`அப்படியே’ சாப்பிடலாம்!


`ஆப்பிள்’ போன்ற பழங்களை நாம் அப்படியே சாப்பிடுகிறோம். `பேக்’ செய்யப்பட்டு வரும் சில உணவுப்பொருட்களையும் அதைப் போல பிரிக்காமல் `அப்படியே’ சாப்பிடலாம் என்றால்?

இந்த விந்தையான யோசனையை நனவாக்கிவிட்டார்கள் சில விஞ்ஞானிகள். உணவுப்பொருளுடன் சேர்த்து அப்படியே சாப்பிடக் கூடிய `புட் பேக்கேஜிங் மெட்டீரியலை’ அவர்கள் தயாரித்திருக்கின்றனர்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர்களால் உருவாக்கப்பட்டுள்ள, உண்ணக்கூடிய இந்த பேக்கேஜிங், `விக்கிசெல்ஸ்’ எனப்படுகிறது. பழங்கள் எப்படி அவற்றின் வெளிப்புற அடுக்கால் பாதுகாக்கப்பட்டு இருக்கின்றனவோ அதை `காப்பி’ அடித்து இந்தப் புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஆய்வுக்குத் தலைமை வகித்த ஹார்வர்டு பேராசிரியர் டாக்டர் டேவிட் எட்வர்ட்ஸ், “இயற்கையானது எவ்வாறு உணவுப்பொருட்களை `கவர்’ செய்து பாதுகாக்கிறதோ அதே முன்மாதிரியில் நாங்கள் இந்த நுட்பத்தை உருவாக்கியிருக்கிறோம்” என்கிறார்.

இந்தத் தொழில்நுட்பத்தின் அடிப்படையில், யோகர்ட், ஜூஸ் டப்பாக்கள், தண்ணீர் பாட்டில்கள், ஐஸ்கிரீம் கப்கள் போன்றவற்றை ஆய்வாளர்கள் தயாரித்திருக்கின்றனர். உண்ணக் கூடிய அடுக்காக, உணவு அல்லது திரவத்தை `விக்கிசெல்ஸ்’ மூடியிருக்கிறது.

பழங்களைப் போன்ற வடிவத்தில் உருவாக்கப்பட்டுள்ள கன்டெய்னர்கள், பாசியும், கால்சியமும் சேர்ந்த ஒரு பொருளால் தயாரிக்கப்பட்டுள்ளன. இதனுடன் குறிப்பிட்ட கன்டெய்னரில் உணவுப்பொருளின் துணுக்கு களும் சேர்க்கப்படுவதால், `உள்ளிருக்கும்’ பொருள் போலவே வெளியடுக்கும் ருசிக்கிறது. இந்த பேக் கேஜிங் மெட்டீரியலை, திட, திரவப் பொருள்களைப் பாதுகாக்கப் பயன்படுத்தலாம்.

சரி, என்னதான் உண்ணக் கூடிய பேக்கேஜிங் என்றாலும், அதில் படியும் தூசி போன்ற மாசுகளால் பாதிப்பு ஏற்படதா என்று நீங்கள் கேட்கலாம்.

ஏன் கவலைப்படுகிறீர்கள்? பழத்தைப் போல இதையும் குழாய் நீரில் கழுவிவிட்டுச் சாப்பிட வேண்டியதுதானே என்கிறார்கள் இதை உருவாக்கிய புதுமையாளர்கள்.

%d bloggers like this: