Daily Archives: பிப்ரவரி 27th, 2012

சொகுசு ஓட்டலாக மாறிய போர்க்கப்பல்

ரஷ்ய கடற்படையில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக சேவை புரிந்த, “கியேவ்’ என்ற விமானத்தாங்கி போர்க்கப்பல், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், பணியில் இருந்து ஓய்வு பெற்றது.
கப்பலின் பல பகுதிகள், போரில் ஈடுபடுத்த முடியாத அளவுக்கு பழுதடைந்து விட்டதால், சீனாவை சேர்ந்த வர்த்தக நிறுவனத்துக்கு, விலைக்கு விற்கப்பட்டது. அந்த நிறுவனம், இந்த கப்பலை காட்சி பொருளாக மாற்றாமல், உருப்படியான ஒரு வேலையை செய்தது. இந்த கப்பலை, ஆடம்பர ஓட்டலாக மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக, 70 கோடி ரூபாயை, அந்த நிறுவனம் செலவிட்டது.
கப்பலின் கீழ் தளங்களில், வெடி மருந்துகள், துப்பாக்கிகள், ஏவுகணைகள், ராக்கெட் லாஞ்சர்கள் ஆகியவற்றை வைத்திருந்த அறைகள் அனைத்தும், சுற்றுலா பயணிகள் தங்கும் ஆடம்பர அறைகளாக மாற்றப்பட்டன.
இந்த கப்பலில் மொத்தம், 148 அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட விலை உயர்ந்த மரங்களை இழைத்து, நேர்த்தியான வேலைப்பாடுகளுடன் கூடியவையாக ஒவ்வொரு அறையும் மாற்றப்பட்டுள்ளது.
இந்த கப்பலின் குளியல் அறை, கழிப்பறை ஆகியவையும், பல கோடி ரூபாய் செலவில், நவீனப்படுத்தப் பட்டுள்ளன. சிறுவர்கள் விளையாடுவதற்கு வசதியாக, ஏற்கனவே பயன்படுத்தப் பட்ட சில போர் விமானங்கள், பீரங்கிகள், கப்பலின் மேல் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சீனாவின், தியான்ஜின் நகர கடற்கரைக்கு சிறிது தூரத்தில், நிரந்தரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது இந்த கப்பல்.
கடற்கரை அழகை காண வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள், வழக்கமான ஓட்டல்களில் தங்குவதை விட, கடலுக்குள் வண்ண விளக்குகளுடன் மிதந்து கொண்டிருக்கும், இந்த கப்பல் ஓட்டலில் தங்குவதை பெரிதும் விரும்புகின்றனர்.
இந்த கப்பலில், ஒரு சில நாட்கள் தங்குவதற்கு மட்டும், சில லகரங்கள் கட்டணமாக பெறப்படுகிறது.

மூட்டுகளை காக்கும் முள்ளாநங்கை

நாம் பயன்படுத்தும் பெரும்பாலான இயந்திரங்களுக்கு, ஆயுட்காலம் குறைவு தான். ஏனென்றால், இயந்திரங்களின் அசையக் கூடிய பாகங்கள், விரைவில் தேய்ந்து விடுகின்றன. ஆனால், பிறந்தது முதல் கடைசி காலம் வரை அசையக் கூடிய நமது மூட்டுகளுக்கு, இயற்கை கூடுதலான ஆயுளை கொடுத்திருக்கிறது. ஆனாலும், நாம் மூட்டுகளை சரியாக பராமரிக்காததால், பல்வேறு வகையான மூட்டுவாத நோய்களுக்கு ஆளாகிறோம்.

நமக்கு தேவையான உடல் எடையை விட, 10 சதவீதத்திற்கு மேல், உடல் எடை அதிகரிக்க ஆரம்பித்தவுடனேயே, முழங்கால் மூட்டுகள் மற்றும் கணுக்கால் இணைப்புகள், பலவீனமடைகின்றன. குனிந்து கொண்டோ, ஒரே இடத்தில் நிலைகுத்தி பார்த்தவாறோ பணிபுரிவதால், கழுத்து முள்ளெலும்புகளும், சர்க்கரை நோய் மற்றும் தவறான நிலையில் தூங்குவதால் தோள்பட்டை இணைப்புகளும், அமர்ந்தே பணிபுரிவதால், முதுகு முள்ளெலும்புகளும், நீண்டநேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பதால், இடுப்பு முள்ளெலும்புகளும், தொடை எலும்பு இணைப்புகளும், பலவீனமடைகின்றன.

இதைத் தவிர, கணினியில் பணிபுரிபவர்களும், எழுத்து வேலை செய்பவர்களும், விரல்களின் மூட்டு இணைப்பு பலவீனத்திற்கு ஆளாகின்றனர். எலும்புகள், எலும்புகளைச் சூழ்ந்துள்ள சவ்வுகள், எலும்புகளை பிடித்துள்ள தசைநார்கள் மற்றும் தசை ஆகியவற்றிற்கு போதுமான ரத்தம் செல்லாவிட்டால், மூட்டுகளில் வலி உண்டாகிறது. அசைக்கும் பொழுது வலி ஏற்படுதல், அசைக்காமல் இருந்தால் மூட்டுகள் இறுகுதல், நோயின் ஆரம்ப நிலையில், மூட்டுகளை அசைக்கும்பொழுது, “களுக் முளுக்’ என, பிறருக்கு கேட்கும் படியாக சத்தம் உண்டாதல், நாட்பட்ட நிலையில் மூட்டுகளில் வீக்கம் மற்றும் கடுமையான வலி உண்டாதல் ஆகியன, மூட்டு பலவீனத்தைக் காட்டும் அறிகுறிகள்.

மூட்டு பலவீனத்தின் ஆரம்ப நிலையில், முறையான பயிற்சிகளை செய்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் ஒற்றடம் செய்து வந்தால் பலன் உண்டாகும். ஒற்றடம் இட, மூலிகை எண்ணெய்களை பயன்படுத்துவதால் தோல், சதை மற்றும் இணைப்பு வரை மருந்துச் சத்துகள் ஊடுருவி, வலி நீங்கி குணமுண்டாகிறது. மூட்டுகளில் தோன்றும் கடுமையான வலி மற்றும் இறுக்கத்தை குறைத்து மூட்டை பாதுகாக்கும் அற்புத மூலிகை முள்ளாநங்கை. பார்லேரியா லுபிலினா என்ற தாவரவியல் பெயர் கொண்ட, அகான்தேசியே குடும்பத்தைச் சார்ந்தது. கூரிய முட்களையும் சிவப்புநிற இலைக்காம்புகளையும் உடைய முள்ளாநங்கை செடிகளின் இலைகள், சித்த மருத்துவத்தில் பயன்படுகின்றன. இதன் இலைகளிலுள்ள, அசிட்டைல்பார்லரின், பீட்டாகுளூக்கோபைரோனுசல் மற்றும் போர்னியால் ஆகிய வேதிச்சத்துகள், மூட்டு எடை வீக்கங்களை குறைத்து, வலியை நீக்குகின்றன. அதுமட்டுமின்றி, திசுக்களின் இறுக்கத்தை குறைத்து, மூட்டுகளின் அசைவை எளிதாக்குகின்றன. வெளிநாடுகளில் மசாஜ் நிலையங்களில் போர்னியால் என்ற முள்ளாநங்கை வேதிச்சத்து சேர்க்கப்பட்ட கிரீம் உடம்பில் தேய்க்கப்பட்டு, வலி நீக்கும் மசாஜ் செய்யப்படுகிறது.

முள்ளாநங்கை இலைகளை நீரில் வேகவைத்து, நீர் வற்றியதும் வெள்ளை துணியில் முடிந்து, ஒற்றடமிட வலி நீங்கும். ருமடாய்டு ஆர்த்தரைட்டிஸ், சர்வாங்கி வாதம் போன்ற வாத நோய்களில் தோன்றும் மூட்டுவலி நீங்க முள்ளாநங்கை இலைகளை இடித்து, சாறெடுத்து, நல்லெண்ணெயிலிட்டு காய்ச்சி, பதத்தில் வடிகட்டி, வலியுள்ள இடங்களில் தடவிவரலாம். முள்ளாநங்கை இலைச்சாறு- 500மிலி, ஓமம்-100 கிராம், தேங்காய் எண்ணெய்-500மிலி சேர்த்து கொதிக்கவைத்து, சாறு வற்றியதும் வடிகட்டி இளஞ்சூட்டில் 20 கிராம் பூங்கற்பூரத்தை போட்டு கரைந்ததும் மூடி வைத்துக்கொள்ள வேண்டும். இந்த எண்ணெயை வலியுள்ள இடங்களில் தடவி வர, பல்வேறுவகையான மூட்டுவலிகள் கட்டுப்படும்.

விண்டோஸ் 7 – பேக் அப்

நாம் கம்ப்யூட்டரில் அமைத்திடும் டேட்டா பைல்களை பாதுகாத்து பதிப்பது அவற்றைக் காப்பாற்றும் சிறந்த வேலை ஆகும். இதற்கெனவே, விண்டோஸ் 7 சிஸ்டம் ஒரு தனி வசதியினை அளித்துள்ளது. இதனை Backup and Restore என அழைக்கின்றனர். இந்த வசதியினைப் பயன்படுத்துவது குறித்துக் காணலாம்.
முதலில் சிஸ்டத்தில் உள்ள இந்த Backup and Restore வசதியினை இயக்க வேண்டும். இதனை Control Panel பகுதியில் System and Security என்பதைக் கிளிக் செய்து பெறலாம். Backup and Restore என இந்த வசதி தரப்பட்டிருக்கும். இந்த வசதியினை இதற்கு முன்னர் நீங்கள் பயன்படுத்த வில்லை எனில், ‘Backup’ என்பதன் கீழாக ‘Windows Backup has not been set up’ என்ற ஒரு செய்தி தரப்படும். இந்த செய்தியின் வலது புறமாக உள்ள Set up backup என்ற லிங்க்கின் மீது கிளிக் செய்திட வேண்டும். இந்த புரோகிராம் தொடங்கியவுடன், உங்கள் பேக் அப் பைல்களை எந்த இடத்தில் சேவ் செய்திட வேண்டும் என்ற ஆப்ஷன் கேட்கப்படும். உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள முதன்மை ஹார்ட் ட்ரைவினை பேக் அப் ட்ரைவாக தேர்ந்தெடுக்க, விண்டோஸ் சிஸ்டம் இடம் தராது. எக்ஸ்டர்னல் ட்ரைவ் ஒன்றினை கம்ப்யூட்டரில் இணைத்து Refresh என்பதில் கிளிக் செய்திடவும்.
இந்த வகையில் பேக் அப் பைல்கள் பதியப்பட வேண்டிய ட்ரைவினைத் தேர்ந்தெடுத்து செட் செய்த பின்னர், எந்த பைல்களை பேக் அப் செய்திட வேண்டும் என கம்ப்யூட்டர் உங்களைக் கேட்கும். நீங்கள் எதனையும் குறிப்பிட்டுச் சொல்ல வில்லை எனில், விண்டோஸ் தானாக, ஹார்ட் ட்ரைவின் இமேஜ் பைல் ஒன்றை பேக் அப் பைலாக உருவாக்கும். அல்லது, இதற்குப் பதிலாக, Let me choose என்ற பட்டனில் கிளிக் செய்து, நீங்கள் பேக் அப் செய்திட விரும்பும் பைல்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
எந்த ட்ரைவில் பதிய வேண்டும் என்பதனையும், எந்த வகை பைல்களை பேக் அப் செய்திட வேண்டும் என்பதனை யும் தேர்ந்தெடுத்த பின்னர், சிஸ்டம் உங்களுக்கு பேக் அப் ஆக இருக்கும் பைல்களின் தொகுப்பு திரை ஒன்றைக் காட்டி உறுதி செய்திட கேட்கும். பேக் அப் செயல்பாடு தொடங்கும் முன்னர், விண்டோஸ் இந்த செயல்பாட்டினை மேற்கொள்ள தான் அமைத்துள்ள கால நேரத்தினைக் காட்டும். அந்த நேரத்தில் கம்ப்யூட்டர் இயக்க நிலையில் இருப்பதனை உறுதி செய்திட இந்த கேள்வி கேட்கப்படும். இதில் மாற்றம் தேவை என நீங்கள் கருதினால், Change schedule என்பதில் கிளிக் செய்து, உங்களுக்கு வசதியான நேரத்தினை அமைக்கவும். இறுதியாக Save settings கிளிக் செய்து பேக் அப் செயல்பாட்டினை இயக்கவும். முதல்முதலாக பேக் அப் எடுக்கையில், சிறிது கூடுதலாகவே நேரம் எடுத்துக் கொள்ளப்படும். இதனை அடுத்து எடுக்கப்படும் பேக் அப் செயல்பாட்டிற்குக் குறைந்த அளவிலேயே நேரம் எடுத்துக் கொள்ளப்படும். ஏனென்றால், அடுத்தடுத்து பேக் அப் எடுக்கப்படுகையில், மாற்றம் செய்யப்பட்ட பைல்களில் மட்டுமே பேக் அப் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு ஏற்கனவே பேக் அப் எடுக்கப்பட்ட பைல்களுடன் வைக்கப்படும்.
பேக் அப்பிலிருந்து பைல்களை மீட்டல்: பேக் அப் செய்யப்பட்ட கோப்பிலிருந்து, நம் பைல்களை விரித்து எடுப்பது மிக மிக எளிதான ஒன்றாகும். முதலில், ஏற்கனவே கூறியபடி, Backup and Restore என்ற செயல்பாட்டினை இயக்கவும். இப்போது அனைத்து பைல்களையும் மீட்க வேண்டுமா, அல்லது அழிக்கப்பட்ட, கெட்டுப் போன பைல்கள் மட்டும் மீட்கப்பட வேண்டுமா என்பதனை முடிவு செய்திட வேண்டும்.
அனைத்து பைல்களையும் மீட்க, Restore my files என்பதில் கிளிக் செய்திடவும். அதன் பின்னர் Browse for folders என கிளிக் செய்திடவும். அடுத்து இடது பக்கம், உங்கள் பேக் அப் பைலுக்குக் கொடுத்த பெயருடன் உள்ள போல்டரைக் காணவும். அதில் கிளிக் செய்து, பின்னர் Add folder என்பதில் கிளிக் செய்திடவும். இந்த போல்டர் இணைக்கப்பட்ட பின்னர், Next என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு, நீங்கள் மீட்கும் பைல்கள், அவை முன்பு இருந்த இடத்தில் பதியப்பட வேண்டுமா அல்லது புதிய இடத்தில் பதியப்பட வேண்டுமா என்பதனைக் கம்ப்யூட்டருக்குச் சொல்ல வேண்டும். இதன் பின்னர், Restore என்பதில் கிளிக் செய்தால், நீங்கள் தேர்ந்தெடுத்தபடி பைல்கள் மீட்கப்படும். குறிப்பிட்ட பைல்களை மட்டும் மீட்க வேண்டும் எனில், Restore my files என்பதில் கிளிக் செய்திடவும். இதன் பின்னர், Browse for files என்பதனைக் கிளிக் செய்திடவும். இப்போது உங்களின் பேக் அப் பைல் போல்டருக்குச் சென்று, நீங்கள் மீட்க விரும்பும் பைலைக் கிளிக் செய்திடவும். இங்கேயும், இந்த பைல்களை, அவை இருந்த பழைய இடத்தில் வைத்திடவா, அல்லது புதிய இடத்தில் வைத்திடவா என்ற கேள்வியினை உங்களிடம் கம்ப்யூட்டர் கேட்கும். இதனை முடிவு செய்து காட்டிய பின்னர், Restore என்பதில் கிளிக் செய்திட, பைல்கள் மீட்கப்படும்.
நீங்கள் மீட்க விரும்பும் பைலின் பெயர் உங்கள் நினைவில் இல்லை எனில், Restore my files கிளிக் செய்த பின்னர்,சர்ச் பட்டனைப் பயன்படுத்தி பைல்களைக் கண்டறியவும். சர்ச் முடிவுகளின் பட்டியலைப் பயன்படுத்தி, நீங்கள் மீட்க விரும்பும் பைல்களைத் தேர்ந்தெடுத்துக் காட்டவும். இவற்றை நீங்கள் மீட்க விரும்பும் பைல்களின் பட்டியலில் இணைக்கவும். பின் மீண்டும் Restore கிளிக் செய்து மீட்கவும்.

