Daily Archives: ஜூலை 5th, 2012

“கடவுள் துகள்’ ரகசியம்

பிரபஞ்சம் உருவான வரலாறை ஆய்வு செய்து வரும் விஞ்ஞானிகள், ஆய்வின் முக்கியமான முன்னேற்றமாக “கடவுளின் அணுத்துகள்” என அழைக்கப்படும் “ஹிக்ஸ் போசன்’ என்ற பொருளை கண்டுபிடித்துள்ளனர்.

பிக்பேங்:”பிக்பேங்’ என்ற பிரளய வெடிப்புக்கு பின் இந்த பேரண்டம் உருவானது என்று கூறப்படுகிறது. இந்த வெடிப்பு நிகழ்ந்த பொழுது அணுக்களுக்கு எடை இல்லை. ஆனால் இந்த அணுக்களுக்கு, “ஹிக்ஸ் போசன்’ என்ற கட்டத்தை கடந்த பின் தான் நிறை கிடைக்கிறது. முதலில், ஹிக்ஸ் போசனை கண்டுபிடிக்கும் முயற்சியை அமெரிக்கா தொடங்கியது, சரியான பலன் கிடைக்காததால் ஆராய்ச்சி கைவிடப்பட்டது.

ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம் சோதனையை தொடங்கியது. இதற்காக செயற்கையாக பெரிய ஆட்ரான் மோதுவி என்னும் ரட்சத ஆய்வுக் கூடத்தில் நியூட்ரான் – புரோட்டான்களை மோதவிட்டனர். வெடித்து சிதறிய செயற்கை பிரளயத்தில் ஹிக்ஸ் போசனை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். “ஸ்டாண்ட் மாடல்’ என்ற தியரியின் படி, ஹிக்ஸ் போசானுக்கு 125 கிகா எலக்ட்ரான் வோல்ட் இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. இது பேரண்டத்தின் பெரும் பகுதியை அடைத்திருக்கிறது என்றும் நம்பப்படுகிறது. இத்துகளால் பதிக்கப்படாதாது போட்டான்கள் மட்டுமே. மற்ற அணுக்கள் இத்துகளால் மட்டுமே நிறையை பெறுகின்றன.

தற்போது இந்த ஆராய்ச்சியில் 125 கிகா எடை கொண்ட துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஹிக்ஸ் போசானாகத்தன் இருக்க வேண்டும் என்கின்றனர் விஞ்ஞானிகள். இக்கண்டுபிடிப்பு வெறும் ஆரம்ப கட்டம் தான். விஞ்ஞானிகள் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.

ரெடிமேட் இதய உயிரணுக்களை கொடுக்கிறது புதிய ஸ்டெம் செல் ஆய்வு

ஒவ்வொரு வருடமும் இதய நோய்கள் பல லட்சம் உயிர்களை பறித்துக்கொள்கின்றன. அதேசமயம், இதய நோய்களுக்கான சிகிச்சைகள் மற்றும் மருந்துகளைக் கண்டறியும் ஆய்வு முயற்சிகளுக்காக பல ஆயிரம் கோடிகள் ஒருபுறம் செலவாகிக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனாலும் இதுவரை இதய நோய்களுக்கான முழுமையான தீர்வு ஒன்றை காண முடியவில்லை.

இதயம் துடிப்பதற்கு காரணமான `கார்டியோ மயோசைட்’ உயிரணுக்களை இதய நோய்கள் பாதிக்கின்றன. விளைவு, கார்டியோ மயோசைட் உயிரணுக்கள் இறந்து போகின்றன. இதனால் இதயத்தின் வேலையான ரத்த ஓட்டம் தடைபடுகிறது. இறுதியாக மாரடைப்பு ஏற்பட்டு இறப்பு நிகழ்கிறது.

இதனை தடுக்க அல்லது தவிர்க்க இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று, இதய நோய்கள் எப்படி ஏற்படுகின்றன என்பதை பல்வேறு ஆய்வுகள் மூலம் கண்டறிந்து, அதற்கான மருந்துகள் மற்றும் சிகிச்சைகளை உருவாக்குவது. மற்றொன்று, பாதிப்படைந்த அல்லது இறந்துபோன கார்டியோ மயோசைட் உயிரணுக்களுக்கு மாற்றாக புதிய உயிரணுக்களை இதயத்துக்குள் பொருத்தி மீண்டும் அதனை இயங்கச் செய்வது. ஆனால் இந்த இரண்டு வழிகளுக்குமே மாற்று கார்டியோ மயோசைட் உயிரணுக்கள் அவசியம்.

இந்த பிரச்சினைக்கு செயற்கை ஸ்டெம் செல்கள் மூலம் ஒரு தீர்வு கண்டறியப்பட்டது. அதாவது, செயற்கை ஸ்டெம் செல்களில்இருந்து இதய உயிரணுக்களான கார்டியோ மயோசைட்கள் உற்பத்தி செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டன. ஆனால் இந்த முயற்சியில் உள்ள பல்வேறு சிக்கல்கள் காரணமாக முழுமையான வெற்றி கிட்டவில்லை என்பதுதான் துரதிஷ்டம்.

உதாரணமாக, பல்வேறு வகையான வளர் ஊக்கிகள் மற்றும் புரதங்கள் கொண்டு, செயற்கை ஸ்டெம் செல்கள் கார்டியோ மயோசைட்களாக மாற்றப்பட்டாலும், இறுதியில் 30 சதவீதம் கார்டியோ மயோசைட்களே உற்பத்தியாகின்றன. மேலும், இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் கார்டியோ மயோசைட்கள், ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருப்பதும் இதிலுள்ள ஒரு முக்கியமான பிரச்சினை.

இதுபோன்ற சிக்கல்கள் காரணமாக, இதய நோய்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதும், கார்டியோ மயோசைட் மாற்று அறுவை சிகிச்சை செய்வதும் இதுவரை முழுமையாக சாத்தியப்படவில்லை.

ஆனால், `கவலை வேண்டாம், இனியெல்லாம் சுகமே’ என்று சொல்லாமல் சொல்கிறார் அமெரிக்காவின் விஸ்கான்சின் மேடிசன் பல்கலைக்கழக பேராசிரியர் ஷான் பாலிசெக்.

அதற்கு காரணம், அவருடைய புதிய கண்டுபிடிப்பான, ஸ்டெம் செல்களில்இருந்து ரெடிமேட் கார்டியோ மயோசைட்களை உற்பத்தி செய்யும் சுலபமான, விலை குறைவான தொழில்நுட்ப உத்திதான்.

ஸ்டெம் செல் ஆய்வு என்பது ஒரு காஸ்ட்லியான சமாச்சாரம் மட்டுமல்லாது, மிக மிக சர்ச்சையானதும் கூட. ஏனென்றால், மனித சிசு ஸ்டெம் செல்களை ஆய்வுகளுக்காக பயன்படுத்துவது பல நாடுகளில் தடை செய்யப்பட்டு உள்ளது. ஆனால் ஒரு நோயாளியின் ஸ்டெம் செல்களைக் கொண்டு அவருடைய நோயை குணப்படுத்துவதற்கான ஆய்வுகள் மற்றும் சிகிச்சைகளை செய்து கொள்ள அனுமதி உண்டு.

இத்தகைய சூழலில், ஒரு நோயாளியின் ஸ்டெம் செல்களை எடுத்து, அவற்றை சோதனைக்கூடத்தில் வைத்து இயற்கையான கார்டியோ மயோசைட்களைப் போன்று செயல்படும் திறனுள்ள இதய உயிரணுக்களாக மாற்றியிருப்பதுதான், இந்த புதிய ஸ்டெம் செல் உத்தியின் விசேஷமே என்கிறார் பேராசிரியர் ஷான் பாலிசெக்.

