Daily Archives: ஜூலை 12th, 2012

“போன் தொல்லை…: டெலி மார்க்கெட்டிங்கில் அல்லல்படும் மக்கள்

ஒவ்வொரு நாளும் குறைந்தது, பத்து பேராவது போன் செய்து, எங்களிடம் இடம் உள்ளது வாங்குங்க, “…ரியல் எஸ்டேட்டிலிருந்து பேசுகிறோம்; இடம்வேண்டுமா…’ “…பாங்க்கிலிருந்து பேசுறோம்; கடன் வேணுமா…’ என விடாமல், மொபைல்போன் வாடிக்கையாளர்களை விரட்டுவதால், செய்வதறியாது மொபைல்போன் வாடிக்கையாளர்கள் திகைத்து வருகின்றனர்.

கோவையில், “டெலிமார்க்கெட்டிங்’ அழைப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மொபைல்போன் சொந்த உபயோகத்துக்கு வைத்திருந்தாலும், அது பெரும் தொல்லையாக மாற்றம் பெற்றுள்ளது. குறிப்பாக,”பிரிபெய்டு’ வாடிக்கையாளர்கள் படும்பாடு, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.பாகுபாடு இல்லாமல், மொபைல்போனில் பேசுவோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. வசதிக்கு ஏற்ப பலர் இரண்டு, மூன்று மொபைல்போன்களை பயன்படுத்துகின்றனர். இதில், ஏதாவது ஒன்றை, தற்காலிகமாக “ப்ரீபெய்டு சிம்கார்ட்’ திட்டத்தில் பயன்படுத்துவது வழக்கம். “ப்ரீ பெய்டு’ கார்டில் இப்போதெல்லாம், கடைகளில் சென்று, “ரீசார்ஜ்’ செய்து கொள்வது எளிதான வேலையாக முடிகிறது. இவ்வாறு, “ஈசி’ யாக, “ரீசார்ஜ்’ செய்யும்போது, கடைக்காரர், நமது எண்ணை நோட்டில் எழுதி, அதற்கான தொகையை எழுதுகின்றனர். இவ்வாறு, ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான எண்களை எழுதி வைக்கின்றனர். இந்த எண்களை, பலருக்கு விற்பனை செய்கின்றனர். குறிப்பாக ரியல் எஸ்டேட், தனியார் வங்கிகள், மொபைல்போன் நிறுவனங்கள் போன்றவற்றிற்கு ஒட்டுமொத்தமாக, “டேட்டா பேஸ்’ என்ற பெயரில், விற்பனை செய்கின்றனர்.

இதை பெறும் நிறுவனங்கள் அல்லது “டெலிமார்க்கெட் டிங்’ எனப்படும் மொபைல் போனில், தொடர்பு கொண்டு, வாடிக்கையாளர்களை தேடுகின்றனர். பொதுவாக டெலிமார்க்கெட்டிங்கில், பெண்களையே பேச பயன்படுத்துகின்றனர். பெண் குரல் என்றால், யாருக்கும் எளிதாக கோபமும் வராது என்பதே அந்நிறுவனங்களின் கணிப்பு.ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் பல, “சார், அன்னூருக்கு அருகே சூப்பரா இருக்கிறது… விலை…1.5 லட்சம் தான்…’ எனத்தொடங்கி, அடுக்கடுக்காக பேசுகின்றனர். அடுத்ததாக, “சார்….நாங்கள் … மொபைல்போன் நிறுவனத்திலிருந்து பேசுகிறோம்…உங்களுக்கு போஸ்ட் பெய்டு நம்பர் வேணுமா சார்….பேன்சி நம்பர் இருக்கு…’ என பேசுகின்றனர். ஏற்கனவே, மொபைல்போன் இருந்தாலும், கூடுதலாக வைத்துக்கொள்ளுங்கள்’ என, கேன்வாஸ் செய்கின்றனர். இதே போன்று, தனியார் வங்கியின் பெயரைச் சொல்லி, ” கிரெடிட் கார்டு வேணுமா… சார், பெர்சனல் லோன் வேணுமா சார்…’ என கொஞ்சும் குரலில் பேசுவதுண்டு.

இந்த டெலிபோன் கால்கள், அனைத்தும் வாடிக்கையாளர்களின் சூழ்நிலையை மனதில் கொள்வதில்லை. ஒருவர் வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது, அவர்களது கவனம் திசை திரும்பும். அவசரமாக சென்று கொண்டிருக்கும்போது, இந்த கால்கள் வரும்போது, வாகனத்தை ஓரம் கட்டிவிட்டு, பேசினால் மகா எரிச்சலூட்டும் விதமாக இருக்கும். வாடிக்கையாளர்களின் மனநிலையை புரிந்து கொள்ளாமல் இருக்கும், போன் தொல்லையை தவிர்க்க முடியாமல், பொதுமக்கள் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர்.இதேபோன்று, எஸ்எம்எஸ் தொல்லையும், தற்போது அதிகரித்து வருகிறது. “பல்க் மெசேஜ்’ இல்லையென்றாலும், தனிப்பட்ட போன்களில் இருந்து ஏரளாமான குறுஞ்செய்திகள் தொல்லை படுத்துகின்றன. இவற்றை கட்டுப்படுத்த, போலீசில் புகார் செய்ய வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். இதற்கென நடவடிக்கைக்கு போலீசிலும் ஏதாவது ஒரு தொலைபேசி எண் தரப்பட வேண்டும்; அல்லது எங்கு புகார் செய்ய வேண்டும் என, தெரியப்படுத்த வேண்டும்.

கோவை “சைபர் கிரைம்’ போலீசார் கூறியது: மொபைல்போன்களில் விளம்பரம் செய்வதை கட்டுப்படுத்த, அந்தந்த நிறுவனத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிம்கார்டு நிறுவனங்களின் எஸ்.எம்.எஸ்., வாய்ஸ் விளம்பரங்களை தவிர்க்க, “டூ நாட் டிஸ்டர்ப்’ என்ற “ஆப்ஷனில்’ பதிவு செய்து கொண்டால் விளம்பரங்கள் வராது. விளம்பர “டார்ச்சரால்’ பாதிக்கப்பட்டவர்கள் யாரும், இதுவரை “சைபர் கிரைம்’ பிரிவில் புகார் கொடுக்கவில்லை. இந்த மாதிரி புகார்கள் வந்தால், விளம்பரம் செய்தவர்களை அழைத்து முதற்கட்டமாக எச்சரிக்கை விடுக்கப்படும்,’ என்றனர்.

ரத்தத்தில் இருந்து நோயகற்ற புதிய வழி!

நமது உடலின் ரத்தத்தில் இருந்து தீங்கு செய்யும் மூலக்கூறுகளை ஈர்த்து அகற்றக்கூடிய காந்தப்புலம் வாய்ந்த நுண்ணிய துகள்களை (நானோ பார்ட்டிக்கிள்கள்) விஞ்ஞானிகள் உருவாக்கியிருக்கின்றனர்.

இவற்றின் பிரம்மாக்களான சுவிட்சர்லாந்து ஜூரிச் நகர ஆராய்ச்சியாளர்கள், ரத்தத்தைச் சுத்தப்படுத்த இது ஒரு நல்ல வழியாக இருக்கும் என்கிறார்கள். நச்சுப் பாதிப்பு, ரத்த ஓட்டத் தொற்று மற்றும் சில குறிப்பிட்ட வகை புற்றுநோய் களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தத் தொழில்நுட்பம் மிகவும் கைகொடுக்கும் என்பது இவர் களது கருத்து.

இந்த `நானோ பார்ட்டிக்கிள்கள்’, கார்பன் பூச்சு செய்யப்பட்டு, ரத்தத்தில் இருந்து அகற்றவேண்டிய பொருட்களுக்கு ஏற்ற `ஆன்டிபாடிகள்’ சேர்க்கப்பட்டதாக இருக்கின்றன. இந்த நுண்ணிய காந்தங்களை ரத்த ஓட்டத்தில் செலுத்தி, பின்னர் டயாலிசிஸ் செய்வதன் மூலம் இன்டர்லியூகின்ஸ் போன்ற தீங்கு தரும் புரதங்கள், காரீயம் போன்ற அபாயகரமான உலோகங்களை அகற்றலாம் என்கிறார்கள்.

