Daily Archives: மார்ச் 6th, 2012

அனுப்பிய மெயிலை நிறுத்தலாம்

பெரும்பாலான மெயில் சர்வர்களில், மின்னஞ்சல் செய்தி ஒன்றை அனுப்ப கட்டளை கொடுத்தவுடன், அந்த மெயில் உடனடியாக அனுப்பப்படும். கட்டளை கொடுத்த பின்னர், அதனைத் திரும்பப் பெற இயலாது. நீங்கள் யாருக்கு அனுப்பினீர்களோ, அவரின் இன் பாக்ஸுக்கு அந்த மெயில் சென்றுவிடும். ஒரு நொடியில் இது அனுப்பப்படுகிறது. இதனைத் திரும்பப் பெற பகீரதப் பிரயத்னம் செய்திட வேண்டும். அந்த மெயிலைப் பெறும் சர்வரின் அட்மினிஸ்ட் ரேட்டரைத் தொடர்பு கொண்டு, மெயிலை அவர் முயற்சி எடுத்து நீக்குமாறு கேட்டுக் கொள்ளலாம். ஆனால், இது தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் கதை. பெரும்பாலான சர்வர் அட்மினிஸ்ட்ரேட்டர்கள் இது போன்ற வேண்டுகோள்களுக்குச் செவி சாய்க்க மாட்டார்கள். இது மற்றவரின் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவது என எண்ணுவார்கள்.
ஆனால், இணையப் பழக்கவழக்கங்களில் பல வகை மாற்றங்களைக் கொண்டு வரும் கூகுள் நிறுவனம், இதிலும் ஒரு புதிய வசதியைத் தந்துள்ளது. நான் அனுப்பிய மெயிலைத் திரும்பப் பெற எண்ணினால், உடனடியாக அதனை நிறுத்தலாம். இந்த வசதியைப் பயன்படுத்த, மெயிலை அனுப்பிய சில நொடிகளில் செயல்பட வேண்டும். அதிக பட்சம் 30 நொடிகளில் இதனை மேற்கொள்ள வேண்டும். இதற்கு Undo Send என்ற பட்டனை அழுத்த வேண்டும். இந்த கட்டளை, மெயிலைப் பெறுபவரின் இன் பாக்ஸில் இருந்து அழிப்பதன் மூலம் நடைபெறுவதில்லை. மெயில்கள் வரிசையில் நிற்கும்போது அவை தடுக்கப்படுகின்றன. மீண்டும் அனுப்பியவரே, Undo Send என்பதனை நீக்கினால் தான் அந்த மெயில் அனுப்பப்படும். இதனைச் சோதனை செய்திட, நீங்களே உங்கள் இமெயில் முகவரிக்கு ஒரு மெயிலை அனுப்பி, உடனேயே கேன்சல் செய்து பார்க்கலாம். இந்த வசதி வெப் அடிப்படையில் இயங்கும் ஜிமெயில் தளத்தில் மட்டுமே கிடைக்கிறது.
இந்த வசதியைப் பெற முதலில் இதனை இயக்கிவைத்திட வேண்டும். உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டில் நுழையவும். மெயில் தளத்தின் மேலாக, வலது புறத்தில் உள்ள செட்டிங்ஸ் ஐகானில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Labs என்னும் டேப்பில் கிளிக் செய்து Undo Send என்னும் டேப் எங்குள்ளது என்று கண்டறியவும். அல்லது, சர்ச் பாக்ஸில் Undo Send என டைப் செய்து, இந்த வசதி தரப்பட்டிருக்கும் இடத்தினை அறியலாம். அந்த இடத்தில் உள்ள Enable என்ற பட்டனில் கிளிக் செய்து, பின்னர் Save Changes என்ற பட்டனையும் அழுத்தவும்.
ஜிமெயில் தளத்தில் மாறா நிலையில் இதற்கு பத்து விநாடிகள் நேரம் தான் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை 5,10,20,30 நொடிகள் என மாற்றலாம். இந்த நேரத்தினை செட் செய்திட, செட்டிங்ஸ் பக்கத்தில் Undo Send கிளிக் செய்து Send cancellation period என்பதில், நீங்கள் விரும்பும் நேரத்தினை செட் செய்திட லாம். இதனை செட் செய்துவிட்டால், ஒவ்வொரு முறை நீங்கள் மெயில் அனுப்பிய பின்னரும், ஒரு பாப் அப் விண்டோவில் “Your message has been sent. Undo. View message” என ஒரு செய்தி கிடைக்கும். இதில் உள்ள Undo லிங்க்கில் கிளிக் செய்தால், அப்போது அனுப்பப்பட்ட அஞ்சல் நிறுத்தப்படும். ஜிமெயில் வசதியை இணைய தள சர்வரின் மூலம் பயன்படுத்துவோருக்கு மட்டுமே இந்த வசதி கிடைக்கும். ஜிமெயிலின் SMTP அல்லது மற்ற இமெயில் கிளையண்ட் புரோகிராம்களைப் பயன்படுத்துகையில் இந்த வசதி கிடைக்காது.
அனுப்பப்பட்ட மெயிலை நிறுத்தக் கட்டளை கொடுத்த பின்னர், ஜிமெயில் அதற்கான செயல்பாட்டில் இருக்கையில், பிரவுசர் விண்டோவினை மூடினால், அந்த செயல்பாடு மேற்கொள்ளப்படமாட்டாது. அதன் பின்னர், அந்த இமெயில் அனுப்பப்படுவதனை நிறுத்த முடியாது.

அழகான போன்சாய் மரங்கள் பராமரிப்பது சுலபம்!

போன்சாய் என்பது இயற்கையான மரத்தைப் போலவே சிறியதாக உள்ள மரம். இதனை வீட்டில் அழகிற்காக வளர்க்கலாம். இதனை பராமரிப்பது என்பது மிகவும் கடினமான விஷயமல்ல. நீர் ஊற்றுவது, உரமிடுவது, தொட்டி மாற்றுவது போன்ற ஒரு சில விஷயங்கள் மட்டும் தெரிந்து கொண்டால் போதுமானது அழகான, ஆரோக்கியமான போன்சாய் மரங்களை வளர்க்கலாம்.

கோடை காலத்திலும், வசந்த காலத்திலும் போன்சாய் மரங்களை பால்கனி போன்ற இடங்களில் வளர்க்கலாம். அப்பொழுது சூரிய ஒளி செடிகளுக்கு நன்றாக கிடைக்கும். அதேசமயம் குளிர்காலத்தில் வீட்டிற்குள் தெற்குப் பகுதியில் வைத்து வளர்க்கவேண்டும். இல்லையெனில் கிழக்கு அல்லது மேற்குப் பகுதிகளில் வைக்கலாம். வடக்குப் பகுதி ஏற்றதல்ல என்கின்றனர் தோட்டக்கலை நிபுணர்கள். தினசரி போன்சாய் மரங்களுக்கு நான்கு முதல் 6 மணிநேரம் சூரிய ஒளி கிடைக்குமாறு வைக்கவேண்டும்.

நீர் ஊற்றுதல்

முதலில் நீர் ஊற்றுவது. நீர் ஊற்றுவது என்பது மரத்தில் வகையைப் பொறுத்து மாறுபடும். தினமும் குறிப்பிட்ட நேரத்தில் நீரூற்ற வேண்டியது இல்லை. நாம் விரலை மண்ணில் விட்டுப் பார்த்தால், ஒரு அரை இன்ச் ஆழம் வரை காய்ந்து போய் இருந்தால் நீர் ஊற்ற வேண்டும். தண்ணீர் ஊற்ற மதிய நேரம் ஏற்றதல்ல. காலையிலோ அல்லது மாலை நேரத்திலோ தண்ணீர் ஊற்ற வேண்டும்.

தண்ணீரை அப்படியே தொட்டியினுள் கொட்டக்கூடாது லேசாக தெளிப்பது போல சிறிது சிறிதாக ஊற்ற வேண்டும். இல்லாவிட்டால், நீரின் வேகத்தில் மண் அடித்து செல்லப்பட்டு விடும். அதே சமயம், நீரானது, எல்லா வேர்களும் நனையும் வகையில், அதிகப்படி நீர் வெளியேறும் ஓட்டை வழியாக வெளியேறும் வரை ஊற்ற வேண்டும். மழை நீரை சேகரித்து வைத்து ஊற்றினால் நல்லது.

உரமிடுதல்

இயற்கையாக வளரும் மரங்களில் வேர்கள் அதற்கான சத்து கிடைக்கும் இடம் நோக்கி வளர்ந்து கொள்ளும். ஆனால் போன்சாயானது, நாம் சிறு தொட்டியில் வளார்ப்பதால், உரமிடுவது மிக அவசியம். நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் என மூவகை உரங்கள் மரத்துக்கு முக்கியம். நைட்ரஜன் இலை, கிளை வளர்ச்சிக்கும், பாஸ்பரஸ் வேர்களின் ஆரோக்கியத்துக்கும், பொட்டாசியம் பூக்கள் காய்களின் காய்ப்புக்கும் மிக அவசியமானது. நாம் வருடத்தின் எக்காலத்தில் உரமிடுகிறோமோ, அதைப் பொறுத்து, நாம் உரமிடும் கலவை மாறுபடும்.

இலையுதிர் காலத்தில் நைட்ரஜன் அளவு குறைவாகவும், வசந்த காலத்தில் நைட்ரஜன் அளவு கூடுதலாகவும் இட வேண்டும். வெயில் காலத்தில் சரிவிகிதமாக உரமிட வேண்டும். மரம் சற்று முதிர்ந்து விட்டால், வளர்ச்சிக்கான நைட்ரஜன் விகிதத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் பூப்பூக்கும் பருவத்தில் பொட்டாசியம் அளவைக் கூட்டிக் கொள்ளவேண்டும்.

தொட்டி மாற்றுதல்

போன்சாய் மரத்திற்கு ஒரு வருடத்திற்கு ஒருமுறை தொட்டி மாற்றுவது அவசியம். தொட்டி மாற்றுவதால், நம் போன்சாய் மரம் சிறியதாகாது, மாறாக, அது புது சத்துக்கள் கிடைக்க உதவுகிறது. ஆரம்பத்தில் வேகமாக வளரும் மரமாக இருந்தால், இரு வருடம், இன்னும் சொல்லப்போனால் ஒரு வருடத்துக்கொரு முறை தொட்டி மாற்ற வேண்டும். வசந்த காலம் ஆரம்பிக்கும் முன் தொட்டி மாற்றிவிட வேண்டும். அப்போ தான் அதனால் ஏதும் சேதம் ஏற்பட்டால் கூட விரைவில் வளர்ந்து விடும். மரத்திற்கு வயதாகி விட்டால் 3 அல்லது 5 வருடத்துக்கொரு முறை மாற்றினால் போதும்.

தொட்டி மாற்றும் போது, வேர்களில் இருக்கும் மண்ணை லேசாக உதிர்த்து விடவேண்டும். பின்னர் வேறொரு தொட்டியில் மக்கிய உரம், மணல், மற்றும் செம்மண் கலவையில் அதை ஊன்ற வேண்டும். மண் கலவை நீரை நன்கு உறிஞ்சும் தன்மையதாக இருக்க வேண்டும். சிறிது மண்ணை தொட்டியில் போட்டு, பின் அதில் மரத்தை வைத்து, அதன் மேல் மீதி மண்ணைப் போட வேண்டும். மண்ணில் ஊன்றும் முன், அதன் வேர்களை வெட்டிவிட வேண்டும். மிக நீளமான வேர்கள் மற்றும் அழுகிப் போன வேர்களை லேசாக நறுக்கிவிட வேண்டும். தொட்டி மாற்றிய பிறகு, இரு மாதங்களுக்கு, அம்மரத்தை கடுமையான காற்று மற்றும் கடுமையான வெப்பத்திலிருந்து பாதுகாக்க வேண்டும்.

மரங்களை அதிக அளவில் பெரியதாக விடக்கூடாது. அவ்வப்போது நறுக்கிவிடவேண்டும். அப்பொழுதுதான் கண்ணுக்கு அழகான மரம் கிடைக்கும். போன்சாய் மரங்களை பூச்சித்தாக்குதலில் இருந்தும் நோய் தாக்குதலில் இருந்து ம் பாதுகாத்து வளர்க்கவேண்டும். இம்முறைகளை பின்பற்றி நாம் பராமரித்தால், எவ்வகை மரத்தை வேண்டுமானால் போன்சாயாக வீடுகளில் வளர்க்கலாம்

தீக்காயம் ஏற்பட்டால்…

சமையல் செய்யும்போது தீயால் விரலைச் சுட்டுக் கொண்டால், அதற்கென்று உள்ள களிம்பையோ, மசியையோ, நெய்யையோ தடவுகிறோம். இதெல்லாம் பழைய முறைகள். ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட புதிய முறை எளிமையானது. அதாவது தண்ணீரில் விரலை வைத்துக் குளிரச் செய்வது. ஐஸ் இருந்தாலும் வைக்கலாம். வெப்பத்தை விரைவில் அப்புறப்படுத்துவதே முதல் உதவி.

உடலில் தீப்புண் எவ்வளவுக்கு எவ்வளவு பரவலாக இருக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு விபத்தின் கொடூரம் அதிகம். ரத்த நாளங்களும், தசை நார்களும் சிதைவுபட்டு, நீர் போன்ற திரவம் உடலில் இருந்து வெளியே வருகிறது. அதனால் ரத்தம் சுண்டிப் போய் திரவத் தன்மை குறைந்து கெட்டியாகிறது.

இப்படி அதிகக் கனமுள்ள ரத்தத்தை உடலில் செலுத்த இதயம் மிகக் கடினமாக உழைக்க வேண்டியிருக்கிறது. அதனால், தீப்புண்ணுக்கு இரையானவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அப்புறப்படுத்துவது அவசியம். உடலில் மூன்றில் ஒரு பாகமோ அல்லது அதற்கு மேற்பட்டோ தீயால் பாதிக்கப்பட்டால் அந்த நபர் மிகவும் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார் என்று கூறலாம்.

