Daily Archives: பிப்ரவரி 28th, 2012

ரயில் கூரைகளில் பயணித்தால் இரும்பு குண்டு தாக்குதல்!

இந்தோனேசியாவின் ஜகர்த்தாவில் மக்கள் தொகை அதிகம். அதற்கு தகுந்தாற்போல், போதிய போக்குவரத்து வசதி செய்யப்படவில்லை. பணியை முடித்து விட்டு, வீடுகளுக்கு திரும்பும் மக்கள், ரயில் போக்குவரத்தை தான் நம்பியுள்ளனர். “பிசி’யான நேரங்களில் புறப்படும் ரயில்களில், கூட்டம் மிகவும் அதிகமாக இருக்கும். ரயில் பெட்டிகள் நிரம்பியதும், ரயிலின் கூரை மீதும், பொதுமக்கள் ஏறி அமர்ந்து விடுவர். சில நேரங்களில், ரயில் பெட்டிகளுக்குள் இருப்பதை விட, கூரை மீது அமர்ந்து பயணிப்போரின் எண்ணிக்கை தான் அதிகமாக இருக்கும்.
இதனால், பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், ரயில் கூரை பயணத்தை தவிர்க்க, போலீசார் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஆனாலும், ரயில் கூரை பயணத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
இதையடுத்து, தற்போது மிகவும் அபாயகரமான ஒரு விபரீத முடிவை அதிகாரிகள் எடுத்துள்ளனர். இதன்படி, ரயில் பாதையில் போதிய இடைவெளியில், கம்பிகளால் ஆன வளைவுகளை அமைத்து, அவற்றில் சங்கிலியால் கட்டப்பட்ட பெரிய அளவிலான இரும்புக் குண்டுகளை தொங்க விட்டுள்ளனர். ரயில் கூரை மீது அமர்ந்து பயணிப்போரின் தலைகளில், இந்த இரும்புக் குண்டுகள் தாக்கினால், <உயிருக்கே ஆபத்து ஏற்படும். ஆனால், இதைப் பற்றி எல்லாம் கண்டு கொள்ளாத ரயில்வே அதிகாரிகள், “ரயில் கூரை பயணத்தை கட்டுப்படுத்துவதற்கு எவ்வளவு கடுமையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தயாராக இருக்கிறோம்…’ என, அலட்சியமாக பதில் அளிக்கின்றனர். விஷயம், விபரீதத்தில் முடியாமல் இருந்தால் சரி.

கூடுதல் கடிகாரங்கள் அமைக்க

விண்டோஸ் 2000 மற்றும் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டங்களில் இல்லாத சிறப்புகளில் ஒன்று, விண்டோஸ் 7 அல்லது விஸ்டா சிஸ்டத்தில் அமைக்கக் கூடிய கூடுதல் கடிகாரங்கள் ஆகும். வழக்கமாக, ஒரு கடிகாரம் மட்டுமே டாஸ்க் பாரில் காட்டப்படும். உலகம் சுருங்கி, தகவல் தொடர்புகள் அதிகரித்துவரும் இந்நாளில் நாம் மற்ற நாடுகளில் அப்போது உள்ள நேரத்தினையும் தெரிந்து கொள்ள வேண்டிய சூழ்நிலைகளைச் சந்திக்கிறோம். இதற்காகவே, அண்மையில் வந்துள்ள விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட, நான்கு வரையிலான, கடிகாரங்களை அமைக்கக் கூடிய வசதி தரப்பட்டுள்ளது. இந்த வசதியினை எப்படி அமைத்துப் பயன்படுத்துவது எனப் பார்க்கலாம்.
1.முதலில் டாஸ்க் பாரில் நேரம் காட்டப்படும் Time என்ற இடத்தில் கிளிக் செய்து பின்னர் Change Time and date Settings. என்பதில் கிளிக் செய்திடவும்.
2. அல்லது நேரடியாக Time என்பதில் ரைட் கிளிக் செய்து, Adjust Date/ Time என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கலாம்.
3. மாறாக, கண்ட்ரோல் பேனல் திறந்து Date and Time என்ற ஐகானில் கிளிக் செய்திடவும்.
4. இப்போது திறக்கப்படும் விண்டோவில் Additional Clocks என்ற ஆப்ஷன் மேல் பிரிவில் கிடைக்கும்.
5. இங்கு கிடைக்கும் add a clock என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்தால், மற்ற டேட்டா கேட்கும்.
6. இங்கு நீங்கள் அமைக்க விரும்பும் கடிகாரத்தின் Time Zone ஐத் தேர்ந்தெடுக்க வேண்டியதிருக்கும்.
7. அடுத்து இறுதியாக, நீங்கள் அமைக்க விரும்பும் கடிகாரத்திற்கான பெயரை அதிக பட்சம் 15 கேரக்டர்களில் தரலாம்.
இவை எல்லாம் முடிந்த பின்னர், Finish என்பதில் கிளிக் செய்திடவும். அவ்வளவு தான்!. கடிகாரம் டாஸ்க் பாரில் காட்டப்படும்.

குழந்தைகளுக்கான உணவு ஊட்டறீங்களா? பொறுமை தேவை….

குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவது என்பது ஒரு கலை. ஆனால் அதையே மிகவும் கஷ்டமான காரியமாக நினைத்து குழந்தைகளை உண்ணவைக்க பாகீரத பிரயத்தனம் செய்கின்றனர் சில பெற்றோர்கள். ஏனெனில் கொடுக்கும் உணவை, வயிறு நிறையும் வரையில் சமர்த்தாக சாப்பிடும் குழந்தைகள் மிகக்குறைவு. சில குழந்தைகள் உணவை விழுங்காமல் அப்படியே வெளியே தள்ளிவிடுவார்கள். குழந்தைகளின் உண்ணும் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்ய அவர்களுக்கு ஏற்ற உணவுகளை தயாரித்து அளிக்கவேண்டும் என்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள். அவர்கள் தரும் ஆலோசனைகள் உங்களுக்காக.

ருசியான உணவு

குழந்தைகளுக்கு மூன்று மணிநேரத்திற்கு ஒருமுறை சிறிதளவு ஆகாரம் கொடுப்பது அவசியம். அதில் மூன்று முறை சாதம், காய்கறி உள்ளிட்ட உணவுகளும், இருமுறை சிநாக்ஸ்வகையாகவும், பின்னர் ஜூஸ், பால் போன்றவகையாகவும் இருப்பது அவசியம். தயிர் சாதம், காரட் மசியல், பழக்கூழ் என குழந்தைகளுக்கு பிடித்தமாதிரியான உணவுகளை தயாரித்து அளிப்பது அவர்களின் உண்ணும் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்யும்.

தானியங்கள், பயிறு, பருப்பு வகைகள், பழங்கள், காய்கறிகள் என குழந்தைகளின் உணவுகளை திட்டமிட்டு தயாரித்து அளிக்கவேண்டும். புரதச்சத்து நிறைந்த மாமிச உணவுகள், சீஸ், பீன்ஸ் போன்றவைகளைக் கொண்டு தயாரித்த உணவுகளை அளிக்கவேண்டும். பிரட், ஆப்பிள், சூப், போன்றவைகளை இரவு நேரங்களில் கலர்புல்லாக தயாரித்து அளித்தால் குழந்தைகள் ஆர்வமுடன் சாப்பிடுவார்கள்.

சரியான அளவு

குழந்தைகளின் வாய்க்குள் எந்த அளவிற்கு உணவு பிடிக்குமோ அந்த அளவிற்கு மட்டுமே உணவுப்பொருளை வைக்கவேண்டும். அதிகமாக சாப்பிடவேண்டும் என்பதற்காக எக்கச்சக்க உணவுகளை திணிப்பதால் தொண்டைக்குழியில் சிக்கி குழந்தைகள் சிரமப்படும். அதுவே உணவின் மீதான வெறுப்பை ஏற்படுத்திவிடும்.

ஊட்டச்சத்து உணவுகள்

புதிய வகை உணவுகளை அறிமுகப்படுத்தும் போது குறைந்த அளவு கொடுத்து குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுகிறதா? என்பதை கவனித்து பின்னர் உணவை அளிக்கவேண்டும். குழந்தைகளுக்கு வறுத்த, பொரித்த உணவுகளை கொடுப்பதை விட நார்ச்சத்துள்ள உணவுகளை அறிமுகப்படுத்தினால் அவர்களுக்கு வயிறு தொடர்பான நோய்கள் ஏற்படுவது தவிர்க்கப்படும்.

ஜங்க் ஃபுட் வகைகளைகளை அதிகம் தருவதற்கு பதிலாக மாலை நேரங்களில் பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள் உணவுகளை பழக்கப்படுத்துவது அவர்களுக்கு ஊட்டச்சத்து கிடைக்க வழி ஏற்படும்.

பொறுமை அவசியம்

குழந்தைகள் இயல்பிலேயே வாயில் படும் பொருட்களை வெளியில் தள்ள முயற்சி செய்யும். நாளடைவில் அந்த பழக்கம் மாறிய பின்னர் உணவை விழுங்கத் தொடங்கும். அதனால், நாம்தான் பொறுமையாக உணவை அவர்களுக்கு ஊட்டிவிட வேண்டும்.

குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்டிக்கொண்டே மெதுவாக உணவு ஊட்டவேண்டும். குழந்தையில் நாவில் உள்ள சுவை நரம்புகளுக்கு ஏற்ப உணவை ருசியாக தயாரித்து அளித்தால் குழந்தைகள் உணவு உட்கொள்வார்கள்.

ஸ்பூன் எச்சரிக்கை

இன்னும் சில குழந்தைகளுக்கு முதன் முறையாக ஸ்பூன் கொண்டு உணவை கொடுக்கும் போது பிடிக்காமல் போகலாம். உணவை சாப்பிட மறுத்தால், நமது ஆள்காட்டி விரலை நன்கு சுத்தமாக கழுகி அதில் உணவை சிறிய அளவில் தடவி குழந்தைக்கு கொடுக்கலாம். உணவு சுவை பழகிய பின்னர் ஸ்பூன் கொண்டு கொடுக்கலாம்.

குழந்தைகளுக்கு ஸ்பூன்கள் கொண்டு உணவு ஊட்டும் போது மிகவும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். சிறு குழந்தைகள் மிக வேகமாக கையால் தட்டிவிடும். அப்போது குழந்தையின் வாயில் அல்லது முகத்தில் ஸ்பூன் பட்டு காயம் ஏற்பட்டுவிட வாய்ப்பு உள்ளது.

அதனால், எக்காரணம் கொண்டும் கூர்மையான, வெட்டும்படி உள்ள சில்வர் ஸ்பூன்களை உபயோகிக்கக் கூடாது. குழந்தைகளுக்கு என்றே உள்ள பிரத்தியோக குட்டி ப்ளாஸ்டிக் ஸ்பூன்களை பயன்படுத்துவதுதான் பாதுகாப்பானது.

முன் உதாரணம்

நம்முடைய உணவுப் பழக்கமே குழந்தைகளை தொற்றிக்கொள்ளும். ஊட்டச்சத்து எதுவும் இல்லாத உணவுகளை பெற்றோர்களே ருசிக்காக வாங்கி உண்ணும் போது அந்த பழக்கம் குழந்தைகளை தொற்றிக்கொள்கிறது. எனவே வீடுகளில் நாம் சத்தான உணவுகளை தயாரித்து உண்பதனால் அதனை குழந்தைகளுக்கு வழங்க முடியும். அவர்களுக்கும் சரிவிகித சத்துணவு கிடைக்கும். எனவே குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு நம்முடைய உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்வது நலம் என்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள்.

`பால் வீதி’ – பெயர்ப் பொருத்தம்!

நமது விண்வெளி மண்டலத்துக்கு `பால் வீதி’ என்று பெயர் சூட்டியிருப்பது ரொம்பப் பொருத்தம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். அதிகாலைப் பனி போலவே நமது `பால் மண்டலம்’ `பளிச்’ வெண்மையில் திகழ்கிறதாம்.

பால் வீதி நிறம் பற்றிய உறுதியான தகவல் களைத் தெரிவித்திருப்பவர்கள் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக விஞ்ஞானிகள். நாம், அதாவது நமது பூமி, பால் மண்டலத்தின் மத்தியில் அமைந்திருக்கிறது. எனவே இப்பகுதியின் நிறத்தை துல்லியமாக நிர்ணயிப்பது இதற்கு முன்பு கடினமாக இருந்தது.

எந்த ஒரு நட்சத்திர மண்டலத்தின் நிறத்தை அறிவதும் முக்கியமான விஷயம். அதுதான் அந்த மண்டலம் தோன்றிய வரலாறு, நட்சத்திர உருவாக்கம் போன்ற விஷயங்களை விளக்கும்.

நமது பூமி, பால் மண்டலத்தின் நடுவில் அமைந்திருப்பதால், இம்மண்டலத்தில் நெருக்கமாக உள்ள பகுதிகளைத் தவிர பிற பகுதிகளை தெளிவாகப் பார்க்க முடிவதில்லை. வாயு மேகங்கள், தூசிகள் போன்றவை மறைப்பதே காரணம்.

“பால் மண்டலம், 1 லட்சம் ஒளியாண்டுகள் குறுக்களவு கொண்டது. ஆனால் நம்மால் எந்த திசையிலும் ஆயிரத்தில் இருந்து இரண்டாயிரம் ஒளியாண்டுகள் தொலைவுக்குத்தான் பார்க்க முடிகிறது” என்கிறார், மேற்கண்ட ஆய்வில் ஈடுபட்ட பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தின் ஜெப்ரி நியூமேன்.

“பால் மண்டலத்தின் நிறத்தைக் கண்டுபிடிப்பது, நமது உலகம் ஒட்டுமொத்தமாக எவ்வாறு காட்சியளிக்கும் என்று துல்லியமாக நிர்ணயிப்பதைப் போல கடினமானது. பென்சில்வேனியா போன்ற ஒரு குறிப்பிட்ட பகுதி எவ்வாறு காட்சியளிக்கும் என்றுதான் நம்மால் கூற முடியும்” என்கிறார் இவர்.

எனவே பால் மண்டலத்துக்கு அருகில் உள்ள பிற நட்சத்திர மண்டலங்களை அறிவியல்ரீதியாக ஒப்பிட்டு, அதன் மூலம் பால் மண்டலத்தின் நிறத்தை பிட்ஸ்பர்க் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆனால் இம்மண்டலம், இதுவரை நாம் கருதி வந்ததை விடவும் கொஞ்சம் பிரகாசம் குறைவாகவும் இருக்கிறதாம்.

ஆபத்துடன் விளையாடும் சீன இளம்பெண்!

சீனாவில் பொருளாதார வளர்ச்சி அதிகரித்துள்ளதன் அறிகுறியாக, புதிதாக, பல பெண் தொழில் அதிபர்கள், அதிக அளவில் உருவாகியுள்ளனர். இவர்கள், தொழில் விரோதிகளிடம் இருந்து தங்களை பாதுகாப்பதற்காக, பாதுகாவலர்களை பணியமர்த்த ஆர்வமாக உள்ளனர். ஆண் பாதுகாவலர்களை பணியமர்த்துவதில் பல பிரச்னைகள் இருப்பதால், பெண்களையே, தங்களுக்கு பாதுகாவலர்களாக பணியமர்த்த விரும்புகின்றனர். இதனால், சீனாவின் பீஜிங் உள்ளிட்ட பல நகரங்களில், பெண் பாதுகாவலர்களுக்கான பிரத்யேகமான பயிற்சி மையங்கள் ஏராளமாக உருவாகியுள்ளன.
பெண் பாதுகாவலர்களுக்கு, ஒரு நாளைக்கு, 5,000 ரூபாய் ஊதியமாக தரப்படுவதால், பட்டப் படிப்பு முடித்த பல இளம் பெண்கள், பயிற்சி மையங்களில் ஆர்வமாக சேர்கின்றனர். தலையில் பாட்டில்களை உடைப்பது, ஆயுதத்துடன் இருக்கும் எதிரிகளை, ஆயுதமின்றி எதிர்கொண்டு போராடுவது, வேகமாக ஓடும் வாகனங்களில், எகிறி குதித்து சாகசம் செய்வது, போன்ற கடுமையான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. பாட்டில்களை தலையில் உடைக்கும்போது, சில பெண்களுக்கு தலையில் காயம் ஏற்பட்டாலும், அதை பொருட்படுத்தாமல், அடுத்த பயிற்சிக்கு தயாராகி விடுகின்றனர். எல்லாம் பணம் படுத்தும் பாடு.

சாக்லேட் ஆசையா? வேலையில் `அலுப்பு’!

அலுவலகத்தில் வேலை பார்க்கும்போது, கொஞ்சம் சாக்லேட் சாப்பிடலாம் அல்லது ஒரு கோப்பை சூடான காபி அருந்தலாம் என்று தோன்றுகிறதா? நீங்கள் நிச்சயம் `போரடித்து’ போயிருக்கிறீர்கள்.

இங்கிலாந்தின் மத்திய லங்காஷயர் பல்கலைக்கழக ஆய்வாளர்களால் இதுதொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அலுவலகப் பணி புரியும் சுமார் 100 பேரை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள், தங்களுக்குப் பணியின்போது போரடித்தால் நொறுக்குத் தீனிகளைக் கொறிப்பதாகவும், காபி போன்ற பானங்களைப் பருகுவதாகவும் தெரிவித்தனர்.

“வேலையில் ஒருவருக்கு போரடிக்கிறதா, இல்லையா என்பது, வேலை எந்தளவு நெருக்கடியானது, ஒருவரின் ஆளுமை எப்படிப்பட்டது என்பன போன்றவற்றைப் பொறுத்தது” என்கிறார், தலைமை ஆய்வாளரான சாண்டி மான்.

இந்த ஆய்வாளர்கள் தாங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பணியாளர்களிடம், அவர் களின் வேலை நேரப் பழக்கம் குறித்த கேள்வித்தாளை நிரப்பித் தரும்படி கேட்டனர். அதிலிருந்து பெறப்பட்ட தகவல்களைக் கொண்டு ஓர் அறிக்கையைத் தயார் செய்தனர். அதை, பிரிட்டீஷ் மனோதத்துவவியல் கழகத்தின் பணி உளவியல் பிரிவின் வருடாந்திர மாநாட்டில் சமீபத்தில் தாக்கல் செய்தனர்.

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பணியாளர்களிடம் `போரடிப்பது’ எந்த அளவுக்கு இருக்கிறது என்றும் கேட்கப்பட்டது. அதில், `போரடிப்பதே இல்லை’ என்பது முதல், `பெரும்பாலான நேரங்களில் `போர்’தான்’ என்பது வரை பதிலாக வந்தன.

பணியாளர்களில் 25 சதவீதம் பேர், தாங்கள் பெரும்பாலான வேளைகளில் உற்சாகம் குன்றிப் போவதாகக் கூறினர். அதிகமாக போரடிப்பதாக கூறியவர்கள், அதிகமாக விடுப்பு எடுக்கவும், வேலையை விடவும் விருப்பம் உள்ளவர்களாக இருந்தனர்.

வேலை அலுப்பில் இருந்து தப்பித்து, தங்களைத் தாங்களே தூண்டிக்கொள்ளவே பணியாளர்கள் பலரும் சாக்லேட், பானம் போன்றவற்றை நாடுவதாக ஆய்வாளர்கள் அறுதியிட்டுக் கூறுகின்றனர்.

தம்பதிகளுக்குள் சண்டை-மாமியார்களும் முக்கியக் காரணமாம்!

தம்பதிகளுக்குள் ஏற்படும் சண்டைகளுக்கான காரணிகளில் மாமியார்களும் ஒரு முக்கிய காரணியாக இருக்கிறார்களாம்.

பணப் பிரச்சினை, குடும்பப் பிரச்சினை, வேலை தொடர்பான பிரச்சினை என பல பிரச்சினைகளை மையமாக் வைத்து கணவன், மனைவி இடையே சண்டை மூண்டாலும் கூட மாமியார் பிரச்சினையும் முக்கியமானதாக இருக்கிறதாம்.

இந்தக் கதை இங்கிலாந்துக் கதை. அந்த நாட்டில் குடும்பச் சண்டைகள் பலவற்றுக்கு மாமியார் -மருமகள் மோதலே காரணம் என்கிறது ஒரு ஆய்வு.

2000 தம்பதிகளிடம் இதுதொடர்பாக ஒரு ஆய்வை நடத்தினர். அதில் சம்பளப் பிரச்சினை, பொருளாதாரம் சார்ந்த பிரச்சினை உள்ளிட்ட பல பிரச்சினைகள் சண்டைகளுக்குக் காரணமாக இருந்தாலும் மாமியார் பிரச்சினையும் முதன்மையானதாக இருக்கிறதாம்.

பிலிப்ஸ் நிறுவனம்தான் இந்த சர்வேயை நடத்தியுள்ளது. தங்களுக்கு வீட்டில் ஏகப்பட்ட வேலைகள் இருப்பதால் எப்போதும் பதட்டமாகவும், கோபத்தோடும் இருக்க நேரிடுவதாக பல பெண்கள் கருத்து தெரிவித்தனராம்.

குடும்பப் பெண்களுக்கு ஏற்படும் பத்து முக்கியப் பிரச்சினைகளாக குடிப் பழக்கம், துணி துவைப்பது, டிவியில் என்ன பார்ப்பது என்பதில் வரும் சண்டை ஆகியவை முக்கிய இங்களைப் பிடித்துள்ளன.

