நல்லதையே செய்யுங்கள்!

நமக்கு முன் ஜென்மமும் தெரியாது; அடுத்த ஜென்மமும் தெரியாது. இந்த ஜென்மத்தில் நாம் அனுபவிப்பது தான் தெரியும். இதுதான் மனிதனின் நிலை. அதனால், இந்த ஜென்மாவிலேயே நல்ல காரியங்களைச் செய்து விட வேண்டும். ஒரு பணக்காரர் இருந்தார். பெரிய பங்களா கட்டி வசித்து வந்தார். அவருக்குப் பின், அவருடைய பிள்ளை அந்த பங்களாவில் இருந்தான்.
மீண்டும் மனிதனாகப் பிறந்தார், பங்களா கட்டிய பணக்காரர். பூர்வ ஜென்ம ஞாபகம் இருந்ததால், தான் கட்டிய அதே பங்களா வாசலில் வந்து உட்கார்ந்தார். உள்ளே இருந்த பிள்ளை, வாசல் பக்கம் எட்டிப் பார்த்தான். “யாரைய்யா… இங்கே உட்கார்ந்திருப்பது? எழுந்து போய்யா…’ என்று விரட்டினான்.
அதற்கு அவர், “நான் தாண்டா உன் தகப்பன். உனக்காக இந்த பங்களாவை கட்டி வெச்சேன். என்னையே நீ விரட்டுகிறாயே…’ என்றார். அதற்கு பையன், “யோவ்… இப்ப நீ எழுந்து போறயா; இல்லே, போலீசை கூப்பிடட்டுமா?’ என்றான். “டேய்… இது நான் கட்டின பங்களாடா… நான் இங்கே உட்காரக் கூடாதா?’ என்றார். விடவில்லை பையன். “எழுந்து போன்னா, போக மாட்டியா?’ என்று சொல்லி, ஒரு சொம்பு தண்ணீரை அவர் மீது கொட்டினான்.
“சே… இது என்ன உலகம். ஜென்மா மாறியதும் உறவும், பாசமும் போய் விடுகிறதே…’ என்று சொல்லியபடி எழுந்து போனார் அவர். அதனால்தான், மனிதர்களுக்கு பூர்வஜென்ம ஞாபகம் இல்லாமல் வைத்திருக்கிறான் பகவான். அதேபோல், அடுத்த ஜென்மம் என்னவென்றும் தெரியாமல் வைத்திருக்கிறான். இந்த இரண்டும் தெரிந்து விட்டால் மக்களும், உலகமும் எப்படியோ மாறி விடுமல்லவா? அதனால், இந்த ஜென்மாவில் அனுபவிக்கும் சுக – துக்கங்கள் இந்த ஜென்மாவுடன் தீர்ந்தன. புண்ணியசாலிகளாக இருந்தால், அடுத்த ஜென்மாவில் சுகமாக இருப்பர்; பாவிகளாக இருந்தால், அடுத்த ஜென்மாவில் கஷ்டங்களை அனுபவிப்பர்.
இது, அவனவன் செய்கைகளுக்கு ஏற்ப ஏற்படுவது. “பகவானே… நான் என்ன பாவம் செய்தேனோ, இப்படி கஷ்டப்படுகிறேனே…’ என்று அழுவதில் பயனில்லை. பூர்வஜென்ம பாவத்தை அனுபவித்தே ஆக வேண்டும். பாவம் செய்யும் போது சந்தோஷமாக இருக்கும்; பலனை அனுபவிக்கும் போது, துக்கமாகத் தான் இருக்கும்.
அதனால், இந்த ஜென்மாவிலும் நல்ல காரியங்களையே செய்து, பகவானை வழிபட்டு வந்தால், அடுத்த பிறவியாவது நல்ல பிறவியாக இருக்கும். மனதில் நல்ல எண்ணங்கள் இருந்தால், நல்ல காரியம் செய்வான். நல்ல எண்ணம் இல்லாவிட்டால், புத்தி நல்ல வழியில் செல்லாது. அதனால் தான் நல்லவர்களோடு சேர்ந்து, நல்ல வழியில் நடக்க வேண்டும்.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 4,054 other followers

%d bloggers like this: