக வாங்கித்தருவது காதல் உணர்வுகளை அதிகரிக்கும்.

விடுமுறை கொண்டாட்டம்

எத்தனைநாளைக்குதான் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடைப்பது என மனைவிக்கு நினைப்பு வரும். அதேபோல் அலுவலகம், வீடு என ஒரே மாதிரியாக இருப்பதும் போராடிக்கும். எனவே தனியாக நேரம் ஒதுக்கி குளிர் பிரதேசங்களுக்கு ஜாலியாய் ஒரு டிரிப் போய் வரலாம்.

சின்ன சின்ன காமெடி

இரவு உணவுக்குப்பின்னர் மனதிற்கு பிடித்த புத்தகத்தை படித்தவாறு அதில் உள்ள நகைச்சுவை துணுக்குகளை பரிமாறலாம். தொலைக்காட்சியின் நகைச்சுவை காட்சிகளை ஓடவில்லை மனதை நெருக்கும் அழுத்தங்களில் இருந்து விடுதலை பெறலாம்.

வேடிக்கையான தோல்வி

செஸ், கேரம்போர்டு, கார்ட்ஸ் போன்ற விளையாட்டுகளை ரொமான்ஸ்சாக தொடங்கலாம். ஜெயிக்கும் தருணத்திலும் தோல்வியை தழுவி விட்டுக்கொடுப்பது வேடிக்கையோடு உங்கள் மீதான காதலை அதிகப்படுத்தும்.

கூகுள் யு-ட்யூப் சாதனை

வீடியோ காட்சிகளுக்கென கூகுள், ஏற்கனவே இயங்கி வந்த யு–ட்யூப் தளத்தினை வாங்கிச் செம்மைப் படுத்தி, அடிக்கடி அதனை மேம்படுத்தும் செயலில் இறங்கியது. வாடிக்கையாளர்கள் தங்களின் வீடியோ பைல்களை அப்லோட் செய்திடவும், வீடியோ காட்சிகளைப் பார்க்க விரும்பு பவர்கள், தேடிக் கண்டறிந்து காணவும் பல வசதிகளையும் தேடல் பிரிவுகளையும் தந்துள்ளது.
இந்த இமாலய சாதனை இப்போது பல புதிய சிகரங்களை எட்டியுள்ளது. தினசரி இந்த தளத்தில் 400 கோடி வீடியோ காட்சிகள் பார்க்கப்படுகின்றன. ஒவ்வொரு நிமிடத்திலும் சராசரியாக 60 மணி நேர வீடியோ காட்சிகள் பைல்களாக அப்லோட் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு விநாடியிலும் ஒரு மணி நேர வீடியோ காட்சி அப்லோட் செய்யப்படுகிறது. அதாவது ஒவ்வொரு 24 விநாடிகளிலும் 24 மணி நேர வீடியோ மேலேற்றம் செய்யப்படுகிறது. இது தொடர்ந்து 25% அதிகரித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்குக் காரணம், கூகுள் அனைத்து பிரிவுகளிலும், நல்ல, தரமான வீடியோ காட்சிகளை அனுமதிப்பதுதான். கூகுள் இதனைக் கொண்டாடும் வகையில் தனியே தளம் ஒன்றை www.onehourpersecond.com என்ற முகவரியில் அமைத்துள்ளது. இங்கு சென்றால், இனிய இசை மற்றும் கேலிச் சித்திரங்களுடன் கூகுளின் சாதனையைப் பல வழிகளில் ஒப்பிட்டு கண்டு ரசிக்கலாம்.

கொட்டாவியில் இத்தனை விஷயங்களா?

இருமல், தும்மல், விக்கல் மற்றும் கொட்டாவி இவை எல்லாம் திடீரென்று நிகழும் சில உடலியல் நிகழ்வுகள். இவற்றுக்கு அறிவியல்பூர்வமான காரணங்கள் உண்டு. இருமல் மற்றும் தும்மல் ஏற்படுவதற்கு காரணம் சுவாசக்குழாய்க்குள் இருக்கும் அழுக்கு, தூசு அல்லது சளி போன்றவற்றை நம் உடலானது வெளியில் உந்தித்தள்ளுவதே.

மாறாக, விக்கல் ஏற்படுவதற்கான காரணம் சற்று சுவாரசியமானது.

நம் மார்புக்கூட்டில் நுரையீரலுக்கு கீழே இருக்கும் `டயாபிரம்’ என்னும் தோல் பகுதியானது திடீரென்று வேகமாக சுருங்குவதால், அதிகப்படியான காற்று நம் நுரையீரலினுள் செல்கிறது. இதை சமாளிக்க, தவிர்க்க, `எபிக்லாட்டிஸ்’ என்னும் சுவாசக்குழாயின் மூடியானது படக்கென்று மூடிக்கொள்கிறதாம். அதனால் ஏற்படும் ஒருவித `விக் விக்’ எனும் சப்தத்தைத்தான் நாம் விக்கல் என்கிறோம்!

இப்படி, இருமல், தும்மல் மற்றும் விக்கலுக்கான அறிவியல்பூர்வமான காரணங்கள் நமக்கு தெரிந்திருந்தாலும், கொட்டாவி ஏன் ஏற்படுகிறது என்பதற்கான காரணம் மட்டும் இதுவரையில் ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது. ஆனால், நம்மில் பலர் கொட்டாவி விடும் ஒருவரைப்பார்த்தால், `பாவம் அவர் ரொம்ப சோர்வாக இருக்கிறார் போலிருக்கிறது’ என்றே நினைத்துக்கொண்டிருக்கிறோம்.

கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப் பதே மெய் என்பதை கொஞ்சம் மாற்றி, கொட்டாவி பற்றி தீர ஆய்வு செய்து அறிந்துகொள்வதே மெய் என்கிறார்கள் கொட்டாவி தொடர்பான ஆய்வில் ஈடுபட்டுள்ள அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள்.

ஒருவர் எத்தனை முறை கொட்டாவி விடுகிறார் என்பது காலத்தை பொறுத்து மாறுகிறது என்றும், சுற்றுச்சூழலிலுள்ள வெப்ப அளவு உடலின் வெப்பத்தைவிட அதிகமாக இருந்தால் கொட்டாவி வரும் வாய்ப்பு மிக மிக குறைவு என்றும் கண்டறிந்துள்ளார் பிரின்ஸ்டன் பல்கலைக்கழக ஆய்வாளர் ஆண்ட்ரூ கேளப்!

வெப்ப அளவுக்கும் கொட்டாவி ஏற்படுவதற்கும் இடையிலான இந்த தொடர்பு, கொட்டாவியானது மூளையின் வெப்ப அளவை நெறிமுறைப்படுத்தும் ஒரு முறையாக இருக்கக்கூடும் என்பதையே காட்டுகிறது என்கிறார் ஆண்ட்ரூ.

ஒரு காலத்துக்கு 80 பேர் என, கோடைகாலம் மற்றும் குளிர்காலத்துக்கு 160 நபர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் எத்தனை முறை கொட்டாவி விடுகிறார்கள் என்று கணக்கெடுக்கப்பட்டது. ஆய்வின் முடிவில், கோடைகாலத்தைவிட குளிர்காலத்திலேயே மக்கள் அதிகமாக கொட்டாவி விடுகிறார்கள் என்று தெரியவந்தது.

இம்முடிவின் அடிப்படையில், வெப்பமான சீதோஷ்ண நிலையானது அளவுக்கதிகமாக வெப்பமடைந்துவிட்ட மூளைக்கு ஒரு நிவாரணத்தை அளிப்பதில்லை. மாறாக, கொட்டாவியின் வெப்ப நெறிமுறைக் கோட்பாட்டின்படி, கொட்டாவியின் போது நிகழும் குளிர்-வெப்ப காற்று பரிமாற்றத்தினால் மூளையானது குளிர்ந்துவிடுகிறது என்கிறார் கள் ஆய்வாளர்கள்.

கொட்டாவி ஏன் ஏற்படுகிறது அல்லது கொட்டாவியின் உயிரியல் பொருள் என்ன என்பது குறித்து ஒரு டஜனுக்கும் மேலான ஆய்வாளர்கள் தற்போது ஆய்வு செய்துகொண்டிருந்தாலும், எல்லோரும் ஏற்றுக்கொள்ளும்படியான ஒரு கருத்து இன்னும் எட்டப்படவில்லை. உதாரணமாக, வெப்ப நெறிமுறை கோட்பாட்டின்படி மூளையின் வெப்ப அளவு அதிகரிக்கும்போது கொட்டாவி தூண்டப்பட்டு மூளையானது குளிர்விக்கப்படுகிறது என்று நம்பப்படுகிறது. மேலும், கொட்டாவி விடும்போது மேல்வாய் மற்றும் கீழ்வாய் இரண்டும் அகலத் திறக்கப்படுவதால் மூளைக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு அதிகரிப்பதாலும், ஆழமாக மூச்சு விடும்போது குளிரான காற்று உட்சென்று வெப்பமான காற்று வெளியே செல்வதாலுமே மூளை குளிர்விக்கப்படுகிறது என்கிறார்கள்.

கொட்டாவி விடும் எண்ணிக்கையை அதிகமாக்கும் நோய்களான ஸ்க்லீரோசிஸ் மற்றும் எபிலெப்சி ஆகிய இரு மூளைக் கோளாறுகள் உள்ளிட்ட பல நோய்களை முழுமையாக புரிந்துகொள்ளவும் இந்த ஆய்வானது உதவியிருக்கிறது என்கிறார் ஆய்வாளர் ஆண்ட்ரூ!

மேலும், மிக அதிகமான எண்ணிக்கையில் கொட்டாவி விடுவதை, உடலின் வெப்ப நெறிமுறையானது குறைந்துவிட்டதா என்பதை கண்டறிய உதவும் ஒரு முன்பரிசோதனையாகக்கூட எடுத்துக்கொள்ளலாம் என்று ஆச்சரியப்படுத்துகிறார் ஆண்ட்ரூ.

மூளை அளவும், கலந்து பழகும் திறனும்!

உங்களுக்கு நண்பர்கள் அதிகமா? அப்படியானால், பிறரின் மனதைப் புரிந்துகொள்வதற்கான உங்களின் மூளைப் பகுதி பரப்பு அதிகம்.

ஒருவரின் கண்களுக்குச் சற்று மேலாக உள்ள மூளையின் `ஆர்பிட்டல் பிரான்டல் கார்டெக்ஸ்’ பகுதியின் அளவையும், அவர் பெற்றிருக்கிற நண்பர்கள் எண்ணிக்கையையும் ஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகள் அளவிட்டார்கள். அப்போது, குறிப்பிட்ட மூளைப் பகுதி பெரிதாக உள்ளவர்களின் நண்பர்கள் வட்டாரம் பெரிதாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பெரும் பெரும் குழுக்களாக வாழும் குரங்குகளின் மூளை பெரிதாக இருப்பதை ஏற்கனவே சில ஆய்வுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன.

மனிதர்களைப் பொறுத்தவரை, சமூகத் தொடர்பு விஷயங்கள், முக பாவங்கள், பெயர்களை அலசும் மூளைப் பகுதி பரப்பு அதிகமாக உள்ளவர்களுக்கு `பேஸ்புக்’ நண்பர்களும் அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் புதிய ஆய்வுக்காக தன்னார்வலர்களின் மூளையை ஸ்கேன் செய்தார்கள். அப்போது, அதிக எண்ணிக்கையில் நண்பர்களைக் கொண்டிருப்பவர்களின் `பிரான்டல் கார்டெக்ஸ்’ பகுதி பெரிதாக இருப்பது உறுதியானது.

பிறருடன் கலந்து பழகுவதற்குத் தேவையான சரியான சமிக்ஞைகள், வழிமுறைகளைத் தெரியப்படுத்த உதவுவது இந்தக் குறிப்பிட்ட பகுதிதான்.

“பிரிபிரான்டல் கார்டெக்ஸின் ஆர்பிட்டல் பகுதி மிகவும் குறிப்பாக, உணர்வுகள், பாராட்டு போன்றவற்றுடன் தொடர்புடையதாக இருக்கிறது” என்று ஆய்வாளர்களில் ஒருவரான டன்பார் கூறுகிறார்.

எனவே, மேற்கண்ட பகுதி பெரிதாக உள்ள நபர்கள், பிறரின் உணர்வுகள், கருத்துகளை நன்றாகப் புரிந்துகொள்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

 

இந்தியாவை ஆட்டிப்படைக்கும் ஆடம்பர மோகம்…

 ஐந்து மாதத்தில் 25 பெராரி கார்கள் விற்றிருக்கின்றன. ஒரு காரின் விலை இரண்டரைக் கோடி ரூபாய்.

* ஓராண்டில் 300 போர்ஷே கார்களை இந்தியர்கள் வாங்கியிருக்கிறார்கள். இந்த வகை கார் ஒன்றின் விலை ரூ. 2.80 கோடி.

* அவுரங்காபாத்தைச் சேர்ந்த ஒருவர், தனக்கும், தனது நண்பர்களுக்கும் 151 மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களை வாங்கியுள்ளார். ஒன்றின் விலை ரூ. 1 கோடி.

இதெல்லாம், பஸ் கட்டண உயர்வுக்கு பலத்த எதிர்ப்புக் கிளம்பும் நமது இந்தியாவில்தான்.

ஆடம்பர மோக அலை இந்தியா முழுவதையும் மூழ்கடித்து வருகிறது என்கிறார்கள் வர்த்தக நிபுணர்கள். இந்த `ஆடம்பர வெறி’, கார்களில் மட்டும் அல்ல.

தனிநபர்களுக்குச் சொந்தமான ஜெட் விமானங்கள் இந்திய வானில் சீறுகின்றன. பெரும் மாளிகைகளும், ஆடம்பர அடுக்ககங்களும் எழுந்து வருகின்றன. சொகுசான ஆடம் பரத்தை அளிக்கும் உல்லாசக் கப்பல்களில் இந்தியர்கள் அதிகம் குதூகலிக்கிறார்கள். குறிப்பிட்ட ஆடம்பர `பிராண்ட்’தான் வேண்டும் என்று அடம்பிடிக்கும் இளம் பணக்காரர்கள் இந்தியாவில் அதிகரித்து வருகிறார்கள். அதனால்தான், ஆடம்பரப் பொருட்களுக்கான இந்தியச் சந்தை ஆண்டுக்கு 20 சதவிகிதம் அளவுக்கு வளர்ந்து வருகிறது. தற்போது 800 கோடி டாலர்களுக்கு மேல் இருக்கும் இந்தச் சந்தை மதிப்பு, 2015-ல் ஆயிரத்து 400 கோடி டாலர்களுக்கு மேல் எகிறும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்தியர்களின் ஆடம்பர மோகத்தை பயன்படுத்திக்கொள்ள சர்வதேச ஆடம்பர `பிராண்ட்கள்’ இந்தியாவை குறிவைக்கின்றன. கையில் தாராளமாகப் பணம் புரளும் இளந்தலைமுறையினர், சிறுநகரப் பெரும் பணக்காரர்கள், ஆறிலக்க சம்பள உயர் நிர்வாகிகள் ஆகியோரே மேற் குறிப்பிட்ட பிராண்ட்களின் இலக்கு. பணத்தை தண்ணீ யாய்… இல்லையில்லை, காற்றாய் செலவழிக்க இவர்கள் தயாராயிருக்கிறார்களாம்.

சர்வதேச ஆடம்பரப் பொருள் விற்பனை நிறுவனமான பர்பெரியின் தலைமைச் செயல் அலுவலர் ஏஞ்சலா அஹ்ரண்ட்ஸ், “எங்களுக்கு இந்தியா விரைவாக வளர்ந்து வரும் சந்தை” என்கிறார். இவர்களுக்கு இந்தியாவில் 7 கடைகள் இருக்கின்றன.

“ஆடம்பரத் தொழில்துறைக்கு இந்தியாவில் அடுத்த இரண்டு ஆண்டுகள் ஆர்வமூட்டு வதாக இருக்கப் போகின்றன” என்கிறார் இவர்.

ஐந்தாண்டுகளுக்கு முன்பு வரை ஆடம்பரப் பொருள் விற்பனை நிறுவனங்களின் கவன மெல்லாம் டெல்லியிலும், மும்பையிலும்தான் இருந்தது. தற்போதோ சிறுநகரப் பெரும் புள்ளிகளும் `மெட்ரோ’ நகர வசதி பார்ட்டிகளின் சந்தோஷங்களைத் தேடுவதால், ஆடம்பர விற்பனையாளர்களின் பார்வை அவர்கள் மீதும் பதிகிறது. எனவே இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களில் கூட ஆடம்பர வசதிகளும், பொருட்களும் குவிகின்றன.

போர்ஷே, பெராரி போன்ற காஸ்ட்லி கார்களின் விற்பனை முகவரான ஆஷிஷ் சோர்டியா, கடந்த ஆண்டு கான்பூரில் மட்டும் 10 போர்ஷேக்களை விற்றிருப்பதாகக் கூறுகிறார். இந்த ஆண்டும் இன்னும் அதிகமான கார்களை விற்க முடியும் என்று நம்புகிறார்.

இன்னும் சிலர் ஆடம்பர வசதிகள் நிறைந்த கார்களை உலக அளவில் தேடிப்பிடித்து ஆர்டர் செய்கிறார்களாம். “அத்தகைய வாடிக்கையாளர்களுக்கு 3 முதல் 6 மாத காலத்துக்குப் பின்புதான் கார் கிடைக்கும். ஆனால் அவர்கள் காத்திருப்பதற்கு ஏற்றபடி அவை சிறந்த கார்களாகத்தான் இருக்கும்” என்கிறார் இவர். கடந்த ஆண்டு 312 வாடிக்கையாளர்களுக்கு போர்ஷே கார் டெலிவரி செய்யப்பட்டிருக்கிறது. மே முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் 20 பெராரிகளுக்கு ஆர்டர் வந்திருக்கிறது.

இந்தியாவில் ஆடம்பரப் பொருட்களை வாங்குபவர்களில் 50 சதவீதம் பேர் சிறுநகரங்கள், ஊர்களைச் சேர்ந்தவர்கள் என்கிறது ஒரு சமீபத்திய புள்ளிவிவரம். புதிய ஆடம்பர விற்பனையகங்களில் 25 சதவீதம், டெல்லி, மும்பை நகரங்களுக்கு வெளியே திறக்கப் படுகின்றனவாம்.

புதிய நகரங்களில் ஆடம்பரப் பொருட்களை நாடுவோரில் பெரும்பாலானவர்கள் வெளி நாடுகளில் படித்த இளந்தலைமுறையினர். அவர்கள் ஆடம்பர பிராண்ட்கள், சுகபோக வாழ்க்கை வசதிகள் பற்றி நன்கு அறிந்தவர்கள்.

இன்டர்குளோப் எஸ்டாபிளிஸ்ட் என்ற விமான நிறுவனம், இந்தியாவில் 45 சிறிய ரக விமானங்களைத் தனியாருக்கு விற்றுள்ளது. கார்கள், விமானங்கள் மட்டுமின்றி, ஆடை, அணிகலன்கள், நட்சத்திர உணவகங்களில் சாப்பாடு, நகைகள், கடிகாரங்கள் என்று கணக்குப் பார்க்காமல் இந்தியர்கள் பணத்தைக் கொட்டுகிறார்கள்.

நட்சத்திர உணவகமான `லெபுவா ஓட்டல்ஸ்’, இந்தியா முழுவதும் கிளைகளைத் திறக்கத் திட்டமிட்டுள்ளது. தாய்லாந்து போன்ற நாடுகளில் உள்ள இந்த உணவகங்களில் இந்தியர்கள் பெருமளவு உணவு உண்பதுதான் இதற்கான காரணம்.

“தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள எங்களது உணவகத்துக்கு வருகை தருவோரில் 60 சதவீதம் பேர் இந்தியர்கள். அவர்கள் ஒருவேளை உணவுக்கு 20 ஆயிரம் ரூபாய் செலவு செய்கிறார்கள். அப்படிப்பட்டவர்களைத் தேடி நாங்கள் இந்தியாவிற்கே வருகிறோம்” என்று கூறித் திகைக்க வைக்கிறார், லெபுவா ஓட்டல்ஸின் சி.இ.ஓ. தீபக் ஓரி.

இந்தியாவில் தலா 25 கோடி ரூபாய் சொத்துள்ள கோடீசுவரர்களின் எண்ணிக்கை 2016-ம் ஆண்டளவில், இன்றிருப்பதைவிட மூன்று மடங்கு அதிகரிக்குமாம்! அப்போது 2 லட்சத்து 19 ஆயிரம் பேர் அந்த கோடீஸ்வர பட்டியலில் இணைந்திருப்பார்கள். இவர்கள் பர்ஸை திறக்க தயங்கமாட்டார்கள் என்பதால், `ஆடம்பர’ நிறுவனங்கள் அதிகுதூகலத்தில் இருக்கின்றன.

மொத்தத்தில், இனியும் இந்தியாவை ஏழைகளின் நாடு என்று சொல்லிக் கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லைதான்!

ஒற்றைத் தலைவலிக்கு எளிதில் உண்டு தீர்வு!

மனிதனை பாடாய்படுத்தும் நோய்களுள் ஒன்று… ஒற்றைத் தலைவலி. பெரும்பாலும் அதிகமான மன அழுத்தம் காரணமாகவே இது வருகிறது.

என்றாலும், குறைவான சர்க்கரை அளவு, ஒவ்வாமை, சில மருந்துகளை அதிகமாக எடுத்துக் கொள்வது, சத்துக் குறைபாடு, அதிகப்படியான வேலை, சரியான தூக்கம் மற்றும் ஓய்வு இல்லாமை, அதிகப்படியான குடிப்பழக்கம், புகைப்பழக்கம் காரணமாகவும் இது வரலாம்.

இடைவிடாத தலைவலி, வாந்தி, உடல் வலி, கண் மங்குதல் மற்றும் வயிறு பிரச்சினைகளை ஒற்றைத் தலைவலி வரும் ஒருவர் சந்திக்க நேரிடுகிறது.

ஒற்றைத் தலைவலி தீர எளிய வழிமுறைகள் உள்ளன. அவை…

* எலுமிச்சை தோலை நன்கு காய வைத்து அரைத்து நெற்றியில் பற்று போடுவது நல்ல பலனை தரும்.

* நன்கு கனிந்த திராட்சைகளை நன்கு அரைத்து தண்ணீர் சேர்க்காமல் அருந்தலாம்.

* முட்டைக்கோஸ் இலைகளை நன்கு நசுக்கி ஒரு சுத்தமான துணியில் கட்டி, அதைக்கொண்டு தலையின் மீது ஒத்தடம் தரலாம். முட்டைக்கோஸ் உலர்ந்து விட்டால் புதிதாக இலைகளை நசுக்கி துணியில் கட்டி பயன்படுத்துங்கள்.

* குளிர்ந்த நீரை துண்டில் நனைத்து தலையிலும் கழுத்திலும் கட்டலாம். பின் கைகளையும் கால்களையும் சுடுநீரில் விடவும்.

* 10 அல்லது 12 பாதாம் பருப்புகளை தலைவலியின் போது சாப்பிடலாம்.

* வாசனை எண்ணெயால் தலைக்கு ஒற்றடம் தரலாம். தேய்த்தும் விடலாம்.

இவை தவிர, முன்னெச்சரிக்கையாக இருந்தும் ஒற்றைத் தலைவலி வருவதை தவிர்க்கலாம்.

புகை மற்றும் மது தலைவலியை தூண்டக் கூடியவை என்பதால் அவற்றை தவிர்த்திடுங்கள்.

மேலும், வெயிலில் அலைவது, காரமான உணவு வகைகளை உட்கொள்வது, வயிறு முட்ட சாப்பிடுவது, தேவையில்லாத மன அழுத்தம் மற்றும் கவலை கொள்வது போன்றவற்றை தவிர்த்து வந்தாலும் ஒற்றைத் தலைவலி நம்மை நெருங்காது.

செப்டம்பர் 1 முதல் அலைக் கதிர் விதிகள் அமல்

மொபைல் போன் பயன்பாட்டில் ஏற்படும் அலை வீச்சு குறித்த தகவல்களை மக்களுக்குக் கட்டாயமாக, அவர்கள் மொபைல் போன்கள் வாங்குகையில் தெரிவிக்கப்பட வேண்டும் என்ற விதி வரும் செப்டம்பர் 1 முதல் கடுமையாக அமல்படுத்தப்பட இருக்கிறது. மனித உடல் கிரஹித்துக் கொள்ளும் ரேடியோ கதிர் அலை வீச்சு 1.6க்குள் இருக்க வேண்டும் என்ற விதி கட்டாயமாக்கப்படுகிறது. இதற்கு மேல் அலை வீச்சு உள்ள மொபைல் போன்கள் விற்பனை செய்வது தடை செய்யப்படும். இது ஏறத்தாழ தற்போது அமெரிக்காவில் நடைமுறையில் உள்ள சட்டத்திற்கு இணையாக உள்ளது.
ஒவ்வொரு மொபைல் போனுக்கான அலைவீச்சு விற்பனை செய்யப்படும்போது மக்கள் அறியும் வகையில் குறிப்பிடப்பட வேண்டும். மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்களின் இணைய தளங்களில் தரப்பட வேண்டும். இந்த விதிமுறைகளுக்கு உட்படாத மொபைல் போன்கள் விற்பனைக்கு வரக் கூடாது.
பல மொபைல் போன்கள் இந்த விதி முறைக்குட்பட்ட நிலையில் இருப்பதாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் முறையான நிறுவனப் பெயர்கள் இன்றி, வரியற்ற சந்தையில் விற்பனை செய்யப்படும் பல சீன நாட்டு மொபைல்கள் அபாயத்தைத் தரும் அளவிற்கு கதிர் வீச்சினைக் கொண்டுள்ளன என்று சொல்லப்படுகிறது.
இப்போது அரசு இது குறித்து தொடர்ந்து அறிவித்து வருவதால், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் முறையற்ற, அதிக கதிர்வீச்சு உள்ள மொபைல்கள் வாங்குவது படிப்படியாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

எண்களைக் கொண்டு மேற்கோள் குறிகள்

வேர்ட் டாகுமெண்ட் உருவாக்குகையில், பல இடங்களில் மேற்கோள் குறிகளைப் பயன்படுத்துகிறோம். சில வேளைகளில், நாம் ஒரு வகை குறியீட்டினை அமைத்தால், வேர்ட் தானாக அதனை மாற்றும். இது மாறா நிலையில் தானாக மாற்றி அமைக்கும் வகையில் வேர்ட் செட் செய்யப் பட்டிருப்பதுதான் காரணம். இவற்றை மாற்றாமல் அமைக்க, ஆட்டோ கரெக்ட் விண்டோ பெற்று (Tools | AutoCorrect// AutoFormat As You Type) மாற்ற வேண்டும். இதற்கு இன்னொரு வழியும் உள்ளது. இந்த மேற்கோள் அடையாளக்குறிகள் அப்படியே உங்களுக்குத் தேவை என்றால் அந்த அடையாளங்களை கீ போர்டில் வேறு ஒரு வழி மூலம் ஏற்படுத்தலாம்.
ஆல்ட் அழுத்தியவாறு 0147 என்ற எண்ணை நம்லாக் கீ போர்டில் டைப் செய்தால், தொடக்க நிலையில் அமைக்கப்படும் டபுள் கொட்டேஷன் அடையாளம் கிடைக்கும்.
ஆல்ட் அழுத்தியவாறு 0148 என்ற எண்ணை நம்லாக் கீ போர்டில் டைப் செய்தால், முடியும் நிலையில் அமைக்கப்படும் டபுள் கொட்டேஷன் அடையாளம் கிடைக்கும்.
ஆல்ட் அழுத்தியவாறு 0145 என்ற எண்ணை நம்லாக் கீ போர்டில் டைப் செய்தால், தொடக்க நிலையில் அமைக்கப்படும் சிங்கிள் கொட்டேஷன் அடையாளம் கிடைக்கும்.
ஆல்ட் அழுத்தியவாறு 0146 என்ற எண்ணை நம்லாக் கீ போர்டில் டைப் செய்தால் முடிவு நிலையில் அமைக்கப்படும் சிங்கிள் கொட்டேஷன் அடையாளம் கிடைக்கும். ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த எண்களை நம் லாக் கீயினை அழுத்திப் பின் அதன் கீழாக உள்ள கீ போர்டு மூலம் டைப் செய்திட வேண்டும்