தூங்கும் போது கொர்… கொர்… ஆ ! உடனே கவனிங்க !!

உடல் பருமன் காரணமாக தற்போது குறட்டை விடும் பெண்களின் எண்ணிக்கை அதகரித்து வருவது அதிகரித்துள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. குறட்டையால் தூக்கத்தை தொலைப்பதோடு பல்வேறு நோய்களோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இரவு நேரங்களில் படுக்கையறையில் கேட்கும் கொர் கொர் ஓசை பெரும்பாலான மக்களை அச்சுறுத்தி வருகிறது. குறட்டை ஒலி இரவு நேரத்தில் படுக்கையறையின் நான்கு சுவருக்குள்ளே அடங்கிப்போவதால், விடிந்ததும் அதைப்பற்றி பலரும் நினைத்துப்பார்ப்பதில்லை. ஆனால், அலட்சியப்படுத்தப்படும் இந்த குறட்டைக்கு சரியான சிகிச்சை பெறா விட்டால் அது ஆபத்தை உருவாக்கிவிடும் என்கின்றனர் மருத்துவர்கள்.

தற்போதைய ஆய்வு விவரங்கள்படி குறட்டை விடும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டி ருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் உடல் பருமன். குண்டான பெண்களில் ஏராள மானவர்கள் குறட்டையால் தூக்கத்தை தொலைத்து, நோய்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இளம் தலைமுறையினர்

இன்றைக்கு சிறுவர் சிறுமியர்கள் பலரும் மைதானங்களுக்கு சென்று விளையாடுவ தில்லை. பள்ளி சென்று வந்த உடன் வீட்டிலே அடைந்து கிடப்பது. ஒரே இடத்தில் அமர்ந்து டி.வி. பார்ப்பது, கம்ப்யூட்டரில் விளையாடுவது- வறுத்த, பொரித்த உணவுகளை உண்பது போன்றவைகளால் இளைய தலைமுறையினரும் உடல் பருமனாகி வருகின்றனர். எதிர்காலத்தில் அவர்களும் குறட்டையால் பாதிக்கப்படும் சூழல் உருவாகிறது.

உயிருக்கு ஆபத்து

ஆரோக்கியமான மனிதர் ஒருவர் 8 மணி நேரம் தூங்குகிறார் என்றால், அவருக்கு பத்து வினாடிகள் வரை மூச்சு விடுவதில் லேசான தடை ஏற்படும். அப்போது அவரது மூளைக்கு செல்லும் ஆக்சிஜனின் அளவு குறையும். அவர் ஆரோக்கியமான மனிதராக இருந்தால், உடனே உடலில் இருக்கும் இயற்கையான விழிப்புணர்வு மெக்கானிசம், அதை சரிக்கட்டும் விதத்தில் அவருக்கு விழிப்பை கொடுத்து, சுவாசத்தை சரிசெய்துவிடும். இது இயற்கையான நிகழ்வு. ஆனால் குறட்டை விடுபவர்களுக்கு இந்த இயற்கை விழிப்புணர்வு மெக்கானிசம் சரியாக செயல்படாது. அப்படியிருக்க, அவர்கள் குடித்துவிட்டு தூங்கினாலோ, அதிக அளவில் தூக்க மாத்திரைகளை பயன்படுத்தி தூங்கினாலோ இயற்கை மெக்கானிசத்தின் விழிப்பு நிலை மிகவும் குறைந்துவிடும். அப்போது அவர்களுக்கு குறட்டையால் தூக்கத்தில் மூச்சுவிட சிரமம் ஏற்பட்டால், விழிப்பு ஏற்படாமல் தூக்கத்திலே உயிர் பிரியும் சூழல் ஏற்படலாம்.

தூக்கம் பாதிப்பு

தூங்கும்போது சுவாசப்பாதையில் அடைப்பு ஏற்பட்டு, மூச்சுவிடுவதில் ஏற்படும் சிரமம்தான் குறட்டை சத்தமாக வெளிவருகிறது. மூக்கின் பின்புறம் `அடினாய்ட்’ தசையும், தொண்டைக்குள் `டான்சிலும்` இருக்கிறது. பல்வேறு காரணங்களால் இவை பெரிதாகும் போது, நாம் சுவாசிக்கும் காற்று எளிதாக உள்ளே போய் வெளியே வர முடியாத நெருக்கடி ஏற்படும். அந்த நெருக்கடியால் அழுத்தம் கொடுத்து மூச்சு இழுக்கும்போது காற்று பக்கத்து தசைகளிலும் அதிர்வை ஏற்படுத்தும். அந்த அதிர்வே குறட்டை சத்தமாக வெளிவருகிறது.

குறட்டைவிடுபவர்கள் இரவில் தூங்கும்போது 30 முதல் 40 தடவை மூச்சுவிட திணறுவார்கள். அதனால் அவர்கள் தூக்கம் அவ்வப்போது தடைபட்டு அவர்கள் தூங்கும் நேரம் குறையும். மறுநாள் சோர்வுடன் இருப்பார்கள்.

இரவில் தூக்கம் இல்லாமல் பகலில் தூங்குவது, தலைவலியோடு விழிப்பது ஆகியவை களால் `ஸ்லீப் அப்னீயா சின்ட்ரோம்` என்ற பாதிப்பு ஏற்படும். இந்த பாதிப்பு வந்துவிட்டால் மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் அளவு குறையும். கார்பன்டை ஆக்சைடு அளவு அதிகரிக்கும். அதனால் மூளை மட்டுமின்றி, இதயம், சிறுநீரகம் ஆகியவற்றின் செயல் பாடுகளும் பாதிக்கும். ஞாபக மறதி, ரத்த அழுத்த நோய்கள், ஆண்மைக்குறைவு போன்ற பிரச்சினைகளும் தோன்றக்கூடும் என்கின்றனர் மருத்துவர்கள்.

உடல் பருமன்

சிலர் குறட்டையின் பாதிப்பிற்கு சிகிச்சை பெற முடியாத அளவிற்கு உடல் பருமன், வயது முதிர்வு, குள்ளமான கழுத்து, மூக்கு- வாய் பகுதியில் தசை வளர்ச்சி போன்றவைகளால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் மூச்சு திணறல் இல்லாமல் இரவில் தூங்குவதற்காக `சி.பி.ஏ.பி’ என்ற கருவி உள்ளது. இதனை பொருத்திக்கொண்டு தூங்கினால் மூச்சு திணறலோ, குறட்டை தொந்தரவோ ஏற்படாது. குறட்டைக்கு சிகிச்சை மட்டும் போதாது. அவர்கள் உடல் பருமனை கட்டுக்குள்கொண்டு வர வேண்டும். அதற்காக உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு போன்றவைகளில் கவனம் செலுத்தவேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

உறங்கும் முறை

குறட்டை பாதிப்பு உள்ளவர்கள் தலையணையை சற்று உயரமாக வைத்து அவர்கள் தூங்க வேண்டும். மல்லாந்து படுக்காமல் ஒருக்களித்து அவர்கள் தூங்கவேண்டும். நாம் மூக்கின் வழியாகத்தான் சுவாசித்து உயிர்வாழ்கிறோம். எனவே மூக்கில் ஏற்படும் நோய்களையும், குறட்டையையும் அலட்சியம் செய்யாமல் அவ்வப்போது அதற்குரிய சிகிச்சைகளை பெற்றால் மட்டுமே நோய் வரும் முன்பு உடலை பாதுகாக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

வந்துவிட்டது `தங்க நானோ போன்’

நம் ஊரில், தங்கம் பெரும்பாலும் ஆபரணங்களாகத்தான் இருக்கிறது. ஆனால் ஜெர்மனியில் சமீபத்தில் `நானோ போன்’ ஆக மாறியிருக்கிறது.

செல்போன் தெரியும். மைக்ரோ போன் கூட தெரியும். அதென்ன நானோ போன்?

கண்ணுக்கு தெரியாத அளவில் மிகவும் சிறியதாக வடிவமைக்கப்பட்டு இருப்பவை மைக்ரோ போன்கள். ஒரு மைக்ரான் என்பது ஒரு மீட்டரில் 10 லட்சத்தில் ஒரு பகுதி. இப்போது மைக்ரோ போனை விட மிக மிக நுண்ணிய, நானோ அளவிலான ஒரு போனை ஜெர்மனியின் லுட்விக் மேக்சிமில்லியன் பல்கலைக்கழக ஆய்வாளர் அலெக்சாண்டர் ஓலிங்கர் தலைமையிலான ஆய்வாளர்கள் கண்டுபிடித்து அசத்தி இருக்கிறார்கள்.

வெறும் 60 நானோ மீட்டர் அகலமுள்ள இந்த நானோ போன் தங்கத்தால் ஆனது. ஒரு நானோ மீட்டர் என்பது ஒரு மீட்டரில் 100 கோடியில் ஒரு பகுதி. இதுவரை உலகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள போன்களில், ஒலியை மிக மிக துல்லியமாக கவரக் கூடிய விதத்தில் இந்த நானோ போன்களுக்கே முதலிடம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதெல்லாம் சரிதான், இந்த நானோ போனை எப்படி உருவாக்கினார்கள்?

முதலில், வட்ட வடிவமான தங்க நானோ துகள்கள் தண்ணீரில் மிதக்க வைக்கப்பட்டன. அதில் ஒரு துகள் மீது லேசர் ஒளி பாய்ச்சப்படும்போதே, அதற்கு சில மைக்ரோ மீட்டர்கள் தொலைவில் உள்ள மற்ற நானோ துகள்கள் மீது மற்றொரு லேசர் ஒளி சிறு சிறு கற்றைகளாக விட்டு விட்டு பாய்ச்சப்பட்டது. இதனால் வெப்பமடைந்த நானோ துகள்கள் அவற்றை சுற்றியுள்ள தண்ணீரை பாதிக்கவே, அழுத்தம் அல்லது ஒலி அலைகள் உருவானது.

இதற்கிடையில், மற்றொருபுறம் லேசர் ஒளி பாய்ச்சப்பட்டுக் கொண்டிருந்த ஒரு நானோ துகள் பிற நானோ துகள்களால் எழுப்பப்பட்ட ஒலி அலைகளுக்கு ஏற்ப அசைந்தாடுவது போல் முன்னும் பின்னுமாக ஆடத் தொடங்கியது. இந்த ஒரு நானோ துகளின் ஆட்டம் வெப்பத்தால் பாதிக்கப்பட்ட தண்ணீர் மூலக்கூறுகளால் ஏற்பட்டதா என்பதை தீர்மானிக்க பிற நானோ துகள்கள் ஏற்படுத்திய ஒலி அலைகளின் அலைவரிசை எண் மாற்றப்பட்டது.

இவ்வாறு அலைவரிசை எண் மாற்றப்பட்ட ஒவ்வொரு முறையும், லேசர் ஒளிக்கற்றை பாய்ச்சப்பட்ட ஒரு நானோ துகளின் அலைவரிசை எண்ணும், பிற துகள்களின் அலைவரிசை எண்ணும் ஒத்துப்போனது. அதுமட்டுமல்லாமல், தனியாக வைக்கப்பட்ட ஒரு நானோ துகளின் ஆட்டமும் பிற நானோ துகள்கள் ஏற்படுத்திய ஒலி அலைகளின் திசையிலேயே இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆக, தனியாக வைக்கப்பட்ட ஒரு நானோ துகள் ஒன்றாக இருந்த பிற நானோ துகள்களால் ஏற்படுத்தப்பட்ட ஒலி அலைகளுக்கு ஏற்பத்தான் ஆடியது என்பது நிரூபணம் ஆனது.

மனித காதுகளால் உணரப்படும் ஒலியில் இருந்து 60 டெசிபல்கள் (அதாவது, ஒரு மில்லியனில் ஒரு பகுதி) குறைவான ஒலியை இந்த அதி நவீன நானோ போன் கொண்டு உணர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அளவுக்கு குறைவான ஒலியை உணரும் ஒரு ஒலிக் கருவியை இதுவரை யாரும் கண்டுபிடிக்கவில்லை.

ஆமாம், இந்த நானோ போனை வைத்துக்கொண்டு என்ன செய்வது?

இந்த நானோ போன் தொழில்நுட்பத்தைக் கொண்டு, மிக நுண்ணிய உயிர்களான வைரஸ்கள் மற்றும் உடலின் உயிரணுக்கள் ஏற்படுத்தும் ஒலியைக் கூட துல்லியமாக கேட்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்கிறார்கள் இதன் கண்டுபிடிப்பாளர்கள். உண்மைதான் என்று ஆமோதிக்கிறார் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆய்வாளர் சாங்குவே யாங்!

மேலும், உயிரணுக்கள் அதிர்வது மட்டுமே மைக்ராஸ்கோப் மூலம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் அவை ஏற்படுத்தும் ஒலிகளை யாரும் இதுவரை பதிவு செய்யவில்லை. இதனை செயல்படுத்தும் ஒரு தொழில்நுட்பத்தை கண்டுபிடித்திருக்கிறார்கள் என்கிறார் யாங்.

உயிரணுக்கள் மற்றும் நுண்ணிய உயிரிகள் ஏற்படுத்தும் ஒலிகளை நானோ போன் கொண்டு பதிவு செய்வதன் மூலம் அவற்றின் இயங்குதன்மை, குணாதிசயங்கள் மற்றும் நோய்வாய்ப்படுவதால் உயிரணுக்கள் எப்படி மாற்றமடைகின்றன போன்றவற்றை புரிந்துகொள்ள முடியும். ஆக, நானோ போன் வருகை மருத்துவத்துக்கும், ஆய்வுலகத்துக்கும் பேருதவியாக இருக்கும். அது மட்டுமல்லாமல், இனி பாக்டீரியாக்கள், வைரஸ்கள் எல்லாம் என்ன பேசிக்கொள்கின்றன என்றும் இதன் மூலம் ஒட்டுக் கேட்கலாம்.

முனைவர் பத்மஹரி

ருமேனியாவின், “இன்ச்’ இடுப்பழகி!

கொடியிடையாள், மெல்லிடையாள் என, பெண்களின் இடையை, கவிஞர்கள் வர்ணித்துள்ளதை படித்திருக்கிறோம். இந்த கொடியிடை அமைவதற்காக, பல இளம் பெண்கள், சத்தான உணவுகளை சாப்பிடாமல், தங்களை வருத்திக் கொள்வதும் உண்டு. ஆனாலும், ஆயிரத்தில் ஒருத்தருக்கு தான், இது சாத்தியமாகும்.
அப்படிப்பட்ட ஆயிரத்தில் ஒருத்தி தான், ருமேனியாவைச் சேர்ந்த பிரபல மாடல் அழகி லோனா ஸ்பான்ஜென்பெர்க். ஐந்து அடி, ஆறு அங்குலம் உயரம் கொண்ட இந்த மாடல் அழகியின் மொத்த எடை என்ன தெரியுமா? 38 கிலோ தான். அதை விட ஆச்சரியத்திலும் ஆச்சரியம், இவரது இடையின் அளவு, வெறும், 20 அங்குலம் மட்டுமே. பேஷன் ÷ஷாக்களில் இவர் கேட்வாக் செய்யும்போது நேரில் பார்த்தால், ஒடிந்து விழுந்து விடுவாரோ என, பதறிப் போய் விடுவீர்கள்.
“மேடம், இவ்வளவு மெல்லிய இடை அமைவதற்காக, எத்தனை நாட்கள் பட்டினி இருந்தீர்கள்’என, கேட்டால், “அட போங்க பாஸ்… பட்டினியாவது, ஒன்றாவது. இப்போது கொடுத்தால் கூட ஐந்து, “அன்லிமிடெட் மீல்ஸ்’ சாப்பிடுவேன். பீட்சா, பர்கர் என எதையும் விட்டு வைக்க மாட்டேன். எல்லாம் தானாக அமைந்தது…’ என, கண்களை சுருக்கி, உதட்டைச் சுளித்து, பளீர் சிரிப்பை உதிர்க்கிறார்.
இவர், வானத்தில் இருந்து இறங்கி வந்த வெள்ளுடை தேவதை அல்ல. வரம் வாங்கி பிறந்த மெல்லிடை தேவதை.

செல்வம் தரும் செந்திலாண்டவன்!

பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்!

தமிழகத்திலுள்ள முக்கிய முருகன் கோவில்களில், மாசித்திருவிழா மிகவும் விசேஷம். முருகனுக்குரிய மகோற்சவம் இதுவே. மாசி மாத அஸ்வினி நட்சத்திரத்தில் தொடங்கி, மகம் வரை விழா நடக்கும். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா பிரசித்தமானது.
திருச்செந்தூர் என்றதும், நம் கண்களில் முதலில் தெரிவது அங்கிருக்கும் அழகிய கடல். இந்தக் கடலில் நீராடி மகிழ்வதில், பக்தர்களுக்கு அலாதி ஆனந்தம். சுனாமி வந்த போதும் கூட, சுப்பிரமணியர் அருளால், கடல் உள் வாங்கியதே தவிர, மக்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. சூரபத்மனுடன், முருகப்பெருமான் போரிட்ட போது, அவன் கடலுக்குள் சென்று மறைந்தான். உடனே, முருகன், தன் வேலாயுதத்தை கடலை நோக்கி வீசினார். வேலுக்கு பயந்த கடல், அப்படியே உள் வாங்கியது என்று கந்தபுராணத்தில் வாசிக்கிறோம். அதே நிலை, இந்த கலியுகத்திலும் ஏற்பட்டது என்பதை நினைத்தால் புல்லரிக்கிறது. சுனாமியை வென்ற சுப்பிரமணியராகத் திகழ்கிறார் செந்திலாண்டவன்.
இந்தக் கடலை, “வதனாரம்ப தீர்த்தம்’ என்பர். பக்தர்களின் கொடிய பாவங்களையும் தீர்த்து வைக்கும் அற்புதக் கடல் இது. கனகசுந்தரி என்ற தேவலோகப் பெண், பெருமாளின் அம்சமான ஹயக்ரீவரின் குதிரை முகத்தைப் பார்த்து கேலி செய்தாள். ஒருவர் அழகில்லை என்றால், அவர்களைக் கேலி செய்வது மாபெரும் பாவம். அந்தத் தவறுக்கு தண்டனையாக, அவளது முகம் குதிரை முகமாக மாறும்படியும், பூலோகத்தில் பிறக்கும்படியும், ஹயக்ரீவர் சபித்தார். அந்தப் பெண், மதுரையை ஆண்ட உக்கிரபாண்டியனின் மகளாக, குதிரை முகத்துடன் பிறந்தாள். குதிரை முகம் நீங்கி அழகு பெற, வல்லுனர்களை ஆலோசித்தாள். “திருச்செந்தூர் வதனாரம்ப தீர்த்தத்தில் நீராடினால், உங்கள் வதனம் அழகு பெறும்…’ என அவர்கள் கூறவே, அங்கு சென்று நீராடினாள். முருகப்பெருமான் அருளால் சாப விமோசனம் பெற்றாள்.
கோவிலில் மோசடி செய்தவர்கள், இறைவனைப் பழித்தவர்கள், பெற்றோருக்கு சேவை செய்யாமல், அவர்களது சாபத்தைப் பெற்று கஷ்டப்படுபவர்கள், பிதுர் கடமை செய்யாதவர்கள் ஆகியோரை, கொடிய பாவம் வந்தடையும். அவர்களெல்லாம், இனி இவ்வாறு பாவம் செய்வதில்லை என்று உறுதியெடுத்து, செந்தூர் கடலில் நீராடி வந்தால், அவர்களுக்கு விமோசனம் கிடைக்கும்.
முருகன் கோவில்கள் பல, குறிஞ்சி நிலமான மலையில் இருக்க, திருச்செந்தூர் மட்டும், நெய்தல் நிலமான கடற்கரையில் அமைந்தது எப்படி என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. புராணங்களில் சொல்லப்படும், “கந்தமாதனப் பர்வதம்’ என்ற மலை இங்கு இருந்தது. அந்த மலையைக் குடைந்து தான் ஆரம்பத்தில் திருச்செந்தூர் கோவில் கட்டப்பட்டிருந்தது. காலவெள்ளத்தில் இந்த மலை அழிந்து போக, தற்போதைய கடற்கரை கோவில் உருவானது. அந்த மலையின் ஒரு பகுதியே, தற்போதைய வள்ளி குகை என்கின்றனர்.
திருச்செந்தூர் என்ற சொல்லுக்கு பொருளையும் தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வூர், “ஜெயந்திபுரம்’ என அழைக்கப்பட்டு, “செந்தில்’ என திரிந்தது. “ஜெயந்தி’ என்ற சமஸ்கிருதச் சொல்லின் தமிழாக்கமே, “செந்தில்’. அதனால் தான், திருச்செந்தூர் முருகனை, “செந்தில்’ என செல்லப் பெயரிட்டு அழைத்தனர். “ஜெயந்தி’ என்பதற்கு, “புனிதம்’, “வளம்’ என்று பொருள். புனிதமும் வளமும் இணைந்த வெற்றி நகராக திருச்செந்தூர் விளங்குகிறது. சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து கிளம்பிய செந்தீயில் இருந்து புறப்பட்டவர் என்பதால் அவர், “செந்தில்’ ஆனார் என்றும் சொல்வர். சிவந்த தீயில் இருந்து பிறந்ததால், அவர், “சிவந்தியப்பர்’ என்ற பெயரும் பெறுகிறார். சூரனாகிய பகைவனுக்கும் முக்தி தந்த தலம் என்பதால், அழியும் உடலைக் கொண்ட நாம், செந்திலாண்டவரிடம் சரணடைந்து விட்டால், முக்தியை வழங்கி, நற்கதி தருவார்.
வாழும் காலத்தில் செல்வ வளத்தையும், வாழ்வுக்குப் பின் முக்திக்கான வரத்தையும் பெற, செந்தூருக்கு வாருங்கள்.