Daily Archives: ஜூலை 11th, 2012

அம்மாடியோவ்… எவ்ளோ பெரிய பாதம்!

மிக உயரமானவர், மிகவும் குண்டானவர் போன்றவர்களை பற்றியெல்லாம் படித்திருப்போம், பார்த்திருப்போம். ஆனால், மிக நீளமான பாதங்களை உடையவர்களை பற்றி அதிகம் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். பிரிட்டனைச் சேர்ந்த கார்ல் கிரிபீத் என்ற இளைஞர், அந்த நாட்டிலேயே, மிக நீளமான பாதங்களை உடையவர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார். இவரது பாதங்களின் அளவு, 21 அங்குலம் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால், அவரது பாதங்களை பார்த்தால் நம்பித் தான் ஆக வேண்டும். பிரிட்டனைச் சேர்ந்த ஆண்களின், பாதங்களின் சராசரி அளவு ஒன்பது அங்குலம் தான்.
இந்த சராசரி அளவை விட, இரண்டு மடங்கு அதிக அளவுள்ள பாதங்களை பெற்றிருக்கிறார், கார்ல் கிரிபீத். இவர் அணிந்து கொள்வதற்கு பொருத்தமான ஷூக்கள் பிரிட்டனில் கிடைப்பது இல்லை. அமெரிக்காவில் இருந்து, தனக்கான ஷூக்களை வரவழைத்து, அணிந்து கொள்கிறார். இதற்கு இவருக்கு பத்தாயிரம் ரூபாய் செலவாகிறது.
கார்ல் கிரிபீத் கூறுகையில், “எனக்கு ரக்பி விளையாட்டு என்றால் உயிர். ஆனால், விளையாடும் போது அணிந்து கொள்ளும் ஷூக்கள், என் பாதங்களின் அளவுக்கு பொருத்தமாக கிடைப்பது இல்லை. இதனால், ரக்பி விளையாட்டில் என்னை சேர்க்க மறுக்கின்றனர். இந்த பாதங்களால், ஒரே ஒரு நன்மை உண்டு. எனக்கு பெண் தோழிகள் அதிகம். என் பாதங்களுக்காகவே, ஏராளமான இளம் பெண்கள், என்னுடன் நட்பு கொள்ள விரும்புகின்றனர்…’ என்கிறார்.

பிரம்மாண்ட கப்பல் மிதப்பது எப்படி?

ஒரு ஊரே நகர்ந்து செல்வது போன்ற கப்பல், தண்ணீரில் மிதப்பது எப்படி என்ற வியப்பு நமக்கு ஏற்படுகிறது.

கடலில் கப்பல்கள் எவ்வாறு மிதக்கின்றன என்று பார்ப்போம்.

சிறிய கப்பல்கள், பெரிய கப்பல்கள் என்ற வித்தியாசமின்றி எல்லா கப்பல்களுக்கும் எடை உண்டு. ஆகவே ஒரு கப்பல் தண்ணீரில் இருக்கும்போது அதன் உடற்பகுதி ஓரளவு வரை தண்ணீரில் அமிழ்ந்திருக்கும். அதாவது, கப்பலின் எடைக்குச் சமமான தண்ணீர் இடம்பெயரும் வரை அதன் உடற்பகுதி தண்ணீரில் அமிழும்.

10 ஆயிரம் டன் எடையுள்ள ஒரு கப்பலின் உடற்பகுதி, அதே எடையுள்ள தண்ணீரை இடம்பெயரச் செய்யும். எனவே ஒரு கப்பலின் எடையைக் கூறுவதற்குப் பதிலாக, அது இடம்பெயரச் செய்யும் தண்ணீரின் எடையைக் கூறுகிறார்கள். அதாவது ஒரு கப்பலின் `டிஸ்பிளேஸ்மென்ட்’ 10 ஆயிரம் டன் என்று கூறுவார்கள்.

அமிழ்ந்துள்ள கப்பலின் ஒவ்வொரு பகுதியையும் தண்ணீர் அழுத்துகிறது. தண்ணீரில் கிடப்பு நிலையில் இருந்து ஏற்படும் அழுத்தங்கள் கப்பலின் உடற்பகுதியை நசுக்குகின்றன. ஆனால் அவை இந்த நடைமுறையில் ஒன்றுக்கொன்று அமிழ்த்துச் சமநிலையை ஏற்படுத்துகின்றன. செங்குத்தான போக்கில் உள்ள அழுத்தங்களின் சக்தியே கப்பலின் எடையை ஒரு சமநிலைக்குக் கொண்டுவருவதாக ஆர்க்கிமிடிஸ் கருதினார்.

காற்றில் அமிழ்ந்துள்ள பொருட்களுக்கும் இந்தக் கொள்கை பொருந்தும். கியாஸ் உள்ளிட்ட எல்லா திரவங்களுக்கும் ஆர்க்கிமிடிஸின் கொள்கை பொதுவானதே. உதாரணமாக, பலூனை எடுத்துக்கொள்வோம். அது தனது பருமனுக்குச் சமமான எடையை விட இலேசாக இருந்தால் பறக்கும்.

வேர்டில் பி.டி.எப். பைல்கள்

இனி, பி.டி.எப். பைல்களைப் படிக்க, இன்னொரு புரோகிராமினைத் தேடிச் செல்ல வேண்டியதில்லை. வேர்ட் தொகுப்பிலேயே அவற்றைத் திறந்து படிக்கலாம். வியப்பாக இருக்கிறதா! மேலே படியுங்கள்.
தன் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம், விண்டோஸ் 8 வெளியிடுவதில் மும்முரமாக இருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனம், அதிக ஆரவாரமின்றி, தன் மைக்ரோசாப்ட் ஆபீஸ் பதிப்பு 15 ஐ வடிவமைப்பதிலும் கவனம் செலுத்தி உழைத்து வருகிறது. இதனை ஆபீஸ் 15 எனத் தற்போதைக்கு அழைத்தாலும், இதன் பெயர் பின்னர் வெளியிடப்படுகையில் மாறலாம். 2012ல் வெளி வந்தால், ஆபீஸ் 2012 என இருக்கலாம்; 2013 எனில் அதற்கேற்ப பெயர் மாறலாம்.
சில மாதங்களுக்கு முன் மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த தொகுப்பின் தொடக்க பதிப்பினை ஒரு சில தொழில் நுட்ப வல்லுநர்களுக்கு மட்டும் வழங்கி கருத்து கேட்டுள்ளது. பொதுமக்களுக்கான சோதனை தொகுப்பு விரைவில் வெளியிடப் படும் எனத் தெரிகிறது.
இந்த தொகுப்பு இணையவெளியில் கட்டணம் செலுத்திப் பயன்படுத்தும் வகையிலும் கிடைக்கலாம். இந்த தொகுப்பு குறித்து பால் என்பவர் http://www.winsupersite.com/article/office/office-15-milehigh-view-142847 என்ற இணையப் பக்கத்தில் பல குறிப்புகளைத் தந்துள்ளார். இதிலிருந்து ஆபீஸ் 15 பதிப்பில் தொழில் நுட்ப ரீதியாக இன்னும் பல மேம்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிகிறது.
இந்த தொகுப்பில் மிக மிக முக்கிய சிறப்பு பி.டி.எப். பைல்களைப் படிக்கும் வசதிதான். .doc, .rtf பார்மட் பைல்களைத் திறந்து படிப்பது போல, .pdf பைல்களையும் இதில் திறந்து படிக்கும் வசதி தரப்படுகிறது. மைக்ரோசாப்ட் அடுத்து தர இருக்கும் தன் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 10ல் ப்ளாஷ் இணைத்துத் தர இருப்பதால், ஆபீஸ் தொகுப்பில் பி.டி.எப். படிக்கும் வசதி தரப்படுவதில் சிக்கல் இருக்காது. நமக்கு இது மிகவும் பயன் தரும் ஒரு வசதியாக இருக்கும்.
இத்துடன், சென்ற அக்டோபரில் அனுமதிக்கப்பட்ட Open Document Format ODF 1.2 என்ற பார்மட் டாகுமெண்ட் களையும், ஆபீஸ் 15ல் படிக்க இயலும். இதே போல இன்னும் பல சிறிய மாற்றங்கள் இருக்கும். பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் தொகுப்பு, 16:9 பார்மட்டினைத் தன் மாறா நிலையில் கொண்டிருக்கும். பழைய பார்மட்டுகளையும் கையாளலாம்.
ஆபீஸ் தொகுப்பு பயன்படுத்திக் கொண்டிருப்பவர்கள் அனைவரும், ஆபீஸ் 15க்கு மாறுவார்களா என்பது, இது போல பல புதிய அரிய வசதிகளை தருவதன் அடிப்படையிலேயே அமையும் என்பதனை மைக்ரோசாப்ட் உணர்ந்துள்ளது. எனவே தான் இந்த புதிய வசதிகளைத் தரும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

விஸ்காபுலரி சொல்லறிவைச் சோதிக்க

சிறுவர்களுக்குப் பள்ளிக் கூடம் திறந்து வகுப்புகள் ஆரம்பித்துவிட்டன. இவர்களுக்குப் பயனுள்ள ஓர் இணைய தளத்தைக் காட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன் இணையத்தில் வலம் வருகையில் அகப்பட்டது Wizcabulary என்ற இணைய தளம். ஐந்தாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியருக்கான, ஆங்கிலச் சொல் அறிவினைச் சோதித்து வளர்த்திடும் தளமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. வெளியே வெய்யிலோ அல்லது மழையோ இருப்பின், சிறுவர்களை வீட்டுக்குள் கட்டிப் போடும் வகையில், சவால் விடும் தளமாகவும் இது அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தளம் தரும் சொல் விளையாட்டினை மிக எளிதாக விளையாடலாம். முதலில் நீங்கள் பெண்ணா, பையனா என்று சொல்ல வேண்டும். பின்னர், தரப்பட்டுள்ள சொல்லுக்கான சரியான பொருளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு சொல்லும் அதற்கான பொருளாக நான்கு ஆப்ஷன்களும் தரப்படும். சரியான ஒவ்வொரு பதிலுக்கும் ஒரு பரிசு கிடைக்கும். உங்கள் பெயரில் உங்கள் பரிசினை பதிந்து வைத்துக் கொள்ளலாம். எட்டு சரியான விடைகளுக்கு வெற்றி ரிப்பன் ஒன்று தரப்படும். தவறான விடைக்கு, ஏற்கனவே வாங்கிய பரிசுகள் நீக்கப்படும். நீங்கள் தரும் சரியான விடைகளின் எண்ணிக்கை அதிகமாகும் போது, இந்த தளத்தை அமைத்தவர்கள், உங்கள் பெயரில், மாற்றுத் திறன் கொண்ட கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு கால்குலேட்டர் மற்றும் பிற சாதனங்களை இலவசமாக வழங்குகின்றனர்.
இந்த சொல் விளையாட்டினை விளையாடு வதில் சந்தேகங்கள் இருந்தால், தளத்தில் உள்ள கேள்வி பதில் பகுதி தீர்த்து வைக்கிறது.
இந்த தளத்தின் முகவரி: http://www.wizcabulary.com/