Daily Archives: ஜூலை 7th, 2012

வர இருக்கும் தொழில் நுட்ப மாற்றங்கள்

அடுத்த 10 ஆண்டுகளில் கம்ப்யூட்ட ரில் என்ன மாற்றங்கள் வரும். இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சி யின் அடிப்படையில் கணித்த சில எதிர்பார்ப்புகளை இங்கு காணலாம்.
1. அதிக இடத்தை எடுத்துக் கொண்டு, மெதுவாகவும், சூடாகவும் இயங்கும் சிலிகான் நீக்கப்படும். கம்ப்யூட்டரின் புதிய கட்டமைப்பில் குறைவான அளவில் எலக்ட்ரான்களும் அதிக அளவில் ஆப்டிகல் இழைகளும் பயன்படும். ஆப்டிகல் கம்ப்யூட்டர்கள் வரும் நாள் வெகு தொலைவில் இல்லை.
2. கம்ப்யூட்டர்கள் திருடு போகாது. பயோமெட்ரிக் பயன்பாடு பரவலாகி, கைரேகைகளுக்கு மட்டுமே கம்ப்யூட்டரின் கதவு திறக்கும்.
3. கீ போர்டுகள் ஓரம் கட்டப்படும். டச் ஸ்கிரீன் இப்போதே வந்துவிட்டது. இனி சைகை மூலம் நாம் கம்ப்யூட்டரையும், சாப்ட்வேர் அப்ளிகேஷனையும் இயக்க லாம். அடுத்ததாக நம் குரல் மூலமே அனைத்தையும் இயக்கும் வழிகள் கண்டறியப்படும்.
4. கம்ப்யூட்டர்கள் கையடக்க சாதனமாக மாறும். அலுவலகத்தில் டெஸ்க்குகளில் உள்ள இணைப்புகளில் இணைத்த பின்னர், டாப்பில் உள்ள பெரிய திரைகளில் கம்ப்யூட்டர் இயங்குவதைப் பார்க்கலாம். எனவே டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் இனி டெஸ்க்கில் உள்ள டாப் கம்ப்யூட்டராக இயங்கும்.
5.வீடுகளில் உள்ள கம்ப்யூட்டர்கள் நமக்காக, நம் பெர்சனல் தேவைகளுக்காக இயங்கும். நாம் அலுவலகத்திலிருந்து வந்தவுடன் நம்மை ஓய்வெடுக்கச் சொல்லி, நமக்காக சாதனங்களை இயக்கும். சமையல், வாஷிங், டிவி, ஏர்கண்டிஷனர் இயக்கம் ஆகியவற்றைக் கம்ப்யூட்டரே பார்த்துக் கொள்ளும்.
6. டிவிடிக்கள் பல டெராபைட்டுகள் கொள்ளளவினைக் கொண்டிருக்கும். பிளாஸ்டிக் பிளாட்டர் படு வேகத்தில் சுழலும். ஹோலோ கிராபிக் தொழில் நுட்பத்தில் எழுதுவதற்கு ஒரு பக்கத்தில் ஒரு லேசரும், இன்னொரு பக்கத்தில் இன்னொன்றுமாக இயங்கும்.
7.இப்போதிருக்கும் சிபியு அப்படியே இருக்கும். ஆனால் எலக்ட்ரானிக் மைக்ரோ ப்ராசசருக்குப் பதிலாக ஆப்டோ எலக்ட்ரானிக் இன்டக்ரேய்டட் சர்க்யூட் அமைக்கப்படும். இதனை ஸ்விட்ச் ஆன் செய்திட சிலிகான் இருக்கும். ஆனால் மற்ற இயக்கவேலைகளை ஆப்டிக்ஸ் பார்த்துக் கொள்ளும். தற்போது கிடைக்கும் இயக்க வேகத்தினைக் காட்டிலும் 100 மடங்கு அதிக வேகத்தில் சிபியு இயங்கும்.
8. இனி ராம் மெமரி ஹோலோகிராபிக் ஆக இருக்கும். இது முப்பரிமாணம் உடையதால், எத்தனை அடுக்குகளையும் இது கொள்ளும். எனவே கொள்ளளவு கற்பனையில் எண்ண முடியாத அளவில் அமையும்.
9.இன்டெல் நிறுவனத்தின் புதிய ப்ராசசர் கள் எண்ணிப் பார்க்க இயலாத வேகத்தில் செயல்படும்.
10. இன்டர்நெட் டிவி புழக்கம், கம்ப்யூட்டருடன் இணைக்கப்படும் டிவி, ஸ்மார்ட் போன், பல மானிட்டர்களுடன் இயங்கும் கம்ப்யூட்டர், புளு ரே டிவிடி, விண்டோஸ் புதிய சிஸ்டம் தரும் முழு பயன்பாடு, நம் வேலைகளுக்கேற்ப இயக்க வேகத்தை மாற்றிக் கொள்ளும் சிப் என வரும் ஆண்டுகளில் முற்றிலும் புதிய தொழில் நுட்பங்கள் வர இருக்கின்றன.

புற்றணுக்களை கண்டறியும் நுண்ணிய வேகத்தடை கருவி!

திருடர்களைப் பிடிக்கும் போலீஸ்காரர்களின் நிலைமை எப்படியோ தெரியாது. ஆனால் புற்றணுக்கள் தோன்றிய சிறிது காலத்திலேயே அவற்றை கண்டுபிடித்து தரும் மருத்துவக் கருவிகளைக் உருவாக்கும் விஞ்ஞானிகளின் பாடு திண்டாட்டம்தான். ஏனென்றால் புற்றணுக்களை தொடக்கத்திலேயே கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல!

உதாரணமாக, லட்சக்கணக்கான ஆரோக்கியமான உயிரணுக்களுக்கு மத்தியில் நல்ல பிள்ளை போல் சுற்றித்திரியும் பண்புடையவை புற்றணுக்கள். அவற்றை இனம் கண்டு அழிப்பதற்கு புத்தி சாதுர்யம் மட்டும் போதாது. ஆரோக்கியமான உயிரணுக்களை பாதிக்காத வண்ணம் புற்றணுக்களை அழிக்கும் லாவகமும் அவசியம்.

இந்த நோக்கத்தில் கண்டறியப்பட்ட பல்வேறு சோதனை கருவிகள் நம்மிடையே உண்டு என்றாலும், புற்றணுக்களை தொடக்கத்திலேயே கண்டறிந்து நோயாளிகளின் உயிரைக் காக்க மேலும் சக்திவாய்ந்த பரிசோதனைக் கருவிகள் அவசியப்படுகின்றன.

இந்த தலையாய பிரச்சினைக்கு ஒரு தீர்வு சொல்ல வந்திருக்கிறது மிகவும் சக்திவாய்ந்த, ஒரு புதிய கருவி. `நுண்ணிய வேகத்தடை கருவி’ என்றழைக்கப்படும் இந்த கருவியை அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழத்தைச் சேர்ந்த இரு பொறியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

மைக்ரோ ப்ளூயிடிக் கருவி வகையைச் சேர்ந்த இந்த புதிய கருவி புவி ஈர்ப்பு விசையின் அடிப்படையில் நுண்ணிய பொருட்களை இனம் பிரித்து கொடுக்கக் கூடியது. சாலைகளில் உள்ள வேகத்தடையைப் போல, மைக்ரான் (ஒரு மீட்டரில் பத்து லட்சத்தில் ஒரு பகுதி) அளவுள்ள வேகத்தடைகளைக் கொண்ட இந்த கருவி நுண்ணிய பொருட்களை அவற்றின் எடை, அளவு அல்லது இதர பண்புகளின் அடிப்படையில் பிரித்து கொடுக்கக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வேகத்தடை கருவியை கண்டுபிடித்துள்ள ஆய்வு மாணவர் ஜோர்க் பெர்னேட்டின் நோக்கம், தினசரி மருத்துவப் பரிசோதனைகளுக்கு உதவும் வகையில் ஓர் எளிமையான கருவியை உருவாக்குவதுதானாம்.

கோடிக்கணக்கிலான ஆரோக்கியமான ரத்த உயிரணுக்களுக்கு மத்தியில் ஒளிந்து கொண்டு உயிர் வாழும் தன்மையுடையவை சுழலும் புற்றணுக்கள். இவை ரத்த ஓட்டத்தின் மூலம் பிற பகுதிகளுக்கு பரவும் முன்னரே இவற்றை இனம் கண்டுபிடிப்பதன் மூலம் எண்ணற்ற மக்களின் உயிரைக் காக்க இந்த வேகத்தடை கருவி உதவும் என்கிறார் மாணவர் பெர்னேட்!

அது சரி, இந்த வேகத்தடை கருவியை வைத்துக் கொண்டு புற்றணுக்களை எப்படி இனம் கண்டு கொள்வது?

இந்த மைக்ரோ ப்ளூயிடிக் கருவியின் உள்ளே வெவ்வேறு உயரங்கள் கொண்ட வேகத்தடை போன்ற வடிவமுள்ள பொருட்கள் கோணலாக வைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றின் மீது உயிரணுக்கள் மற்றும் இதர பொருட்கள் கலந்த திரவத்தை ஓடவிடும்போது இலகுவான பொருட்கள் போல கனமான பொருட்களால் இந்த வேகத்தடையை கடந்து செல்ல முடியாது.

