செஸ் சாம்பியன் ஆக

விஸ்வநாதன் ஆனந்த், ஐந்தாவது முறையாக (2000, 2007, 2008, 2010, 2012) உலக செஸ் சாம்பியன் பட்டத்தினைப் பெற்றதில் இருந்து, மாணவ மாணவியரிடம் இந்த விளையாட்டில் புதிய ஆர்வம் பற்றிக் கொண்டுள்ளது. தமிழக அரசு, செஸ் விளையாடும் பழக்கத்தினை மாணவரிடையே வளர்க்கும் பொருட்டு பல நடவடிக்கை எடுக்க அறிவிப்புகளை வழங்கி வருகிறது. மாணவர்களின் சிந்திக்கும் ஆற்றலை இந்த விளையாட்டு பட்டை தீட்டும் என்பதால் நாம் அனைவருமே நம் வீட்டில் உள்ள சிறுவர்களை இந்த விளையாட்டிற்குப் பழக்கலாம்.
இணையத்தில் செஸ் கற்றுக் கொடுக்கவும், விளையாடவும் பல தளங்கள் உள்ளன. இருப்பினும், அண்மையில் நான் பார்த்த ஒரு தளம் செஸ் விளையாட்டினைக் கற்றுக் கொடுப்பதில் ஒரு புதிய பரிமாணத்தைக் கொடுப்பதாக உள்ளது.
இந்த தளத்தின் பெயர் “யோசிக்கும் இயந்திரம்’ (thinking machine) என்பதாகும். மிகப் பொருத்தமாகவே பெயரிட்டுள்ளனர். இந்த தளத்தைப் பார்த்த பின்னர் தான், செஸ் விளையாட்டு எவ்வளவு குழப்பமான நிலையில் தீர்வு காண விளையாடும் விளையாட்டு என அறிந்து கொள்ள முடிந்தது.
இந்த தளத்தில் நுழைந்து நீங்கள் முதலில் காய் நகர்த்தி விளையாடத் தொடங்கலாம். அதன் பின்னர், கம்ப்யூட்டர் உங்களின் காய் நகர்த்தலுக்கேற்ற வகையில் எந்த வகையில் எல்லாம் காய் நகர்த்தலாம்; அதற்குப் பதிலாக நீங்கள் எந்த வழிகளில் காய்கள் நகர்த்த வழிகள் உள்ளன என்றெல்லாம் யோசிக்கிறது. இந்த விளையாட்டில் அதிகத் திறமை கொண்ட ஒரு சாம்பியனின் சிந்தனையைக் கம்ப்யூட்டர் மேற்கொள்கிறது. தொடர்ந்து மேற்கொள்ளப்படும் நகர்த்தல்கள் என்னவாக இருக்க முடியும் என அனைத்து வழிகளையும், கம்ப்யூட்டருக்கும் உங்களுக்குமாகக் காட்டுகிறது. பச்சைநிறக் கோடுகள் நீங்கள் மேற்கொள்ளக் கூடிய நகர்த்தல்களையும், ஆரஞ்ச் நிறக் கோடுகள் கம்ப்யூட்டர் மேற்கொள்ளக் கூடிய நகர்த்தல்களையும் காட்டுகின்றன. எனவே, கம்ப்யூட்டர் காய் நகர்த்திய பின்னர், நீங்கள் எதனை நகர்த்துவீர்கள் எனக் கம்ப்யூட்டர் நினைப்பது காட்டப்படுவது, நமக்கும் ஒரு வழி காட்டுதலாக உள்ளது.
அடுத்த காய் நகர்த்தலுக்கான உங்கள் முறை வருகையில், ஒவ்வொரு காய்க்குமான சக்தி என்னவாக இருக்கும் என்று காட்டப் படுகிறது.
திரைத் தோற்றத்தில் காட்டப்படும் காய்கள் எவை, நகர்த்தல் வழிகள் என்ன, எந்தக் கோடு எதனைக் குறிக்கிறது என்பவனவற்றைப் புரிந்து கொள்ள, தளத்தில் உள்ள About லிங்க்கில் கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம். இந்த செஸ் விளையாட்டின் தளம் உள்ள இணைய முகவரி: http://turbulence.org/spotlight/thinking /chess.html

%d bloggers like this: