Daily Archives: மார்ச் 23rd, 2012

சண்டிகேஸ்வரர் முன்பு கை தட்டலாமா?

சிவன் கோவில்களில் சண்டிகேஸ்வரர் சன்னதியை நீங்கள் பார்த்திருப்பீர்கள். சிலர், அந்த சன்னதியை அடைந்ததும் பவ்வியமாக கை தட்டுவார்கள். இன்னும் சிலர் பலமாக கை தட்டுவார்கள். மேலும் சிலர் அமைதியாக கன்னத்தில் போட்டுக் கொள்வார்கள்.

உண்மையிலேயே இப்படிச் செய்யலாமா? அதற்கு முன், யார் இந்த சண்டிகேஸ்வரர் என்று பார்த்து விடுவோம்…

சோழநாட்டில் சேய்ஞ்ஞலூர் என்ற திருத்தலம் உள்ளது. இங்கு எச்சதத்தன்-பவித்திரை தம்பதியினர் வசித்தனர். இவர்களது மகன் விசாரசருமன். இவன் சிறு வயதிலேயே சிவபக்தி கொண்டவனாக வளர்ந்தான்.

பசுக்களை மேய்க்கும் தொழிலை மேற்கொண்டதால் பசுக்கள் இவனை தாங்கள் உயிராக கருதின. மாடு மேய்க்க செல்லும் இடத்தில் மணலில் சிவலிங்கம் வடிப்பது இவனது வழக்கம். மேய செல்லும் பசுக்கள் அதன்மேல் பாலை சுரந்து அபிஷேகம் செய்யும். இவ்வாறு சிவ சேவை செய்த பசுக்கள் வீட்டுக்கு வந்த பிறகும் தங்கள் எஜமானர்களுக்கும் தேவையான பாலை சுரந்து கொடுத்து வந்தன.

ஒருமுறை அந்த ஊர் இளைஞன் ஒருவன் சிவலிங்கம் மீது பசுக்கள் பால் சுரந்ததை பார்த்து விட்டான். அத்துடன், விசாரசருமன் அதை கண்டு கொள்ளாமல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி ஆனான். ஊருக்குள் சென்று நடந்த விவரத்தை தெரிவித்தான். மாடுகளின் உரிமையாளர்கள் இதுகுறித்து எச்சதத்தனிடம் சொல்லி, மகனை கண்டிக்கும்படி கூறினர்.

அவர் உண்மையை அறிய ஒருநாள் மாடு மேய்க்கும் இடத்துக்கு வந்து மறைந்து நின்று கவனித்தார். மாடுகளின் உரிமையாளர்கள் கூறியபடியே மண் லிங்கத்தின் மீது பசுக்கள் பாலை சொரிந்தன. விசாரசருமன், அந்த மணல் லிங்கத்தின் முன் ஆழ்ந்த தியானத்தில் இருந்தான்.

அதைப் பார்த்த எச்சதத்தனுக்கு கோபம் வந்து விட்டது. மகனை உதைத்து கண்டித்தார். மேலும், மணல் லிங்கத்தை காலால் மிதித்து உடைத்தும் விட்டார். இதனால் கோபம் அடைந்த அவரது மகன் விசாரசருமன், அவரது கால் மீது தன் கையில் இருந்த குச்சியை எறிந்தான். அது சிவன் அருளால் கோடரியாக மாறி அவரது காலை காயப்படுத்தியது.

அளவு கடந்த பக்தி காரணமாக தந்தையையே தாக்க துணிந்த அந்த அதி தீவிர பக்தன் முன்பு பார்வதி தேவியுடன் தோன்றினார் சிவன்.

எச்சதத்தனின் காயத்தை மறையும்படி செய்தவர், விசாரசருமனுக்கு சிவ கணங்களை நிர்வாகம் செய்ய சண்டிகேச பதவியை வழங்கினார். அதோடு, தனக்கு சூட்டப்படும் மாலை, நைவேத்யம் ஆகியவை அவருக்கே தினமும் வழங்கப்படும் எனவும் அருள்பாலித்தார்.

இதன்படி சிவனுக்கு அணிவித்த மாலையையே சண்டிகேஸ்வரருக்கும் அணிவிக்கும் பழக்கம் இருக்கிறது. சிவன் கோவிலுக்கு வருபவர்கள் சண்டிகேஸ்வரை வணங்காமல் சென்றால் அவர்கள் ஆலயத்துக்கு வந்த பலன் கிடைக்காது என்பது நம்பிக்கை.

சண்டிகேஸ்வரர் சிவ தியான நிலையில் இருப்பவர். இவர் முன் பலர் கை தட்டி வணங்கி சுற்றி வருகின்றனர். இவ்வாறு செய்தால் இவரது தியானம் கலைந்து விடும் என்பது ஐதீகம்.

அதனால் அவர் முன்பு கை தட்டி வணங்காமல் அமைதியாக வணங்குவதே சரியானது. சண்டிகேஸ்வரரை வணங்கினால் மன உறுதியும், ஆன்மிக பலமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

`மைக்ரோ சிப்’பில் ஒரு மருந்துக்கடை


விஞ்ஞான வளர்ச்சியும், தொழில்நுட்ப வளர்ச்சியும் மனித வாழ்க்கையை மேலும் மேலும் எளிமைப்படுத்திக்கொண்டே இருக்கின்றன. விளைவு, நேற்று வரை சிரமமாக இருந்த ஒரு விஷயம் இன்று மிகவும் சுலபமாகி விடுகிறது.

உதாரணமாக மருத்துவத்துறையை எடுத்துக்கொள்ளலாம். மருந்தே இல்லாத பல நோய்களுக்கு இன்று மருந்து கிடைக்கிறது. ஆனாலும், புதிது புதிதாக தோன்றும் நோய்கள் மருத்துவத்துறைக்கு பெரிய சவாலாக இருக்கின்றன. மேலும், கொடிய நோய்களுக்கான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அவற்றை சரியான அளவுகளில், வேளாவேளைக்கு தினமும் எடுத்துக்கொள்வது என்பது பல நோயாளிகளுக்கு பெரும் பிரச்சினையாகத்தான் இருக்கிறது.

நோயாளிகளின் இந்த தினசரி பிரச்சினையை தீர்க்க வந்துவிட்டது `மைக்ரோ சிப்பில் ஒரு மருந்துக்கடை’. அதாவது, `வயர்லஸ்’ முறையில் இயங்கும் மருந்து தாங்கிய மைக்ரோ சிப்!

அமெரிக்காவில் உள்ள எம்.ஐ.டி.யின் புற்றுநோய் ஆய்வு மையத்தின் பேராசிரியரான லாங்கர், சக ஆய்வாளரான பேராசிரியர் மைக்கேல் சிமாவுடன் இணைந்து, உடலுக் குள் மருந்துகளை செலுத்தும் திறனுள்ள மைக்ரோ சிப்பின் முதல் மாதிரியை கடந்த 1990-ம் ஆண்டுகளிலேயே உருவாக்கினார்.

உடலுக்குள் பொருத்தப்படக்கூடிய இந்த மைக்ரோ சிப், நீண்டகாலம் தொடர்ச்சியாக மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமுள்ள நோயாளிகளுக்கு பயனுள்ளது. வலி ஏற்படுத்தாத இந்த வயர்லெஸ் மைக்ரோ சிப் கருவிகளை உடலில் பொருத்திக்கொண்டு பட்டனை அவ்வப்போது தட்டினால் போதும். தேவையான மருந்துகளை, சரியான அளவுகளில், சரியான நேரத்தில் உடலுக்குள் செலுத்துவது மிகவும் சுலபம் என்கிறார் லாங்கர்!

ஆமாம், இந்த வயர்லெஸ் மைக்ரோசிப் எப்படி இயங்குகிறது?

உயிருள்ள திசுக்களில் இயங்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மைக்ரோசிப்பில் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட சிறு சிறு குழிகள் இருக்கின்றன. குண்டூசி முனை அளவுள்ள இக்குழிகளில் மருந்துகள் நிரப்பப்படும். பின்னர், மிக மிக மெல்லிய பிளாட்டினம் அல்லது டைட்டானியத்தால் ஆன தகட்டினால் மருந்து நிரப்பப்பட்ட குழிகள் மூடப்படும்.

புரோகிராம் செய்யப்பட்ட நேரங்கள் அல்லது நோயாளி கட்டளையிடும் போது, உடலுக்கு வெளியே உள்ள ரேடியோ அலைவரிசை கருவி ஒன்று உடலுக்குள்ளே இருக்கும் மருந்து தாங்கிய சிப்களுக்கு சமிக்ஞைகளை அனுப்பும். இதற்கு ஏற்ப மருந்துக்குழிகளின் மூடியை உருக்கும் அளவுக்கு வெப்பத்தை செலுத்தி, குழிகளிலுள்ள மருந்துகளை உடலுக்குள் செலுத்தும். இந்த குழிகள் ஒன்றன்பின் ஒன்றாக உருகி மருந்துகளை வெளியேற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மருந்துக்குழிகளை மூடியிருக்கும் உலோகம் நானோ அளவுகளில் இருப்பதால் அவை உடலில் நச்சுத்தன்மையை உருவாக்குவதில்லை. உடலுக்குள் இருந்துகொண்டு வயர்லெஸ் முறையில் இயங்கும், இந்த மருந்து செலுத்தும் இம்ப்ளான்ட் கருவி
யிலுள்ள மைக்ரோசிப், உடலுக்கு வெளியே இருக்கக் கூடிய ஒரு ரிசீவர் கருவியுடன் பிரத்தியேகமான ஒரு அலைவரிசையில் தொடர்பு கொள்கிறது. இதன்மூலம் மைக்ரோ சிப்பில் இருக்கும் தகவல்கள் அனைத்தையும் ரிசீவர் மூலமாக கம்ப்யூட்டர் மற்றும் ஸ்மார்ட் போன் கருவிகளுக்கு அப்லோட் செய்துகொண்டு பயன்படுத்திக்கொள்ளலாம்.

`ஆஸ்டியோபோரோசிஸ்’ என்றழைக்கப்படும் எலும்புருக்கி நோயால் பாதிக்கப்பட்டவர்களின் வயிற்றுக்குள் பொருத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்ட இந்த `மைக்ரோசிப் மருந்து கருவி’ 20 டோஸ் மருந்துகளை கொண்டிருந்தது. எலும்புருக்கி நோயாளிகள், இந்த மைக்ரோசிப்பை ஒரு வருடம் தங்கள் உடலில் பொருத்தியிருந்தனர். பரிசோதனையின் முடிவில், டென்மார்க்கில் மிகவும் பிரபலமாகிவிட்ட இந்த கருவி தங்கள் உடலில் இருந்ததே தெரியவில்லை என்று நோயாளிகள் கூறியது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த மைக்ரோசிப் மருந்து கருவியால் எந்தவிதமான பின்விளைவுகளும் ஏற்படவில்லை என்பது மகிழ்ச்சியான செய்தி. முக்கியமாக, இந்த மருந்துக்கருவியை பயன்படுத்துவதன்மூலம் மருந்துகளை எடுத்துக்கொள்ள மறந்து போவது அல்லது அலட்சியப்படுத்துவது போன்ற சில பிரச்சினைகளும் தவிர்க்கப்படுகின்றன.

மிகவும் சுவாரசியமாக, மருந்தினை சரியான வேளைகளில், சரியான அளவுகளில் செலுத்தும் இந்த மைக்ரோசிப் கருவியில் ஒன்றுக்கு மேற்பட்ட சென்சார்களை பொருத்துவதன்மூலம், இதனை ஒரு `நோய் அறியும்’ கருவியாகவும் மாற்ற முடியும்! ஆக, `ஒரு நோயை கண்டறிந்து, பின் அதற்கான மருந்தினை செலுத்தி, அந்த நோயை முற்றிலும் குணப்படுத்தி விடும் ஒப்பற்ற ஒரு கருவியாக உருவெடுக்கும் பிரகாசமான எதிர்காலம், இந்த மைக்ரோசிப் மருந்துக் கருவிக்கு உண்டு’ என்று நம்பிக்கையளிக்கிறார் பேராசிரியர் ராபர்ட் லாங்கர்!

முனைவர் பத்ம ஹரி

வாழ்க்கையை மாற்றப் போகும் புளூடூத் 4

வயர் இணைப்பு எதுவுமின்றி இணைப்பைத் தரும் புளுடூத் தொழில் நுட்பம், எப்படி நம் வாழ்வையே மாற்றும்? என்ற கேள்வி நம்மில் பலருக்கு எழலாம். அதுதான் உண்மை என அடித்துக் கூறுகிறார் புளுடூத் எஸ்.ஐ.ஜி. (Special Interest Group) குழுமத்தின் செயல் இயக்குநர் போலே. இந்த குழுமத்தில், புளுடூத் தொழில் நுட்பத்தில் இயங்கும் சாதனங்களைத் தயாரிக்கும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன.
புளுடூத் முதலில் நமக்கு அறிமுகமான போது, பைல் மற்றும் டிஜிட்டல் தகவல்கள் பரிமாற்றத்திற்கு மிக அருமையான வசதி என அனைவரும் பாராட்டினோம்; பயன் படுத்தினோம். பின்னர், இதில் பல பிரச்னைகளைச் சந்திக்க வேண்டி இருந்தது. தகவல் பரிமாற்றத்திற்கான சாதனங்கள் இணையாக இருந்து இணைப்பதில் சிக்கல், பாஸ்வேர்ட் அமைத்து இயக்குவதில் பிரச்னை, திடீரென தகவல் இணைப்பு அறுந்து போதல்,மற்றும் பிற உடனடியாகத் தீர்க்க இயலாத சிக்கல்களும் இருந்தன. இவை அனைத்தும் புளுடூத் 4 தொழில் நுட்பம் தீர்த்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சரி, எப்படி தீர்க்கும்? என்ன என்ன வகையில் இது முந்தைய தொழில் நுட்பத்தைக் காட்டிலும் கூடுதல் திறன் கொண்டது? புளுடூத் தொழில் நுட்பம் இயங்கும் தொலைவு அதே 300 அடியாக உள்ளது. புளுடூத் 2ஐக் காட்டிலும் பதிப்பு 3, சற்றுக் கூடுதல் வேகத்தில் டேட்டாவினைக் கடத்தியது. பதிப்பு 2.1 ன் வேகம் 2Mbps ஆக இருந்தது. பதிப்பு 3ன் வேகம் 26Mbps ஆக உள்ளது. இது வீடியோ ஸ்ட்ரீமிங் போன்ற பணிகளுக்கு மிகவும் உதவியது.
புளுடூத் 4 இவற்றைக் காட்டிலும் கூடுதல் திறன் கொண்டதாக இருக்கும். ஐந்திலிருந்து பத்து மடங்கு வேகக் கூடுதல் இருக்கும். அதிக நாட்கள் மின்திறன் தரும் பேட்டரியுடன் இயங்கும் திறன் கொண்டதாக இருக்கும். இதனால், ட்ரெட்மில் போன்ற, தனி நபர் உடல்நலன் கணக்கிடும் சாதனங்களில் இதன் செயல்பாடு நமக்கு மிக மிக உதவியாக இருக்கும்.
அடுத்ததாக, என்.எப்.சி. எனப்படும் அண்மைக் கள தகவல் பரிமாற்றம் (Near Field Communication) திறன் கொண்ட சிப்களின் செயல்பாட்டிற்கு இந்த புளுடூத் பதிப்பு 4 மிகவும் பயன்படும். புளுடூத் 4 இந்த தொழில் நுட்பம் கொண்ட போன்களுடன் எளிதில் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியும். லேப்டாப், மொபைல் போன் மற்றும் ரௌட்டர் போன்ற சாதனங்களின் இணைப்பு, புளுடூத் பதிப்பு 4 மூலம் அதிகத் திறன் கொண்டதாக அமையும். இந்த தொழில் நுட்பத்திற்கேற்ப வடிவமைக்கப்படும் சாதனங்கள் அனைத்தும், புளுடூத் பதிப்பு 2 மற்றும் 3 ஆகியவற்றையும் கையாளும். புளுடூத் 4 ஏற்கனவே Motorola_Droid_ Razr_Maxx ஆகிய மொபைல் போன்களில் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய தொழில் நுட்பத்திற்கு Bluetooth Smart Ready எனப் பெயர் இடப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு http://www.bluetooth.com/ Pages/SmartLogos.aspx என்ற முகவரியில் உள்ள தளத்தை அணுகவும்.

