Daily Archives: மார்ச் 17th, 2012

`தேன்நிலவே’ வா.. வா..

`தேன்நிலவு’, புதுமணத் தம்பதிகள் இளமையை இனிக்க இனிக்க அனுபவிக்கும் பயணம் என்று பலரும் எண்ணிக் கொண்டிருக்கலாம். தேன்நிலவு தேவையற்ற செலவு வைக்கும் ஒரு சடங்கு என்ற எண்ணமும் சிலரிடம் இருக்கலாம். உண்மையில் தேன்நிலவு என்பது என்ன? தேன்நிலவு இனிமையாக அமைய என்ன செய்ய வேண்டும்? சில யோசனைகள்…

புதுமணத் தம்பதிகளுக்கு இல்லற வாழ்வின் இனிய ஆரம்பமாக தேன்நிலவு அமைய வேண்டும். எந்த இடத்திற்கு தேன்நிலவு பயணம் சென்றால் மனம் அமைதி அடையும், ஆனந்தம் பெருகும் என்று தம்பதி இருவரும் கலந்து ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். தேவைப்பட்டால் பெற்றோரின் ஆலோசனையையும் கேட்டுப் பெறலாம்.

புதுமண தம்பதியின் பந்தத்தை மேலும் உறுதிப்படுத்தவும், எதிர்கால வாழ்விற்காக திட்டமிடவுமே `தேன்நிலவு சுற்றுலா’ ஒரு சம்பிரதாய கடமையாக பின்பற்றப்படுகிறது. இதை வெறும் பொழுதுபோக்கு சுற்றுலாவாகவோ, வீண் பணச் செலவாகும் ஒரு காரியம் என்றோ எண்ணிவிடக் கூடாது. திருமண செலவுகளுடன் சேர்ந்து இதுவும் ஒரு செலவாக கருதி இனிய அனுபவமாக தேன்நிலவை கொண்டாட வேண்டும்.

வெளிநாட்டு பழக்க வழக்கங்கள் எல்லாம் நமக்கு ஒத்துவராது என்று நாம் பல விஷயங்களை ஒதுக்கிவிடுகிறோம். அந்தப் பட்டியலில் தேன்நிலவையும் சேர்த்து புறக்கணிக்கக் கூடாது. வாழ்க்கையில் பிணைப்பை ஏற்படுத்தும் அடிப்படைப் புரிதலுக்கு வழிவகுக்கும் தேன்நிலவு புதுமணத் தம்பதிக்கு அவசியமானது என்பதை தம்பதியின் பெற்றோர் உணர்ந்து, அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

திருமணம் என்பது பெரியோர்கள், உறவினர்கள் கூடி நின்று நடத்தும் ஒரு சடங்குதான். அதன்பிறகு தம்பதியர் வாழப்போகும் நீண்ட வாழ்க்கைக்கு நல்ல அஸ்திவாரம்தான் தேன்நிலவு. அவர்கள் மனம் விட்டு பேசிக்கொள்ள தனிமையான, இனிமையான, சுதந்திரமான சூழலை ஏற்படுத்தித் தருவதுதான் தேன்நிலவுப் பயணம்.

சாஸ்திரங்களும், சம்பிரதாயங்களும் இருவரை ஒன்று சேர்த்து விடுவதில்லை. இரு மனங்கள் ஒன்றை ஒன்று புரிந்து கொள்ளும்போதுதான் நெருக்கம் ஏற்படுகிறது. அந்த நெருக்கம் அன்பாக மலர்ந்து மண வாழ்க்கையில் இனிமை சேர்க்கிறது.

எங்கோ பிறந்த இருவர் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, சுகதுக்கங்களை பகிர்ந்து கொண்டு, பிரச்சினைகளை எதிர்கொண்டு வாழ்வது என்பது பெரிய விஷயம். அதற்குண்டான ஆயத்தங்களை செய்து கொள்ள அவர்களுக்கு போதிய அவகாசம் தேவைப்படும். தேன்நிலவு என்பது அந்த அவகாசத்தை உருவாக்கித் தர பெற்றோர் ஏற்படுத்தி கொடுக்கும் ஒரு சம்பிரதாயமாகும். அதுவே புதுமணத் தம்பதியின் இல்லறத்துக்கு பெரும் நன்மையைச் சேர்க்கும்.

பொதுவாக தனிமை பல நல்ல விஷயங்களை செய்கிறது. குறிப்பாக புதுமண தம்பதிகளுக்கு அவர்களுடைய விருப்ப, வெறுப்புகளை பகிர்ந்து கொள்ளவும், எதிர்காலத்தை திட்டமிடவும், குடும்ப உறவுகளை பற்றி அறிமுகப்படுத்தவும், குடும்ப பழக்க வழக்கங்களை சொல்லவும், வருங்கால வாழ்க்கைக்கு தங்களை தயார் படுத்தி கொள்ளவும் இந்த (தேன்நிலவு) தனிமை பயன்படும்.

மண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்ததும், அந்தத் தம்பதியின் தலையில் பொறுப்புகளையும், கடமைகளையும் சுமத்தக்கூடாது. இருவர் சேர்ந்து வாழும் வாழ்க்கை எவ்வளவு இனிமையானது என்பதை அவர்கள் இருவருமே உணர வேண்டும். அந்த உணர்வு ஒருவருடைய அன்பை வெளிப்படுத்தவும், தங்களுடைய அன்பால் மற்றவரை ஆசுவாசப்படுத்தவும் வேண்டும். அதற்கு தேன்நிலவே துணைபுரிகிறது.

அன்பைப் பகிர்ந்து கொண்டால்தான், துன்பம் வரும்போது ஒருவருக்காக, மற்றொருவர் எப்படிப்பட்ட பாரத்தையும் சுமந்து கொண்டு துணையாக வரும் மனப்பக்குவம் அவர்களிடம் ஏற்படும். அதுபோலவே இந்த இனிய நாட்கள் மனதில் என்றும் மறக்காமல் பசுமையான நினைவுகளாக நிற்கும். சோதனையான காலங்களில் மீண்டும் நினைத்து பார்க்க வைத்து, பிணைப்பை ஏற்படுத்தும் உறவுப்பாலமாகவும் விளங்கும்.

இத்தனை இனிமையும், தனித்துவமும் மிக்க தேன்நிலவை, `இது தேவைதானா?’ என்ற ஒற்றைக் கேள்வியை குறுக்கிட வைத்து தவற விட்டுவிடாதீர்கள்!

எக்ஸாம் டிப்ஸ் – பயம் இல்லை ஜெயம்!

வருடம் முழுதும் நன்றாகப் படித்தால் மட்டும் போதாது. கடைசி நேரத்தில் பதறிவிட்டால் மொத்த உழைப்பும் வீண். வில்லிலிருந்து கிளம்பும் அம்பாக மனமும் உடலும் இருப்பது தேர்வுக்கு அவசியம். அதற்க நிபுணர்கள் சொல்லும் ஆலேசானைகள் என்ன?
“மாணவர்களுக்கு அவங்களோட பெற்றோர்தான் பதற்றத்தை ஏற்படுத்தறாங்க. சில பசங்க எவ்வளவு திட்டினாலும் அலட்டிக்க மாட்டாங்க. சில பசங்க லேசா கோபப்பட்டாலே இடிஞ்சு போய் உட்கார்ந்திடுவாங்க. பசங்களோட மனநிலையைப் புரிஞ்சுக்கிட்டு பெற்றோர் செயல்படணும். முதலில் தங்கள் குழந்தைகள் படிப்பில் கெட்டியா, சுமாரா, வெகு சுமாராங்கிறது பெற்றோருக்குத் தெரிஞ்சிருக்கணும். அதற்கேற்பத்தான் தேர்வில் ரிசல்ட்டை எதிர்பார்க்க முடியும். அதிக மார்க்க எடுக்கலைனா அம்மா அப்பா திட்டுவாங்கங்கிற பயம் நல்லா படிக்குற பசங்களைக் கூட திணற வச்சுடும். பெற்றோர் இவ்வளவு நாள் பசங்களை பயமுறுத்தியிருந்தாலும் தேர்வு நேரத்திலாவது அவங்ககிட்ட இணக்கமா பேசணும். உன்னால் முடிஞ்ச அளவுக்கு முயற்சி பண்ணு. தேர்வில் சுலபமான வினாக்கள்தான் வரும். நீ நல்லா எழுதுவேங்கிற பெற்றோரின் உற்சாக வார்த்தைகளே பசங்களுக்கு தெம்பைக் கொடுக்கும். கடமையைச் செய், பலனை எதிர்பாராதேங்கிற கீதை உபதேசம் தேர்வுக்கு நூற்றுக்கு நூறு பொருந்தும். படிப்பில் தாங்கள் எங்கே நிற்கிறோம்ங்கிறதை மாணவர்கள் தெளிவா புரிஞ்சுக்கணும். ஒரு வருஷமா படிக்க முடியாததை ஒரு வாரத்தில் படிச்சுட முடியாது. ஏற்கெனவே படிச்சதை ரிவைஸ் செஞ்சுட்டு, மீதி நேரத்துலதான் புதுப் பகுதிகளைப் படிக்கணும். தேர்வையொட்டி பசங்ககிட்ட எதிர்பார்க்குற வாழ்க்கை முறையைப் பெற்றோரும் பின்பற்றத் தயாரா இருந்தா ரொம்ப நல்லது. அதுவே பசங்களுக்குத் தொந்தரவா ஆகிடக்கூடாது’ என்கிறார் மனநல ஆலோசகர் டாக்டர் அகஸ்டின்.
படித்த மாணவர்கள் கூட தேர்வு நேரத்தில் முடங்கிவிட இன்னொரு காரணம், உணவுப் பழக்கவழக்கங்களில் நேரும் குளறுபடி. இதைப்பற்றி சென்னையைச் சேர்ந்த டாக்டர் நளினியிடம் கேட்டோம். “புள்ள ராப்பகலா படிச்சு கஷ்டப்படுது. நாக்குக்கு ருசியா சமைச்சுக்கொடுப்போம்’னு அம்மாக்கள் களத்துல குதிச்சு டிராக்கை மாத்திடக்கூடாது. எண்ணெய், காரம், மசாலா அதிகமான உணவுகள் தேர்வு நேரத்துல பசங்களைக் கஷ்டப்படுத்திடும். முட்டை, சிக்கன், மட்டன் உணவுகள் அதிகமாக சாப்பிடக்கூடாது. மீன் உணவுகள் இதயத்துக்கு ஆற்றலைக் கொடுக்கும். சுண்டல், முளைகட்டிய தானியங்கள் உள்ளிட்ட உணவுகள் சாப்பிடலாம். பழவகைகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடணும். மாதுளம்பழம், திராட்சை போன்ற பழங்கள் மூளைக்கு நல்லது. வயிற்றுப்பிரச்னை உள்ள பசங்க கமலா, ஆரஞ்சு போன்ற பழங்களைத் தவிர்க்கணும். புத்திக்கூர்மைக்கு வைட்டிமின் ஏவும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸும் அவசியம். கீரைகள், பப்பாளி, முள்ளங்கி, பச்சைப் பட்டாணி போன்றவற்றில் இந்த விட்டமின்கள் இருக்கு என்கிறார் நளினி.
களம் காத்திருக்கிறது கலக்குங்க கண்மணிகளா!

வேர்டில் டேபிளுக்கு ஆட்டோ பிட்

நாம் உருவாக்கும் ஆவணங்களில் டேபிள்களை இணைக்க வேர்ட் பல வழிகளில் நமக்கு உதவுகிறது. டேபிள் ஒன்றை இணைத்த பின்னர், அதன் நெட்டு வரிசையின் அகலத்தினை நாம் நம் தேவை களுக்கேற்ப, அதில் அமைக்கப்படும் டேட்டாவிற்கிணங்க, நாம் மாற்ற வேண்டியதிருக்கும். இதற்குப் பல வழிகள் உள்ளன. இதில் முக்கியமான ஒரு வசதி இதில் தரப்பட்டுள்ள AutoFit என்பதுதான். உங்களுடைய டேபிளின் ஒவ்வொரு நெட்டு வரிசைக் கட்டத்திலும் சிறிய அளவில் டேட்டா வைத்திருந்தால், இந்த வசதி உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இதனைப் பயன்படுத்தக் கீழ்க்காணும் வழிகளைக் கையாளவும்.
நீங்கள் வேர்ட் 2000, 2003 பயன்படுத்து பவர்களாக இருந்தால், கீழே தரப்பட்டுள்ள படி செட்டிங்ஸ் அமைக்கவும்.
1. சம்பந்தப்பட்ட டேபிள் முழுவதையும் தேர்ந்தெடுக்கவும்.
2. டேபிள் மெனுவில் உள்ள AutoFit என்பதில் கிளிக் செய்திடவும். வேர்ட் இப்போது ஒரு துணை மெனுவினைக் காட்டும்.
3. இந்த துணை மெனுவில் AutoFit to Contents என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
நீங்கள் பயன்படுத்துவது வேர்ட் 2007 அல்லது வேர்ட் 2010 ஆக இருந்தால்,
1. சம்பந்தப்பட்ட டேபிள் முழுவதையும் தேர்ந்தெடுக்கவும்.
2. இனி, Layout என்ற டேப்பில் கிளிக் செய்திடவும்.
3. அடுத்து, Cell குடித்ஞு என்ற குரூப்பில், Auto Fit என்பதில் கிளிக் செய்திடவும். வேர்ட் ஒரு கீழ்விரி மெனுவினைத் தரும்.இதில் பல ஆப்ஷன்கள் கிடைக்கும்.
4. இவற்றிலிருந்து Auto Fit to Contents என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இதனால் டேபிளில் ஏற்படும் மாற்றம், நீங்கள் அதன் கட்டங்களில் நிரப்பி யிருக்கும் தகவல்களைப் பொறுத்தது. டேபிள் முழுக்க காலியாக இருந்தால், அனைத்து கட்டங்களும் ஒரே மாதிரியான அளவில் மாற்றி அமைக்கப்படும். அல்லது ஏதேனும் சில கட்டங்களில் மட்டும் தகவல்கள் இருப்பின், அவற்றிற் கேற்ப அனைத்து கட்டங்களும் மாற்றி அமைக்கப்படும்.
பல வகையான தகவல்களை செல்களில் அமைத்திருந்தால், மவுஸ் உதவியுடன் மேலே குறிப்பிட்ட வசதியைப் பயன் படுத்தலாம். டேபிளின் இடது எல்லைக் கோட்டில் டபுள் கிளிக் செய்திடவும். நெட்டு வரிசை செல்களின் எல்லைக் கோடு தானாக அட்ஜஸ்ட் செய்யப்படும். மேலே தரப்பட்ட வழிகளின் மூலம் செட்டிங்ஸ் ஏற்படுத்திச் செய்திடும் மாற்றங்கள் இதன் மூலம் மேற்கொள்ளப்படும்.

வாழ்க்கையில் வெல்ல `6′

“தடம் பார்த்து நடப்பவன் மனிதன், தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்” என்று சொல்வார்கள். எல்லோருக்கும் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசையும், மற்றவர்கள் நம்மை விரும்ப வேண்டும் என்ற எண்ணமும் இருக்கத்தான் செய்யும். வெற்றிக்கு முயற்சியும், தன்னம்பிக்கையும் போதும். வெற்றி பெற்றால் மற்றவர் உங்களை திரும்பி பார்க்கலாம், ஆனால் எல்லோரும் உங்களை விரும்பியும், நெருங்கியும் வர வேண்டுமென்றால் 6 அடிப்படை விஷயங்கள் அவசியம். அவை இங்கே…

நம்பிக்கை:

நம்மிடம் இருக்கும் சிறந்த பழக்க வழக்கங்களே பிறரை நம்மை நோக்கி ஈர்க்கும். முதலில் நமக்கு நம் மீது நம்பிக்கை இருக்க வேண்டும். நான் அழகானவ(ன்)ள் என்ற எண்ணம் உங்கள் மனதில் எப்போதும் இருக்கட்டும். அழகு என்பது சருமத்தில் மட்டுமில்லை. சருமத்தை பராமரித்து அழகு படுத்திவிடலாம். கவர்ச்சியை விட நம்பிக்கை மேலானது. நம்பிக்கையின் பலனையும், ஈர்ப்பையும் உங்கள் வெற்றி தான் மற்றவர்களுக்கு உணர்த்தும்.

நேர்த்தியான உடை:

`நான் கலராக இல்லை. எலும்பும் தோலுமாக இருக்கிறேன். எனக்கு எந்த டிரெஸ் போட்டாலும் நல்லா இருக்காது` என்று எண்ணாதீர்கள். நேர்த்தியாக உடை அணியுங்கள். உடை அணிவது ஆளைக் கவர்வதற்கல்ல என்றாலும், பார்ப்பவர்களை மதிக்கத் தூண்டுவதும் நாம் அணியும் உடை தான். அது உங்களுக்கு வசதியானதாகவும் இருக்கட்டும். நல்ல மரியாதை, நல்ல நட்பு எல்லாவற்றையுமே நல்ல ஆடைகள் உருவாக்கித் தரும். நேர்த்தியான ஆடை உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

கனிவான பழக்கம்:

வீட்டுக்குள்ளேயே கிணற்றுத் தவளையாக முடங்கிக் கிடந்தால் இந்த உலகத்தின் அதிசயங்கள் உங்களுக்கு தென்படாமலே போகும். பழகும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டால் தான் வெற்றியின் முகம் உங்களுக்கு காட்சி தரும். எனவே ஓய்வு நேரத்தை நண்பர்களுடன் இணைந்து சமூக சேவை செய்யும் விதமாக வெளியே கழித்தால் பலரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். அப்போது உங்களுக்கு புதிதாக பலர் அறிமுகமாகலாம். நீங்களும் முதலில் உங்களை அறிமுகம் செய்து பழக்கம் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பழக பழகத்தான் நம் பலமும், பலவீனமும் தெரியும். பிறகு நம் நடையை மாற்றி வெற்றி நடை போடலாம்.

நட்பை தேர்வு செய்யுங்கள்:

வெற்றிக்குத் துணை நம்பிக்கை மட்டுமல்ல, நட்பும் தான். யாருடன் சினேகிதம் கொள்கிறோமோ அவர்களின் பழக்கம் நமக்கும் ஒட்டிக் கொள்ளும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அதனால் நட்பு கொள்வதில் அதிக கவனம் அவசியம். அதேபோல அருகில் இருப்பவர்கள், உடன் பணிபுரிபவர்கள் ஆகியோருடன் நட்புறவுடன் இணக்கமாக பழகுவதும் வாழ்க்கையில் வெற்றிக்கு உதவும். உங்களின் அழைப்பை மதிப்பவருடனும், மரியாதையுடன் பழகுபவருடனும், உங்கள் நலனில் அக்கறை கொள்பவருடனும் நட்பு ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

விமர்சனத்தை எதிர்கொள்ளுங்கள்:

நீங்கள் நிறைவான தோற்றத்தில் இருக்கும்போது பலரும் உங்களைப் பற்றி பேசிக் கொள்வார்கள். அதுபோல குறையான தோற்றத்தில் இருந்தாலும் பலரும் விமர்சிப்பார்கள். புகழ் பேச்சில் மயங்காமலும், குறை காணும் விமர்சனங்களில் கலங்காமலும் இருங்கள்.

விலக்க வேண்டியவை:

வெற்றிக்காக விலக்க வேண்டிய விஷயங்கள் ஏராளம் உண்டு. முதலாவது எதிர்மறையாக பேசுபவர்களை விட்டு விலகுங்கள். அடுத்ததாக நேரத்தையும், செல்வத்தையும் விரயம் செய்யும் பழக்கத்தை விட்டுவிடுங்கள். நண்பர்களுடன் அதிகமாக அரட்டையடிப்பது, தூங்கிக் கழிப்பது, தியேட்டரில் கழிப்பது போன்றவற்றை விலக்குவதன் மூலம் நேரத்தையும், செல்வத்தையும் மிச்சப்படுத்தலாம். இந்த ஆறும் இருந்தால் வெற்றி உங்களைச் சேரும், மற்றவர்களும் உங்களிடம் விரும்பி நட்பு பாராட்டுவார்கள்.