சில வீடுகளில் தம்பதிகளுக்கிடையே தினசரி சண்டை மூளுகிறதாம். 20ல் ஒரு ஜோடி, தினசரி பலமுறை சண்டை போடும் ஜோடிகளாக உள்ளனராம்.

சினனச் சின்ன பிரச்சினையைக் கூட பல வீடுகளில் பெரிதாக்கி பெரும் சண்டை போடுகிறாராக்ளாம். டிவி ரிமோட்டை கையில் வைத்திருப்பது தொடர்பாக பலரது வீடுகளில் போர் வெடிக்கிறதாம். தலையைத் துவட்டி விட்டு துணியை ஆங்காங்கே போடுவது தொடர்பாக சண்டை போடுகிறார்களாம். வெளியில் கிளம்புவதற்கு டைம் ஆனால் கூட சில ஜோடிகள் பெரும் சண்டையில் இறங்கி விடுகிறார்களாம்.

நம்ம ஊரில் மாமியார்களும், மருமகள்களும் சண்டைகளை மூட்டை கட்டி விட்டு ஜாலியாக வாழ ஆரம்பித்து விட்டனர். இங்கிலாந்தில் இப்போதுதான் முதலிலிருந்து ஆரம்பிக்கிறார்கள் போல..!

சம்சார பந்தத்தில் இருந்து விடுபட முடியுமா?

மனிதர்கள் சம்சார பந்தங்களிலிருந்து விடுபட்டு, பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டு, முக்தி பெற வேண்டும் என்பதுதான் மகான்களின் வாக்கு. இது, எல்லாருக்கும் சாத்தியமா என்பது கேள்வி! ஒரு மரம் இருக்கிறது. அதில், ஒரு மாடு கட்டப்பட்டுள்ளது; அந்த மாடு மரத்தைச் சுற்றி, சுற்றி தான் வர முடியும்; அது வேறு எங்கும் இஷ்டம் போல் ஓடியாடி திரிய முடியாது.
அதேபோல் மனிதனும், சம்சாரம் என்னும் மரத்தில், பந்த பாசம் என்ற கயிற்றால் கட்டப்பட்டிருக்கிறான். மனிதனாகிய பசு, சம்சாரம் என்ற மரத்திலிருந்து விடுபட வேண்டுமானால் பந்தபாசம் என்ற கயிற்றை அறுத்து விட வேண்டும்.
வைராக்கியம் என்ற கத்தியால் பந்தபாசம் என்ற கயிற்றை அறுத்து விட வேண்டும். அப்படி செய்து விட்டால், சம்சாரம் என்ற மரத்திலிருந்து விடுபட்டு, பக்தி மார்க் கத்தைத் தேடிப் போக முடியும். ஆனால், சம்சாரம் என்பதை சுலபமாக விட்டுவிட முடிவதில்லை. எல்லாருமே சம்சார பந்தங்களிலிருந்து விடுபட்டு விட முடியுமா? முடியாது!
அதாவது, இவனை பந்தபாசம் என்ற கயிறு கட்டிப்போட்டுள்ளது. எல்லாருமே சம்சாரத்தை விட்டுவிட்டு சன்னியாசியாகி விட முடியாது. குடும்பத்தையும் விட்டு விட வேண்டியதில்லை. அதில் இருந்து கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக பந்த பாசங்களை குறைத்து, பக்தியில் ஈடுபட்டு, பக்தி மார்க்கத்துக்குப் போகலாம்.
இதற்குதான் வைராக்கியம் வேண்டும். வீட்டையும், சம்சாரத்தையும் விட்டு விட்டு சன்னியாசியாகி தேசாந்திரம் போவது ரொம்பவும் சிரமமானது. வீட்டில் மனைவியிடம் கோபித்துக் கொண்டு, “நான் சன்னியாசியாகி, எங்கேயாவது போய் விடுகிறேன்…’ என்பான்.
ஆனால், போக மாட்டான். தெருக்கோடி வரை போய், திரும்பி விடுவான். காரணம், அவனிடம் வைராக்கியம் இல்லை. வைராக்கியம் என்ற கத்தி இல்லாதபோது, பந்தபாசம் என்ற கயிற்றை வெட்ட முடியாது.
பந்தபாசம் உள்ளவரையில் மனிதன் அதற்கு ஆட்பட்டு, சம்சாரத்திலேயே உழன்று கொண்டே இருக்க வேண்டியதுதான். இப்படியே இருந்தால் முக்தி எப்படி கிடைக்கும்? பந்தபாசங்களிலிருந்து விடுபட வேண்டும்; முடியுமா?