மூளைப் புற்றுநோய்க்கு எதிராக `வைட்டமின் சி’!

மூளைப் புற்றுநோயாளிகளின் புற்றுக்கட்டி மறைவுக்கு `வைட்டமின் சி’ காரணமாக இருப்பதைத் தாங்கள் கண்டுபிடித்திருப்பதாகக் கூறுகிறார்கள், விஞ்ஞானிகள். இந்தப் புதிய கண்டுபிடிப்பு, திறன்மிக்க புற்றுநோய் சிகிச்சைக்கு வழிவகுக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை.

ஒடாகோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தலைமையிலான ஒரு சர்வதேச விஞ்ஞானிகள் குழு இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்டது.

இவர்கள் கூறும்போது, `அதிக டோஸ் `வைட்டமின் சி’யானது புற்றுநோயாளிகளின் மூளைக் கட்டிச் செல்களை ரேடியேஷன் தெரபி மூலம் கொல்வதை எளிதாக்குகிறது என்கிறார்கள்.

ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வில், அதிக டோஸ் `வைட்டமின் சி’யும், ரேடியேஷனும் இணைந்து, `கிளியோபிளாஸ்டோமா மல்டிபார்ம்’ மூளைக் கட்டிகளில் இருந்து பிரிக்கப்பட்ட புற்றுநோய்ச் செல்களை எவ்வாறு பாதிக்கின்றன என்று கவனித்தனர். அப்போது நார்மல் செல்கள் எவ்வாறு நீடித்திருக்கின்றன என்றும் அறிந்தனர்.

அதாவது, அதிக டோஸ் வைட்டமின் சி தானாகவே புற்றுச் செல்களின் டி.என்.ஏ. சேதத்துக்கும், செல் இறப்புக்கும் காரணமாகிறது, ரேடியேஷனுக்கு சற்று முன்பாக வைட்டமின் சி டோஸ் கொடுக்கப்பட்டால் அதன் தாக்கம் இன்னும் நன்றாக இருக்கிறது.

இந்த ஆய்வில் ஈடுபட்ட முன்னணி ஆய்வாளரான டாக்டர் பேட்ரீஸ் ஹெர்ஸ்ட், `கிளியோபிளாஸ்டோமா மல்டிபார்ம்’ புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதும், அதன் முன்னேற்றத்தைக் கணிப்பதும் கடினம். காரணம், தீவிரத் தன்மை கொண்ட இந்தப் புற்றுநோய்ச் செல்கள் ரேடியேஷன் தெரபிக்கு கடுமையான எதிர்ப்புத் தன்மையை வெளிப்படுத்துகின்றன’ என்கிறார்.

அந்தவகையில், புதிய கண்டுபிடிப்பானது புற்றுநோய் மருத்துவர்களுக்குப் பெரிதும் நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.