Daily Archives: ஜூலை 15th, 2012

செஸ் சாம்பியன் ஆக

விஸ்வநாதன் ஆனந்த், ஐந்தாவது முறையாக (2000, 2007, 2008, 2010, 2012) உலக செஸ் சாம்பியன் பட்டத்தினைப் பெற்றதில் இருந்து, மாணவ மாணவியரிடம் இந்த விளையாட்டில் புதிய ஆர்வம் பற்றிக் கொண்டுள்ளது. தமிழக அரசு, செஸ் விளையாடும் பழக்கத்தினை மாணவரிடையே வளர்க்கும் பொருட்டு பல நடவடிக்கை எடுக்க அறிவிப்புகளை வழங்கி வருகிறது. மாணவர்களின் சிந்திக்கும் ஆற்றலை இந்த விளையாட்டு பட்டை தீட்டும் என்பதால் நாம் அனைவருமே நம் வீட்டில் உள்ள சிறுவர்களை இந்த விளையாட்டிற்குப் பழக்கலாம்.
இணையத்தில் செஸ் கற்றுக் கொடுக்கவும், விளையாடவும் பல தளங்கள் உள்ளன. இருப்பினும், அண்மையில் நான் பார்த்த ஒரு தளம் செஸ் விளையாட்டினைக் கற்றுக் கொடுப்பதில் ஒரு புதிய பரிமாணத்தைக் கொடுப்பதாக உள்ளது.
இந்த தளத்தின் பெயர் “யோசிக்கும் இயந்திரம்’ (thinking machine) என்பதாகும். மிகப் பொருத்தமாகவே பெயரிட்டுள்ளனர். இந்த தளத்தைப் பார்த்த பின்னர் தான், செஸ் விளையாட்டு எவ்வளவு குழப்பமான நிலையில் தீர்வு காண விளையாடும் விளையாட்டு என அறிந்து கொள்ள முடிந்தது.
இந்த தளத்தில் நுழைந்து நீங்கள் முதலில் காய் நகர்த்தி விளையாடத் தொடங்கலாம். அதன் பின்னர், கம்ப்யூட்டர் உங்களின் காய் நகர்த்தலுக்கேற்ற வகையில் எந்த வகையில் எல்லாம் காய் நகர்த்தலாம்; அதற்குப் பதிலாக நீங்கள் எந்த வழிகளில் காய்கள் நகர்த்த வழிகள் உள்ளன என்றெல்லாம் யோசிக்கிறது. இந்த விளையாட்டில் அதிகத் திறமை கொண்ட ஒரு சாம்பியனின் சிந்தனையைக் கம்ப்யூட்டர் மேற்கொள்கிறது. தொடர்ந்து மேற்கொள்ளப்படும் நகர்த்தல்கள் என்னவாக இருக்க முடியும் என அனைத்து வழிகளையும், கம்ப்யூட்டருக்கும் உங்களுக்குமாகக் காட்டுகிறது. பச்சைநிறக் கோடுகள் நீங்கள் மேற்கொள்ளக் கூடிய நகர்த்தல்களையும், ஆரஞ்ச் நிறக் கோடுகள் கம்ப்யூட்டர் மேற்கொள்ளக் கூடிய நகர்த்தல்களையும் காட்டுகின்றன. எனவே, கம்ப்யூட்டர் காய் நகர்த்திய பின்னர், நீங்கள் எதனை நகர்த்துவீர்கள் எனக் கம்ப்யூட்டர் நினைப்பது காட்டப்படுவது, நமக்கும் ஒரு வழி காட்டுதலாக உள்ளது.
அடுத்த காய் நகர்த்தலுக்கான உங்கள் முறை வருகையில், ஒவ்வொரு காய்க்குமான சக்தி என்னவாக இருக்கும் என்று காட்டப் படுகிறது.
திரைத் தோற்றத்தில் காட்டப்படும் காய்கள் எவை, நகர்த்தல் வழிகள் என்ன, எந்தக் கோடு எதனைக் குறிக்கிறது என்பவனவற்றைப் புரிந்து கொள்ள, தளத்தில் உள்ள About லிங்க்கில் கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம். இந்த செஸ் விளையாட்டின் தளம் உள்ள இணைய முகவரி: http://turbulence.org/spotlight/thinking /chess.html

நெத்திலி மீன் கூட்டு

மீன்களில் நெத்திலி தனிச்சுவை. குழம்பு வைத்தாலும் பொரித்தாலும் அதன் அற்புதச்சுவை நாவிலேயே இருந்து கொண்டிருக்கும். சுவையான நெத்திலி மீன் கூட்டு வைப்பதை தெரிந்து கொண்டால் அடிக்கடி அதை வீட்டின் முக்கிய உணவுப்பட்டியலில் சேர்த்து விடுவீர்கள். அத்தனை அற்புதச்சுவை இதன் சிறப்பு. செய்து பார்த்து சுவைப்போமா..!

தேவையான பொருட்கள்:

நெத்திலி மீன் -1/2 கிலோ

சாம்பார் வெங்காயம் – 200 கிராம்

தக்காளி -100 கிராம்(நறுக்கியது)

பச்சை மிளகாய் -4 (கீறியது)

புளி – கோலியளவு

உப்பு, எண்ணைய் -தேவைக்கேற்ப

அரைக்க:

தேங்காய் -1/4 மூடி

இஞ்சி -சிறு துண்டு

பூண்டு -4 பல்

மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்

தாளிக்க:

சோம்பு -1 டீஸ்பூன்

கறிவேப்பிலை -சிறிதளவு

செய்முறை:

மீனை சுத்தம்செய்து கொள்ளவும். மசாலாவை அரைத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

வெங்காயம், தக்காளி, மிளகாய் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

அரைத்த மிளகாய், புளிக்கரைசல், மற்றும் போதுமான உப்பு சேர்த்து கிளறவும்.

இந்த கலவை கொதித்ததும் நெத்திலி மீனை சேர்க்கவும். குறைந்த தீயில் சில நிமிடங்கள் வைத்திருந்து நன்கு திக்காகி கூட்டு பதத்தில் வந்ததும் இறக்கி விடவும். சாதத்தில் ஊற்றி சாப்பிடும்போது சூப்பர் சுவையை உணர்வீர்கள்.

`சூயிங்கம்’ மென்றால் ஞாபக மறதி!


சிலருக்கு எந்நேரமும் `சூயிங்கம்’மை சவைத்துக் கொண்டிருப்பது ஒரு வழக்கம். ஆனால் இப்பழக்கம், ஞாபகசக்தியைப் பாதிக்கும் என்கிறார்கள் இங்கிலாந்து ஆய்வாளர்கள்.

இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்ட கார்டிப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், சூயிங்கம் பழக்கம் இல்லாதவர்களைவிட, சூயிங்கம் பழக்கம் உள்ளவர்கள் எழுத்துகளையும், எண்களையும் ஞாபகத்தில் வைத்திருப்பதில் அதிகக் கஷ்டப்படுகின்றனர் என்கிறார்கள்.

சூயிங்கம்மை மெல்லும்போது ஏற்படும் அசைவு, தொடர்ச்சியான விஷயங்களை நினைவில் வைத்திருக்கும் மூளையின் திறனைப் பாதித்திருக்கக்கூடும் என்பது ஆய்வாளர்களின் கருத்து.

கை, கால் விரல்களை நொடிப்பது போன்று சூயிங்கம் மெல்லும் தொடர்ச்சியான செயல், நம்முடைய குறுகிய கால ஞாபகத்திறனில் குறுக்கிட்டு அதைப் பாதிக்கிறதாம்.

சூயிங்கம், குறிப்பாக குறிப்பிட்ட சுவை சேர்ந்த சூயிங்கம் ஒருவரின் திறனைக் கூட்டும், மூளைத் திறனை ஊக்குவிக்கும் என்று முன்பு கூறப்பட்டதற்கு எதிராக தற்போதைய ஆய்வு முடிவு அமைந்திருக்கிறது.

ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வதில் மனிதர்கள் சொதப்பக்கூடியவர்கள் என்றும் மேற்கண்ட ஆய்வில் ஈடுபட்ட ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதற்கான ஆதாரங்களையும் முன்வைக்கின்றனர்.