“ரத்தத்தில் குறிவைக்கப்பட்ட பொருட்களை இந்த நானோ மேக்னட் ஈர்க்கும், பின்னர் அவை மறுபடி ரத்த ஓட்டத்தில் சுழலாமல் ஒரு செப்பரேட்டர் தடுக்கும்” என்று இந்த ஆய்வில் ஈடுபட்டிருக்கும் ஜூரிச் பல்கலைக்கழக வேதிப் பொறியாளர் இங்கே ஹெர்மான் கூறுகிறார்.

இதய நோய்க்குக் கொடுக்கப்படும் மருந்து, `டிகோக்ஸின்’. இதன் அளவு அதிகமானால் மரணத்தை ஏற்படுத்தும். இந்த மருந்தை, மேற்கண்ட நானோ பார்ட்டிக்கிள்கள் ஒரே சுற்றில் 75 சதவீதம் அகற்றியுள்ளன. சுமார் ஒன்றரை மணி நேரம் பயன்படுத்திய பிறகு 90 சதவீதம் அகற்றியிருக்கின்றன.

இந்த நுண்ணிய துணுக்குகள் உடம்புக்கும் வேறு தீமை பயக்காது,
ரத்தத்தின் பிற பணிகளிலும் குறுக்கிடாது என்று விஞ்ஞானிகள் உறுதியளிக்கின்றனர்.

பங்சன் கீ டிஸ்பிளே

வேர்ட் தொகுப்பில் நமக்குக் கிடைத்த ஒரு சிறந்த வசதி பங்சன் கீகளாகும். ஒரு கீ அழுத்தத்தில் நமக்கு சில பணிகள் முடிக்கப்படுகின்றன. இவற்றிற்கான டூல் பார் ஒன்றும் நமக்கு தரப்பட்டுள்ளது. ஆனால் இது மறைத்து வைக்கப்பட்டுள்ளது. எந்த எந்த பங்சன் கீ, என்ன செயல்பாட்டிற்கு உள்ளது என்று காட்டுவதே அந்த டூல் பாரின் நோக்கம். ஆனால், பொதுவாக இதனை யாரும் வெளிப்படையாகக் காட்டும்படி வைத்துப் பயன்படுத்துவதில்லை.
இதனை எவ்வாறு காட்சிக்குக் கொண்டு வரலாம் என்று பார்க்கலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகள் வேர்ட் 2000, 2002 மற்றும் 2003 ஆகிய தொகுப்புகளுக்கானவை.
1. Tools மெனுவிலிருந்து Customize என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் Customize டூல் பாக்ஸைக் காட்டும்.
2. இதில் Toolbars டேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனை உறுதி செய்திடவும்.
3. கிடைக்கும் டூல்பார்களில், Function Key Display என்ற டூல்பாரினைத் தேர்ந்தெடுக்கவும். இந்த டூல்பார் அருகே ஒரு டிக் அடையாளத்தை அமைக்கவும். உடன் இது திரையில் கீழாகக் காட்டப்படும். தொடர்ந்து Close என்பதில் கிளிக் செய்து டயலாக் பாக்ஸை மூடவும். டூல் பார் தொடர்ந்து காட்டப்படும்.
உங்கள் மானிட்டர் திரையில் டூல்பார் ஒரு வரியில் காட்டப்படும். நீங்கள் Ctrl, Alt, அல்லது Shift என கீயை அழுத்துகையில், பங்சன் கீ டூல் பாரிலும் மாற்றம் ஏற்பட்டு அவற்றிற்கான செயல்பாடுகள் காட்டப்படும். இதன் மூலம் நாம் எந்த கீயை அழுத்தினால், என்ன செயல்பாடு கிடைக்கும் என்பதனைத் தெரிந்து இயக்கலாம்.
வேர்ட் 2007 தொகுப்பில் இந்த டூல் பார் இல்லை. இதற்குப் பதிலாக, வேர்ட் 2007 பயன்படுத்துபவர்கள், ஆல்ட் (Alt) கீயை அழுத்தி, இவை பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

முடியாது… ஆனால் முடியும்!

தினமும் சாப்பிட வேண்டிய நேரத்தைத் தாண்டி, உணவு உட்கொள்ளும்போது, படபடப்பை அதிகரிக்கும், “கார்ட்டிசோல்’ ஹார்மோனின் சுரப்பு, உடலில் அதிகரிக்கிறது. இதனால் உடல், சீரான நிலையிலிருந்து மாறுபடுகிறது.

காலை எழுந்ததும், நாம் செய்ய வேண்டிய பணிகள் என்னென்ன எனத் திட்டமிடுதல், உண்ணும் உணவு, உடலைப் பராமரிப்பது, உடை ஆகிய விஷயங்களில், நாம் நிறைய, “கோட்டை’ விடுகிறோம் என்கின்றனர், மன நல மருத்துவர்கள். அவை என்னென்ன எனப் பார்ப்போம்:

சரியான நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்
நமக்கு அதிகம் படபடப்பை வரவழைக்கும் விஷயம் எது தெரியுமா? பணப் பிரச்னையோ, திருமண உறவுப் பிரச்னையோ அல்ல… சரியான நேரத்தில் உணவு உண்ணாமையே! தினமும் சாப்பிட வேண்டிய நேரத்தைத் தாண்டி, உணவு உட்கொள்ளும்போது, படபடப்பை அதிகரிக்கும், “கார்ட்டிசோல்’ ஹார்மோனின் சுரப்பு, உடலில் அதிகரிக்கிறது. இதனால் உடல், சீரான நிலையிலிருந்து மாறுபடுகிறது. எனவே, குறிப்பிட்ட நேரத்திற்குச் சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்வது, தூங்குவதைப் பின்பற்றுங்கள்.

உண்ணும் உணவில் அக்கறை வேண்டும்
“யார் நடையாய் நடந்து கடைக்குச் செல்வது…’ என, அலுப்புத் தட்டி, பக்கத்தில் உள்ள கடையில் காய்கறி, பழம் வாங்கும், பழக்கம் நிறைய பேரிடம் உள்ளது. காசு குறைவு என்ற யோசனையும், பக்கத்துக் கடையிலேயே கால் பதிய வைக்கும். ஒரு காய்கறியை, காய்த்த இடத்திலிருந்து விற்பனைக்குக் கொண்டு வரும் வரை, அது வாடாமல் இருக்க, அதன் மீது ரசாயன மருந்துகள் தெளிக்கப்படுகின்றன. இந்த மருந்து, உடலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியது. எனவே, எந்தக் கடையில், மருந்து தெளிக்கப்படாத காய்கறி, பழங்கள் கிடைக்கின்றன என்பதைக் கண்டறிந்து, அங்கிருந்து அவற்றை வாங்கிச் சமைப்பதே நல்லது.

உடற்பயிற்சி தேவை தான்; மற்ற நேரங்களில்?
“அவளைப் பாரேன்… பீப்பாய் மாதிரி கெடக்கா…’ என, யாராவது கிண்டல் செய்து, அதை மாற்றிக் கொள்ள, வீராப்புடன் உடற்பயிற்சி செய்கிறீர்கள்… வாழ்த்துக்கள்! தினமும், அரை மணி நேரம், உடற்பயிற்சி செய்வீர்களா? அதன் பின்…? “டிவி’ முன் ஐக்கியம்… கண்டதையும் கொறித்து, கொழுப்புச் சத்துள்ள உணவைச் சாப்பிட்டு, சாப்பிடும்போதே, “அதான்… “எக்சர்சைஸ்’ செய்கிறோமே…’ என, மனதைச் சமாதானப்படுத்திக் கொண்டு… – இதெல்லாம் சரிப்படாது. சரியான உணவும், உடற்பயிற்சியும் தான், உங்கள் உடலைச் சீராக வைக்கும்.

இறுக்கமான உடை, “ஹை ஹீல்ஸ்’ வேண்டாம்
சிலர், மிகவும் இறுக்கமான உடை அணிகின்றனர். “பிளவுஸ்’ மற்றும் உள்ளாடையை, மிகவும் இறுக்கமாகப் போட்டால், நாளடைவில், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். புடவை கட்டுபவர்கள், உள் பாவாடையை, மிகவும் இறுக்கமாகக் கட்டினால், இடுப்புத் தோலில் புண் ஏற்பட்டு, விபரீதங்களை விளைவிக்கும். குதிகால் உயரச் செருப்பு அணிந்தால், இதய பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என, சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. வேண்டாமே இந்தச் செருப்பு… மனதை உயரமாக வைத்துக் கொள்ளுங்கள்… செருப்பு ஒரு பொருட்டல்ல!