தீப்புண்கள் கிருமிகள் இல்லாதவை. எனவே அசுத்தமான கை படக் கூடாது. தீப்பற்றிய துணி புண்ணில் ஒட்டிக் கொண்டிருந்தால் அதைப் பிய்க்கக் கூடாது. துணி, தீயால் கிருமிகள் இல்லாமல் சுத்தப்படுத்தப்பட்டிருக்கும். நகைகள், கடிகாரம் போன்றவற்றைக் கழற்றிவிட வேண்டும். பிறகு எடுத்தால் வீக்கத்தினால் வலி அதிகம் ஏற்படும்.

தீ விபத்துக்கு உள்ளானவர்கள், அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னம்பிக்கையே முதல் மருந்து. உடல் ஏதாவது திடீர் விபத்துக்குள்ளானால் அந்தச் சூழ்நிலையைச் சமாளிக்க, பாதிக்கப்பட்ட பகுதிக்கு அதிக ரத்தம் பாயும். தோல், சதைப் பாகங்கள், ஜீரணக் குழாய் போன்றவற்றில் ரத்த ஓட்டம் குறையும்.

அதனால்தான் தீ விபத்துக்குள்ளானவர்களின் உடல் வெளுத்தும், சில்லென்றும், ஈரமாகவும் இருக்கும். செரிமான சக்தியும் இருக்காது. இவர்களுக்கு, கடினமாக உள்ள உணவைக் கொடுக்கக் கூடாது. தாகம் எடுத்தால் தண்ணீர் அல்லது லேசான தேயிலைப் பானம் போன்ற நீராகாரம் மட்டுமே கொடுக்க வேண்டும்.

தீப்பிடித்துக் கொண்டதும் உதவிக்காக அங்குமிங்கும் ஒருவர் நடந்தால், அதனால் காற்றோட்டம் ஏற்பட்டு துணி முழுவதும் தீ பரவும். பக்கத்தில் இருப்பவர் உடனே தண்ணீரை ஊற்ற வேண்டும். சாதாரணமாக எல்லோரும் எண்ணுவது, உடனே ஒரு கம்பளியால் அல்லது ஜமுக்காளத்தால் போர்த்தித் தீயை அணைக்க வேண்டும் என்பது. அது தவறு!

பல பழ ஜாம்

டைகளில் வாங்குவதைக் காட்டிலும் நீங்களாகவே புரூட் ஜாம் தயாரித்து சுவைத்தால் செலவும் குறைவு, குழந்தைகளுக்கு நாமே தயாரித்து கொடுத்தோம் என்ற திருப்தியும் இருக்கும். ஜாம் தயாரிப்பதும் மிகவும் எளிது, செய்முறை இதோ…
தேவையானவை

பல கனிகள் சேர்ந்த பழக்கூழ் – 1 கிலோ
சர்க்கரை – 1 கிலோ
சிட்ரிக் ஆசிட் – ஒன்றேகால் டீஸ்பூன்
ராஸ்பெர்ரி ரெட் கலர் – தேவையான அளவு
மிக்ஸ்ட் புரூட் பிளேவர் எஸென்ஸ் – 1 டீஸ்பூன்

செய்முறை

* கனிந்த இனிப்புச் சுவையுள்ள பழங்களாக உதாரணமாக மாம்பழம், வாழைப்பழம், ஆப்பிள், பலாப்பழம் போன்ற பழங்களைத் தேர்ந்தெடுத்து வாங்கி தோல், கொட்டை நீக்கி விட்டு சிறு துண்டுகளாக்கி வேக வைத்து மசித்து பழக்கூழ் தயாரித்துக் கொள்ளவும்.

* பழக்கூழ், சர்க்கரை இரண்டையும் சேர்த்து கொதிக்க விடவும், கைவிடாமல் கெட்டியாகும் வரை கிளறவும்.

* இறக்கி வைப்பதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன் சிட்ரிக் ஆசிட், கலர், எஸென்ஸ் சேர்க்கவும்.

* ஜாம் ரெடியானதும் சூடாக இருக்கும்போதே ஏற்கனவே சுத்தம் செய்யப்பட்ட வாயகன்ற பாட்டிலில் நிரப்பவும். பாட்டில் கெட்டியான பாட்டிலாக இருப்பது அவசியம்.

* சூடாக ஊற்றுவதால் பாட்டில் உடைந்து விடாமல் இருக்க, பாட்டிலை ஒரு மரப்பலகையின் மீது வைத்து ஜாமை ஊற்றவும்.

* ஜாம் ஆறும் வரை பாட்டிலை திறந்து வைத்திருந்து, நன்கு ஆறியதும் மூடி விடவும்.

மவுஸ் தூக்கித் தரும் பைல்

மவுஸ் – இன்று கம்ப்யூட்டரின் பிரிக்க முடியாத ஒரு பகுதியாக மாறிவிட்டது. லேப் டாப்பிற்கான டச் பேட் மற்றும் கிராபிகல் பென் போல, மவுஸ் மாறிவிட்டது; செயல்படுகிறது. மவுஸ் இல்லாமல் கம்ப்யூட்டர் இயக்கத்தை எண்ணிப் பாருங்கள். அய்யய்யோ!! என்கிறீர்களா! ஆம் நிச்சயம் அது வெகு கஷ்டமான காரியம். குறிப்பாக இன்டர்நெட் அல்லது வழக்கமான செயல்பாடு இல்லாமல், மிகவும் பணிப் பளுவுள்ள கம்ப்யூட்டர் செயல்பாடாக இருப்பின் மவுஸ் இல்லாமல் இயங்குவது மிகவும் சிரமமான ஒன்றாக மாறிவிடும்.

இதற்குக் காரணம் மவுஸ் நம் பெரும்பாலான கம்ப்யூட்டர் பணிகளை மிக மிக எளிதாக மாற்றுகிறது. எடுத்துக் காட்டாக டைரக்டரி ஒன்றில் உள்ள ஒரு பைலை மவுஸ் வருவதற்கு முன்னால் டாஸ் இயக்கத்தில் இன்னொரு டைரக்டரிக்கு மாற்ற வேண்டு மானால் டிரைவில் உள்ள கமாண்ட் ப்ராம்ப்ட் என்னும் கட்டளைப் புள்ளியில் சரியான வகையில் அதன் வழியினை அமைத்து என்டர் தட்ட வேண்டும். இதில் ஏதேனும் கூடுதலாக ஒரு கமா, அல்லது இடைவெளி இருந்தால் கட்டளை நிறைவேறாது. மவுஸ் என்றால் அப்படியே இரண்டு எக்ஸ்புளோரர் விண்டோவினைத் திறந்து பைலின் மீது மவுஸின் கர்சரை வைத்து அழுத்திப் பிடித்தவாறே இழுத்து வந்து போட்டுவிடலாம். இது ஒன்றும் புதிய விஷயம் இல்லை; கம்ப்யூட்டர் பயன் படுத்தும் நான் அனைவரும் செய்திடும் வேலைதான். இதில் என்ன இருக்கிறது என்கிறீர்களா? மேலே படியுங்கள்.

எப்படி வெவ்வேறு இடங்களுக்கு பைலை மவுஸ் மூலம் எடுத்துச் செல்கிறீர்கள். முதலில் பைலின் பெயர் மீது கிளிக் செய்கிறீர்கள். பின்னர் மவுஸின் இடது பட்டனை(இடது கைப் பழக்கம் இருந்தால் வலது பட்டன்) அழுத்தியவாறே இழுத்து எங்கு விட வேண்டுமோ அங்கு விட வேண்டும். இடையே எங்காவது விட்டுவிட்டால் என்னவாகும்? திருவிழா வில் தொலைந்த குழந்தை போல எந்த போல்டர் அல்லது டைரக்டரி என்று அறியமுடியாத இடத்தில் பைல் அமர்ந்து கொள்ளும்.

மவுஸைக் கட்டாயம் கவனமாக அழுத்தியவாறு தான் இந்த பைல் இட மாற்று வேலையைச் செய்திட வேண்டுமா? இதற்குப் பதிலாக விண்டோஸ் இயக்கத்திடம் எனக்குப் பதிலாக உன்னுடைய மவுஸை இந்த பைலைப் பிடித்து எடுத்துக் கொண்டு போகச் சொல்லு. நான் அந்த நேரத்தில் ஒரு மடக்கு காப்பியைக் குடித்துக் கொள்கிறேன் என்று சொல்ல முடியுமா? முடியும். என்ன முடியுமா? எப்படி என்று ஆச்சரியப்பட வேண்டாம். மேலே படியுங்கள்.
விண்டோஸ் இயக்கத்தில் மவுஸ் பேனலில் இந்த வசதி தரப்பட்டுள்ளது. மவுஸால் பைலை சில நொடிகள் கிளிக் செய்திடலாம். பின் அப்படியே அந்த பைலை மவுஸ் பிடித்துக் கொள்ளும். நீங்கள் விரல்களை அல்லது கையை எடுத்துவிடலாம். அப்போது உங்கள் பைல் மவுஸுடன் தானாக லாக் ஆகிவிடும். இதன் பின் உங்கள் மவுஸை அதன் பட்டனைப் பிடித்து அழுத்தாமல், அதனை மட்டும் இழுத்து பைலை வேண்டிய இடத்தில் விட்டுவிடலாம். இது எப்படி என்று பார்த்து செட் செய்வோமா!

இந்த தொழில் நுட்பத்தை (!) மேற்கொள்ள முதலில் Start பட்டன் அழுத்தித் திறக்கவும். பின் Classic View ஐத் திறக்கவும். கண்ட்ரோல் பேனலில் நீங்கள் Classic View வினைக் கொண்டிருப்பதனை உறுதி செய்து கொள்க. Category வியூவில் இருந்தால் மாற்றிக் கொள்க. இந்த பட்டியலில் Mouse ஐகானத் தேர்ந்தெடுக்க வும். இப்போது Mouse Properties விண்டோ கிடைக்கும். இந்த விண்டோவின் மேலாக உள்ள டேப்களைக் காணவும். Buttons என்று ஒரு டேப் காணப்படும். (காண்க படம் 1)

இந்த விண்டோவின் கீழ்ப்பகுதியைப் பார்க்கவும். இங்கு தான்
Click Lock Properties காணப்படும். இதில் “Turn On ClickLock.” என்று இருப்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.
இப்போது கிளிக் லாக் செட்டிங்ஸ் பட்டன் தெரியும். இதில் கிளிக் செய்தால் ஒரு சிறிய விண்டோ எழுந்து வரும். இதுதான் கிளிக்லாக் செட்டிங்ஸ் விண்டோ. இதில் ஒரு பார் இருக்கும். (காண்க படம் 2)
2)இந்த பாரில் செட் செய்வதன் மூலம் (Short > Long) மவுஸ் உங்கள் ஆப்ஜெக்டை எவ்வளவு நேரம் உங்களுக்காகப் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதனைத் தீர்மானிக்கலாம். நீண்ட நேரம் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும் என்றால் Long என்பதை செலக்ட் செய்திடலாம். ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த பைல் அல்லது ஆப்ஜெக்ட்டைப் பிடித்துக் கொண்டிருக்கும் வேலையை நீங்கள் உங்கள் மவுஸ் மூலம் பிடித்துக் கொள்ள வில்லையே தவிர அதனை அதற்கென உருவாக்கப்பட்ட சாப்ட்வேர் புரோகிராம் பிடித்து வைத்துக் கொண்டுள்ளது.

இதனை சோதனை செய்திட Short அருகே ஒரு புள்ளியில் செலக்ட் செய்து பின் மவுஸால் விண்டோவின் மேல் பாரில் கிளிக் செய்து பின் மவுஸை மட்டும் நகர்த்துங்கள். விண்டோ நகர்வதனைப் பார்க்கலாம். மவுஸின் பட்டனை அழுத்தாமல் விண்டோ நகர்வது ஆச்சரியமாக இல்லை! Long தேர்ந்தெடுத்தால் அந்த நேரத்திற்கு முன்பாகவே ஆப்ஜெக்டை விட வேண்டும் என்றால் நீங்களாக மேனுவலாக பட்டனைக் கிளிக் செய்து மேற்கொள்ள வேண்டும்.
இந்த கிளிக் லாக் செட்டிங்ஸ் முடித்து அனைத்து ஓகே பட்டன்கள் மீதும் கிளிக் செய்து வெளியேறுங்கள். இனி மவுஸுக்கு பைல் தூக்கும் வேலையைக் கொடுங்கள்.

புரோகிராமிங் கற்றுக்கொள்ள இலவச இணைய தளம்

எப்படியாவது கம்ப்யூட்டர் புரோகிராமிங் மொழிகளைக் கற்று, பல்வேறு வகையான திட்டங்களுக்கென புரோகிராமிங் செய்திட வேண்டும் என்பதே பல இளைஞர்களின் கனவாக உள்ளது. வேலை வாய்ப்பு, அதிக சம்பளம், பதவி உயர்வு, வெளிநாட்டில் பணி எனப் பல ஈர்ப்புகள் இதன் அடிப்படையாய் உள்ளன.

இவை தவிர, புரோகிராமிங் செயல்பாடு தரும் சவாலும் ஒரு காரணம். பலர் இதில் மனநிறைவு பெறுவதற்காகவே, புரோ கிராமிங் பாடங்களைக் கற்றுக் கொள்ளத் திட்டமிடுகின்றனர். இவர்களுக்காக, இணையத்தில் ஓர் இலவச தளம் இயங்குகிறது. இதன் பெயர் கோட் அகடமி (Code Academy). புரோகிராம் எழுதுவதனை கோடிங் (coding) எனக் கூறுவார்கள். எனவே அந்தப் பெயரிலேயே இந்த தளம் அமைக்கப் பட்டுள்ளது. இதன் இணைய தள முகவரி www.codeacademy.com இதில் தரப்படும் பாட திட்டங்களுக்கென இதில் அக்கவுண்ட் திறக்கும் முன்னர், புரோகிராமிங் எப்படி இருக்கும் என நமக்கு மிக, மிக எளிதான முறையில் பயிற்சி முறையில் விளக்கப்படுகிறது. நம் பெயரை எழுதச் சொல்லி தொடங்கும்பாடம், அப்படியேகொஞ்சம் கொஞ்சமாகநம்மை புரோகிராமிங் என்றால் இவ்வளவு எளிதானது என்று உணர வைக்கிறது. அதன் பின்னரே, நம்மை தளத்தில் பதியச் சொல்லி கேட்கிறது. இது இலவசம். ஒரு மின்னஞ்சல் முகவரி, பேஸ்புக் தளத்தில் அதன் தொடர்பு என ஏதாவது ஒன்று இருந்தால் போதும். பதிந்த பின்னர் தான் பாடங்கள் விறுவிறுப்பாகக் கற்றுத்தரப் படுகின்றன. பாடங்களும் கற்றுத் தரும் முறையும் மிகவும் வியப்பாக உள்ளன. புரோகிராமிங் செய்திடும் பயிற்சியில் நமக்கு டிப்ஸ் தரப்பட்டு வழி காட்டப்படுகிறது. பாடங்களைக் கற்றுக் கொள்வதில் முன்னேற்றம் ஏற்படுகையில், நாம் பெறும் மதிப்பெண்கள், அதற்கான பதக்க அட்டைகள் காட்டப்படுவது, நம் கற்றுக் கொள்ளும் செயல் பாட்டினத் தூண்டுகிறது. ஆர்வம் இருந்தால் அனைவரும் புரோகிராமிங் கற்றுக் கொள்ளலாம்.
எதற்கும் ஒரு முறை இந்த தளத்தைப் பார்த்துவிடுங்கள்.

நம்பிக்கை நட்சத்திரம்!-மார்ச் 7 – மாசி மகம்!

நட்சத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விழாக்களை, நம் முன்னோர் உருவாக்கியுள்ளனர். சித்திரை மாதம் சித்திரை (சித்ரா பவுர்ணமி), வைகாசி விசாகம், ஆனி உத்திரம் (நடராஜர் அபிஷேக நாள்), கார்த்திகையில் கார்த்திகை (திருக்கார்த்திகை), மார்கழி திருவாதிரை (ஆருத்ரா தரிசனம்), தைப்பூசம், மாசி மகம், பங்குனி உ<த்திரம் (சாஸ்தா அவதார நாள்) ஆகியவை நட்சத்திர அடிப்படையில் கொண்டாடப்படுகிறது.
ஒரு சமயம், பெரு வெள்ளத்தால் உலகம் அழிந்தது. மீண்டும் உலகை படைக்க வேண்டும் என்பதற்காக, பிரம்மா தன் படைப்புக்கலன்களை, ஒரு அமுத கலசத்தில் வைத்து, வெள்ளத்தில் மிதக்க விட்டார். அந்தக் கலசம் கும்பகோணத்தை அடைந்தது. சிவன், அதை அம்பு எய்து உடைத்து, உலகை மீண்டும் உற்பத்தி செய்தார். அந்த நன்னாளே மாசிமகம். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகத்தை, “மகாமகம்’ என்கின்றனர்.
மாசிமகத்தன்று, கும்பகோணத்திலுள்ள மகாமக குளத்தில் நீராடுவது சிறப்பு. இந்த குளத்தில், 20 தீர்த்தங்கள் ஐக்கியமாவதாக ஐதீகம். உலகம் அழிவதற்கும், குளத்தில் நீராடுவதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்றும் ஆராய வேண்டும். பாவங்கள், எப்போது அளவுக்கதிகமாகிறதோ, அப்போது இறைவன் கோபமடைந்து உலகை அழிக்கிறான். அதன்படி, பாவங்களைத் தொலைக்கும் வழியாக, சாஸ்திரம் வகுத்திருப்பதே தீர்த்தக் குளியல்.
தீர்த்தத்தில் குளித்து விட்டால், பாவம் நீங்கி விடுமா என்றால், இவ்வகை தீர்த்தங்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். நல்லது – கெட்டதை பகுத்தாயும் திறனைக் கொடுக்கும். எனவே, மனிதன் திருந்துகிறான். பாவம் செய்யும் எண்ணம் குறைகிறது. இதனால், உலகம் நற்கதியை நோக்கி பயணம் செய்கிறது.
அது மட்டுமல்ல… பாவங்கள் நிகழ்வது பெரும்பாலும் பொருள், புகழ் உள்ளிட்ட உலகவியல் இன்பங்களுக்காகத் தான்! புகழ் பெற வேண்டும், நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன், தீர்த்த நீராடலால், நிறைந்த மனோதிடத்தைப் பெறுகிறான். இதனால்தான், இந்த நட்சத்திர விழாக்கள் எல்லாமே பவுர்ணமியில் நடக்கிறது. சந்திரன், மனோகாரகன் எனப்படுவான். அவன், நம் மனநிலையில் எழுச்சியை ஏற்படுத்துவான். அன்றைய தினம் இறைவழிபாடு செய்யும் போது, உள்ளத்தில் நம்பிக்கை ஏற்படுகிறது. தன்னம்பிக்கை உள்ளவன் நினைத்ததை சாதிக்கிறான்.
“அவர் போன வருஷம் தைப்பூசத்துக்கு பழநிக்கு போய் வந்தார். இந்த வருஷம் பணக்காரனாகி விட்டார். எல்லாம் முருகன் கொடுத்தது…’ என்று சொல்வதன் பொருள் என்ன? முருகன் நேரில் வந்தா பொருளைக் கொடுத்தார்! முருகன் அவர் மனதில் நம்பிக்கையைக் கொடுத்தார், அந்த நம்பிக்கை அவரை ஜெயிக்க வைத்தது!
பவுர்ணமியை ஒட்டிய விழா நாட்களில், மலைக்கோவில் அல்லது தீர்த்த வழிபாடு மிகவும் சிறப்பானது. பழநி, திருவண்ணா மலை, கும்பகோணம் ஆகிய ஊர்களிலுள்ள கோவில்களுக்குச் சென்று வந்தால், மன உறுதியின் அளவு இன்னும் கூடுதலாக இருக்கும். அதிலும் கும்பகோணம் மகாமக குளத்தில், 20 தீர்த்தங்கள், மகம் நட்சத்திர நாட்களில் கலப்பதாக ஐதீகம். இந்நாளில் அங்கு சென்று நீராடினால், மனக்கவலை தீரும்; பொன், பொருள் விருத்தி, ஆயுள் அபிவிருத்தி உண்டாகும். பயம் இருக்காது.
மகம் நட்சத்திரத்துக்குரிய கிரகம் கேது. இவர் மோட்சகாரகர். ஆன்மிக யோகம் வேண்டுவோர், இந்நாளில் இறைவனை வழிபட்டால், வானுலக வாழ்வு சித்திக்கும். இம்மைக்கும், மறுமைக்குமான பலன்களை அடைய, கும்பகோணம் செல்வோம். மகாமக குளத்தில் நீராடி, கும்பேஸ்வரர், சாரங்கபாணியை வணங்கி, எல்லா நலனும் பெறுவோம்.

நாக கன்னிகைகள் பாவம் தீர்த்த தலம்

முன்னொரு காலத்தில் பாதாள லோகத்தில் இருந்த நாக கன்னிகைகள் பூலோகத்தின் அழகை பார்க்க ஆசைப்பட்டு, அதற்காக நாகராஜனிடம் அனுமதி கேட்டனர். அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. பின்னர் நாகராணியிடம் எடுத்து கூறி, நாகராஜனின் அனுமதியுடன் சூரியன் மறைவதற்குள் வந்து விடுகின்றோம் என்று கூறி நாககன்னிகைகள் பூலோகம் வந்தனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி அடிவார அழகில் பூலோக இயற்கை அழகை கண்டு ரசித்தனர். அப்போது வெள்ளியங்கிரி மலையின் அழகில் சூரியன் மறைவதை அவர்கள் கவனிக்க மறந்து விட்டனர். வானில் பிரகாசித்த சூரியன் மறைந்து விட்டது. இதை கவனித்த நாககன்னிகைகள் பாதாள லோகத்திற்குள் செல்ல முயன்றனர். வாக்கு தவறியதால் அவர்களால் செல்ல முடியவில்லை. இதனால் நாகராஜனின் கோபத்துக்கு ஆளாகி அவர்கள் நாகதோஷத்துக்கு ஆளானார்கள்.

இதை தொடர்ந்து சாப விமோசனம் பெறுவதற்காக வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஓடும் காஞ்சிமாநதியின் கரையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து தினமும் புனிதநீர் ஊற்றி வழிபாடு செய்து வந்தனர். இவர்களின் பூஜையில் மனம் இரங்கிய சிவபெருமான் அங்கு தோன்றி நாககன்னிகைகளுக்கு பாவவிமோசனம் அளித்து மறைந்தார். அதன் பின்னர்தான் நாககன்னிகைகள் பாதாளலோகம் புறப்பட்டு சென்றனர்.

இந்த அற்புதம் நிகழ்ந்த நாகேசுவரர் கோவில் கோவையில் இருந்து பூண்டி செல்லும் சாலையில் செம்மேடு அருகே கோட்டைக்காடு என்ற ஊரில் அமைந்துள்ளது. இங்கு வந்து வழிபாடு செய்தால் நாகதோஷம் நீங்கும் என்கிறார்கள்.