ஆய்வாளர்களில் ஒருவரான கார்டிப் பல்கலைக்கழகத்தின் மிச்சைல் கோஸ்லோவ், “மூளைக்கு ரத்த ஓட்டத்தைத் தூண்டுவதன் மூலம், கவனக் குவிப்புக்கு சூயிங்கம் உதவுகிறது என்று முன்பு சில ஆய்வுகள் வாதிட்டன.

ஆனால், வார்த்தைகள் சார்ந்த ஞாபகத்திறனில், சூயிங்கம் போன்ற பகுதிச் செயல்பாடுகள் குறுக்கிட்டுப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதை நாங்கள் கண்டறிந்திருக்கிறோம்” என்று உறுதிபடக் கூறுகிறார்.

`அப்படியே’ சாப்பிடலாம்!


`ஆப்பிள்’ போன்ற பழங்களை நாம் அப்படியே சாப்பிடுகிறோம். `பேக்’ செய்யப்பட்டு வரும் சில உணவுப்பொருட்களையும் அதைப் போல பிரிக்காமல் `அப்படியே’ சாப்பிடலாம் என்றால்?

இந்த விந்தையான யோசனையை நனவாக்கிவிட்டார்கள் சில விஞ்ஞானிகள். உணவுப்பொருளுடன் சேர்த்து அப்படியே சாப்பிடக் கூடிய `புட் பேக்கேஜிங் மெட்டீரியலை’ அவர்கள் தயாரித்திருக்கின்றனர்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர்களால் உருவாக்கப்பட்டுள்ள, உண்ணக்கூடிய இந்த பேக்கேஜிங், `விக்கிசெல்ஸ்’ எனப்படுகிறது. பழங்கள் எப்படி அவற்றின் வெளிப்புற அடுக்கால் பாதுகாக்கப்பட்டு இருக்கின்றனவோ அதை `காப்பி’ அடித்து இந்தப் புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஆய்வுக்குத் தலைமை வகித்த ஹார்வர்டு பேராசிரியர் டாக்டர் டேவிட் எட்வர்ட்ஸ், “இயற்கையானது எவ்வாறு உணவுப்பொருட்களை `கவர்’ செய்து பாதுகாக்கிறதோ அதே முன்மாதிரியில் நாங்கள் இந்த நுட்பத்தை உருவாக்கியிருக்கிறோம்” என்கிறார்.

இந்தத் தொழில்நுட்பத்தின் அடிப்படையில், யோகர்ட், ஜூஸ் டப்பாக்கள், தண்ணீர் பாட்டில்கள், ஐஸ்கிரீம் கப்கள் போன்றவற்றை ஆய்வாளர்கள் தயாரித்திருக்கின்றனர். உண்ணக் கூடிய அடுக்காக, உணவு அல்லது திரவத்தை `விக்கிசெல்ஸ்’ மூடியிருக்கிறது.

பழங்களைப் போன்ற வடிவத்தில் உருவாக்கப்பட்டுள்ள கன்டெய்னர்கள், பாசியும், கால்சியமும் சேர்ந்த ஒரு பொருளால் தயாரிக்கப்பட்டுள்ளன. இதனுடன் குறிப்பிட்ட கன்டெய்னரில் உணவுப்பொருளின் துணுக்கு களும் சேர்க்கப்படுவதால், `உள்ளிருக்கும்’ பொருள் போலவே வெளியடுக்கும் ருசிக்கிறது. இந்த பேக் கேஜிங் மெட்டீரியலை, திட, திரவப் பொருள்களைப் பாதுகாக்கப் பயன்படுத்தலாம்.

சரி, என்னதான் உண்ணக் கூடிய பேக்கேஜிங் என்றாலும், அதில் படியும் தூசி போன்ற மாசுகளால் பாதிப்பு ஏற்படதா என்று நீங்கள் கேட்கலாம்.

ஏன் கவலைப்படுகிறீர்கள்? பழத்தைப் போல இதையும் குழாய் நீரில் கழுவிவிட்டுச் சாப்பிட வேண்டியதுதானே என்கிறார்கள் இதை உருவாக்கிய புதுமையாளர்கள்.