Daily Archives: மார்ச் 20th, 2012

பெயர் சூட்டலாமா!

உங்கள் கம்ப்யூட்டர் உங்கள் பெயரில் இருக்க வேண்டும். அல்லது உங்கள் குடும்பத்தில் உங்களுக்குப் பிடித்தவர் யார் பெயரிலாவது இருக்க வேண்டும். எனவே எப்படியும் ஒரு பெயரில் கம்ப்யூட்டர் இயங்கும். இதனை எப்படித் தெரிந்து கொள்வது? ஒரு வேளை உங்களுக்கு இப்போதுதான் திருமணமாகி உங்கள் கம்ப்யூட்டருக்கு உங்கள் மனைவியின் பெயரை வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறீர்கள். எங்கு சென்று மாற்றுவது? என்ற கேள்விக்கு விடை பார்ப்போமா?
மானிட்டர் திரையில் My Computer என்று ஒரு ஐகான் இருக்கிறதல்லவா? அதன் மீது ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில் Properties என்னும் பிரிவைத் தேர்ந்தெடுத்தால் பல டேப்கள் கொண்ட விண்டோ ஒன்று கிடைக்கும். இதில் Computer Name என்ற டேபின் மீது கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவைக் கவனியுங்கள். இந்த திரையில் Computer Description என்று ஒரு இடம் தெரியும். இதன் நேர் எதிரில் உள்ள கட்டத்தில் இந்த கம்ப்யூட்டர் குறித்த ஒரு சிறு விளக்கம் இருக்கும். இல்லை என்றால் நீங்கள் அமைக்கலாம். இதில் மை ஆபீஸ் கம்ப்யூட்டர் அல்லது மை கிச்சன் கம்ப்யூட்டர் என்று உங்களுக்குப் பிடித்த கம்ப்யூட்டர் குறித்த விளக்கத்தினைத் தரலாம். ஆனால் இது கம்ப்யூட்டரின் பெயர் ஆகாது. இதன் கீழாகக் Full Computer Name என்று இருக்கும். இதில் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டும் என்றால் அருகில் உள்ள Change என்பதில் கிளிக் செய்து பின் கிடைக்கும் விண்டோவில் உள்ள கட்டத்தில் பெயரை டைப் செய்து ஓகே கிளிக் செய்திட கம்ப்யூட்டரின் பெயர் நீங்கள் டைப் செய்ததற்கேற்றபடி மாற்றப்பட்டு காட்டப்படும்.

மீண்டும் மீண்டும் திருமணம்…

திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்பர் நம் ஊர் பெரியவர்கள். கணவன் – மனைவி இடையேயான உறவு, நீண்ட காலத்துக்கு நீடிக்க வேண்டும் என்பதற்காக, இவ்வாறு கூறுவது வழக்கம். மேற்கத்திய நாடுகளில் இதெல்லாம், நடைமுறைக்கு ஒத்து வராத விஷயம். பெரும்பாலான தம்பதிகள், திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே, விவாகரத்து பெற்று, பிரிந்து விடுகின்றனர். அவர்களை பொறுத்தவரை, திருமணம் என்பது, மிகவும் சாதாரணமான விஷயம். சிலர், தங்கள் வாழ்நாளில் பத்து திருமணங்கள் கூட செய்து கொள்கின்றனர். திருமணம் ஆகாமலேயே, குடும்பம் நடத்தும் கலாசாரமும் அங்கு உள்ளது.
இந்நிலையில், இன்னும் கூட சில வெளிநாடுகளில், திருமண வாழ்வை, உயிருக்கும் மேலாக நேசிக்கும், சில தம்பதிகள் இருக்கின்றனர் என்பது தான் ஆச்சரியமான விஷயம். அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த இவான், வயது 41, சூசன், வயது 39 ஆகியோர், அப்படிப்பட்ட தம்பதியர். இவர்களுக்கு, 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆனது. காதல் திருமணம் தான். தேவாலயம் ஒன்றில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கண் மூடி, கண் திறப்பதற்குள் ஒரு ஆண்டு முடிந்து விட்டது. இருவரும் தங்களின் முதல் ஆண்டு திருமண நாளை சிறப்பாக கொண்டாட முடிவு செய்தனர்.
சூசனுக்கு திடீரென ஒரு ஐடியா உதித்தது. “திருமண நாளை கொண்டாடுவதற்கு பதிலாக, இதே நாளில் மீண்டும் திருமணம் செய்து கொண்டால் என்ன?’ என, தன் கணவரிடம் கேட்டார். அவரும், இதே மனநிலையில் இருக்கவே, உடனடியாக ஓ.கே., சொன்னார்.
இதையடுத்து, முதலாமாண்டு திருமண நாளில், இந்த காதல் தம்பதி மீண்டும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தின்போது, என்னென்ன சடங்குகள் நடக்குமோ, அவை அனைத்தும் நடந்தன. வழக்கம்போல், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் விருந்து கொடுத்து அசத்தினர். பதிலுக்கு அவர்களும், புதுமணத் தம்பதிக்கு பரிசு கொடுப்பது போல், இவர்களுக்கும் பரிசுகளை வழங்கினர்.
இந்த விழாவுக்கு வந்திருந்த அனைவருமே, “உங்களின் இந்த ஐடியா, மிகவும் புதுமையாகவும், வித்தியாசமாகவும் உள்ளது. கணவன் – மனைவிக்கு இடையோயன அன்பை பலப்படுத்துவதற்கு, இது ஒரு நல்ல வாய்ப்பு…’ என, பாராட்டினர்.
இதைக் கேட்டதும், இவானும், சூசனும், ஆண்டு தோறும் திருமண நாளின்போது, வெவ்வேறு ஊர்களுக்கு சென்று, வித்தியாசமான பின்னணியில் திருமணம் செய்து கொள்வது என, முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து, கடந்த 15 ஆண்டுகளாக, இருவரும், திருமண நாளின்போது திருமணம் செய்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அரிசோனா, லாஸ்வேகாஸ், பாரீஸ், மெக்சிகோவின் காபோ மற்றும் ஹவாய் போன்ற இடங்களுக்கு சென்று, திருமணம் செய்து கொண்டனர். பறக்கும் பலூனில் சென்று திருமணம் செய்து கொள்வது, டால்பின்கள் மத்தியில் திருமணம் செய்து கொள்வது என, பல புதுமைகளையும் அரங்கேற்றினர்.
ஏழாவது திருமண நாளின்போது, சூசன் கர்ப்பமாக இருந்தார். அப்போதும், அவர்களின் திருமண விழா, கோலாகலமாக நடந்தது. இரண்டு குழந்தைகள் பிறந்த பின்னும், தங்களின் திருமண விழாவை, இவர்கள் கைவிடவில்லை. குழந்தைகளின் முன்னிலையில், மீண்டும், மீண்டும் திருமணம் செய்து கொண்டனர்.
சூசன் கூறுகையில், “ஒவ்வொரு முறையும் திருமணம் செய்து கொள்ளும் போதும், ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்படுகிறது. புதிதாக திருமண வாழ்வை துவங்குவது போன்ற அனுபவமும் ஏற்படுகிறது. திருமண வாழ்வின் பெருமையை, மற்றவர்களுக்கு <உணர வைக்க வேண்டும் என்பதும் எங்கள் நோக்கம்…’ என்றார்.

நீண்ட ஆயுளுக்கான ரகசியம்

சாப்பிட உட்கார்ந்தால் நமக்கு முன்பு இருக்கும் உணவுகளை பார்த்து முதலில் கண்கள் ஆசைப்படும், பிறகு கைகள், அதன்பிறகு நாக்கு, கடைசியாகத்தான் வயிறு! ஆனால், உணவை பார்த்து ஆசைப்படுவதுடன் கண்களின் வேலை முடிந்துவிடும். உணவை எடுத்து வாயில் வைத்தவுடன் கையின் வேலையும், ருசிப்பதுடன் நாக்கின் வேலையும் முடிந்து போகிறது.

ஆனால், நாம் உண்ணும் உணவை செரிமானம் செய்யும் முக்கியமான, கடினமான வேலையை வயிறுதான் செய்கிறது. வேடிக்கை என்னவென்றால், தேவைப்படும் உணவு கிடைத்தவுடன் `இனி வேண்டாம், போதும்’ என்று வயிறு மூளைக்கு சிக்னல் செய்துவிடுகிறது. உடனே மூளை, இந்த சிக்னலை கைகள், கண்கள், நாக்கு என எல்லாவற்றுக்கும் அனுப்பி `உணவு உண்பதை நிறுத்து’ என்று ஆணையிடுகிறது.

ஆனால், உணவின் மீதுள்ள பேராசையால் கண்கள், கைகள், நாக்கு எல்லாம் சேர்ந்து தேவைக்கு அதிகமான உணவுகளை தொடர்ந்து வயிற்றுக்குள்ளே தள்ளிக்கொண்டே இருக்கின்றன. விளைவு, உடல் பருமன், அதைத்தொடர்ந்து வரும் இதய நோய்கள், மூளைக் குறைபாடுகள் என பல ஆரோக் கியம் சார்ந்த பிரச்சினைகள் உருவாகின்றன. இதனால், மனிதனின் ஆயுட்காலம் வெகுவாக குறைந்துவிடுகிறது என்கிறது அறிவியல்.

இந்த பிரச்சினைக்கு ஒரே தீர்வு உணவுக் கட்டுப்பாடுதான் என்கிறார்கள் விஞ்ஞானிகள். அதாவது, உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடித்தால் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழலாம். ஆனால், `ஒரு நாள் விட்டு ஒரு நாள் விரதம் இருந்தால் மூளையின் திறன் அதிகமாகிறது, உடல் எடையும் குறைகிறது. இதனால் ஆயுட்காலம் அதிகரிக்கிறது’ என்கிறது அமெரிக்காவின் `நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஏஜிங்’ ஆய்வு மையத்தின் சமீபத்திய ஆய்வு ஒன்று.

விலங்குகள் மீதான முதற்கட்ட ஆய்வில், மிகவும் குறைந்தபட்ச கலோரிகளை உண்டுவந்த விலங்குகள் சாதாரண விலங்குகளை விட இரு மடங்கு அதிக நாட்கள் வாழ்ந்தது கண்டறியப்பட்டது. இந்த ஆய்வுக்கு பின்னர், இந்த உணவுக்கட்டுப்பாட்டு முறையை மனிதர்கள் மீதான ஆய்விலும் பயன்படுத்தினர். ஆய்வின் இறுதியில், இந்த உணவுக்கட்டுப்பாட்டு முறை இதயம், ரத்த நாளங்கள் மற்றும் மூளை ஆகியவற்றை வயோதிகம் சார்ந்த நோய்களான அல்சீமர்ஸ் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கிறது என்பது தெரியவந்தது.

`உணவுக் கட்டுப்பாட்டில், ஒரு நாள் விட்டு ஒரு நாள் உணவு உண்ணும் முறையை கடைபிடிப்பதால், உடல் செயல்பாடுகள் சார்ந்த உளைச்சல்களை, பாதிப்புகளை சமாளிக்கும் திறன் நரம்புகளில் (நரம்பு உயிரணுக்கள்) தூண்டிவிடப்படுகிறது என்பதை கண்டுபிடித்தோம்’ என்கிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட மூத்த ஆய்வாளர் பேராசிரியர் மார்க் மேட்சன்.

இந்த ஆய்வுக்கான சோதனையில், இரு குழுக்களாக பிரிக்கப்பட்ட எலிகளில் ஒரு குழு எலிகளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் உணவு கொடுக்கப்பட்டது. மற்றொரு குழு எலிகளுக்கு தினமும் உணவு கொடுக்கப்பட்டது. இந்த இரு குழுக்களில் உள்ள எலிகள் அனைத்துக்கும் உணவு கொடுக்கப்பட்டபோது, தேவைக்கு அதிகமான அளவுகளில் கொடுக்கப்பட்டது. ஆனால், அவை அனைத்தும் ஒரே அளவு கலோரிகளை எடுத்துக்கொண்டன.

முக்கியமாக, ஒரு நாள் விட்டு ஒரு நாள் உணவு கொடுக்கப்பட்ட எலிகள் நீரிழிவு நோயுடன் தொடர்புடைய `இன்சுலின்’ என்னும் ஹார்மோனை குறைவான அளவிலேயே உற்பத்தி செய்தன. உணவுக்குப் பின்னான உடலின் சர்க்கரை அளவுகளை கட்டுப்படுத்தும் பண்புள்ள இன்சுலின் ஹார்மோன், அதிக அளவுகளில் சுரந்தால் மூளையின் திறன் குறைந்து போவதோடு, நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்தும் அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், சோதனைக்கு பின்னர் இரு குழுவின் எலிகளுடைய மூளைகளும் பரிசோதிக்கப்பட்டது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் உணவு கொடுக்கப்பட்ட எலிகளின் மூளையிலுள்ள `சினாப்ஸ்’ என்னும், மூளை உயிரணுக்களுக்கு இடையிலான தொடர்புகளின் செயல்பாடுகள் மேம்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இந்த சினாப்ஸ், மூளையில் புதிய உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிப்பதோடு, அவற்றுக்கு உளைச்சல் அல்லது பாதிப்புகளை தாங்கும் சக்தியையும் கொடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முந்தைய உணவு கட்டுப்பாடு தொடர்பான ஆய்வுகளில், சில நாட்கள் உணவு உண்ணாமல் விரதம் இருப்பதன் மூலம் புற்றுநோய் சிகிச்சையின் பலனை அதிகரிக்கலாம் என்று கண்டறியப்பட்டது. ஆரோக்கியமான உயிரணுக்களை பட்டினி போடுவதன் மூலம் அவற்றை `சர்வைவல் மோடு’க்கு கொண்டு செல்கிறோம். இதனால் அவற்றுக்கு புற்றுநோய் சிகிச்சையான கீமோதெரபியினால் ஏற்படும் சேதங்களை எதிர்கொண்டு தாக்குப்பிடிக்கும் திறன் கிடைக்கிறது என்பதே இதற்கு காரணம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

இதிலிருந்து, `உணவே மருந்து, மருந்தே உணவு’ என்று நம் முன்னோர்கள் சொன்னது அறிவியல்பூர்வமாக உண்மைதான் என்பது புரிகிறது. ஆக, உணவுக்கட்டுப்பாடுதான் `ஆரோக்கியமான நீண்ட ஆயுட்காலத்தை பெறுவதற்கான சுலபமான வழி’.

முனைவர் பத்மஹரி

`நீதிக்குக் கண் இல்லை’ என்பது ஏன்?


குற்றவாளிகள், சாட்சி சொல்பவர்கள் ஆகியோர் நீதிமன்றத்தில் நாடகமாடி தங்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்படுமாறு செய்யலாம் என்று எகிப்திய பாரோக்கள் (pharaohs) கருதினர்.

அதனால் வழக்கு விசாரணையை சிறிதும் வெளிச்சமில்லாத இருட்டறையில் நடத்தும் வழக்கத்தை மேற்கொண்டனர். அதன் காரணமாக, குற்றஞ்சாட்டப்பட்டவர், வக்கீல்கள், நீதிபதி ஆகியோர் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள முடியாது. உண்மையைத் தவிர வேறு எதனாலும் நீதிபதியை அசைக்க முடியாது.

இந்தக் கொள்கையின் விளைவாகத்தான் தற்போதைய நீதிமன்றங்களில் நாம் பார்க்கும் நீதி தேவதையின் சிலை ஏற்பட்டது. அதன் கண்கள் துணியால் கட்டப்பட்டிருக்கும். கையில் தராசு ஏந்தியிருக்கும்.

யாரைப் பார்த்தும் நீதியை வளைக்கக் கூடாது, தராசுத் தட்டு போல நீதி அனைவருக்கும் சமமாக அளிக்கப்பட வேண்டும் என்பதை இவை குறிக்கின்றன.

விண்டோஸ் 8 இயக்க என்ன தேவை?

விண்டோஸ் 8 இயங்க எத்தகைய ஹார்ட் வேர் அமைந்த கம்ப்யூட்டர் தேவையாய் இருக்கும்? இந்த கேள்வி நம் அனைவரின் மனதிலும் இருக்கும். இதற்கான பதில் மிகவும் எளியது. விண்டோஸ் 7 சிஸ்டம் இயங்கும் அனைத்து பெர்சனல் கம்ப்யூட்டர்களிலும், விண்டோஸ் 8 இயங்கும். கீழ்க்காணும் ஹார்ட்வேர் தேவைகளை இதற்கெனப் பட்டியலிடலாம்.
1. ப்ராசசரின் இயக்க வேகம் 1 கிகா ஹெர்ட்ஸ் அல்லது அதற்கும் மேலாக.
2.கம்ப்யூட்டர் 32 பிட் எனில் ராம் மெமரி 1 ஜிபி; 64 பிட் எனில் ராம் மெமரி 2 ஜிபி குறைந்தது இருக்க வேண்டும்.
3. எப்போதும் தேவையான காலி டிஸ்க் இடம், 32 பிட் எனில் 16 ஜிபி. 64 பிட் எனில் 20 ஜிபி.
4. டைரக்ட் எக்ஸ்9 கிராபிக்ஸ் டிவைஸ் WDDM 1.0 உடன் இருக்க வேண்டும். அல்லது இதனைக் காட்டிலும் உயர்வாக இருக்க வேண்டும்.
விண்டோஸ் 8 சிஸ்டம் தரும் சில வசதிகளைப் பயன்படுத்த, சில கூடுதல் ஹார்ட்வேர் தேவைகள் அவசியம். அவை, Snap feature பயன்படுத்த வேண்டும் எனில், உங்கள் கம்ப்யூட்டரின் ரெசல்யூசன் குறைந்த பட்சம் 1366×768 என இருக்க வேண்டும். நீங்கள் தொடுதிரை பயன்பாட்டினை மேற்கொள்வதாக இருந்தால், மல்ட்டி டச் ஏற்கக்கூடிய லேப்டாப், டேப்ளட் அல்லது டிஸ்பிளே திரை கொண்ட மானிட்டர் இருக்க வேண்டும். விண்டோஸ் 8 சிஸ்டம், ஒரே நேரத்தில் ஐந்து டச் பாய்ண்ட்களை இயக்கும் திறன் கொண்டது என்பதனைக் கருத்தில் கொள்ள வேண்டும். விண்டோஸ் ஸ்டோர் பயன்படுத்த கட்டாயம் இன்டர்நெட் இணைப்பில் இருக்க வேண்டும்.

மவுனத்தால் வந்த நன்மை!

யுகதர்மம் என்றுள்ளது. அந்தந்த யுகங்களில் தர்மமும் மாறுவதுண்டு. கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என, நான்கு யுகங்கள். தானே சென்று கொடுப்பர் கிருத யுகத்தில்; கூப்பிட்டுக் கொடுப்பர் திரேதா யுகத்தில்; வந்து கேட்டால் தான் கொடுப்பர் துவாபர யுகத்தில்; கசக்கிப் பிழிந்து கேட்டால்தான் கொடுப்பர் கலியுகத்தில்.
தர்ம தேவதைக்கு நான்கு கால்கள். கடந்த மூன்று யுகங்களில், மூன்று கால்கள் வெட்டப்பட்டு விட்டதால், இந்தக் கலியுகத்தில் தர்மம் ஒரே காலில், அதாவது கால் பங்கு தான் உள்ளது. முக்கால் பங்கு தர்மம் இப்போது இல்லை. இனி, அடுத்த கிருத யுகம் வரும்போது தான், தர்மம் முழு அளவில் இருக்குமாம். கலியுகமே இன்னும் பல வருஷங்கள் இருக்குமாம்.
கலிகாலம், முற்ற முற்ற இன்னும் பல கொடுமைகள் நடக்குமாம். இந்த கலியுகத்தில் என்னென்ன கொடுமைகள் நடக்கும் என்பதை, புராணங்களில் காணலாம். முந்தைய யுகங்களில், பொய் சொல்ல பயப்படுவர். ஒருவர், ஜெபம் செய்தபடி திண்ணையில் உட்கார்ந்திருந்தார். அந்த சமயம் ஒரு பசு மாட்டைக் கொல்வதற்காக துரத்தி வந்தான் ஒருவன். அந்த பசு மாடு, இவர் பக்கமாக ஓடி வந்து, பக்கத்து சந்து வழியாக ஓடி தப்பித்துக் கொண்டது.
ஜெபம் செய்தவரிடம் வந்து, “இந்தப் பக்கம் ஒரு பசு மாடு வந்து போயிற்றா?’ என்று கேட்டான் துரத்தியவன். இவர் யோசித்தார்… “பசு மாடு இந்தப் பக்கம் போயிற்று என்றால் அது உண்மை. உண்மையைச் சொன்னால், அவன் பசு மாட்டை தேடிப் போய் கொன்று விடுவான்; அந்தப் பாவம் நம்மைச் சேரும். “பசு மாடு வரவில்லை என்றால் அது பொய்யாகி விடும்; அந்த பொய் சொன்ன பாவம் நமக்கு வரும்…’ என்று யோசனை செய்தபடி பேசாமல் இருந்தார்.
பசுவை தேடி வந்தவன் இரண்டு, மூன்று தடவை கேட்டும், இவர் பதில் சொல்லவே இல்லை. “ஓகோ! இவர் செவிடு போலிருக்கிறது…’ என்று நினைத்து திரும்பிப் போய் விட்டான். பசு மாடும் தப்பியது; தான் பதில் சொல்லாமல் மவுனமாக இருந்தது எவ்வளவு நல்லதாகப் போயிற்று என்று சந்தோஷப்பட்டார். மவுனமாக இருப்பதும் கூட நல்லதுதான். அதிகம் பேசப் பேச, அதுவே மனஸ்தாபத்தில் முடியும். அதனால்தான், சில பெரியவர்கள் மவுன விரதம் கடைபிடிப்பதுண்டு. வீண் பேச்சு பேசினால் தானே விரோதம் ஏற்பட வாய்ப்புண்டு.
வீட்டில் கூட, மவுன விரதம் இருந்தால், மனைவி மக்களிடம் பேசாமல் இருந்தால், வீண் விவாதம் இருக்காது. அதற்காக, பேசாமல் இருக்கவும் கூடாது. சந்தர்ப்பத்துக்குத் தகுந்தபடி சாமர்த்தியமாகப் பேச வேண்டும். முடியுமா உங்களால்? கடவுளைப் பற்றி பேசுங்கள்; அவன் குணாதிசயங்களைப் பேசுங்கள். புண்ணியம் உண்டு!