Daily Archives: ஜூலை 9th, 2012

அச்சிடும் முன் சிந்திக்க சில விஷயங்கள்

* உங்கள் டாகுமெண்ட், ஸ்ப்ரெட்ஷீட் ஆகியவற்றை அச்சிடும் முன், குறிப்பிட்ட அந்த அச்சு நகல், அவ்வளவு அழகாக இருக்க வேண்டாம்; சாதாரணமாக இருந்தால் போதும்; நம் பைலுக்குத்தான் என்று எண்ணுகிறீர்களா? அப்படியானால், அதனை draft modeல் அச்சிடவும். இவ்வகை அச்சுப் பிரதி வேகமாக பிரிண்ட் ஆகும். குறைவான இங்க் செலவாகும். இந்த வகை அச்சு நகல் ‘draft’, ‘fast’, ‘eco’ என வெவ்வேறு வகையில் அழைக்கப்படும். உங்கள் பிரிண்டரில் இது என்னவென்று காட்டப் படும்.
* சில டாகுமெண்ட்களில் குறைவான வரிகள் இருக்கலாம்; அல்லது சிறிய அளவில் அச்சிட்டாலும் படிக்கும் வகை யில் இருக்கலாம். அப்படிப்பட்ட டாகுமெண்ட்களை அச்சிடுகையில், தாளின் ஒரு பக்கத்தில் இரண்டு பக்கங்களை அச்சிடலாமே!
* கூடுமானவரை உங்கள் டாகுமெண்ட் களில், போட்டோக்கள் மற்றும் பெரிய அளவிலான கிராபிக்ஸ் படங்களைத் தவிர்க்கவும். இதனால் டாகுமெண்ட் பைல் அளவு அதிகரிக்கும். அச்சிடுகையில், இந்த டாகுமெண்ட்டின் பக்கங்களை வடி வமைத்து அச்சிட, பிரிண்டர் அதிக நேரம் எடுக்கும்.
* வண்ணம் கலந்த டாகுமெண்ட் அச்செடுக்கையில், அந்த அச்சுப் பிரதி முடிவானதாக இல்லாமல், சோதனைக்குத் தான் எனில், அதனை black or grayscale என்னும் வகையில் அச்செடுக்கலாம். இதனால், நேரம் மிச்சமாகும். வண்ண மை செலவாகாது. குறிப்பாக லேசர் கலர் பிரிண்டரில் நேரம் அதிக அளவில் குறையும்.
* பிரிண்டர்கள் அச்சிடாத வேளைகளில் sleep modeக்குச் சென்று விடும். உடன் அச்சிட கட்டளை கொடுக்கையில் விரை வாகத் தயாராகிவிடும். இதனையே மின் சக்தியை நிறுத்திவிட்டால், பிரிண்டர் தயாராகும் நேரம் அதிகமாகும். பிரிண்ட் ஹெட் தயார்ப்படுத்தப்பட வேண்டும்; மை தெளிக்கும் சிறிய குழாய் முனைகள் (nozzles) சோதிக்கப்பட வேண்டும்; இவற்றைக் கலவைக்குத் தயார்படுத்த வேண்டும் என்பது போன்ற பல பணி முனைப்புகள் மேற்கொள்ளப்படும். எனவே பிரிண்டர் வேலை செய்யாவிட்டாலும், அதன் மின் சக்தியை நிறுத்தாமல் தயார் நிலையில் வைத்திருக்கலாம். அது தானாகவே sleep modeக்குச் செல்வதால், சிக்கல் இல்லை.

பருவநிலை மாற்ற ஆய்வும் விலங்குகளும்!

அழிந்துவரும் உயிரினங்களில் பருவநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்து அறிய ஓநாய்கள் உதவும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

இதுதொடர்பாக, அமெரிக்காவின் எல்லோஸ்டோன் தேசியப் பூங்காவில் ஓநாய் களின் எண்ணிக்கை குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மாறிவரும் பருவநிலை எவ்வாறு ஓநாய்களின் எண்ணிக்கை, உடல் அளவு, மரபணுவியல் மற்றும் பிற உயிரியல் அம்சங்களில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று அறிவதற்கான ஒரு வழியைக் கண்டுபிடித்தனர்.

அதன்படி, எந்த மாதிரியான பருவநிலை மாற்றம், விலங்குகளின் எண்ணிக்கையிலும், அவற்றின் பரிணாமத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று தங்களால் கணிக்க முடிகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

தற்போது கிடைத்திருக்கும் முடிவுகளைக் கொண்டு, எதிர்காலத்தில் பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ப ஓநாய்களின் எண்ணிக்கை எவ்வாறு மாறும் என்று அறிந்து, அதுகுறித்து வன உயிரினக் காப்பாளர்களுக்குத் தெரிவிக்க முடியும் என்பது விஞ்ஞானிகளின் நம்பிக்கை.

லண்டன் இம்பீரியல் கல்லூரி ஆய்வாளர்கள் தலைமையிலான இந்த ஆய்வில், அமெரிக்க அரசின் உள்துறை, உடா மாநிலப் பல்கலைக்கழகம் மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த ஆய்வாளர்களும் பங்கேற்றனர்.

சுற்றுச்சூழல் மாறுபாட்டால் உயிரினங்களின் உடல் அளவு, எடை போன்றவற்றில் ஏற்படும் சிறுசிறு மாற்றங்களும் எதிர்காலத்தில் அந்த உயிரினத் தொகுப்பில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்று கருதப்படுவதால் இந்த ஆய்வு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

விண்ணில் உலவும் உளவுக் `கண்கள்’!

இது தொழில்நுட்ப யுகம். தொழில்நுட்ப வளர்ச்சியானது நமது வாழ்க்கையை வசதியானதாகவும், எளிதானதாகவும், பாதுகாப்பானதாகவும் மாற்றிவிட்டதாக நினைக்கிறோம்.

இது சரிதானா? அமெரிக்காவின் இரு பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள், விண்ணிலிருந்து நம்மை `உளவு பார்க்க’ப் போகின்றன. இவை தாங்கள் உருவாக் கும் `பறவைப் பார்வை மேப்’களுக் காக சக்திவாய்ந்த காமிராக்களைக் கொண்டு விண்ணிலிருந்து படம் பிடிக்கப் போகின்றன. ராணுவத்தில் பயன்படுத்தக்கூடிய இந்த காமிராக்கள், பூமியில் உள்ள வெறும் நான்கு அங்குலம் அளவுள்ள பொருளைக் கூட வானில் இருந்தே படம்பிடிக்கக் கூடியவை.

கூகுள், ஆப்பிள் நிறுவனங்கள், அதிநவீன `மேப்பிங்’ விமானங்களைப் பயன்படுத்தி இவ்வாறு படம்பிடிக்கத் திட்டமிட்டிருக்கின்றன. சாதாரண வெளிச்சத்திலேயே படம் பிடிக்கக்கூடிய இந்த காமிராக்கள், உங்கள் படுக்கையறை ஜன்னல் வழியாகக் கூட ஊடுருவக்கூடியவை. எனவே தனிமனிதர்களின் தனிமைக்கு இவை பெரும் ஆபத்து என்று எதிர்ப்புக் குரல்கள் எழத் தொடங்கியிருக்கின்றன.

கூகுள், ஆப்பிள் நிறுவனங்கள் பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பம், ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளின் இலக்குகளைக் குறிவைக்கப் பயன்பட்ட அதே மாதிரியானவை. இந்தத் தொழில்நுட்பம் மூலம் சுமார் ஆயிரத்து 600 அடி உயரத்தில் இருந்தே படம் பிடிக்கலாம் என்பதால், தான் கண்காணிக்கப்படுகிறோம் என்பதே பூமியில் இருக்கும் ஒரு மனிதருக்குத் தெரியாது.

இந்த காமிராக்களை விமானங்கள், ஹெலிகாப்டர்கள்… ஏன், ஆளில்லாத விமானங்களில் கூட பொருத்தலாம்.