வேகத்தடையை கடந்து செல்ல முடியாத அத்தகைய பொருட்கள் தங்கள் திசையை மாற்றிக்கொண்டு கோணலாக வைக்கப்பட்டுள்ள வேகத்தடையின் திசையிலேயே பயணிக்கத் தொடங்குகின்றன. இந்த நிகழ்வு தொடரத் தொடர, இறுதியில் வெவ்வேறு கனமுள்ள, அளவுள்ள பொருட்கள் வேவ்வேறு திசையில் செல்வதன் மூலம் சுலபமாக பிரிக்கப்படுகின்றன என்கிறார் பெர்னேட்.

இந்த கருவியிலுள்ள வேகத்தடையை கடந்து செல்ல முற்படும் பொருட்களின் வேகத்தை குறைக்க புவி ஈர்ப்பு விசை மட்டுமல்லாது வேறு யுக்திகளும் கையாளப்படுகின்றன. உதாரணமாக, மின்சார சக்தி அல்லது காந்த சக்தி உடைய பொருட்கள் மின்சாரம் அல்லது காந்த சக்தி செலுத்தப்பட்ட ஒரு சூழலில் வேகத்தடையை கடந்து செல்வது கடினம். இதனால், காந்த சக்தி செலுத்தப்பட்ட ஒரு கருவியில் காந்த மணிகளைக் கொண்டு புற்றணுக்களை கவர்ந்து பின்னர் அவற்றை இனம் பிரித்து விட முடியும் என்பது கவனிக்கத்தக்கது.

மைக்ரோ மற்றும் நானோ அளவுள்ள நுண்ணிய பொருட்களை இனம் கண்டு பிரிக்கும் திறன் சோலார் சக்தி முதல் உயிர் பாதுகாப்பு வரையிலான பல துறைகள் சார்ந்த தொழிற்சாலைகளுக்கு மிகவும் அவசியமானது. ஆனால், இந்த வேகத்தடை கருவியின் உடனடிப் பயன் மருத்துவ பரிசோதனைக் கருவிகள் உருவாக்கத்தில்தான் இருக்கக்கூடும் என்கிறார் ஆய்வு மாணவர் பெர்னேட்.

மொத்த ரத்தத்தையும் அதன் ஒவ்வொரு உருப்படிகளாக சுலபமாக இனம் பிரித்து கொடுத்துவிடும் இந்த வேகத்தடை கருவி காப்புரிமைக்காக காத்துக்கொண்டிருக்கிறது. ஆனால், அதே சமயம் புற்றணுக்களை இனம் கண்டு பிரித்துணரக்கூடிய இதன் திறன் காரணமாக உலக மக்களின் உயிரைக் காக்கும் கருவியாக மாறி பயன்படவும் இந்த நுண்ணிய வேகத்தடை கருவி காத்துக் கொண்டிருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

முனைவர் பத்மஹரி

பாரதம் தந்த பரம்பொருள்!

“வ்யாஸாய விஷ்ணுரூபாய வ்யாஸரூபாய விஷ்ணவே…’ என்கிறது ஒரு ஸ்லோகம். வியாசர் தான் விஷ்ணு, விஷ்ணு தான் வியாசர் என்பது இதன் பொருள். தர்மத்தின் பெருமையை நிலைநாட்ட, விஷ்ணு, கிருஷ்ணராக பூமியில் அவதரித்தார். அவரே, வியாசராகவும் இருந்து, அந்தக் காவியத்தை திறம்பட எழுதினார்.
வேதவியாசர் என்பது, ஒரு தனி நபரின் பெயரல்ல. ஒரு பதவியின் பெயர். பி.எம்., சி.எம்., ராஜா, ராணி என்று பதவிகளின் பெயராலேயே சிலரை அழைக்கப்போய், அதுவே பெயராக மாறியது போல், ஒரு தோற்றம் உண்டாகிறது அல்லவா! அப்படித்தான் வியாசருக்கு, அவருடைய பதவியே, பெயர் போல நிலைத்து விட்டது. வேதவியாச பீடம் என்பது நிரந்தரமானது. அந்த பீடத்தில் அமரும் தகுதி படைத்தவரை, வேதவியாசர் என்பர். மகாபாரதம் தந்த வியாசருக்கு முன்பும், அந்த பீடத்தில் பலர் அமர்ந்துள்ளனர். வியாசம் என்றால் பகுப்பது. இவர், வேதத்தை நான்காகப் பகுத்தார். அதனாலும் வியாசர் என்ற பெயர் வந்ததாக சொல்வர்.
உண்மையில், இவரது பெயர் கிருஷ்ணத்வைபாயனர். “கிருஷ்ண’ என்றால், “கருப்பு’. த்வைபாயனர்’ என்றால், “தீவில் பிறந்தவர்.’ வியாசர் கருப்பு நிறமுடையவர். இவரது தந்தை பராசரர். தாய் சத்தியவதி. இவள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் சிசுவாக இருந்ததாகப் புராணம் கூறுகிறது. உச்சைச்ரவஸ் என்ற மீனவன் அதைப் பிடித்தான். அவ்வகை மீன், வழக்கத்தை விட பெரிதாக இருக்கவே, கவனமாக அறுத்தான். அதனுள் ஒரு ஆண் மற்றும் பெண் சிசு இருந்தது. அந்த மீன், உபரிச்ரவஸ் என்ற மன்னனின் மூலம் சந்தர்ப்பவசமாக கர்ப்பமானது தெரிய வந்தது. அரசனுக்கு இந்த விஷயம் தெரியவரவே, ஆண் குழந்தையை அவன் எடுத்துக் கொண்டான். பெண் குழந்தையை, மீனவர் தலைவனிடம் கொடுத்து விட்டான்.
அவள் படகு ஓட்டி பிழைத்து வந்தாள். ஒரு சமயம், பராசர முனிவர், ஆற்றின் அக்கறைக்கு செல்ல வந்தார். அவளிடம், “பெண்ணே, நீ முன் ஜென்மத்தில், பித்ருக்களுக்கு மகளாக இருந்தாய். அவர்களது சாபத்தால், மீன் வயிற்றில் பிறந்தாய். உன் உண்மைத் தந்தை, இந்நாட்டின் மன்னன். நீ, எனக்கு மனைவியானால், உலகம் போற்றும் உத்தமனை பெறலாம். அதன்பின், மீண்டும் நீ கன்னியாகவே மாறி விடலாம்…’ என்றார்.
முதலில் அவள், தன் தந்தையின் ஒப்புதல் வேண்டுமென நினைத்தாலும், முனிவரின் பேச்சுக்கு கட்டுப்பட்டாள். முனிவர் தன் தவபலத்தால், அந்தப் பகலையே, மூடுபனி மூலம் இருளாக்கினார். அவர்கள் இன்புற்றிருந்தனர். வியாசர் பிறந்தார். பிறந்தவுடனேயே, அந்தக் குழந்தைக்கு ஏழு வயதாகி விட்டது. பெற்றவள், மகனை அன்புடன் அணைக்க நெருங்கிய போது, “மீனவப் பெண்ணான நீ, என்னைத் தொடாதே…’ என கூறினான்.
சத்தியவதி அழுதாள். மகனிடம் பக்குவமாக, அந்தத் தாயின் மகிமை பற்றி எடுத்துச் சொன்னார் பராசரர். அதன்பின், சிறுவன் அவளது மடியில் அமர்ந்தான். பராசரர், குழந்தையின் கையில் கமண்டலத்தைக் கொடுத்து, “நீ வேதவியாசன் ஆவாய்…’ என்று வாழ்த்தினார். அந்தக்கணமே, வியாசர் சஞ்சாரம் கிளம்பி விட்டார். வருந்தினாள் சத்தியவதி.
“தாயே… எந்த கஷ்டமாக இருந்தாலும், நீ, என்னை நினைத்தால் போதும். அந்தக்கணமே நான் அங்கிருப்பேன்…’ என்று வாக்குறுதி அளித்தார். அதன்பின், சத்தியவதிக்கு கன்னித்தன்மையை அளித்துவிட்டு, பராசரர் சென்று விட்டார்.
இதன் பின் வியாசர், வேதத்தை நான்காகப் பிரித்து, தன் வாழ்வின் நோக்கத்தை நிறைவேற்றினார். இவருக்கு பிறந்த பிள்ளைகளே, கவுரவர்களின் தந்தையான திருதராஷ்டிரன், பாண்டவர்களின் தந்தையான பாண்டு, மகாஞானியான விதுரர் ஆகியோர்.
இவர்களே, மகாபாரதக் கதைக்கு அடிகோலினர். பாண்டவர்களும், கவுரவர்களும் மறைந்த பின், அவர்களது வரலாறை எழுதினார். “தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும், முடிவில் தர்மமே வெல்லும்’ என்ற நியதியை இந்த நூல் மூலம் உலகுக்கு உணர்த்தினார்.
ஒரு அற்புத காவியத்தை உலகுக்கு அளித்த மகானை, சாதுர்மாஸ்ய விரத துவக்க நாளன்று நினைவு கூர்வோம்.