Daily Archives: மார்ச் 21st, 2012

‘கேப்’ விழுந்திருச்சா?..உடனே காரணத்தை கண்டுபிடிங்க!

திருமணமான புதிதில் தம்பதியர் இடையே காற்று கூட புக முடியாத அளவு நெருக்கம் ஏற்படுவது இயல்பு. தம்பதியர் இடையேயான காதல் உணர்வுகள் ஒரு கட்டத்திற்குப் பின் காணமல் போய்விடுகிறது. இதற்கு பல்வேறு காரணங்களை தெரிவிக்கின்றனர் உளவியல் வல்லுநர்கள்.

மன அழுத்தம்

தம்பதியரை முதலில் தாக்குவது மன அழுத்தம். அது பணிச்சூழல் பற்றியதாகவும் இருக்கலாம், பணம் தொடர்புடையதாகவும் இருக்கலாம். இந்த மன அழுத்தமே தம்பதியரிடையேயான நெருக்கத்தை பிரிக்கும் முக்கிய எதிரியாக உள்ளது. எனவே மன அழுத்தத்தின் அளவை தெரிந்து கொண்டு அது குடும்பத்தை பாதிக்காத அளவு மருத்துவர்களிடமோ, உளவியலாளர்களிடமோ ஆலோசனை பெற வேண்டும். மன உளைச்சல் காரணமாகவும் தம்பதியரிடையே இடைவெளி ஏற்பட காரணமாகிறது.

குடும்ப பிரச்சினை

உறவுகளிடையே ஏற்படும் சிக்கல்கள் தம்பதியரிடையேயான உறவுக்கு வேட்டு வைக்கும். தகவல் பரிமாற்றத்தில் புரிந்து கொள்ள இயலாத நிலை, தேவையற்ற விவாதங்களும் குடும்ப உறவுகளை பாதிக்கும்.

போதை ஆபத்து

மது குடித்துவிட்டு போதையில் மிதப்பது, கண்ட போதை வஸ்துக்களை உபயோகித்துவிட்டு உறங்கிப் போவது தம்பதியரிடையே நெருக்கத்தை குறைக்கிறது.

உறக்கக் குறைபாடு

பணிச் சூழல், அதிகாலையில் எழுந்து அலுவலகம் சென்றுவிட்டு இரவு வீடு திரும்புவது, உடலில் சோர்வை அதிகப்படுத்திவிடுகிறது. நேரங்கெட்ட நேரத்தில் தூங்கி எழுவது அசதியை ஏற்படுத்துவதால் தம்பதியரிடையே இடைவெளி ஏற்படுகிறது. எனவே சரியான அளவில் பணி நேரத்தையும், ரொமான்ஸ்க்கான நேரத்தையும் திட்டமிடவேண்டும் என்கின்றனர் உளவியலாளர்கள்.

குழந்தை பிறந்திருக்கா?

சிறு குழந்தைகள் பிறந்த சமயமாக இருந்தால் அது தம்பதியரிடையே இடைவெளி ஏற்படும் காலமாகும். எனவே குழந்தைக்கு அதிக நேரம் ஒதுக்குவதோடு, ரொமான்ஸ்சுக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள்.

ரொம்ப குண்டாயிட்டோமோ?

திருமணத்தில் பார்த்ததை விட இப்ப ரொம்ப குண்டாயிட்டோமோ என்ற எண்ணம் உளரீதியான பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இதுவும் கூட இடைவெளிக்கு காரணமாகிறது. உடல் பருமன் காரணமாக ஆண்களுக்கு டெஸ்டோஸ்ட்டிரான் சுரப்பு குறைவதும் தம்பதியரின் இடைவெளிக்கு காரணமாகிறது.

மெனோபாஸ்

பெண்களுக்கு மெனோபாஸ் காலம் வந்தாலே வசந்த காலமே முடிந்துவிட்டதைப் போல உணர்வர். வலி, வறட்சி போன்றவைகளினால் உறவில் ஆர்வமின்மை ஏற்படுகிறது. இதுவும் தம்பதியரிடையே வில்லனாக புகுந்து இடைவெளியை ஏற்படுத்துகிறது.

எனவே தம்பதியர் இருவரும் கலந்து ஆலோசித்து பிரச்சினையின் உண்மை தன்மையை புரிந்து கொண்டு இடைவெளியை குறைக்க முயல வேண்டும். அப்பொழுதுதான் வாழ்க்கை என்னும் பூந்தோட்டத்தில் மகிழ்ச்சிப் பூக்கள் பூக்கும்

புற்றணுக்களை தேடிக் கொல்லும் `டி.என்.ஏ’ நானோ ரோபோ!

புற்று நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டிருக்கும் அதேவேளையில் இந்த நோய்க்கான நவீன சிகிச்சைகளும் வளர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

ஆனால், புற்றுநோய்க்கு எதிரான இந்த மருத்துவ முயற்சிகளுக்கு எல்லாம் சிம்ம சொப்பனமாய் இருப்பது ஒரேயொரு பிரச்சினைதான். அது, புற்றுநோய் உயிரணுக்கள் அழிக்கப்படும்போது பாதிப்புக்குள்ளாகி இறந்துபோகும் ஆரோக்கியமான உயிரணுக்களால் ஏற்படும் மோசமான பின்விளைவுகள்!

புற்றுநோய் சிகிச்சையில் உள்ள இந்த தலையாய பிரச்சினைக்கு ஒரு தீர்வை சொல்ல வந்திருக்கிறது புற்றணுக்களை தேடிக் கொல்லும் திறனுள்ள டி.என்.ஏ. நானோ ரோபோ! `டி.என்.ஏ. ஓரிகேமி’ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த நானோ ரோபோவை உருவாக்கியிருப்பவர் அமெரிக்காவிலுள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் ஷான் டக்ளஸ்.

ரோபோ தெரியும், அதென்ன டி.என்.ஏ. நானோ ரோபோ?

மனித மரபணுக்கள் டி.என்.ஏ. எனும் மூலக்கூறுகளால் ஆனவை. டி.என்.ஏ.வால் ஆன, நானோ அளவுடைய ரோபோ டி.என்.ஏ. நானோ ரோபோ எனப்படுகிறது. டி.என்.ஏ.வை பல வடிவங்களில் உருவாக்கும் திறனுள்ள தொழில்நுட்பம்தான் டி.என்.ஏ. ஓரிகேமி! டி.என்.ஏ.வின் வேதியியல் கட்டமைப்பினை புரிந்துகொள்ளும் டி.என்.ஏ. மாடலிங் சாப்ட்வேரில், நமக்கு தேவையான ஒரு வடிவத்தை `க்ளிக்’ செய்தால்,
டி.என்.ஏ.வைக் கொண்டு அந்த வடிவத்தை அது உருவாக்கிவிடும்.

இந்த டி.என்.ஏ. ஓரிகேமி சாப்ட்வேரை பயன்படுத்தி சிப்பி வடிவத்தில் உள்ள ஒரு டி.என்.ஏ. நானோ ரோபோவை உருவாக்கினார் ஆய்வாளர் ஷான் டக்ளஸ். இதற்குள் புற்றுநோய் மருந்தை வைத்து, அதை நோயாளியின் உடலுக்குள் செலுத்தி புற்றணுக்களை அழிப்பதே டக்ளஸின் திட்டம்.

இந்த சிப்பி நானோ ரோபோக்கள், புற்றணுக்களை எதிர்கொள்ளும்போது மட்டும் தன்னுள் இருக்கும் மருந்தை வெளியேற்றி அவற்றைக் கொல்ல வேண்டும். அதற்காக சிப்பி நானோ ரோபோவுக்கு இரண்டு பூட்டுகள் வடிவமைக்கப்பட்டன. ஜிப் போல திறந்து மூடிக்கொள்ளும் தன்மையுடைய இந்த பூட்டுகள் ஒவ்வொன்றும் `ஆப்டாமர்’ எனப்படும் டி.என்.ஏ. இழைகளாலானவை. இவை குறிப்பிட்ட ஒரு மூலக்கூற்றை எதிர்கொள்ளும்போது மட்டும் திறந்துகொள்ளும் வண்ணம் வடிவமைக்கப்பட்டவை.

இந்த நானோ ரோபோக்களின் சிகிச்சை திறனை பரிசோதிக்க, ரத்த புற்றணுக்களான லியூக்கீமியா உயிரணுக்களின் மேற்புறத்தில் இருக்கும் மூலக்கூறுகளை எதிர்கொள்ளும்போது திறந்துகொண்டு மருந்தை வெளியேற்றும் வண்ணம் ஒரு சிப்பி நானோ ரோபோ வடிவமைக்கப்பட்டது. பின்னர் அந்த சிப்பிக்குள், உயிரணுக்களின் வளர்ச்சியை தடை செய்து அவற்றை கொல்லும் திறனுடைய ஒரு மருந்து வைக்கப்பட்டது.

இறுதியாக, மருந்து தாங்கிய சிப்பி நானோ ரோபோக்கள் ஆரோக்கியமான ரத்த அணுக்கள் மற்றும் ரத்த புற்றணுக்கள் கலந்த ஒரு உயிரணு கலவைக்குள் செலுத்தப்பட்டன. மூன்று நாட்கள் கழித்து, ரத்த புற்றணுக்களுள் பாதி அழிக்கப்பட்டன. ஆனால் ஆரோக்கியமான ரத்த உயிரணுக்களில் ஒன்றுகூட பாதிக்கப்படவில்லை என்பது கண்டறியப்பட்டது.

இந்த சிப்பி நானோ ரோபோவுக்குள், புற்றணுக்களின் செயல்பாடுகளை தடை செய்யும் திறனுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட மருந்துகளை புகுத்தி உடலுக்குள் செலுத்தினால், லியூக்கீமியா உயிரணுக்களை ஒன்று விடாமல் மொத்தமாக அழித்துவிடலாமாம். இதன் மூலம் லியூக்கீமியா வகை ரத்த புற்றுநோய்க்கு முழுமையான சிகிச்சையளிக்க முடியும் என்கிறார் டக்ளஸ்.

முக்கியமாக, சிப்பி நானோ ரோபோக் களின் ஆப்டாமர் பூட்டுகளை மாற்றுவதன் மூலம், உடலின் எந்த வகையான உயிரணுவையும் தாக்கி அழிக்க முடியும் என்கிறார் டக்ளஸ். இதுதான் மருத்துவ உலகின் தற்போதைய பரபரப்பான செய்தி.

எந்தவித பாகுபாடுமின்றி வேகமாக வளரும் திறனுள்ள எல்லா உயிரணுக்களையும் கொன்றுவிடும் தன்மையுள்ளது கீமோதெரபி சிகிச்சை. கீமோதெரபியில் இருக்கும் இந்த முக்கியமான சிக்கலை, இரண்டு பூட்டுகளைக் கொண்ட சிப்பி நானோ ரோபோக்கள் தீர்த்து வைக்கும் என்றும் நம்பிக்கை அளிக்கிறார் டக்ளஸ்.

அதாவது, சிப்பி நானோ ரோபோவுக்குள் இருக்கும் மருந்தை வெளியேற்ற அதன் இரண்டு பூட்டுகளை திறந்தாக வேண்டும். இந்த பூட்டுகளை திறக்க, சிப்பி நானோ ரோபோக்கள் சந்திக்கும் உயிரணுக்களின் மேற்புறத்தில் குறிப்பிட்ட சில மூலக்கூறுகள் இருக்க வேண்டியது அவசியம். இந்த மூலக்கூறுகள், புற்றணுக்களில் மட்டும்தான் இருக்கும். ஆக, சிப்பி நானோ ரோபோ சிகிச்சையில் புற்றணுக்கள் மட்டுமே கொல்லப்படும். எந்தவித பின்விளைவுகளும் இருக்காது!

ஆமாம் என்று ஆமோதிக்கிறார் டென்மார்க்கிலுள்ள ஆர்ஹஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் யூர்கன் ஜெம்ஸ். மேலும், டி.என்.ஏ. ஓரிகேமி தொழில்நுட்பத்தின் மூலம் புத்திசாலியான மருந்துகளை கண்டுபிடிக்க முடியும் என்பது உண்மைதான். இதை டக்ளஸின் ஆய்வுக்குழு ஆதாரப்பூர்வமாக நிரூபித்திருப்பது பாராட்டத்தக்கது என்கிறார் ஜெம்ஸ்.

டி.என்.ஏ. ஓரிகேமி கொடுத்திருக்கும் இந்த டி.என்.ஏ. நானோ ரோபோ, புற்றுநோய் மருத்துவத்துக்கு கிடைத்த ஒரு மகத்தான பரிசு என்பது மறுக்க முடியாத உண்மைதான் என்கிறார்கள் பால் ராத்மண்ட் உள்ளிட்ட உலகின் பிற புற்றுநோய் ஆய்வாளர்கள்.

முனைவர் பத்ம ஹரி

படங்களைக் கையாள புதிய தளம்

போட்டோக்கள், படங்கள் ஆகியவற்றை உருவாக்குவதற் கும், உருவாக்கியவற்றை நம் விருப்பப்படி கையாளவும் பல இணைய தளங்கள் உள்ளன. சிலவற்றின் பார்மட்டினை மாற்ற முயற்சிப்போம். சிலவற்றின் இயல்புகளைச் செறிவாக அமைக்க எண்ணுவோம். படங்களில் அல்லது போட்டோக்களில் உள்ள தேவையற்ற பிக்ஸெல்களை நீக்க திட்டமிடுவோம். படங்களைத் தலை கீழாகவோ, ஒரு கொலாஜ் ஆகவோ, சில சிறிய துண்டுகளாகவோ மாற்றி அவற்றிற்கு புதிய வடிவம் தரவும் சிலர் விருப்பப் படுவார்கள். இவர்களின் அனைத்து எண்ணங்களுக்கும் வழி காட்டும் வகையில் அண்மையில் ஓர் இணைய தளத்தைக் காண நேர்ந்தது. அதன் பெயர் இமேஜ் ஸ்பிளிட்டர். இந்த புரோகிராம் கிடைக்கும் முகவரி http://imagesplitter.net/.
இந்த தளத்திற்குச் சென்றவுடன், நாம் எந்த படத்தில் மேலே சொன்ன மாற்றங்களை ஏற்படுத்த விரும்புகிறோமோ, அந்த பட பைலை அப்லோட் செய்திட வேண்டும். பைலின் அளவு 20 எம்பிக்கு மிகாமல் இருக்க வேண்டும் பின்னர், என்னவகையான செயல் பாட்டினை மேற்கொள்ள விரும்புகிறோமோ, அதற்கான பட்டனைக் கிளிக் செய்தால், உடன் அந்த செயல் மேற்கொள்ளப்பட்டு படம் உங்களுக்கு டவுண்லோட் செய்திடக் கிடைக்கும். இதனை நாம் தேர்ந்தெடுக்கும் டைரக்டரியில் சேவ் செய்து பயன் படுத்தலாம்.
இதில் என்ன என்ன வேலைகளை மேற்கொள்ளலாம்? பார்மட் மாற்றலாம். jpeg, jpg, bmp, png, gif, ico ஆகிய பார்மட்கள் கையாளப்படுகின்றன. பார்மட் மாற்றுவதில் மட்டுமின்றி, படங்களின் அளவுகளை மாற்றுகையிலும், நெட்டு மற்றும் குறுக்காகப் படங்களை வெட்டிப் பெறுவதிலும் கூட, உங்களுக்கு எந்த பார்மட்டில் தேவையோ, அந்த பார்மட்டில் கேட்டு வாங்கிக் கொள்ளலாம்.
படம் ஒன்றை ரீசைஸ் செய்வதற்கு, எந்த அளவில் புதிய சைஸ் இருக்க வேண்டுமோ, அந்த அளவினை தந்தால் போதும். அளவுகளைத் தந்த பின் “Resize image” என்ற பட்டனில் கிளிக் செய்தால், அந்த அளவிற்கான படம் கிடைக்கும். இதில் என்ன சிறப்பு எனில், நீங்கள் அகலத்தினை 50 பிக்ஸெல் அளவிற்கு மாற்றினால், அதற்கேற்ற வகையில் நீளம் சரி செய்யப்பட்டு படம் கிடைக்கும்.
இந்த தளத்தின் பெயர் படங்களை வெட்டுவது (imagesplitter) என உள்ளது. அதற்கேற்ற வகையில், நாம் தரும் வரையறைகளின் படி, ஒரு படத்தை மிகச் செம்மையாக வெட்டிப் பல பைல்களாக இந்த தளம் தருகிறது. பட பைல் ஒன்றை அப்லோட் செய்துவிட்டு, எத்தனை நெட்டு வரிசை மற்றும் படுக்கை வரிசை (Rows & Columns) என மட்டும் கொடுத்தால் போதும். உடன் ஒரு ஸிப் பைலாக இது தரப்படும். அதனை விரித்து, பல துண்டுகளாக அழகாக இவற்றைப் பெறலாம். எடுத்துக்காட்டாக, நான்கு சம துண்டுகளாக ஒரு படம் வெட்டப்பட வேண்டும் என்றால், 2 படுக்கை வரிசை மற்றும் 2 நெட்டு வரிசை எனத் தர வேண்டும். நான்கு சரியான துண்டுகளாகக் கிடைக்கும். இதற்குப் பதிலாக, 4 நெட்டு துண்டுகளாக வேண்டும் எனில், 1 row and 4 columns எனத் தர வேண்டும். இதில் என்ன சிறப்பு எனில், படங்கள் வெட்டப்பட்ட பின்னர் எப்படி காட்சி அளிக்கும் என முன் தோற்றக்காட்சி காட்டப்படுகிறது. அதனைப் பார்த்த பின்னர், நமக்கு ஓகே என்றால், வெட்டுவதற்கு ஓகே சொல்லலாம்.
இதே போல படங்களின் அளவினைச் சரி செய்திடலாம்.
மேலே குறிப்பிட்ட வேலைகளை மிக நேர்த்தியாக இந்த தளத்தில் மேற்கொள்ளலாம். எந்த புரோகிராமினையும் தரவிறக்கம் செய்து பதிய வேண்டியதில்லை. அக்கவுண்ட் எதனையும் திறக்க வேண்டியதில்லை. பாஸ்வேர்ட் எதுவும் கிடையாது. போகிற போக்கில் தளம் சென்று, நமக்கு வேண்டிய செயல்பாட்டினை மேற்கொண்டு சென்று கொண்டே இருக்கலாம்.

சரும நோயை நீக்கும் அழிஞ்சல்

மருத்துவத் தன்மை மிகுந்த மரங்களுள் அனஞ்சி என அழைக்கப்படும் அழிஞ்சில் மரமும் ஒன்று.

இது தென்னிந்தியா, மியான்மர் போன்ற வெப்பம் மிகுந்த பகுதிகளில் அதிகம் வளர்கிறது.  இதன் விதை, பட்டை இரண்டும் மருத்துவப் பயன் கொண்டவை.

Tamil    –  Azhingil

English    – Sage-leaved alangium

Sanskrit    – Ankola

Telugu    – Ankolam

Malayalam    – Ankolam

Botanical name – Alagium salvifolium

அங்கோல வித்தை யயின்றான்முன் போலவினை
யங்கோல வித்தை யடங்குமே-யங்கோல
முண்டா மரைவாசி யுட்பலமே லாகியதை
யுண்டா மரைவாசி யுள்

– தேரையர் நளவெண்பா

பொருள் – அழிஞ்சில் வாதம், பித்தம், கபம் என்னும் முக்குற்றத்தை சீராக்குகிறது.  பித்தத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டது.

அழிஞ்சில் பட்டையை இடித்து தூளாக்கி நீரில் கொதிக்க வைத்து குடிநீராக்கி அருந்தி வந்தால் உடலில் உள்ள தேவையற்ற விஷநீர்கள் வெளியேறும்.

இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற ரசத் தாதுக்களை வெளியேற்றும்.

வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும்.  குடல் புண்ணை ஆற்றும்.

மலச்சிக்கலைப் போக்கும்.  நாள்பட்ட மலத்தை இளக்கும் தன்மை கொண்டது.

சிறுநீரைப் பெருக்கும்.  வியர்வையைத் தூண்டி சருமத்தைப் பாதுகாக்கும்.

உடல் சூட்டைத் தணிக்கும்.  நோயுற்ற உடலைத் தேற்றும்.

அழிஞ்சில் விதையைக் காயவைத்து அதன் பருப்பை அரைத்து வெள்ளாட்டுப் பாலில் கலந்து கொதிக்க வைத்து அருந்தினால் இளைத்த உடல் தேறும்.

அழிஞ்சலின் வேர்ப்பட்டையை காயவைத்து பொடியாக்கி தேங்காய் எண்ணெயில் குழைத்து மேகப்புண், சீழ் வடிகின்ற புண், சொறி, சிரங்கு மீது தடவி வர புண்கள் விரைவில் ஆறும்.

இதன் பட்டை மற்றும் வேரிலிருந்து தயாரிக்கப்படும் தைலம் மூட்டுவலி, கீழ்வாதம் போன்றவற்றிற்கு நல்ல நிவாரணம் அளிக்கும்.

பாத வெடிப்பு, பாத எரிச்சலுக்கு இத்தைலத்தைத் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

முகப்பரு, முகத்தில் சுருக்கம், முகக் கருமை இவற்றையும் போக்கும்.

அழிஞ்சில் விதையிலிருந்து எடுக்கப்படும் தைலம் குஷ்ட நோய்க்கு பயன்படுத்தப் படுகிறது.

அழிஞ்சில் மரத்தின் மருத்துவப் பயன்களைப் பற்றி அகத்தியர் 12,000 என்ற நூலில் முழுமையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி- ஹெல்த் சாய்ஸ்

சொற்களின் சிறப்புகள்

பொங்கல் விழா எப்போதும் நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது.

அவை முறையே போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல்.

இந்த நான்கையும் பற்றி பல ஆண்டுகளாகவே பலர் தவறான விளக்கங்கள் கூறி வருகிறார்கள்.

`போகி நாள்’ என்பதைப் `போக்கி நாள்’ என்கிறார்கள்.

அதாவது வீட்டிலுள்ள கழிவுப் பொருட்களை, பழையனவற்றைப் `போக்கும் நாள்’ என்கிறார்கள்.

எப்போதுமே சுத்தப்படுத்தும் நாளை ஒரு திருநாளாக எந்தக் காலத்திலும் கொண்டாடியதில்லை.

`போகி’ என்ற வார்த்தை தெளிவாகவே இருக்கிறது.

விளைச்சல் என்பது, `போகம்’ என்படும்.

போகத்துக்குரியவன் நிலச்சுவான்தார். அதனால் தான் அந்த விழா, நிலம் உள்ளவர்களின் வீட்டில் மட்டும் தடபுடலாக இருக்கும்.

போகத்துக்குரியவனின் விழா `போகி விழா’

வயலில் இறங்கி உழைக்கும் விவசாயிக்கு உள்ள விழா, `பொங்கல் விழா’. அவனுக்குப் பயன்படும் மாடுகளுக்கான விழா, `மாட்டுப் பொங்கல்’ விழா.

அந்த உணவைப் பகிர்ந்து கொள்ளும் நிலமும் இல்லாத, விவசாயமும் செய்யாத பொதுமக்களின் விழா, `காணும் பொங்கல்’ விழா.

இதுதானே வரிசை.

நிலத்துக்குரியவன்,

விவசாயி,

காளை மாடு,

பொதுமக்கள்.

நான்கு நாள் விழாவிலும் பொங்கல் என்பது எங்கள் பக்கங்களில் திறந்த இடத்திலேயே வைக்கப்படும்; அதாவது சூரிய வெளிச்சம் படுகிற இடத்தில்.

அது வானத்துக்குச் செலுத்தும் நன்றி.

ஆரோக்கியத்திற்காக எந்தெந்தப் பொருட்களை உபயோகப்படுத்துகிறோமோ, அவை எல்லாம் பொங்கலிலே பயன்படுத்தப்படும்.

திருவிழாக்களின் வார்த்தைகளையும், நோக்கங்களையும், அடிப்படைகளையும், புரிந்து கொள்ளாமல் பலர் விளக்கம் கூறி விடுகிறார்கள்.

`கற்பைக் காப்பாற்றிக் கொள்வது’ என்றால், `கர்ப்பப் பையைக் காப்பாற்றிக் கொள்வது’ என்கிறார்கள்.

கர்ப்பமானவளெல்லாம் கற்பை இழந்து விட்டவளா என்ன?

இடம் நோக்கிப் பொருள் கொள்ளுதல் தமிழ் இலக்கிய மரபு.

எங்கள் பக்கங்களில் `ஆடிவேவு’ என்று ஒன்று எடுப்பார்கள்.

புதிதாகக் கல்யாணமான தம்பதிகளை ஆடியிலே பிரித்து வைப்பார்கள்.

காரணம், ஆடியிலே சேர்ந்திருந்தால், சித்திரை வெய்யிலிலே குழந்தை பிறக்குமே என்பதற்காக.

சுயமரியாதை விளக்கக் கூட்டங்களிலே ஒரு விளக்கம் சொல்லுவார்கள்.

`கலி’யாணம் என்றால், `சனியன் பிடித்தல்’ என்று அர்த்தமாம்.

`கலி’ என்றால் சனியனாம்; `ஆணவம்’ என்றால் `பிடித்த’லாம்.

கலிகலி புருஷன்; சரிதான்.

`ஆணவம்’ என்றால் `பிடித்தல்’ என்று இவர்களுக்கு யார் சொன்னது?

அதோடு அந்த வார்த்தை கல்யாணமா? கலியாணமா?

சில காரியங்களுக்கான காரணங்களை, சிலர் நன்றாகச் சொல்லுகிறார்கள்.

“சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்” என்பது பழமொழி.

அதற்கு வாரியார் சுவாமிகள், “சஷ்டியில் விரதம் இருந்தால், அகம் என்னும் பையில் அருள் சுரக்கும்” என்றார்கள்.

இது ஒரு அற்புதமான விளக்கம்.

`அறப்படித்த மூஞ்சுறு கழுநீர்ப்பானையில் விழுந்ததாம்’ என்பார்கள்.

ரொம்பப் படித்த மூஞ்சுறு கழுநீர்ப்பானையில் விழுந்ததென்று சொல்லுவார்கள்.

அதுவல்ல பொருள்.

`அறவடித்த முன்சோறு கழுநீர்ப் பானையில் விழுந்ததாம்’ என்பது பழமொழி. சோற்றை வடிக்கத் தொடங்கும் போது, முன்னால் நிற்கும் சோறு கழுநீர்ச் சட்டியில்தான் விழும்.

இல்லையென்றால் மூஞ்சுறுக்கும், படிப்பிற்கும், கழுநீர்ப்பானைக்கும் என்ன சம்பந்தம்?

`கடவுள்’ என்ற வார்த்தைக்குப் பொருள் சொல்லும் போது, `எல்லாவற்றையும் கடந்து உள்ளிருப்பவன்’ என்று வராது.

