Daily Archives: மார்ச் 12th, 2012

வேர்ட் டிப்ஸ்-வேர்டில் பக்க எண்களின் பார்மட்டுகளை மாற்ற

வேர்ட் டாகுமெண்ட்களில் பக்க எண்களை இணைப்பது எளிது. பக்க எண்களை உண்டாக்கிய பின்னர் அதனை நாம் விரும்பிய பார்மட்களில் மாற்றுவதும் எளிது. இதற்கான வழிகளை இங்கு காணலாம்.
வேர்ட் நம் பக்க எண்களை ஹெடர் மற்றும் புட்டர்களின் ஒரு பகுதியாகவே அமைக்க அனுமதிக்கிறது. இதன் பின் இதன் பார்மட்டுகளை மாற்றலாம். முதலில் என்ன வகையான பார்மட்டுகள் உள்ளன என்று பார்க்கலாம்.
1. அரபிக் எண்கள் – 1,2,3 ..
2. அரபிக் எண்கள் சிறிய டேஷ் அடையாளத்துடன் -1, -2,-3 ..
3. அப்பர் கேஸ் ரோமன் I, II, III…
4. லோயர் கேஸ் ரோமன் i, ii, iii …
5. அப்பர் கேஸ் எழுத்துகள் A,B,C, …
6. லோயர் கேஸ் எழுத்துகள் a, b, c, …
இனி பார்மட்டினை மாற்றுவது குறித்துக் காணலாம்.
1. உங்கள் டாகுமெண்ட்டில் எந்த பகுதியில் உள்ள பக்க எண்களின் பார்மட்டை மாற்ற வேண்டுமோ அந்த பகுதியில் கர்சரைக் கொண்டு செல்லவும்.
2. வியூ மெனுவிலிருந்து ஹெடர் அண்ட் புட்டர் பகுதியைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு ஹெடர் கட்டம் கிடைக்கும். கீழாக அதனை எடிட் செய்வதற்கான டூல் பார் கட்டம் கிடைக்கும். இதில்
3. பார்மட் பேஜ் நம்பர் ஐகானைக் கண்டறிந்து அதனைக் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் சிறிய பாக்ஸில் பேஜ் நம்பர் பார்மட்டுகள் தரப்படும். அதில் தேவையான பார்மட்டைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும்.
4. பின் ஓகே கிளிக் செய்திடவும்.
5. பின் ஹெடர் அண்ட் புட்டர் பாக்ஸிலும் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

இந்தி திரைப்படப் பாடல்கள்

மொழி, தேசம் இவற்றைக் கடந்து நாம் அனுபவிக்கும் சுகம் இசை தான். அதுவும் திரைப்படப் பாடல்கள் மக்கள் மனதைக் கொள்ளை கொள்ளும் அளவிற்கு வேறு எதுவும் இல்லை என்றே சொல்லலாம். இதனை உணர்ந்த ஒரு ரசிகர், இந்தி திரைப்படப் பாடல்களில் மக்கள் மனதிற்குப் பிடித்த பாடல்களாகத் தேர்ந்தெடுத்து அவற்றின் வீடியோ காட்சிகளுடன் ஓர் இணைய தளத்தில் பதிந்து வைத்துள்ளார். ஏறத்தாழ 19 ஆயிரம் பாடல்களுக்கு மேலாக இந்த தளத்தில் பதியப்பட்டுள்ளன. இந்த தளத்தின் முகவரி http://www.hindigeetmala.com.
இந்த தளத்திற்குச் சென்றவுடன் நம்மை வரவேற்பது எளிமையான இதன் இடைமுகம் (Interface) தான். இந்தி திரைப்படங்கள் வழியாகத் தேர்ந்தெடுக்க, ஆங்கில எழுத்துக்கள் வகையில் லிங்க் கொடுக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, எஸ் (SSholay) என்ற எழுத்தில் தொடங்கும் ஒரு படத்தின் பாடல் வேண்டும் எனில், எஸ் எழுத்தில் அழுத்த, அந்த எழுத்தில் தொடங்கி, இந்த தளத்தில் பதியப்பட்டுள்ள படங்களின் வரிசை, அவற்றின் போஸ்டர்களுடன் காட்டப்படுகிறது. அதில் கிளிக் செய்தால், அந்த திரைப்படத்தின் பாடல் காட்சிகள் எவை எல்லாம், தளத்தில் உள்ளனவோ, அவை எல்லாவற்றிற்கும் லிங்க் தரப்பட்டுள்ளன. கிளிக் செய்தால், சிறிய வீடியோ திரையில் பாடல் காட்சி காட்டப்படுகிறது. பெரும்பாலும் இவை யு-ட்யூப் தளத்திலிருந்தே காட்டப்படுகின்றனர். அதன் கீழாக, அப்பாடல் வரிகள் ஆங்கில எழுத்துக்களில் பதியப்பட்டுள்ளன. உடன் அந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம் வெளியான ஆண்டு, பாடல் ஆசிரியர், இசையமைத்தவர், பாடலைப் பாடியவர், நடித்தவர் என அனைத்து தகவல்களும் தரப்பட்டுள்ளன.
இந்த வகை இல்லாமல், பாடியவர்கள், படம் வெளியான ஆண்டு மற்றும் இசை அமைத்தவர் என்ற வகையிலும் தேடும் வகையில் லிங்க்குகள் தரப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, லதா மங்கேஸ்கர் பாடிய பாடல் ஒன்றைத் தேடினீர்கள் என்றால், அதில் கிளிக் செய்தால், அவர் தனியே மற்றும் பிறருடன் பாடிய பாடல் காட்சிகள் கிடைக்கின்றன. இதே போல இசையமைப்பாளர் வகையிலும் தேடிப் பெறலாம்.
யு-ட்யூப்பில் பதியப்பட்டுள்ள வீடியோ காட்சிகள் என்பதால், எளிதாக இவற்றை டவுண்லோட் செய்திடலாம்.
பாடகர்களின் இள வயது படங்களுடன் மொத்தம் எத்தனை பாடல்கள் அத்தளத்தில் கிடைக்கின்றன என்று காட்டப்படுகிறது. எடுத்துக்காட்டாக, லதா மங்கேஸ்கரின் இளவயது புகைப்படத்துடன், அவர் பாடிய 2522 பாடல்களின் காட்சிகள் உள்ளதாக தகவல் முகப்புப் பக்கத்திலேயே தரப்படுகிறது. மொகமத் ரபி (1526), ஆஷா போஸ்லே (1,341), கி÷ஷார் குமார் (1062), உதித் நாராயண் (852) என இந்தப் பட்டியல் நீள்கிறது. மேலும் நடிகர்கள், இசை அமைப்பாளர்கள் படங்களுடன் லிங்க் தரப்பட்டுள்ளது. சோகப்பாடல்கள் (1163), காதல் பாடல்கள் (2,891), ஆடல் பாடல்கள் (1370) எனவும் பட்டியல் தரப்பட்டுள்ளது. கண்களைப் பற்றிய பாடல்கள், மழை குறித்த பாடல்கள் என்று ஒரு வகை பிரிவும் தரப்பட்டுள்ளன.
இடது புறம் உள்ள தேடல் கட்டத்தில், பாடல் வரிகளில் உள்ள சில சொற்களையும், பாடல் தலைப்பினையும் கொடுத்து தேடும் வசதியும் உள்ளது. பாடல் தலைப்பு என்ற வகையில், படத்தின் பெயர், படம் வெளியான ஆண்டு, பாடியவர், இசை அமைத்தவர், நடித்த முதன்மை நடிகர், பாடல் ஆசிரியர் ஆகிய தகவல்களைக் கொடுத்துத் தேடும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. இது போல யாராவது தமிழ்த் திரைப்படங்களூக்கான தளத்தையும் அமைத்தால் நல்லது.

அறுவை சிகிச்சை இன்றி மகாதமனியை சீர்படுத்தலாம்

வயதானவர்கள் நடக்கும் போது மூச்சு திணறல் ஏற்பட்டாலோ, படபடப்பு வந்தாலோ, காலம் கடத்தாமல், டிரெட் மில் டெஸ்ட் மற்றும் கலர் எக்கோ டெஸ்ட் எடுத்து, இடது கீழறையின் செயல்திறன், இடது கீழறை சதை தடிமானம், இடது கீழறையின் வெளி வாயிலின் கதவு போல பணிபுரியும்,

அயோட்டிக் வால்வின் சுருக்கம், வால்வின் தடிமானம் முதலியவற்றை கணக்கிட வேண்டும். இதயத்தில், அயோட்டிக் வால்வு என்ற மகா தமனி வால்வை, ரத்தமின்றி, அறுவைச் சிகிச்சையின்றி மாற்றி பொருத்துவதற்கு, டி.ஏ.வி.ஐ., என்று பெயர். ஆங்கிலத்தில், “டிரான்ஸ்பெமோரல் அயோட்டிக் வால்வு இம்ப்ளான்ட்’ என்றழைக்கப்படுகிறது. தொடையிலுள்ள ரத்தக் குழாய் வழியாக, ஸ்டென்ட் பொருத்தப்படுவதே, இச்சிகிச்சை முறை. அயோட்டிக் வால்வு ஸ்டெனோசிஸ் என்ற வால்வு சுருக்க நோய், 60 முதல், 70 வயதுக்கு மேலுள்ள முதியோருக்கு ஏற்படும். 50 சதவீத முதியோருக்கு, வயது முதிர்வு தன்மையால், வால்வின் மேல், சுண்ணாம்பு, நார் சத்து படர்ந்து, வால்வு சுருங்கி விடுகிறது.

இதனால் ரத்தம், இடது கீழறையிலிருந்து, மகா தமனிக்கு செல்வதில் தடை ஏற்பட்டு, பல சிக்கல்களும், கோளாறுகளும் உண்டாகின்றன. பெரும்பாலும், அயோட்டிக் வால்வு சுருக்கத்தை, கண்டுபிடிப்பது கடினம். 50 சதவீதத்தினர் கண்டுபிடிக்காமல், இந்த வியாதியினால் திடீரென்று இறந்து விடுகின்றனர். நடக்கும் போது மூச்சு திணறல் ஏற்பட்டாலோ, படபடப்பு வந்தாலோ, காலம் கடத்தாமல், டிரெட் மில் டெஸ்ட் மற்றும் கலர் எக்கோ டெஸ்ட் எடுத்து, இடது கீழறையின் செயல்திறன், இடது கீழறை சதை தடிமானம், இடது கீழறையின் வெளி வாயிலின் கதவு போல பணிபுரியும், அயோட்டிக் வால்வின் சுருக்கம், வால்வின் தடிமானம் முதலியவற்றை, கணக்கிட வேண்டும். இதய அறுவை சிகிச்சை வேண்டாம்

இதை சரியாக கண்டுபிடிக்கா விட்டால், அறுவை சிகிச்சை மூலம், வால்வு மாற்று சிகிச்சை செய்ய முடியாத இறுதி நிலையில், நோயாளிகள் இருப்பர். அந்த நேரத்தில், இந்த டி.ஏ.வி.ஐ., தான் தீர்வு. ரத்தமின்றி, கத்தியின்றி நெஞ்சை பிளக்காமல், வலது தொடையில் இருக்கும் பெமோரல் ரத்த நாளத்தில் துளை போட்டு, அதன் மூலம் ஒரு குழாய் செலுத்தப்பட்டு, அது, அயோட்டிக் வால்வை கடந்து, இடது கீழறை வரை சென்றடையும். இதனுள் ஒரு மெல்லிய கம்பியை செலுத்தி, அறையில் நிறுத்தி, அதன் வழியாக, ஸ்டென்ட்டை உள்ளடக்கிய பலூனை செலுத்தி, பழுதடைந்த அயோடிக் வால்வு பகுதியில் வைத்து, வெளியில் பம்பு மூலம், பலூனை விரிவடைய வைக்க வேண்டும். அப்போது, சுருங்கிய வால்வு விரிவடையும். பலூனின் ஸ்டென்ட் தாங்கியுள்ள பகுதியை, வால்வின் பழுதடைந்த பகுதியில் வைத்து விட்டால், வால்வில், ரத்த ஓட்டம் சீராகிவிடும்.

இந்த நோயை, உடனடியாக கண்டுபிடிக்க முடியாததற்குக் காரணங்கள்:

*இந்த பாதிப்பை கொண்டவர்கள், எந்தவித குறைகளுமின்றி இருப்பர். காரணம், பெரும்பாலான முதியோர், அதிகமான செயல்பாடுகள், வேலைகளில் ஈடுபடுவதில்லை.
*”எக்கோ கார்டியோ கிராம், டிரெட் மில் டெஸ்ட்’ பரிசோதனைகள் செய்து கொள்வதில்லை.
*பெரும்பாலான குடும்ப டாக்டர்கள், இந்த நோயை கவனத்தில் கொள்ளாமல், கூடுதல் பருமன், சர்க்கரை நோய், ரத்த அழுத்தமென்று இருந்து விடுகின்றனர்.
*முதியோருக்கு மூச்சு திணறலோ, வேலை செய்யும் திறன் குறைந்தாலோ, நடை பயிற்சியின் வேகம், தானாக குறைந்தாலோ, வயதான குறையென்று சும்மா இருக்கக் கூடாது. உடனடியாக, இதய வல்லுனரின் ஆலோசனை தேவை.

பேராசிரியர் சு. அர்த்தநாரி

உங்கள் பொன்னான பாதம் புண்ணாகலாமா?


சிலருக்கு, என்னதான் சிகிச்சை பெற்றாலும் பாத வெடிப்பு சட்டென்று குணமாகாது. அப்படிப்பட்டவர்களுக்கு சில டிப்ஸ்…

* பப்பாளி பழத்தை நன்கு நைசாக அரைத்து, அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும், பாதத்தை தண்ணீரில் நனைத்து மறுபடியும் தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், பித்த வெடிப்பு குணமாகும்.

*மருதாணி இலைகளை நன்றாக அரைத்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட வேண்டும். பின், தண்ணீரால் கழுவி வர நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.

* கால் தாங்கும் அளவுக்கு தண்ணீரை சூடுபடுத்தி, அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். அந்த தண்ணீரில் பாதத்தை சிறிது நேரம் வைத்திருந்து, பின், பாதத்தை ஸ்கிரப்பர் போன்ற சொரசொரப்பானவற்றால் தேய்த்து கழுவினால் பாதத்தில் காணப்படும் கெட்ட செல்கள் உதிர்ந்து விடும். இதனால் பித்த வெடிப்பு ஏற்படுவதும் தவிர்க்கப் படுவதோடு, பாதம் மென்மையாகவும் இருக்கும்.

* வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைக்க வேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் பூசினால், பித்த வெடிப்பு நீங்கும்.

* தரம் குறைவான காலணிகளைப் பயன்படுத்துவதாலும், சிலருக்கு பித்த வெடிப்பு ஏற்படும். எனவே காலணிகளை வாங்கும் போது, அது தரமானது தானா என்பதை கவனித்து வாங்குவது நல்லது.

* விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சமஅளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, அதை பாதத்தில் வெடிப்பு உள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவி வர, பித்த வெடிப்பு சரியாகும்.

* வேப்ப எண்ணெயில், சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவினாலும் பித்த வெடிப்புகள் சரியாகும்.

* இரவு நேரத்தில் படுக்கைக்குச் செல்வதற்கு முன், காலை நன்றாக தேய்த்து கழுவி, சிறிது தேங்காய் எண்ணெய் தடவி தூங்கச் செல்வது நல்லது. இப்படி செய்தால் பித்த வெடிப்பு வராமல் தடுக்கலாம்.

* தினமும் குளித்து முடித்ததும், பாதங்களை ஈரமில்லாதவாறு துணியால் துடைக்க வேண்டும். பின், பாதத்தில் சிறிது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தாலும் வெடிப்பு வராமல் தடுக்கலாம்.

வந்து விட்டது ரிமோட் சார்ஜர்!

ஒரு ரிமோட் கன்ட்ரோலை வைத்துக்கொண்டு என்னென்ன செய்யலாம்? டிவி, கம்ப்யூட்டர், கார், ரோபோக்கள் என பலவகையான மின்சாதனங்களை ஒரு குறிப்பிட்ட தூரத்தில் இருந்துகொண்டே இயக்கலாம்.

ஆனால், `அதெல்லாம் அந்தக் காலம். இதுவரைக் கும் மின்சாதனங்களை இயக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த ரிமோட் கன்ட்ரோலை வைத்து இனி செல்போன், லேப்டாப் கம்ப்யூட்டர்களை சார்ஜ் செய்யலாம்’ என்று பிரமிப்பூட்டுகிறார் எரிக் கைலர். இவர் அமெரிக்காவிலுள்ள `விட்ரிசிட்டி’ என்னும் மின்சாதன உற்பத்தி நிறுவனத்தின் தலைவர்.

சுவற்றின்மீது சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு கருப்பு அட்டையை நோக்கி ரிமோட் கன்ட்ரோலை காட்டுகிறார் கைலர். உடனே அறையிலிருக்கும் மூன்று மின் விளக்குகள் எரிகின்றன. அதேசமயம் ஒரு டேப்லட் கம்ப்யூட்டரும் சார்ஜ் ஆகத் தொடங்குகிறது. இதில் விசேஷம் என்னவென்றால், இந்த மின் சாதனங்கள் அனைத்தும் மின்சாரத்தை கொடுக்கும் அந்த கருப்பு அட்டையிலிருந்து பல அடி தொலைவில் இருக்கின்றன என்பதுதான். மேலும், எந்த பிளக் பாயின்டிலும் பொருத்தப்படவில்லை.

அது சரி, ரிமோட் கன்ட்ரோல் தெரியும். அதென்ன ரிமோட் சார்ஜர்?

இன்ப்ரா ரெட், ரேடியோ கதிர்கள் என அதிக சக்திவாய்ந்த ஒரு சில கதிர்களை பயன்படுத்தி, ஒரு குறிப்பிட்ட தூரத்தில் இருந்து மின்சாதனங்களை இயக்குவது ரிமோட் கன்ட்ரோல் தொழில்நுட்பம். ஆனால், காற்றில் மின்சாரத்தை பாய்ச்சி ஒரு குறிப்பிட்ட தூரத்திலிருந்து மின்சாதனங்களை `சார்ஜ்’ செய்வது ரிமோட் சார்ஜர் தொழில்நுட்பம்!

சுருக்கமாக சொன்னால் `வயர்லெஸ்’ மின்சாரம்தான் இந்த ரிமோட் சார்ஜர்.

போர்ட்டபிள் வகை மின்சாதனங்களை சார்ஜ் செய்ய உதவும் இந்த ரிமோட் சார்ஜர் இந்த வருடத்தின் இறுதியில் கடைகளில் கிடைக்கும் என்கிறது இந்த நிறுவனம். மேலும், இதய பம்புகள் மற்றும் இதர மருத்துவ இம்ப்ளான்ட் அல்லது உட்பொருத்திகளை இந்த ரிமோட் சார்ஜரை கொண்டு சார்ஜ் செய்துகொள்ளும் காலம் விரைவில் வரும்.

ஆனால், வயர்லெஸ் முறையில் மின்சாரத்தை கடத்தும் இந்த தொழில்நுட்பம் முற்றிலும் புதியதல்ல என்கிறார் விட்ரிசிட்டியின் தலைவர் கைலர். உதாரணமாக, இந்த தொழில்நுட்பத்தின் ஒரு மாறுபட்ட மாதிரியை சுமார் 100 வருடங்களுக்கு முன்பே நிக்கோலா டெஸ்லா என்பவர் உருவாக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மின்சார டூத் பிரஷ், வீடியோ கேம் கன்ட்ரோலர்கள் போன்றவற்றை சார்ஜ் செய்யும் இன்டக்டிவ் சார்ஜர்கள் இப்போது ஏராளம்.

இன்டக்டிவ் சார்ஜர்களில், ஒரு காயிலுக்கு மின்சாரம் பாய்ச்சப்படும். இதிலிருந்து உருவாகும் மின்காந்த விசையானது ஒரு மின்சாதனத்தின் உள்ளே பொருத்தப்பட்டிருக்கும் இதே அளவுடைய மற்றொரு காயிலில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும். ஆனால், இந்த இரு காயில்களுக்கு இடையிலான தூரத்தை அதிகப்படுத்த அதிகப்படுத்த, மின்சார உற்பத்தி குறைந்து போய்விடும்.

இதனால், தற்போதுள்ள இந்த இன்டக்டிவ் சார்ஜர்களைக் கொண்டு மிக குறைந்த தொலைவில் உள்ள மின்சாதனங்களை மட்டுமே சார்ஜ் செய்ய முடியும். முக்கியமாக, இவற்றை வைத்து ஒரு மின்சாதனத்தை சார்ஜ் செய்ய ஒரு குறிப்பிட்ட நேரம்வரை அந்த மின்சாதனத்தை இணைத்து வைத்திருக்க வேண்டியது அவசியம். அதனால், இதற்கும் பிளக்கில் பொருத்தி ஒரு மின்சாதனத்தை சார்ஜ் செய்வதற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை!

ஆனால், கைலருடைய விட்ரிசிட்டியின் நோக்கம் என்னவென்றால், மின்சாதனங்களை வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்யும் தூரத்தை அதிகப்படுத்த வேண்டும் என்பதே! வயர்லெஸ் முறையில், காற்றில் மின்சாரம் கடத்தப்படும் தூரத்தின் அளவை நிர்ணயிப்பது ரிமோட் சார்ஜரில் உள்ள காயில்களின் அளவுதான்! உதாரணமாக, மொபைல்களை சார்ஜ் செய்யும் ஒரு ரிமோட் சார்ஜரில் மின்சாரத்தை அனுப்பும் காயில் மற்றும் மின்சாரத்தை வாங்கிக்கொள்ளும் காயிலின் அளவு சிறியதாக இருக்கும். ஆகவே, மொபைலையும் சார்ஜரையும் சில சென்டிமீட்டர் இடைவெளியில் வைத்தாக வேண்டியது அவசியம்.

ஆனால், பெரிய காயில்களை உடைய விட்ரிசிட்டி நிறுவனத்தின் தொடக்கநிலை ரிமோட் சார்ஜர்களைக் கொண்டு சுமார் ஒரு மீட்டர் தொலைவிற்கு மின்சாரத்தை கடத்த முடியும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், `ரிப்பீட்டர்கள்’ என்றழைக்கப்படும் ஒரு வகை காயில்களை கொண்டு மின்சாரம் கடத்தும் தூரத்தை மேலும் அதிகரிக்க முடியும் என்கிறார் கைலர். ரிப்பீட்டர்களை கொண்டு உருவாக்கப்பட்ட ரிமோட் சார்ஜர்களை வைத்து ஒரு அறையின் சுவற்றிலிருந்து அந்த அறையின் எந்த இடத்துக்கும் மின்சாரத்தை கடத்த முடியும் என்று செய்து காண்பித்திருக்கிறார் கைலர்.

விட்ரிசிட்டி உருவாக்கியுள்ள ஒரு ரிமோட் சார்ஜரை மேஜையின் மீது எந்த இடத்தில் வேண்டுமானாலும் வைத்து நம் செல்போன் அல்லது லேப்டாப் கம்ப்யூட்டரை சார்ஜ் செய்து கொள்ளலாம். இவற்றை ஒரு பையிலோ அல்லது பர்சிலோ வைத்துக்கூட சார்ஜ் செய்து கொள்ளலாம். மேலும், தற்போது கம்ப்யூட்டருடன் இணைத்து அல்லது வயர்லெஸ் முறையில் பயன்படுத்தப்படும் கீபோர்டு மற்றும் மவுஸை, இனி பாட்டரிகள் இல்லாமல் கம்ப்யூட்டரின் மானிட்டரை வைத்தே சார்ஜ் செய்து கொள்ளலாம் என்று பிரமாதப்படுத்துகிறார் கைலர்!

அப்பாடா, செல்போன், லேப்டாப்பை சார்ஜ் செய்ய இனிமேல் பிளக் பாயிண்டுகளை தேடி ஓட வேண்டியதில்லை. ஹாயாக உட்கார்ந்த இடத்திலிருந்தே சார்ஜ் செய்துகொள்ளலாம். வாழ்க விஞ்ஞானம், வளர்க ரிமோட் சார்ஜர் தொழில்நுட்பம்!

முனைவர் பத்மஹரி