Daily Archives: ஜூலை 13th, 2012

எக்ஸெல் தொகுப்பில் டெக்ஸ்ட் டிசைன்

தாங்கள் அமைத்திடும் ஒர்க்ஷீட் மிக அழகாக இருப்பதை யார் தான் விரும்பமாட்டார்கள்? செல்கள், அதில் உள்ள டேட்டாக்கள், மேலே உள்ள பார்முலாக்கள், சார்ட்கள் என அனைத்தும் அழகான தோற்றத்தில் இருந்தால், அதனைத் தயாரித்த நம்மை மற்றவர்கள் பாராட்டா விட்டாலும், நம் மனதிற்கு நிறைவாக இருக்கும் அல்லவா! இது சார்ந்த ஓர் அம்சத்தை இங்கு பார்ப்போம்.
எக்ஸெல் ஒர்க் ஷீட் லே அவுட் மற்றும் டிசைன் செய்வதில் அனைவரும் பொது வான பிரச்னை ஒன்றைச் சந்திப்பார்கள். செல்களில் உள்ள டேட்டா டெக்ஸ்ட் உள்ள அளவிற்கு அதிகமான இடத்தை எடுத்திருக்காது. இதனால் டேட்டா உள்ள செல்களில் அதிகமான காலி இடம் இருக்கும். இது ஒர்க் ஷீட் டிசைனில் விரும்பாத தோற்றத்தினைத்தரும்.
இந்த பிரச்னையைத் தீர்க்க எக்ஸெல் இரண்டு வழிகளைத் தருகிறது. டெக்ஸ்ட்டை நெட்டுவாக்கில் அமைக்கலாம்; அல்லது சுழற்றி ஒரு கோணத்தில் வைக் கலாம். எந்த செல்களில் உள்ள டெக்ஸ்ட்டை மாற்றி அமைத்திட வேண்டுமோ அந்த செல்களைத் தேர்ந்தெடுக்கவும். பின் இதில் மவுஸ் ரைட் கிளிக் செய்தால் மெனு ஒன்று கிடைக்கும். இதில் Format Cells என்பதில் கிளிக் செய்திடவும். இதில் உள்ள பல டேப்களில் அலைன் மெண்ட் என்பதனைத் தேர்ந்தெடுத்தால் நெட்டாக, படுக்கை வசமாக, குறிப்பிட்ட கோணத்தில் சாய்வாக டெக்ஸ்ட்டை அமைத்திட வழி கள் தரப்பட்டிருக்கும். உங்கள் டிசைன் கற்பனைக்கேற்ப டெக்ஸ்ட்டை அமைத்திட கட்டளை தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இப்போது காலி இடம் இல்லாமல் டெக்ஸ்ட் அமைக்கப்பட்டு அழகான தோற்றத்தில் இருக்கும்.

சோதனைக்கூடத்தில் உருவாக்கப்பட்ட ரத்த நாளம்

சில ஆண்டுகளுக்கு முன் குளோனிங் என்னும் அதி நவீன தொழில்நுட்பத்தின் மூலம் `டாலி’ என்ற செம்மறி ஆடு உருவாக்கப்பட்ட போது உலகமே அல்லோல கல்லோலப் பட்டுப்போனது. அதன்பிறகு குளோனிங் மூலம் ஆடு மட்டுமல்ல மனிதர்களையும் கூட உருவாக்கி விடலாம் என்றார்கள்.

சரி, அதனால் என்ன பயன்? என்று யோசித்தபோது குளோனிங் மூலம் ஏற்படக்கூடிய பலன்களை விட ஆபத்துகளே அதிகம் என்று தெரியவந்தது.

அதன் விளைவாக, உலக நாடுகளில் குளோனிங் செய்வது தடை செய்யப்பட்டது. ஆனால் குளோனிங் மூலம் ஏற்படக்கூடிய பலன்களும் ஏராளம் என்பது கவனிக்கத்தக்கது. உதாரணமாக, ஒருவருடைய உடல் பாகங்கள் பழுதடையும் போது அவர்களுடைய குளோனில் இருந்து அந்த பாகத்தை எடுத்து நோயாளிகளுக்கு பொருத்திக் கொள்ளலாம்.

துரதிஷ்டவசமாக, குளோனிங் தடை செய்யப்பட்டதால் குளோன் உடல் பாகங்களை பயன்படுத்திக் கொள்ளும் அரிய வாய்ப்பும் கைவிட்டுப் போனது. ஆனால் சற்றும் மனம் தளராத ஆய்வாளர்கள், குளோனிங் போன்ற, ஆனால் ஆபத்துகள் குறைந்த மற்றொரு சுலபமான தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தார்கள்.

ஒருவருடைய ஸ்டெம் செல்களில் இருந்து அவருடைய உடலின் சில பாகங்களை சோதனைக்கூடத்திலேயே உற்பத்தி செய்யும் அட்டகாசமான உயிர்த்தொழில்நுட்பம்தான் அது! இந்த தொழில்நுட்பத்துக்கு `திசு பொறியியல்’ (டிஷ்யூ என்ஜினீயரிங்) என்று பெயர்.

இந்த ஸ்டெம் செல் தொழில் நுட்பம் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட ரத்த நாளம் ஒன்று, ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பத்து வயது சிறுமியின் உயிரைக் காப்பாற்றிய அதிசயம் சமீபத்தில் நிகழ்ந்திருக்கிறது. மனித உடல் பாகங்களை நோயாளிகளுடைய ஸ்டெம் செல்களில் இருந்து உற்பத்தி செய்து, அதனைக் கொண்டு உயிரைக் காக்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டிருப்பது உலகில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்வீடனைச் சேர்ந்த அந்த சிறுமியின் கல்லீரலுக்குச் செல்லும் ரத்த நாளத்தில் மோசமான அடைப்பு ஏற்பட்டது. இத்தகைய சூழலில் நோயாளியின் உடலில் உள்ள வேறொரு ரத்த நாளத்தை பயன்படுத்துவது அல்லது கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதுதான் வழக்கம். ஆனால் ஸ்வீடன் நாட்டு மருத்துவ ஆய்வாளரான சுசித்ரா சுமித்ரன் ஹோல்கர்சன், அந்த சிறுமிக்காக ஒரு புதிய ரத்த நாளத்தை உற்பத்தி செய்வது என்று முடிவு செய்தார்.

முதலில், இறந்துபோன ஒருவருடைய உடலில் இருந்து 9 செ.மீ. நீளமுள்ள ரத்த நாளத்தை எடுத்து அதிலிருக்கும் உயிரணுக்கள் அனைத்தும் வெளியேற்றப்பட்டன. பின்னர் சிறுமியின் எலும்பு மஜ்ஜையில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்டெம் செல்கள் கொண்டு மில்லியன் கணக்கான உயிரணுக்கள் வளர்க்கப்பட்டன. அதன்பிறகு உயிரணுக்களற்ற 9 செ.மீ. ரத்த குழாய் முழுவதையும் உயிரணுக்கள் கொண்டு நிரப்ப ஸ்டெம் செல்களில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட உயிரணுக்கள் பயன்படுத்தப்பட்டன.

இரண்டு வாரங்கள் தொடர்ந்த இந்த ஆய்வின் இறுதியில், நாள மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவையான ரத்த நாளம் தயாரானது. பிறகு, இந்த புதிய ரத்த நாளம் அந்த சிறுமியின் உடலில் பொருத்தப்பட்டது.

இதில் விசேஷம் என்னவென்றால், பொதுவாக உடல் பாக மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு பின்னர் எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய நோய் எதிர்ப்பு சக்தியை கட்டுப்படுத்தும் மருந்துகளை, இந்த சிறுமி எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்பதுதான்! ஏனென்றால் இந்த ரத்த நாளம் பிறரிடம் இருந்து கடன் வாங்கப்பட்டது அல்ல. அந்த சிறுமியின் சொந்த ஸ்டெம் செல்களில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டது!

முக்கியமாக, இந்த நாள மாற்று அறுவை சிகிச்சைக்கு பின்னர் அந்த சிறுமி சுமார் 6 செ.மீ. உயரம் வளர்ந்திருப்பதாகவும், எடை கூடியிருப்பதாகவும் சொல்கிறார்கள். மேலும், அறுவை சிகிச்சைக்கு முன்னர் சோர்வாகவும், பள்ளி செல்லாமலும் இருந்த அந்த சிறுமி, சிகிச்சைக்கு பின்னர் ஆரோக்கியமாகவும், புத்திசாலித்தனமாகவும் இருக்கிறார் என்கிறார்கள் சிறுமியின் பெற்றோர்!

சுமார் 6 ஆயிரம் முதல் 10 ஆயிரம் டாலர் வரை செலவாகும் இந்த தொழில் நுட்பம், நாளங்கள் போன்ற சிறிய உடல் பாகங்களை உற்பத்தி செய்வதற்கு மிகவும் சிறந்தவை என்கிறார் மற்றொரு மூத்த ஆய்வாளர் அந்தோனி அடாலா. அதேசமயம், இந்த மாதிரியான அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் நோயாளிகளுக்கு மோசமான பின்விளைவுகள் எதுவும் ஏற்படுகின்றனவா என்று வருடக்கணக்கில் கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் எச்சரிக்கிறார் அடாலா!

சோதனைக்கூடத்தில் உருவாக்கப்படும் ரத்த நாளங் களை டயாலிசிஸ் மற்றும் இதய அறுவை சிகிச்சை போன்றவற்றிற்காக உடலின் எந்த பாகத்திலும் பயன்படுத்தலாம் எனும் அறிவியல் உண்மையை உறுதிப்படுத்தும் இந்த ஆய்வு சந்தேகமில்லாமல் ஒரு வரப்பிரசாதமே!

`சோதனைக்கூடத்தில் உற்பத்தி செய்யப்பட்ட உடல் பாகங்களை நோயாளிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது இனியும் சயின்ஸ் பிக்ஷன் அல்ல. இன்னும் 5 வருடங்களுக்குள் அதிகமான நோயாளிகள் சோதனைக்கூட ரத்த நாளங்களை பயன்படுத்துவார்கள் என்பது கண்கூடு’ என்கிறார் யேல் பல்கலைக்கழக மருத்துவர் லாரா நிக்லாசன்.

ஞானத்தைத் தேடி… மவுனம்-கவியரசு கண்ணதாசன்

<

காற்றுக்கு இலைகள் அசைகின்றன; மலர்கள் அசைகின்றன; கொடிகள் அசைகின்றன; மரங்கள் கூட அசைகின்றன; ஆனால் மலைகள் அசைவதில்லை!

அசைவது பலவீனத்தைக் காட்டுகிறது; அசையாதது உறுதியைக் காட்டுகிறது.

சளசளவென்று பேசுகிறவன், எவ்வளவு பெரிய கெட்டிக்காரனாக இருந்தாலும், சொற்பொழிவாளனாக இருந்தாலும், தன் பலவீனத்தைக் காட்டிக் கொள்கிறான்.

மவுனி முட்டாளாக இருந்தாலும் பலசாலியாகக் காணப்படுகிறான்.

`சும்மா இருப்பதே சுகம்’ என்றார்கள்.

பேசாமல் இருப்பது பெரும் திறமை. பேசும் திறமையைவிட அது மிகப் பெரியது. அதனால் தான் ஞானிகளும் பெரிய மேதைகளும் குறிப்பிட்ட சில காலங்களில் மவுன விரதம் அனுஷ்டிக்கிறார்கள்.

ஒன்றைச் சொல்ல வேண்டும் என்று விரும்பி, அதைச் சுருக்கமாகத் தெளிவுபடுத்துகிறவன் பெரிய மரியாதையைப் பெற்று விடுகிறான்.

சிறிய விஷயத்தைக்கூட வளைத்து வளைத்துப் பேசுகிறவன், கேலிக்கு ஆளாகிறான்.

பயனில்லாத சொற்களைப் பாராட்டுகிறவனை, `மக்கட்பதடி’ என்றான் வள்ளுவன்.

`சுருங்கக் கூறி விளங்க வைத்தல்’ என்பார்கள்.

ஞானிகள் சில விஷயங்களைக் கூறுகிறார்கள். அவை பொன் மொழிகளாகி விடுகின்றன.

பைத்தியக்காரர்கள் பதினாயிரம் பேசுகிறார்கள். அவை சீந்துவாரில்லாமல் போகின்றன.

மவுனம் ஒரு மகத்தான ஞானம். அது தெய்விகக் கலை.

ஒரு குடும்பம். கணவன்-மனைவி இருவர். கணவனுக்கு மனைவியிடம் கோபம், ஆனால் அதை வெளியில் சொல்லவில்லை. மனைவியிடம் பேசாமலேயே இருக் கிறான். அவன் அவளைத் திட்டி இருந்தால், அது சாதாரணமாகவே போயிருக்கும். அவன் பேசாமல் இருப்பதே அவளைச் சித்திரவதை செய்கிறது.

`அவன் பேச மாட்டானா, பேச மாட்டானா?’ என்று எதிர்பார்க்கிறாள். `இரவில் நிச்சயமாகப் பேசுவான்’ என்று நம்புகிறாள்; தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுக்கிறாள்.

`நான் என்ன தப்புப் பண்ணினேன்?’ என்று மெதுவாகக் கேட்கிறாள்.

நள்ளிரவில் பக்கத்தில் வந்து உட்காருகிறாள். காலைப்பிடித்து விடுகிறாள். அவன் மவுனம் கலையவில்லை.

அவன் மவுனம் தொடரத் தொடர, அவள் தாகம் அதிகரிக்கிறது.

திடீரென்று ஒரு வார்த்தை அவன் பேசி விட்டான். அவளுக்குத் தெய்வமே கண் திறந்தது போன்று தோன்றுகிறது.

`இன்றைக்கு நானும் அவரும் பேசிக் கொண்டிருந்தோம்!’ என்று ஊர் முழுக்கச் சொல்லிக் கொண்டு வந்து விடுகிறாள்.

பத்து வார்த்தை திட்டி, நாலு உதை உதைப்பதைவிட, அந்த மவுனம் மகத்தான சக்தியைப் பெற்றுவிடுகிறது.

கோயிலில் இருக்கின்ற சிலை, வருகின்ற பக்தனிடமெல்லாம் பேசத் தொடங்குமானால், பக்தனுக்கே அலுப்புத் தட்டிவிடும்.

`கோயிலுக்குப் போனால் அந்தச் சாமி நம்மை விடாதய்யா! உயிரை வாங்கிவிடும்!’ என்று பேசத் தலைப்பட்டு விடுவான்.

அது மவுனமாக இருக்க இருக்க, பக்தன் தான் பேசுகிறான்; பாடுகிறான்; புலம்புகிறான்.

ஆரவாரங்கள் வெறும் மயக் கங்கள்.

அரசியல்வாதியின் கூச்சல், வேறு வேலை இல்லாதவனின் புலம்பல்.

தொண்டைத் தண்ணீரைக் காய வைப்பதில் என்ன லாபம்?

`இவர் கொஞ்சம் பேசமாட்டாரா?’ என்று உலகத்தை ஏங்க வைக்க வேண்டும்.

பேசத் தொடங்கினால் உலகம் கூர்ந்து கேட்க வேண்டும்.

கடலில் ஆழமான பகுதியில் அலை இருக்காது.

வெறும் பொட்டல் வெளியில் வீடு கட்டிப் பாருங்கள்; பயங்கரக் காற்றடிக்கும்.

வெண்மேகம் போகின்ற வேகத்தைவிட, கார்மேகத்தின் வேகம் குறைவு.

நாய் ஓடுவதைவிட, யானை நடப்பதில் வேகம் அதிகம்.

சலனமற்ற மவுனம், பல அர்த்தங்கள் கொண்டது.

பிரஞ்சு மொழியில் ஒரு வார்த்தைக்கு ஒரே அர்த்தம் உண்டு. ஆங்கில வார்த்தைக்கு இரண்டு அர்த்தங்கள் வரும். தமிழ் வார்த்தையில் நாலைந்து அர்த்தங்கள் வரும். ஆனால், மவுனத்தில் எல்லையற்ற அர்த்தங்கள் உண்டு.

பேசாமல் இருப்பவனே, பெரிய விஷயத்தைச் சொல்பவன்.

பேசிக்கொண்டிருப்பவன் ஞானக் கிறுக்கன்.

ஏராளமான வரிகளைக் கொண்ட இலக்கியங்களைவிட, ஏழு வார்த்தைகளில் அடங்கிவிட்ட திருக்குறள், உலகத்தைக் கவர்ந்து விட்டது. காலங்கள் தோறும் துணைக்கு வருகிறது. நிலையான தத்துவத்தைச் சொல்கிறது.

எனது நண்பர் ஒருவர் வாரத்தில் ஒரு நாள் மவுன விரதம்; ஒரு நாள் உண்ணாவிரதம். வயது அறுபதைத் தாண்டுகிறது; ஒரு மாத்திரை கூட அவர் போட்டுக் கொண்டதில்லை.

ஆரோக்கியத்திற்கும் மவுனம் மிக அவசியம்.

தவம் புரிகின்றவன் `ஓம் நமசிவாய’ என்ற வார்த்தையைக் கூடச் சொல்வதில்லை.

மவுனமாக இருப்பவனுக்கு ஆகாரம் குறைவாக இருந்தால் கூடப் போதும்.

அதிகம் பேசுவதால் அடி வயிறு சூடாகிறது. தீனி அதிகம் கேட்கிறது. அதன் மூலம் உடம்பு பெருத்து விடுகிறது.

வாரியார் சுவாமிகள் சாதாரணமான நேரங்களில் பேசுவது குறைவு. சொற்பொழிவுகளிலும் அலட்டிக் கொள்ளாமல் பேசுவார். அந்த இரண்டு மணி நேரத்தைத் தவிர, மற்ற நேரங்களில் இரண்டொரு வார்த்தைகள் தான் பேசுவார். அதனால், ஒருவேளைச் சாப்பாடே அவருக்குப் போதுமானதாக இருக்கிறது. குரல் கணீர் என்று கம்பீரமாக ஒலிக்கிறது. நோயற்ற வாழ்வுக்கு அவர் இலக்கணமாகிறார்.

காஞ்சிப் பெரியவர்கள் பேசுவது குறைவு; அதனால் உண்பதும் குறைவு. இந்த வயதிலும் எங்கேயும் நடந்து செல்ல அவரால் முடிகிறது.

சில மனிதர்கள் ஆளைப் பிடித்தால் விடமாட்டார்கள்; அறுத்து எடுத்து விடுவார்கள்.

சிலர் ஒலிபெருக்கியைப் பிடித்தால் விடமாட்டார்கள்.

குடிப்பவர்கள் ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லுவார்கள்.

மதுவையும், மங்கையையும் கூட மவுனமாக ரசிப்பதில் உள்ள சுகம், சளசளவென்று பேசுவதில் இல்லை.

