எழுச்சிமிகு இமயஜோதி!-ஜூலை 14 – சிவானந்தர் முக்தி தினம்


“இந்த உலகம் கண்ணாடியை போன்றது. நீங்கள் சிரித்தால் அதுவும் சிரிக்கிறது; சீறி விழுந்தால், அதுவும் சீறி விழுகிறது…’ என்று, வாழ்வின் யதார்த்த நிலையை உணர்த்தும் பொருள் பொதிந்த தத்துவத்தை உதிர்த்தவர் சுவாமி சிவானந்தர்.
திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை கிராமத்தில், செப்., 8, 1877 வியாழன், பரணி நட்சத்திரத்தில் தரணி ஆளப் பிறந்தார் இந்த மகான். மருத்துவம் படித்த அவர், மலேயா சென்று பணி செய்த வேளையில், பொருள் தாராளமாகக் குவிந்தது. ஆனால், அதை அவர் விரும்பவில்லை. சென்னை வந்தார். தன்னிடம் இருந்த பணம், துணிமணிகளைக் கூட ஒரு நண்பரிடம் கொடுத்து விட்டு, இமயமலைக்கு சென்று விட்டார். கடுமையாக தவமிருந்தார். 1936ல், ரிஷிகேஷில் தெய்வநெறிக்கழகம் என்ற அமைப்பு உருவானது. எல்லா நாடுகளிலும் இருந்து வந்த பக்தர்கள், சுவாமியின் சீடர்கள் ஆயினர். நாடு முழுக்க அவர் பயணம் செய்து ஆன்மிகக் கருத்துகளை மக்களிடம் எடுத்துரைத்தார். பல நூல்களை எழுதினார். ஜூலை 14, 1963ல், முக்தியடைந்தார்.
ஒரு சமயம், சென்னையில் சிவானந்தர் முகாமிட்டார். திருவல்லிக்கேணி தேசியப் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் நடந்த கூட்டத்தில், அவர் ஆற்றிய உரையை, இன்றைய நாகரிகப் பெண்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். அது:
மாணவியருக்கு, உரிய கல்வி அளிக்கப்பட வேண்டியது மிகமிக அவசியம். இதில், ஒரு சிறு தவறு நேரிடினும், அதன் விளைவுகள் மிகவும் பெரிய அளவில் இருக்கும். இளம் மாணவியரின் தூய மனதில், ஆன்மிக, ஒழுக்கக் கருத்துகளை பதியச் செய்தால், பல தலைமுறைகள் முன்னேற்றம் அடைவதற்கான வழியை ஏற்படுத்தியவர்கள் ஆவீர்கள்.
பெண்களுக்கு ஏட்டுக்கல்வி மட்டும் சொல்லித் தந்தால் போதாது. இலக்கியமும், விஞ்ஞானமும் வேண்டியவை தான். ஆனால், பெண்களுக்கு அவர்களுக்கென்றே அமைந்த ஒரு முக்கிய இடம் உண்டு. அதுதான் அவர்களது இல்லம். அங்கேதான் நாட்டை ஆளும் தலைவர்கள், குடிமக்கள், துறவிகள் உருவாக்கப் படுகின்றனர். அவர்களிடம் சமய உணர்வு இயற்கையாகவே ஊன்றியிருக் கிறது. ஆனால், தலைகீழாகக் காட்சி தரும் கல்வி முறை, அந்த உணர்வைத் தகர்த்தெறியும் விதத்தில் அமைந்துள்ளது. ஆண்களுடன் சமநிலைக்காக நீங்கள் போரிட வேண்டும். அதேநேரம், அந்த ஆணின், தாயும், குருவுமாக இருந்து அவர்களைப் பராமரிக்க வேண்டிய பொறுப்பும், உங்களிடமே உள்ளது என்பதை மறக்கக் கூடாது. ஆக, உலகத்தின் தலைவிதியே, உங்கள் கையில் உள்ளது என்பதை நினைவில் வையுங்கள்.
இப்படி அவர் கூறினார்.
கடவுள், மதங்களை பார்ப்பதில்லை, மனித மனங்களையே பார்க்கிறார் என்பதை நிரூபிக்கும் வகையில், சிவானந்தரின் வாழ்வில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. ஒரு கிறிஸ்தவ பக்தரை, சுவாமி, ஆஸ்ரமத்தில் இருந்த உணவுக்கூடத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கே சாப்பிட்டுக் கொண்டிருந்த ஆசார இந்துக்கள் சிலர் எழுந்து சென்றனர். அவர்களுக்கு எம்மதமும் சம்மதமே என்பதை நிரூபிக்கும் வகையில், சுவாமியே அவரை அமரச்செய்து உணவு பரிமாறினார். சமையல் அறைக்குள்ளும் அழைத்துச் சென்றார். ஆஸ்ரம கோவில் கட்டடப்பணியை, ஒரு முஸ்லிம் கண்காணிப்பாளர் செய்தார். அவருக்கு இலையில் சாதம் வைத்து, மண்குவளையில் சாம்பார் கொடுத்து அனுப்பியதை அறிந்த சுவாமி, அடுத்த நாள் கட்டடவேலை செய்த அனைவருக்கும், தட்டிலேயே <உணவு அனுப்ப ஏற்பாடு செய்தார். உணவு விடுதி நிர்வாகியிடம், “கடவுள், ஒருவனது பக்தியைப் பார்க்கிறாரே தவிர, குலம் கோத்திரத்தை பார்ப்பதில்லை…’ என்றார்.
ஒருமுறை, ஒரு இளைஞனால் ஏமாற்றப்பட்ட கர்ப்பவதி, சுவாமியை அணுகினார். சுவாமியைத் தரிசித்து விட்டு, கங்கையில் மூழ்கி இறக்க வந்துள்ளதாக கண்ணீர் வடித்தார். அவளை, ஒரு பெண் சன்னியாசியிடம் ஒப்படைத்து, பிரசவகாலம் வரை அங்கே தங்க வைத்தார் சுவாமி. குழந்தை பிறந்ததும், அதை குழந்தை இல்லாத ஒரு பணக்கார தம்பதிக்கு சுவீகாரம் கொடுத்தார். அந்தப்பெண், நல்வாழ்வு வாழ வழிகாட்டினார்.
இப்படி, அரும்பெரும் ஆன்மிகத்தொண்டு செய்த இமயஜோதி சிவானந்தரை, அவரது முக்தி தினத்தில் நினைவு கூர்வோம்.

%d bloggers like this: