Daily Archives: மார்ச் 26th, 2012

மாற்றம் செய்தால் வலி குறையும்

பணியாற்றும் தளத்தின் அல்லது மேசையின் மீது (இடுப்பளவு உயரத்தில் இருந்தால்) சாய்ந்தவாறு நிற்பது, மூட்டுகளுக்கு ஓய்வு அளிக்கும். இத்தகைய ஏற்பாடும், நவீன சமையலறைகளில் நின்ற நிலையில் பணியாற்றும் மகளிருக்கும் மிகவும் உகந்ததாக இருக்கும்.

அன்றாட வாழ்க்கை முறைகளிலும், பழக்கவழக்கங்களிலும், சிற்சில எளிய மாறுதல்களை செய்து கொள்வதன் மூலம், மூட்டு வாதத்திற்காக செய்து கொண்ட சிகிச்சைகளின் முழு பலன் மங்காமலும், வலி – உபாதைகள் மீண்டும் தலை தூக்காமலும், தற்காத்துக் கொள்ள முடியும்.
இதில், மிக முக்கியமான மூன்று விஷயங்களைப் பற்றி, இப்போது பார்ப்போம். இம்மூன்று விஷயங்களைத் தவிர்ப்பதன் மூலம், மூட்டு அழற்சி மீண்டும் ஏற்படுவது தவிர்க்கப்பட்டு, நோயாளி, தன் அன்றாட அலுவல்களை தங்கு தடையின்றி மேற்கொள்ள முடியும்.
முதலில், முறையான பிசியோதெரபி சிகிச்சைகளை மேற்கொண்டு வலி, வீக்கம், உபாதைகளைக் குறைத்துக் கொண்டபின், பின்வரும் மூன்று குறிப்புகளை கருத்தில் கொள்ள வேண்டும்.
ஒரே இடத்தில் நீண்ட நேரம் நின்று பணிபுரிதல் இது முழங்கால் மூட்டுகளுக்கு மட்டுமின்றி, முதுகெலும்பு மூட்டுகளுக்கும் ஒவ்வாத ஒரு செயல். கூடுமானவரை இத்தகைய பணிகளை அமர்ந்து கொண்டு செய்ய முயற்சிக்கவும். தவிர்க்க இயலாத சூழ்நிலையில், பின்வரும் மாற்று ஏற்பாட்டை செய்து கொள்ளலாம்.
நிற்கும் இடத்தில், 7 – 10 அங்குல உயரத்தில், ஒரு சிறு நாற்காலி அல்லது அதே உயரமுள்ள பலகை அல்லது ஒரு சிமென்ட் தளம் அமைத்து, அதன் மீது பாதங்களை, ஒன்று மாற்றி ஒன்றாக வைத்து நிற்கலாம். அதிகபட்சம், 4 நிமிடங்களுக்கு ஒருமுறை கால்களை மாற்றி நிற்க வேண்டும். இந்த முறையில், மூட்டுகளில் ஏற்படும் அழுத்தம் ஓரளவிற்கு குறையும்.
மேலும், பணியாற்றும் தளத்தின் அல்லது மேசையின் மீது (இடுப்பளவு உயரத்தில் இருந்தால்) சாய்ந்தவாறு நிற்பது, மூட்டுகளுக்கு ஓய்வு அளிக்கும். இத்தகைய ஏற்பாடும், நவீன சமையலறைகளில் நின்ற நிலையில் பணியாற்றும் மகளிருக்கும், செவிலியர்கள், தேநீர் விடுதி ஊழியர்கள் மற்றும் இயந்திர ஓட்டுனர்கள் போன்ற, நின்ற நிலையில் பணிபுரிவோருக்கு மிகவும் உகந்ததாக இருக்கும்.
இதில் பரிதாபத்திற்குரியவர்கள், பந்தோபஸ்து பணியில் ஈடுபட்டிருக்கக் கூடிய காவல்துறையினர் மட்டுமே. இவர்கள் தேவையானால், மூட்டு உறைகளை உபயோகிக்கலாம். மாடிப் படிகளில் ஏறி இறங்குதல் மூட்டு பிரச்னை உள்ளவர்கள், இதை முழுவதுமாக தவிர்க்க வேண்டும். மனித முழங்கால் மூட்டுகளின் அமைப்பு, செயல்பாடுகளை ஆராயும் போது, அவை சமதளத்தில் எவ்வளவு வேண்டுமானாலும் நடக்கும்படியான அமைப்பைப் பெற்றுள்ளன.
ஆனால், படிகள் ஏறி இறங்குவதால் ஏற்படும் பாதிப்பை தாங்கும் திறன் மிகவும் குறைவே. தவிர்க்க இயலாத சூழ்நிலையில் நோயாளிகள், பின்வரும் அறிவுரையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.படி ஏறும் போது, வலி இல்லாத காலை, முதலில் மேல் படியில் வைத்து, ஒவ்வொரு படியாக ஏற வேண்டும். இறங்கும் போது, வலியுள்ள காலை, முதலில் கீழுள்ள படியில் வைத்து இறங்க வேண்டும். மேலும் படியோர கைப்பிடியை பிடித்து ஏறி இறங்குதல் நலம்.
இவற்றால் மூட்டுகளில் விழும் பளு, வெகுவாக குறைந்து, மூட்டு அழற்சி ஏற்படுவதும் பெருமளவு தவிர்க்கப்படும்.இந்திய வகை கழிவறைகளை உபயோகிப்பதை தவிர்ப்பதால், கால்களை மடக்கி நீட்டும் பழக்கம் போய் விடும் என, பெரும்பாலான நோயாளிகள் கவலைப்படுகின்றனர்.
அவ்வாறு மூட்டுகளை மடக்கி நீட்டுதல் அவசியம் தான். எனினும், கழிவறையில் அமரும் நிலையை பார்க்கும் போது, கால்கள் ஊன்றியிருக்கும் நிலையில், அதாவது பாரம் முழுவதும் சுமக்கும் நிலையில், முழுவதுமாக மடக்க வேண்டியுள்ளதால், மூட்டுகள் அதிகளவில் பிரயாசைப்பட நேருவதாலும், எலும்புகளுக்கு இடைப்பட்ட உராய்வு அதிகரிப்பதாலும் மூட்டுகளில் வலி – வீக்கமும், தேய்மானமும் அதிகரிக்க ஏதுவாகும்.
எனவே, இத்தகைய இந்திய வகை கழிவறைகளை உபயோகிக்கும் போது, வலியை உணர்பவர்கள், கூடுமானவரை மேற்கத்திய வகை கழிவறைகளை உபயோகிப்பதே சாலச் சிறந்தது. மேற்கத்திய கழிவறை வசதியில்லாதவர்கள், இதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட, மலஜலம் கழிக்கும் ஆசனங்களை வாங்கி உபயோகிக்கலாம். மேற்சொன்ன, இந்த மூன்று விஷயங்களை மனதில் கொண்டு செயல்படுவதன் மூலம், மூட்டு வாதம் உள்ளவர்கள், மீண்டும் வலி வேதனை ஏற்படுவதை பெருமளவு தவிர்க்கலாம்.
டாக்டர் த.செந்தில்குமார் ராஜா,
எஸ்.கே.எம்.மருத்துவமனை,
தாம்பரம், சென்னை.

இதுதான் ரகசியம்..

ல்லா பெற்றோர்களுக்கும் இப்போது வந்து விட்ட இயல்பான உணர்வு, குழந்தைகளைப் பற்றிய டென்ஷன்! அதுவும் 13, 14 வயது பிள்ளைகளாக இருந்துவிட்டால், இதுவரை பாக்கியமாக கருதப்பட்ட அவைகள் இப்போது பாரமாக கனக்கத் தொடங்கிவிட்டது பெற்றோருக்கு!

வீட்டில் பெற்றோர்களை சுற்றிச்சுற்றி வந்த அந்த பிள்ளைகள், இந்த பருவத்தில்தான் வெளி நண்பர்களிடத்தில் நெருங்கி, உறவைத் துளிர்விட வைக்கிறார்கள். வெளி உலகத்தைப் பார்த்து பிரமிப்பார்கள். முன்பு தெரியாத விஷயங்களையும், முன்பு பெறாத அனுபவங்களையும் நண்பர்கள் மூலம் பெற்று, நண்பர்களே உயிர், நண்பர்களே உலகம் என்று கருதுவார்கள்.

இந்த சூழ்நிலையில் நண்பர்களிடத்தில் ஏற்படும் சிறு மனஸ்தாபமோ, பள்ளிக்கூடத்தில் நடந்த கசப்பான சம்பவங்களோ பிள்ளைகளுக்கு மனோரீதியான பாதிப்பை ஏற்படுத்தும். அந்த பருவத்தில் உடலில் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் பருவ குளறுபடிகளும் அவர்கள் மனதை குழப்புவதால் எது சரி, எது தப்பு என்று தெரியாமல் பிள்ளைகள் தவிப்பார்கள்.

பருவகாலம் தரும் தவிப்பு பிள்ளைகளின் பேச்சு, செயலில் வெளிப்படும். அப்போது பெற்றோர், `நேற்று வரை இவள் நாம் என்ன சொன்னாலும் சரிப்பா.. சரிம்மா என்று தலையை ஆட்டினாளே! இன்று இதுதான் என் கருத்து.. இதுதான் எனக்கு பிடிக்கும்.. எனக்கு பிடிக்காதவற்றை ஏன் செய்கிறீர்கள்.. என்றெல்லாம் கேட்கிறாளே’ என்று நினைக்கிறார்கள். சில நேரங்களில் அதை பெற்றோர்கள் தாங்கிக்கொள்ள முடியாமல் அடுத்தவர்கள் முன்னால் வைத்துகூட மகளை (மகனை) தட்டிக்கேட்கிறார்கள். கத்தி ஆர்ப்பாட்டம் செய்துவிடுகிறார்கள்.

பிள்ளைகளை தொடர்ந்து வார்த்தைகளால் கொத்திக்கொத்தி `நீ ரொம்பவும் மாறிவிட்டாய். நாங்கள் சொல்வதை கேட்பதில்லை. உன் நண்பர்கள் சொல்வதைத்தான் கேட்கிறாய்’ என்றெல்லாம் பேசிவிட்டு, அந்த நண்பரைப் பற்றியும் தவறாக சித்தரிக்கிறார்கள்.

இப்படி பெற்றோர்கள் நடந்துகொள்வதற்கு என்ன காரணம்? தங்கள் குழந்தையிடம் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சி மாற்றத்தை பெற்றோர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, என்பதுதான் காரணம்.

நாம் சொல்வதை மட்டுமே கேட்டு, நம் பின்னாலே நடந்துகொண்டிருந்த பாலகனை நமக்கு பிடித்திருந்தது. அவனே பெரியவனாகி கருத்தில், செயலில் சற்று வலிமையை காட்டும் போது நமக்கு பிடிக்காமல் போய்விடுகிறது. அப்போது அவன் மீது அதுவரை காட்டிய அன்பில் இருந்த தூய்மைபோய், எதிர்பார்ப்பு வந்துவிடுகிறது.

பெற்றோர்கள் எதிர்பார்ப்பையும், எதிர்ப்பையும் கைவிட்டு, அவன் மீது நம்பிக்கையும் அன்பும் வையுங்கள். குறைவற்ற அன்பை அவன் மீது கொட்டினால், `இன்று அவனுக்கு என்ன பிரச்சினை? ஏன் இப்படி நடந்துகொண்டான்?’ என்று அவனிடம் வாஞ்சையோடு நடந்துகொள்ள முன்வருவீர்கள். அப்போது அவனுக்குள், `நாம் பெற்றோரிடம் பக்குவமின்றி கடுமையாக நடந்துகொண்டோமோ’ என்ற எண்ணம் வரும். அவன் மனதில் இருப்பதை எல்லாம் பெற்றோரிடம் கொட்டிவிடுவான்.

நீங்கள் உங்கள் பிள்ளைகள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள் என்பதை உறுதி செய்தால், பிள்ளைகள் கசப்பானதாக இருந்தாலும், கடுமையானதாக இருந்தாலும் மறைக் காமல் உண்மைகளை உங்களிடம் சொல்லிவிடுவார்கள். அவர்கள், உங்களிடம் உண்மை களை சொல்லும் நிலை ஏற்படும்போது, அவர்கள் உங்களை முழுமையாக நம்புகிறார்கள் என்று அர்த்தம் கொண்டுவிடலாம். அப்போது உங்களுக்கு பிள்ளைகளால் டென்ஷனே ஏற்படாது.

கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க…

இன்றைய பெண்கள் கருவுறும்போதே குழந்தையோடு சில கேள்விகளையும் சேர்த்தே சுமக்கிறார்கள். அவற்றுள் முக்கியமானது, ‘கருச்சிதைவு அபாயம்’  ஒரு பெண் தாயாகும் விஷயம் மிக அற்புதமானது. பலவித கனவுகளுடன் தனது கருவை, தாயானவள் நேசிக்கத் தொடங்குகிறாள். ஆனால் விதிவசத்தால் எல்லா பெண்களாலுமே குழந்தையைப் பெற்றெடுக்க முடிவதில்லை. சிலரால், சில காரணங்களால் கருவைச் சுமக்க முடியாமல் போகிறது. அந்தக் கருவானது குழந்தையாக முழு உருவத்தை அடையும் முன்பே, அதாவது 28 வாரங்களுக்குள் தானாகவோ அல்லது மருத்துவ முறையிலோ தாயை விட்டுப் பிரியும் நிகழ்வைத்தான் ‘கருச்சிதைவு’ என்கிறோம்.

பெண்களுக்கு அடிக்கடி கருச்சிதைவு ஏற்பட பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

1. கரு, கருப்பையில் சரியான முறையில் தங்காமல் இருத்தல்

2. கரு, சரியான வளர்ச்சி பெறாமல் இருத்தல்

3. கருப்பையின் வாய் திறந்திருத்தல்

இத்தகைய பிரச்சனைகளை சரிசெய்ய தகுந்த மருத்துவரை அணுகுவது மிகவும் அவசியம்.

ஆனால் சில பெண்களுக்கு சில காரணங்களால் மருத்துவர்களே கருச்சிதைவை பரிந்துரைக்கின்றனர்.

ஒரு பெண்ணுக்கு மருத்துவ முறையில் கருச்சிதைவு செய்வதை  M.T.P. (Medical Termination of Pregnancy) என்கிறோம். சில பல காரணங்களால் தாயின் வயிற்றிலிருக்கும் குழந்தையின் உடலுறுப்புகள் சரியாக வேலை செய்யாமல், சமயத்தில் சரிப்படுத்த முடியாத நிலையில் காணப்படும். இதுபோன்ற சூழலிலும், தாய் சாப்பிட்ட மருந்துகளால் கருவான குழந்தைக்கு கிட்னி, மூளை, இதயம் போன்ற முக்கிய உறுப்புகள் பாதிக்கப்பட்ட சூழலிலும்,  M.கூ.க.  சிபாரிசு செய்யப்படுகிறது. இன்னும் சில நேரங்களிலும் இந்த முறையில் கருச்சிதைவு செய்யப்படுகிறது.

கருச்சிதைவை பரிந்துரைக்கக் காரணங்கள்

·  மரபணுக்கள் தொடர்பான நோயால் குழந்தை தாக்கப்பட்டிருக்கும்போது…

· பிளசண்டாவில் ஏற்படும் பிரச்னைகளால்…

· பனிக்குடத்தில் தண்ணீர் அதிகப்பட்டு விடும்போது…

· ஒன்றுக்கு மேற்பட்ட சிக்கலான கருக்கள் வளரும்போது…

· வைரல் தொற்றுகளால் தாய் தாக்கப்படும் போது…

· மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களால் தாய் பீடிக்கப்படும்போது…

· மனஅழுத்த நோய்களால் தாய் அவதியுறும் போது…

கருச்சிதைவு ஏற்பட பொதுவான காரணங்கள்

· கருப்பையில் கரு சரியாக உருவாகாத பட்சத்தில் கருச்சிதைவு தானாகவே ஏற்பட்டு விடும்.

· கருப்பையின் பொசிஷன் சில பெண்களுக்கு ஏடாகூடமாக அமைந்திருப்பதால் கருச்சிதைவு தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

· இரட்டைக் கருப்பை இருப்பதனாலும் கருச்சிதைவு  ஏற்பட்டு விடுகிறது.

· கருப்பையில் ஃபைபிராய்டு கட்டிகள் தோன்றுவதால் கருச்சிதைவு ஏற்படுகிறது.

· தொற்று நோய்களால் பாதிக்கப்படும்போது கருச்சிதைவு ஏற்படுகிறது.

· சில குறிப்பிட்ட நோய்களுக்கு (கேன்சர், இதய பாதிப்பு) எடுத்துக் கொள்ளும் மருந்துகள் கூட கருச்சிதைவை அதிகப்படுத்துகின்றன.

· மனநலக் கோளாறுகள் கருச்சிதைவில் கொண்டுபோய் விட்டு விடுகின்றன.

· நாகரிக மோகத்தால் பெண்கள் புகை பிடிப்பதும், மது அருந்துவதும், புகையிலை போன்ற போதை வஸ்துகளை எடுத்துக் கொள்வதும் கருச்சிதைவை வலிந்து அழைக்கும் காரணிகள்.

· பாதுகாப்பற்ற, சீரற்ற உணவு முறைகளால் கருச்சிதைவு உண்டாக நேரிடுகிறது.

கருச்சிதைவு அபாயத்தைத் தவிர்ப்பது எப்படி?

· அதிக களைப்பு தரக்கூடிய பணிகளைப் பார்க்காதிருத்தல் நல்லது. கூடவே நல்ல தூக்கமும், ஓய்வும் தேவை.

· கூடிய மட்டும் நோய்கள் அண்டாமல் பார்த்துக்கொள்வது நல்லது. மீறி நோய் தாக்கும் பட்சத்தில் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றே மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் சுய வைத்தியம் செய்யக் கூடாது.

· குறைந்தது கர்ப்பம் தரித்த மூன்று மாதத்திற்காவது பயணங்களைத் தவிர்ப்பது நலம்.

· நல்ல ஊட்டச்சத்து மிகுந்த, போஷாக்கான உணவு முறையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.

· உயர் ரத்தஅழுத்தம், நீரிழிவு நோய் உள்ளவர்கள் அதனை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியம்.

· முதல் மூன்று மாதங்களில் கருச்சிதைவு ஆபத்து அதிகமென்பதால் எடை அதிகமான பொருட்களைத் தூக்குதல் கூடாது. வீணாக உடலை வருத்திக்கொள்ளக் கூடாது. குறிப்பாக, மன இறுக்கமின்றி இருக்கவேண்டும்.

இந்த வழிமுறைகளை விழிப்புணர்ச்சியோடு தாய்மார்கள் ஒழுங்காகக் கடைப்பிடித்தாலே போதும், கருச்சிதைவை முடிந்தவரை தடுத்து விடலாம். முன்னெச்சரிக்கை ஒன்றுதான் எப்போதும் நம்மை இன்னல்களிலிருந்து காப்பாற்றும். கர்ப்பகால மகளிருக்கும் அதுதான் முக்கிய தேவையாக இருக்கிறது.

நன்றி- ஹெல்த் சாய்ஸ்

பிரசவத்திற்குப் பிறகு…

பிரசவத்திற்குப் பிறகு பெண்களின் வயிறு பெரிதாகக் காணப்படும். பிள்ளைப் பெற்றால் இப்படித்தான் ஆகும்… என்று அவர்களுக்கு அறிவுரை சொல்லாமல், சில உடற்பயிற்சிகளை செய்யச் சொன்னால் அந்த பிரச்சினையை எளிதில் போக்கிவிடலாம்.

அதற்கு என்ன செய்யலாம்?

* மல்லாந்து படுத்துக் கொண்டு முதலில் வலது காலை மட்டும் மேலே தூக்க வேண்டும். பிறகு இடது காலை தூக்க வேண்டும். அதன் பிறகு இரண்டு கால்களையும் மேலே உயர்த்த வேண்டும். இதுபோல் தினமும் பத்து முறை செய்யலாம். இப்படிச் செய்வதால் உப்பிக் காணப்படும் வயிற்றின் உப்புசம் குறையும்.

* நின்றுக் கொண்டு, இரண்டு கை விரல்களும் கால் விரல்களை தொடும் அளவுக்கு தினமும் பத்து முறை குனியலாம்.

* காதைப் பிடித்துக்கொண்டு தோப்புக்கரணம் போடுவது போல் பத்து முறை கீழே உட்கார்ந்து எழுந்திருக்கலாம்.

* நாற்காலியில் அமர்ந்து கொண்டு சமையல் வேலைகளை செய்யாமல் கீழே உட்கார்ந்து வேலை செய்வது நல்லது.

* குழந்தை பிறந்த ஐந்து மாதத்திற்குப் பிறகு தினமும் நடைப்பயிற்சி செய்து வந்தாலும் வயிற்று உப்புசம் சரியாகும்.