நிறையப் பேசுகிறவன், தன் வார்த்தைகளாலேயே காட்டிக் கொடுக்கப்படுகிறான். அவனைக் கண்டாலே பலரும் ஓட ஆரம்பிக்கிறார்கள்.

இப்படிப்பட்ட அறுவைகளிடம் இருந்து தப்புவதற்காகவே சித்தர் களும், முக்தர்களும் மலையிலே தங்கிக் கொண்டார்கள்.

காதலில் கூட ஜாடையில் இருக்கின்ற சுகம், வாய் மொழியில் இல்லை.

மனிதர்களைவிட, பல மிருகங்களுக்கு அதிக வயது.

அவற்றை விட மரங்களுக்கு அதிக வயது.

அவற்றை விட மலைகளுக்கு அதிக வயது.

காரணம், அவை பேசாமலும், அதிர்ச்சி அடையாமலும் இருப்பதே.

மவுனத்தின் சக்தியை உணர்ந்துதான் இந்துக்கள் தவம் புரிந்தார்கள்; நிஷ்டையில் அமர்ந்தார்கள்; மவுன விரதம் மேற்கொண்டார்கள்.

நீண்ட நாள் பேசாமல் இருப்பது என்பது, ஒருவகை நிர்விகல்ப சமாதி; அதை மேற்கொண்டவன் ஞானத்தைத் தேடினால் அது கிடைக்கும்.

 

எழுச்சிமிகு இமயஜோதி!-ஜூலை 14 – சிவானந்தர் முக்தி தினம்


“இந்த உலகம் கண்ணாடியை போன்றது. நீங்கள் சிரித்தால் அதுவும் சிரிக்கிறது; சீறி விழுந்தால், அதுவும் சீறி விழுகிறது…’ என்று, வாழ்வின் யதார்த்த நிலையை உணர்த்தும் பொருள் பொதிந்த தத்துவத்தை உதிர்த்தவர் சுவாமி சிவானந்தர்.
திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை கிராமத்தில், செப்., 8, 1877 வியாழன், பரணி நட்சத்திரத்தில் தரணி ஆளப் பிறந்தார் இந்த மகான். மருத்துவம் படித்த அவர், மலேயா சென்று பணி செய்த வேளையில், பொருள் தாராளமாகக் குவிந்தது. ஆனால், அதை அவர் விரும்பவில்லை. சென்னை வந்தார். தன்னிடம் இருந்த பணம், துணிமணிகளைக் கூட ஒரு நண்பரிடம் கொடுத்து விட்டு, இமயமலைக்கு சென்று விட்டார். கடுமையாக தவமிருந்தார். 1936ல், ரிஷிகேஷில் தெய்வநெறிக்கழகம் என்ற அமைப்பு உருவானது. எல்லா நாடுகளிலும் இருந்து வந்த பக்தர்கள், சுவாமியின் சீடர்கள் ஆயினர். நாடு முழுக்க அவர் பயணம் செய்து ஆன்மிகக் கருத்துகளை மக்களிடம் எடுத்துரைத்தார். பல நூல்களை எழுதினார். ஜூலை 14, 1963ல், முக்தியடைந்தார்.
ஒரு சமயம், சென்னையில் சிவானந்தர் முகாமிட்டார். திருவல்லிக்கேணி தேசியப் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் நடந்த கூட்டத்தில், அவர் ஆற்றிய உரையை, இன்றைய நாகரிகப் பெண்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். அது:
மாணவியருக்கு, உரிய கல்வி அளிக்கப்பட வேண்டியது மிகமிக அவசியம். இதில், ஒரு சிறு தவறு நேரிடினும், அதன் விளைவுகள் மிகவும் பெரிய அளவில் இருக்கும். இளம் மாணவியரின் தூய மனதில், ஆன்மிக, ஒழுக்கக் கருத்துகளை பதியச் செய்தால், பல தலைமுறைகள் முன்னேற்றம் அடைவதற்கான வழியை ஏற்படுத்தியவர்கள் ஆவீர்கள்.
பெண்களுக்கு ஏட்டுக்கல்வி மட்டும் சொல்லித் தந்தால் போதாது. இலக்கியமும், விஞ்ஞானமும் வேண்டியவை தான். ஆனால், பெண்களுக்கு அவர்களுக்கென்றே அமைந்த ஒரு முக்கிய இடம் உண்டு. அதுதான் அவர்களது இல்லம். அங்கேதான் நாட்டை ஆளும் தலைவர்கள், குடிமக்கள், துறவிகள் உருவாக்கப் படுகின்றனர். அவர்களிடம் சமய உணர்வு இயற்கையாகவே ஊன்றியிருக் கிறது. ஆனால், தலைகீழாகக் காட்சி தரும் கல்வி முறை, அந்த உணர்வைத் தகர்த்தெறியும் விதத்தில் அமைந்துள்ளது. ஆண்களுடன் சமநிலைக்காக நீங்கள் போரிட வேண்டும். அதேநேரம், அந்த ஆணின், தாயும், குருவுமாக இருந்து அவர்களைப் பராமரிக்க வேண்டிய பொறுப்பும், உங்களிடமே உள்ளது என்பதை மறக்கக் கூடாது. ஆக, உலகத்தின் தலைவிதியே, உங்கள் கையில் உள்ளது என்பதை நினைவில் வையுங்கள்.
இப்படி அவர் கூறினார்.
கடவுள், மதங்களை பார்ப்பதில்லை, மனித மனங்களையே பார்க்கிறார் என்பதை நிரூபிக்கும் வகையில், சிவானந்தரின் வாழ்வில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. ஒரு கிறிஸ்தவ பக்தரை, சுவாமி, ஆஸ்ரமத்தில் இருந்த உணவுக்கூடத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கே சாப்பிட்டுக் கொண்டிருந்த ஆசார இந்துக்கள் சிலர் எழுந்து சென்றனர். அவர்களுக்கு எம்மதமும் சம்மதமே என்பதை நிரூபிக்கும் வகையில், சுவாமியே அவரை அமரச்செய்து உணவு பரிமாறினார். சமையல் அறைக்குள்ளும் அழைத்துச் சென்றார். ஆஸ்ரம கோவில் கட்டடப்பணியை, ஒரு முஸ்லிம் கண்காணிப்பாளர் செய்தார். அவருக்கு இலையில் சாதம் வைத்து, மண்குவளையில் சாம்பார் கொடுத்து அனுப்பியதை அறிந்த சுவாமி, அடுத்த நாள் கட்டடவேலை செய்த அனைவருக்கும், தட்டிலேயே <உணவு அனுப்ப ஏற்பாடு செய்தார். உணவு விடுதி நிர்வாகியிடம், “கடவுள், ஒருவனது பக்தியைப் பார்க்கிறாரே தவிர, குலம் கோத்திரத்தை பார்ப்பதில்லை…’ என்றார்.
ஒருமுறை, ஒரு இளைஞனால் ஏமாற்றப்பட்ட கர்ப்பவதி, சுவாமியை அணுகினார். சுவாமியைத் தரிசித்து விட்டு, கங்கையில் மூழ்கி இறக்க வந்துள்ளதாக கண்ணீர் வடித்தார். அவளை, ஒரு பெண் சன்னியாசியிடம் ஒப்படைத்து, பிரசவகாலம் வரை அங்கே தங்க வைத்தார் சுவாமி. குழந்தை பிறந்ததும், அதை குழந்தை இல்லாத ஒரு பணக்கார தம்பதிக்கு சுவீகாரம் கொடுத்தார். அந்தப்பெண், நல்வாழ்வு வாழ வழிகாட்டினார்.
இப்படி, அரும்பெரும் ஆன்மிகத்தொண்டு செய்த இமயஜோதி சிவானந்தரை, அவரது முக்தி தினத்தில் நினைவு கூர்வோம்.