Daily Archives: மார்ச் 25th, 2012

ஜெனரேட்டர் வாங்குவதற்கான மானியத் தொகையை மூன்று மடங்கு உயர்வு

மின்வெட்டால் தொழிற்சாலைகள் பாதிக்கப்படாமல் இருக்க, ஜெனரேட்டர் வாங்குவதற்கான மானியத் தொகையை மூன்று மடங்கு உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு, சிறு, குறு தொழிற்சாலை சங்கங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
மானிய வரம்பு ரூ.5 லட்சம்:மின்சாரத் தட்டுப்பாட்டால், வாரம் இரண்டு நாட்கள் மின்சார விடுமுறையும், 40 சதவீத மின்சாரப் பயன்பாடு கட்டுப்பாடும் அமலில் உள்ளதால், ஜெனரேட்டரைப் பயன்படுத்தி, தொழிற்சாலைகள் இயங்குகின்றன.சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகள் ஜெனரேட்டர் வாங்க, அதிக முதலீடு செய்ய முடியாமல் தவிக்கின்றன. அவர்களது தொழில் பாதிக்காத வண்ணம், ஜெனரேட்டர் வாங்குவதற்கான மானியத்தை, மூன்று மடங்கு உயர்த்தி, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களின் வளர்ச்சிக்காக, தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு, பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. மின் பற்றாக்குறையால், தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படாமல் இருக்க, மின்னாக்கிகளுக்கு அதிக அளவு மானியம் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, தற்போது பயன்படுத்தப்படும், 125 கே.வி.ஏ., திறன் கொண்ட மின்னாக்கிகள், சிறு, குறுந்தொழில்கள் உற்பத்திப் பணிக்கு போதுமானதாக இல்லை. அதனால், 320 கே.வி.ஏ., திறன் அளவுக்கு மின்னாக்கிகள் நிறுவவும், மானிய

வரம்பை, 1.5 லட்சம் ரூபாயிலிருந்து, 5 லட்சமாக உயர்த்தவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.இந்த சலுகைகள், 2008ம் ஆண்டு, 11ம் மாதம் முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும். இந்த சலுகையைப் பெற, ஏற்கனவே விண்ணப்பிக்காத நிறுவனங்களும் பயன் பெறும் வகையில், புதிதாக விண்ணப்பிக்க, மூன்று மாதம் கால அவகாசம் அளிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வரவேற்பு : முதல்வரின் அறிவிப்புக்கு, தமிழ்நாடு சிறு, குறுதொழிற்சாலைகள் அசோசியேஷன், “டான்ஸ்டியா’ வரவேற்பு தெரிவித்துள்ளது.
அதன் பொதுச் செயலர் ஜெயராஜன் கூறியதாவது:அதிக திறன் கொண்ட ஜெனரேட்டர்களுக்கும் மானியம் வழங்க வேண்டும்; மானியத் தொகையை உயர்த்த வேண்டும் என்ற, எங்கள் சங்கத்தின் கோரிக்கையை, தமிழக அரசு ஏற்றிருப்பதை வரவேற்கிறோம்.இந்த மானியம், சிறு, குறு தொழிற்சாலைகளுக்கு நல்ல பலனைத் தரும். அதே நேரம், மின்சார விடுமுறை நாள் தவிர, மற்ற நாட்களில், தடையற்ற மின்சாரம் தர, அரசு முன்வர வேண்டும்.இவ்வாறு ஜெயராஜன் கூறினார்.
சிறு, குறு தொழிற்சாலைகள் பாதுகாப்பு நலச்சங்கத் தலைவர் ஞானசம்பந்தன் கூறியதாவது:இந்த அறிவிப்பை, சிறு, குறு தொழிற்சாலைகள் இயக்குனரகம் சிறந்த முறையில் அமல்படுத்தி, உரிய முறையில் மானியம் கிடைக்க வழி செய்ய வேண்டும். தமிழக மின்வாரிய அதிகாரிகளும், தேவையற்ற இடையூறுகள் செய்யாமல், ஜெனரேட்டர் இயக்குவதற்குத் தேவையான அனுமதி மற்றும்

வசதிகளை வழங்க வேண்டும்.இவ்வாறு ஞானசம்பந்தன் கூறினார்.
மானியம் எங்குபெறலாம்?ஜெனரேட்டர் மானியத் திட்டம், கடந்த 2009, தி.மு.க., ஆட்சியில் அறிமுகமானது. இதில், 125 கே.வி.ஏ., வரையில் ஜெனரேட்டர் வாங்குவோருக்கு, 25 சதவீதத் தொகை, அதிகபட்சமாக, 1.5 லட்சம் ரூபாய் வரை மானியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு, தொழிற்சாலைகளுக்கு சரியான பலன் தராமல், பெயர் அளவிலேயே அமலானது. அதனால், தற்போது மானியத்தையும், ஜெனரேட்டர் திறனையும், மூன்று மடங்கு உயர்த்தி, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதால், இந்த திட்டம் தொழிற்சாலைகளுக்கு முழுமையாக பயன்படும் என, தொழில் துறையினர் நம்பிக்கை அடைந்துள்ளனர். அந்தந்த மாவட்ட தொழில் துறை மையத்தின் பொது மேலாளர் அலுவலகங்கள் மூலம், இந்த மானியத்தை பெற்றுக் கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன

குழந்தைகளுக்கு வார்த்தைகள் புரியும்!

உங்கள் வீட்டில் குழந்தை இருக்கிறதா? அப்படியானால் கவனமாகப் பேசுங்கள். நீங்கள் கூறும் வார்த்தைகளின் அர்த்தங்களை குழந்தை புரிந்துகொள்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

அமெரிக்காவின் பெல்சில்வேனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அந்த ஆய்வாளர்கள், ஆறு மாதம் ஆகும் குழந்தைகள் கூட உணவுகள், உடல் பாகங்களுக்கான வார்த்தைகளைப் புரிந்துகொள்கின்றன என்று கூறுகிறார்கள். குறிப்பிட்ட விஷயங்களுக்கான வார்த்தைகளைப் பேசத் தொடங்குவதற்கு முன்பே குழந்தைகளுக்கு இந்தப் புரிதல் வந்துவிடுகிறது.

குழந்தைக்கு இந்த வார்த்தை புரியுமா என்று யோசிக்காமல் அவர்கள் முன் இயல்பாகப் பேசிவந்தால், பின்னாளில் அவர்களின் மொழித்திறன் சிறப்பாக அமையும் என்பது ஆய்வாளர்கள் கூறும் தகவல்.

பொதுவாக, குழந்தைகள் ஒரு வயதாகும்போதுதான் வார்த்தைகளைக் கிரகித்துக்கொள்ள ஆரம்பிக்கின்றன என்று கருதப்பட்டு வருகிறது. அப்போதும்கூட, குழந்தைகள் தங்கள் தாய்மொழியின் ஒலி மூலங்களைத்தான் புரிந்துகொள்கின்றனவே தவிர, அர்த்தங்களை அல்ல என்றும் எண்ணப்பட்டு வருகிறது.

ஆனால் புதிய ஆய்வுக்குத் தலைமை வகித்த மனோவியல் நிபுணர்கள் எலிகா பெர்கெல்சன் மற்றும் டேனியல் ஸ்விங்லி கூறுகையில், `குழந்தையைக் கவனித்துக்கொள் பவர், `ஆப்பிள் எங்கே இருக்கிறது?’ என்ற கேள்வியைத் திரும்பத் திரும்பக் கேட்கும்போது அதை நோக்கிக் குழந்தையின் பார்வை திரும்புகிறது’ என்கிறார்கள்.

இதுதொடர்பான ஆய்வுக்கு, 6 முதல் 9 மாத வயதுள்ள 33 குழந்தைகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. அவர்களுக்கு முன்பு கணினித் திரையில் பல்வேறு பொருட்கள் காண்பிக்கப்பட்டன. ஆனால் ஒரு குறிப்பிட்ட பொருளைக் கூறியதும் அதை நோக்கிக் குழந்தைகள் பார்வையைத் திருப்பின.

ஆறு முதல் ஒன்பது மாத வயதுக் குழந்தைகள், மற்ற படங்களை விட, சத்தமாகக் கூறப்பட்ட பொருட்களின் படங்களின் மீதே தங்கள் பார்வையை நிலைத்திருந்தன. இது, குறிப்பிட்ட வார்த்தைகள், குறிப்பிட்ட பொருட்களுடன் தொடர்புடையவை என்று குழந்தைகள் புரிந்துகொண்டிருக்கின்றன என்பதைக் காட்டுகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

“இந்த வயதுக் குழந்தைகளும் இதைப் போல வார்த்தைகளைப் புரிந்துகொள்ள முடியும் என்று நிரூபிக்கப்பட்டிருப்பது இதுதான் முதல்முறை. `மம்மி’, `டாடி’ போன்ற வார்த்தைகளைக் குழந்தைகள் சீக்கிரமாகவே புரிந்துகொள்கின்றன என்று ஏற்கனவே சில ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. ஆனால் பல்வேறு வகையான வார்த்தைகளையும் குழந்தைகள் புரிந்துகொள்கின்றன என்று எங்கள் ஆய்வின் மூலம்தான் முதன்முதலாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது” என்கிறார் ஆய்வாளர் ஸ்விங்லி.

கூகுள் தேடலுக்கு சில டிப்ஸ்

கூகுள் தேடல் இஞ்சினில் நாளுக்கு நாள் ஏதாவது சிறப்பு வசதிகள் தரப்படுகின்றன. மக்களுக்கு முதன் முதலில் பிரபலமான தன் தேடல் சாதனத்தின் நற்பெயரை கூகுள் தக்க வைக்க ஏதேனும் வசதிகளைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. கூகுள் 64.6% பேரிடமும், அடுத்த இடத்தில் உள்ள யாஹூ 19.3% பேரிடமும் உள்ளது என்றாலும், கூகுள் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. இதுவரை வந்த கூகுள் கூடுதல் வசதிகள் நாம் மனதில் வைத்துப் பயன்படுத்தக் கூடிய சில கூறுகளை இங்கு காணலாம்.
வழக்கமான தேடுதல் விடைகளுடன், கூகுள் அப்போதைய நேரத்தைக் கூறும் திறன் கொண்டது. நாம் இருக்கும் இடத்தின் நேரம் மட்டுமல்ல; உலகின் எந்த ஊரின் நேரத்தையும் காட்டும். எடுத்துக்காட்டாக time madurai என்று கொடுத்தால் மதுரை நேரத்தையும், time tokyo என்று கொடுத்தால் அதே நேரத்தில் டோக்கியோ நகரின் நேரத்தையும் காட்டும். இது மட்டுமின்றி அந்த ஊரில் நிலவும் சீதோஷ்ண நிலையையும் காட்டும். weather delhi எனக் கொடுத்தால் அந்த ஊரின் சீதோஷ்ணநிலை மற்றும் வர இருக்கும் சீதோஷ்ணநிலை மாற்றங்கள் குறித்தும் தகவல் கிடைக்கும்.
கூகுள் தேடல் விண்டோவினை, கால்குலேட்டர் விண்டோவாகவும் பயன்படுத்தலாம். சயின்டிபிக் கால்குலேட்டராகப் பயன்படுத்தக்கூடிய வகையில் இது தரப்படுத்தப்பட்டுள்ளது. 94/36*(sqrt 34)^3 என்று கொடுத்தாலும் சரியான விடை கிடைக்கும். சில கணக்கிடும் அடையாளங்களுக்குச் சொற்களையும் தரலாம். எடுத்துக்காட்டாக 96 divided by 36 times (sqrt34)^3 என்றும் தரலாம்.
சில அலகுகளுக்கிடையே மாற்றங்களையும் இதில் கண்டறியலாம். mm to inch, Fahrenheit to Celsius எனக் கொடுத்து யூனிட் மாற்றத்தையும் அறியலாம்.
ஒரு சிலர் அலுத்துக் கொள்ளலாம். நாம் எதனைக் கொடுத்தாலும், சரியாக அதனை மட்டும் கொடுக்காமல், சார்ந்த அனைத்தையும் தருகிறதே என்று பலர் இது குறித்து சொல்வதைக் கேட்கலாம். நம் தேடல்களைக் குறிப்பிட்ட ஒன்றின் அடிப்படையில் மட்டும் கிடைக்கும்படி தேடலை அமைக்கலாம். அவற்றில் சில:
+ கொடுத்தால் சில குறிப்பிட்ட சொற்களைக் குறிப்பாகத் தேடும்படி அமைக்கலாம். எ.கா.––netbook +11.6 +ion- (மைனஸ் அடையாளம்) கொடுத்தால் குறிப்பிடும் சொற்களைத் தவிர்த்து தேடுக என்று பொருள். எ.கா. – gaming keyboard logitech
* இதனை கம்ப்யூட்டர் சார்ந்த சொற்களுடன் குறிப்பிடுவார்கள். அதாவது தெரியாத சொற்களுக்கான அடையாளம். traditional * food என்று கொடுத்தால் (*) இந்த அடையாளம் உள்ள இடத்தில் வேறு எந்த சொல்லையும் சேர்த்து தேடிக் கொடு என்று பொருள்.
~ இந்த அடையாளம் கொடுத்தால் அடுத்துள்ள சொல் வழக்கமாக எந்த சொற்களுடன் ஜோடியாகப் பயன் படுத்தப்படுமோ அவை எல்லாவற்றையும் தேடி எடுத்துக்கொடு என்று கட்டளை அமைக்கிறோம். எ.கா. first computer build ~help எனக் கொடுத்தால் அது அனைத்து வகையான ஹெல்ப் வகைகளும் பட்டியலிடப்படும்.
.. குறிப்பிட்ட எண் வரிசை தொடர்ச்சி யாக வேண்டுமா? எடுத்துக் காட்டாக விலை ரேஞ்ச், தேதி ஆகியவற்றைக் குறிப்பிடலாம். எ.கா. – halo pc $0..$15
ஏதேனும் ஒரு சொல், முதல் எழுத்துக்கள் அடங்கிய சுருக்குச் சொல் போன்றவற்றின் சிறப்பு விளக்கம் பெற ஞீஞுஞூடிணஞு என்ற சொல்லைக் கொடுத்துப் பின் பொருள் தேடும் சொல்லைக் கொடுக் கலாம். எடுத்துக்காட்டாக define algorithm / define WHO என்று கொடுக்கலாம்.
குறிப்பிட்ட பைல் வகைகளை மட்டும் தேடிக் கொடுக்கும்படி filetype: என்ற சொல் கொண்டு தேடலை அமைக்கலாம். எடுத்துக்காட்டாக filetype: pdf எனத் தரலாம்.
ஓர் இணைய தளத்தினைத் தேடக் கட்டளை கொடுக்கையில் அதே பொருளில் உள்ள மற்ற தளங்களைக் காட்டும்படியும் தேடலை அமைக்கலாம். எடுத்துக்காட்டாக related:sciencetv.com என அமைக்கலாம்.
site: என்ற சொல் கொடுத்து குறிப்பிட்ட தளத்தில் மட்டும் ஒன்றைத் தேடும்படி அமைக்கலாம். எடுத்துக்காட்டாக mango site:vegetables.com எனக் கொடுத்து அந்த தளத்தில் மட்டும் இந்த சொல் எங்கு உள்ளது எனத் தேடலாம்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆப்பரேட்டர் அடையாளங்களை இøணைத்தும் கொடுத்துத் தேடலாம். எடுத்துக்காட்டாக +microsoft +yahoo ~talks “Matthew DeCarlo” site:techspot.com எனக் கொடுக்கலாம்.

சிக்கன் கட்லெட்


தேவையான பொருட்கள்

சிக்கன் – 1/2 கிலோ

உருளைக்கிழங்கு – 1/4 கிலோ

பச்சைமிளகாய் – 2 நறுக்கியது

வெங்காயம் – ஒரு கையளவு

ரொட்டித் தூள் – 25 கிராம்

முட்டை – 1

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – பொரிப்பதற்கு

மைதா – 2 டீஸ்பூன்

மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்

செய்முறை

* சிக்கனை தோல் நீக்கி எலும்பில்லாமல் வாங்கி சுத்தம் செய்யவும், பிறகு சிக்கனை வேக வைத்துக் கொள்ளவும். ஆறியதும் மிக்சியில் ஒரு சுற்று சுற்றிக் கொள்ளவும்.

* உருளைக் கிழங்கை வேக வைத்து நன்கு மசித்துக் கொள்ளவும்.

* சிக்கன், உருளைக்கிழங்கு, வெங்காயம், பச்சைமிளகாய், தேவைக்கேற்ப உப்பு சேர்த்து பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டி கனமாகத் தட்டவும்.

* இதை அடித்து வைத்த முட்டையில் முக்கி ரொட்டித் தூளில் போட்டுப் புரட்டி, காய்ந்த எண்ணெயில் போட்டு இருபுறமும் வெந்ததும் எடுத்து சாப்பிடவும்.

குறிப்பு

* இதே உருண்டையை மைதா, மிளகுத்தூள், உப்பு சேர்த்து மிக்ஸ் செய்து திக்காக கரைத்து முக்கி ரொட்டித் தூளில் புரட்டி எண்ணெயில் பொரிக்கலாம்.

* இதே முறைப்படி மட்டன் கட்லெட்டும், அசைவத்திற்குப் பதிலாக காய்கறிகள் சேர்த்து வெஜிடபிள் கட்லெட்டும் தயார் செய்யலாம்.