பெருநகரங்கள் மீது சுற்றி இவ்வாறு படம் எடுப்பதற்காக தாங்கள் விமானங்களை அனுப்பியிருப்பதாக கூகுள் நிறுவனம் கூறியிருக்கிறது. அதேநேரம் ஆப்பிள் நிறுவனம், வேறொரு நிறுவனத்தை அமர்த்தி, லண்டன் உள்ளிட்ட நகரங்களை சோதனை ரீதியாகப் படம் பிடித்திருக்கிறது.

இவ்வாறு படம் பிடித்து தாங்கள் 3டி மேப்களை வெளியிட்டாலும், அதில் தனிநபர் பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் இருக்கும் என்று இந்த நிறுவனங்கள் கூறுகின்றன. பொறுத்திருந்து பார்க்கலாம்.

டாக்டர் சொல்வதைக் கேட்டால், உங்களுக்கு லாபம்; டாக்டருக்கு நஷ்டம்!

தசைகளெல்லாம் தொடர்ச்சியாகச் சுருங்கி விரிவடைவதால், உடலுக்குத் தேவையான உணவுப் பொருட்களின் தேவையையும், ஆக்சிஜன் தேவையையும் கூட்டுகிறது. திசு அளவில் இன்சுலின் எதிர்ப்புத் தன்மையைப் போக்கி, குளூக்கோஸ் சர்க்கரை அளவுகளை, சீரான நிலைக்கு வைத்து கொள்கிறது.

இப்போதுள்ள மக்கள், எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதைப் பற்றி கவலைப் படுவதில்லை என்பதை, என்னால் நிச்சயமாகக் கூற முடியும். அவர்கள் தங்கள் வாழ்க்கைத் தரம், அந்த ஆண்டுகளில் எவ்வாறு உள்ளது என்பதையே முக்கியமாகக் கருதுகின்றனர்.
உடல் நலம் பேணுதல் பற்றிய கருத்தை மதிப்பீடு செய்யும் வரை, எத்தனை ஆண்டுகள் உயிர் வாழ்கிறோம் என்பது முக்கியமானதல்ல. அல்சீமர் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர், தன் நெருங்கிய உறவினர்களைக் கூட, அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு, மறதியுடன் வாழ விரும்புவாரா? கேடு விளைவிக்கும் வாத நோயால் பாதிக்கப்பட்டு, இடுப்பு வலி அல்லது மூட்டு வலியால் அவதிப்பட, யார் விரும்புவர்?
பலர், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், புற்று நோய் மற்றும் இதய நோய்களால், எதிர்பாராத அளவில் பாதிக்கப்படுகின்றனர். யாரும் வயது முதிர்ந்த காரணத்தால் மரணமடைவதில்லை. உடல் நலத்தைக் கவனிக்காமல் சம்பாதிப்பது, பின் சம்பாதித்ததை உடல் நலத்தைச் சரி செய்யச் செலவிடுவது… இது சரிதானா?
உங்களிடம் ஒரு உண்மை நிகழ்வை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சென்னையில் இதயநோய் நிபுணர் கீழ், அவருடன் உதவியாளராக பணிபுரிந்து கொண்டிருந்த போது, 56 வயதுடைய நோயாளி, 28 வயதுடைய மகனுடன், நிபுணரை சந்திக்க வந்திருந்தார்.
அந்த தந்தை நிபுணரிடம் அதிக ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய்க்கு, கடந்த இரண்டு ஆண்டுகளாக சிகிச்சை எடுத்துக் கொண்டு, இதய நோயிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொண்டுள்ளார். தன் மகனுக்கு பரிசோதனை செய்த போது, அவருக்கும் அதிக ரத்த அழுத்தமும், சர்க்கரை நோயும் இருந்ததை அறிந்து, தந்தை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். தந்தை, 28 ஆண்டு உழைத்து சம்பாதித்த பணத்தை, தன் மகன் நான்கு ஆண்டுகளில் சம்பாதித்து, சாதனைப் படைத்தார்.
ஆனால், “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பதை அறியாத மகன், தந்தைக்கு, 54 வயதில் வந்த நோய்களை, 28 வயதில் சம்பாதித்துக் கொண்டார். இதிலிருந்து நீங்கள் அறிந்து இருக்க வேண்டியது, உடற்பயிற்சியினால் நாம் அடையும் அளவில்லா பயன்களை!

உடற்பயிற்சி என்றால் என்ன?
* சுறு சுறுப்பாகவும், வேகமாகவும் நடத்தல்
* மிதிவண்டி ஓட்டுதல்
* உயரே ஏறிச் செல்லுதல், படிக்கட்டுகளில் ஏறுதல்
* நடனமாடுதல்
* நீந்துதல்

உடற்பயிற்சியின் பலன்கள்
* உடல் பருமனாவதைக் குறைத்து உடல் நலத்தைக் கூட்டுகிறது.
* ஊளைச் சதையைக் குறைத்து உடல் எடையைக் குறைக்கிறது.
* போதிய ரத்த ஓட்டம் இல்லாத பகுதிகளில், ரத்த ஓட்டத்தைப் பெருக்கி, பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கிறது.
* மனநிறைவும், மன அமைதியும் ஏற்படுத்துகிறது.
* இதயத்தை திடப்படுத்தி ரத்த நாளங்களை வளப்படுத்தி, ரத்த ஓட்டத்தை சீரான நிலையில் வைத்து கொள்ள உதவுகிறது.
* திசு அளவில் இன்சுலின் ஹார்மோன் செயல்பாட்டைப் பெருக்குவதற்கு, உடற்பயிற்சி பெரிதும் உதவுகிறது.
* சர்க்கரை நோயால் இதயத்திற்குப் பாதிப்புகளை ஏற்படுத்தும் நிலைமைகளை மாற்றி அமைத்து, பாதுகாவலாக இருக்கவும் உதவுகிறது.
* தசைகளெல்லாம் தொடர்ச்சியாகச் சுருங்கி விரிவடைவதால், உடலுக்குத் தேவையான உணவுப் பொருட்களின் தேவையையும், ஆக்சிஜன் தேவையையும் கூட்டுகிறது.
* உடற்பயிற்சியின் போது, நிறைவாகக் கிடைக்கும் ஆக்சிஜனால், உடலிலுள்ள மாவு, புரதம், கொழுப்பு ஆகிய உணவுப் பொருட்களெல்லாம், வளர்சிதை மாற்றங்கள் அடைந்து, பயன்பாட்டிற்கு வந்து விடுகின்றன.

Aerobic எனப்படும் ஒரு வகையான உடற்பயிற்சியால் ஏற்படக்கூடிய பலன்கள் பல. அவை:
* இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்துவதோடு, ரத்த அழுத்தத்தையும் சீர் நிலைக்குக் கொண்டு வருகிறது.
* திசு அளவில் இன்சுலின் எதிர்ப்புத் தன்மையைப் போக்கி, குளூக்கோஸ் சர்க்கரை அளவுகளை, சீரான நிலைக்குத் வைத்து கொள்கிறது.
* மூச்சுப் பயிற்சியின் மூலம், நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
* உடலுக்குப் பாதுகாப்பான அடர்த்தி நிறைந்த கொழுப்புப் பொருட்களைக் கூட்டுதல்.
* உடலுக்குப் பாதுகாவலற்ற அடர்த்தி குறைந்த கொழுப்புப் பொருட்களைக் குறைத்து, உடலின் கொழுப்பு கட்டுகளை குறைத்து உடல் எடையைக் குறைத்து, ரத்த நாளங்களில் கொழுப்புப் கட்டிகள் படிவதை குறைக்கிறது.
கை, கால்களை நீட்டி மடக்கியும், உடலை வளைத்து, நிமிர்த்தியும், வயிற்றுப் பகுதியை இறுக்கியும், தளர்த்தியும் மேற்கொள்ளக் கூடிய உடற்பயிற்சிகள், உடற்பயிற்சிக் கூடங்களில் மேற்கொள்ளக் கூடிய உடற்பயிற்சிகள் போன்றவையும் பயன்படும். இவை குறிப்பாக இளைஞர்களுக்குப் பெரிதும் பயன்தரக் கூடிய உடற்பயிற்சிகள்.

சாதுக்களோடு பழகினால்…

நல்லவர்களின், மகான்களின் சகவாசம் வைத்திருந்தால், நமக்கும் நல்லவர்களின் புத்தி ஏற்படும். அதனால் தான், “மகான்களை அண்டி இரு…’ என்றனர். மகான்களை தரிசித்தாலும், அவர்கள் இருந்த இடத்தில் இருந்தாலும், அந்த மகான்களின் குணங்கள் நமக்கும் ஏற்படும். கெட்டவர்களோடு சேர்ந்திருந்தால் கெட்ட புத்தி தான் ஏற்படும்.
காட்டு வழியே போய் கொண்டிருந் தான் ஒருவன். அவனை துரத்தியது ஒரு புலி. பயந்து ஓடி ஒரு மேடையை அடைந்தான். புலியும் அவனை துரத்தியபடி அந்த மேடைக்கு வந்தது. ஆனால், ஒன்றும் செய்யாமல், சாதுவாக அங்கே படுத்துக் கொண்டது. இவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
மேடையில் இருந்து கீழே இறங்கி வந்தான். புலியும் அவன் கூடவே இறங்கி, அவனைத் துரத்த ஆரம்பித்தது. மீண்டும் அந்த மேடையில் ஏறினான். புலி அவனைப் பின் தொடர்ந்து வந்து மேடையில் ஏறியது. ஆனால், அவனை ஒன்றும் செய்யாமல், சாதுவாக மேடையில் படுத்துக் கொண்டது.
இவனுக்கு ஆச்சரியமாக இருந்தது… “இந்த புலி கீழே இறங்கினால் நம்மைத் துரத்துகிறது; மேடைக்கு வந்ததும் சாதுவாக இருக்கிறதே… அப்படியானால், இந்த மேடையில் ஏதோ விசேஷம் இருக்க வேண்டும்…’ என்று எண்ணி, மேடை மீதிருந்த செடி, கொடிகளையும், கல், குப்பைகளையும் அகற்றிப் பார்த்தான். அந்தப் புதரை விலக்கி பார்த்தபோது, அங்கே ஒரு மகானின் சமாதி இருப்பதை கண்டான்…
“ஓஹோ… இந்த சாதுவின் சமாதிக்கு அருகில் வரும் போது, புலியும் சாதுவாகி விடுகிறது. சமாதியை விட்டு கீழே இறங்கினால், மீண்டும் துரத்துகிறது. சாதுக்களின் சமாதி அருகில் வரும்போதே, சாதுவான புத்தி வந்து விடுகிறது. அப்படியானால் சாதுக்களோடு சேர்ந்திருந்தால் எந்த ஆபத்தும் வராது…’ என்று எண்ணி, அந்த மேடையிலேயே உட்கார்ந்திருந்தான்.
புலி கொஞ்ச நேரம் சாதுவாக அங்கே உட்கார்ந்து விட்டு, கீழே இறங்கி இரை தேடப் போய் விட்டது.
“ஆஹா… இந்த சமாதிக்கு அருகில் நாம் இருந்ததால், புலியிடமிருந்து தப்பினோம். சாதுக்களின் சகவாசம் இருந்தால் எவ்வளவு நல்லது என்பது இப்போது புரிகிறது…’ என்று நினைத்தான். அன்று முதல் சாதுக்களை தேடிப் போய், அவர்களது பக்கத்தி லேயே இருக்கலானான்; சவுக்கியமாகவும் இருந்தான்.
அதனால், நாம் எப்போதும் சாதுக்களின் சங்கமத்தையே விரும்ப வேண்டும்; அவர்களுடனே பழக வேண்டும். கெட்ட சகவாசம் பிராண சங்கடம் என்பர். நல்ல சகவாசத்தை நாம் தேடிக் கொள்ள வேண்டும்.