இதுதான் ரகசியம்..

ல்லா பெற்றோர்களுக்கும் இப்போது வந்து விட்ட இயல்பான உணர்வு, குழந்தைகளைப் பற்றிய டென்ஷன்! அதுவும் 13, 14 வயது பிள்ளைகளாக இருந்துவிட்டால், இதுவரை பாக்கியமாக கருதப்பட்ட அவைகள் இப்போது பாரமாக கனக்கத் தொடங்கிவிட்டது பெற்றோருக்கு!

வீட்டில் பெற்றோர்களை சுற்றிச்சுற்றி வந்த அந்த பிள்ளைகள், இந்த பருவத்தில்தான் வெளி நண்பர்களிடத்தில் நெருங்கி, உறவைத் துளிர்விட வைக்கிறார்கள். வெளி உலகத்தைப் பார்த்து பிரமிப்பார்கள். முன்பு தெரியாத விஷயங்களையும், முன்பு பெறாத அனுபவங்களையும் நண்பர்கள் மூலம் பெற்று, நண்பர்களே உயிர், நண்பர்களே உலகம் என்று கருதுவார்கள்.

இந்த சூழ்நிலையில் நண்பர்களிடத்தில் ஏற்படும் சிறு மனஸ்தாபமோ, பள்ளிக்கூடத்தில் நடந்த கசப்பான சம்பவங்களோ பிள்ளைகளுக்கு மனோரீதியான பாதிப்பை ஏற்படுத்தும். அந்த பருவத்தில் உடலில் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் பருவ குளறுபடிகளும் அவர்கள் மனதை குழப்புவதால் எது சரி, எது தப்பு என்று தெரியாமல் பிள்ளைகள் தவிப்பார்கள்.

பருவகாலம் தரும் தவிப்பு பிள்ளைகளின் பேச்சு, செயலில் வெளிப்படும். அப்போது பெற்றோர், `நேற்று வரை இவள் நாம் என்ன சொன்னாலும் சரிப்பா.. சரிம்மா என்று தலையை ஆட்டினாளே! இன்று இதுதான் என் கருத்து.. இதுதான் எனக்கு பிடிக்கும்.. எனக்கு பிடிக்காதவற்றை ஏன் செய்கிறீர்கள்.. என்றெல்லாம் கேட்கிறாளே’ என்று நினைக்கிறார்கள். சில நேரங்களில் அதை பெற்றோர்கள் தாங்கிக்கொள்ள முடியாமல் அடுத்தவர்கள் முன்னால் வைத்துகூட மகளை (மகனை) தட்டிக்கேட்கிறார்கள். கத்தி ஆர்ப்பாட்டம் செய்துவிடுகிறார்கள்.

பிள்ளைகளை தொடர்ந்து வார்த்தைகளால் கொத்திக்கொத்தி `நீ ரொம்பவும் மாறிவிட்டாய். நாங்கள் சொல்வதை கேட்பதில்லை. உன் நண்பர்கள் சொல்வதைத்தான் கேட்கிறாய்’ என்றெல்லாம் பேசிவிட்டு, அந்த நண்பரைப் பற்றியும் தவறாக சித்தரிக்கிறார்கள்.

இப்படி பெற்றோர்கள் நடந்துகொள்வதற்கு என்ன காரணம்? தங்கள் குழந்தையிடம் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சி மாற்றத்தை பெற்றோர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, என்பதுதான் காரணம்.

நாம் சொல்வதை மட்டுமே கேட்டு, நம் பின்னாலே நடந்துகொண்டிருந்த பாலகனை நமக்கு பிடித்திருந்தது. அவனே பெரியவனாகி கருத்தில், செயலில் சற்று வலிமையை காட்டும் போது நமக்கு பிடிக்காமல் போய்விடுகிறது. அப்போது அவன் மீது அதுவரை காட்டிய அன்பில் இருந்த தூய்மைபோய், எதிர்பார்ப்பு வந்துவிடுகிறது.

பெற்றோர்கள் எதிர்பார்ப்பையும், எதிர்ப்பையும் கைவிட்டு, அவன் மீது நம்பிக்கையும் அன்பும் வையுங்கள். குறைவற்ற அன்பை அவன் மீது கொட்டினால், `இன்று அவனுக்கு என்ன பிரச்சினை? ஏன் இப்படி நடந்துகொண்டான்?’ என்று அவனிடம் வாஞ்சையோடு நடந்துகொள்ள முன்வருவீர்கள். அப்போது அவனுக்குள், `நாம் பெற்றோரிடம் பக்குவமின்றி கடுமையாக நடந்துகொண்டோமோ’ என்ற எண்ணம் வரும். அவன் மனதில் இருப்பதை எல்லாம் பெற்றோரிடம் கொட்டிவிடுவான்.

நீங்கள் உங்கள் பிள்ளைகள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள் என்பதை உறுதி செய்தால், பிள்ளைகள் கசப்பானதாக இருந்தாலும், கடுமையானதாக இருந்தாலும் மறைக் காமல் உண்மைகளை உங்களிடம் சொல்லிவிடுவார்கள். அவர்கள், உங்களிடம் உண்மை களை சொல்லும் நிலை ஏற்படும்போது, அவர்கள் உங்களை முழுமையாக நம்புகிறார்கள் என்று அர்த்தம் கொண்டுவிடலாம். அப்போது உங்களுக்கு பிள்ளைகளால் டென்ஷனே ஏற்படாது.

%d bloggers like this: