ஞானத்தைத் தேடி… மவுனம்-கவியரசு கண்ணதாசன்

<

காற்றுக்கு இலைகள் அசைகின்றன; மலர்கள் அசைகின்றன; கொடிகள் அசைகின்றன; மரங்கள் கூட அசைகின்றன; ஆனால் மலைகள் அசைவதில்லை!

அசைவது பலவீனத்தைக் காட்டுகிறது; அசையாதது உறுதியைக் காட்டுகிறது.

சளசளவென்று பேசுகிறவன், எவ்வளவு பெரிய கெட்டிக்காரனாக இருந்தாலும், சொற்பொழிவாளனாக இருந்தாலும், தன் பலவீனத்தைக் காட்டிக் கொள்கிறான்.

மவுனி முட்டாளாக இருந்தாலும் பலசாலியாகக் காணப்படுகிறான்.

`சும்மா இருப்பதே சுகம்’ என்றார்கள்.

பேசாமல் இருப்பது பெரும் திறமை. பேசும் திறமையைவிட அது மிகப் பெரியது. அதனால் தான் ஞானிகளும் பெரிய மேதைகளும் குறிப்பிட்ட சில காலங்களில் மவுன விரதம் அனுஷ்டிக்கிறார்கள்.

ஒன்றைச் சொல்ல வேண்டும் என்று விரும்பி, அதைச் சுருக்கமாகத் தெளிவுபடுத்துகிறவன் பெரிய மரியாதையைப் பெற்று விடுகிறான்.

சிறிய விஷயத்தைக்கூட வளைத்து வளைத்துப் பேசுகிறவன், கேலிக்கு ஆளாகிறான்.

பயனில்லாத சொற்களைப் பாராட்டுகிறவனை, `மக்கட்பதடி’ என்றான் வள்ளுவன்.

`சுருங்கக் கூறி விளங்க வைத்தல்’ என்பார்கள்.

ஞானிகள் சில விஷயங்களைக் கூறுகிறார்கள். அவை பொன் மொழிகளாகி விடுகின்றன.

பைத்தியக்காரர்கள் பதினாயிரம் பேசுகிறார்கள். அவை சீந்துவாரில்லாமல் போகின்றன.

மவுனம் ஒரு மகத்தான ஞானம். அது தெய்விகக் கலை.

ஒரு குடும்பம். கணவன்-மனைவி இருவர். கணவனுக்கு மனைவியிடம் கோபம், ஆனால் அதை வெளியில் சொல்லவில்லை. மனைவியிடம் பேசாமலேயே இருக் கிறான். அவன் அவளைத் திட்டி இருந்தால், அது சாதாரணமாகவே போயிருக்கும். அவன் பேசாமல் இருப்பதே அவளைச் சித்திரவதை செய்கிறது.

`அவன் பேச மாட்டானா, பேச மாட்டானா?’ என்று எதிர்பார்க்கிறாள். `இரவில் நிச்சயமாகப் பேசுவான்’ என்று நம்புகிறாள்; தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுக்கிறாள்.

`நான் என்ன தப்புப் பண்ணினேன்?’ என்று மெதுவாகக் கேட்கிறாள்.

நள்ளிரவில் பக்கத்தில் வந்து உட்காருகிறாள். காலைப்பிடித்து விடுகிறாள். அவன் மவுனம் கலையவில்லை.

அவன் மவுனம் தொடரத் தொடர, அவள் தாகம் அதிகரிக்கிறது.

திடீரென்று ஒரு வார்த்தை அவன் பேசி விட்டான். அவளுக்குத் தெய்வமே கண் திறந்தது போன்று தோன்றுகிறது.

`இன்றைக்கு நானும் அவரும் பேசிக் கொண்டிருந்தோம்!’ என்று ஊர் முழுக்கச் சொல்லிக் கொண்டு வந்து விடுகிறாள்.

பத்து வார்த்தை திட்டி, நாலு உதை உதைப்பதைவிட, அந்த மவுனம் மகத்தான சக்தியைப் பெற்றுவிடுகிறது.

கோயிலில் இருக்கின்ற சிலை, வருகின்ற பக்தனிடமெல்லாம் பேசத் தொடங்குமானால், பக்தனுக்கே அலுப்புத் தட்டிவிடும்.

`கோயிலுக்குப் போனால் அந்தச் சாமி நம்மை விடாதய்யா! உயிரை வாங்கிவிடும்!’ என்று பேசத் தலைப்பட்டு விடுவான்.

அது மவுனமாக இருக்க இருக்க, பக்தன் தான் பேசுகிறான்; பாடுகிறான்; புலம்புகிறான்.

ஆரவாரங்கள் வெறும் மயக் கங்கள்.

அரசியல்வாதியின் கூச்சல், வேறு வேலை இல்லாதவனின் புலம்பல்.

தொண்டைத் தண்ணீரைக் காய வைப்பதில் என்ன லாபம்?

`இவர் கொஞ்சம் பேசமாட்டாரா?’ என்று உலகத்தை ஏங்க வைக்க வேண்டும்.

பேசத் தொடங்கினால் உலகம் கூர்ந்து கேட்க வேண்டும்.

கடலில் ஆழமான பகுதியில் அலை இருக்காது.

வெறும் பொட்டல் வெளியில் வீடு கட்டிப் பாருங்கள்; பயங்கரக் காற்றடிக்கும்.

வெண்மேகம் போகின்ற வேகத்தைவிட, கார்மேகத்தின் வேகம் குறைவு.

நாய் ஓடுவதைவிட, யானை நடப்பதில் வேகம் அதிகம்.

சலனமற்ற மவுனம், பல அர்த்தங்கள் கொண்டது.

பிரஞ்சு மொழியில் ஒரு வார்த்தைக்கு ஒரே அர்த்தம் உண்டு. ஆங்கில வார்த்தைக்கு இரண்டு அர்த்தங்கள் வரும். தமிழ் வார்த்தையில் நாலைந்து அர்த்தங்கள் வரும். ஆனால், மவுனத்தில் எல்லையற்ற அர்த்தங்கள் உண்டு.

பேசாமல் இருப்பவனே, பெரிய விஷயத்தைச் சொல்பவன்.

பேசிக்கொண்டிருப்பவன் ஞானக் கிறுக்கன்.

ஏராளமான வரிகளைக் கொண்ட இலக்கியங்களைவிட, ஏழு வார்த்தைகளில் அடங்கிவிட்ட திருக்குறள், உலகத்தைக் கவர்ந்து விட்டது. காலங்கள் தோறும் துணைக்கு வருகிறது. நிலையான தத்துவத்தைச் சொல்கிறது.

எனது நண்பர் ஒருவர் வாரத்தில் ஒரு நாள் மவுன விரதம்; ஒரு நாள் உண்ணாவிரதம். வயது அறுபதைத் தாண்டுகிறது; ஒரு மாத்திரை கூட அவர் போட்டுக் கொண்டதில்லை.

ஆரோக்கியத்திற்கும் மவுனம் மிக அவசியம்.

தவம் புரிகின்றவன் `ஓம் நமசிவாய’ என்ற வார்த்தையைக் கூடச் சொல்வதில்லை.

மவுனமாக இருப்பவனுக்கு ஆகாரம் குறைவாக இருந்தால் கூடப் போதும்.

அதிகம் பேசுவதால் அடி வயிறு சூடாகிறது. தீனி அதிகம் கேட்கிறது. அதன் மூலம் உடம்பு பெருத்து விடுகிறது.

வாரியார் சுவாமிகள் சாதாரணமான நேரங்களில் பேசுவது குறைவு. சொற்பொழிவுகளிலும் அலட்டிக் கொள்ளாமல் பேசுவார். அந்த இரண்டு மணி நேரத்தைத் தவிர, மற்ற நேரங்களில் இரண்டொரு வார்த்தைகள் தான் பேசுவார். அதனால், ஒருவேளைச் சாப்பாடே அவருக்குப் போதுமானதாக இருக்கிறது. குரல் கணீர் என்று கம்பீரமாக ஒலிக்கிறது. நோயற்ற வாழ்வுக்கு அவர் இலக்கணமாகிறார்.

காஞ்சிப் பெரியவர்கள் பேசுவது குறைவு; அதனால் உண்பதும் குறைவு. இந்த வயதிலும் எங்கேயும் நடந்து செல்ல அவரால் முடிகிறது.

சில மனிதர்கள் ஆளைப் பிடித்தால் விடமாட்டார்கள்; அறுத்து எடுத்து விடுவார்கள்.

சிலர் ஒலிபெருக்கியைப் பிடித்தால் விடமாட்டார்கள்.

குடிப்பவர்கள் ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லுவார்கள்.

மதுவையும், மங்கையையும் கூட மவுனமாக ரசிப்பதில் உள்ள சுகம், சளசளவென்று பேசுவதில் இல்லை.

நிறையப் பேசுகிறவன், தன் வார்த்தைகளாலேயே காட்டிக் கொடுக்கப்படுகிறான். அவனைக் கண்டாலே பலரும் ஓட ஆரம்பிக்கிறார்கள்.

இப்படிப்பட்ட அறுவைகளிடம் இருந்து தப்புவதற்காகவே சித்தர் களும், முக்தர்களும் மலையிலே தங்கிக் கொண்டார்கள்.

காதலில் கூட ஜாடையில் இருக்கின்ற சுகம், வாய் மொழியில் இல்லை.

மனிதர்களைவிட, பல மிருகங்களுக்கு அதிக வயது.

அவற்றை விட மரங்களுக்கு அதிக வயது.

அவற்றை விட மலைகளுக்கு அதிக வயது.

காரணம், அவை பேசாமலும், அதிர்ச்சி அடையாமலும் இருப்பதே.

மவுனத்தின் சக்தியை உணர்ந்துதான் இந்துக்கள் தவம் புரிந்தார்கள்; நிஷ்டையில் அமர்ந்தார்கள்; மவுன விரதம் மேற்கொண்டார்கள்.

நீண்ட நாள் பேசாமல் இருப்பது என்பது, ஒருவகை நிர்விகல்ப சமாதி; அதை மேற்கொண்டவன் ஞானத்தைத் தேடினால் அது கிடைக்கும்.

 

ஒரு மறுமொழி

%d bloggers like this: