Daily Archives: மார்ச் 9th, 2012

வேர்ட் டிப்ஸ்-டாகுமெண்ட் இறுதியில் காலி பக்கங்கள்

வேர்டில் சில டாகுமெண்ட்களை பிரிண்ட் எடுக்கையில், இறுதியாக ஒன்று அல்லது இரண்டு காலி பக்கங்கள் அச்சாகி வரு வதனைப் பார்க்கலாம். ஆனால் டாகுமெண்ட்டினைப் பார்க்கையில் திரையில் அது போல எதுவும் இருப்பது தெரியாது. இதற்குக் காரணம் என்ன? எப்படி இதனைச் சரி செய்திடலாம்.
இதற்குக் காரணம் டாகுமெண்ட் இறுதியில் சில காலி பாராக்கள் இருப்பதுதான். இவற்றை நீக்கலாம். கண்ட்ரோல் + என்ட் கீகளை அழுத்துங்கள். நீங்கள் டாகுமெண்ட்டின் கடைசி பக்கத்திற்குச் செல்வீர்கள். இங்கே காலியாகவுள்ள பக்கம் உங்களுக்குக் காட்டப்படும். இனி பேக் ஸ்பேஸ் கீயை அழுத்தவும். கர்சர் திரையில் தெரியும் வரி வரை இது வரட்டும். இந்த வகையில் காலி பக்கங்களை அழிக்கலாம்.
அந்த காலி பக்கங்களை எப்படி காண்பது? என்ற ஆவல் எழுகிறதா? இந்த அச்சாகாத கேரக்டர்களைக் காட்டுமாறு வேர்ட் தொகுப்புக்கு ஆணையிடலாம். ஸ்டாண்டர்ட் டூல் பாரினை, டாகுமெண்ட் மேலாகப் பார்க்கவும். இதில் Show/Hide tool என ஒன்று அதன் ஐகானோடு இருக்கும். இசைக்கான சிம்பல் போல இது தோற்றமளிக்கும். ஸ்டாண்டர்ட் டூல்பாரில் உள்ள ஐகான்கள் அருகே உங்கள் கர்சரை வரிசையாக ஒவ்வொரு ஐகானாகக் கொண்டு செல்லுங்கள். இந்த Show/Hide tool வருகையில் Show/Hide எனக் காட்டப்படும். இதில் கிளிக் செய்தால், டாகுமெண்ட் முழுவதும் பாரா முடியும் மற்றும் தொடங்கும் இடங்களில் இந்த அடையாளம் தெரியும். தானாக ஸ்பேஸ் விட்ட இடங்களில் புள்ளிகள் கிடைக்கும். காலியான பக்கங்களும் காட்டப்படும். இதுவரை நீங்கள் டாகுமெண்ட் ஒன்றில் காணாத அனைத்து விஷயங்களும் தெரியும். இந்த ஐகானை மீண்டும் கிளிக் செய்தால் இந்த அடையாளங் கள் அனைத்தும் மறந்து போகும்.

வி.எல்.சி. மீடியா பிளேயர் புதிய பதிப்பு

வீடியோ பைல்களை இயக்கு வதற்குத் துணை புரியும் இலவச புரோகிராம்களில், அனைவரின் விருப்பத்திற்கு இயைந்தது வி.எல்.சி. புரோகிராம் ஆகும். வீடியோ லேன் ப்ராஜக்ட் நிறுவனத்தின் மிகப் பிரபலமான இந்த புரோகிராமின் புதிய பதிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதில் அதிகமான எண்ணிக்கையில் புதிய வசதிகள் தரப்பட்டுள்ளன. பல பிரச்னைக்குரிய தவறுகள் திருத்தப்பட்டுள்ளன என்று இதனை வெளியிட்ட நிறுவனம் அறிவித்துள்ளது. மற்ற வீடியோ பிளேயர் புரோகிராம்களுடன் ஒப்பிடுகையில், எந்த பார்மட்டில் உள்ள வீடியோ பைலையும் இயக்கும் திறன் கொண்டது வி.எல்.சி. பிளேயர். இந்த புதிய பதிப்பு முதலில் “Twoflower” என்ற குறியீட்டுப் பெயருடன் உருவாக்கப்பட்டது. தற்போது “VLC 2.0” என்ற பெயருடன் வெளியாகியுள்ளது. இதில் தரப்பட்டுள்ள புதிய வசதிகள் கீழே குறிக்கப்பட்டுள்ளன.
1. புதிய மல்ட்டி கோர் சிப்களின் வேகத்திறனை அறிந்து செயல்படுகிறது. அதே போல புதிய ஹார்ட்வேர் சாதனங்களையும் புரிந்து இயங்குகிறது.
2. கூடுதலாக சில பார்மட்களையும் இயக்குகிறது. குறிப்பாக தொழில் ரீதியாகத் தயாரிக்கப்படும் HD மற்றும் 10bits codecs பார்மட்களைக் கையாள்கிறது.
3. வீடியோவிற்கென புதிய வழி தரப்படுகிறது. சப் டைட்டில் நல்ல தன்மையுடன் கிடைக்கிறது.
4. புளு ரே டிஸ்க் சப்போர்ட் சோதனை முறையில் கிடைக்கிறது.
5. மேக் கம்ப்யூட்டர் மற்றும் வெப் இன்டர்பேஸ்கள் திறம்பட கையாளப்படுகின்றன.
6. விண்டோஸ் பதிப்பில் தரப்படும் இடை முகத்தில் (Inter Face) பல புதிய மாற்றங்கள் உள்ளன. மேக் கம்ப்யூட்டருக்கான இடைமுகம் முற்றிலும் புதிய முறையில் மாற்றப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி.யை துரத்தும் புரதம்!

மனிதகுலத்தைப் பயமுறுத்தும் பயங்கர நோயான எய்ட்ஸுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாதது ஒரு பெரும் சோகமாகத் தொடர்கிறது. இந்நிலையில், எய்ட்ஸுக்கு காரணமான வைரசான எச்.ஐ.வி.யை வெளியேற்றக்கூடிய புரதத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

என்.ஒய்.யு. லாங்கோன் மருத்துவ மையத்தின் தலைமையில் ஒரு சர்வதேச ஆய்வாளர்கள் குழு இதுதொடர்பான ஆய்வில் ஈடுபட்டது.

இந்த ஆய்வுக்குழு, மனித உடம்பின் நோய் எதிர்ப்பு அமைப்பு, எச்.ஐ.வி. பரவலைத் தடுப்பதற்கு முயலும் முறையைக் கண்டுபிடித்தது. அந்த முறையை மேலும் கூர்மைப்படுத்துவதன் மூலம் எச்.ஐ.வி. வளர்ச்சி வேகத்தைக் குறைத்து எய்ட்ஸை முடக்கிவிடலாம் என்கிறார்கள்.

“வைரஸ்கள், குறிப்பாக எச்.ஐ.வி. குறித்துப் பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டிருக்கின்றன. உடம்பானது குறிப்பிட்ட வைரஸுக்கு எதிராக எந்த எதிர்ப்புச் செயல்முறையை மேற்கொள்கிறது, அப்போது அந்த எதிர்ப்புச் செயல்முறைகளுக்கு குறிப்பிட்ட வைரஸ் எப்படி பதில்வினையை மேற்கொள்கிறது என்று அறியும் நோக்கில் மேற்கண்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன” என்று இதற்கு முந்தைய ஆய்வுகள் குறித்துக் கூறுகிறார், ஆய்வுக் குழு உறுப்பினர்களில் ஒருவரான நதேனியல் ஆர். லாண்டா.

இவர் உள்ளிட்ட ஆய்வுக் குழுவினர் கவனம் செலுத்திய புரதத்தின் பெயர் ஷிகிவிபிஞி1. `டென்ட்ரிக் செல்கள்’ எனப்படும் மனித உடம்பின் நோய் எதிர்ப்புச் செல்களில் உள்ள இந்தப் புரதம்தான் எச்.ஐ.வி.க்கு எதிராகச் செயல்படுகிறது. ஆனால் இது எப்படிச் செயல்படுகிறது என்று இதுவரை சரியாகத் தெரியவில்லை.

தற்போது அதற்கான பதிலை லண்டாவும் அவரது குழுவினரும் கண்டுபிடித்துவிட்டார்கள்.

எச்.ஐ.வி. போன்ற வைரஸ் ஒரு செல்லை தாக்கும்போது அது பெருகுவதற்கு செல்லின் மூலக்கூறுப் பொருளைக் கடத்தி `காப்பி’யடிக்கிறது. `டிஆக்சிநியூக்ளியோடைட் டிரைபாஸ்பேட்’ வடிவில் உள்ள அந்த மூலக்கூறுப் பொருள்தான் டி.என்.ஏ.வின் அடிப்படைக் கட்டுமான அமைப்பாகும்.

செல்லில் வைரஸ் தனது வேலையைக் காட்டியதும், உருவாகும் டி.என்.ஏ. மூலக்கூறினுள் வைரசின் அனைத்து ஜீன்களும் போய்விடுகின்றன. அந்த செல்லை மேலும் பல வைரஸ்களை உருவாக்குமாறும் உத்தரவிடுகின்றன.

மாறாக, ஒரு குழு டிஆக்சிநியூக்ளியோடைட் டிரைபாஸ்பேட்களை சிதைப்பதன் மூலம் ஷிகிவிபிஞி1 புரதம், செல்லை வைரசிடம் இருந்து காக்கிறது. அவ்வாறு சிதைப்பதன் மூலம், வைரஸுக்கு அதன் மரபணுத் தகவலை உருவாக்கக் கட்டுமானப் பொருள் இல்லாமல் ஆக்கிவிடுவதுதான் காரணம்.

எய்ட்ஸுக்கான சிகிச்சை முயற்சியில் இது ஒரு முக்கியமான முன்னேற்றம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

மகிழ்ச்சியாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும்

நீங்கள் நடந்து சென்று கொண்டிருக்கிறீர்கள். கால் கொஞ்சம் வலிக்கிறது. வலியை உணர்கிறீர்கள். ஆயினும் அதை பொருட்படுத்தாமல் உங்கள் வேலையை பார்த்துக் கொண்டே இருக்கிறீர்கள். வலியால் நீங்கள் சற்று அவதிப்படுவதை தெரிந்துகொண்ட குடும்பத்தினர், டாக்டரைப் பார்த்து ஆலோசனை பெறும்படி கூறுகிறார்கள்.

டாக்டரை இன்று பார்க்கிறேன்.. நாளை பார்க்கிறேன் என்று கூறி, நீங்கள் நாட்களை கடத்தினால், உங்களுக்குள்ளே அந்த வலியை `ஏற்றுக்கொள்ளும்தன்மை’ உருவாகிவிடும். வலியோடு வாழ்க்கையை ஓட்ட பழகிவிடுவீர்கள்.

யோசித்துப் பாருங்கள். மேற்கண்ட ஏற்றுக்கொள்ளும் தன்மையை, ஜீரணித்துக்கொள்ளும் தன்மையை வாழ்க்கையில் பல விஷயங்களில் நீங்கள் கடைபிடித்துக்கொண்டிருப்பீர்கள். வேலை, நட்பு, உறவு என்று பல நிலைகளில் இது தொடரும். முதலில், `வாழ்க்கைன்னா இப்படித்தான் இருக்கும்’ என்று பிரச்சினைகளை சகித்துக்கொள்ளும் மனது பின்பு, அக்கம் பக்கம் பார்த்துவிட்டு, `நம்ம மட்டுந்தான் இப்படின்னு நினைச்சோம். வீட்டுக்கு வீடு வாசப்படி மாதிரி எல்லோரும் இப்படிப்பட்ட பிரச்சினைகளோடுதான் அலைந்து கொண்டிருக் கிறார்கள்’ என்று தன்னைத்தானே சமாதானப்படுத்தி, அதை சகஜமான விஷயமாக எடுத்துக்கொள்ளவும் செய்யும்.

இந்த `ஏற்றுக்கொள்ளும் தன்மையும்’, `தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொள்ளும் தன்மையும்’ சில நேரங்களில் ஏற்றுக்கொள்ளக்கூடியது. பல நேரங்களில் ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. எப்படி என்றால், நீங்கள் அவசரமாக நண்பர் ஒருவரை சந்திக்க சென்று கொண்டிருக்கிறீர்கள். அப்போது சாலையில் கொஞ்சமாக கிடந்த நீரில் ஏறிய காரால், அந்த நீர் தெறித்து உங்கள் பேண்ட்டின் ஒரு பகுதியை அழுக்காக்கிவிடுகிறது. சரி இருந்து விட்டுப்போகட்டும் என்று நீங்கள் ஏற்றுக்கொண்டு அவரை சந்திக்க போய்விடுகிறீர்கள். வீடு திரும்பி, துவைத்து சரிசெய்துவிடுகிறீர்கள். இதில் உங்கள் ஏற்றுக்கொள்ளும்தன்மை யும், தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொள்ளும் தன்மையும் `ஓகே’தான்!

ஆனால்…

உங்கள் வீட்டின் முன் பகுதியில் கழிவு நீர் குழாயில் சிறிதளவு அடைப்பு ஏற் பட்டு விடும்போதும், உங்கள் உடலில் நோய் ஏற்பட்டிருக்கும்போதும், ஏற்றுக் கொள்ளும்தன்மையுடன் நீங்கள் ஜீர ணித்துக்கொண்டால் அது நல்லதல்ல. கழிவு நீர் பிரச்சினையை சிறிதாக இருக்கும்போதே சரிசெய்து கொள்ளா விட்டால் அது சுகாதாரத்திற்கே கெடு தலாகும். கவனிக்காமலே விடப்படும் நோய், பின்னாளில் தீராத நோய்க்கு கூட காரணமாகிவிடும். அதனால் சின்னச் சின்ன சிக்கல்களுக்கும் தீர்வு கண்டு விடுவதே மகிழ்ச்சியை வர வேற்கும் நல்ல வழி.

இப்போதெல்லாம் பத்து பேர் முதல் பத்தாயிரம் பேர் வரை கூடும் கருத்த ரங்கம், பயிற்சி வகுப்புகளில் `உங்களில் எத்தனை பேர் டென்ஷன் ஆகிறீர்கள்?’ என்ற சாதாரண கேள்வியை கேட்டால், தயங்கித் தயங்கி முதலில் ஒருசிலர் கையை தூக்குவார்கள். அவரைப் பார்த்து இவர், இவரைப் பார்த்து அவர் என்று பின்பு ஒட்டுமொத்தமாக அனை வரும் கையை உயர்த்திவிடுவார்கள். அப்போது ஒவ்வொருவரும் `அப்பாடா இந்த கூட்டத்தில் இருக்கும் அனைவருமே நம்மைமாதிரிதான்’ என்று நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொள்வார்கள். இது ஒரு ஆரோக்கியமற்ற நிலை. எல்லோருக்கும் இரண்டு கைகள் என்பது இயற்கை. அதுபோல், எல்லோருக்கும் டென்ஷனும் இயற்கை என்றால் ஏற்றுக் கொள்ள முடியாதல்லவா!

பெரும்பாலானவர்கள் தனக்கு டென்ஷன் ஏற்படும்போது, அதை தீர்க்கும் நிரந்தர வழியை தேடாமல், தற்காலிகமாக மனதை அதில் இருந்து திசைதிருப்பி, சிறிது நேரம் மனதை அமைதிப்படுத்தும் வழியைத்தான் தேடுகிறார்கள். அதனால் சினிமா பார்க்கும்போதும், ஷாப்பிங் செல்லும்போதும் குறையும் டென்ஷன் சிறிது நேரத்தில் மீண்டும் பாதை திரும்பி சம்பந்தப்பட்டவர்களிடமே வந்து சேர்ந்துவிடும்.

மனிதனுக்கு மனம்தான் அஸ்திவாரம். எல்லா விஷயங்களும் இங்குதான் ஆரம்பமாகிறது. மனிதனின் உடல் மரம் போன்றது. அதன் ஆணி வேர் மனம். மரத்தின் மேலே தெரியும் தண்டு, கிளை, இலை, பூ, காய், கனி எல்லாவற்றுக்கும் முக்கியத்துவம் கொடுத்து நன்றாக பார்த்துக்கொள்கிறோம். ஆனால் ஆணிவேர் மோசமாகிக்கொண்டே இருந்தால் மரத்தின் ஏதேனும் ஒரு பகுதி இலையோ, பூவோ, காயோ, கனியோ மோசமாகிக்கொண்டே தான் இருக்கும். நாம் பல நேரங்களில் இலை இலையாகப்பார்த்து, காய்காயாகப் பார்த்து, பழம்பழமாகப்பார்த்து தண்ணீர் ஊற்றிக்கொண்டிருக்கிறோம். வேரை கவனிக்காவிட்டால் ஒரு நாள் மரமே (மனமே) பட்டுப்போய்விடும்.

இன்று மனித மனம் பலகீனமாக இருந்துகொண்டிருக்கிறது. அதை பலப்படுத்தும் முயற்சிகளில் நாம் இறங்காமல், கூடுதலான வேலைகளையும், எதிர்பார்ப்புகளையும் அதற்கு கொடுத்து மென்மேலும் அதை பலகீனமாக்கிக் கொண்டிருக்கிறோம்.

நமது உடல் பலகீனமாவது தெரிந்ததும், உடனே வேலைகளை ஒதுக்கிவைத்துவிட்டு ஓய்வு, மருந்து என்று சிந்திக்கிறோம். ஆனால் மனதை கவனிப்பதும் இல்லை. தேவைக்கு ஓய்வு கொடுப்பதும் இல்லை. அதனால் ஆர்வமற்ற நிலையில் வேலைகளை செய்யவேண்டியதாகி விடுகிறது. வேலையை ஆர்வத்தோடு அனுபவித்து செய்தால், அதிலே மகிழ்ச்சி கிடைக்கும். ஆனால் ஆர்வமின்றி, கடனே என்று வேலையை செய்வதால், வேறு வழியில் மகிழ்ச்சியை தேடவேண்டிய கட்டாயம் மனிதர்களுக்கு ஏற்பட்டுவிட்டது.

`பேலன்ஸ்’ செய்வது, அதாவது சமநிலையை கையாளுவதில் நமக்கு பக்குவம் குறைவு. வேலையாக இருந்தாலும், பொழுதுபோக்காக இருந்தாலும், நட்பாக இருந்தாலும், உறவாக இருந்தாலும் ஒன்று, அளவுக்கு மீறி ஆர்வம் காட்டுகிறோம். முக்கியத்துவம் கொடுக்கி றோம். நெருங்குகிறோம். இல்லாவிட்டால் அத்தனையையும் ஒதுக்கித்தள்ளிவிட்டு அதில் இருந்து முழுமையாக விலகி ஓடி விடுகிறோம். இதில் எல்லை என்பது நமக்கு தெரிவதில்லை.

மனதை சரி செய்தால்தான் நம்மால் எல்லையை உணர முடியும். எல்லையை உணர்ந்தால் தான் எல்லை வரை மகிழ்ச்சியை அனுபவிக்கவும், எல்லை மீறாமல் இருக்கவும் முடியும். மனதை சரிசெய்ய அதன் மீது “கவனம்” செலுத்த வேண்டும்.

தியானம் என்பது இன்று எல்லோரும் உச்சரிக்கும் சொல். தியானம் என்றால், கவனம் என்றுதான் அர்த்தம். உங்கள் கார் மீது, செல்போன் மீது, வீட்டின் மீது, உறவினர்கள் மீது கவனம் வைத்திருக்கிறீர்கள். அதுபோல் மனதின் மீது கவனத்தை முழுமையாக விஞ் ஞான ரீதியாக செலுத்துவதுதான் தியானம்.

`நீங்கள் யாரை எல்லாம் கவனிக்கிறீர்கள்?’- என்று உங்களிடம் கேட்டால், `வீடு, மனைவி, மக்கள், அலுவலகம்.. என்று பலவற்றை அடுக்குவீர்கள். `நான் என்னையும் கவனித்துக் கொள்கிறேன்’ என்றும் சொல்வீர்கள். `நான்’ என்று நீங்கள் உங்கள் உடலைத்தான் சொல்வீர்கள். மனதை சொல்வதில்லை.

மனதே சரியில்லை என்ற வார்த்தை இப்போது ரொம்ப மலிந்துபோய்விட்டது. கோவிலுக்கு செல்கிறார்கள். அந்த நேரத்தில் மனதுக்கு ஒரு அமைதி கிடைக்கிறது. இரண்டு மணி நேரம் உபன்யாசம் கேட்கிறார்கள். நிறைய நல்ல விஷயங்களை கேட்கும் அந்த நேரத்தில், மனது நன்றாக இருக்கிறது அற்புதமாக இருக்கிறது என்று கைதட்டுகிறோம். அங்கிருந்து வெளியேறிய அடுத்த நிமிடமே மீண்டும் பழைய குழப்பங்கள், பிரச்சினைகள், சச்சரவுகள். மீண்டும் போவோம்.. வருவோம்.. ஆனால் அங்கு வார்த்தைகளில் கிடைத்ததை, அவர் களால் வாழ்க்கையில் பயன்படுத்த முடிவதில்லை. ஏன் என்றால் வாழ்க்கை, குழப்பம் நிறைந்த மனதின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

நாம், கவனம் செலுத்தி நம் மனதையே கவனிக்காமல் விட்டுவிட்டால், நம்மைச் சார்ந்த யார் மனதையும் நம்மால் கவனிக்க முடியாது. நமது மனைவி, குழந்தைகள் மனதைக்கூட கவனிக்க முடியாது.

இந்த உலகில் எல்லோரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? ஆம் என்று சொன்னால், அது நல்ல ஆசை!

ஆனால்..

– உங்களிடம் உணவு இருந்தால்தான் அதை நீங்கள் அடுத்தவர்களுக்கு கொடுக்க முடியும்.

– உங்களிடம் பணம் இருந்தால்தான் அடுத்தவர்களுக்கும் கொடுக்க முடியும்.

அதுபோல் உங்களிடம் மகிழ்ச்சி இருந்தால், நீங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தால் மட்டுமே நீங்கள் விரும்புகிறவர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுக்க முடியும். அதனால் இந்த உலகம் மகிழ்ச்சியடைய வேண்டும் என்று விரும்பும் நீங்கள் முதலில் மகிழ்ச்சியாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.

விளக்கம்: சகோதரி ஜெயா, பிரம்மகுமாரிகள் இயக்கம்.