எதிர்கால பயோ கம்ப்யூட்டரை உருவாக்கும் காந்த பாக்டீரியா!

மனிதனின் தினசரி தேவைகளை பூர்த்தி செய்து கொண்டிருக்கும் கம்ப்யூட்டர், ஆரம்ப காலங்களில் ஒரு பெரிய அறையையே அடைத்துக்கொள்ளும் அளவுக்கு மிகப்பெரியதாக இருந்தது. காலப்போக்கில் அது கையடக்க அளவுகளில் வந்துவிட்டது.

ஆனால் தொழில்நுட்பம் மற்றும் புதுமை மீதுள்ள தாகம் காரணமாக கம்ப்யூட்டர் பாகங்கள் மேலும் மேலும் சுருங்கிக்கொண்டே போகின்றன. விளைவு, `நானோ ஹார்டு ட்ரைவ்’ என்றழைக்கப்படும் கம்ப்யூட்டரின் மிகச்சிறிய பாகங்களை உற்பத்தி செய்வதற்கு நிறைய பணம் தேவைப்படுகிறது. இதே நிலை தொடர்ந்து நீடித்தால், மனிதனின் அத்தியாவசியத் தேவைகளுள் ஒன்றாகிப் போன கம்ப்யூட்டர் பலருக்கு எட்டாக் கனியாகி விடும்.

இத்தகைய இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க ஒரு புது வழியை கண்டுபிடித்து நம் வயிற்றில் பாலை வார்த்திருக்கிறார்கள் இங்கிலாந்தின் லீட்ஸ் மற்றும் ஜப்பானின் டோக்கியோ வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள். காந்த பாக்டீரியாக்கள் என்றழைக்கப்படும் ஒருவகை பாக்டீரியாக்களை கொண்டு, தற்போதுள்ள கணினியின் நுண்ணிய பாகங்கள் அல்லது எதிர்கால பயோ கம்ப்யூட்டரை கூட உருவாக்க முடியும் என்பதுதான் அந்த புதிய வழி.

இயற்கையாகவே காந்த சக்தி உள்ள ஒரு வகை பாக்டீரியாக்களை காந்த பாக்டீரியாக்கள் என்கிறார்கள். மாக்னெட்டோ ஸ்பைரில்லம் மாக்னெட்டிகம் என்பது காந்த பாக்டீரியா வகையைச் சேர்ந்தவை. ஆழமான நீர் நிலைகளில் வாழக்கூடிய இந்த பாக்டீரியா, தன் காந்த சக்தியை பயன்படுத்தி, பூமியின் காந்த மண்டல கோடுகளில் பிராண வாயுவைத் தேடி மேலும் கீழுமாக நீச்சல் அடிக்கின்றன.

இந்த காந்த பாக்டீரியா இரும்பை உண்ணும் போது அதன் உடலுக்குள் இருக்கும் சிறப்பு புரதங்கள் `மாக்னடைட்’ எனும் கனிமத்தின் மிகச்சிறிய கற்களை உடலுக்குள் உற்பத்தி செய்கின்றன. இந்த பாக்டீரியாக்களுக்கு இரும்பை உணவாகக் கொடுப்பதன் மூலமாகவும், அவை குழு சேரும் விதத்தை மாற்றுவதன் மூலமாகவும், அவற்றிலிருந்து மிகச்சிறிய காந்தங்களை உற்பத்தி செய்ய முடியும் என்று நினைக்கிறார்கள் ஆய்வாளர்கள். இந்த மிகச்சிறிய காந்தங்கள் எதிர்கால ஹார்டு ட்ரைவுகளின் உதிரி பாகங்களாக செயல்படும் என்றும் இவர்கள் நம்புகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மிகச்சிறிய காந்தங்களை உருவாக்கி, மெமரி கருவிகளாக செயல்படும் வண்ணம் அவற்றை வடிவமைப்பது என்பது மிகக் கடினமான வேலை. ஆனால் காந்த பாக்டீரியாக்களையும், அவற்றின் உடலிலுள்ள மாக்னடைட் உற்பத்தி செய்யும் புரதங்களையும், மெமரி கருவிகளாக செயல்படும் காந்தங்களை உற்பத்தி செய்யும் கடினமாக வேலையைச் செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம். இதன்மூலம் கச்சிதமாக வடிவமைக்கப்பட்ட காந்தங்களை உற்பத்தி செய்வது மிகவும் சுலபமாகி விடுகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

அதுமட்டுமில்லாமல், உயிரணு படலங்கள் வழியாக தகவல்களை கடத்திச் செல்லும் திறனுள்ள மின் கம்பிகள் அல்லது வயர்களையும் உற்பத்தி செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறது இந்த ஆய்வுக்குழு. இதன்மூலம், உயிரணுக்களால் ஆன ஒரு கம்ப்யூட்டருக்குள் நானோ அளவிலான தகவல் பரிமாற்றம் நடைபெறச் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மின் கம்பிகள், உயிரணு படலம் வழியாக மின்சாரத்தை கடத்திச் செல்லும் திறனுடைய நானோ அளவிலான குழாய்கள் போன்றவை என்பதால், இவை உயிரணுக்களால் ஆன பயோ கம்ப்யூட்டருக்கு முற்றிலும் உகந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

பயோ கம்ப்யூட்டர் உற்பத்திக்கு உகந்த காந்த பாக்டீரியாக்களும், மிகச்சிறிய மின் கம்பிகளும் மின் எந்திர சாதனங்களுக்கும், உயிரியல் எந்திரங்கள் அல்லது சாதனங்களுக்கும் இடையிலான இடைவெளியை குறைக்கின்றன என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

உதாரணமாக, உயிர்களுக்கு உகந்த அல்லது பயோ கம்பாட்டிபுள் கம்ப்யூட்டர்கள், எதிர்காலத்தில் மனித அறுவை சிகிச்சைகளுக்கு உதவக்கூடும். அல்லது மனித உடல்களுக்கு உள்ளேயே நிரந்தரமாக வாழவும் கூடும். அதாவது இதயத்தை இயக்கும் பேஸ் மேக்கர்கள் அல்லது இதயத்துக்கு மாற்றாக உடலுக்குள் பொருத்தப்படும் செயற்கை இதயங்கள் போல.

தற்போதுள்ள மருத்துவ கருவிகள் உடலுக்கு ஒவ்வாத உலோகங்களால் ஆனவை என்பதால், உயிர் காக்கும் மருத்துவ சிகிச்சைகளுக்கு உதவக்கூடிய எண்ணற்ற மருத்துவ கருவிகள் சிறிது காலத்துக்குப்பின் பயனற்றுப் போகின்றன. ஏனென்றால், அவற்றிலிருக்கும் உடலுக்கு ஒவ்வாத உலோகங்கள் ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்தை தாண்டிய பிறகு உடல் பாகங்களின் செயல்பாட்டுக்கு தடையாகவும், அவற்றை சேதப்படுத்தும் வேதியியல் பொருட்களாகவும் மாறிவிடுகின்றன.

இந்த முக்கியமான மருத்துவ பிரச்சினைக்கு, காந்த பாக்டீரியாக்களை கொண்டு உருவாக்கப்படும் பயோ கம்ப்யூட்டர்கள் ஒரு சிறந்த தீர்வாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

நன்றி-முனைவர் பத்மஹரி

One response

  1. Thanks.. Admin.. Its a good information worth of time.. Thanks again.. Keep Up the good work

Follow

Get every new post delivered to your Inbox.

Join 4,048 other followers

%d bloggers like this: