Daily Archives: மார்ச் 8th, 2012

காதல் கடிதம்…நடுநடுவே மானே, தேனே, பொன்மானே போட்டுக்கணும்!

சமைத்த உணவை அழகாய் அலங்கரித்து உணவு மேஜையில் வைத்தாலே அதை உண்ணும் ஆவலை ஏற்படுத்தும் அதேபோல மனங்கவர்ந்தவருக்கு எழுதிய கடிதத்தை கொடுப்பதில் கூட கற்பனை உணர்வு இருக்கவேண்டும்.

காதல் உணர்வுகளை கடிதத்தில் கொட்டியாகிவிட்டது. அதை எப்படி, எங்கே கொடுப்பது என்ற தயக்கம் பலருக்கும் உண்டு. சாதரணமாக நான்காக மடித்து நீட்டுவதை விட அதையே கிரியேட்டிவாக செய்தால் உங்கள் காதலுக்கு தனி மரியாதை கிடைக்கும் என்கின்றனர் காதல் எக்ஸ்பர்ட்கள்.

கண்ணாடி குடுவை, காதல் கடிதம்

அழகான கண்ணாடி குடுவையில் சின்னதாய் ஒரு சிவப்பு ரோஜா அதில் சுருட்டப்பட்ட கடிதம். அதனை மூட இதய சின்னம் வரைந்த கார்க் வைத்து அடைக்கப்பட்ட மூடி, அந்த பாட்டிலை சிவப்பு நிற ரிப்பனால் கட்டி உங்கள் மனங் கவர்ந்தவரிடம் கொடுத்துப் பாருங்கள் அப்புறம் பாருங்கள் உங்களவரின் முகம் வெட்கத்தில் சிவக்கும்.

ஒலிப்பதிவு கடிதம்

உருகி உருகி கடிதம் எழுதியிருந்தாலும், ஒலிப்பதிவு நாடாவில் உங்களுடைய குரலை பதிவு செய்து அந்த டேப்பில் உங்கள் கடிதத்தை அழகாக சுற்றி பரிசளிக்கலாம்.

அதோடு மனதிற்கு பிடித்த காதல் பாடல்களை அந்த ஒலிப்பதிவு நாடாவில் பதிந்து அதோடு கடிதத்தை கொடுத்தால் அதற்கு கிடைக்கும்

என்னா மரியாதை, என்னா மரியாதை…

இதயம் கவர்ந்தவருக்கு என்ன பரிசளிக்கலாம் என்று யோசிப்பதை விட அதிகம் உபயோகிக்கும், அவர்கள் அதிகம் விரும்பும் பொருட்களை நாம் பரிசளித்து நம் காதலை உணர்த்தலாம். குட்டித் தலையணை, அதிகம் தொடும் பேனா, விரல் தொடும் செல்போன் என மனங்கவர்ந்தவர் அதிகம் உபயோகிக்கும் பொருட்களை வாங்கி அதில் காதல் கடிதத்தை வைத்து பரிசாக தரலாம். இது மனங்கவர்ந்தவரின் முகத்தில் மின்னல் ஒளியை தெரிக்கச் செய்யும்.

புத்தகம் உணர்த்தும் நேசம்

உங்களவர் புத்தகப் பிரியர் எனும் பட்சத்தில் அவருக்கு மிகவும் பிரியமான எழுத்தாளர் எழுதிய புத்தகத்தை வாங்கி அதில் ஒரு வரியில் உங்களின் காதலை உணர்த்தும் வகையில் எழுதி பரிசளிக்கலாம்.

காதலரியை நினைக்கும்போது ஒவ்வொருவருக்கும் கவிதை அருவி மாதிரி கொட்டும். ஆனால் அதை எழுத நினைக்கும்போது வார்த்தை வராது…அதுதான் காதல். அதற்காக அப்படியே விட்டு விட முடியாது இல்லையா… முயலுங்கள், முடிந்தவரை அழகியலோடு காதலை வார்த்தைகளால் உணர்த்துங்கள்.

வேர்ட் டேபிள்: செல்கள் இடையே இடைவெளி அமைக்க

வேர்டில் டாகுமெண்ட்கள் இடையே டேபிள்களை அமைக்கும் போது அவற்றை நம் விருப்பத்திற்கேற்ப அமைத்திட பல வசதிகளும், மாடல்களும் தரப்படுகின்றன. இவை முன்மாதிரி என அழைக்கப்படும் டெம்ப்ளேட்டுகளாகக் கிடைக்கின்றன. இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து நாம் டேபிளை அமைக்கலாம். இந்த டேபிள்களில் உள்ள செல்களுக்கு இடையே, சிறிய இடைவெளியை ஏற்படுத்தினால், பார்ப்பதற்கு இன்னும் அழகாக இருக்கும். இதற்கு ஏற்கனவே அமைக்கப்பட்ட டெம்ப்ளேட்டுகள் உதவி செய்வதில்லை. ஆனால், இதனை அமைத்திட முடியும். அதற்கான வழிகளை இங்கு காணலாம்.
முதலில் மாற்றப்படாத, மாறா நிலையில் கிடைக்கும் டேபிள் ஒன்றை எடுத்துப் பார்க்கலாம். இந்த டேபிள் முழுவதையும் தேர்ந்தெடுத்தால், அதில் மார்ஜின், இடது பக்கமும் வலது பக்கமும் .08 அங்குலம் இருப்பதனைக் காணலாம். டேபிள் ஒன்று உருவாக்கப்படுகையில், வேர்ட் இந்த மார்ஜின் இடத்தைத் தானாக அமைத்துக் கொள்கிறது. இந்த டேபிளைப் பெற, Insert மெனு சென்று, Tables group பிரிவில் உள்ள Table என்ற பிரிவில் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவினைப் பயன்படுத்தி, மூன்று நெட்டு வரிசை (columns) மற்றும் ஐந்து படுக்கை வரிசை (rows) கொண்ட டேபிளை உருவாக்கவும்.
இதில், மேலும் கீழுமாக மார்ஜின் உருவாக்க கீழே குறிப்பிட்டுள்ளபடி செயல்படவும்.
1. டேபிள் முழுவதையும் தேர்ந்தெடுக்கவும். மூவ் ஹேண்டில் எனப்படும் ஸ்வஸ்திக் சின்னம் போன்ற கர்சரை டேபிளின் இடது மேல் மூலையில் கிளிக் செய்தால், டேபிள் முழுவதும் தேர்ந்தெடுக்கப்படும்.
2. அடுத்து contextual Layout டேப்பில் கிளிக் செய்திடவும். இதில் உள்ள குரூப்பில், Cell Margins என்ற ஆப்ஷனில் கிளிக் செய்திடவும். எம்.எஸ். ஆபீஸ் 2003 பயன்படுத்துபவர்கள், டேபிள் மீது ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில், Table Properties என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், Table பிரிவில் Options என்பதில் கிளிக் செய்திடுக.
3. கிடைக்கும் டயலாக் பாக்ஸில், மேல் மற்றும் கீழ் (top and bottom) பகுதிக்கான மார்ஜின் அகலத்தினை அமைத்துப் பின்னர் ஓகே கிளிக் செய்திடவும். இனி, செல்களுக்கிடையே எப்படி இடைவெளி அமைப்பது எனப் பார்க்கலாம்:
1.முதலில் மேலே கூறியபடி ஸ்டெப்ஸ் 1 மற்றும் 2னை மேற்கொள்ளவும்.
2.கிடைக்கும் டயலாக் பாக்ஸில், Allow Spacing Between Cells என்பதில் கிளிக் செய்து. 0.08 என்று குறிக்கவும்.
3. பின்னர் ஓகே கிளிக் செய்திடவும்.
மேலே குறிப்பிட்ட செயல்பாடுகளினால் கிடைக்கும் டேபிள் அமைப்பு மிகவும் ஆர்வமூட்டுவதாகவும், எளிதாகவும் இருப்பதனைக் காணலாம். நாம் செய்ததெல்லாம், மாறா நிலையில் கிடைக்கும் டேபிளில், சிறிது இடம் கூடுதலாக அமைத்ததுதான்.
இன்னொரு வழியிலும் இதனை அமைக்கலாம். செல்பார்டர்களை மறையச் செய்து இதனை மேற்கொள்ளலாம். ஏற்கனவே குறிப்பிட்டபடி டேபிள் ஒன்றை உருவாக்கி, கீழே குறிப்பிட்டுள்ளபடி செயல்படவும்.
1. டேபிளைத் தேர்ந்தெடுக்கவும்.
2. contextual Design டேப்பில் கிளிக் செய்திடவும். அடுத்து Table Styles குரூப்பில், Borders கீழ்விரி மெனுவினைப் பெறவும். அதில் Borders and Shading என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். எம்.எஸ். ஆபீஸ் 2003 பயன்படுத்துபவர்கள், டேபிள் மீது ரைட் கிளிக் செய்து, Table Properties என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். Table டேப்பில் Borders and Shading என்பதில் கிளிக் செய்திடவும்.
3. கிடைக்கும் டயலாக் பாக்ஸில், வண்ணங்களுக்கான கட்டத்தில் white கலர் தேர்ந்தெடுக்கவும். அடுத்து பிரிவில் பெரிய அளவில் எழுத்தின் அளவைத் தேர்ந்தெடுக்கவும். வண்ணத்தினைத் தேர்ந்தெடுக்கையில், டாகுமெண்ட்டின் பின்னணி வெள்ளையாக இருந்தால், வெள்ளை வண்ணத்தினையும், வேறு வண்ணத்தில் பின்னணி இருந்தால், அந்த வண்ணத்தினையும் அமைத்திடவும். இதனால், செல் பார்டர்கள் தானாகவே மறைந்திடும்.
4. அடுத்து Shading டேப்பில் கிளிக் செய்திடவும். செல் பின்புலத்திற்கு தகுந்த வண்ணத்தினைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் ஓகே கிளிக் செய்திடவும்.
இங்கு, நாம் செல்களுக்கு இடையேயான இடைவெளியை அதிகரிக்கவில்லை. அதற்குப் பதிலாக, செல்களின் பார்டரின் அகலத்தினை அதிகரித்து, பின்னர் இடைவெளி அதிகப்படுத்தப்பட்டிருக்கும் தோற்றத்தைக் காட்ட அவற்றை மறைத்திருக்கிறோம்.
இது ஒரு சோதனை தான். உங்களுக்கும் இதன் மூலம் டேபிளின் கூறுகளை எப்படிக் கையாளலாம் என்பது தெரிந்திருக்கும்.

சூட்கேஸ் அளவில் ஒரு அணுமின் நிலையம்!

மனித வாழ்க்கையின் அத்தியாவசியத் தேவைகளுள் மிக மிக முக்கியமானது வெளிச்சம் அல்லது ஒளி. பகல் நேரத்தில் அந்த வெளிச்சத்தை வாரி வழங்கிக்கொண்டிருக்கிறது சூரியன். அந்த சூரியனிடம் போய், `இதே வெளிச்சத்தை இரவிலும் கொஞ்சம் தரக் கூடாதா’ என்றெல்லாம் கேட்க முடியாது!

ஆக, இரவுக்கான வெளிச்சத்தை நாம்தான் உற்பத்தி செய்துகொள்ள வேண்டும். இரவுக்கான வெளிச்சம் மட்டுமல்லாது, மனித வாழ்க்கைக்கு தேவையான பல வசதிகளை பூர்த்தி செய்கிறது மனித கண்டுபிடிப்பான மின்சாரம். இன்றைய நவநாகரீக உலகில் மின்சார உற்பத்திக்கு பல வழிகள் உள்ளன. உதாரணமாக, காற்றாலை, சூரிய ஒளி, தண்ணீர் மற்றும் அணுசக்தி போன்றவற்றை சொல்லலாம்.

நாம் வாழ்கின்ற பூமியில் மட்டுமல்லாமல், வாழப்போகின்ற எதிர்கால பூமியாக மாறக்கூடிய வேற்று கிரகங்களான செவ்வாய், நிலவு போன்ற இடங்களிலும் நமக்கு வெளிச்சம் தேவை. அதற்கு அங்கும் மின்சாரத்தை உற்பத்தி செய்தாக வேண்டும்.

முக்கியமாக, நிலவு, செவ்வாய் உள்ளிட்ட பல வேற்று கிரகங்களில் இரவு பகலாக உழைத்துக்கொண்டிருக்கும் விண்வெளி ஆய்வாளர்களுக்கு உடனடித் தேவையாக இருக்கிறது மின்சாரம். தற்போது சூரிய ஒளி மற்றும் பியூவல் செல்கள் (எரிபொருள் கலங்கள்) கொண்டுதான் விண்வெளி ஆய்வுக்கு தேவையான மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.

ஆனால், மின்சாரம் தயாரிக்க உதவும் இவ்விரு தொழில்நுட்பங்களுக்கும், அணுசக்தி தொழில்நுட்பத்திற்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் உண்டு. அதாவது, விண்வெளி மட்டுமல்லாமல் பிரபஞ்சத்தின் எந்த சுற்றுச்சூழலிலும், அணுசக்தியால் மட்டும்தான் தேவைக்கு அதிகமான மின்சாரத்தை தயாரிக்க முடியும்! ஆனால், சூரிய ஒளி மற்றும் பியூவல் செல்கள் மூலம் குறிப்பிட்ட அளவு மின்சாரம்தான் தயாரிக்க முடியும். அதேசமயம், சூரிய ஒளி இல்லாதபோது மின்சாரம் தயாரிக்க முடியாது!

ஆனால், விண்வெளியில் அணுசக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. காரணம், பல ஏக்கர் நிலப்பரப்பு வரை வியாபித்துக்கொள்ளும் மிகப்பெரிய எந்திரங்கள், கட்டிடங்கள், அணு உலைகள் மற்றும் கூலிங் டவர்கள்தான். இதனாலேயே அணுசக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பது விண்வெளியில் இதுவரை சாத்தியப்படவில்லை!

அணுசக்தி தொழில்நுட்பங்களில் ஒன்றான `நியூக்ளியர் பிஷன்’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வை கண்டுபிடித்திருக்கிறார் அமெரிக்க விஞ்ஞானியான ஜேம்ஸ் இ.வெர்னர்.

`நியூக்ளியர் பிஷன்’ தொழில்நுட்பம் என்றால் என்ன?

ஒரு அணுவை விட சிறிய அளவிலான நியூட்ரானைக் கொண்டு ஒரு யுரேனியம் அணுவை உடைக்கும்போது, யுரேனிய அணுக்கருவிலிருந்து பல நியூட்ரான்களும், போட்டான்களும் வெளியாகும். இந்த வேதியியல் நிகழ்வின்போது அளவுக்கதிகமான அணு சக்தியும் வெளியாகிறது. இந்த வேதியியல் வினைக்கு நியூக்ளியர் பிஷன் அல்லது `அணுக்கரு பிளவு’ என்று பெயர்.

அணுக்கரு பிளவின்போது வெளியாகும் அணுசக்தியை கொண்டு, ஒரு நீராவி எந்திரத்தை இயக்குவதன் மூலம் மின்சாரத்தை தயாரிக்க முடியும். தற்போது பல ஏக்கர் பரப்பளவுகளில் அமைந்திருக்கும் அணுமின் நிலையங்களை, ஒரு `சூட்கேஸ்’ அளவிற்குள் அடைத்துவிடும் ஒரு அட்டகாசமான தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து அசத்தியிருக் கிறார் அணு விஞ்ஞானி ஜேம்ஸ் இ.வெர்னர்!

இந்த சூட்கேஸ் அணுமின் நிலையத்தின் அளவு ஒன்றரை அடியிலிருந்து இரண்டரை அடிகள் வரைதான். அளவில் மிக மிக சிறியதான இந்த சூட்கேஸ் அணுமின் நிலையம் மிகவும் பாதுகாப்பானதும் கூட என்பது குறிப்பிடத்தக்கது! இதனைக் கொண்டு நிலவு, செவ்வாய் அல்லது நாசா நினைக்கும் எந்த இடத்திலும் தொடர்ந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம் என்கிறார் வெர்னர்.

இந்த சூட்கேஸ் அணுமின் நிலையத்தைக் கொண்டு நிலவில் சுமார் 40 kilo watts (அதாவது, சுமார் 8 வீடுகளுக்கு தேவையான மின்சாரம்) அல்லது அதற்கும் அதிகமான மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம்! இதில் இன்னொரு முக்கியமான வசதி என்னவென்றால், எரிமலைவாய், மலைக்குன்றுகள் மற்றும் குகைகள் என பலதரப்பட்ட இடங்களில் இந்த சூட்கேஸ் அணுமின் நிலையத்தை பயன்படுத்தலாம்.

தற்போது ஆய்வுக்கூடத்தில் இருக்கும் இந்த அதி நவீன தொழில்நுட்பத்தின் `டெமான்ஸ்ட்ரேஷன் யூனிட்டை’ இந்த ஆண்டின் இறுதிக்குள் உருவாக்கிவிடுவோம் என்கிறார் விஞ்ஞானி வெர்னர்!

இந்த சூட்கேஸ் அணுமின் நிலையம் ரெடியாகிவிட்டால் போதும். `சரி சரி, எல்லாரும் பொட்டியக் கட்டிக்கிட்டு சீக்கிரம் கிளம்புங்க. நிலவுக்கு போற விண்வெளி பஸ் வந்து ரொம்ப நேரமாச்சு’ என்று நம்மவர்கள் நிலவுக்கு போகும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்பது உண்மைதான்.

முனைவர் பத்மஹரி

விண்டோஸ் விநாடி வினா

இந்த உலகின் சிந்தனை ஓட்டத் தினை மாற்றி அமைத்த, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 8 விரைவில் வர இருக்கிறது. இதனைப் பற்றி பல தகவல்கள் கசிந்து கசிந்து வரத் தொடங்கி உள்ளன. இந்த நேரத்தில், விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வந்த நாள் முதல் இன்று வரையிலான சில தகவல்களை ரெப்ரெஷ் செய்திடும் வகையில் கீழே வினாடி வினாக்கள் தரப்படுகின்றன. எந்த அளவிற்கு நீங்கள் விண்டோஸ் குறித்து தெரிந்து வைத்துள்ளீர்கள் என்பதனை சோதனை செய்து கொள்ளுங்கள்.

1. எப்போது விண்டோஸ் 1.0 வெளியானது?
அ.நவம்பர் 1983 ஆ. நவம்பர் 1985
இ. மே 1986 இ. டிசம்பர் 1987

2. விண்டோஸ் 7 சிஸ்டத்தில் முதல் சர்வீஸ் பேக்கில் பதிப்பு எண் என்ன?
அ.விண்டோஸ் 6.1 ஆ.விண்டோஸ் 7
இ.விண்டோஸ் 7.1 ஈ. விண்டோஸ் 7.0.1

3.விண்டோஸ் பதிப்பிற்கான எக்ஸெல் 1.0 எப்போது வெளியானது?
அ. செப்டம்பர் 1985 ஆ.நவம்பர் 1987
இ.மார்ச் 1989 ஈ. மூன்றும் தவறு

4. விண்டோஸ் சிஸ்டத்தின் எந்த பதிப்பில் விண்டோஸ் ரெஸ்டோர் வெளியானது?
அ. விண்டோஸ் 95 ஆ.விண்டோஸ் 98
இ.விண்டோஸ் என்.டி. 3.51 ஈ.விண்டோஸ் எம்.இ.

5. நோட்பேட், தொகுப்பினை திறந்து, முதல் வரியில், முதல் நான்கு கேரக்டர்களாக .LOG என்று டைப் செய்தால், நோட்பேட் என்ன செய்திடும்?
அ. பைலின் இறுதியில் அன்றைய தேதி மற்றும் நேரம் அமைக்கப்படும்.
ஆ.முதல் வரியில் வேறு டெக்ஸ்ட் இல்லை என்றால், நேரமும் தேதியும் அமைக்கப்படும்.
இ. பைலின் இறுதியில் புதிய வரி ஒன்றை அமைத்து, நேரமும் தேதியும் அமைக்கப்படும்.
ஈ. மேலே கூறப்பட்ட எதுவும் அமைக்கப்பட மாட்டாது.

6.என்.டி.எப்.எஸ்.(NTFS) பைல் பெயரை அமைக்கும்போது, அதன் ட்ரைவ் முதல் பைல் பெயர் இறுதி வரை (எ.கா.ஈ:D:\some\path\somefilename.ext) எத்தனை கேரக்டர்கள் இருக்கலாம்?
அ.256 கேரக்டர்கள் ஆ.259 கேரக்டர்கள்
இ.260 கேரக்டர்கள் ஈ.32,767 கேரக்டர்கள்

7. அவுட்லுக் எக்ஸ்பிரஸ் (விண்டோஸ் எக்ஸ்பியுடன் வந்தது) மற்றும் விண்டோஸ் மெயில் (விஸ்டா) ஆகியவற்றின் இடையே உள்ள முதன்மையான வேறுபாடு என்ன?
அ. அவற்றின் பெயர்
ஆ. அவுட்லுக் எக்ஸ்பிரஸ்ஸில் மெசேஜ் போல்டரை சேவ் செய்வது எளிது
இ.விண்டோஸ் மெயில், ஐமேப் (IMAP) இமெயில் அக்கவுண்ட்களுக்கு சப்போர்ட் கொடுத்தது
ஈ. அவுட்லுக் எக்ஸ்பிரஸ் இன்னும் பராமரிக்கப்பட்டு சப்போர்ட் தரப்படு கிறது; விண்டோஸ் மெயில் கைவிடப் பட்டது.

8. விண்டோஸ் 7 மற்றும் எக்ஸ்பி என இரண்டையும் ஒரு கம்ப்யூட்டரில் டூயல் பூட் ஆக பதிந்திடுகையில், கீழ் குறிப்பிடப்பட்டுள்ள தனிச் செயல்பாடுகளில் எது ஏற்படும்?
அ. ஆபீஸ் தொகுப்பினை இரண்டு சிஸ்டங்களிலும் இயக்க, இருமுறை அதனை இன்ஸ்டால் செய்திட வேண்டும்.
ஆ.எக்ஸ்பி சிஸ்டத்தில் கம்ப்யூட்டரை பூட் செய்தால், விண்டோஸ் 7 ரெஸ்டோர் பாய்ண்ட் அனைத்தும் நீக்கப்படும்.
இ. விண்டோஸ் 7 சிஸ்டத்தில் கம்ப்யூட்டரை பூட் செய்தால், எக்ஸ்பிக் கான ரெஸ்டோர் பாய்ண்ட் அனைத்தும் நீக்கப்படும்.
ஈ. மேலே கூறப்பட்ட அனைத்துமே ஏற்படும்.

9. விண்டோஸ் சாலிடேர் கேம் யாரால் எழுதப்பட்டது? எவ்வளவு பணம் வழங்கப்பட்டது?
அ.பில்கேட்ஸ் -பணம் வழங்கப்பட வில்லை
ஆ. சார்ல்ஸ் பெட்ஸோல்ட்-ஆயிரம் டாலர் கள்
இ. வெஸ் செரி- பணம் வழங்கப் படவில்லை
ஈ. சார்ல்ஸ் சிமோன்யி–விண்டோஸ் விற்பனையில் 0.0012 சதவிகிதத் தொகை.

10. கீழே தரப்பட்டுள்ளவற்றில் எது சரியான விண்டோஸ் என்.எப்.டி.எஸ். போல்டர் பெயர் இல்லை?
அ. My.Folder ஆ.Temp
இ. Aux ஈ. அனைத்துமே சரியானவை தான்.

விடைகள்:
1.ஆ.நவம்பர் 1985. மைக்ரோசாப்ட் நவம்பர் 1983ல் விண்டோஸ் சிஸ்டத்திற்கான முன் மாதிரியைத் தந்தது. ஆனால், அதிகார பூர்வமாக விண்டோஸ் 1.0, 1985 நவம்பரில் வெளியானது.

2. அ. சர்வீஸ் பேக்கின் பெயர் .Windows 6.1. என்ன நம்பிக்கை இல்லையா? “சும்மா கதை விடாதீங்க’ என்று நீங்கள் எண்ணுவது தெரிகிறது. ஸ்டார்ட் கிளிக் செய்து, “winver” என டைப் செய்து, என்டர் தட்டவும். விடை கிடைக்கும். விண்டோஸ் 2000, விண்டோஸ் 5 ஆகும். எக்ஸ்பி 5.1 வரை ஓடியது. விஸ்டா 6.0. பின்னர் விண்டோஸ் 7 ; எனவே இது விண்டோஸ் 6.1. (சர்வீஸ் பேக் 1 உட்பட) ஏன் இப்படி எண்கள் என்ற கேள்வி எழுகிறதா? விண்டோஸ் 7 சிஸ்டத்தின் கெர்னல், விஸ்டாவின் கெர்னலைப் போலவே உள்ளது. அதனால் எண்ணும் தொடர்கிறது.

3. ஈ. மூன்றும் தவறு. எக்ஸெல் செப்டம்பர் 1985 ல் வெளியானது. ஆனால் அது மேக் கம்ப்யூட்டரில் மட்டுமே இயங்கியது. விண்டோஸ் சிஸ்டத்தில் இயங்கக் கூடிய எக்ஸெல், பதிப்பு 2.05, நவம்பர் 1987ல் தான் வெளியானது.

4.ஈ. விண்டோஸ் எம்.இ. நம்புவதற்குக் கொஞ்சம் கஷ்டம் தான். ஆனால் அதுதான் உண்மை. இந்த சிஸ்டத்தில் தான், சிஸ்டத்தின் முந்தைய நிலைக்குச் செல்லக் கூடிய திறன் தரப்பட்டது.

5.இ. பைலின் இறுதியில் புதிய வரி ஒன்றை அமைத்து, நேரமும் தேதியும் அமைக்கப் படும். விண்டோஸ் 3.1 பதிப்பு முதல் இந்த செயல்பாடு உள்ளது.

6.ஆ. 259 கேரக்டர்கள். பைலின் பெயர் இறுதியில் ஒரு வெற்று கேரக்டர் (NUL) அமைக்கப்படும். இதனையும் சேர்த்து 260. ஆனால் அது கணக்கில் வராது.

7. அ. அவற்றின் பெயரில் தான் வேறுபாடு உள்ளது. மற்ற எல்லாமே, பிழைகள் உட்பட, ஒரே மாதிரியாகத்தான் இருந்தது. அவுட்லுக் எக்ஸ்பிரஸ், தரவிறக்கம் செய்யப்படக் கூடிய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 4 உடன் இணைந்து தரப்பட்டது. 1997ல், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6 உடன், இதில் பெரிய மாற்றங்கள் தரப்பட்டன. ஆனால் இப்போது இதற்கான சப்போர்ட் தரப்படவில்லை.

8.ஆ.எக்ஸ்பி சிஸ்டத்தில் கம்ப்யூட்டரை பூட் செய்தால், விண்டோஸ் 7 ரெஸ்டோர் பாய்ண்ட் அனைத்தும் நீக்கப்படும். இது இந்த சிஸ்டத்தில் ஒரு பிழையாகவே இன்னும் கருதப்படுகிறது. இதனை ரெஜிஸ்ட்ரி வரிகளைத் திருத்துவதன் மூலம் சரி செய்துவிடலாம் என்றால், வேறு சில சிக்கல்கள் ஏற்படுகின்றன.

9.இ. வெஸ் செரி-பணம் வழங்கப் படவில்லை. வெஸ் செரி கல்லூரியில் படிக்கும் போது, மைக்ரோசாப்ட் நிறுவனத்தில், பயிற்சியாளராகப் பணி யாற்றினார். சாலிடேர் விளையாட்டினை, விண்டோஸ் சிஸ்டத்தின் இயக்கம் குறிந்து கற்றுக் கொள்வதற்காகவே எழுதியதாக அவர் கூறியுள்ளார். இதற்கென எந்தப் பணமும் அவருக்கு வழங்கப்படவில்லை. விண்டோஸ் பதிப்பு 3ல் இருந்து அனைத்து விண்டோஸ் சிஸ்டங்களிலும் சாலிடேர் கேம் வழங்கப்பட்டு வருகிறது.

10. இ. Aux . ஒரு என்.டி.எப்.எஸ். போல்டர் பெயரில், இறுதியாக இல்லாமல், மற்ற எந்த இடத்திலும் புள்ளி இடம் பெறலாம். ஆனால், சில சொற்கள் பெயர்களாக வைக்கப் படக்கூடாது என ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன. அவை: Con, Prn, Aux, Nul, Com1 தொடங்கி Com9 வரை, மற்றும் Lpt1 தொடங்கி Lpt9 வரை. ஆனால் இவை எல்லாம் சரியான பெயர்கள் தாம்.

உலகின் பணக்கார கிராமத்தில் ஒரு `விசிட்’!

* நட்சத்திர ஓட்டல்கள்
* 60 மாடிக் கட்டிடங்கள்
* பிரமாண்ட ஷாப்பிங் மால்கள்
* வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலைகள்
* பளபள சாலையில் சறுக்கிச் செல்லும் ஆடம்பர கார்கள்…

இவை எல்லாம் எங்கு பார்த்தாலும் நிறைந்திருக்கிறது,

உலகிலேயே பணக்கார கிராமமான சீனாவின் `ஹுவாக்ஸி’யில்! ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கும் குறைவான ஹுவாக்ஸி, இன்று உலகையே வியந்து பார்க்க வைத்துக் கொண்டிருக்கிறது.

ஏழை விவசாய சமூகம்தான் அங்கு இன்று பெரும் பணக்காரக் குழுமமாக வளர்ந் திருக்கிறது. தற்போது `மாதிரி சோசலிஷ கிராமம்’ என்று அழைக்கப்பட்டும் இக்கிராமத்தின் முன்னேற்றத்துக்கு வித்திட்டவர், உள்ளூர் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளரான வு ரென்பா. அவர் தனது முயற்சியை 1961-ம் ஆண்டு தொடங்கினார்.

ரென்பாவின் தொலைநோக்கு அடிப்படையிலான வழிகாட்டலும், புத்திசாலித்தனமான கடின உழைப்பும் ஹுவாக்ஸிக்கு அசுர பணக்கார அந்தஸ்தைப் பெற்றுத் தந்திருக்கின்றன.

சில உதாரணங்களைப் பார்த்தால் புரியும். இங்குள்ள 328 அடி 60 மாடிக் கட்டிடம், சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் உள்ள அதிகபட்ச உயரக் கட்டிடத்துக்கு இணையா னது. லண்டன் மாநகரத்தில் உள்ள கட்டிடங்களைவிட உயரமானது. இந்தக் கட்டிடத்தின் 60-வது மாடியில் உள்ள பசு சிற்பம், ஆயிரம் கிலோ தங்கத்தாலானது.

சரி, ஹுவாக்ஸியின் செழுமையான வளர்ச்சியின் ரகசியம் என்ன?

பாரம்பரிய விவசாயத்தை நவீனம் சார்ந்த விவசாயத் தொழிலாக மாற்றினார்கள். அதில் ஏகப்பட்ட வருவாய் குவிந்ததும் அதை ஜவுளி, உருக்கு தொழிலில் திருப்பிவிட்டனர். எல்லாவற்றிலும் மிக முக்கியமாக இருந்தது கடுமையான உழைப்பு. அதுவும் ஒன்றுபட்ட உழைப்பு.

“ஆயிரம் கிலோ தங்கப் பசு சிற்பத்துக்கு 300 மில்லியன் யுவான் (ரூ. 235 கோடி) ஆனது. ஆனால் தற்போது இதன் மதிப்பு 500 மில்லியன் யுவான்” என்கிறார், 60 மாடிக் கட்டிடத்தில் வழிகாட்டியாகப் பணிபுரியும் இளம்பெண் டினா யாவோ. அந்த கட்டிடம், புதுக் கிராம கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. மூன்று பிரிவுகளாக உயர்ந்து நிற்கிறது. உச்சியில், ஒரு பெரி…ய்ய தங்கப் பந்து வடிவமும் இடம்பெற்றிருக்கிறது.

இந்தக் கட்டிடத்தின் உச்சித் தளத்தில் தங்க சிற்பங்கள் என்றால், இதர தளங்களில் வெள்ளியால் ஆன பெரிய பெரிய விலங்குகளின் சிற்பங்கள் உள்ளன. தங்க இழைகள் அங்குள்ள மார்பிள் தரையில் ஜொலிக்கிறது.

60 மாடிக் கட்டிடத்தை ஒட்டி நீளும் நூல் பிடித்த மாதிரியான தெருக்களில் மகா மாளிகைகள் உயர்ந்து நிற்கின்றன. அவற்றின் முன்பு பி.எம்.டபிள்யூ கார்கள் அணிவகுத்து நிற்கின்றன.

1998-ம் ஆண்டில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட ஹுவாக்ஸி, தற்போது தனிப்பெரும் நிறுவனமாக வளர்ந்திருக்கிறது. இங்கு உற்பத்தியாகும் பொருட்கள், உலகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.

இந்த முன்னேற்றங்களுக்கு ஆரம்பத்தில் விதை போட்டவை ஆயிரத்து 600 குடும்பங்கள். `பங்குதாரர்கள்’ என்று அழைக்கப்படும் இவர்கள் ஒவ்வொரு குடும்பத்துக்கும் பங்குத் தொகை, சம்பளங்கள், போனஸ்கள் என்று பணம் குவிகிறது. ஒரு குடும்பத்தின் சராசரி வருட வருவாய் சுமார் ஒரு கோடி ரூபாய்.


ஆயிரம் கிலோ தங்கத்தில் உருவான பசு.

மேலும், ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு பங்களா, ஒரு கார், இலவச மருத்துவச் சேவை, சமையல் எண்ணை ஆகியவை இலவசம்.

சீனாவின் பிற பகுதிகள் உள்பட உலகமெங்கும் தாக்கிய பொருளாதார நெருக்கடி ஹுவாக்ஸியை தாக்கவில்லை. தனது தனி வழியில் கம்பீரமாக இயங்கிக் கொண்டே இருக்கிறது. பிற பெருநகரங்களைப் போல இங்கும் வெளியிடங்களில் இருந்து தொழிலா ளர்கள் வரவழைக்கப்படுகிறார்கள்.

இவை எல்லாவற்றுக்கும் காரணமான ரென்பாவு, “நாங்கள் எப்போதும் எங்கள் மக்களுக்கு எது நன்மை புரியுமோ அதைத்தான் செய்வோம்” என்கிறார். 86 வயதாகும் அவர், தற் போறு ஓய்வு பெற்றுவிட்டார். தந்தையின் வழிகாட்டலோடு இவரது மகன் கட்சிச் செயலாளராகப் பொறுப்பேற்றுச் செயல்படுகிறார்.

ஹுவாக்ஸியின் வெற்றிக் கதை, உலக மக்களை இக்கிராமத்தை வியப்போடு திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது. அவர்களில் பலர், அந்த `சூத்திரத்தை’ அறிந்துகொள்வதற்காக நேரடியாக இங்கு வந்து இறங்கிவிடுகிறார்கள். `பணச்செழுமை சுற்றுலா’ என்ற பெயரில் இங்கு ஓராண்டுக்கு வருவோர் எண்ணிக்கை 2 லட்சம். அந்த வகையிலும் ஹுவாக் ஸிக்கு பணம் கொட்டுகிறது. 2 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் தங்கும் அளவிற்கு, லோங்ஸி என்ற சர்வதேச ஓட்டலும் இங்குள்ளது.