ஸ்டெம் செல்களிலுள்ள `விண்ட்’ எனும் ஒரு குறிப்பிட்ட ரசாயன சமிக்ஞையை, இரு வகையான வேதியியல் பொருட்களைக் கொண்டு குறிப்பிட்ட கால புள்ளிகளில் நிறுத்தி, பின் மீண்டும் இயங்கச் செய்வதன் மூலமே ஸ்டெம் செல்கள் கார்டியோ மயோசைட்களாக உருமாறுகின்றனவாம்.

இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் சுமார் 80 சதவீதம் கார்டியோ மயோசைட்களை சுலபமாகவும், குறைவான செலவிலும் உற்பத்தி செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சுலபமாக உற்பத்தி செய்யப்படக் கூடிய இந்த கார்டியோ மயோசைட்கள், இதய நோய்களுக்கான எண்ணற்ற புதிய மருந்துகளை பரிசோதிக்கவும், பழுதடைந்த இதயத்திலுள்ள செயலிழந்த கார்டியோ மயோசைட்களுக்கான மாற்று உயிரணுக்களாகவும் பெரிதும் உதவுகின்றன என்கிறார்கள் இதய வல்லுனர்கள்.

இம்மாதிரியான மருத்துவ முன்னேற்றங்களை பார்க்கும் போது எதிர்காலத்தில், `கார்டியோ மயோசைட் வாங்கலையோ, கார்டியோ மயோசைட்டு’ என்று தெருவில் கூவிக் கூவி விற்றுக்கொண்டு வரும் அளவுக்கு இதய உயிரணுக்கள் மலிவாக கிடைக் கும் போலிருக்கிறது என்றே நினைக்கத் தோன்று கிறது.

6 ஆயிரம் ஆண்டு மரம்!

ஆறாயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய மரங்கள் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் காணப்படுகின்றன. `பிரிசில்கோன்’ எனப்படும் இம்மரங்கள் கடல் மட்டத்துக்கு ஒன்பதாயிரம் அடிக்கு மேல்தான் வளர்கின்றன.

மெதுசலா என்று பெயரிடப்பட்டுள்ள ஒரு மரம் 4 ஆயிரத்து 600 ஆண்டுகளாக உள்ளது. 4 ஆயிரத்து 900 வருடங்களாக இருக் கும் மற்றொரு மரம் கடந்த 1964-ம் ஆண்டு ஆராய்ச்சிக்காக வெட்டப்பட்டது.

உலகின் மிகப் பெரிய மரமும், உயரமான மரமும் இங்குதான் உள்ளன. பெரிய மரத்தின் அடிமட்டச் சுற்றளவு 101 அடி. உயரம் 272 அடி.

உயரமான மரம் 366 அடி அளவுக்குக் கிடுகிடுவென்று வளர்ந்திருக்கிறது.

காலம் மாறினால் காதலும் மாறுமா?

கண்ணோடு காண்பதெல்லாம் காதலாகி விடாது. பார்த்த மாத்திரத்தில் வந்து விடுவது காதலும் இல்லை. `சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை, தந்துவிட்டேன் என்னை…’ என்று கவிஞர்கள் உருகி உருகிப் பாடியதெல்லாம் இன்றைய காதலர்களுக்குப் பொருந்தவே பொருந்தாது.

இன்றைய தலைமுறை முதல் பார்வையை பெரும்பாலும் `இவர் எப்படி’ என்பதை எடை போட மட்டுமே பயன்படுத்திக் கொள்கிறார்கள். அடுத்தடுத்த தற்செயலான, அல்லது தற்செயல் மாதிரியான திட்டமிட்ட சந்திப்புகள் அவர்களிடம் ஒருவித பிடிப்பை ஏற்படுத்தலாம். இதில் பிடித்தாலும், பிடிக்காத மாதிரி நடிப்பவர்கள் பெண்கள் தான். இதனால் தான் ஆண்கள் தங்கள் காதலை சொல்ல அத்தனை அலைச்சல்களுக்கு ஆளாகிறார்கள். அதற்குள் பல இரவுகள் தூக்கம் தொலைக்கிறார்கள். பாலிருந்தும் பழமிருந்தும் பசியாற மறக்கிறார்கள்.