கட+உள்கடவுள்.

`நீ பந்த பாசங்கள் எல்லாவற்றையும் கட, உனக்குள்ளே கடவுள் இருப்பான்’ என்பது பொருளாகும்.

தமிழில், `பகுபதம் பகாபதம்’ என இரண்டு வகை உண்டு. அவை பிரித்துப் பார்க்க வேண்டியவை; பிரித்துப் பார்க்கக் கூடாதவை.

கோ+இல்கோயில்.

-இது பகுபதம்

`புரவி’ இது பகாபதம்.

இதை, புர் + அவி, என்று பிரித்துப் பார்க்கக் கூடாது.

அறிஞர் அண்ணா அவர்களும், மற்றும் நாவலரும் மறியல் செய்து கோர்ட்டில் நின்றபோது, அறிஞர் அண்ணா அவர்கள் என்னிடம் கேட்டார்கள், “மறியல் என்ற வார்த்தையை மறு + இயல் என்று பிரித்துப் பொருள் கொள்ளலாமா?” என்று.

மறு + இயல், `மறுவியல்’ என்று வருமே தவிர, மறியல் என்று வராது.

ஆக, தமிழ் இலக்கண மரபிலும், வடமொழி மரபிலும் லேசான மாற்றங்களே கிராமங்களிலும் ஏற்பட்டிருந்தன.

அற்புதமான இலக்கியச் சொற்களெல்லாம், வழக்குச் சொற்களாகப் பயன்படுகின்றன.

இவற்றை உலகிற்குச் சொல்லும் போது, இளைஞனின் எதிர்காலத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

பெரியவர்கள் தவறாகச் சொல்லி விட்டால், அவன் அப்படியே அதை நம்பித் தவறாகப் பொருள் கொண்டு விடுவான்.

என் வாழ்க்கையில் ஒரு உதாரணம்:

பதினெட்டுச் சித்தர்களில் தேரையார் என்பவர் ஒரு பாடல் பாடியிருக்கிறார்.

அதில், `இரண்டடக்கோம்; ஒன்று விடோம்,’ என்று ஒரு இடம் வருகிறது.

அதன் பொருள், `மலஜலம் வந்தால் அடக்கமாட்டோம், விந்தை வீணாக வெளிப்படுத்தமாட்டோம்’ என்பதாகும்.

இந்தப் பொருளே, எனக்கு இப்போதுதான் புரிந்தது.

நான் ஏழாம் வகுப்பு படித்தபோது, ஒரு ஆசிரியர் எனக்கு சொன்ன பொருள்: `இரண்டடக்கேல்’ என்றால் “மலஜலம் வந்தால் அடக்காதே;” `ஒன்றை விடேல்’ என்றால் “சிறுநீரை அடிக்கடி விடாதே” என்பதாகும்.

ஒன்றுக்குப் போவதென்றால் சிறுநீர் கழிப்பதென்றும், இரண்டுக்குப் போவதென்றால் மலம் போவதென்றும் முடிவு கட்டி, அவர் அப்படிச் சொல்லி விட்டார்.

விளைவு, அடிக்கடி ஒன்றுக்குப் போவதென்றால் நான் பயப்பட ஆரம்பித்தேன்; அடக்க ஆரம்பித்தேன்.

வாத்தியார் சொன்னதாயிற்றே! பயப்படாமல் இருக்க முடியுமா?

ஆகவே, அறிஞர்கள் எனப்படுவோர் வார்த்தைகளுக்குப் பொருள் சொல்லும் போது, அது எதிர்கால இளைஞனின் புத்தியைப் பாதித்துவிடாமல் கூற வேண்டும்.

தமிழிலே சில விஷயங்கள் இயற்கையாகவே மரபாகி இருக்கின்றன.

அப்பா, அம்மா, அண்ணன், அக்கா, அத்தை, அம்மான் எல்லாமே `அ’ கரத்தில் தொடங்குகின்றன.

தம்பியும், தங்கையும் `த’கரத்தில் தொடங்குகின்றன.

மாமன், மாமி, மைத்துனன், மைத்துனி, `ம’ கரத்தில் தொடங்குகின்றன.

ஆரம்பத்தில் திட்டமிட்டுச் செய்தார்களா இவற்றை என்பது தெரியவில்லை. ஆனால், சொல்லும் பொருளும் சுவையாக ஓட்டிவரும் மரபு தமிழில் அதிகம்.

வடமொழியில் இருந்து ஏராளமான வார்த்தைகளை தமிழ் பின்னாளில் எடுத்துக் கொண்டிருக்கிறது. உருதுக்காரர்களும் வாரி வழங்கிவிட்டுப் போயிருக்கிறார்கள்.

எந்த மொழி வார்த்தைகள் என்று தெரியாமலே பல வார்த்தைகளும் வழங்கப்படுகின்றன.

விவஸ்தை

அவஸ்தை

சபலம்

வஜா

லவலேசம்

லஞ்சம்

லாவண்யம்

ஜீரணம்

-இப்படி ஏராளமான திசைச் சொற்கள், ஒன்றா இரண்டா?

சரியான பொருள் தரும் சொற்களை அப்படியே கையாளுவதால் மயக்கம் நீங்குகிறது.

உலகத்துக்கும், இறைவனுக்கும் சக்தியை வழங்குவதால், உமாதேவியார் `சக்தி’ என்று அழைக்கப்படுகிறார்.

`ஸ்வம்’ என்றால், தானே எழுந்தது; ஆகவே ஆதிமூலம் `சிவம்’ ஆனது.

`பருவத குமாரி’ பார்வதி ஆனாள்.

`ஸீதா ரஸ்தா’ என்றால் ஹிந்தியில் நேரான சாலை.

`ஸீதா’ என்றால் வடமொழியில் `நேரானவள்’ என்று பொருள்.

அவள் ஜனகனின் மகள்; ஆகவே, `ஜானகி.’

மிதிலைச் செல்வியாதலால், `மைதிலி.’

விவேகம் கொண்டவள் ஆதலால், `வைதேகி.’

ரகுவம்சத்தில் தோன்றியதால் ராமன், `ரகுபதி.’

`கோதண்டம்’ என்ற வில்லை ஏந்தியதால், `கோதண்டபாணி.’

தசரதனின் மகன் என்பதால், `தாசரதி.’

அதுபோலவே `மது’ என்ற அரக்கனைக் கொன்றதால் கண்ணன், `மதுசூதனன்.’

கேசியைக் கொன்றதால், `கேசிநிகேதன்.’

அழகாய் இருப்பதால், `முருகன்.’

துன்பங்களை நாசப்படுத்துவதால், `விநாயகன்.’

இடையூறுகளைத் தீர்த்து வைப்பதால், `விக்னேஸ்வரன்.’

யானை முகம் படைத்தால், `கஜானன்.’

கணங்களுக்குத் தலைவனானதால் `கணபதி’, `கணேசன்.’

நீர்வாழ் இனங்களில் தூங்காதது, `மீன்’ ஒன்றுதான்.

தூங்காமலே இருப்பதால் மதுரையில் இருப்பவள், `மீனாட்சி.’

`காமம்’ என்றால் `விருப்பம்.’ மனித விருப்பதை ஆட்சி செய்வதால் காஞ்சியில் இருப்பவள், `காமாட்சி.’

`தாமரை’ யில் இருந்து உள்ளங்களை ஆள்வதால் இலக்குமிக்குப் பெயர், `பத்மாட்சி,’ `கமலாட்சி.’

வடதிசையில் இருந்தபடி அகில பாரதத்தையும் விசாலமாக ஆள்வதால், `விசாலாட்சி.’

-கிட்டத்தட்ட இந்து மதத்தின் சொற்பொருள்களுக்கு ஒரு அகராதியே தயாரிக்கலாம்.

`தேம்’ என்றாலும் தெய்வம்.

`தேவம்’ என்றாலும் தெய்வம்.

`தேங்காய்’ என்று சொல்லே தேம் + காய் தெய்வத்துக்கான காய்; இனிமையான காய் என்ற இரண்டு பொருட்களைத் தரும்.

ஆக, காரணப் பெயர்கள், பொருட் பெயர்கள் என்று எடுத்துக்கொண்டு போனால், தமிழும், வடமொழியும் போட்டி போட்டுக் கொண்டு மோதுகின்றன.

மோசமானது ஒன்றை `கஸ்மாலம்’ என்கிறோம் அல்லவா? இது `கச்மலம்’ என்ற வடமொழியின் திரிபு என்பதை காஞ்சிப் பெரியவாளின் புத்தகத்தில் படித்தேன்.

சொற்களைக் கேட்கின்றபோது பொருட்களைச் சிந்தியுங்கள்! சொற்களுக்கும் பொருட்களுக்குமுள்ள தொடர்பைச் சிந்தியுங்கள்!

அதுவும் மத சம்பந்தமான சொற்களைக் கூர்ந்து கவனியுங்கள்.

கிட்டதட்ட பாதி விஷயங்கள் உங்களுக்கு இயற்கையாகவே புரிந்துவிடும்.