சரி, இருக்கட்டும். இப்படியெல்லாம் போராடி ஒருவழியாக காதல் மகுடத்தை கைப்பற்றி விட்டார்கள் என்றே வைத்துக் கொள்வோம். இந்தக் காதலை கல்யாணம் வரை கொண்டு போக எத்தனை பேரால் முடிகிறது? சின்னச் சின்ன ஊடல்கள், கொஞ்சம் கோபம் என்று காதல் காலத்தை கார்காலமாய் நகர்த்துகிறவர்களுக்கு மத்தியில், நிஜமாகவே சண்டை போட்டு காதலை அவசரமாய் கல்லறைக்கு அனுப்பி விட்டு அதேவேகத்தில் இன்னொரு வரை தங்கள் வாழ்க்கைத் துணையாக்கிக் கொள்கிறவர்களும் இருக்கவே செய்கி றார்கள். அதுவரை எதுவுமே நடக்காதது போல் புது வாழ்வு காணத் தொடங்கி விடுகிறார்கள்.

தேவதாஸ் கால காதல்கள் அப்போதெல்லாம் `அடைந்தால் மகாதேவி… இல்லையேல் மரணதேவி’ என்பதாக மட்டுமே இருந்தன. இதனால் தான் `உலகே மாயம் வாழ்வே மாயம்’ பாட்டு அன்றைய காதலர்களின் அமுதகீதமாக தொடர்ந்தது.

ஆனால் இன்று? பார்க்கிறார்கள். பழகுகிறார்கள். காதலாகிறார்கள். கல்யாணம் வரை வருவதற்குள் கருத்து வேறுபாடு வந்து விட்டால் காதலுக்கு `பை…பை…’ சொல்லிப் போய் விடுகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் காதலைப் பொறுத்தவரையில் `அடைந்தால் மகாதேவி, இல்லையேல் மல்லிகாதேவி’ ரகம். `இன்னொரு பெண்ணே இல்லாத உலகில்தானே இருந்த ஒரே ஒரு காதலிக்காக நீ வாட வேண்டும்’ என்று யாரோ ஒரு சந்தர்ப்பக் காதலன் எப்போதோ சொன்னதை தங்களுக்காகவே சொன்னதாக எடுத்துக்கொண்டு அடுத்த காதல் அல்லது கல்யாணத்திற்குள் போய் விடுகிறார்கள்.

இப்படிப்பட்டவர்கள் மறுபடியும் பழைய காதலி அல்லது காதலரை எங்காவது சந்திக்க நேர்ந்தால் கூட `ஹாய்’ சொல்லி இரண்டொரு வார்த்தை பேசும் அளவுக்கும் தங்கள் இயல்பாக்கிக் கொண்டிருப்பார்கள்.

எப்படிப்பட்ட ஆண்களை பெண்களுக்குப் பிடிக்கிறது?

முடிந்தவரை முன்கதைச் சுருக்கம் கேட்காத, அழகை மறைமுகமாக வர்ணிக்கிற ஆண்கள் எளிதில் பெண்களை கவர்ந்து விடுகிறார்கள். காதலி கல்லூரியில் படிப்பவர் என்றால், `பள்ளி நாட்களில் யாரையாவது காதலித்தது உண்டா?’ என்று கேட்கிற காதலனை அவளுக்குப் பிடிக்காது. இவன் சந்தேகப் பிராணி என்பதாக அப்போதே முடிவு செய்து அவன் மீதான பிடிப்பையும் அப்போதே விலக்கிக் கொண்டு விடுகிறாள். ஆண்கள் பற்றிய பெண்கள் கணிப்பில், தங்கள் விருப்பத்துக்குரியவன் தன்னை நேசித்த இதயத்தில் இன்னொரு பெண்ணுக்கு எந்த விதத்திலும் இடம் கொடுத்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள். இதில் மட்டும் எல்லாக் காலத்திலும் பெண்கள் ஒரே மாதிரி இருக்கிறார்கள்.

காதலை பொழுதுபோக்காக வைத்துக் கொள்பவர்கள் இரு தரப்பிலும் தான் உண்டு. அதற்காக காதலே பொழுதுபோக்காக இருந்து விடாது என்பதை நிறைவேறாத காதலுக் காக இப்போதும் உயிரை விடும்காதலர்கள் நிரூபித்துக் கொண்டு தானிருக்கிறார்கள். அதுமாதிரி அற்ப விஷயத்துகாக காதலை கட்செய்பவர்களும் இப்போது அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் வருத்தமான உண்மை.

ஒரு இளைஞனிடம் இன்னொரு இளைஞன் மெரினா கடற்கரையில் இப்படி விசாரித்துக் கொண்டிருந்தான். “உங்க காதல் கட் ஆயிட்டது போலிருக்கே? என்ன காரணம்?”

அடுத்தவன் சொன்னான்: “மிஸ்டு கால் கொடுத்து கொடுத்து என்னை பேச வைத்தே என் பேங்க் பேலன்ஸ் பூராத்தையும் காலி பண்ணிடறா…”

வேர்ட் ஸ்பெல் செக்கர்

எம்.எஸ். ஆபீஸ் வேர்ட் தொகுப்பில் தரப்பட்டுள்ள ஸ்பெல் செக்கர், நாம் ஆங்கிலச் சொற்களை அமைக்கையில் ஏற்படும் எழுத்துப் பிழைகளைச் சுட்டிக் காட்டி, அதற்கான சரியான சொல் தீர்வும் தருகிறது. ஆம், அதிலென்ன சந்தேகம் என்கிறீர்களா! கீழ்க்காணும் வாக்கியத்தை, அது தரப்பட்டுள்ள வகையிலேயே டைப் செய்து, ஸ்பெல் செக் செய்திடுங்கள்.
5his s3ntence c0mpletely pass3s the sp3llchecker in M8crosoft W0rd
தவறுகள் திருத்தப்படாமலேயே இருக்கும். அதெப்படி என்று வியப்பவர்கள் கீழே தந்துள்ள குறிப்பைப் படிக்கலாம்.
இந்த தவறு வேர்ட் 2010ல் நடைபெறுகிறது. மேலே தரப்பட்டுள்ள வாக்கியத்தினை டைப் செய்திடுகையில், வழக்கமாக தவற்றினைச் சுட்டிக் காட்டும், சிகப்பு நெளிவு கோடுகள் காட்டப்படுவதில்லை. ஏனென்றால், சொற்களிடையே எண்கள் இருந்தால், அதனை ஸ்பெல் செக்கர் கண்டுகொள்வதில்லை. பொதுவாக, நாம் வேகமாக டைப் செய்திடுகையில், குவெர்ட்டி கீ போர்டில், சற்று மேலாக விரல்களை நகர்த்தி டைப் செய்தால், சில எழுத்துக்களுக்குப் பதிலாக, எண்களை டைப் செய்திடுவோம். இந்த தவற்றினை ஸ்பெல் செக்கர் திருத்தாமல் விட்டு விடுகிறது. இவற்றையும் வேர்ட் 2010ல் திருத்தும்படி அமைக்க என்ன செய்திட வேண்டும் என்று பார்ப்போம்.
1. ரிப்பனில் “File” என்னும் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
2. Microsoft Office Backstage View தோற்றம் கிடைக்கும். இதில் “Options” பட்டனை அழுத்தவும். அல்லது இந்த இரண்டு செயல்பாடுகளுக்குப் பதிலாக, Alt + T கீகளை அழுத்திப் பின்னர், “O” கீயினை அழுத்தவும்.
3. இப்போது “Word Options” டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இடது பிரிவில் “Proofing” என்பதில் கிளிக் செய்திடவும். வலது புறத்தில் “Auto Correct options” என்ற பிரிவில், “Ignore words that contain numbers” என்பதன் முன் உள்ள கட்டத்தில் டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.
நீங்கள் ஏற்படுத்திய மாற்றங்களை சேவ் செய்திட ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இந்த மாற்றம் எம்.எஸ்.ஆபீஸ் தொகுப்பில் உள்ள எக்ஸெல், பவர் பாய்ண்ட் போன்ற மற்ற தொகுப்புகளிலும் ஏற்படுத்தப்படும் என்பதனை நினைவில் கொள்ளவும்.

விண் 8: ரிலீஸ் பிரிவியூ பயன்படுத்தலாமா?

கேள்வி: விண்டோஸ் பிரிவியூ சிஸ்டம் பைல் களை ஒரு டிவிடி அல்லது சிடியில் பதிந்து, பின் நாம் விரும்பும் நாளில் இன்ஸ்டால் செய்து கொள்ள முடியுமா?
பதில்: இதற்கு ஓர் எளிதான வழி உள்ளது. சிஸ்டம் இன்ஸ்டலேஷன் செய்வதற்கான setup executable பைலை தரவிறக்கம் செய்து இயக்கவும். அதுவாகவே, மற்ற பைல்களை யும் இறக்கிவிடும். பின்னர், டிவிடியில் எழுத உதவிடும் புரோகிராம் மூலம், அனைத்து பைல்களையும் ஒரு டிவிடியில் எழுதலாம். அல்லது ஒரு பிளாஷ் ட்ரைவிலும் அவற்றைப் பதிந்து கொண்டு பயன் படுத்தலாம். இந்த இரண்டையும், விண்டோஸ் 8 ரிலீஸ் பிரிவியூ சிஸ்டம் இன்ஸ்டால் செய்திட பயன்படுத்திக் கொள்ளலாம்.

கேள்வி: ரிலீஸ் பிரிவியூ தமிழ் மொழியில் வந்துள்ளதா?
பதில்: இல்லை. ஆங்கிலம் மற்றும் சீனம் உட்பட 13 மொழிகளில் வந்துள்ளது.

கேள்வி: எந்த பெர்சனல் கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் இதனைப் பதிந்து இயக்கலாம்?
பதில்: விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் அதன் பின்னர் வெளியான, எந்த விண்டோஸ் சிஸ்டம் கம்ப்யூட்டர்களிலும் இதனை நிறு வலாம். ஆனால், பாதுகாப்பாக முந்தைய சிஸ்டம் சிடி வைத்துக் கொள்வது நல்லது. மீண்டும் முந்தைய சிஸ்டம் செல்ல அது தேவைப்படும். இது குறித்து http://www.winbeta.org/guides/how-remove-windows-8-consumer-preview-and-install-windows-7 என்ற முகவரியில் என்ன தரப்பட்டுள்ளது என்று படித்த பின்னர் செயல்படவும்.

கேள்வி: தொடர்ந்து இந்த ரிலீஸ் பிரிவியு பதிப்பினைப் பயன்படுத்தலாமா?
பதில்: 2013 ஜனவரி 15 வரை பயன் படுத்தலாம். அதன் பின்னர் பயன்படுத்து வது சட்டப்படி தவறு என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.

கேள்வி: ஸ்டார்ட் பட்டன் குறித்து பல வாடிக்கையாளர்கள் அதிருப்தி தெரிவித் ததை கருத்தில் கொண்டு, மைக்ரோசாப்ட் அதனை மீண்டும் தந்துள்ளதா? தருமா?
பதில்: இல்லை. தரவில்லை. இனியும் தருவது சந்தேகமே. அதற்குப் பதிலாக, மெட்ரோ ஸ்கிரீனை எப்படி விரும்பிப் பயன் படுத்தலாம் என்பதற்கான விளக்கக் குறிப்பு களை அளிக்கப்போவதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.

கேள்வி: விண்டோஸ் 8 ரிலீஸ் பிரிவியூ பதிந்த பின்னர், என் டிவிடி ட்ரைவ் பயன்படுத்த முடியுமா?
பதில்: ஆம், பயன்படுத்தலாம். விண்டோஸ் மீடியா சென்டர் வசதியை கட்டணம் செலுத்தித்தான் பெற வேண்டும் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. இருப் பினும் கட்டணம் எவ்வளவு எனக் குறிப்பிடவில்லை. “Add features to Windows 8” என்ற பிரிவிற்குச் சென்று MBFBV-W3DP2-2MVKN-PJCQD-KKTF7 என்ற ப்ராடக்ட் கீயினைப் பயன்படுத்தவும்.

கேள்வி: விண்டோஸ் 8 இன்ஸ்டால் செய்திட ப்ராடக்ட் கீ தேவையா?
பதில்: நேரடியாக இணையம் வழி இன்ஸ் டால் செய்தால் தேவையில்லை. டிவிடியில் பதிந்து இன்ஸ்டால் செய்தால், ப்ராடக்ட் கீ கேட்கப்படும். அப்போது TK8TP-9JN6P-7X7WW-RFFTV-B7QPF என்ற ப்ராடக்ட் கீயினைப் பயன்படுத்த வேண்டும்.

கேள்வி: எனக்குப் பிடிக்கவில்லை என்றால், விண்டோஸ் 8 சிஸ்டத்திலிருந்து, என் முந்தைய சிஸ்டத்திற்குச் செல்ல முடியுமா?
பதில்: நீங்களாக, ஜஸ்ட் லைக் தட் செல்ல முடியாது. பழைய சிஸ்டத்தின் சிடியைக் கொண்டு, புதியதாக இன்ஸ்டால் செய்திட வேண்டும். உங்களுடைய பழைய அப்ளிகேஷன் புரோகிராம்கள், சார்ந்த டேட்டா பைல் என அனைத்தையும் முன்பே பேக் அப் செய்து வைத்திருக்க வேண்டும்.

கேள்வி: விண் 8 சிஸ்டத்துடன் இணைந்து வரும் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில், புதிய விஷயங்கள் ஏதாவது உள்ளனவா?
பதில்: ஆம்,நிறைய உள்ளன. குறிப்பாக அடோப் நிறுவனத்தின் பிளாஷ் பிளேயர் இணைந்தே கிடைக்கிறது. மெட்ரோ பதிப்பிற்கான இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் அனைத்து ப்ளக் இன் வசதிகளையும் எடுக்கப் போவதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. இதனை விண்டோஸ் 8 பதிப்பில் மட்டுமே இயக்க முடியும். விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கான இன்டர் நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 10 ஒன்றினை வெளியிட இருப்பதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. ஆனால், அது கிடைப்பதற்கான அறிகுறி இல்லை.

கேள்வி: கன்ஸ்யூமர் பிரிவியூ பதிப்பிற்கெனப் பயன்படுத்திய, பெர்சனல் கம்ப்யூட்டரை ரிலீஸ் பிரிவியூவிற்கும் பயன்படுத்தலாமா?
பதில்: இந்த கேள்விக்கு மைக்ரோசாப்ட் “ஆம்’ என்றே பதில் சொல்லியுள்ளது. ஆனால், பன்னாட்டளவில் பல வாடிக்கை யாளர்கள் இது இயலவில்லை என்று கூறியுள்ளனர். சில கம்ப்யூட்டர்களில் முடியவில்லை என்பதே உண்மை.

கேள்வி: எப்போது விண்டோஸ் 8 முழுமையான சிஸ்டம் பதிப்பு விற்பனைக்கு வரும்.
பதில்: மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கே இந்த கேள்விக்குப் பதில் தெரியவில்லை. ஆனால், எல்லாரும் வரும் அக்டோபரில் எதிர்பார்க்கலாம் என்று கூறுகின்றனர்.
மேலும் சந்தேகங்கள் இருந்தால், http://windows.microsoft.com/en-US/windows-8/faq என்ற முகவரியில் மைக்ரோசாப்ட் தரும் விளக்கங்களைக் காணவும்.